header-photo

பாபா அத்தானுக்கு பிடித்த அந்தோணியார் கோயில்

அத்தானுடைய பக்தி  வித்தியாசமாக இருக்கும். நாம் தூத்துக்குடியில் இருந்த போதும் முதன் முதலில் வந்திறங்கிய அந்தோணியார் கோயில் மேல் தான் அதீதமான விருப்பம் கொள்வீர்கள். திருநெல்வேலியிலும் அப்படி தான். எல்லா செவ்வாய் அன்றும் பிரார்த்தனை செய்து விட்டு எனக்கு மிளகு உப்பு சில பூக்கள் கொண்டு தருவீர்களே.. சில நாட்களில் வீட்டிற்கு வந்து விட்டு எங்களையும் அழைத்து செல்விர்கள். அந்தோணியார் கோயிலை விட அதன் அருகில் உள்ள குரிசடியில் ஜெபிக்க தான் மிகவும் விரும்பி போய் ஜெபிப்பீர்கள். நான் தான் ஆலயம் உள்ளே வந்து ஜெபித்து விட்டு செல்ல வற்புறுத்துவேன்.  வாசலில்  இருக்கும் ஓர் அம்மையாரிடம் 4 மெழுகுதிரி ஒரு உப்பு பொட்டலம் சேர்த்து 10 ரூபாய்க்கு வாங்கி எங்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு மெழுகுவத்தி தருவீர்கள். அந்த கோயிலின் சிறப்பே பக்தர்கள் இரவு 10 மணி வரை பிரார்த்திக்க வருவார்கள் என்பது தான். 8 மணி துவங்கி அருகிலுள்ள வியாபரிகள் பிரார்த்தனை முடித்து அமைதியாக சென்று கொண்டு இருபார்கள் அந்த அமைதியான இரவில் பிரார்த்திப்பதற்கு தான் நீங்கள் மிகவும் விருப்பபடுவீர்கள்.   நீங்கள்   விரும்பி கோயில் அசனகளுக்கு செல்வதை நான் கேலி செய்துள்ளேன். நல்ல வேளை விருப்பம் இல்லாதிருந்தும் உங்களுக்காக பெப் 2 அன்று உங்களுடன்ன் அசனச்சாப்பாடு சாப்பிட்டு வந்தேன். இனி என் ஆயிசுக்கு அசனசாப்பாடே இல்லை அத்தான்.

உங்களுக்கு சிலுவைப்பாதை செல்வது மிகவும் பிடிக்கும் தானே. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்  சொந்த வீடான வண்டிப்பெரியார் சென்று சிலுவைப்பாதை சென்றிருந்தோம். உபவாசம் இருப்பது, சத்தமாக பிரார்த்திப்பது எதுவுமே உங்களுக்கு பிடிப்பதில்லை. இருந்தும் வேளங்கண்ணி மாதா கோயிலுக்கு நவம்  8, 2016 அன்று சென்ற போது அந்த ஒரு வாரம் அசைவம் சாப்பிடாது உபவாசம் காத்து சென்றது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இரவும் காலையும் அமைதியாக பைபிள் வாசிப்பீர்கள். மற்றபடி காலையும் மாலையும் கிறிஸ்தவ பாடல்கள் விரும்பி கேட்பிங்க. உங்களிடம் இல்லாத பாடல்களே இருந்திருக்க வாய்ப்பில்லை. எல்லா வகைப்பாடல்களையும் விரும்பி கேட்பீர்களே அத்தான்.  உங்களுக்கு விருப்பி கேட்கும்   திரு தந்தை டென்னிஸ் வோய்ஸின்  கடந்த வாரம்  எங்கள் துறைக்கு வந்து சென்ற போது அத்தான் உங்கள் நினைவுகள் தான் என்னை வாட்டியது.  நீங்கள் இருந்திருந்தால் கைபேசியில் அழைத்து அருட் தந்தையை அறிமுகப்படுத்தி நேரில் பேசவைத்திருப்பேனே.. 

