header-photo

வாழ்க்கை எனும் புதிரான பயணம்!

அத்தான் ஒரு வழியா உங்க குரல் கொண்ட காணொளி  கிடைத்து விட்டது.  உங்க உருவம் முதல் சில நாட்கள் மறந்து இருந்தது  பின்பு குரல். பின்பு அதீத துக்கம் விலக உங்கள் உருவம் மறுபடியும் வந்து விட்டது.  இருந்தும் உங்கள் குரல் கேட்க ஆசை கொண்டிருந்தேன். இன்றும் தேடி கொண்டிருந்த போது நாம் பயணப்பட்ட அழகான ஒரு இடத்தில் வண்டியை விட்டு இறங்கி புகைப்படம் எடுக்கவில்லையா என கேட்கின்றீர்கள் நான் வேண்டாம் எனக்கூறும் காணொளி இது.


நம் விடுமுறை நாட்கள், ஏதோ ஒரு இடத்தை தேடிய சில புகைப்படங்களுடன் உள்ள பயணமாக தான்  இருந்துள்ளது.  அது நம்மை பல பிரச்சினைகளில் இருந்து காத்துள்ளது.  சொந்தக்காரர்கள் வீட்டில் போயிருந்து வம்பு பேச வேண்டாம் குத்தி பேச்சு , ஏச்சு கேட்க வேண்டாம். நம் குடும்பம் ,  நமக்கு  மட்டுமே  உருத்தான  உரையாடல்கள் என அந்த நாள் முழுக்க நம் நாலு பேருக்குமானதாக செலவழிக்க இயன்றது. நான்  சாப்பாட்டை பொதி கட்டி விட்டால் நம் பிள்ளைகளுக்கு கோபம் வந்து விடும்.  வெளியில் நிம்மதியாக சாப்பிடத்தான் வருகின்றோம். அங்கும் உங்க தயிரு, புளிசாதமா என கோபம் கொள்வார்கள்.


நீங்க அமைதியா பாட்டு கேட்டு கொண்டே கார் ஓட்டுவீர்கள். ஒரு முறைக்கூட எதிரே வந்த வாகனத்தில் இடித்தீர்கள் என்றோ எதிரே வரும் மனிதர்களை காயப்படுத்தியதோ இல்லை. அசராது ஏழு- எட்டு மணிநேரம் கூட வாகனம் ஓட்டுவீர்கள். ரோடுகள் பயணம் உங்களுக்கு பிடித்தமானது. 
அப்படியான பயணங்களால் தான் திருநெல்வேலி, நாகர்கோயிலை, தூத்துக்குடியை சுற்றியுள்ள பல இடங்கள் போய் வந்து விட்டோம். இனி நம் மனதில் இருந்த சில இடங்கள் இடுக்கி டாம்,  வடஇந்தியாவிலுள்ள சில இடங்கள் இலங்கைப்பயணம் போன்றவை நாம் விரும்பியும் நிறைவேறாதது. 

 உங்களுக்கு நாலுவழிச்சலையில் பயணிப்பது என்றால் அலாதிப்பிரியம். நீங்கள் உங்கள் மகனிடம் எனக்கு பிடித்த ரோடு என்றும் கூறும் இடத்தில் தான் உங்க உயிரையும் விட்டுள்ளீர்கள்.  இன்னும் ஓர் 50 அடி பயணித்திருந்தால் அந்த கொலைக்காரப்பாவியின் கண்ணில் தெரியாது வேறு வழி சென்றிருப்பீர்கள். 

நேற்று முதல் நானும் கார் ஓட்ட கற்க ஆரம்பித்து விட்டேன். உங்களிடம் கற்றுத்தரக்கூறியும் நேரம் இல்லை என ஒதுங்கி விட்டீர்கள். நம் மகனுக்கு கற்று கொடுத்தீர்கள். பெப் 7, 2016 நாள் உங்கள் வழி காட்டுதலுடன் கோயில்பட்டி அருகே வரை ஓட்டினான். நானோ பயத்துடன் பின் சீட்டில் இருந்து வந்தேன். பெரியவன் நம்முடன் பயணிக்கும் போது என்னை பின் சீட்டில் தள்ளுவது தான் அவன் வழக்கம். அத்தான் அந்த கொலைக்காரன் பெருவிரலை பயண்படுத்தி வேகத்தை கட்டுப்படுத்த வேண்டிய இடத்தில் உள்ளம்காலை வைத்து காரை இயக்கி விட்டான் போலும். 

