header-photo

வருடங்களை யுகங்களாக மாற்றிய விதி!

திருமணம்  முடிந்து அத்தான் வீட்டிற்கு சென்றாகி விட்டது.  சென்ற ஒரு மாதத்திலே எனக்கு புரிந்து விட்டது இது அவசரமாக முடிவாகின திருமணம். நானும் சில விடையங்களில் பக்குவமாகாத மனநிலையில் இருந்தேன்,  பல சம்பவங்கள் அங்குள்ள சூழல்கள் என் வீட்டில் இருந்தும் மிகவும் மாறுபட்டிருந்தது.  எங்கள் வீட்டில் அப்பா எங்களுக்காக எல்லாம் தியாகம் செய்பவராக இருந்தார். தன்னை விட பிள்ளைகள் சுகமாக இருக்க வேண்டும் என கருதுபவர். எங்கள் சுதந்திரத்தில் தேவை இல்லாது தலையிடாதவர். அப்பாவிடம் நான் அடி வாங்கினதாக ஒரே ஒரு முறை தான் நினைவு உள்ளது. அவருக்கு பாரிய கல்வி அறிவு இல்லை என்றாலும் பண்பானவர்.

ஆனால் அத்தான் வீட்டிலோ அவருடைய தந்தையிடம் யாரும் பேச இயலாது. அவர் மட்டுமே கதைப்பார். எப்போதும் ஆங்கிலப் புத்தகங்கள் தான் வாசிப்பார். தனக்கு காட்டுக்கு,  ஆலையம் செல்லும் போது அணிய, விருந்து வீட்டுக்கு செல்ல என பல காலணிகள் வைத்திருப்பார். பிள்ளைகளுக்கோ இரு செட் செருப்பு தான் இருந்தது.  ஒன்று வீட்டிற்குள் இட மற்றொன்று வெளியில் இட! எப்போதும் பிள்ளைகளை குற்றம் பாடி கொண்டே இருப்பார். அவர் வரும் போது வீட்டில் யாரும் கதைக்கக்கூடாது ரேடியோ சத்தமாக வைக்கக்கூடாது. பிரத்தியேகமாக டிவி ரிமோட் அவர் கையில் தான் இருக்க வேண்டும். முக்கியமாக  அவர் இருக்கும் நாற்காலியில் யாரும் இருக்கக்கூடாது. அந்த வீடு வீடாக தெரியவில்லை எனக்கு அலுவலகமாகத்தான் தெரிந்தது.


என் வீடோ வண்டிப்பெரியார் டவுண் மத்தியில் அவர்கள் வீடு நடுகாட்டில் அதும் கம்பனி வீடு. திருமணம் முடிந்த பின்பு தான் சொந்த வீட்டு, கம்பனி வீடு பிற்காலத்தில் வாடகை வீடு எல்லாம் விளங்கினது.  எங்கள் வீட்டில் எல்லாம் இருந்தும் இல்லாதது போல்  பாவிப்பர், அவர்கள் வீட்டில் பல விடையங்கள் வெட்டி பந்தாவாக காட்டி கொள்வர்.  தினம் இரவில் என்னவர் அப்பா ஒரு அவுன்ஸ் உயர் ரக பிராந்தி அருந்துவது எங்கள் குடும்ப சாப்பாட்டு மேஜையில் இருந்து தான். அதை தானாக குடிப்பதும் இல்லாது, திறம் உள்ளவன் சம்பாதித்து குடிக்கலாம் என்று தன் மகன்களுக்கே சவால் இடுவார்.  நான் என்னவரிடம் இதை பற்றி கேட்ட போது இவர் நாங்கள் பக்கத்து வீட்டில் சென்று குடிப்பதை அறியாது இருக்கார் என்றார். தன் பிள்ளைகளுக்கு தன் வீட்டு வருமான செலவுகளை பகிராது கற்று கொடுக்காது பிள்ளைகள் என்பவர்கள் தன் வீட்டு பைக் துடைக்க குடை போன்ற தொலைக்காட்சி ஆன்றனவை சரிசெய்யவே பயண்படுத்தி வந்தார்.