அந்தோணியார் கோவில் முன் தான் கிறிஸ்தவர்களை அடக்கம் செய்யும் பெட்டிக்கடை உள்ளது.  நாம் எப்போதும் பார்த்து விட்டு கடந்து செல்வது தான்.  இந்த முறை அந்த கடைகளை பார்த்த போது என்னை அறியாது திகில் பற்றி கொண்டது.  அத்தான் நீங்கள் செய்வது  போலவே, நானும் உங்கள்  மூத்தமகனும் மெழுகு திரி வாங்கி பத்த வைத்த பின்பு  நீங்கள் செய்வது போலவே நான்கு பூக்கள் கொஞ்சம் உப்பு எடுத்து உங்கள்  கல்லறைக்கு மேல் வைத்து விட்டு வந்தேன். நானும் நீங்களும் இரு கிறுஸ்தவ சபை என்பதால் உங்கள்  அடக்க நேரம் மிகவும் குழப்பம் ஏற்பட்டது.  என்னால் ஒரு தீருமானத்தில் எட்ட இயலவில்லை.  நாசரேத்தா? திருநெல்வேலியா? எந்த கோயில் என சிந்தனையில் ஆழ்ந்தோம். நீங்க கூட  இரு வாரம் முன்  நான் கத்தாறு செல்லும் முன்  சகாய மாதா  பங்கில் சேர்ந்து விடலாம் என்றீர்கள். ஏற்கனவே  இளைய மகன்  பாடல்க்குழுவில் இருந்ததும் நமக்கு அந்த ஆலயத்தில் உறுப்பினாராகலாம் என்றீர்கள்.  ஆனால் கத்தார் எனக்கூறியது இந்த பயணம் என்று எனக்கு தெரியாதே அத்தான்..


நம் மூத்த மகன் அவரை நாசரேத் கொண்டு போகக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தான்.  நாசரேத் கொண்டு போனால் யார் பொறுப்பாக செய்வார்கள் என்றால் அங்குள்ளவர்கள் நெல்லைக்கு திரும்பியதை அறிந்தோம். எனக்கு உங்கள் தாலாபுரம் சொந்த இடத்தில் வைத்து விட்டால் அங்கே ஒரு வீடும் கட்டி அருகில் இருந்து விடலாம் என்று இருந்தது.  ஒருவகையில் நெல்லையில் நாம் தனித்து விடப்பட்ட குடும்பம்.  ஆனால் அப்படி நாம் தான் நினைத்து இருந்துள்ளோம். உங்கள் உறவினர்கள் எல்லாம் அடக்க ஆராதனைக்கு என்று மாலை ஆலயம் தான் வந்து சேர்ந்தனர். ஆனால் நம் உங்கள் நண்பர்கள் என நல்ல மனிதர்கள், எங்கள் கல்லூரி குடும்பத்தினர் என எல்லோர் உதவியாலும் எந்த  குறையும் இருக்கவில்லை.  உங்க மனம் போலவே இரு சபையின் தலைமையில் பிரார்த்தனை -ஆசிர்வாதத்துடன் சென்றீர்கள். என்  மாணவ்ர்கள் நம் மகனின் பள்ளி நண்பர்கள் என நம் வீட்டில் வீட்டில், உங்களை வைத்திருந்த மருத்துவ மனையில் 100க்கு மேற்பட்ட குழந்தைகளை கடவுள் அருளினார்.  தூக்க வேண்டிய இடங்களில் எல்லாம்  குழந்தைகள் தான் உங்களை தூக்கியுள்ளனர். உங்கள் தலை மிகவும் காயப்பட்டதால் பெரியவர்கள்  பயப்பட்டு அருகில் வர  தயங்கிய போது குழந்தைகள் தான் கள்ளமில்லா உங்களை தூக்கி சுமந்துள்ளனர். ராஜசேகர் மாமா தான்  உங்களுடன் உடன் இருந்துள்ளார். 