இனி நடந்ததை எண்ணி என்ன கூறினாலும் எந்த பிரயோசனவும் இல்லை. உங்களை உயிருடன் எங்கள் வசம் தர வேண்டும் என்று இறைவன் நினைத்திருந்தால் அது நடந்திருக்கும். உங்க மகன்கள் என்னை பார்ப்பது போல், நாங்கள் உங்களை நன்றாக கவனித்து பார்த்திருப்போம்.


உங்களுக்கும் எங்களுடன் இருக்க விருப்பம் இல்லை, நீங்கள் கடைசி மூன்று மாதம் கூட்டு சேர்ந்த உங்க தம்பி அம்மாவிற்கும் நீங்கள் எங்களுடன் இருப்பது பிடிக்கவில்லை. உங்கள் அப்பா இறந்த கிரியை முடிந்த பின் நாம் நெல்லையில் நம் காரில் கொண்டு வந்து உங்க தம்பி குடும்பத்தை  இரயிலில்  ஊர் அனுப்பி விட்டோம். சென்னையில் சேர்ந்த பின் என்னிடம் அவன் கதைத்ததை அவன் நினைப்பை உங்களிடமும் கூறியிருந்தேன். ”அண்ணி அண்ணன் பயணங்களிலே இருக்கின்றான், அவன் கைபேசியில் என் பெயருடன் தம்பி என்றும் எங்க அம்மா பெயர் பக்கம் அம்மா என்றும் இடக்கூறுங்கள், ஏதாவது நடந்தால் எங்களுக்கு தெரிவிக்க வேண்டாமா  என்றான்”. நீங்க போன அன்று கூட என்னிடம் போலிஸ் கூறினது விபத்து என்று தான் ஆனால் என்னை விட முதல் செய்தி போனது உங்க தம்பிக்கு தான். ஆனால் உங்க முகத்தை பார்க்க அந்த களவாணிக்கு கொடுத்து வைக்கவில்லை. அடுத்த நாள் அதிகாலை வந்து தாயும் மகனும் பெரும் விவாதத்தில் இருந்தனர். காலை 8 மணிக்கே மறைந்து விட்டான். நம் மகன் உங்க அம்மாவிடம் ”சித்தாப்பா எங்க பாட்டி” என கேட்க “அவன் பயண அசதியாக இருப்பதால்  நண்பன் வீட்டில் தூங்க போயுள்ளான் என்றார். இந்த துருப்பிடித்த கதையை பேசி எந்த பலனும் இல்லை. நீங்களே என்னிடம் கூறியிருந்தீர்கள் என் தம்பி நான் இங்கு இருந்தால் சொத்தில் பங்கு கேட்பேன் என நினைத்து எனக்கு மும்முரமாக கத்தார் அனுப்ப  தயார் செய்கிறான் என்று. அவன் பணம் கேட்ட போது கூட உங்களுக்கு வர வேண்டிய சொத்தில் இருந்து வாங்கி கொடுத்திருக்கலாம் தானே? ஏன் உங்கள் செலவில் உங்களுக்கு சூனியம் வைத்தீர்கள் அத்தான். உங்களிடம் உண்மையாக இருந்த பலரை உங்களிடம் இருந்து நெடுதூரம் தள்ளி விட்டு; கடைசி 3 மாதம் உங்களை  பலி வாங்க நினைத்தவர்களுக்கு நிறைய சேவகம் செய்து உள்ளீர்கள். உங்க கணக்கிலுள்ள பணத்தை பற்றி கேட்ட போது கூட கள்ளச்சிரிப்புடன் யாருக்கு கொடுத்திருக்கான் என கண்டு பிடிக்க நான் உதவுகின்றேன் என்றான்.    உங்க அம்மா, தம்பிக்கு  தான் உங்க பணத்தை கொடுத்துள்ளீர்  என அறிந்த போது ஆறுதல் அடைந்தேன். ஒருவேளை எங்களுக்கு தெரியாது வேறு யாருக்காவது கொடுத்திருந்தால் என் இதயமே நின்றிருக்கும்.    பயவாயில்லை அத்தான். முன் ஜென்மத்தில் நீங்க யாராக இருந்தீர்களோ. களவாணி தம்பிக்கு இந்த பிறவியில் அண்ணனாக பிறந்துள்ளீர்கள். உங்க அப்பா கம்பனியில் இருந்து சாக்கு பெட்ரோல் திருடுவார், உடன் பணி செய்பவர்களை மாட்டி விடுவார் என கேள்விபட்டுள்ளேன். ஆனால் உங்க தம்பியும் உங்க அம்மாவும் உங்களையே களவாண்டு விட்டனர். 

