header-photo

என் வாழ்வில் பாபா அத்தானாக !

கல்லூரி விடுமுறைக்கு,  படிக்க வேண்டும் என்று காரணம் கூறி முன்பு வராது இருந்த நான் உங்களை நிச்சயித்த பின் உங்களை காண வேண்டும் என்றே ஓடி .  ஓடி வீடு வந்து சேருவேன் . இந்த திடீர் பாய்சல் அன்பில் அம்மாவிற்கு கூட எரிச்சலாக இருந்தது. நான் வரும் செய்தியை என் தாயார் ஊடாக அறிந்து கொண்ட உங்கள் தாயார் ஓர் சந்திப்பிற்கான சூழலையும் உருவாக்கி விடுவார். இன்றைய தினம் போல் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தால் கூட நாம் தனித்து பேச அனுமதிக்கப்பட்டதில்லை. பேசவும் உங்களுக்கும்  எனக்கும் ஒன்றும் இருந்ததில்லை என் தம்பி, தங்கை,  உங்க, என்   பெற்றோர்,  உங்க தம்பி,  சூழ புன்சிரிப்புடனே உங்கள் கறுப்பு கண்ணாடி உள்ளாக வசதியாக  பார்த்து கொண்டு நீங்க இருக்க நான் பேசிக்கொண்டே இருப்பேன்,  நீங்க அலுவலகத்தில் பேசும் மொழி தமிழா மலையாளமா ஆங்கிலமா, வேலை நேரம் எப்போது இப்படி தோன்றும் கேள்வி எல்லாம் கேட்பேன். அன்றைய தினம் "காதல் கோட்டை" படத்தில் வந்த ஓர் பாடலில்  நீயிங்கு சுகமே நலம் நலம் அறிய ஆவல் நானங்கு சுகமா என்ற வரியில் அர்த்த பிழை உண்டு தானே என்று  உங்களிடம் கேட்டு பார்த்த்தேன் . உங்கள் பதில் எப்போதும் போல வெட்க சிரிப்புடன் மழுப்பலாகத் தான் இருக்கும்.  . இப்படியாக சிறிய சிரிப்பு,சில கேள்வி பதில்கள் என நம் ஆசைகளை வளர்த்து கொண்டு போனோம்.    

நமக்கு ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் புரிதல் என்பதை விட உங்களை எனக்கு பிடித்து விட்டது என்னை உங்களுக்கு பிடித்து விட்டது என்ற நிலையை எட்டினோம்.   விடுதியில் இருந்து வந்த என்னை ஒரு முறை நீங்க பார்க்க வரவில்லை என்றதும் எனக்கு காய்சலே வந்து விட்டது.  உன்னை பிடித்துள்ளது  ஆனால் உன் பெயரிலுள்ள  ”மேரி” தான் பிடிக்க வில்லை என்றீர்கள். பின் அதன் கதையும் சொன்னீர்கள். நீங்கள் கல்லூரியில் படிக்கும் போது நாசரேத் மாணவர்கள் எல்லாம் ஒன்றாய் ரோட்டை அடைத்து சைக்கிளில் வர மேரி என்ற உடன் படிக்கும் மாணவி தன் வழிப்பாதையை  மறைத்ததாக உங்கள் கல்லூரி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்து விட; நாசரேத்தில் இருந்து வரும் அத்தனை மாணவர்களும் டிஸ்மிசுக்கு உள்ளாக நீங்களும் செய்யாத குற்றத்திற்கு தண்டிக்கப்பட்டதாக கூறுனீர்கள். இந்த சம்பவத்தை வைத்தே பிறகாலத்தில் நான் வந்த பின்பும் உங்க பெற்றோர் தம்பிக்கு கிண்டலுக்கு வழியானது..