வீட்டில் இருந்து கிளம்பி 15 நிமிடத்திற்குள் விபத்து நடந்து விட்டது அத்தான். உங்கள் அலைபேசியை லாக் செய்திருந்ததால் உடன் அருகில் வந்தவர்களாலும் பயண்படுத்த இயலவில்லை. உங்கள் அலுவலக ஊழியர் பரமேஸ்வரன்  பேச முயன்ற போது தான் உங்களை பற்றிய தகவல் கிடைத்துள்ளது.  இருப்பினும் சட்டை பாக்கடில் உள்ள முகவரியில் வீட்டை போலிஸ் அரை மணி நேரத்தில் வந்து  அடைந்தனர். நானும் உடன் மருத்துவ மனை க்கு வந்து விட்டேன். உங்களுக்கு விபத்து பலமாக அடிபட்டிருக்கலாம் என்ற எண்ணமே என்னிடம் இருந்தது. நீங்கள் இனி  இல்லை என்றதும் உங்கள் கையை தொடத்தான்  வேண்டினேன். உங்கள்  ஆன்மா அப்போதும் உங்களிடம் இருக்கும்,என்னை தேடும் என நம்பினேன். யாரும் என்னை உங்கள் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. யார் யாரோ கண்ணாடி வழியாக எட்டி பார்த்தனர். உங்கள் கைவிரல்களை என்னால் கடைசிவரை பார்க்கவே இயலவில்லை என்பது ஏக்கமாக உள்ளது. நீங்கள்  என் கை விரல்களை பிடித்து கொண்டு தான் நடப்பீர்கள். எனக்கும் உங்க  கையை பற்றவே பிடிக்கும்.  

காலை ஒன்றாக உணவருந்தி சென்ற நீங்கள்  மாலை 4.30க்கு தான் கண்டேன். அதுவும் பிரார்த்தனை நேரம். பின்பு உங்களை  கொண்டு போய் விட்டனர். மூன்றாம் நாள் பிரார்த்தனைக்கு அழைத்து சென்ற போது எனக்கு ஒரே ஆச்சரியம் உங்களுக்கு பிடித்த வாரம்தோறும் வரும் அந்தோணியார் ஆலயம் முன்பே உங்கள் கல்லறை அமைந்துள்ளது.  அந்த கல்லறையை தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் ஒருவர் கண்காணிப்பதால்  சிறப்பாக பராமரிக்கின்றனர் . டாக்டருடைய ஏழு வயது மகனுக்காக அங்கு பூங்கா அமைத்துள்ளார்களாம். நான் அடுத்த முறை வரும் போது செம்பருத்தி செடி நட்டு தரவேண்டும் என வேண்டியுள்ளேன் அங்குள்ள பணியாளர்களிடம். 

அங்கு வேலை செய்யும் வயதான பெண் மணி கரிசனையாக ஓடிவந்து கதைத்தார் கல்லறையை சுத்தம் செய்து தந்தார். தினம் கொஞ்சம் தண்ணீர் விட கேட்டுள்ளேன். கடினமான வெயில் அத்தான் மேல் வெயில் படும். செம்பரத்தி செடி வைத்தால் அழகாக பூத்து உங்களுக்கும் நிழல் தரும். உங்களை கல்லறையில் சந்தித்து சில மெழுகுதிரி பற்ற வைத்து உங்கள் அருகில் இருந்து கண்ணீர் விடும் போது என் மனபாரம் இறங்குகின்றது. கேரளா போன்று வீட்டு தோட்டத்திலே வைக்க அனுமதித்திருந்தால் அத்தான் அருகில் இருந்தே பேசி கொண்டு இருந்திருக்கலாம். இன்னும் என்னால் நம்ப இயலவில்லை. நீங்கள் நெடிய தூரம் பயணம் சென்றது போல் நினைக்க விரும்புகின்றேன். நீங்கள் சென்னைக்கு சென்றாலே தினம் 10 முறை  பேசிக்கொள்வோம். நீங்கள் அடுத்த நாள் காலை வந்து சேரும் வரை பித்து பிடித்தது போன்று இருக்கும். 

அத்தான் நீங்க சென்று 25 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. பெரியவர் வீட்டை மாற்றலாம் என்றான். ஏனோ நீங்க  இருந்த வீட்டை விட்டு போக மனம் வரவில்லை. உங்களுக்கு எவ்வளவு கனவுகள் இருந்தன  வீடு கட்டுவதை பற்றி.

