header-photo

பிரிவு என்ற நியதி!

பாபா அத்தான் உங்களை பாபா என்று அழைப்பேன் சிலபொழுது மாமா  என்று கூட அழைப்பேன். உங்களுக்கு நான் எப்படி அழைத்தாலும் பிடிக்கும். நாம் சேர்ந்தது கூட அதிசயமாகத்தான் உள்ளது, பெற்றோர் விருப்பம் இல்லாது காதலித்து அல்லது ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ளும் தைரியம் நாம் இருவருக்கும் இல்லை. நம் பெற்றோர்களை நாம் இருவரும் மதிப்பவர்கள். அப்படி இருக்க நாம் இருவர் சேர்ந்ததே அதிசயம் தான்.

நான் எப்போதும் எஸ்டேட் அதிகாரிகள் பிள்ளைகளிடம் நட்பு பேணியது இல்லை. அவர்கள் ஓர் சிறைக்கதிகளாகத்தான் இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையே வரட்டு கவுரம் கொண்டு நிரம்பியதாகத்தான் இருக்கும். அதிலும் இந்த புரட்டஸ்டண்டு கிருஸ்தவர்கள் மனிதநேயமே பேணாத தன்னலம் பிடித்தவர்கள் என்ற கற்பிதங்கள், புரிதல்கள் தான் எனக்கு இருந்தது. என் உடன் படித்தவர்கள் என் சில உறவினர்கள் கூட அப்படி தான் இருந்தார்கள். எனக்கு வரன் தேடும் போது உங்களை ஒரு எஸ்டேட் அதிகாரியின் மகன் என்பதை அறிந்தும் என் எண்ணங்களை எல்லாம் தூக்கி போட்டு காதலிக்க ஆரம்பித்து விட்டேன். நீங்களும் அப்படி தான். உங்கள் மனதில் உங்களை போன்றே எஸ்டேட் அதிகாரியின் மகள் தான் இருந்துள்ளார்.  நீங்க கூட ஒரு நாள் கண்ட கனவு வைத்து ஒரு திசையை சேர்ந்த பெண்ணைத்தான் எதிர்பார்த்து உங்கள் அப்பாவையும் அழைத்து அந்த வீட்டிற்கு சென்றுள்ளீர்கள். ஆனால் கடவுள் வைத்த விதி  என  நீங்கள் நினைத்த திசையில் தான் என் தாத்தா தோட்டம் இருந்தது என பின்பு கதைத்துள்ளீர்கள்.


அத்தான் நீங்கள்  இவ்வளவு விரைவில் என்னை விட்டு  ஏன் போனீர்கள் என ஆராய ஆராய நிம்மதியே இல்லை.  இன்றும் சில நேரம் அழுதேன். எந்த தீர்வும் என் கண்ணீர் தரப்போவது இல்லை. இது குடும்ப சாபமா, நம் முன் ஜென்ம பாபமா, என்ற சிந்தனையே என்னை வாட்டி வதக்குகின்றது.  நம் நண்பர் கூறியது போல நாம் வெறும் வழிப்போக்கர்கள் சந்தித்தோம்,  வாழ்ந்தோம்,  மகிழ்ந்தோம், பிரிந்தோம் என ஒரு தத்துவ மனநிலை கொண்டு எடுக்க ஆரம்பித்து விட்டேன்.  இன்று மரணத்தை பற்றி வெவ்வேறு  நாட்டினர் , மதத்தினர் என்னை சிந்திக்கின்றனர் என ஒரு கட்டுரை வாசித்தேன். அவரவர் கலாச்சார சூழலுக்கு இணங்க ஒவ்வொரு நம்பிக்கைகள்.  நான் எதை எடுத்து கொள்ள என குழம்பி விட்டேன். ஆனால் சாக்ரட்டீஸ் போன்றவர்கள் மரணத்திற்கு ஒரு சம்பவம் என்பதை மீறி அர்த்தங்கள் கொடுக்கவில்லை. ஜெனிப்பவர்கள் மரிக்கனும் போல்.  அத்தான் ஆனால் இந்த பிரிவைத்தான் என்னால் தாங்க இயலவில்லை.நாம் சந்தித்ததும் திருமணம் செய்து கொண்டதுமே ஆச்சரியம் தானே.  நீங்கள் ஒரு சபை நான் ஒரு சபை. கடைசி வரை என்னுடன் வர ஆசையிருந்தும் உங்கள் பெற்றோருக்காக என் சபையில் சேர விரும்பவில்லை. பெப் முதல் வாரம் நான் உன்னுடன் சகாய மாதா கோயிலில் சேர்ந்து கொள்கிறேன் என்றீர்கள் வேளாங்கண்ணி கோயில் போய் மொட்டை போட்டீர்கள். ஆனால் நீங்கள் கத்தார் போவதால் சபை மாறுவோம் என்று சொன்னதை பெரிய விடையமாக எடுத்து கொள்ளவில்லை. நம் அன்பிற்கும் நம் வாழ்க்கைக்கும் சபை,  முதல் நான்கு வருடம் பெரும் பிரச்சினையாக இருந்தாலும் பின்பு நாம் அதை பின் தள்ளி விட்டோம்.
  