வெளியில் ஆசாரம் கட்டுப்பாடு, உள்ளே அராஜக ஆட்சி, எகத்தாளம் என்னை அந்த வீட்டை வெறுக்க செய்தது. காட்டுக்கு நடுவில் என்பதால் பாம்பு பயமும் என்னை தொற்றி கொண்டது. என் மாமனார் தேயிலைத்தோட்ட அதிகாரி என்பதால் வீட்டில் வேலையாட்கள்  மாடு வளர்ப்பது, செடி வளர்த்து, காய்கறி பால் விற்பது எல்லாம் எளிதாக இருந்தது. என்னவரோ அலுவலக அதிகாரி மேலும் கம்பனி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் தணிக்கைத்,துறையில் இருந்ததால் எல்லாற்றிலும் சுயகட்டுபாடும் தேவை இருந்தது அவருடைய மேலதிகாரியும் தேவைக்கு அதிகமாகவே கட்டுப்படுத்தியும் வந்தார்.   எங்கள் வீடு இன்னும் பெரும் கொடும் வனத்தில் என்பதால் வீட்டை சுற்றி சில குறிப்பிட்ட இடங்களில் சாரை பாம்பை காணலாம். எனக்கு பாம்பு தான் மிகவும் பயம். பாம்பை பற்றி எங்கள் பக்கத்து வீட்டு நண்பர்களிடம் கூறினால் பாம்பு நடு மத்தியில் விழுந்தது, குறுகே ஓடினது என பல பல .அதை விட பயங்கர கதைகள் சொல்வார்கள்.  

எங்கள் பெரிய மகன் பிறந்து 90 நாள் கடந்து சென்ற போது வீட்டில் வண்டு கத்தும் போல் சத்தம். அத்தான் டவுணில் இருந்து வந்த போது அந்த குறிப்பிட்ட சத்தம் வந்த திசையை காட்டி கொடுத்தேன். அது தேன் நிறமுள்ள ஓர் நல்ல பாம்பாக இருந்தது. அது போனதை கண்டோம். அது எங்கிருந்து வந்தது எங்கு போயிருக்கும் என பல நாட்கள் ஆராய்ந்து கொண்டிருந்தோம். இப்படி பல நெருக்கடி மத்தியிலும்  அத்தான் பாதுகாப்பில் இருப்பது மட்டுமே மகிழ்ச்சி. அவர் ஓர் அதிசயப்பிறவி. யார் யாருக்கு என்ன தேவையோ பார்த்து பார்த்து செய்வார். அது என் வீட்டார் ஆனாலும் அவர் வீட்டார் ஆனாலும் ஒரே போல் தான் செயல்படுவார். அவர் வீட்டார் என்றதும் கொஞ்சம் அதிகமாக பற்றை வெளிப்படுத்துவார் அவ்வளவே.  இந்த குணம் அவர் போகும் மட்டும் இருந்தது. அவருக்கு யார் என்ன செய்கின்றார்கள் என கணக்கிட மாட்டார். அவரால் என்ன செய்ய இயலுமோ அதை செய்து கொண்டே இருப்பார்.

அவருடைய பெற்றோர் அத்தானை ஒரு வகை தரித்திர சூழலில் வளர்த்தால் அவருக்கு தன் பிள்ளைகள் எவ்விதவும் கஷ்டப்படக்கூடாது என எண்ணி ஆற்றலையும் மிஞ்சி நல்ல பள்ளிகளில் கல்வி கொடுத்தார், தன் நிழலில் தன்னுடனே வைத்து வளர்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்.  பல போதும் தகுதிக்கு மீறியே பிள்ளைகளுக்காக செலவழித்தார். பெரியவர் எட்டாம் வகுப்பு ஆகினதும் இனி பைக் சரிவராது எனக்கண்டு கார் வாங்க ஆசைப்பட்டார். எங்கள் எல்லா ஆசையும் நிறைவேற்ற அவர் கடின உழைப்பு தேவைப்பட்டது, உழைத்து கொண்டே இருப்பார். தூங்கும் நேரம் தவிர்த்து ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டு கொண்டு இருப்பார். சில நாட்களில்  பல மணிநேரம் தட்டச்சு செய்வதால் அவர் விரல்கள் வலிப்பது உண்டு, அப்போது கையை தடவி தரக் கூறுவார். கால் ஒரே நிலையில் வைத்து நீர் பிடித்தும் இருந்துள்ளது.  அப்போது நாங்களை எண்ணை தேய்த்து கொடுப்போம். இதனால் நான் காணப்பயிறை வேகவைத்து தண்ணீர் கொடுக்கும் வழக்கம் இருந்தது. அவர் போகும் சில மாதம் முன் எங்கள் மகன்கள் ”அப்பா உங்க வயிறு பெரிதாகி கொண்டே போகின்றது ஜிம்முக்கு வாங்க என அழைப்பார்கள். சில நாள் சில மணிநேர நடைபயிற்சியுடன் வந்து சேருவார். ஜிம்முக்கு போக நேரம் இல்லை என மறுப்பார். அப்போது அவரை ஆசுவாசப்படுத்த  ”டேய் அப்பாவின் அழகே இந்த வயறு தான். கடவுளின் பிள்ளைகள் கொழுத்த கன்றுகள் போல் இருபார்கள்” என்பேன்.