அத்தான் உங்களை இறைவன் 45 வயதிலே அழைத்து கொண்டது தான் என்னால் நம்ப இயலவில்லை. எல்லாம் கடந்து போகும். வாழ்க்கை நிரந்தரமல்ல என தெரியும்.  அத்தான் விரும்பி வாங்கின காரை இன்று விற்று விட்டேன்.  உங்களிடைய அலுவலகம் நாளை மூடவேண்டும். எல்லாம் கனவு மாயை! ஆழமாக யோசிக்கும் போது ஒன்றும் புரியவில்லை. யோசிக்கவும் பயமாக உள்ளது. நான் விரும்பினது உங்களீடன் உள்ள மகிழ்ச்சியான வாழ்க்கை ஒன்று மட்டும் தான். வாழ்க்கை ஓர் ஏணீயும் பாம்பும் விளையாட்டு போல் உள்ளது. பாம்பு வாய் வழியாக சறுக்கி முதல் கட்டத்திற்கு வந்து விட்டோம். ஏன் அந்த பாம்பு அத்தானை விழுங்கியது அத்தான் நீங்க  அந்த மூன்று பாம்புகளை நம்பியதாலும் ம் மன்னித்ததாலுமா?  அப்படி தானே பைபிளிலும் நமக்கு சொல்லி கொடுக்கப்பட்டுள்லது. எதிரியையும் நேசிக்க வேண்டும், நம்மை பழித்தவனையும் தின்மை செய்தவனையும் அன்பு செலுத்த வேண்டும்.  அத்தான் அதை தானே நீங்களும் செய்தீர்கள். இல்லை வாழ்க்கை விளையாட தகுந்தது. நாம் பாம்புகளை பற்றி நினைப்பது கூட தவறு தான்.  நம் தொடக்க அந்த பத்து வருட கொடிய வாழ்க்கையின் பின்பு கடந்த பத்து வருடம் ஏறுமுகமாக வந்தோம். இன்னும் சரியாக விளங்குவது என் மாணவர்களுக்கு நான் எடுக்கும் திரைக்கதை எழுத்து என்ற பாடம் தான். 

கதை ஓர் முக்கோண பாதை கொண்டது. துவக்கம் , எறுமுகம், கிளைமாக்ஸ்.  இறக்கம், முடிவு ! எதிர்பாராத கைளைக்ஸ்.  வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சினைகள், வறுமை, பணப்பிரச்சினை யாவும் இளம் வயதிலே சந்தித்ததால் முடிவு சுபம் தான் அத்தான் நீங்களும் நானும் பேரப்பிள்ளைகளுடனும் விளையாடுவோம் என்றிருந்தோம்.  இன்று நம் குழந்தைகள் நல்ல தகப்பனை உங்கள் பாசத்தை இழக்க வேண்டிய சூழல். கடந்த  வருடங்களில்  ஒரே நிழலில் ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தோம் என்ற மகிழ்ச்சி மட்டுமே மிஞ்சுகின்றது. நீங்கள் எங்களை பிரிந்து கத்தார்  போக வேண்டும் என்று முடிவு எடுத்ததே உங்கள்  முடிவாக மாறி விட்டதா?. கத்தார் என்று ஆசை கொண்டு அவனுடன் கதைத்து கொண்டிருந்த போதே நான் உங்களை தடுத்திருக்கவேண்டும். நான் அமைதியாக சிலவற்றை சொல்லி ஒதுங்கி கொண்டேன். இ ப்போது  சில நேரம் ராட்சஷியாக இருந்து ஏன்  தடுக்கவில்லை என மனம் கேட்கின்றது. அப்படி நான் எதிர்த்தாலும் என்னை ஏற்கும் மனநிலையில் நீங்கள் இருந்திருப்பிர்களா? எங்களை விட்டு போக வேண்டும் என ஐஸ் கீரீம் கேட்டு அழும் ஓர் குழந்தையை போல் அல்லவா பிடிவாதமாக இருந்தீர்கள்,  உங்களை  படத்தில் பார்த்து இப்போது பேசிக்கொண்டிருக்கின்றேன். அத்தான் எங்கும் போகவில்லை. நம்  வீட்டில் எங்களுடன் தான் உள்ளீர்கள்.. 

2 comments:

Albert Muthumalai · Rector at St.Xavier's College Palayamkottai said...


Sad to learn about the demise of your beloved husband Baba in tears. May his soul rest in peace.
Hope to meet you on 17 March during College Day as I 'll be there for Angel's book release moment.

Valan Arul · Input Editor at Vendhar Tv said...


அவர் என்றும் நம்மோடு நினைவுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்..... இந்த நம்பிக்கையே நம்மை நித்தம் தூக்கிப்பிடித்து வழிநடத்தும்...

Post Comment

Post a Comment