நம் சிந்தனைகள் பல பொழுதும் ஒத்து இருந்தது. ஆனால் நீங்கள் உணவகங்களில் சாப்பிடுவது எனக்கு பிடித்திருக்கவில்லை. நான் மிகவும் தேவையான விடையங்கள் பேசும் போதும் நீங்கள் பாட்டு கேட்டு கொண்டு  அதன் பொருளுக்கு உரிய முறையில் நீங்கள் எடுத்து கொள்ளாததும் எனக்கு வருத்ததை தந்தது. அதே போல் நான் உணர்ச்சிவசப்படுவது கவலைப்படுவதையும் நீங்கள் வெறுத்தீர்கள். என்னை ஒரு அமைதியான மனநிலைக்கு கொண்டு வந்தது நீங்கள் தான். நீங்கள் நிகழ் காலத்தில் வாழ்ந்த சித்தர். உங்களுக்கு மலை மேல் பயணம் மேற்கொள்ளுவது அதீத விருப்பமாக இருந்தது.  சில நபர்களுக்கு சில உறவுகளுக்கு தேவைக்கு அதிகமாக நீங்கள் பிரதானம் கொடுத்ததையும் நான் விரும்பவில்லை.  எனக்கு பிடித்த தருணங்கள் எல்லாம் நீங்கள் என்னுடன் கதைப்பதும், பயணிப்பதும்  ஆக இருந்தது.

நீங்கள் இப்போதும் இருக்கும் நிலையில் நான் மிகவும் மகிழ்வுற்று இருந்தேன். நீங்கள் கத்தார் என நவம்பர் மாதம் பேச்சு எடுக்க ஆரம்பித்த போதே தடுத்தேன். ஆனால் கடந்த மூன்று மாதமாக நான் போகிறேன் எனக்கு இங்கு விருப்பமில்லை நிறைய பணம் வேண்டும்  என்றே பேசிக்கொண்டிருந்தீர்கள். உங்கள் கடைசி மூன்று மாத பல முடிவுகள் எனக்கு தெரியாதே இருந்தது விட்டது. ஆனால் அந்த மூன்று மாதத்தில் நம் வீட்டு ஜாதகமே உங்க அம்மா வசம் இருந்தது. நீங்க கனடா நாட்டிற்கு போக ஆசைப்பட்டதும்  உற்சாகப்படுத்தியதும் நான் தான். உங்களுடன் நாங்களும் வந்து விடலாம் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் நீங்கள் கத்தார் தான் போக உள்ளேன் பணம் சம்பாதிக்க கத்தார் தான் தகுந்த இடம் என கூறிய போது எனக்கு பிடிக்கவில்லை. பணத்தை  என்று  நாம் ஆசைப்பட்டோம். அந்த ஆசையை விதைத்தது உங்கள் தாய் தான். அந்த அம்மையாரையும் பணத்தையும் பிரிக்க இயலாது. பணம் சம்பாதிக்க திராணியற்றதும் உங்க அப்பா அனுபவித்த துன்பம் நீங்கள் தெரிந்தது தானே? 70 வயதிலும் பணத்துடம் வந்தால் தான் சாப்பாடு என்ற நிலைக்கு உங்கள் தந்தை தள்ளப்பட்டார்.என்  அப்பா  உங்களுக்கு  கொடுத்த பணத்தையும் அவர்கள் கணக்கில் போட்டு கொண்டனர். உங்க அப்பா எஸ்டேற்றில்  கொண்டு வந்த முப்பது லட்சத்தில் மூன்று  ரூபாய் கூட உங்களுக்கு தரவில்லை. உங்களை ஒரு மகனாகவே மதித்து அவர்கள் வீட்டு தறைக்கல் இடும் போது அழைக்கவில்லை , உங்க தம்பிக்கு பெண் பார்க்க அழைத்து செல்லவில்லை, வீடு பால் காய்க்க உங்களை முதல் நாள் அழைக்கவில்லை என பல வருத்தங்கள் வைத்திருந்தீர்கள்.  உங்க அப்பா இறந்த பின்பும் உங்க பங்கு கிடைக்கவில்லை என்றதும் தான் கத்தார் செல்ல முடிவு எடுத்தீர்கள்.


