header-photo

என் கடவுளே.... பாபா அத்தான்!இன்று காலை தூக்கம் வர மறுத்தது. ஓஷோவின் புத்தகத்தில் ஆழ்ந்து விட்டேன். கொஞ்சம் நேரத்தில் நான் அறியாதே தூங்கி விட்டேன்.  இன்று தான் முதல் முறையாக  கனவில் நீங்கள் கதைத்துள்ளீகள் . எப்போதும் போல் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருந்தீர்கள். நான் தான் எப்போதும் போல் ”நீங்க ஏன் இப்படி விட்டு விட்டு போய் விட்டீர்கள் ஏன் இவ்வளவு விரைவாக சென்று விட்டீர்கள்  என குறை கூறி கொண்டு இருந்தேன். அத்தான் நீங்கள் நான், குறைப்படுவதை பொருட்படுத்தவே இல்லை. சிரித்து கொண்டே எப்போதும் போல்  நாம் கதைக்கலாம் என கூறி கொண்டு சென்று விட்டீர்கள்”. அத்தான் நீங்கள் இன்று என்னுடன் கதைத்ததால் நானும் என் வேலையில் சுறுசுறுப்பாக மூழ்க இயன்றது.


அத்தான் நீங்க  தைக்க கொடுத்திருந்த துணிகளை வாங்க சென்றேன்.  நாம்  கார் வாங்கி வந்த போது முதன்முதலில் சந்தித்தது டெய்லரைத் தானே. அவருக்கு காரை கண்டதும் மிக்க மகிழ்ச்சி. தனக்கும் இது போல் ஒரு கார் வாங்க  வேண்டும் என்று உங்களிடம் கூற;  ”உங்களுக்கு வருமான வரி அறிக்கையை  தயார் செய்து தருகின்றேன்; வங்கியில் கொடுத்தால் போதும் என ஆரம்பித்து  கடைசியாக வெள்ளி இரவு சந்தித்த போது ”நாளை ஒரு லட்சம் பணத்துடன் வாங்க நாம் கார் பதிவு செய்யலாம்” என்று கூறியிருந்தீர்களாமே.  அடுத்த நாள் காலை 8 மணிக்கு தான் நீங்கள்  வேறு பயணம் மேற்கொண்டு விட்டீர்களே. இன்று நான் கடைக்கு சென்ற போது தான் ஒரு லட்சத்திற்கு ஒரு பழைய காரை வாங்கி விட்டதாகவும் காரின் பின்புறம் பாபா என உங்கள் பெயரை எழுதியுள்ளதாக கூறினார்.  இது என்ன பாபா என்ற பெயர்? என்று வினவியவர்களிடம் இது ஒரு கடவுள் பெயர் என்றாராம்.  இது போன்று நீங்கள் பலர் மனதை ஆக்கரிமித்துள்ளது எனக்கு ஒரே ஆச்சரியமாக உள்ளது.  ரீகன் , உங்கள்  உடன் பிறவா சகோதரனும் இதையே கூறினார் “ அண்ணனை நினைத்து கொண்டு நான் வீடு முடிக்க உள்ளேன். அண்ணன் நல்லபடியாக எனக்கு முடித்து தருவார் என்று கூறினார்”.

நேற்று மிகவும் சோர்வு நிலைக்கு எட்டிய போது ”எங்களை இப்படி அனாதமாக்கி விட்டு விட்டு சென்று விட்டீர்களே அத்தான்” என்று உங்களை கோபத்தில் திட்டி விட்டேன். . பின்பு மன்னிப்பு கேட்டேன்  மன்னித்து விடுங்கள் அத்தான்.  நீங்க தான் கூறினீர்கள் நான் இறப்பது உங்கள் கைகளில் தான்; நீங்க என்னை கவனித்து கொள்ளுவீர்கள் என்று. எல்லாம் என்னை மகிழ்விக்க நீங்க கூறின பொய்கள் தானே. நீங்க இல்லாத இந்த உலகை என்னால் எண்ணி பார்க்கவே இயலவில்லை. அத்தான் ஏன் என்னை விட்டு போனீர்கள். கடந்த இரண்டு மாதமாக நீங்கள் கூறினது கூட ”போகிறேன், போகிறேன்” என்று தானே.  நீங்கள் கூறின கத்தார் என்ற வார்த்தையின் பொருள் இப்போது தான் விளங்கினது.  நான் உறக்குவதை கண்டு இப்படி அமைதியாக தூங்கும் உன்னால் விழித்திருக்கும் போது எப்படி உன்னால்  பேச இயல்கின்றது என்று கேட்பீர்களே? இனி நான் யாரிடம்  பேச அத்தான்?   நான் அமைதியாக இருப்பதை பல போதும் ரசிக்கும் நீங்கள்  ”ஏய் ஏதாவது பேசு போரடிக்கின்றது என்றும் கூறியுள்ளீர்கள்.  ஏனோ தெரியவில்லை இந்த கடந்த இரண்டு மாதமாக நாம் பேரமைதியில் தான் இருந்துள்ளோம். உங்களிடம் சண்டை பிடித்ததாக நினைவில் எட்டவே இல்லை.  ஒரு முறை ஒரு இணைய தகவலை மிகவும் உற்சாகமாக என்னிடம் கொண்டு தர நான் இந்த மெயில் உண்மையானதாக தெரியவில்லை. பயண்படுத்தியுள்ள வார்த்தைகள் தரமான ஆங்கிலத்தில் இல்லை என்றதும் ”உனக்கு எப்போதும் சந்தேகம் தான்” எனக்கூறி என் முன்னே அந்த தகவல் அடங்கிய மெயிலை கிழித்து போட்டு விட்டு அமைதியாக கோபமான முகத்துடன் உள் அறையில் இருந்தது மட்டும் தான் ஞாபகம் வருகின்றது.  நான் பின்பு எப்போதும் போல் சமாதானமாகி உங்களிடம் சரணாகதி அடைந்தேன்.  நீங்கள் விரும்பின என் புகைப்படம் கூட நான் தனியாக அமைதியாக கேட்டு கொண்டிருக்கும் ஒரு படமாகத்தான் இருந்தது. உங்கள் பையில் வைத்திருந்த  போட்டோ கூட நான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது எடுத்த போட்டோவாகவே இருந்தது. கடைசி இரண்டு மாதம் நாம் ஆழமான கருத்துரையாடல்கள் அற்று இருந்துள்ளோம்.  . நீங்களும் ” என் மனைவி சமீபகாலமாக சண்டையிடுவதே இல்லை, பயமாக உள்ளது” என்றும் கூறியுள்ளீர்கள். ஒரு வகையில் இவை என் மனதிற்கு நிம்மதியே

