header-photo

இறைவா, ஏன் என்னை கைவிட்டீர்?

பாபா அத்தான்,  கனவு போன்று ஒன்பது  நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை!  அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்ததாக கூறினீர்கள். காலை உணவாக இடியப்பம் நாம் இருவரும் ஒன்றாகவே எடுத்து கொண்டோம்.. எப்போதும் போல நாம் நிறைய அன்று பேசவில்லை..  என்றும் போல்  மார்கெட் சென்று வந்து விட்ட பின்பு பேசலாம் என்றிருந்தேன். அன்று நீங்கள் வெளியே வரும் போது வீட்டு கெயிட் வரை வரும் நான்,  அன்று ஏன் வரவில்லை! வாசல் வரையே நின்று விட்டேனே. விடுமுறை நாட்களில் நானும் வருகிறேன் என்று பிடிவாதமாக உடன் வருவேனே? ஏன் அன்று அப்படி நான் உங்களுடன் வரவில்லை. நீங்க கூட சிறிய  புன்சிரிப்புடன் தான் என்னை லேசாக  ஆனால் ஆழமாக  பார்த்து  சென்றீர்கள். 

நீங்கள் இல்லாத நாட்களா?  நினைக்கவே இயலவில்லை! நான் லயோளா கல்லூரியிலும் நீங்கள் இங்குமாக   ஒரு வருடம் பிரிந்திருந்தது நம் நியதி என்றீர்கள். ஆனால் அதை பிரிவாக நான் காணவில்லை நாம் ஓர் அழகான நினைவுகளுடன் வாழ்ந்தோம் பேசினோம், சண்டையிட்டோம் பயணித்தோம். . 

என் கழுத்தை இறுக்க பற்றி கொண்டு நம் மகன்கள் கதறுகின்றனர். அத்தான் எங்களுக்கு தெரியாது எப்படி உங்கள் பிரிவை சரிகட்டுவோம் என்று, ஆனால் உங்கள் நினைவுகள் உங்கள் உழைப்பு, உங்கள் ஆசைகள் விருப்பங்கள் எங்களை வழி நடத்தும். 

அந்த பெப் 20 காலை 8 மணி ஏன் வந்தது? அந்த நாகர்கோயிலை சேர்ந்த கோயம்பத்தூரில் குடியிருக்கும் கார்க்காரன் ஏன் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி ஓட்டி வந்தான்? அவன் பெயர் அன்பாம்! , நீங்கள் ஏன் அந்த நேரம் பார்த்து அங்கு வந்து அடைந்தீர்கள்? ஒன்றும் புரியவில்லை. நீங்கள் தான் கூறுவீர்கள் நான் உன்னை,  சாகும் வரை பார்த்து கொள்வேன் நீ என் குழந்தை. ஆம் நம் வாழ்க்கை அப்படி தான் ஓடின. நீங்கள் என் அன்பு குழந்தையாக இருந்தீர்கள், நான் உங்கள் செல்ல குழந்தையாக இருந்தேன். ஒரு சிறந்த நண்பன் போல் என்னை வழி நடத்தினீர்கள் என்னை பலப்படுத்தினீர்கள் என் வெற்றியில் அகமகிழ்ந்தீர்கள். 

அத்தான் இது போன்ற சூழலை நான் தான் முதலில் சந்தித்தேன் என்று இல்லை.  ஆனாலும் உலகில் எனக்காக மட்டும் இருந்த உங்களை இழந்தது என் பூர்வ ஜென்ம பிழை தானே.  நான் ஓர் நல்ல பணியில் வர எவ்வளவு ஆசைப்பட்டீர்கள்.  அத்தான் ஒவ்வொரு நொடியும் உங்கள்  நினைவுகள் தான்.

என்னை நானாக நேசித்தீர்கள். என்னை நானாக வளர்த்தீர்கள். நான் விரும்பின புத்தகம், செடிகள் அளவிற்கும் அதிகமாகவே  வாங்கி தந்தீர்கள். நாம் பவுண்டர்மேட்டில் இருந்து கொண்டு வந்த மல்லிகைச்செடி  உங்கள் பிரிவை தாங்காது கரிந்து விட்டது. 

