header-photo

உங்கள் நினைவுகளுடன்..............அத்தான்!

பாபா அத்தான் ஒவ்வொரு நாளும் விழிக்கும் போது என்னை திடப்படுத்தி கொள்கின்றேன் நீங்கள் இனி வரமாட்டீர்கள் உங்களை மறுபடியும் பார்க்க இயலாது என்று.  நீங்கள் என்னை விட்டு போய் விட்டீர்கள் என  என் மனம் இன்னும் நம்ப மறுக்கின்றது.  60 நாட்கள், ஒரு மின்னல் போல் மறைந்து விட்டீர்கள். ஒவ்வொரு நாள் கனவிலும் உங்களை எதிர் நோக்குகின்றேன்.  பாட்டி கூறினார்கள் நீங்க இனி ஒரு வருடம் கழிந்த பின்பு தான் வருவீர்களாம் .  என் பாட்டியை  நீங்கள் எவ்வளவு கரிசனையாக மதிப்பீர்கள். அவர்கள் வாழ்வில் கண்ட துயர் யாருக்கும் வரக்கூடாது என நினைப்பீர்கள். ஆனால் அதன் பங்கை இறைவன் உங்க மனைவிக்கே  தந்து விட்டாரே! உங்களை முதன் முதலாக சந்தித்த போது ஒரு  புகைப்படம் எடுத்தது,   நீங்கள் தான் என் வருங்கால கணவர் என தெரிந்து ஒரு புகைப்படம் பெற்று கொண்டது, உங்கள் வீட்டிற்கு ஒரு முறை வந்த போது உங்க திருமண கோட்டை போட்டு எனக்கு அழகு பார்த்தது என எல்லாம் நினைவில் வந்து  கொண்டு இருக்கின்றது.   

நம் வாழ்க்கையை பாண்டவர் மேட்டில் துவங்கி நம் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்கள், என்று உங்கள் ஒவ்வொரு நினைவுகளையும் அசைபோட்டு கொண்டு இருக்கின்றேன். இது எனக்கு கிடைத்த சோதனையா? தண்டனையா என்று எனக்கு பகுந்து அறியத் தெரியவில்லை.  இருப்பினும் என் இதயத்தை என் ஆன்மாவை சாகடித்த மாபெரும் துயர் அத்தான். நான் என்று மீண்டு வருவேன் என எனக்கு தெரியாது,  ஏன் கடவுள் இது போன்ற சோதனையை நமக்கு அளித்தார். நீங்கள் விண்ணுலகில் இருந்தும்  என்னை நினைத்து வருந்தாது இருக்க இயலாது.  