இந்த வயதில் 14 மணிநேரம் வேலை செல்ல இயலுமா?  அங்கு கொடும் சூடாக இருக்குமே?  என்னை பிரிந்து இருந்து விடுவீர்களா?   என்ற கேள்விக்கு எல்லாம் பதிலாக நீங்கள் பல காரணங்கள் வைத்திருந்தீர்கள்.  அந்த தாயாவது இந்த வயதில் குடும்பத்தை பிரிய வேண்டாம். உன் பங்கை தந்து விடுகிறேன் என்றிருக்கலாம். ஆனால் கடந்த மூன்று மாதமாக  நாசரேத் வீட்டை சுத்தம் செய்ய மின்சார பில் கட்ட சந்தைக்கு சென்று காய்கறி வாங்க என உங்களை அல்லவா பயண்படுத்தியுள்ளார். அந்த அம்மையார் நம்முடன் இருந்திருக்கலாம். நாம் அழைத்த போது இளக்காரமாக என் வீடு தான்வசதியானது எனக்கூறி சென்றார். அந்த அம்மையாரை அதன் வழியில் வாழ விட்டிருக்கலாம் தானே அத்தான்? நீங்கள் போனதும்  “ இருப்பவனை நான் பார்க்க வேண்டாமா? விடுதலை பத்திரத்தில் கையெழுத்து போடச்சொல்லுங்கள் என்றார். விடுதலை பத்திர உறவா மகன் குடும்பத்தினுடையது?  அந்த அம்மையாருக்கு பாச மகன் உண்டு. எனக்கும் பிள்ளைகளுக்கும் நீங்க மட்டும் தானே இருந்தீர்கள். நீங்க போகிறேன் என்ற போது நான் நீங்க போகக்கூடாது என்றல்லவா வேண்டிக்கொண்டிருந்தேன். கடவுள் ஒரேடியாக என்னை விட்டு பிரித்து விட்டார்!அத்தான் அத்தான் என ஒரு நாள் எத்தனை முறை அழைப்பேன் என்ற எண்ணிக்கை இல்லை. என் பேச்சு மூச்சும் நீங்களாகத்தான் இருந்தீர்கள். நீங்கள் காலை 7.30 க்கு கிளம்பினதும்  ஆபிஸ் சென்று சேரும் நேரம் கணக்கிட்டு ஆபிஸ் வந்து சேர்ந்து விட்டீர்களா என விசாரித்து கொள்வேன். உங்கள் ஆபிஸ் பக்கம் கேட்கும் கிளிகள் ஒலியை பற்றி விசாரித்துள்ளேன். நீங்களும் நான் கல்லூரி வாசலில் கால் வைக்கும் போது  “கல்லூரி வந்து சேர்ந்து  விட்டாயா. மாலை அழைத்து கொள். நேரம் இருந்தால் இருவரும் சேர்ந்து செல்வோம் என்பீர்கள்”  நாலேகால் ஆகும் போது நான் ஒரு அன்பின் தகவல் அனுப்பியிருப்பேன் நீங்கள் பதிலாக உடன் கைபேசியை எடுத்து பேசுவீர்கள். 

ஒவ்வொரு நாள் விடியும் போது அத்தான் இனி இல்லை என்பதை என் மனம் ஏற்று கொள்ள மறுக்கின்றது. இன்றுவாசல்க்கதவை பார்த்துகொண்டே இருந்தேன். இரு கையிலும் பொருளுடன் வேகமாக சிரித்து கொண்டு வருவதும் ஓடி வந்து என்னை பற்றி கொள்ள  வருவதும் நான் விலகி நின்று கொண்டு  குளித்து சுத்த பத்தாக வர
க்கூறி  விரட்டுவதும் நினைவில் வந்து என்னைக் கதறவைக்கின்றது.


. நீங்கள் என்னை விட்டு போயிருக்க மாட்டீர்கள். நாம் நவம்பர் ஒன்று அற்று மாலையுடன் உங்க தந்தை கல்லறைக்கு சென்றது உங்க கல்லறைக்கு எனக்கு வழி காட்டவா?  அன்று மலை போல் குவிக்கப்பட்டிருந்த உழுந்த வடை கிடைத்தது அது கூட நம் இணைப்பை பிரித்த தருணம் தான். அன்று முதல் உங்கள் உழைப்பு எல்லாம் அந்த வீட்டில்  ஒதுங்க ஆரம்பித்து விட்டது.
 ஜூன் 4 அன்று அடக்கம் செய்த உங்க அப்பாவை நவம் 1 அன்று தான் கல்லறையில் வந்து சந்தித்தார் உங்க தாயார். கல்லறைக்கு வந்தது இல்லை என்றும் தனக்கு பயம் என்றும் உங்களிடம் கூறினார். .அப்போதும் உங்க அப்பா கல்லறையின் மேல் கண்ட நாய் அசுத்துத்ததை சுத்தம் செய்ய விரும்பாது தனக்கு வாங்கி இட்ட கல்லறை அளவை தான் அளந்து கொண்டு நின்றார்.  உங்க கல்லறைக்கு 16, 41 அன்று அழைத்ததும் கார் அனுப்பினால் வருகிறேன் என்னால் நடக்க இயலாது என்று கூறி விட்டார். 