சாம் ஜோயலை உங்கள்  தோள் கொடுக்கும் உற்ற தோழனாக வளர்த்தீர்கள். அவனுக்கு கார் ஓட்ட கற்ற கொடுத்து கொண்டிருந்தீர்கள். ஜெரி எட்டாம் வகுப்பு போயும் அவனை சின்ன செல்ல குழந்தையாக நினைத்து சண்டையிட்டு கொண்டிருந்தீர்கள். பிள்ளை மெலிந்து விட்டான். இரவில் உங்களை எண்ணி அழுகின்றான். உங்கள்  உடல் தான் பிரிந்துள்ளது அப்பா ஆத்துமம், ஆவி நம்மிடமே உள்ளது என்று அவர்களை பலப்படுத்தி உள்ளேன். சாம் ஜோயல் மிகவும் கருத்துள்ளவனாக வெளியில் காட்டி கொண்டாலும் அழுது புலம்புகின்றான். அத்தான் ................அத்தான்...................பாபா அத்தான்.................உங்கள் தலையணை போன்ற வயிற்றில் கிடந்து என்று விளையாடுவோம்.

கடவுளுக்கு பிடித்தவர்களை விரைவில் அழைத்து செல்வார் என்ற ஆறுதல் என்ன தேற்ற மறுக்கின்றது. ஆனாலும் அந்நியாத்திற்கு நீங்கள் நல்லவராக இருந்து விட்டீர்கள், யாரிடமும் எந்த கோபம், பகை இல்லை எல்லா உறவுகளும் சேர்ந்து பார்க்க வேண்டும் என்ற அதீத ஆசை, உங்கள் தாய் மாமாக்கள் இருவரும் வந்திருந்தனர். உங்கள் பெரியப்பா மக்கள் மூன்று பேரும் வந்திருந்தனர். உங்கள் அமெரிக்காவில் இருக்கும் சகோதரியும் அலைபேசியில் ஆறுதல் அளித்தார். உங்களுக்கு மிகவும் பிடித்த  ராஜசேகர் மாமா கையில் தான் கடைசியாக கிடந்துள்ளீர்கள். எல்லோரும் உங்களை காண வந்திருந்தனர்.   தாயின், சகோதரனின் அன்பிற்கான ஏக்கம் தீர்ந்து விட்டதா? எட்டாம் தியதி, 14 ஆம் தியதி அங்கு நாசரேத் போய் மட்டன் குழம்புடன் சாப்பிட்டீர்களாமே? .................அத்தான் நீங்களே சரணம் என்றிருந்த நாங்கள் மூன்று பேரும் இனி என்ன செய்வோம்.


உங்க அப்பாவின் கடைசி சடங்கு கிரியையை நீங்களே செலவழித்த போது நீங்கள் எமாற்றப்பட்டதாக  நான் குற்றம் சுமர்த்தினேன், உங்களை பண்ணையார் என்று கேலி செய்தேன். அத்தான் உங்கள் கிரியை மிகவும் அருமையாக எந்த குறைவும் இல்லாது உங்கள் சகலன், உங்கள் மச்சினன் உங்கள் உற்ற நண்பர்களால் நடத்தப்பட்டது.  பத்தர் அண்ணா கரிசனையாக உங்களை விசாரித்து உள்ளார்,  உங்களை பற்றி முத்தாலக்குறிச்ச்சி காமராசர், தமயந்தி சைமன், வந்தியத்தேவன் போன்ற நண்பர்கள்  பதிந்துள்ளனர்.  சிவமேனகை சிறந்த கவிதை ஒன்று பரிசளித்துள்ளார், நரேன் அண்ணா சுபி அக்காள் நொறுங்கி போய் விட்டனர். அண்ணன் வாய்விட்டு அழுது விட்டார். உங்களை காண இந்த முறை   வர உள்ளனர். 

உங்கள் நண்பர்- சகோதரன் ரீகனிடம் தான் உங்கள் நிறுவனத்தை ஒப்படைத்து உள்ளேன். உங்கள் நண்பர்கள் உடைந்து அழும் போது உங்கள் நட்பை அன்பை தான் உணர்கின்றேன், குரு இன்னும் அழுது கொண்டே இருந்தார். நான் தான் ஆறுதல் கூறினேன். நான் மருத்துவமனை வந்தடையும் முன்பே உங்கள் நண்பர்கள் வெங்கடேஷ், சத்யா, டேவிட் ராஜா, ஞானப்பிராகசம் ஜெராள்ட் சார் போன்றோர் வந்தடைந்தனர். 