 நாம் வின்னி திருமண வீட்டில் சென்ற போது உங்க தம்பியின் ஏமாற்று புத்தியை பற்றி தானே நீங்களும் உங்க உறவினர்களும் பேசி சிரித்தீர்கள். பொங்கலுக்கு கமல்சன் குடும்பத்துடன் நம் வீட்டிற்கு வந்த போதும் கூட நீங்க இருவரும் பேசி கொண்டது அந்த திருடனை பற்றி தான். அவன் கல்லூரியில் படிக்கும் போதே எப்படி எப்படி பிள்ளைகள் பெயரை கெடுப்பான் என்றும் உங்க காம்பவுண்டு சுவரில் அவனைபற்றி ஊர்க்காரர்கள் எழுதி போட்டதை பற்றியும் தான் பேசிச் சிரித்தீர்கள். ஆனால் அப்போதும்  நீங்க  அவனிடம் பணம் கொடுத்து  கொண்டு தான் இருந்துள்ளீர்கள். நம்முடைய அழகான வாழ்க்கையை ஏன் மறந்தீர்கள் அத்தான். 

உங்க அம்மா நம் மகன் பேசின போது ”நான் உன் சித்தாப்பாவிடம் கேட்டு சொல்கின்றேன் சித்தப்பாவிடம் கொடுத்துள்ளேன், சித்தாப்பாவிடம் கேளு என ஒரே சித்தப்பா புராணம் பாடினார். அதுவே நான் கேட்டேன். பாபாவும் உங்க மகன் தானே. அவரை பற்றி நீங்க தான் கதைக்க வேண்டும். அவரை விட ஏழு வயது இளைய அந்த உதவாக்கறை பேசக்கூடாது”.  அவன் நம் மகனையும் உங்களை போல் நினைத்து ”உங்க அம்மாவிடம் கூறாதே உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்” எனக்கூறி 10 ஆயிரம் அனுப்பி உள்ளான். . 

நம் மகன்களுக்கு உங்கள் வாழ்க்கைகுறிக்கோளான உழைப்பு   விடாமுயற்சி பற்றி தெரியும். இன்று அவன் விண்ணப்பம் வாங்க கோயம்பத்தூர்  பிஎஸ்ஜி கல்லூரி சென்றுள்ளான். உங்கள் மகன்களிடம் உங்க நேர்மை, அன்பு உண்டு.  அவர்கள் உங்களை போல் பாசத்திற்காக ஏமாற மாட்டார்கள். அவர்களை பிறந்ததில் இருந்து நம் நெஞ்சிலும், கைகளிலும், இதயத்திலும் வைத்து வளர்த்துள்ளோம். உங்கள் வாழ்க்கையில் உங்களை முள்ளாக குத்தின சோகமே  உங்களை உங்க பெற்றோர்  பிரிந்தது தான்.  உங்கள் பாட்டி பொறுப்பில் அத்தை மச்சான்களிடம் ஏச்சு பட்டு வளர்ந்ததை அவமானமாக கருதினீர்கள்.  வாழ்க்கையில் ஒரு கட்டத்திலும் உங்கள் விருப்பங்களை நீங்களாக தீர்மானிக்க அனுமதிக்காது இருந்ததை எண்ணி வருந்தினீர்கள். நீங்க விடுமுறைக்கு வரும் போதும் உங்களை தனியறையில் தூங்க வைத்திருந்ததின் கொடுமையை பற்றி கூறியுள்ளீர்கள். ஆனால் நீங்க விடைபெறும் அன்றும் வீட்டில் இருந்து கிளம்பும் முன் உங்க மூத்த மகனிடம் தான் பேசிக்கொண்டிருந்தீர்கள். இளைய மகன் பள்ளிக்கு கிளம்பி செல்வதை  கரிசனையாக பார்த்து கொண்டு இருந்தீர்கள். எனக்கு தான் அன்று உங்களிடம் கொஞ்சி, கெஞ்சி பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.  என்னிடம் தான் சொல்ல வந்ததை சொல்லாமலே போய் விட்டீர்கள். அன்று உங்களை சந்திக்க ரீகனிடம் கூறியிருந்தீர்களாமே. ரீகன் அவசர அவசரமாக கிளம்பும் போது உங்கள் தகவலை நம் மகன் தெரிவித்துள்ளான். ரீகனை  முதல் நாளான வெள்ளி அன்றும் பேசவுள்ளது என வரக் கூறியுள்ளீர்கள். ஆனால் என்னிடம் உங்களுக்கு அன்று ஒன்றும் கதைக்க கதைகள் இருக்கவில்லையோ அத்தான். எப்போதும் நீங்கள் கூறும் கூற்று “  நீ  என் மகிழ்ச்சியில் மட்டும் இருந்தால் போதும் என் துக்கத்தில் நீ வேண்டாம்”. ஆனால் நம் திருமண நாள் நாம் எடுத்த வாக்கு துக்கத்திலும் இன்பத்திலும் உங்களுடன் இருப்பேன் என்று தான். உங்கள் கடைசி மூன்று மாதங்கள், அந்த கடைசி மூன்று நாட்கள் பற்றி நான் தியானித்து கொண்டிருக்கின்றேன் அத்தான்.  