அவருக்கு பிடித்த நேரப்போக்கு பிள்ளைகளுடன் வீடியோ விளையாட்டு என்பதாக இருந்தது. சமீப காலமாக அந்த விளையாட்டை மறந்து விட்டார். தற்போது அவருக்கு  மன அழுத்தம் என்று தோன்றினால் வாகனத்தை எடுத்து கொண்டு சில நேரம் பயணம் செய்து வரவே விரும்புவார்.  அல்லது சமையல் செய்ய மிகவும் ஆசைப்படுவார். பாத்திரம் கழுகுவது, காய்கறி வெட்டுவது அரைத்து கொடுப்பது மட்டுமே என் வேலையாக இருக்கும்.  ஞாயிறு அன்று அத்தான் சமையலாகவே இருக்கும். காலையில் என்னையும் சந்தைக்கு  அழைத்து சென்று இலை உட்பட எல்லா காய்கறியும் வாங்கி வந்து பிரியாணி செய்வார். செய்து முடிக்க 11 மணியாகி விடும். நாங்கள் நால்வரும் ஒன்றாக உணவு எடுக்க அமருவோம். என் இருக்கை அத்தான் அருகில் தான் இருக்க வேண்டும். அவர் நடத்தின வாழ்க்கை ஆக்கபூர்வமாக, அன்பால் உருகி, உயிரோட்டதாக இருந்தது. இதில் நாங்கள் யாராவது வருத்தப்பட்டால் அவரும் வருந்தி விடுவார். அவரை வருந்த செய்ய வேண்டாம் என்றே அவர் உள்ள போது அவர் விரும்பாததை கதைப்பது இல்லை என்றிருந்தோம்.


பிள்ளைகளை நான் ஏதும்  வேலை செய்ய கூறினால் நான் செய்கிறேன். அவர்களை நிம்மதியாக இருக்க விடு.  தன் சிறு வயதில் இரவு உணவுக்கு முன் தன்  அம்மா உடமரக்கட்டையை வெட்டிப்போட கட்டாயப்படுத்துவதை வெறுப்புடன் நினைத்து பார்ப்பார். அதே போன்று இறச்சி குழம்பு கேட்டால் கிராம்பி எஸ்டேடில் இருந்த போது  கொக்கை வழி நடந்து சென்று பாம்பனார் டவுணில் இருந்து வாங்கி வரக்கூறுவதை நினைவு கூறுவார். தன் பெற்றோர் தன்னை நிர்பந்தித்தது போல் தன் பிள்ளைகள் நிர்பந்ததிற்கு உள்ளாகுவதை விரும்பவே மாட்டார்.


இது போன்ற அவருடைய சில விருப்பங்களாலே அவர் பல மடங்கு அதிகமாக உழைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார். எங்கள் திருமணம் முடிந்த போது அவர் 6 ஆயிரம் ரூபாய் கடனுடன் தான் வாழ்க்கையை ஆரம்பித்தார். அவருக்கு என ஒரு ரூபாய் கூட அந்த பெற்றோர் கொடுக்கவில்லை. நாங்கள் தூத்துக்குடியில் குடிபுகுந்த போது அத்தான் ஊதியத்திற்கு; வரிசை வீடு, பொதுக்கழிப்படம் உள்ள வீட்டிற்கு குடிப்புகிரத்தான் தகுதி இருந்தது. ஆனால் என் வசதி வாழ்க்கையை கருதி நல்ல தனி வீடாக பிடித்து குடியிருந்துள்ளோம். பண்டிகை என்றால் எங்களுக்கு எடுத்து தந்த பின் கடைசியாகவே அவருக்கான உடையை எடுப்பார். எங்கள்  திருமணம் ஆன பின் அவர் பெற்றோர் அவருக்கு அவர் பிள்ளைகளுக்கு ஒரு முறை கூட துணிமணிகள் எடுத்து கொடுக்கவில்லை என வருத்தப்படுவார். ஆனால் அத்தான் வசதியான பின் தன் பெற்றோருக்கு துணிமணிகள் எடுத்து கொடுக்க தயங்கினது இல்லை. இந்த புதுவருடம் தன் அம்மாவிற்கு ஒரு சேலை என்னை வைத்து தேர்ந்து எடுத்து அவர் கையால் கொடுத்தார். 