என் வேண்டுதலை ஏற்று நம் நண்பர் நாறும்பூ நாதன் , நம் பக்கத்து தெரு நண்பர் தினமலர் செய்தியாளர் முப்புடாதி போன்றோர் அங்கு நின்றிருந்தனர்.  
உங்களுக்கு ஏதோ பலமாக அடிபட்டிருக்கலாம் என்று அழுது புலம்பின என்னை, "திடம் கொள்ளுங்கள் சார் போய் விட்டார்" என்றதும் உலகமே மொத்தமாக என் தலையில் விழுவது போல் இருந்தது. நமக்கு இரு குழந்தைகள் மட்டுமல்ல என் மாணவர்கள்,  நம் சாம் ஜோயேல் நண்பர்கள் என  நூற்றுக்கிற்கு மேல் குழந்தைகள் அன்று உங்களை சுற்றி இருந்தனர். உங்களை தூக்கினது எல்லாம் அவர்களே.  குழந்தை மனம் கொண்ட நீங்கள் குழந்தைகள் அரவணைப்பிலே இருந்துள்ளீர்கள்.

அத்தான் நீங்கள் அமைதியை தேடி விட்டீர்கள். என் மனம் தான் வெந்து உருகுகின்றது.; என் இதயம் நொறுங்குகின்றது, உங்கள் ஆயிசு முடிந்து விட்டது என ஆசுவாசம் கொள்கின்றேன். நீங்கள் விரும்பின மாதிரி வாழ்ந்தீர்கள், நீங்கள் விரும்பின மாதிரி உங்கள் நிறுவனத்தை வளர்த்தீர்கள், கார் ,  பயணம், காமிரா, உறவினர்கள் , நண்பர்கள் என மகிழ்ச்சியாக இருந்தீர்கள்.  ஒரு நேரம் வேலை இல்லா திண்டாடிய நீங்களும் உங்கள் நிறுவனத்தில் மூன்று பேரை வேலைக்கமர்த்தும் நிலையை எட்டினீர்கள்.  உங்கள் பயிற்சியில் கற்ற பல இளைஞசர்கள் வெளிநாட்டிலும் உள்ளூரிலும் சிறப்பாக வேலை செய்து வாழ்கின்றார்கள் என்று பெருமை கொண்டீர்கள்    எந்நேரமும் பாட்டு கேட்டு கொண்டே உழைத்து வாழ்ந்தீர்கள்.  தூங்கும் நேரம் தவிர்த்து எப்போதும் ஏதோ ஓர் பணியில் உங்களை ஈடுபடுத்தி இருந்தீர்கள், உங்கள் மனைவி பிள்ளைகளை மிகவும் அழகாக நடத்தினீர்கள். உங்கள் பெற்றோரை ஆற்றலை மிஞ்சி, கடன் எடுத்தும் கூட மருத்துவ செலவை நடத்தி கொடுத்தீர்கள், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு மனம் உடைந்து கிடந்த உங்கள் சகோதரனுக்கு பல லட்சம் புரட்டி கொடுத்துள்ளீர்கள். உங்களை பழித்தவர்கள் கேலி செய்தவர்களை நான் வெறுத்த போது,  நீங்கள் உங்கள் அன்பால் ஆதரவால் உதவினீர்கள்.  இந்த விபத்தால் நானும் பிள்ளைகளும் மட்டுமே உங்களை இழந்தோம் என்றால் இல்லை. பலர் அழுது புலம்பினர். "நான் தெருவில் சாக என்று என்று நின்ற போது பாபா தான் கை கொடுத்து உதவினார் என்றார் உங்கள் ஓர் நண்பர்.  

கடந்த ஏழு நாட்களாக உங்கள் நண்பர்கள் உங்கள் பிரிவை விசாரித்து சென்று கொண்டிருக்கின்றனர்.  உங்கள் அம்மாவும் தம்பியும்  தான் ஜெபம் முடிந்ததும் விரைந்து மறைந்து விட்டனர். அது நாம் இருவரும் எதிர்பார்த்தது தான். பிரசவத்திற்கு 300 ரூபாய் கட்டு செய்வது போல், உங்கள் இழப்பிற்கு ஒரு சேலையும், இரண்டு கிலோ அரிசியும், 100 மிலி தேங்காய் எண்ணையும் கொடுத்து சரிகட்டினர். இதுவும் நாம் எதிர் பார்த்தது தான்.

