header-photo

அத்தான் எனக்காக எடுத்து வைத்த கடைசிப் படம்-டெய்சி

பாபா அத்தான் நீங்கள் எனக்காக எடுத்து வைத்திருந்த டெய்சி என்ற மலையாளத்திரைப் படம் நேற்று தான் கண்டு முடித்தேன். அந்த படத்தின் பாட்டுகள் என்னை அப்படம் பார்க்க தூண்டியது. .  நினைவுகள் நந்தனை தோட்டத்தில் ஒரே புஷ்பம். மேலும் பிரதாப் போத்தனின் கதையில் உருவான படமென்றதும் இன்னும் ஆர்வத்தை தூண்டியது. நீங்களுக்கும்  பிரதாப் போத்தனின் நேர்முகத்தை விரும்பி கொண்டு இருப்பீர்களே.

 நீங்கள் எடுத்து என் கைபேசியில் 18ஆம் தியதி அன்றே ஏற்றி தந்தீர்கள். ஆனால் எனக்கு கம்யூட்ட்டரில் வேண்டும் என்றதும்  பெப் 19 வெள்ளி இரவு அன்று கணிணிக்கு மாற்றி தந்தீர்கள். நாளை மீன் வாங்கி தருகின்றேன்.  ஒரே வேலையாக முடித்து விட்டு இந்த படத்தை பார்த்து முடி. .திரைக்கதை பற்றிய புத்தகத்தையும்  வாசித்து குறிப்பெடுக்க கூறினீர்கள். நீங்கள் எனக்காக கடைசியாக எடுத்து வைத்த படத்தை பார்க்கும் மனநிலையை நேற்று உருவாகி கொண்டேன். 

நீங்க 18 வியாழன் அன்று ரஜனி முருகன் பார்த்து கொண்டிருந்த போது கதையை பற்றி வினவினேன். நீங்க அப்போது கூறினீர்கள் வருத்தப்படாத வாலிப சங்கத்தின் அதே பதிப்பு. கதை, கருத்து தேடாது சிரித்து கொண்டே பார்க்கலாம் என்றீர்கள். உனக்கு டெய்சி படம் எடுத்து வைத்துள்ளேன் என்றீர்கள். இறுதி சுற்று படத்தை தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என்றேன்.  அழைத்து செல்கிறேன் என்றீர்கள். 

படம் சின்ன பள்ளி குழந்தைகள் காதல். டெய்சி என்ற பெண்ணை உடன் படிக்கும் பையன் காதலிக்கின்றான். அவனோ  தந்தையை இழந்த தாய் வேறொருவரை மணந்து கொண்டார் என்ற கோபத்தில் வாழும் விடலைப்பையன். பின்பு தாயும் இறந்து விடுகிறார்.  இந்நிலையில்   டெய்சிக்கு ஓர் உயிர் கொல்லி நோய் இருக்கின்றது என தெரிய வருகிறது.   அவள்  இறந்து விடுகின்றாள். அவன் தற்கொலை செய்து கொள்ள போகும் நேரம் டெய்சியின் சகோதரன் கமல்ஹாசன் ஆறுதல்படுத்தி காப்பாற்றுகின்றார். மரணத்தால் அவள் உன்னை விட்டு பிரியவில்லை. உன்னுள் தான் இருக்கின்றாள். நீ  வாழ்வது வழியாக அவளை வாழ வைக்க  வேண்டும் என்று கதை முடிகின்றது. அப்படி இந்த திரைப்படம் வழியாகக்கூட ஏதேதோ சொல்லி விட்டு சென்றுள்ளீர்கள்.  அத்தான் பல சம்பவங்கள் வழியாக ஏதேதோ சொல்லி சென்றுள்ளீர்கள். மூன்று நாள் முன்பு கண்ட கனவிலும் உங்களை சுற்றிய நாகப்பாம்பு, நல்ல பாம்பு, சாரைப்பாம்புவில் இருந்து  சிரமப்பட்டு தற்காத்து கொண்டதாக கூறினீர்கள். அதன் பொருள் உங்களுக்கும் எனக்கும் அன்று விளங்கவில்லை. உங்கள் கைப்பையில் இருந்து சில பொருட்களை எடுத்து  வைத்தேன். சிலது விளங்கினது சிலது பெரும் கலக்கத்தை கொடுத்தது.

