header-photo

சுடும் நினைவுகள்!

உங்க கல்லறைக்கு வந்து 10 நாட்களாகி விட்டது.  காலை அழைத்து செல்லக் கூறினால் மாலை; மாலை என்றால் காலை! இன்று நானே ஆட்டோ பிடித்து சென்று வந்தேன். இப்படி தான் சில நேரங்களில் பொறுமையின் எல்கையை மீறச்செய்கின்றனர், உங்கள் நினைவுகள் தான் அந்நேரம் அலைபாய்கின்றது. அத்தான் ..........என ஒரு அழைப்பிலே என் தேவைகள் எல்லாம் நிறைவேறி விடும்.  என் கண்ணை பார்த்து கொண்டே நிற்கும் அந்த உங்கள் முகம் வந்து போகின்றது. ஒரு பக்தனை போல் அல்லவா உருகி நின்றீர்கள்,  அழ ஒரு காலம், சிரிக்க ஒருகாலம், கண்ணீர் சிந்த ஒரு காலம் என அந்த கடவுள் காலத்தை எனக்கு பிரித்து தந்து விட்டார்.  நம்பும்படியாகவே எனக்கு தெரியவில்லை. ஏன் இந்த பிரிவு கடவுளே என்று தான் கேட்க வைக்கின்றது. ஏதோ ஒரு நன்மை, ஏதோ ஒரு நல்லது, என்று மற்றவர்கள் தேற்றுவதை ஏற்க இயலவில்லை. ரீத்தா மேம் வீட்டிற்கு போயிருந்தேன். மேம் மிகவும் கரிசனையாக பேசினார் அறிவுரை தந்தார், நீ நல்லா இருப்பம்மா என பல முறை கூறி ஆசிர்வதித்தார்.  

பாளையம்கோட்டையில் ஒவ்வொரு தெருவில் போகும் போதும் இங்கு அத்தானுடன் வந்தோமே, இந்த கடையில் இருந்து தானே இதை வாங்கினார் அதை வாங்கினார். இந்த வழி தானே பயணித்தோம். எல்லா வாரவும் காலையில் வந்து பொருட்கள் வாங்கினோம் என மனதில் நினைவு ஓட்டங்களாக இருக்கின்றது.


ஒவ்வொரு நொடியும் உயிரோட்டமாக்கியது உங்கள் குரல் தான். நேரில் விட போனில் இன்னும் இனிமையாக கதைப்பீர்கள். ஒரே வீட்டில் இருந்தும் ஒரே வீட்டில் தங்கியும் அந்த பகல் பொழுது உங்களை தேட நான் அந்த கைபேசியை தான் நம்பி இருப்பேன். எப்படி.... சாப்பீட்டிர்களா, என்ன வேலை போய் கொண்டிருக்கின்றது என ஆரம்பிப்பேன். சும்மா உன் குரலை கேட்க என நீங்களும் அழைப்பீர்கள். உங்களை தண்டிக்கவும் இந்த போன் தான் உதவும். உங்கள் அழைப்பை உடன் எடுக்கா விடில் நீங்கள் பதறிவிடுவீர்கள் ஏதும் கோபத்தில் உள்ளேனோ என்று. நான் லயோளாவில் இருந்த போது நம்மை உயிர்ப்புடன் நகர்த்தி  சென்றதே நம் கைபேசி பேச்சுக்கள் தான். என்னிடம் கோபப்பட்டு போனை எடுத்து எறிந்து விட்டு மறுபடியும் எடுத்து கதைப்பீர்கள் என பிள்ளைகள் கூறி அறிந்தேன். அத்தான் இனி உங்களிடம் பேசவே இயலாதா? உங்க போனில் இருந்து எனக்கு அழைப்பு வரவே வராதா? அத்தான் இது போன்ற தருணங்களும் நினைவுகளும் தான் என்னை நிலைகுலைய செய்கின்றன. 