உங்க முகத்தையாவது காண வேண்டும் என நம் உறவினர்கள் நடு இரவு இரண்டு மணி வரை வந்து கொண்டிருந்தனர். வண்டிப்பெரியாரில் இருந்து எல்லாரும் வந்திருந்தனர். ஆனால் உங்களை அழகாக பார்க்க வேண்டும் அது தான் என்னுடைய ஆசை. ஆதலால் உங்கள் முகம் அழகாக இருந்த போதே நான் விடை தந்து விட்டேன்.  ஒரு வேளை  நீங்கள் அதிசயமாக எழுந்து விடுவீர்களோ என்று நினைத்து  உங்கள் கண்ணை திறந்து பார்த்தேன். ஒரு கணம் நீங்கள் மீண்டும் எழுந்து வருவீர்கள் என பேராசை கொண்டேன். உங்கள் காலில் தொட்டு கும்பிட்ட போது உங்களில் கண்ட சிறு காயங்கள் என்னை  வேதனைப்படுத்தியது. நீங்கள் நான்கு மணிநேரம் உதிரம் சிந்தி இறந்தீர்கள் என்றதும் என் உயிரே நின்று விடும் போல் இருந்தது. ஆனாலும் நீங்கள் கடைசி நேரம் எந்த சித்திரவதையும் அனுபவிக்கவில்லை. உடன் இறைவினடம் சென்று விட்டீர்கள் என்றதும் தேற்றி கொண்டேன்.

எங்களை நினைத்து கொண்டு தான் இருப்பீர்கள், ஜெரியால் தான் ஜீரணிக்க இயலவில்லை. உங்கள் சகலன் "அண்ணா  தான்  உங்கள் தங்கையை எனக்கு தேடி தந்தார்  நான் செலவு செய்வதை எண்ணி கவலை கொள்ள வேண்டாம் அவர் என் சொந்த அண்ணன் என்றார். அண்ணி உங்களையும் பிள்ளைகளையும் நான் ஆதரவுடன் கவனிப்பேன் என்றார்". 

நீங்கள் கடைசியாக அணிந்து கழற்றி போட்டிருந்தது சுபி அக்காள் வாங்கி கொடுத்த சட்டை, நீங்கள் மரண நேரத்தில் அணிந்திருந்ததும் சுபி அக்காள் கொடுத்த டீ-ஷர்ட், நீங்கள் ட்றைய் வாஷுக்கு எடுத்து சென்ற ஓர் சேலையும் சுபி அக்காள் எனக்கு எடுத்து தந்த சேலை. அக்கா அக்கா என்று தாய்மை பாசத்துடன் அழைத்து வந்த சுபி அக்கா ஆசிர்வாதத்துடன் சென்றுள்ளீர்கள். சுபி அக்காவை சந்தித்தது முதல் தான் உங்கள் அம்மாவை நினைத்து ஏங்காது மகிழ்ச்சியாக இருந்தீர்கள். நம் சிங்கப்பூர் அத்தை கூறியுள்ளார்கள் பெப் 20 என்பது இந்து சகோதர்களை பொறுத்து புண்ணியமான தினமாம் அன்று இறப்பவர்கள் நேரடியாக இறைவன் உலகம் அடைந்து விடுவார்களாம். 

 அத்தான் நீங்கள் ஆசைப்பட்டது மாதிரியே  உங்கள் சபை கல்லறை தோட்டத்தில் வைத்துள்ளோம். இந்த முடிவை நான் தான் எடுத்தேன். எனக்காக நீங்கள் கல்லறையில் கூட தோற்க கூடாது. என் பாபா அத்தான் என்றும் கம்பீரமாக இருக்க வேண்டும். உங்களுக்கு அழகாக ஓர் இடம் கிடைத்துள்ளது. நீங்கள் விரும்பும் மார்கட் அந்தோணியார் ஆலயம் முன்புள்ள  சீவலப்பேரி ரோட்டில் செடிகள் அருகாமையில் உங்களுக்கு இடம் தேர்ந்துள்ளனர் உங்கள் நண்பர்கள்.  ஒரு வேளை நாசரேத் என்று உங்கள் தாய்க்கு விருப்பம்  இருக்குமோ என்று வினவினேன். அவர்கள். திருநெல்வேலி நோக்கி விரைந்து வந்து விட்டனர்.  உங்கள் மகன் சாம் ஜோயல் மிகவும் உறுதியாக , அப்பா நண்பர்கள் இருக்கும், அப்பா 12 வருடம் வாழ்ந்த திருநெல்வேலி மண்ணில் தான் இருக்க வேண்டும் என்றான். நாசரேத் கல்லறை தோட்டத்தை விட அழகான இடம் இது தான். நானும் உங்களை எந்நேரவும் சந்திக்கலாம். நீங்களும் நாசரேத்தை விரும்ப மாட்டீர்கள் எனத்தெரியும். வீட்டில் கத்தோலிக்க சபைப்படி தான் ஜெபம் நடந்தது.சகாயமாத ஆலய தந்தை எங்கள் கல்லூரி தந்தையர்கள் உங்களூக்காக ஜெபித்தனர். பின்பு ஆலயத்தில் சி. எஸ்.ஐ சபைப்படி ஜெபம் நடந்தது. அத்தான் உங்கள் ஓர் அக்காள் சொல்கிறார் "நான் முகநூலிலில் இட்ட படங்களை கண்டு கண் வீழ்ந்ததால் தான் போய் விட்டிர்களாம்" அப்போது தான் நினைவு வந்தது உங்கள் தகப்பானார் இறந்ததை நாம் அறிவித்த போது, "உங்கள் அப்பா என் அப்பா மரண கிரியைக்கு வராததால் நான் வருவதை என் தாயார் விரும்ப மாட்டார், உங்கள் வீட்டில் ஏதும் நிகழ்வு என்றால் பங்கு எடுத்து கொள்கின்றேன் என்றார். உங்கள் சகோதரன் நீங்கள் பெட்டியில் இருப்பதை பார்க்க விரும்பவில்லையாம் அதனால் அடுத்த  நாள் காலை நான்கு மணிக்கு வந்து சேர்ந்தார். உங்கள் குடும்ப சொத்து பங்கை கருணை அடிப்படையில் கொடுப்பாராம், நான் கூறினேன் அது என்னவருக்கு இழுக்கு சட்டப்படி சமபங்கை உங்க மகன்களுக்கு  கொடுக்க கூறினேன்.  எனக்கு நீங்கள் விட்டு சென்றது போதும்.

