header-photo

அத்தான் செப்பனிட்ட என் வாழ்க்கை பாதை!

வீட்டை கட்டி விட்டோம். அத்தான் வீட்டு வேலை துவங்கிய போது சுசி ஆட்டோசோனில் பஜாஜ் கிளையின் கணக்கர் மேற்பார்வையாளராக இருந்தார்.  அந்த நேரம் ஹூண்டாய்க்கு  ஓர் ஆள் தேவைப்பட்டது. அத்தானுடைய நண்பருடைய  நண்பரை அத்தானின் பரிந்துரையின் பேரில் வேலையில் அமரச் செய்தார் முதலாளி. அந்த ஆள் முகத்திற்கு முன் சரியாக பேசினாலும் முதுகில் குத்தும் வழக்கம் கொண்டவராக இருந்தார். இந்த நேரம் தான் நாங்கள் வாங்கி இட்ட நாலு சென்று இடத்தில் வீடு கட்ட முடிவெடுத்தோம். இடம் பார்க்க, இடம் வீடு கட்ட தகுந்ததா, என முடிவு செய்ய அந்நிறுவனத்தில் வேலை நோக்கும் ஓர் வயதான அதிகாரியை அழைத்து சென்று இருந்தார். வீட்டிற்கு அஸ்திவாரக்கல்லிட யாரையும் அழைக்கும் சூழல் இல்லை செலவழிக்க பணவும் இருக்கவில்லை. அன்று என் அம்மா எங்களுடன் வசித்து வந்ததார். அத்தானுடைய பெற்றோரை அழைக்க சூழல் சரியாக இருக்கவில்லை.  அந்நேரம் அவர்கள் எங்களுடன் பேச்சு வார்த்தையில் இருக்கவில்லை.  அவர் பெற்றோரை அழைக்க இயலவில்லை என்ற காரணத்தாலும் யாரையும் அழைக்க அத்தான் விரும்பவில்லை. ஆனால் என் அம்மா சிறப்பாக செய்யுங்கள் என்று வலியுறுத்த ஆலய அருட் தந்தையரை அழைத்து ஜெபித்து கல்லிடும் கொத்தனாருக்கு 500 ரூபாய் தட்சினையும் வைத்து நிகழ்வை நடத்தினோம். அந்த மிட்டாயை அத்தான் அலுவலகத்திற்கு எடுத்து செல்ல அதை அங்கு வேலை செய்யும் பெண்கள் அவர் மேஜை அருகில் வந்து மிட்டாய் சார் என்று எடுத்து கொள்ள இவர் இப்பெண்களூக்கு மிட்டாய் கொடுத்தார் ஆனால் தன்னை அழைக்கவில்லை என்று சினம் கொண்ட அந்த பெரிய மனிதர் அத்தான் பரிந்துரையால் வேலைக்கு சேர்ந்த மனிதருடன் சேர்ந்து முதலாளியிடம் சில அவதூறுகளை பரப்பி விட்டனர். 

பெரிய நிறுவனங்களை பொறுத்தவரை முதலாளிக்கு தெரியும் அவர்கள் பணவிடையத்தை விட அவர்கள்  கணக்கர்களே அத்துப்படியாக இருப்பார்கள். நிறுவனருக்கும் அத்தான் மேல் சந்தேகம் வந்து , தணிக்கை செய்ய ஒரு குழுவை அமர்த்தி ஒரு மாதமாக இவர் நோக்கிய கணக்கை தணிக்கை செய்தனர். அந்த நேரம் நானும் அந்நிறுவனத்தில் வேலை நோக்கியதால் மிகவும் மனஉளச்சலுக்கு ஆளானேன்.   அத்தானுடைய கவலையும் என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியது.  வேலை போனால் இருவருக்கும் ஒரே நேரம் வேலை போகும் நம் நேர்மையின் மேல் கொண்ட பெரும் சவால் என்ற ஆதங்கத்தில்  அந்நேரம் அத்தான் 5500 ரூபாயும் நான் 2500 ரூபாயும் பெற்று வந்தோம்.  நான் எங்கள் திருமண படத்துடன் முதலாளியை சந்தித்து "சார் நாங்கள் உங்கள் பணத்தை ஒரு பைசா கூட திருட வில்லை. நாங்கள் வீடு கட்ட இடம் வாங்கினது என் நகையை விற்று தான்,  வீடு கட்ட துவங்கியது மயன் நிறுவனத்தின் உதவியுடன் எங்களிடம் இருக்கும் இன்ஷுரன்ஸ் பாலிஸீயின்   அத்தாட்சியுடன் தான். 