என்றும் இரவு நீங்கள் ஏதாவது வேலை பார்த்து கொண்டு கணிணி அருகில் இருப்பீர்கள். நான் புத்தகத்தை வாசித்து கொண்டே உங்களை பார்த்து கொண்டே தூங்கி விடுவேன். புதப்பை மூடி விட்டு என் கையிலுள்ள புத்தகம் வாசிப்பு கண்ணாடியை எடுத்து மேஜையில் வைத்திருப்பீர்கள். அல்லது நான் வேலையில் இருந்தால் ஜோஸ் வா வா என அழைத்து கொண்டு இருப்பீர்கள். பிரதானமாக ஞாயிறு நம் குடும்பத்திற்கானது. அன்று தான் பல கதைகள் பேசுவோம். என் முகத்தை பார்த்து கொண்டே உன் தங்கச்சி வீட்டுக்கு போவோமா, குற்றாலம் போவோமா, நாகர்கோயில் போவோமா, ஜாய்ஸ் அத்தை வீட்டுக்கு போவோமா என கேட்டு கொண்டு இருப்பீர்கள். இன்று ஞாயிறு நாங்கள் எங்கையும் போகவில்லை. ஜாஸ் வந்தால் உங்கள் கல்லறைக்கு வர வேண்டும். நீங்கள் என்னை விட்டு சென்று தூங்கும் இடத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றது.  நம் வீட்டு தோட்டத்திலே இருந்தால் நான் அருகிலே இருந்திருப்பேன். 

கனவா கனவா என்றிருந்த நான் நிஜ நிலைக்கு வந்து விட்டேன். நீங்கள் ஆசைப்படுவது போலவே இனி புலம்ப மாட்டேன். உங்கள் வீட்டார்  யாரையும் குறை சொல்ல போவதும் இல்லை. எனக்கு நீங்க மட்டும் தான் இருந்தீங்க, உங்களை என்னிடம் இருந்து பிரித்த அந்த கடவுள் என்ன நினைத்தாரோ. உங்கள் ஆசைப்படி நான் வாழ்வேன்.   நீங்கள் விருப்பமாக எனக்கு வாங்கி தந்த சேலைகளை  நீங்கள் விரும்புவது போலவே அழகாக உடுத்தி செல்கின்றேன். சில நேரம் நீங்கள் பேச மாட்டிங்களா ஒரு தகவல் அனுப்ப மாட்டிங்களா என கைபேசியை பார்த்து கொண்டே இருக்கின்றேன்.  குறிப்பிட்ட சில நேரங்களில் கைபேசியில் இருந்து இரண்டு நொடி் ரிங் சத்தம் கேட்கின்றது. உங்கள்-என் இதயம் பேசி கொள்வதாக நினைத்து கொள்வேன். இன்றும் உங்கள் படத்தை பார்த்து கொண்டே காலையில் படுத்திருந்தேன். மறுபடியும் தூங்கி போனேன். என்னால் என் மனநெருக்கடியை தாங்க இயலவில்லை. சமைக்கவும் பிடிக்கவில்லை. இருந்தும் சமைக்கின்றேன் துணிகளை துவைக்கின்றேன் கல்லூரிக்கு செல்கின்றேன். அத்தான் கொடிய மிகவும் பெரும் சோதனை!  நாம் துணி தைய்க்க கொடுக்கும் டெய்லர் கூட கூறினார்     "அக்கா, இது உங்களூக்கு பெரும் சோதனை அண்ணன் துணை நிற்பார் என்றார்.  என்னால் உங்களை போல் பிள்ளைகளையும் மகிழ்ச்சியாக வைக்க தெரியவில்லை. 

முந்தா நாள் வெள்ளிக்கிழமை  நீங்க வரும் நேரம் என்னால் தாங்கி கொள்ள இயலவில்லை. வாய் விட்டு உறைக்க அழுது விட்டேன். பக்கத்து வீட்டு அக்கா ஆறுதல் படுத்தும் போது  நீங்க உழைத்து அலுத்து சென்று விட்டதாக கூறினார்கள்.  உங்கள் கடமைகளை அழகாக செய்துள்ளீர்கள். உங்களை புரக்கணித்து அவமதித்து வெளியேற்றி ஏமாற்றியவர்களுக்கும் நிறைய செய்து உங்கள் கடமையை செய்து சென்றுள்ளீர்கள். நான் உங்களிடன் உங்கள் தூய அன்பை, பண்பை மட்டுமே எதிர்பார்த்தேன். அதே போல் அந்த களங்கமில்லா அன்பை. கவனிப்பை அள்ளி தந்து சென்றுள்ளீர்கள். என்னை உங்கள் கடவுள் போல் அல்லவா நடத்தினீர்கள். என்னை ஆராதித்த என்னை நிபந்தனையற்று அன்பு செய்த என்னை ஒரு போது குற்றம் கூறாத ஆத்துமா நீங்க மட்டுமே. 

