header-photo

நிலையில்லாத வாழ்வில் நிலையற்ற இடத்தை தேடி தந்த அன்பு அத்தான்!

என் துக்கம் தீரப்போவதில்லை. இனி என் பூமியில் உள்ள நாட்கள் மட்டும் அத்தான் நினைவுகள் என்னை வதைத்து கொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு  இடத்திலும் ஒவ்வொரு சூழலிலும்   நீங்கள் என்னை நினைக்க வைக்கின்றீர்கள். நீங்கள் இறந்த அன்று என் வங்கி அட்டையும் உங்கள் பணப்பையில் தான் இருந்தது.   என்னுடைய வங்கி புத்தகத்தை எங்கு வைத்துள்ளேன் என்பது கூட உங்கள் அறிவில் இருந்ததால் என்னால் சிந்தித்து அதை தேடும் மனநிலையும் வரவில்லை. ஆனால் +2 வில் படிக்கும் நம்மகன்   வங்கியை அணுகிய போது உங்களுடைய கணக்கும் முடக்கப்பட்டது முதல் அதிர்ச்சியாக இருந்தது. 

நிலையில்லாத வாழ்வில் நிலையில்லாத இடத்தை  எட்டிய போது அறிந்த உண்மைகள் கசக்கும் படியாகத்தான் இருந்தது. ஒரே வீட்டில் ஒரே மனதில் ஒரே  பாசப்பிடிப்புடன் வாழும் போதும் சில உண்மைகள் பெண் தானே, என் மனைவி தானே, அவள் வருத்தம் அடைய வேண்டாம் என்று மறைப்பது பல இன்னல்களை எதிர்கொள்ள காரணமாகின்றது.  இந்த கொடிய துயரிலும் என்னை ஓர் வழக்கறிஞர் போல் ஓர் புலனாய்வாளர் போன்று சிந்திக்க வைத்து என் பழுவை குறைத்து விட்டீர்கள் அத்தான். 


எதிர்பாராத உங்களுடைய இழப்பால் தவித்த போதும் உங்கள் சகோதருனுக்காக   பட்ட கடத்திற்கு நான் பதில் சொல்லும் இடத்தில் நிறுத்தப்பட்டேன். நீங்கள்  இருக்கும் வரை குடும்ப சொத்து அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில்,வராத எனக்கு தற்போது உங்கள்  பங்கை பெறுவது என்பது தன்மானப் பிரச்சினையாக மாறிவிட்டது. உங்க வங்கி கணக்கில் இருந்து லட்சங்கள் எங்கே போனது? என்று கேள்வி எழுந்த போது கடந்த ஒரு வருடமாக இடைவிடாது பேசிக்கொண்டிருந்த உறவு கொண்டிருந்த சொந்த சகோதரனே "அவன் யாருக்கு கொடுத்தான் என்று நீங்கள் கண்டு பிடியுங்கள்" என்ற போது கவலையும் மீறி உங்களுடைய மானப்பிரச்சினையாக மாறியது எனக்கு. அந்த எல்லா பணவும் வேளச்ச்சேரி வங்கியில் குறிப்பிட்ட நபருக்கு தான் சென்றுள்ளது  என்ற போது ஒரு பக்கம் ஆச்சரியம் ஒரு பக்கம் ஆறுதலும் ஒருங்கே வந்தடைந்தது! 

 . இப்போதும் நான் இறைவனிடம் கேட்பது  உங்களை உயிருடன் விட்டிருந்தால் நான் உங்களுக்காக எப்போதும் போல் போராட வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால் கடவுள் உங்களை வருத்தப்பட அனுமதிக்கவில்லை. உங்களுக்கான செழிப்பான தொழில், வீடு,  ஆசை மனைவி அறிவான மகன்கள்  என்றதும் அட்டை போல் ஒட்டின பெற்றோர், சகோதரனையும் நன்றாக கவனித்து வந்த வேளையில் தான் இனியும் முன்னேற இயலும் என்ற நம்பிக்கை உள்ள சூழலில் விடை தந்து விட்டீர்கள்!

அத்தான் நீங்க அந்த வீட்டிற்கு போயிருக்க கூடாது. முதல் முறை நம் கார் கொண்டு சென்ற போது கல் வீழ்ந்து கண்ணாடி கீறியது. அடுத்த முறை கார் பெல்டுகள் உடைந்து காரையை மாற்றினீர்கள். மூன்று பாம்பை கனவில் காட்டியும் மறுபடியும் சென்று வந்துள்ளீர்கள். உங்க வீழ்ச்சியே பேச்சில் மயங்குவது தான். நீங்க பச்சை பிள்ளை குணம் என்பது இது தானோ? கடைசி முறை சென்ற போதும் கூட உங்க கார் பழுதி ஆகி உங்க சொந்தக்கார சகோதர் தான் வீட்டில் கொண்டு விட்டாராம்.  உங்க உழைப்பை வீணடித்து  உங்க கடமைகளை மறக்க செய்து விட்டீர்களே?

