header-photo

கனவாக இருந்திருக்க கூடாதா?
பாபா அத்தான் எத்தனையோ சோதனைகளை வேதனைகளை நாம் மீண்டு வந்தோம். அவை நம்மை தாக்கவில்லை. ஏன் என்றால் நாம் இருவரும் சேர்ந்திருந்து அழுதோம், பின்பு சிந்தித்தோம், சில தீர்வை தேடினோம், பலபோதும் விட்டு விட்டோம். ஆனால் இன்று அப்படியல்ல நான் தனியாக சந்திக்கின்றேன். இதுவே என்னை வேதனைப்படுத்துகின்றது. என் நெஞ்சை அடைக்கின்றது. ஆம் நம் மகன்கள் வேதனைகளை தெரியக்கூடாது என்று தான் நினைக்கின்றேன். ஆனாலும் என் முகம் பார்த்து ஏன் இப்படி இருக்கின்றீர்கள் என கேட்கின்றார்கள். 

இன்று உங்க பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டை வாங்க  செல்லும் அவலம் எனக்கு. என்னை விட இளையவரான  ஓர் ஏழை பெண் நின்றார். அவர் கொண்டு வந்த கடிதத்தில் திருத்தம் செய்து தரக்கேட்டதும் நான் தான் எழுதி கொடுத்தேன். அப்பெண்ணுக்கு இரண்டு மற்றும்  நான்கு வயதுள்ள இரு சிறு குழந்தைகளாம். சொந்த தம்பியை தன் அண்ணான அவர் கணவரை வெட்டி கொலை செய்து விட்டானாம். அப்பெண் என்னை பற்றி வினவினார். நான் என்ன கூற.   உங்கள் உடலை பரிசோதித்ததை எண்ணி எண்ணி உங்களை கடைசியாக வைத்திருந்த இடத்தை பார்த்து விங்கி கொண்டு நின்றேன். அந்த சாற்றிதழை பெற்ற  போது கை நடுங்கியது. முதல் முதலாக ஓர் அரசு அலுவலகம் தனியாக சென்று  திரும்பியுள்ளேன். 


அத்தான் இது நமக்கு வந்திருக்க கூடாது. நீங்கள் தான் கூறினீர்கள் தர்மம் தலை காக்கும் என்று. நீங்க கடைசி மூன்று மாதம் நம் தனிப்பட்ட விடையங்கள் பற்றி பேசாது பொதுவான சமூக, பயண, வேலை, காரியங்களே பேசி இருந்துள்ளோம். நீங்க கூட நாம் மிகவும் வேதனையான சூழலில் முடிவெடுத்த சில  விடையங்களை மீறியுள்ளீர்கள். பெப் 14ஆம் தியதி நாசரேத்தை கடக்கும் போது நான் கூறினேன்  "உங்க அம்மாவை பார்த்து விட்டு செல்வோமா" என்று ஆனால் நீங்கள் " இப்போது வேண்டாம் என்னிடம் அம்மா பேசி இரண்டு மாதங்கள் ஆகி விட்டன" என பொய் சொல்லியுள்ளீர்கள். ஆனால் பெப் 8 ஆம் தியதி, பெப் 14ஆம் தியதி உங்கள் தம்பியுடன் சேர்ந்து மட்டன் குழம்பு -சோறு அங்கு சாப்பிட்டுள்ளீர்கள்! 