ஆனாலும் சில நேரம் கோபப்பட்டு சில நேரம் விளையாட்டாக சொல்வீர்களே "நான் கத்தார் போய் விடுவேனே  நல்லா தனியா கிடந்து அனுபவி".  என்னையை பார்த்து கொண்டு இருப்பீர்கள்.  சாம் ஜோயேல் கேட்பான்"அப்பா என்ன ரொமான்ஸா, பார்வை பலமாக உள்ளது". உடன் நீங்க கூறுவீர்கள் என் பெண்டாட்டியை தானே பார்க்கின்றேன் உனக்கென்னடா? நானும் இது ரொமான்ஸ் பார்வையா என்று கேட்டு விட்டு நகர்ந்து விடுவேன். போனை எடுப்பீர்கள் பிள்ளைகள் எடுத்ததும்  give to my wife  என்பீர்கள். நான் எடுத்ததும் உனக்கு என்ன வாங்கி வர வேண்டும் என்பீர்கள். இப்படியான நினைவுகளுடன் என் நாட்கள் நகருகின்றது. அம்மாவுக்கு முதல் கொடுங்கள் அவள் தான் முதல் குழந்தை என கூறி நம் குழந்தைகளை எரிச்சல்ப்படுத்துவீர்கள்.  நான் அரிசி மாவு உருண்டை செய்தால் உங்களுக்கு  இனிப்பு ஏலக்காய் பிடிக்கும் என்று நிறைய வைத்து அதில் ஓர் அடையாளம் வைத்து உங்களுக்காக எடுத்து வைப்பேன். 

அத்தான் என்னால் நம்பவே முடியவில்லை.  நாம் இப்போது தான் சரியாக காதலிக்க ஆரம்பித்தோம். நிறைய விடையங்களில் புரிதல் வந்தது. அத்தான் நீங்க கத்தார் செல்வதே எனக்கு பிடிக்கவில்லை. உங்களை என்னிடம் இருந்து பிரிக்க அந்த கயவன் எடுத்த திட்டம்! என் எதிரிகள் எல்லாம் ஜெயித்து விட்டனர். நீங்க என்னுடன் இருந்திருந்தால் எந்த கஷ்டமும் எனக்கு தீங்காக தெரிந்திருக்காது. நன் வாழ்க்கையை எவ்வளவு உழைத்து மேம்படுத்தி வந்தோம். ஒரு நாள் கூட பிரியாது இருந்தோம். எப்படி அத்தான் உங்களுக்கு என்னை விட்டு போக மனம் வந்தது.  விபத்தில் உங்க ஒரு தோள்பட்டை இறங்கியிருந்தாம். நினைக்க முடியவில்லை அத்தான் மறக்கவும் இயலவில்லை. அத்தான் உங்களை காண வேண்டும். அந்த தோள்பட்டையில் பிடித்து கொண்டு கதைக்க வேண்டும். அத்தான் கடவுளின் இந்த திட்டம் மிகவும் கொடியது. நம்மை ஏன் பிரித்தார். நான் அறிந்து எந்த குற்றவும் செய்யவில்லையே. முன் ஜென்ம வினை தானோ?

அத்தான் நீங்க நல்லவர், அதுவே எந்த வலியும் இல்லாது உடனே போய் விட்டிர்கள். என் இதயம் உடைந்து கசியுகின்றது. என்னால் முடியவில்லை. நீங்க இல்லாத நாட்களே கடினமாக உள்ளது. வருடங்களை நினைத்தால் கலக்கமாக உள்ளது. அத்தான் என் சிந்தனை நீங்கள் இன்னும் நன்றாக திட்டமிட்டிருக்கலாம். 2006 ல் வெறும் 5500 ரூபாய் வருமானத்தில் இருந்த நீங்கள் 2016 ல் 40 ஆயிரம் மேல் சம்பாதித்தீர்கள். உங்களுக்கு என்னை பிரிந்து சென்று சம்பாதிக்க யார் சொல்லி கொடுத்தது. ஏற்கனவே உங்களை எனக்கு சந்தேகம் என்று கூறி சண்டை மூட்ட பார்த்தது. நாம் இருவரும் தனியாக பேசி அவனின் எண்ணைத்தை பற்றி பேசி சிரித்தோம். ஆனால் கடைசியில் நீங்க அதன் திட்டத்திற்கு பலியாகி விட்டீர்கள். குடும்ப சொத்தை ஆட்டையை போட உங்களை இங்கிருந்து நகர வைப்பதாகவும் அதுவும் நாம் சம்பாதிக்க ஓர் வாய்ப்பை ஏற்படுத்தும் என்று கூறினீர்களே. இது தான் அந்த திட்டமா?