அவ்ர்கள் நினைக்கின்றார்கள் நீங்கள் ஏமாந்ததாக. ஆனால் நீங்கள் எல்லோரையும் ஏமாற்றி விட்டீர்கள். உங்க அப்பாவிற்கு 45 ஆயிரம் உங்களை வைத்து மட்டும் செலவழிக்க வைத்த போது நான் உங்களீடம் கூறினேன் உங்களை  ஏமாற்றுகின்றார்கள் என்று. உங்களுக்கு தெரியாதே உங்க அம்மாவிடம் நம் வீட்டு நிலையில் நீங்கள் ஒரேடியாக 45 ஆயிரம் செலவழித்தது பாதிக்கும் எனக்கூறியும்  அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் நீங்கள் என்னிடம் கூறினீர்கள். என் தகப்பன் ஒரு நாள் என்னிடம் பணம் இல்லை என்றதும் என்னவெல்லாம் கூறி விரட்டி விட்டான், என்ன அவதூறு எல்லாம் உறவினர்கள் மத்தியில் பரவ விட்டான். இன்று என் பணத்தில் அவருக்கு செலவு செய்து விட்டேன். அப்பனுக்கு மகன் செய்யும் கடமையை செய்து விட்டேன். ”என் மகன் என் மகன் என்று பெருமை கொள்பவனால் ஒரு  ரூபாய் கூட கொடுக்கும் நிலை இல்லை பார்த்தீயா”என்றீர்கள்.


அத்தான்  ஏதோ கர்மவினை ஏதோ ஒரு பொல்லாக்காலம் நாம் பிரிந்தோம் ஆனால் 19 வருடம் நிறைவாக எனக்காக நீங்களும் உங்களுக்காக நானும் வாழ்ந்து விட்டோம்.  நாம் ஏமாற்றவில்லை,என் அன்பிற்காக உங்களுக்கு என்னை ஏமாற்றவேண்டிய தேவை வரவில்லை நான் உங்களை நினைத்து கொண்டு நீங்கள் எனக்கு தந்த உண்மையான அன்பை எண்ணி நிம்மதியாக வாழ்ந்து கொள்வேன். 

நீங்க தனக்கு பெற்றோரை பார்க்கும் கடமை உண்டு எனக்கூறினீர்களாமே? உண்மை தான் அது போல அதைவிட மேலாக பெற்றோருக்கும் பிள்ளைகள் மேல் கடமை உண்டு. பிள்ளைகளை பண ஆசைகாட்டி உசுப்பேத்தி விட்டு சிக்கலில் உள்ளாக்கக்கூடாது.  பிள்ளைகள் பண ஆசையால் தன் குடும்பத்தை பிரிய நினைத்த போது ”இந்த வயதில் இந்த ஆசை வேண்டாம் குடும்பத்துடன் இருக்க கூறியிருக்கலாமே? ஆனால் தன் இளைய மகனை பயண்படுத்தியே மூத்த மகனின் அழிவுக்கு காரணமாகி  விட்டாளே.. உங்களுக்கு இருந்த பலவீனத்தை பயண்படுத்தி என்னை விட்டு உங்களை பிரிக்க நினைத்தார் ஆனால் கடவுளை தன்னுடன் அழைத்து சென்று விட்டார். நம்மை பிரிக்க நினைத்தது இது முதல் தடவையல்ல. ஆனால் இந்த முறை நிரந்தரமாக பிரிந்து விட்டோம்.  நீங்கள் நம் மகன்களை, உங்களையே கதியென இருந்த என்னை விளையாட்டு காட்டி  அந்த தாயுடன் சேர்ந்து போட்ட ஆட்டத்தில் என்னை தோற்கடிக்க வைத்து விட்டீர்கள். அத்தான்..............அத்தான் இனி திராணியில்லை,உங்களுக்காக இனி வாதாடியும் எந்த பயனுமில்லை !  என் விதியை ஏற்று கொள்வது மட்டும் தான் நியதி. காதலித்து தீரும் முன்னே பிரிந்து விட்டோமே அத்தான் இதும் நம் நியதி தானோ?

0 comments:

Post Comment

Post a Comment