ஏன் அந்த வேடனிடம் கூட்டு வைத்தீர்கள். அவன் பாவ பலியெல்லாம் உங்கள் உள்ளம் தலையை உடைத்து சென்று விட்டதே. இது வரை எங்களை பற்றி விசாரிக்க நாதியில்லை. நீங்கள் நம்பி ஏமாந்தது இவனிடம் மட்டுமல்ல இன்னும் சில உங்க தம்பிகளும் உண்டு. இன்னும் உங்க விபத்து இழப்பீட்டு கேஸை கொடுப்பீர்களா என அலையும், உங்களுக்கு விபத்து என்றதுமே என்னைக்கூட துக்கம் விசாரிக்காது ஏஜன்றுகளை அனுப்பின தம்பிகளையும் வைத்துள்ளீர்கள். 

அத்தான் என்னால் நம்பிக்கைக்குள் வர இயலவில்லை. எதை நான் நம்பிக்கை என கருதுவது. நீங்களும் நிறைய பொய்கள் பேசி சென்று விட்டீர்கள். நீங்கள் இனி இல்லை  உங்களிடம் எனக்கு பேச இயலாது என்பது எல்லாம் நம்பும் படியாக இல்லை. என்னவெல்லம் பேசினீர்கள், என்ன என்ன கனவு வைத்திருந்தீர்கள். எதை கண்டாலும் குழந்தையை போல ஆசை கொள்வீர்கள். உணவை ரசித்து உண்ணுவீர்கள். வெறும் பூக்களை பார்க்க என்றே பூந்தோட்டம் அழைத்து செல்வீர்கள். எத்தனை முறை உங்கள் காரை நிறுத்த கூறி செடிகளை பார்த்து விட்டு வாங்கவில்லையா என்றதும் ரொம்ப விலை அத்தான் என திரும்பி வந்துள்ளேன். அந்த  நேரத்தை விரளயப்படுத்தியதைக்கூட கோபப்படாது கேலிச்சிரிப்புடனை சமாளித்து கொள்வீர்கள்.  கோயிலுக்கு அழைத்து செல்வீர்கள் அங்கு பிச்சைக்காரர்களிடம் பேசி கொண்டிருப்பேன். பிச்சைகாரர்கள் ஈஸ்டர் கொண்டாட்டம்!அதை அடுத்த சில நாட்களில் பதிவாக இடுவேன். நீங்களும் ரசித்து வாசிப்பீர்கள், பிழைகளை திருத்தி தருவீர்கள்.  உங்க ஆசைக்கும் அளவு இருந்திருக்கனும். அந்த பொய் காரியுடன் பேசியே உங்களை நீங்கள் அழித்து கொண்டீர்கள்.  

ஒவ்வொரு நாளும் உங்களிடம் பேச எனக்கு கதைகள் இருக்கும். உங்களிடம் நான் கேட்டால் காலையில் அலுவலகம் சென்றேன், அரசு அலுவலங்களுக்கு சென்று வந்தேன், என் வாடிக்கையாளர்களை சந்திதேன்  இதையா உன்னிடம் சொல்ல. எனக்கு அப்படி கதைகள் ஒன்றுமில்லை;  உன் கதையை கேட்கின்றேன் சொல் என்பீர்கள்.  இனி என் கதைகள் நான் கதைக்க, அதை கேட்க யாருமில்லை,  கதைக்க கதைகளும் ஒன்றுமில்லை. 

திருமணம் என்பது மட்டும் தான்  வாழ்க்கை என்று இல்லை. ஆனால் நாம் நண்பர்கள் போல் அல்லவா வாழ்ந்தோம்.. ஒரு இடிவிழுந்து கருகிய மரம் போல் ஆகி விட்டது நம் வாழ்க்கை. ஒரு முறை ஏனும் மரணத்தை பற்றி நினைத்து பார்ப்பீர்களா? மரணவீட்டை துக்க வீட்டை கண்டால் பயப்படும் நீங்கள் நம் வீட்டை அப்படி மாற்றி விட்டு போய் விட்டீர்கள் அத்தான். கவலையை விட்டு கடமையை நோக்கி நகர வேண்டும். ஆனால் உங்கள் கர்மபலனில் தான் தற்போது வீழ்ந்து கிடக்கின்றேன். 


3 comments:

Seeni said...

உங்களை தேற்ற வழி தெரியவில்லை சகோ..

s t raj said...

I really worried about your situations

தனிமரம் said...

துயரத்தில் இருந்து நீங்கள் மீண்டு வர பிரார்த்திக்கின்றேன் சகோதரி!

Post Comment

Post a Comment