ஒரு முறை என் கல்லூரி தோழி வந்திருந்த நேரம்  உங்கள் வீட்டிற்கு வந்திருந்தோம்.  உங்கள் அறைக்கு அழைத்து சென்று நீங்கள்  பாட்டு கேட்கும் ஹெட் போனை என் காதிலும் அணிவித்து பாட்டு கேட்பித்தீர்கள்.  அந்த குயிலூதும் கண்ணனுக்கு  முதல் முறையாக ஹெட் போன் ஊடாக அப்போது தான் பாட்டு கேட்டேன். அப்போது தான் உங்கள் ஊதியம் மூன்று  ஆயிரம் என்றும்  ஆடிட்டிங்கில் கடைசி பகுதியை முடிக்க வில்லை என்றும் கூறினீர்கள்.  திருமணம் முன் உங்கள் அறைக்கு வந்ததை சொல்லி அம்மாவிடம் பின்பு வாங்கி கட்டினேன்.

உங்கள் வீட்டில் பணம், செய்முறை  என்று நச்சரிக்க ஆரம்பித்ததும் அப்பா திருமணத்தை நிறுத்தி விடலாமா? தட்டை மாற்றி விட்டோமே, கொண்டு கொடுத்த தேங்காயில் ஒன்று அழுகி இருந்தது என்றும்  அங்கலாய்த்து கொண்டிருந்தனர்.  மாப்பிளை சரியில்லை என்றால் மணபந்தலில் கூட மாற்றுவார்கள் என்றார் அப்பா.    என் மனதில் அவர் குடி புகுந்ததை சொல்ல தயக்கமாக இருந்ததால் அப்பா மேற்கொண்டு படிக்க அனுப்புங்கள் என்றேன். ஆனால் அம்மாவிடம் அவரை எனக்கானவராக நினைத்து விட்டேன். இனி வேறு ஒருவரை நினைக்க இயலாது என்றேன்.   . அப்படியான சூழலில் திருமணம் நடத்த வேண்டும் என நிச்சயிக்க பட்டிருந்த மே 19 1997 க்கு முந்தைய ஆறு மாதம் என் பெற்றோருக்கும் எனக்கும் உங்களுக்குமே சிக்கலான நாட்களாககத் தான்  இருந்தது. நிச்சயதார்த்தம் முதல் நாள் தான் முடியும் எங்கள் சொந்தங்கள் சென்னையில்உள்ளனர் என்று கூறி நிச்சயதார்த்த இரவு சாப்பாடு, திருமண நாள் காலை மதியம் என விருந்து செலவுகளை அப்பா தலையில் வைத்தனர்.என்ன சூழல் என்றாலும் பாபா அத்தான் உங்களுடன்  இணைய போகின்றேன் என்ற நினைப்பில் சிலவற்றை கண்டு கொள்ளவில்லை சிலவற்றை கண்டு என்ன ஆகப்போகுதோ என்ற கலக்கத்தில் தான் உங்கள் வீட்டில் கால் எடுத்து வைத்தேன். வரவேற்க ஆட்கள் நிற்பார்கள் என்றால் உட்காரக்கூட இருக்கைகள் ஏற்படுத்த வில்லை.  அந்த வீட்டில் உங்க அப்பாதான் எல்லாம் கடந்த எல்லோருக்கும் மேலானவராக எல்லாற்றிகும் அதீதமானவராக இருப்பதாக அறிந்து கொண்டேன். உங்களை எப்படி அழைப்பது என்று சந்தேகம்  வந்தது . உங்களிடமே கேட்டேன்; பெயர் சொல்லி அழைக்க கூறினீர்கள்.  எனக்கு என்னமோ பாபா அத்தான் என்று அழைப்பதில் தான் ஆசையாக இருந்தது. 

2 comments:

நாஞ்சில் மனோ · Mumbai, India said...


வாழ்க்கை பயணம்....தொடருங்கள்...

Valan Arul · Input Editor at Vendhar Tv said...


thadai pala kadantha aanantha thirumanam

Post Comment

Post a Comment