பாபா அத்தான் சொத்து, பணம் எல்லாம் ஒன்றுமில்லை. நாம் வாழ்ந்த வாழ்க்கை அழியாதது அந்த நினைவுகளுடனே நான் வாழ்ந்து விடுகின்றேன். நீங்கள் என்னை காணாது பரிதபிக்க வேண்டாம். உங்கள் கண்ணை திறந்து பார்த்தேன், அந்த விழியில்,  உங்கள் ஆன்மாவில் நான் தான் குடியிருக்கின்றேன் என்றது.  மிகவும் போராட்டம் கொண்டு நடத்தி சென்ற  அழகிய காதல் நம் வாழ்க்கை,!   கடந்த 19 வருடங்களில் ஒரு நாள் கூட பேசாது இருக்கவில்லை. நம் சண்டை அரை நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை.  அப்படி தான் பெல்ஸ் அத்தையும் கூறினார்கள் "காதல் பறவைகள் போல் சுற்றி வந்தீர்கள்" என்று. நீங்கள் உங்கள் மகன்களை குறித்து கொடுத்த வேலைகளை முடித்து விட்டு விரைவில் நான் உங்களிடன் வருவேன். நாம் பயணிக்க, கதைக்க , சண்டை போட நிறைய உள்ளது.  நீங்கள் உங்கள் நண்பனிடம் கூறினீர்களாமே " என் ஜோஸ் சண்டை போடாது இருப்பதே பயமாக உள்ளது என்று". உங்கள் பயம் தான் கொடியது. அதற்கு நீங்கள் காரணம் இல்லை என தெரியும்,  கடைசி நான்கு மாதம் நீங்கள் என் அறிவு இல்லாதே பல விடையங்கள் செய்து வைத்துள்ளீர்கள். நான் அதற்காக உங்களிடம் கோபப்படப்போவது இல்லை. அது நம் கர்ம வினை!  நீங்கள் இட்டு சென்ற செருப்பு உங்கள் லுங்கி, சட்டை எல்லாம் பொக்கிஷமாக எடுத்து வைத்துள்ளேன். அத்தான் கதைத்து கொண்டிருந்தால் நிறைய உள்ளது. தினம் உங்களிடம் பேசவேண்டும். நாம் கதைப்போம்.

http://avargal-unmaigal.blogspot.com/2016/02/baba.html
http://www.dinamalarnellai.com/web/districtnews/2412
http://www.dinamalar.com/news_detail.asp?id=1461507&Print=1
http://www.maalaimalar.com/2016/02/20130117/killed-by-a-car-collided-near.html
http://www.dailythanthi.com/News/Districts/Thirunelveli/2016/02/20192527/In-PlayankottaiCar-crash-Auditor-death.vpfகண்ணீர் அஞ்சலி...
Sundara Vandhiya Tevan R's photo.
சிவ மேனகை