அத்தான் நீங்க இனி வர மாட்டிங்க என்று என்னால் நம்ப இயலவில்லை. ஆனால் நேற்றிலிருந்தே நம் கதைகளுடன்   பழையபடியும் கதைக்க ஆரம்பித்து விட்டோம்.  நீங்க என்னிடம் எப்போதும் போல் சிரித்து கேலியாக, அதட்டலுடன்  பேசி கொண்டிருந்தீர்கள்.  நான் எப்போதும் போல் உங்களை கேள்வி கேட்டு கொண்டிருந்தேன். மரியாகம்மா பாட்டி உங்களை நினைத்து நேற்று வரை அழுது தீர்த்து விட்டாராம், நீங்கள் இறைவன் சித்தத்திற்கு இணங்கியே போய் உள்ளீர்களாம்.

என்னை ஆறுதல் படுத்த என என் நண்பி பேராசிரியர் சொல்கின்றார் இனி ஜீசஸ் தான் என் நண்பராம் , கணவராம் ஆறுதல்படுத்துபவராம். இல்லை அதை நான் ஏற்று கொள்ள இயலாது. நீங்க தான் என்னவர்,  என் கணவர், என் நண்பர்.என் கடவுள்! நான்  உங்கள் நினைவு வந்ததும் கைபேசியில் குறும்செய்தி அனுப்புவேனே, நீங்களும் உடனே அழைத்து பேசுவீர்கள். அத்தான் எப்ப வீட்டுக்கு வருவீர்கள் என்றதும் அரை மணி நேரத்திற்குள்ளாக வீட்டில் வந்து நின்று நீ அழைத்ததும் வேலை செய்ய மனம் வரவில்லை என்பீர்கள், கோபமாக வேலைக்கு அனுப்பி விட்டால் இன்று என்னால் ஒரு வேலையும் திறம்பட செய்ய இயலவில்லை என்று கூறி  வீட்டை அடைவீர்களே.  அத்தான் உங்கள் சிரித்து கொண்டிருக்கும் படத்தை இப்போது பார்த்து நிம்மதி தேடுகின்றேன்.   உங்கள் அருகில் தான்  ஜீசஸும் உள்ளார். 


ட்ரைவிங்க கற்று கொள்ள சாம் ஜோயேல் சேர்த்து விட்டான். இன்று அவன் வங்கிக்கு அழைத்து செல்லும் போது வளைவில் வேகமாக சென்று பைக்கை கீழை போட்டு விட்டான். அடிபடவில்லை. என்னால் தாங்க முடியும் என்பதால் தான் கடவுள் இந்த சூழலை கொடுத்தாராம்! எனக்கு என்னமோ நீங்கள் என்னை பற்றி இன்னும் நன்றாக கனவு காணவில்லையோ என்று படுகின்றது. அத்தான் நீங்கள் இல்லாத வருடங்களை நினைத்து பார்க்கவே பயமாக உள்ளது.  கல்லூரி நாள் நிகழ்ச்சிக்கு செல்லும் போது கடந்த வருடம் நீங்கள் கொண்டு விட்டு அழைத்து சென்றது தான் நினைவில் வந்தது,
நான் வருத்தப்படக்கூடாது என்று மட்டுமே நீங்கள் நினைத்திருப்பீர்கள்.   நீங்கள் வாங்கிய வங்கி கடத்திற்கு வட்டி கட்டி விட்டேன்.  அந்த கடன் நம் பிள்ளைகளுக்காக  என்றால் கூட நான் சகித்திருப்பேன்.  நீங்க அந்த பிராடுக்காக வாங்கியுள்ளீர்கள் என்பதை தான் ஜீரணிக்க இயலவில்லை. காரையும்  விற்று விட்டேன். எனக்கு வருத்தம் ஒன்றுமில்லை. கடவுள் தந்தார், எடுத்தார், தருவார். எல்லாம் மாறக்கூடியது. இப்போதும் என்னை வருத்தமடைய செய்வது கடவுள் உங்களை எனக்கு திரும்ப தந்திருக்க கூடாதா?  உங்கள் கண்ணாடியை தினம் தினம் எடுத்து முத்தம் கொடுக்கின்றேன், உங்கள் உடைகளை எடுத்து முகர்ந்து பார்க்கின்றேன்.  நீங்கள் அழகாக அடுக்காக தேய்த்து மடித்து வைத்துள்ள சட்டைகள் உங்கள் ஒழுக்கத்தை, அழகை நினைவுப்படுத்துகின்றது.  உங்கள் செருப்பை அலமாரை ,ஏல் வைத்து உங்களை நினைத்து கொண்டிருக்கின்றேன். அத்தான் இந்த பிரிவை நான் தண்டனையாக சில நேரம் எடுத்து கொள்கின்றேன் இல்லை அதை சவாலாக எடுத்து கொள்ள வேண்டும். நீங்கள் என்னில் இருந்து பிரியவில்லை. என்னுடைய ஒவ்வொரு ஜீவ அணுவிலும் நீங்களே குடியிருக்கின்றீர்கள். 


0 comments:

Post Comment

Post a Comment