முதலாளி கூறினார் பனைமரத்தின் அடியில் இருந்து பால் குடித்தாலும் கள்ளு என்று தன் கூறுவார்கள். ஒரு வேளை உங்கள் கணவர் கையாடல் செய்திருந்தால் நான் போலிஸீல் மாட்டி விடுவேன் என்றார். ஆகட்டும் இந்த சூழலில் என் வேலையை நான் ராஜினாமா செய்து விடுகின்றேன்., அவர் எதிர் கொள்ளும் பிரச்சினையால் என்னாலும் சரிவர வேலை செய்ய இயலவில்லை என்று கூறி என் வேலையை விட்டு விட்டேன். ஆனால் அந்த ஆடிட்ங் முடிந்ததும் "என்னை மன்னித்து கொள் பாபா நான் தவறாக சந்தேகித்து விட்டேன். உனக்கு மேலும் 2000 ஆயிரம் ஊதியம் கூட்டி தருகின்றேன் என் நிறுவனத்தை விட்டு போக வேண்டாம் என்று வேண்டினார்." அத்தானோ இனி என்னால் பழையது போன்று வேலை செய்ய இயலாது என்று கூறி கனடாவில் அலுவலகம் உள்ள ஆனால் நெல்லையில் இருந்து கனடா நேரப்பிரகாரம் வேலை செய்யும் ஓர் கணக்கு நிறுவனத்தில் சேர்ந்தார். 

இவர் வேலை நேரம் காலை 9 துவங்கி மாலை 2 வரை. பின்பு மாலை 4 துவங்கி அதிகாலை 2 மணி நேரம் வரை வேலை நோக்க வேண்டும். அத்தானுக்கு கனடா நாட்டு கணக்கை செய்வதில் பெரும் மகிழ்ச்சி. அந்த நிறுவனரும் அத்தானை கனடாவுக்கு அழைத்து செல்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். இந்த சூழலில் எனக்கு வேலையும் இல்லை நேரம் போகாது தவித்தேன். அன்றைய தினம் நான் திருமணம் முடிந்து சரியாக 10 வருடங்கள் ஆகி இருந்தது. எனக்கு கல்லூரி ஆசிரியை ஆவது தான் விருப்பமாக இருந்தது  நம் திருமணம் என் பல ஆசைகளை நிராசையாக்கி விட்டது என புலம்புவது உண்டு.  அத்தான் மனோன்மணியம் பல்கலைகழகம் சென்று தகுந்த பாடத்திட்டம் பற்றி விசாரித்துள்ளார். அவருக்கு நான் நிறைய வாசிப்பதால் இதழியல் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்துள்ளது. நான் நேரடி படிப்பில் சேர தயங்கினேன். பகுதி நேர போஸ்டல் படிப்பில் சேரவே விரும்பினேன்.  ஆனால் அத்தானோ பகுதி நேரம் படித்தால் சரியான படிப்பு கிடைக்காது. நீ படிக்க சேர் நான் பார்த்து கொள்கின்றேன் என கூறி படிக்க சேர்த்து விட்டார். 