விழிநீர் சுரந்து விடை இல்லா வினாக்களோடு
எழுதும் ஓர் கண்ணீர் அஞ்சலி ,,,,,,,
உறவுகளை தாண்டி எங்கள் உணர்வுகளுக்குள் வாழ்ந்தவர்
தொலை தூரத்தில் இருந்தும் உதவும் ஒரு உண்மை நட்பு
இன்று உணர்விழந்து எங்களை பிரிந்து சென்று விட்டார்
காலமும் காலனும் எங்கள் அன்பு ஜொசபீன் அக்காவுடன்
கதறி கதறி அழ எங்களை வைத்துவிட்டு - எங்கள்
பாபாவை பிரிந்தது என்றுமே தாங்க முடியாத துயரம்,,,,
உள்ளத்தில் இடியாய் விழுந்த ஒரு துயர செய்தி
கன்னத்தில் நீரை வழிந்தோட செய்த ஒரு வருந்தும் செய்தி
என்னென்று சொல்வது ஏங்கித்தவிக்கும் அக்காவுக்கு ஆறுதல்
பக்கத்தில் இருந்து பாசத்தை பொழிந்தவர் ,சட்டென்று
துக்கத்தில் விட்டுவிட்டு பிரிந்த துயரத்தை எப்படி தாங்குவா
பிள்ளைகள் கல்வியில் வளர்வில் முழுமூச்சாய் இருந்தவர்
இனி இல்லைஎன்று எண்ணும்பொழுது தாங்க முடியுமா துயரத்தை
துடியாய் துடித்து அழுகுரல் எழுப்பும் பாலன்களை இனி
வாழ்வில் சுமக்கும் தந்தை எப்போது வருவார் என்ற ஏக்கம்
நெஞ்சில் எழும் அத்தனை கேள்விகளுக்கும்
ஆழ்ந்துயில் கொண்ட பாபா அண்ணன் இனி வருவாரா ,,,
அவர் நினைவுகளே எங்களுடன் என்றென்றும் கூடவரும்
அவர் பசுமையான நினைவுகளே என்றென்றும் கூட வரும் ,,,,,
அவரது ஆத்மா இறைவன் திரு நிழலில் சாந்திபெற வேண்டும் என
வேண்டி பிரார்த்தித்து கண்ணீர் பூக்களை பாதத்தில் தூவி
மானசீகமாய் வணங்கி விடைபெறுகின்றோம் ,,,,,,
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ,,,,,,,
இங்கனம் கண்ணீர் பூக்களை தூவும்
பாபா அண்ணாவின் இழப்பினால் துயரில் தவிக்கும் சிவேமனகை குடுப்பமும் ஜொசபீன் அக்காவின் புலம்பெயர் முகநூல் உறவுகளும் ,,,,,,,

பாசமிகு.செல்வபாபா சவரிதாஸ் நெல்லையில் நடந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். பாபா கம்பீரமும்,கருணையும் ஒருங்கே பெற்ற சிறந்த மனிதர். நான் சில மாதங்களுக்கு முன்பு தூய சேவியர் கல்லூரியில் சிறப்புரையாற்றச் சென்றிருந்த பொழுது, நான் தங்கியிருந்த விடுதிக்கே வந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் கலந்துரையாடினார்.[அந் நிகழ்ச்சிக்கு ஜோஸ்பின் தான் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது] 
''எவ்வளவு படித்திருந்தாலும் என் மனைவிக்கு ஒன்னும் தெரியாது,அவ மண்ணு' என்று சொல்லி மகிழும் ஆண்களுக்கு மத்தியில் தன் மனைவியின் அறிவு விசாலமடையவும், அது சமூகத்திற்கு பயன்படவும் ஊன்றுகோலாக இருந்தவர். மனைவியை அழகுப்படுத்தி பார்க்கின்ற கணவர்கள் மத்தியில் மனைவியின் ஆளுமையை வளர்த்தெடுத்து அழகு பார்த்த அற்புத மனிதர்.அவரின் இழப்பு அவர் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல மனித நேயமிக்க எல்லோருக்குமான இழப்பாகும்.சகோதிரி ஜோஸ்பின் மீண்டெழுந்து பாபாவின் விருப்பப்படி மீண்டும் அதே கம்பீரத்தோடு பயணிப்பதே அவருக்குச் செலுத்துகின்ற ஒரே அஞ்சலி.நானும்,தம்பி நெல்லை அப்துல் ஜாபரும் அவரின் இல்லத்திற்கே சென்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்தோம்.
நான் இந்த செய்தியை பார்த்து அதிர்ந்தே போனேன்.
வார்த்தைகள் வரவில்லை.
நான் சகோதரி ஜோசப்பினுடன் தொலைபேசியில் அதிகம் பேசியிருக்கிறேன். ஒருமுறை அவர் கணவருடனும் பேசியிருக்கிறேன். இந்தியா வரும் போது ஒருமுறை வாருங்கள் என்று கூட சொன்னார். நினைத்து பார்த்தால் கடினமாக இருக்கிறது. குடும்பத்தினரின் துக்கத்தில் நானும் ஒருவனாக இணைந்து கொள்கிறேன். பாபாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.வார்த்தைகள் வரவில்லை.