உங்க ஆன்மா சாந்தியாகி விட்டது. உங்க கர்ம வினை எல்லாம் களைந்து விட்டீர்கள். அதற்கு இந்த ஜென்மத்தில் உங்க தாய் தம்பி தகப்பன் உதவி விட்டனர். என் கர்மவினையை எண்ணி தான் புலம்பி கொண்டு இருக்கின்றேன். அன்று எனக்கு விடுமுறையாக இருந்தும் உங்களுடன் நான் வராதிருந்தது என் கர்ம வினை தீரவில்லை என்று தானே. நினைத்தால் தீராத சோகமாக மாறி விட்டது நம் காதல் முடிவு.

நம் திருமணம் முடிந்த போது எனக்கு விருப்பமே கை எட்டும் தூரம் பறந்து போகும் மேகம், அதிகாலை கூட்டம் கூட்டமாக போகும் காட்டு பற்றிகளை வேடிக்கை பார்ப்பது பகல் கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகளை அவதானித்து கொண்டிருப்பது. நான் அதிகாலை விழித்து ஜன்னல் வழியாக பார்த்து கொண்டு இருப்பேன். அடுத்து நம் வீட்டு வாசலில் இருந்து  புத்தகம் வாசிப்பது. நீங்கள் அலுவலகம் விட்டு வருவதை கண்டு டீ தயார் செய்து குடித்து விட்டு நடக்க போவது. மெல்ல மெல்ல காதலிக்க கற்று தந்தீர்கள். அந்த காதல் காயாக, கனியாக மாறி வந்த போது என்னை தள்ளி விட்டு சென்று விட்டீர்கள்.  பாண்டவர் மேட்டு கடும் குளிரில் அடுப்பில் தீயிட்டு நாம் பேசி கொண்டு அருகில் நிற்பதும், தற்போதும்  காலையிலே ”என்ன இன்று சாப்பாடு? சப்பாத்தியா, தோசையா ,  பிரியாணி செய்து தரவா”  என்று அவசர அவசரமாக வரும் உங்களை “அத்தான் காலையில் நிதானம் தேவை, படபடக்க வேண்டாம்” என்று  உங்களை அணைத்து கொள்ளும் கணங்கள் தான் நினைவில் வருகின்றது.   

நம் பிள்ளைகள் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டிய வேளையில் வாழ்க்கையின் எல்லா அவலங்களும், வெறுமையும் முடிந்து விட்டது; இனி அமைதி, அன்பு, ஒன்று மட்டும் தான் தேவை என்ற மனநிலையில் வாழ்க்கையை ரசிக்க ஆரம்பித்த போது உங்கள் பிரிவு விடைதெரியா புதிராக வந்து விட்டது.


நான் மறுபடியும் போராட ஆரம்பித்து விட்டேன். முதல்படியாக கார் ஓட்ட கற்று கொள்ள செல்கின்றேன். உங்களுக்கு நான் பாரமாக இருந்தது போல் பிள்ளைகளுக்கும் பாரமாக தெரியக்கூடாது அத்தான். நீங்க பல நாட்கள் அவசரம் அவசரம் எனக்கூறி வேகமாக சென்று கல்லூரி வாசலில் விடும் போது ”அத்தான் மூட்டையை இறக்கி வைத்து விட்டீர்களா” என கேலி செய்வேன்.  இந்த வாரம் சாம் ஜோயல் தான் கொண்டு விட்டு அழைத்து வருகின்றான்.  உங்களை சார்ந்தே உங்களை நோக்கியே என் வாழ்க்கை தடத்தை பதித்த எனக்கு இனியுள்ள பாதை ஒற்றையாள்  பாதை என்றதும் கவலை தொற்றி கொள்கின்றது. என்னால் இயலும் என்னால் முடியும் என்ற என் தன்னம்பிக்கை நம் பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கமும் என்னை திடப்படுத்துகின்றது.  0 comments:

Post Comment

Post a Comment