header-photo

மலரும் நினைவுகள்!

  
அத்தான் நம் திருமண நாள் நினைவு வருகின்றதா? ஒன்றரை வருட காத்து இருப்பின் முடிவாக வந்த அந்த நல்ல நாள். நேரம் பார்த்து காலை ஏழு மணிக்கே எங்கள் வீட்டிற்கு வந்து விட்டீர்கள்.  அன்றும் உங்களுக்கு வேலை இல்லாது இருக்க வில்லை. உங்களை வைத்தே உங்கள் பூமாலையை வாங்க வைத்தனர்,  போதாத குறைக்கு எங்கள் வீட்டிலும் வாங்கி வரக்கூற நீங்கள் ஏதோ கோபத்தில் பதில் கூற, அந்த வார்த்தையால் வந்த தாபம் பல வருடம் இருந்தது. திருமணம் முடிந்து மாலை மூன்று மணிக்கு உங்கள் வீட்டிற்கு செல்லும் போதும் வரவேற்க கூட யாருமில்லை..   மொய்பணத்தை எண்ண வைத்து , அந்த மாலைப்பொழுதினில் உங்களையும் என்னையும் கூட பணத்தின் அருமையை சொல்லி கொடுக்கின்றோம் எனக்கூறி   நீங்கள் 6000 ரூபாய் உங்க அப்பாவிற்கு கடனாளி  என புரிய வைத்தனர்.

திருமண பட்டுச்சேலையை மாற்றி  உடுக்க என்று   250 ரூபாய்க்கி ஒரு நீலக்கலர் சேலை,  தனிக்குடித்தாம் போக விரும்பாத நம்மை சம்பளப் பணத்தில் நம் செலவிற்கு 1000 ரூபாய் வைத்து கொள்ள  அனுமதி கோரியதும் நம்மை தனியாக இருக்க அனுப்பியது ,உங்க அப்பா காட்டுக்கு போடும் டவுசரை தேக்க வைக்க, உங்க அம்மா புட்டு வைக்க சொல்லித்தர, காலையிலே நம் அறைக்கதைவை திறக்ககூறி உங்க அப்பா அலமாரையை நம் அறையில் வைத்து செய்த அலப்பறை நினைவில் உள்ளதா? பத்து வருடங்களுக்கு பின்பும் உங்க சொந்த ஊரில் வீடு கட்டின போதும் நம்மளுக்காக   ஓர் அறை உங்க வீட்டில் கட்டவில்லை.

அத்தான் உங்க வீட்டில் நான் வெறுத்ததே உங்களை கேலியாக பேசிக்கொண்டு அவர்கள் மூன்று பேர் மட்டும் அறிவில், அழகில் சிறந்தவர்கள் என பேசிக்கொண்டு இருப்பதை தான்.  இப்படி தான் கேலிப்பேச்சிலும் அவமானப்படுத்தியும் தான் நம் வாழ்க்கையை துவங்கி வைத்தனர். நீங்க போன அன்றும் இதே கேலிப்பேச்சு தான் உங்க அம்மா, தம்பி வாயில் இருந்து வந்தது. 


நாம் திருமணம் முடிந்த நாட்களில் உங்களை உங்க அறைக்கு ஒன்பது மணிக்கு அனுப்பி விட்டு.  “அவன் பொறுப்பற்றவன் நீ தான் அவனை சரி செய்ய வேண்டும்” என்று இரவு 10 மணி வரை எனக்கு மட்டும் வகுப்பு நடக்குமே. இந்த கேலி கிண்டல் மத்தியில் நீங்கள் ஜெயிக்க வேண்டும் எனப் போராடினேன். ஆனால் போகும் போது என்னை தோற்கடிக்க வைத்து விட்டு சென்று விட்டீர்கள் அத்தான். யாருக்காக நான் வாழ் நாள் முழுக்க போராடினேனோ எல்லாம் ஒரே நொடியில் நான்குவழிச் சாலையில் முடிந்து விட்டதே அத்தான். நான் உங்கள் வெற்றிக்காக உழைக்க, நீங்கள் உங்க அம்மா, தம்பிகாக உழைத்து கொடுத்துள்ளீர்கள் என அறிந்த போது நான் கொண்ட துயருக்கு கணக்கில்லை அத்தான். என் மேல் சில கத்திகளை தயார் செய்து தொங்கவிட்டு விட்டு தான் சென்றுள்ளீர்கள். எந்த கவலையும் வருத்தவும் இல்லை. நீங்கள் எங்களை மீட்டு விடுவீர்கள். நாம் கடந்த வருடங்களில் உழைத்து போராடி ஜெயித்து வந்தது எல்லாம் ஒரே நொடியில் இழந்து விட்டோமே அத்தான். நீங்க அவர்களுக்கு கொடுத்த பணத்திற்காகவாவது ஆண்டவன் உங்க உயிரை விட்டு வைத்திருக்கக்கூடாதா?


அத்தான் எல்லாம் இருந்து  நிறைவாக  மன மகிழ்ச்சியில் இருந்த போது போய் விட்டீர்கள். நீங்க ஆசைப்பட்டது போலவே என்னையும் ஒரு வேலையில் நிறுத்தி விட்டீர்கள்,  நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் அத்தான் ஆனால் நான் தான் எல்லார் முன்னும் தோற்று போய் விட்டேன். பாபா மனைவியாக உங்களுடன் பெருமையாக நடந்து போன தெருவில் இன்று அபசகுனமாக என்னை நிறுத்தி விட்டு சென்று விட்டீர்கள்,  அத்தான் மிகப்பெரிய கொடுமை நீங்கள் இல்லாத என் சிறுமைப்பட்ட நிலையை எண்ணி தான் நிதன் நிதம் கண்ணீர் வடிக்கின்றேன். அத்தான் உங்கள் பிரிவு தனிமை வெறுமை மட்டுமல்ல இழிவையும் சேர்த்து தந்து விட்டது. உங்கள் தோளிலும் கைகளிலும் அரவணைத்து   இருந்த என்னை  எப்படி அத்தான் தூக்கி எறிந்து விட்டு போக மனம் வந்தது. 

0 comments:

Post Comment

Post a Comment