Subi Narendran 
 சொல்ல முடியாத அளவு சோகத்தோடு இதனைத் தெரிவிக்கிறேன். அன்பு மனைவி ஜோவையும், சாம், ஜெரி என்ற இரண்டு மகன்களையும் தவிக்க விட்டு மறைந்து விட்டார். மிகவும் அன்பான கணவனும் தகப்பனும் ஆவார். பாபாவின் அன்பை வார்த்தையால் சொல்ல முடியாது. மூச்சுக்கு மூச்சு அக்கா அக்கா என்று சொல்லும் குரல் என் செவியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
பாபாவின் ஆன்ம சாந்திக் காகப் பிராத்திக்கிறேன். ஜோவுக்கும் குழந்தைகளுக்கும் இந்தக் கஷ்ட வேளையில் கடவுள் துணை இருக்க வேண்டும்.

Our family friend Baba (Selvababa) from Thirunelveli, South India passed away today morning in an accident. My heart felt condolences to their family & friends. May his soul rest in peace. He will be in my thought & heart always


Muthalankurichi Kamarasu 

எனது அன்பு சகோதரிக்கு நடந்த சோகத்தினால்இரண்டு நாள் வேறு வேலையே செய்ய முடியவில்லை
அன்பு சகோதரி ஜோஸ்பின் பாபா. சேவியர்கல்லூரி பேராசிரியர். எனது மகன் அபிஷ்விக்னேஷ்க்கு முதலாமாண்டு பொறுப்பாளர். ஒரு நாள் நான் எழுதிய நெல்லை ஜமீன்கள் நூலுடன் கல்லூரி வகுப்புக்குள் நுழைய, அதன் நூலாசிரியர் நான் தான் என்று என் மகன் மூலம் தெரிய, என்னை சந்திக்க தனது கணவர் பாபாவுடன்செய்துங்கநல்லூரில் உள்ள வீட்டுக்கு வந்தார்.
வந்தவர்கள் எனது குடும்ப நண்பர்களாவே மாறிவிட்டார்கள்.
ஏதோ என்னுடன் பிறந்து வளர்ந்தவர் போலவே எங்கள் குடும்ப உறவினராகி விட்டார்கள்.
பாபாவும் நல்ல சுறுசுறுப்பானவர். ஆடிட்டர். எனது புத்தகங்களை படித்து கருத்து சொல்லும் வாசகர். கடந்த 20.11.2015 அன்று நெல்லை மதிதா இந்து மேல்நிலைப்பள்ளியில் நடந்த என்னுடைய புத்தக வெளியிட்டு விழாவிற்கு தனது அலுவல் இடையில் வந்து வாழ்த்து கூறி. என்னை கௌரவ படுத்தினார்.
பாபா தனது மனைவி ஜோஸ்பின் உயர்வுக்காக பாடுபடுபவர். சகோதரி ஜோஸ்பின் போட்டோ கிராபிக் ஆசைக்காக அவர் நெல்லை வீக்லி கிளப்புடன் மனைவினை அழைத்துக்கொண்டு அனைத்து இடங்களிலும் சென்று சுற்றி வந்தவர். சொல்லப்போனால் அந்த கிளப்பை எனக்கு அறிமுகம் செய்ததே பாபா தான்.
சகோதரி தனது சிறுகதை தொகுப்பு நூலில் அடிக்கடி அத்தான் என்றவொரு கதாபத்திரத்தில் பாபாவை சித்தரிப்பார். அந்த அத்தான் அவரது கணவர்தான் என்பதை படித்து முடிந்தவுடன் அறிந்து விடலாம். முக நூல் மூலமாக மிகப்பெரிய எழுத்தாளர்களோடு எல்லாம் தொடர்பு கொண்டவர் சகோதரி. அவருக்கு பக்கபலனாக இருந்து உதவி புரிந்தவர் அவரது கணபர் பாபா. இருவரும் இணைப்பிரியாத தோழர்கள்.
நம்பவே முடியவில்லை. நேற்று காலை 8 மணிக்கு கே.டி.சி.நகர் விபத்தில் பாபா சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் என்ற செய்தியை நான் பத்திரிக்கை நண்பர்கள் வாயிலாக கேட்டபோது என்னால் நம்ப முடியவில்லை. நானும், நண்பர் பரமசிவனும் பாளை மேட்டுதிடல் மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு அவரின் உறவினர்களை விட நண்பர்கள் அதிகம் பேரை கண்டேன். என் குடும்பத்தில் பழகியது போலவே நண்பர்கள் பல குடும்பங்களில் குடும்பநண்பராகவே பழகி இருக்கிறார் பாபா.
வழக்கு பதிவு செய்ய நெல்லை சந்திப்பு டிராபிக் காவல் நிலையத்தில் மகன் உள்ளார் என்று தகவல் கிடைத்தது. அங்கு சென்றோம். பாபா£வின் மனைவி சகோதரி கணவரும் தூத்துக்குடி துணை தாசில்தாருமான பிரபாகரன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார். அவர்களின் மூத்த மகன் பிளஸ் டூ மாணவன் அவரோடு இருந்தான்.
அவனும் தகப்பனார் போல நல்ல நண்பர்கள் வைத்திருந்தான். அவனின் பள்ளி மாணவ தோழர்கள் அனைவரும் அவனின் தோளோடு தோளாகவே நின்று அவனுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார்கள்.
அனைத்து பணிகளையும் முடித்து மாலை 3 மணிஅளவில் போஸ்ட் மார்ட்டம் முடித்து அனுப்பினார்கள். பிரபாகரன் சாருக்கு உதவியாக அது வரை கூடவே இருந்தேன்.


