header-photo

அன்புள்ள அழகான அத்தான்!

1997-2000 ஆண்டு நாம் எழுதின கடிதத்தை உங்கள் நண்பர் பால் ஜெபராஜ்,ஆம் நீங்கள் அன்பாக ’ஊட்டி‘ என அழைக்கும் உங்கள் நண்பர் அனுப்பி தந்தார். அதில் பெரும் ஆச்சரியம் என்னையும் நீங்கள் எழுத வைத்துள்ளீர்கள். ஒரு கணவனாக ஒரு மனைவியை நம்பும், மதிக்கும் பண்புள்ள அத்தானை தான் அந்த கடிதங்களில் கண்டேன். நான் பொதுவெளியில் சிறப்பாக செயலாற்ற வேண்டும் ஆசைப்பட்டவரே நீங்கள் தான் அத்தான். தன் மனைவியை தனக்கு சமமாக சில போது அதற்கும் மேல் மதிப்பவராகவே இருந்துள்ளீர்கள்.  அந்த குறிப்பிட்ட நாட்களிலே உங்களில் அடங்கி விட்டேன். என் பேச்சுக்கள் எல்லாம் உங்களை பற்றியே உள்ளது. உங்கள் அன்பால் என்னை உங்கள் வசம்  சாய்ந்திருக்க வைத்துள்ளீர்கள்.


 நீங்கள் எழுதின கடிதவும் கண்டேன். என் மனைவியும் மகனும் நலமாக உள்ளனர் என ஒரு வரியில் முடித்து விட்டு;என் சகோதரன் படிப்பை முடித்து விட்டு தேனியில் தமிழகம் முழுக்க  ஏஜன்சியை எடுத்துள்ளான் என பெருமைப்பட்டு கொண்டுள்ளீர்கள். உங்களுக்கு உங்கள் சகோதரனை பற்றிய பாசம் நிரம்பி வழிகின்றது. ஆனால் அதன் ஒரு வருடம் முன்பு தான் உங்களிடம் டுயூஷன் செல்ல  என உங்கள் பைக் வேண்டும் என எடுத்து  சென்று தகப்பனும் மகனும் சேர்ந்து  விற்று போட்டார்கள். . அந்த நேரமே உங்களை அழிக்கவும் உங்களிடம் நயவஞ்சகமாகவும் நடந்தவன் உங்கள் மரணம் மட்டும் உங்களை பின் தொடர்ந்து வந்து தன் ஏமாற்று வேலையை காட்டியுள்ளான், எத்தனை தடவை அடி பட்டாலும் தன் குடும்பத்தினருக்கு வேண்டி மன்னித்து வந்தது என்ன மனநிலையில் அத்தான்?  உங்க மன்னிப்பு ஒரு பெரும் ஆச்சரியமே. மன்னிப்பாலே கடவுள் ஆகி விட்டீர்கள் அத்தான்.







என் துறை சார்ற்ந்த புகைப்பட கலைக்கு என ஒரு கிமாரா வாங்கி தந்து நீங்களும் பல முறை என்னுடன் பயணித்துள்ளீர்கள். என் நண்பர்கள் எல்லாம் உங்களுக்கும்  உற்ற நண்பர்கள் ஆகினர். என்  விருப்பம், வெற்றிக்கு வேண்டி உழைத்த உங்களை போல் ஓர் கணவரை காண்பதே அரிது. உங்களுக்கு ஒருவேளை என்னுடன் பயணிக்க இயலாத வண்ணம் வேலைப்பழு இருந்தால் கூட என்னை நம்பி புகைப்பட குழுவுடன் அனுப்புவீர்கள். உங்களுக்கு என் மேல் இருந்த அன்பு, நம்பிக்கை அளவிட இயலாதவை. வருமான வரிக்கணக்கு,  வாடிக்கையாளர்கள்  என பரபரப்பான வேலையிலும் என்னுடன் பயணிப்பது, புகைப்படம் எடுப்பதை, புகைப்படம் எடுப்பதைது என்பது அத்தான் உங்களுக்கு  பிடித்த பொழுது போக்காக இருந்தது.

நம்  மகிழ்ச்சியே  நாம் குடும்பத்துடன் பயணிப்பதாகவே இருந்தது. நம் வாழ்க்கையின் பெரும் மகிழ்ச்சி என்பது இது போன்ற பயணங்களே. இது போன்ற அழகிய கலை மனதுடன் பயணித்த நம் வாழ்க்கை இவ்வளவு விரைவில் முடிவுக்கு வரும் என எண்ணவில்லை.  வீட்டிலும் வெளீயிலும் குடும்பத்துடம் நாம் நாலு பேரும் சேர்ந்திருப்பது தான் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. நவம்பரில் அத்தானுடன் வாலாக ஒட்டியவன் நம் குடும்பத்தின் மகிழ்ச்சியே திருடி கொண்டு போய் விட்டான். நம்  பெரிய மகனை  உங்கள்  தோழனாகவும் சகோதரனாகவும் எண்ணி இருந்த வேளையில் புதிதாக 10 வருடம் பின்பு புகுந்த காட்டு நரி நம் வீட்டின் ஒளியை அணைத்து விட்டது.


குழுவுடன் இணைந்து விட்டால்  நீங்கள் குழந்தை போல் குதுகலிக்க ஆரம்பித்து விடுவீர்கள். உங்கள் சிரிப்பும், பேச்சும், அழகாக இருந்தது. எளிதில் நண்பர்களிடம் ஒட்டி கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்த மனநிலையில் உள்ளவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். உங்களுக்கு கொண்டாட்டம் தான். எப்போதும் பெரிய மகனை உங்கள் பக்கங்களில் இடம் கொடுத்து விடுவார்கள். வீட்டிலும் அப்படி தான். நீங்கள் இருவரும் காதில் பேசி கொண்டு.கண்ஜாடையால் பேசிக் கொள்வதே தனி அழகு! 