என் தோழிகள், என் வயது கொண்ட என் உறவினர்களை கண்டால் என் வாழ்க்கைத்தரம் மெச்சப்படவில்லை. பின் தங்கியே இருந்தது. ஆனால் எங்கள் அன்பால், எங்கள் பிணைப்பால் இல்லை என்ற நிலையை எல்லாம் உண்டு என செழுமையாக்கியிருந்தோம். அத்தானின் பிரிவைத் தவிற எந்த துயரையும் நாங்கள் எதிர்கொண்டிருப்போம். அதனால் தான் என்னவோ இறைவன் அத்தானை விரைவாக அழைத்து கொண்டார். ” எல்லாம் அத்தான்”  என்ற இடத்தில் ”இல்லை” என இறைவன் தீர்வு எழுதியதின் மர்மம் தான் விளங்கவில்லை. நல்ல குடும்பம் அரவணைப்புள்ள கணவன் வீட்டார் கருதலான  உறவினர்கள் என எல்லாமே இல்லை, இல்லை என இருக்க எங்களுக்கு எல்லாமான அத்தானே ஏன் அழைத்தாய் இறைவா? என்ன தத்துவமும், எந்த ஜெபமும், எவ்விதமான கடவுள் நம்பிக்கையும், எங்களை ஈடேற செய்யாது. எங்களை கைபிடித்து நடத்தியவரை அழைத்து சென்று விட்டு எங்களை ஓடிவரக் கூறுவது கூட கேலியாக சிரிப்பது போல் தான் உள்ளது. இன்றைய மனநிலையில் 10 வருடம் சொந்த வீடு என மகிழ்ச்சியாக இருந்த வீட்டை வாடகைக்கு கொடுத்து விட்டு, நாங்கள் வாடகை வீடு தேடி போவது தான் நிம்மதியை தரும் போல் உள்ளது. எங்கள் இருப்பு, எங்கள் உயிர், மூச்சு சந்தோஷம் எல்லாம் அணைத்து என்ன பெரிய ஆசிர்வாதம் கிடைக்க உள்ளது எனத்தெரியவில்லை. ஐந்து வருடமாக கார் இருந்தும்  ஒரு முறை கூட ஓட்டுனர் இடத்தை எட்டி பார்க்காத என்னை கார் ஓட்ட கற்று கொள்ள அனுப்பி விட்டது அத்தான் பிரிவு!  பல வருடமாக சேர்த்து வைத்த கனவுகள் ஆசைகள்,எல்லாம் உடைந்து சிதற;  ஏக்கங்களுடன்  இனி புது கனவுகளை தேடி சேர்க்க வேண்டியுள்ளது


எதுவும் மனதில் ஒட்டவில்லை எதுவும் சிந்திக்க இயலவில்லை, எதைப்பற்றியும் அக்கறையும் இல்லை. ஏதோ நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றது , நான் எண்ணிக்கொண்டிருக்கின்றேன். நீங்கள் நம் பிள்ளைகளுக்காக போட்ட உங்க கணக்கை நான் முடிக்க நினைத்தால் அதை நிறைவேற்ற இன்னும் 11 வருடங்கள் வாழ வேண்டும் அத்தான். நீங்கள் இல்லாது 11 யுகங்களாகத்தான் தெரிகிறது. உங்களுடன் வாழ்ந்த அந்த 19 வருடங்கள் மின்னல் என மின்னி மறைந்து விட்டது அத்தான்! இந்த சூழலை கடக்க நீங்க தான் உதவ வேண்டும். நீங்க தான் எந்த பிரச்சினையும் ஒரு பிரச்சினை இல்லை என அடிக்கடி கூறுவீர்களே. எங்கள் பிரச்சினை தான் தீர்க்க இயலாத பிரச்சினையாக உள்ளது. 0 comments:

Post Comment

Post a Comment