அத்தான் என்னால் உங்கள் நினைவு இல்லாது ஒரு நிமிடம் கூட வாழ இயலவில்லை.  காலையில் அடுக்களையில் என்னுடன் நின்று வேலை செய்யும் நினைவு,  பிரியாணி மசாலப்பொடி வைத்திருக்கும் பாத்திரத்தை எடுத்தால் உங்கள் நினைவு,  நிம்மதி கிடைக்கும் என கல்லூரி வாசல் சென்றால் அங்கும் என்னை காத்து நிற்கும்  உங்கள் உருவம்.  படிக்க புத்தகம் எடுத்தால் புத்தகங்களிலும் நீங்கள் தான். அத்தான் வாங்கி கொடுத்த புத்தகமே, அத்தான் அன்று ஜெராக்ஸ் எடுத்து தந்த புத்தகம் இது.  இரவு 7 ஆனால் அத்தான் வரும் நேரம் ஆகி விட்டதே என்ற நினைவு,  இரவு 8 க்கு மேல் நம் மகன்களின் அழுகை. அம்மா இனி நாம் சேர்ந்திருந்து பேச மாட்டோமா?  ஆம் கடந்த 19 வருடமாக நாம் நான்கு பேர் மட்டுமே சேர்ந்திருந்தோம்.  எப்படி அத்தான் இறைவன் உங்களை மட்டும் அழைத்து செல்லலாம்!

இன்று நம் மகன் பொது தேர்வு துவங்கி விட்டது. நான் காலையிலே அவனுடன் சென்று கொண்டு விட்டேன். அவன் உங்களை பற்றியே தான் பேசி கொண்டு வந்தான். நான் அப்பாவை நினைத்து கொண்டு பரீட்சை எழுது என்றேன். அழுது கொண்டு எழுதவா என்றான்.

எங்கள் கல்லூரி வங்கிக்கு சென்றேன். கடந்த முறை சென்ற போது நீங்க தானே பாரத்தை நிரப்பி தந்தீங்க. எனக்கு அங்குள்ள உதவியாளர் பெண் மிகவும் அக்கறையாக உதவினார். என்னை தேற்றினார்.


அத்தான் நீங்க சில நேரம் என் வாயை அடைக்க வேண்டும் என்று சொல்லால் கூறும் வசவுகள் நம் வாழ்க்கையில் வீழ்ந்து விட்டதோ?  அத்தான் நீங்க அப்படி எல்லாம் கோபத்தில் பேசி  இருக்க கூடாது!  நீங்க அப்படி அபசகுனமாக பேசக்கூடாது என்பதற்காகவே நான் அமைதி காத்து வந்தேன். அந்த அமைதியை நிரந்தரமாக மாற்றி விட்டீர்களே! அத்தான் என்னால் முடியவில்லை. உங்களை போன்று நம் மகன்களை தனியாக விட்டு விட்டு நான் தனியாக வர இயலுமா? 

என் ஒவ்வொரு கணங்களும் அழுகையால் நிரம்பி வழிகின்றது. என்னை ஆறுதல்படுத்த செல்வராணி அத்தை ரீத்தா அத்தை அம்மா, என் தங்கை உங்கள் நண்பர்கள் நீங்கள் செல்லமாக ஊட்டி என்று அழைக்கும் ஜெபராஜ் அண்ணா எல்லோரிடமும் அழுது தான் புலம்புகின்றேன்.  அவர்கள் நீங்கள் அழக்கூடாது பாபாவின் ஆன்மா வருத்தப்படும் என்கின்றனர்.   இறைவனுக்கு உங்களை மிகவும் பிடித்து விட்டதால் அழைத்து விட்டாராம் என்னை இறைவனுக்கு பிடித்துள்ளாதால் சோதிக்கின்றாராம். அதற்காக இவ்வளவு பெரிய சோதனையா?   ,,,,அத்தான் என் வாழ்க்கை இனி அழுகை புலம்பல் தானா?

இது ஓர் கண்டம் என்றால் உங்கள் உயிரை தான் எடுக்க வேண்டும்?  உங்கள் முகத்தை பார்த்து கொண்டு நான் நிம்மதியாக வாழ்ந்திருப்பேனே.   நீங்க இல்லாத நான் வாழ வேண்டிய வருடங்களை நான் பயத்துடன் எண்ணுகின்றேன் இன்று. 