அந்த நாள் இன்று போல் நன்றாக ஞாபகத்தில் உள்ளது. புஷ்பலதா பள்ளி நிறுத்ததில் வரு்ம் அரசு பல்கலைகழக பேருந்தில் முதன்முதலாக அனுப்பி விட்டார்.  அவர் கண்ணிலும் என் கண்ணிலும் நீர் கோர்த்தது. என்னை முதன்முதலாக தனியாக ஒரு பேருந்தில் அனுப்பி விட்டார். அந்த பேருந்து எங்கள் துறை முன் நிற்கும். மாலை என்னை அழைக்க புதிய பேருந்து நிலையத்தில் காத்து நிற்பார். அப்படி என் முதுகலைப்பட்டம் இரண்டு வருடம் சென்றது. பல பிரச்சினைகளை எதிர் கொண்டேன்.  ஒன்று எனக்கு கற்பித்து பல ஆசிரியர்கள்  என்னை விட இளையவர்களாக இருந்தனர். நான் வயது கொண்டு 33 வயதாக இருந்தாலும் மனதில் தோன்றுவதை பேசும் கேள்வி கேட்கும் வெகுளியாக இருந்தேன். இந்த குணம் பல எதிராளிகளை பிடிக்காதவர்களை எளிதாக உருவாக்கினது. பின்பு இரண்டாம் ஆண்டில் பேரா. நட்ராஜ் அவர்களின் சில வழிமுறைகள் பேரில் பல சிக்கல்களில் இருந்து வெளியேறினேன். நானும் பேசுவதிலும் சுற்றும் நோக்கி பேசுவதிலும் பக்குவமானேன்.  என்னுடன் படித்த மாணவர்கள் எல்லாரும் மிகவும் அன்பானவர்களும் பாச நேச கொண்டவர்களாகவும் இருந்தனர். அந்த  வருட மாணவர்களில் முதல் இடம் பெற்று பல்கலைகழக தங்கப்பதக்கம் பெற்று  
முதுகலைபட்டம்  முடித்தேன். மறுபடியும் நான் வேலை பார்த்த நிறுவனத்தில் உயர் பதவியில் சேர வேண்டும் என்ற ஆர்வமே மேல் ஒங்கியது. ஆனால் அத்தான் முனைவர் பட்டம் சேரக்கூறினார் எனக்கோ 3 வருட படிப்பு என்றதும் சேர விருப்பமில்லாது ஒரு வருட இளம் முனைவர்  பட்டத்திற்கு சேர்ந்து  முதல் வகுப்பில் தேர்வாகினேன். என் வெற்றியில் என் உயர்வில் கொண்டாடும் மனநிலையில் நான் இருக்கவில்லை. ஆனால் அத்தான் வெற்றி களிப்புடன் என் வெற்றியை கொண்டாடினார்.  என்னை வேலைக்கு அனுப்பி சம்பாதிப்பதை விட நான் முதுகலை , இளம் முதுகலைபட்டம் பெற்றதை பற்றி மிகவும் பெருமை கொண்டார். அவர் என் வெற்றியை மிகவும் ஆசையுடன் மகிழ்ச்சியுடன் நோக்கினார். மறுபடியும் என்னை முனைவர் பட்டம் பெற ஊக்குவித்தார். ஆனால் எனக்கு வேலைக்கு செல்ல வேண்டும். எனக்காக கஷ்டப்பட்டு படிப்பித்த அத்தானுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றே தோன்றியது.  

நான் பல்கலைகழகம் சேர்ந்த போது இளையவர் ஒன்றாம் வகுப்பும் பெரியவர் நாலாம் வகுப்பிலும் படித்தனர். நான் பேருந்தில் பயணிக்கும் போது என் வயது ஒத்த பெண்கள் மிகவும் ஆச்சரியத்துடனும் சிலர் கேலியாகவும் சிலர்  பொறாமையுடனும் நோக்குவார்கள். என்னவர் தாயோ, "இந்த வயதில் சின்ன பசங்க கூட படிக்க அனுப்பியுருக்கான், அறிவு கெட்டவன்" என்று பழித்துள்ளார். என் தாயாரோ இந்த வயதில் படிப்பு தேவையா? கொண்டு வரும் பணத்தை சேகரித்து நகை நட்டு வாங்கி சேக்கலாம் தானே என்பார். சில நேரம் குழந்தைகளை சரியாக பராமரிப்பதிலும் சிரமம் கொண்டேன். பல பொழுதும் நான் படிக்க அத்தான் நோட்ஸ் எடுத்து தருவார்  பிரிட் போட்டு தருவார் சில போது படித்து முடிக்கும் மட்டும் அவர் வேலையை செய்து கொண்டே எனக்கு துணை இருப்பார். அத்தானின் அன்பும் கரிசனையும் வெறும் பட்டாதாரியாக இருந்த என்னை முதுகலை பட்டாதாரியாக மாற்றியது. இளம் முனைவர் பட்டத்திற்கு என ஈழ வலைப்பதிவுகளை ஆராய்ந்ததில் பல அரிய ஈழ சகோதர்களை நண்பர்களாக பெற்றேன். என் பாடத்திட்டத்திற்கு புகைப்படம் பிடிக்க, செய்தி கட்டுரை எழுத என துவங்கிய எங்கள் பயணம்; பயணம் கொண்டு நிறைந்தாக மாறியது.   என் வாழ்க்கையை பற்றிய பார்வைகள் கூட மாறினது.  பயணம் வாசிப்பு மக்களுடன் கருந்துரையாடியது என் வாழ்க்கையை மாற்றியது. என்னை பற்றி  மட்டுமே சிந்தித்து கொண்டிருந்த நான் இந்த சமூகத்தை பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். எங்கள் வாழ்க்கையில் நம்பிக்கையின், பேராற்றலின் ஒளிவெள்ளம் வர ஆரம்பித்தது.

0 comments:

Post Comment

Post a Comment