உங்கள் இழப்பு பலரை கவலைக்குள் ஆக்கியுள்ளது. பொதுவாக உங்களுடைய  வாடிக்கையாளர்களில் வருமான- விற்பனை வரி சார்ந்த எந்த பிரச்சினையும் மிகவும் எளிதாக எடுத்து கொண்டு வழி நடத்துவீர்களாம். அவர்கள் எந்த பிரச்சினையும் தீர்த்து தருவீர்களாம்.  பில் போடும் போதும் அவர்கள் தேவையை கருதியும்  கெடுபிடியற்று ஏற்று கொள்ளும் வழக்கவும் இருந்துள்ளது என கூறினர்.

நீங்கள் விபத்திற்கு உள்ளானதாக காலை 9 மணிக்கு கேள்வி பட்டதில் இருந்து உங்கள் நண்பர்கள் உங்களுடனே அரசு மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனை நிலையத்திலும் இருந்துள்ளனர். நீங்கள்  கட்சி  அரசியல்வாதியா?  ஏதும் இயக்கத்தை சார்ந்தவரா?  என கேட்கும் அளவுக்கு உங்களை சுற்றி  நண்பர்கள் இருந்துள்ளனர். என் கல்லூரி அதிகாரிகள் என் நண்பர்கள், என் மாணவர்கள், நம் மகன் நண்பர்கள் என நீங்கள் விரும்புவது போலவே ஒரு பெரும் திரள் கூட்டத்துடனே இருந்துள்ளீர்கள். உங்களுடைய சொந்தங்கள் தான் அடக்க நேரத்தை அறிந்து தேவாலயம் வந்து சேர்ந்துள்ளனர்.


அத்தான் எல்லோர் மனதிலும் இடம் பிடித்து இருப்பது ஒரு புறம் ஆச்சரியம் மகிழ்ச்சியாகவும் உள்ளது. என் அத்தான் சிறந்த நண்பர், சிறந்த நிர்வாகி, சிறந்த கணவர், சிறந்த தந்தை.  இப்போது உங்களை நாங்கள் பாபா கடவுளுமாக மாற்றி விட்டோம். என் கடவுளே நான் அழைக்கும் போது வர வேண்டும். உங்கள் வரவும், பேச்சும், ஆதரவும், நட்பும் மட்டுமே என்னை வாழ வைக்கும்.  அத்தான் இன்னும் என் மனம் ஆறாது இருப்பது ஏன் கடவுள் நம்மை பிரித்தார்?  அத்தான் நீங்கள் தான் கடவுளுக்கு அந்த வழியை காட்டி கொடுத்துள்ளீர்கள். நீங்கள் தானே பண ஆசையில் என்னை பிரிந்து கத்தாருக்கு போக வேண்டும் என முடிவு எடுத்தீர்கள். அத்தான், என்ன தான் காரணம் என்றாலும் நம்மை பிரித்திருக்கக்கூடாது. எனக்கு உங்களை தவிர யாரும் இல்லை . அத்தான் வாழ்க்கை மேலுள்ள பிடிப்பே அற்று விட்டது. கடவுளின் தீர்ப்பு விளங்க வில்லை. உங்களை கடவுளாக பாவித்து என் வாழ் நாள் மட்டும் வணங்குவது மட்டுமே என் கேள்விக்கு எல்லாம் தீர்வாகும்.

2 comments:

shanmugavel said...

உங்கள் அத்தான் உங்களுடன் தான் இருக்கிறார்...

பழனி.கந்தசாமி said...

எந்த துக்கத்திற்கும் காலம்தான் மருந்து.

Post Comment

Post a Comment