என்ன அழகாக என்னை நடத்தினீர்கள், பார்த்து பார்த்து துணி மணிகள் எடுத்து தந்தீர்கள், உங்கள் கை அரவணப்பிலே தூங்கினேன்,   பயணம் செய்தோம்  உங்கள் கண் பார்வையிலே நடமாடினேன். என் ஒவ்வொரு அசைவையும் நிதானமாக ரசித்தீர்கள் திருத்தினீர்கள் , கற்று தந்தீர்கள். வீட்டிற்கு வந்தால் என்னை சுற்றி சுற்றியே நின்றீர்கள்.

நான் பாத்திரம் கழுவது உங்களுக்கு பிடிக்காது. நீங்கள் வந்த பிறகு நான் வேலை செய்வதே உங்களுக்கு பிடிக்காது. நான் மூச்சு திணரலால் அவதியுற்ற போது நீங்களும் தூங்காது என்னுடன் விழித்திருந்து வேதனைப்பட்டீர்கள். பாபா அத்தான் எனக்கு அதீத கோபம் வரும் போது "குண்டா " என்று அழைத்தாலும் " நீ போட்ட சாப்பாடு தானடீ என்று சிரித்தீர்கள்! அத்தான் முடியவில்லை. நீங்கள் உங்கள் இறப்பை உங்கள் நண்பர்களுடன் உற்றான் உறவினர்களுடன் ஓர் சிறப்பான சாதனையாளராக கொண்டாடி விட்டீர்கள். உங்கள்  அடக்கத்திற்கு வந்தவர் கோயில் ஐயரிடம் கூறினாராம் பாபாவின் இழப்பு பல மனிதர்களுக்கு இழப்பு என்று.  நீங்கள் வேலை செய்யும் வேகம் உங்கள் சிரிப்பு அமைதியான பேச்சு வேகம் கொண்ட நடை பற்றி எல்லாம் பேசி கொண்டு இருக்கின்றார்கள்,

நீங்க ஒரு வாரம் முன்பு ஒரு நாள் கூறினீர்கள் உங்கள் பழைய வீட்டில் இருந்து வந்த  நாகப்பாம்பு, சாரை பாம்பு நல்ல பாம்பு மூன்றையும் அடித்து கொன்றீர்கள் என்று.  அந்த சனியன்களை அடித்து கொன்று விட்ட பின்பு ஏன் இப்படி ஆனது. நீங்கள் போன அன்று காலையில் விழித்து நான் கழிவறை சென்ற போது நம் வீட்டு கன்னி மூலைப் பக்கம் மண்ணை சுரண்டுவது போல் சத்தம் கேட்கின்றது என்றது. தூங்கு எலியாக இருக்கும் என்றீர்கள்.

இவ்வளவு விரைவாக  நீங்கள் போய் விட்டதை தான் என்னால் நம்ப இயலவில்லை. தூக்கத்தில் நடுக்கத்துடன் எழுகின்றேன். இது பகலா இரவா என அச்சம் கொள்கின்றேன். நடந்தது உண்மையா? கனவா? என்று சந்தேகம் எழுகின்றது.  நாம் எண்ணிய கனவு கண்ட இடத்திற்கு வந்து நாலு வருடம் தான் ஆகிறது. நாம் இன்னும் நம் நோக்கத்தை அடையவில்லை.   நீங்கள் எங்களை பிரிந்து செல்வீர்கள் என்று ஒரு போதும் நினைக்கவில்லையே.  இல்லை அத்தான் இல்லை உங்கள் ஆன்மா இங்கு தான் உள்ளது , உங்களை நான் விடமாட்டேன்.  என்னிடம் இருந்து நீங்கள் எங்கையும்  தப்பித்து போக முடியாது. 

1 comments:

Muthukumar S said...

Manathirku migavum varuthuthamum vethanaiyaagavum irukirathu... Periya izhappu than. Neengal kudumpathodu ovvorumuraiyum Kalnthukondathu ninaivukalaka irukirathu. Anaivarume palaguvatharku inimaiyana nabagam... Kadavul nallavarkalaluku vazhumpothe anaithu kastangalaiyum kuduththu sothithu viduvaro Ena enna vaikirathu kalangamal irunga...

Post Comment

Post a Comment