என்னால் சிந்திக்க, அதை மன்னிக்க இயலவில்லை. பொறாமை பிடித்த அதன் எண்ணம் உங்களை என்னிடம் இருந்து பிரித்து விட்டது. நீஙக ஏன் கணக்கில்லாது அதற்கு  உதவி, பணம் கொடுத்தீர்கள்,  காலன் கொண்டு  போக நீங்க இட்ட பாலமோ.?  என் தெய்வமே, என் அத்தான், என் நம்பிக்கையே என்னால் முடியவில்லை . உங்களை பிரிந்ததை ஏற்று கொள்ள இயலவில்லையே!   அத்தான் எல்லோரும் சொல்கின்றார்கள் நீங்க இரக்கமுள்ளவராம் உங்கள்  வாடிக்கையாளர்களுக்கு ஏற்று சேவை செய்வீர்களாம். உங்கள் நண்பர் கூட கூறினார் நீங்க அவருக்கு நியாயமாக பில் பண்ணினீர்களாம். ஆனால் என்னிடம் நீங்க நியாயமாக நடக்கவில்லையே. எப்படி உங்க மகன்களை உங்களை போன்று சந்தோஷமாக வைத்து கொள்வேன் என்று தெரியவில்லையே.  அத்தான் உங்கள் வயிற்று பக்கம் படுக்க நாங்க மூன்று பேரும் போட்டி போடுவோமே . அத்தான் உங்கள் சிரிப்பை காண வேண்டும் , நீங்க கோபமா திட்டுவதை கேட்க வேண்டும் அத்தான் நீங்க எங்களுக்கு வேண்டும் இது பெரும் துயர் இந்த பிரிவு கொடிய தண்டனை பிப் 20 ஏன் வந்தது?  எங்கள் மகிழ்ச்சி எல்லாம் போய் விட்டது அத்தான்.

4 comments:

நம்பள்கி said...

உங்கள் துயரம் எனக்கு புரிகிறமாதிரி இருக்கு! ஆனால், அது என்ன எப்போது என்பதை முழுவதும் புரிந்துகொள்ளாமல், எதையும் கூறவேண்டாம் என்ற தயக்கம் எனக்கு!

ஒரு வேளை, முழுத்தொடரை படித்தால் எனக்கு புரியும் என்று நினைக்கிறேன். எதுவும், எந்த துயரமும் கடந்து போகும்! ஆனால் ஒன்று, "நீங்கள் உங்கள் அத்தானை நேசித்த அழகு எங்களுக்கு நன்றாக புரிகிறது!"

Christopher Raja Kumar · St.Xavier's College Palayamkottai said...


Kadavulthamae ungalukku Aaruthalaitharuvaaraga

Subbiah Ravi · Madurai Kamaraj University and the University of Madras said...


சேர்த்து வாழும் மனிதர்கள் மரணத்தில் பிரிவதென்பது அனைவருக்கும் வாழ்வில் பல சந்தர்பங்களில் ஏற்படும் துயர அனுபவம் தான்.ஆனால் இளம் பருவத்தில் பொறுப்புகளை நிறைவேற்ற கடமை பட்டவர்கள் திடீர் என்று பிரியும் பொழுது ஏற்படும் துயரத்தின் வலி அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.திருமதி ஜோஸ் அவர்களின் நிலைமை அத்தகையது.குழந்தைகளின் எதிர்காலம் கருதி மனதை திடபடுத்தி கொண்டு வாழ்க்கை பயணத்தை தொடர வேண்டிய கட்டாயமும் உள்ளது.காலம் அவருக்கு அந்த உறுதியை அளிக்கும்.

பனிமலர் said...

ஈடுகட்டமுடியாத இழப்பு, பிள்ளைகளை நினைக்கையில் தான் மிகவும் வருத்தமாக இருக்கிறது. தாயும் தந்தையுமாக இருந்து உருவாக்க வேண்டிய இடத்தில் நீங்கள். தைரியத்தையும் பலத்தையும் கொடுப்பதற்கு ஆண்டவனை வேண்டுவோம்.....

Post Comment

Post a Comment