உங்களை தனியாக கொண்டு போனதை எண்ணி இன்னும் அழுகை தான் வருகின்றது. நாம் இருவரும் ஒன்றாக போக வேண்டும் என்று கூட நாம் கதைத்துள்ளோம்.  எதற்காக இப்போது இந்த பிரிவு. ஆனால் வாழ்க்கையை விளையாட்டாக நீங்கள் பார்த்து விட்டீர்கள். நானும் அந்த விளையாட்டை விளையாட்டாக பார்த்து கொண்டு இருந்துள்ளேன்.  நீங்கள் கத்தார் போறேன் என்று கூறின போது கூட நான் நம்பவே இல்லை. என் மனதில் நீங்கள் எங்கும் போக வேண்டாம் போகக்கூடாது, போக இயலாது என்றே இருந்தது. அதனால் தான் நான் எப்போதும் போல் உங்களில் மலை போல் நம்பிக்கை வைத்து இருந்தேன்.  நீங்க என்னை மீறி ஏதும் செய்ய மாட்டீர்கள் என நம்பி இருந்தேன். நீங்க என்னை உங்க அம்மாவிடம் அடகு வைத்தது சில சம்பவங்களில் புரிந்தது, ஆனால் என்ன பலன் நீங்கள் போய் விட்டீர்கள் என அறிந்ததுமே அந்த தாய் என்னை தூக்கி வெளியே எறிந்து விட்டார். நல்ல காலம் நாம் நாசரேத் வீட்டு மாடியில் வீடு கட்டவில்லை. இன்றைய நிலையில் நானும் உங்க பிள்ளைகளும் நடுத்தெருவில் தான் நின்றிருப்போம். எங்களை நாசரேத்தை விட்டு பாளையம்கோட்டையில் கொண்டு வந்து பாதுகாப்பாக இருக்க வைத்து  விட்டு சென்றுள்ளீர்கள். ஒரு நாள் நம் மகன்களிடம் கூட அந்த தாய்க்கு கதைக்க மனம் வரவில்லை. நீங்க எங்க சொந்தம் என ஓடி ஓடி போய்  சொந்தம் கொண்டாடின  ஒருவர் கூட நம் மகன்களிடம் கதைக்கவில்லை.  எனக்கு யாரிடமும் கதைக்கவும் விருப்பம் இல்லை, யாரிடம் இரக்கம் பெறவும் விரும்பவில்லை. இறைவனே கைவிட்ட போது உறவினர்களிடம் இரக்கம் எதிர் பார்க்ககூடுமா?   ஆனால் இன்னும் பலர் எங்களை தாங்கி வருகின்றனர் உதவுகின்றனர், நலம் விசாரிக்கின்றனர் அதுவெல்லாம் உங்கள் அன்பின் பிரதிபலிப்பாக காண்கின்றேன். மரணம் கள்ளனைப் போல் வரும் என்பது இது தான் போல்!  என்னிடம் ஏன் அன்று நீங்கள் கதைக்கவில்லை. உங்கள் மகனிடம் மட்டும் தான் கதைத்து சென்றுள்ளீர்கள். எல்லோரும் கேட்கின்றனர் ஏதும் சகுனம் தெரிந்ததா என்று.. அன்றைய தினம் அதி காலை நம் வீட்டு கன்னி மூலைப்பக்கம் மண் வெட்டி போட்டு யாரோ சுரண்டுவது போல் இருக்கிறது என்றதும் நீங்கள் எலியாக இருக்கும் என்றீர்கள். நீங்கள் கிளம்பி போகும் போது நான் கை வலியால் எரிச்சலில்  நின்று கொண்டிருந்தேன்.  ”என்ன ஆச்சு” என்று கேட்காது கடந்து சென்றீர்கள். நம் மகன் இன்று மீன் வேண்டாம் எனக் கூறியுள்ளான். ஆனால் நீங்களோ நீ என்னுடன் வருகிறாயா என கேட்டதும் நான் படிக்க போகிறேன் நான் வரவில்லை எனக் கூறியுள்ளான். 

நீங்க ஜோசியத்தில் நம்பிக்கை ஏன் வைத்தீர்கள்? அதனால்  உங்கள் தம்பியிடம் கண் மூடித்தனமாக நம்பிக்கை வைத்தீர்கள். என்னை பிரிய வேண்டும் என முடிவு எடுத்தீர்கள். ஏன் அந்த இறைவன் குழந்தையை போல் மனமுள்ள உங்களை எடுத்து விட்டு சென்றார். அத்தான் எப்படியும் வாழ்ந்து தானே ஆக வேண்டும். என்னை காத்திருக்கும் வரும் வருடங்களை எண்ணி கலங்குகின்றேன். அத்தான் உங்க சிரிப்பு, உங்க தைரியம் உங்க அன்பு, உங்களிடம் பேசாது உங்களை நோக்காது எப்படி முன்னோக்கி செல்வேன் எனக்கு தெரியவில்லை.  நீங்கள் சிரித்து கொண்டு வந்து சேரும் வாசல் கதவை உற்று பார்த்து கொண்டே இருக்கின்றேன். 