எப்போதும் வாழ்க்கையின் நல்ல பக்கங்களையை உற்று நோக்குவதே உங்களுடைய பாணியாக இருந்துள்ளது. 

தனக்கு எந்த அளவு சுதந்திரம் வேண்டும் என்று நினைப்பிங்களோ அதை போன்று மற்றவர்கள் சுதந்திரத்திலும் தலையிட  மாட்டீங்க நாம் குடும்பத்துடன் செல்லும் பயணங்கள் நம் வீட்டு குழந்தைகள் எல்லோரும் அத்தான் நீங்கள் இருக்கும் வாகனத்தை தான் சூழ்ந்து கொள்வர். அவர்களுக்கு தெரியும் உங்களுடன் பயணிப்பது என்பது  சுதந்திரத்துடன், மகிழ்ச்சியின் உச்சத்தில் பயணிப்பது என்பதாகும். அவர்களுக்கு பிடித்த பண்டங்கள் வாங்கி கொடுப்பதில் இருந்து அவர்களுடன் தின்று மகிழ்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே.




நட்பு என்பதை கற்பைப்போல் மதித்தவர் நீங்கள். ஆதலால் தான் விபத்து நிகழ்ந்த அன்றும் நான் மருத்துவமனையை அடையும் முன்னே உங்களுடைய நண்பர்கள் உங்களை சூழ்ந்து கொண்டனர். ஒரு மனைவியான எனக்கு உங்கள்  அருகில் வர; உங்களைக்காண அனுமதிக்கப்படவில்லை. உங்களை தொடக்கூட அனைமதிக்கப்படவில்லை. ஆனால் உங்களுடைய நண்பர்கள் காலை முதல் மாலை வரை உங்களுடன் இருந்தனர்.   இன்னும் உங்களை நினைத்து வருந்தும் உங்களை காணத்துடிக்கும் நட்புகளை கண்டேன்.  உங்க நண்பர் ஊட்டி கூறினார் நீங்க கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களை சேர்த்து கொண்டு சுற்றுவீர்களாம்.  நல்லவர்கள் கெட்டவர்கள் என இல்லாது எல்லோரும் உங்க நண்பர்களாக இருப்பார்களாமே. எல்லோரையும் ஒரே போல் நேசிக்கும் உங்கள் அன்பு பாகுபாடற்று மனித மனதை நேசிக்கும் உங்களை பற்றி உங்க நண்பர் நிறைய கூறினார்.  உங்க நண்பர் ஊட்டிக்கு உங்க ஊர் மிகவும் புதிதாக இருந்ததால் செல்லும் இடமெல்லாம் அழைத்து செல்வீர்களாமே. 


அத்தான் உங்க நிழலில் நிற்கத்தான் ஆசைப்பட்டுள்ளேன். இனியும் அப்படி தான் உங்க நினைவுகளில் வாழவேண்டும்.   உங்க மகன்களை உங்களை போல் வளர்க்க வேண்டும். உங்க நல்ல குணங்கள் எல்லாம் நம் மகன்கள் எடுத்து கொள்வார்கள். ஏன் என்றால் நீங்கள் தான் உங்க மகன்களை வளர்த்தீர்கள். என்னைக்கூட நீங்க தான் வளர்த்து வந்தீர்கள். நீங்க வளர்த்தால் தான் உங்க மகன்கள் எனக்கு ஆறுதல் கூறி என்னை தேற்றி வருகின்றனர்.  

உங்க மகன்களை பற்றி நிறைய ஆசை வைத்திருந்தீர்கள். உங்களுக்கு உங்கள் பெற்றோருடன் வளர இயலவில்லை பெற்றோருடன் படுத்து தூங்க இயலவில்லை என்ற கவலை எல்லாம் இருந்தது. ஆனால் உங்க மகன்களை உங்க வயிற்றிலும் தோளிலுமாக தாங்கி தூங்க வைத்து வளர்த்து விட்டீர்கள். அத்தான் நீங்கள் நிறைவாக மகிழ்வாக இறைவனிடம்  இருந்து எங்களை பார்த்து கொள்ளுங்கள். இனி நீங்க இங்க இருந்தாலும் நிம்மதியாக வாழ விடமாட்டார்கள் என்பதால் போலும் இறைவன் அழைத்து விட்டார். எங்களால் உங்க பிரிவை தாங்க இயலவில்லை.   ஆனால்  விரும்பி கடவுள் தன் அருகில் உங்களை அழைத்து வைத்திருக்கும் போது நாங்கள் ஏங்கியும் பலன் இல்லை. அத்தான் எங்களுக்கு  உணவு எடுக்க இயலவில்லை. உங்க நினைவுகள் தொண்டயை அடைக்கின்றது. இருப்பினும் உங்கள் ஆசைகள் இனியும் நிறைவேற உண்டு தானே. உங்களுக்காக நாங்கள் வாழ்வோம். உங்க ஆசிர்வாதம் உங்க அன்பு தான் எங்களுக்கு  வேண்டும். 

உங்க சிரிப்பு உங்க நடை உங்க பேச்சு எல்லாம் அழகிலும் அழகாக இருந்தது. அது தான் அந்த கடவுள் கவர்ந்து விட்டாரோ. அத்தான் நீங்க நம்ம மகன்களின் மகனாக மறுபடியும் பிறக்க வேண்டும். உங்க அழகிய சிரிப்பை  மறுபடியும் நான்  காண வேண்டும். 

0 comments:

Post Comment

Post a Comment