உங்களிடம் மிகவும் கோபத்தில், சில நேரம் உங்களை  திட்டி கொண்டு வீட்டிலிருப்பேன். உங்களை கண்டதும் லேசாக சிரித்து, நீங்கள் அருகில் வர வர எல்லாம் மறந்து சிரித்து உங்களில் சரணாகதி அடைந்து விடுவேன்.. சில போது  உங்கள் எண்ணங்கள் முடிவுகளை என்னால் ஏற்று கொள்ள இயலாது. அப்படி தான் சில விடையங்களில் உங்களிடம் முரண்டு பிடித்து கொண்டு என் எண்ணங்களை கூறி விட்டு விலகி நின்றேன், ஆனால் அந்த கடைசி மூன்று மாதம் நீங்கள்; நான் கூறினதை ஒன்றுமே ஒரு பொருட்டாக எடுக்க வில்லை. கடைசி வாரம் கூட இந்த ஸ்கூட்டியை மாற்றுங்களேன் என கேட்டு கொண்டேன். ஆனால் மிகவும் லேசாக, கிண்டல் சிரிப்புடன் வண்டியை எடுத்து கொண்டு சென்றீர்கள். நீங்கள் அன்று அணிந்திருந்த  அந்த ஆஷ் நிற செருப்பும் கூட எனக்கு பிடிக்காதது. உங்கள் கால் அழகை, உங்கள் ஆளுமையை கெடுக்கின்றது எனக்கூறி குப்பையில் எறிந்திருந்தேன். நீங்க தான் நம் வீட்டு பின் பக்கம் போய் அந்த செருப்பை மறுபடியும் எடுத்து வந்து அணிந்தீர்கள். 

அத்தான் நான் கூறும் சில விடையங்களை எதிர்க்க வேண்டும்  அல்லது நான் அமைதியாக இருக்க வேண்டும் என்று எண்ணியை மிகவும் வண்மையான வார்த்தைகளால் என்னை வாய் பேச இயலாத வண்ணம் முடக்கி உள்ளீர்கள்.

நான்கு ஆண்டு முன்பு கோபம் வந்ததும் நான் எதிர்பாரா நேரம் கட்டிலில் இருந்து உருட்டி நிலத்தில் விழ வைத்தீர்கள். அதை எல்லாம் விளையாட்டாக எடுத்து கொண்டு சமாதானம் ஆகி கொண்டேன். நீங்கள் ஒருவனிடம் நட்பு கொண்டது எனக்கு பிடிக்கவில்லை. நான் கடுமையாக விமர்சித்த போது ஒரு தென்னை மட்டையை வைத்து அடித்து விட்டு சென்றீர்கள். நான் அதை ஒரு அன்பு அடியாகத்தான் நினைத்தேன். ஆனால்  நான் யாரிடவும் தெரிவிக்க விரும்பாது இருந்தும்  நீங்கள் என் அம்மாவை வரவைத்து உங்கள் பக்க நியாயத்தை விளம்பரப்படுத்தினீர்கள்.  நான் நீங்கள் அடித்ததை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை. 

 அத்தான் நவம்பரில் இருந்து பெப் 16 மட்டும் நீங்கள் பல விடையங்கள் எனக்கு தெரியாது இருக்க வேண்டும் என கவனமாக இருந்துள்ளீர்கள். ரமேஷ் திருடனிடமே ”எப்படி என்னிடம் கதைக்க வேண்டும்” என்று சொல்லி கொடுத்துள்ளீர்கள். எப்படியோ மகாபாரதப்போரில் குந்தி தன் மகன்கள் வெற்றிக்கு வேண்டி கர்ணன் உயிரை எடுத்தது போல் உங்க உயிரை  உங்க தம்பிக்காக கொடுத்து விட்டாள். கர்ணன் மனைவியை இப்போது சந்திக்க வேண்டும் அவள் மனநிலை எவ்வாறாக இருந்திருக்க கூடும் என என் மனம் கேட்டு கொள்கின்றது. அத்தான் தன் உயிர் குண்டலத்தில் இருக்கிறது என தெரிந்தே கர்ணன் கொடுத்தது போல் உங்க கவசமான என்னை புரக்கணித்து உங்க உயிரை கொடுத்து விட்டீர்கள். இது ஒரு பாடம் என்றனர் சிலர். நான் அப்படி எல்லாம் கூற மாட்டேன். யேசு நாதர் கூறினது போல் அன்பிற்கு என உங்க உயிரை கொடுத்து விட்டீர்கள். என் உயிரையும் எடுத்து விட்டீர்கள் அத்தான். உங்க அன்பு கருதல் உங்க பரிவு என்னை நிலைகொள்ளாவண்னம் நினைக்க வைக்கின்றது சிந்திக்கவைக்கின்றது. நம்மை பொறுத்தவரை இது நமக்கான சவால்.  உங்களை நினைத்து அழாத நாட்கள் இல்லை, நம் வீட்டு சின்ன குழந்தைகள் ஜெனோவில் இருந்து நாங்க அனைவரும் உங்கள் அன்பை நினைத்து வருந்துகின்றோம். உங்க மறைவு எங்கள் அனைவரையும் உங்க அன்பால் உங்க பாசத்தால் கட்டுண்டு கதிகலங்க வைக்கின்றது. நீங்க எங்கும் போகவில்லை எங்கள் மனதில் வாசம் செய்கின்றீகள்.


உங்களை என்னைப்போல் தீவிரமாக அன்பு செலுத்தியவர்கள் யார் இருக்கக்கூடும். கடந்த 19 வருடம் உங்க வெற்றிக்காக உழைத்தேன். உங்க சுண்டு விரல் ஒடிந்து வேலைக்கு செல்ல இயலாத போது என் டாலர் செயினை தந்தேன். மறுபடியும் தூத்துக்குடியில் வேலை இல்லாது இருந்த போது எனக்கு பிடித்த இன்னும் ஒரு செயினை தந்தேன். தூத்துக்குடி ஸ்பினிங் மில்லுக்கு ஆடிட்டராக சைக்கிளில் செல்லக்கூடாது என்ற காரணத்தால் என் கல் வளையலை கொடுத்து ஷைன் பைக் வாங்க கூறினேன். உங்க தம்பி திருமண நாள் அன்று உங்களை சொந்த வீடு இல்லை என அவமதித்த போது என்னிடம் இருந்த எல்லா நகையும் கொடுத்து சொந்த வீட்டிற்கு உடமையாளராக மாற உதவினேன். அதின் உரிமைப்பத்திரத்தில் நம் கூட்டு சொத்து என்று இல்லாது பால்துரை மகன் செல்வபாபா என இட்ட போது மனதில் என் கவலையை ஒளித்து வைத்து கொண்டேன். உங்க அம்மா என்ன செய்தார்? மூன்று மோதிரத்தை பிடுங்கி கொண்டார். ஒரு கட்டில், உங்களுக்கு பிடித்த மேஜை கேட்டதற்கு கூட தரவில்லை, என் அப்பா உங்களுக்கு என கொடுத்த பணத்தையும் அவர்கள் வங்கி கணக்கில் போட்டு கொண்டனர். இருந்தும் அவர்களை நோக்குவது உங்கள் கடமை என நியாயம் கூறினீர்கள்.  அவர்களை திருப்திபடுத்த என பல லட்சம் களைந்தீர்கள். அத்தான் அவர்கள் முன் நீங்கள் முன் வரவேண்டும் என எவ்வளவு நான் முயன்றிருப்பேன். ஆனால் அவர்களுடன் சேர்ந்து கொண்டே என்னை ஏமாற்றி சென்று விட்டீர்களே அத்தான்.


அந்த கடைசி மூன்று நாட்கள் நீங்க ரீகனிடம் ஏதோ கதைக்க எத்தனித்துள்ளீர்கள். ஆனால் என்னிடம் ஒன்றும் கதைக்கவில்லை. அத்தான் என்னால் நினைக்க நினைக்க உங்க பிரிவு கொல்கின்றது. நீங்கள் இந்த உலகில் உங்க இதயத்தால் வாழ நினைத்தீர்கள்.  உங்க இதயத்தை விரும்பிய நாங்கள் பலர் இருந்தும் நீங்க அந்த மூன்று பாம்புகளிடமும் சிக்கி கொண்டது தான் உங்க விதியாக முடிந்து விட்டது. அத்தான் நாம் கண்ட கனவுகள் எல்லாம் நிலைகுலைந்து போய் விட்டது. எல்லா திட்டங்களையும் திருத்தி எழுதி கொண்டிருக்கின்றேன். வருந்த வேண்டாம் அத்தான் நம் காதல் அன்பு நிலையானது அதன் நினைவுகள் உங்களை என்றும் என்னில் வாழ வைக்கும். அந்த நினைவுகளுடன் தான் ஒவ்வொரு பொழுதும் கழித்து கொண்டிருக்கின்றேன்.

0 comments:

Post Comment

Post a Comment