எப்போதும் அத்தான், அத்தான் என்று அவரோடு நின்று புன்சிரிப்போடு வரும் சகோதரி ஜோஸ்மின், இன்று தனியாக பாபா உடலை பார்த்து கதறி அழும் காட்சியை பார்க்க வேண்டுமா...? என்னால் முடியவில்லை. எனவே அவர் வீட்டுக்-கு செல்ல எனக்கு மனம் வரவில்லை.
நானும் சராசரி மனிதன் தானே. 25 வருடமாக பகுதி நேர நிருபராக பல விபத்துகளையும் உடலையும் பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு மனதுக்கு பிடித்து, என்னோடு வாழ்ந்த பாபாவின் உடலை என்னாலே பார்க்க முடியவில்லை. என் அன்பு சகோதரி எப்படி பார்க்க போகிறாரோ...
அப்படியே வீட்டுக்கு வந்து விட்டேன். "ஆண்டவனே.. என் சகோதரிக்கு ஆறுதல் தா... ஆதரவு தா.."
இரண்டு பையனும், இந்த மண்ணுலகில் சிறந்தவர்களாக விளங்க அருள் புரிவாயாக.. அவர்களுக்கு நல்ல கல்வி வேண்டும்.
ஆண்டவனிடம் பிராத்தனை செய்வோம்
கண்ணீர் அஞ்சலி...
Srikandarajah கங்கைமகன்'s photo.
திரு பாபா அவர்களது அகால மரணச் செய்தி கேட்டு ஆறாத்துயர் அடைந்தோம் பிறப்பும் இறப்பும் நிட்சயிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் அகால மரணம் என்பது தாங்க முடியாத வேதனையை அளிக்கின்றது. மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் இடையில் விட்டு இறையடி சேர்ந்தது அவரது குடும்பத்திற்குப் பேரிழப்பாகும். திருமதி பாபா அவர்களுக்கும், அவர்களது இரண்டு பிள்ளைகளுக்கும் ஆண்டவன் வாழ்க்கையில் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்து நிறைவாக வாழவைக்க வேண்டும் என இறைவனை வேண்டுகின்றோம்.
இன்று நண்பர் பாபா மரணித்துவிட்டார் என்ற தகவல் அறிந்து அதிர்ந்துபோனோம். அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீள முடியவில்லை. 
ஈழத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நூற்றுக் கணக்கான நட்புகளைத் தேடிக் கொண்டவர்கள் நண்பர் பாபாவும், ஜோசபினும்.
நட்பு பேணுவதிலும், முகமலர்ச்சியோடு உபசரிப்பதிலும் எம்மைத் தம் வசமாக்கிக் கொண்ட அழகிய குடும்பம். இவர்களது அன்பான அழைப்பின் பேரில் தமிழகம் சென்று நட்புக் கொண்டாடிய நண்பர்கள் பலர். ஈழத்திலிருந்து தமிழகம் செல்லும் நண்பர்களுக்கு தன்நலம் கருதாமல் பணிகள் செய்து தருவதில் எப்போதும் முன்நிற்பார்கள்.
தமிழகம் செல்லும் நமது பல நண்பர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுப்பதில் இவர்களது குடும்பம் சலித்ததேயில்லை. இந்தப் பேரிழப்பு எமது நண்பர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தோழி ஜோசபினுக்கு ஆறுதல் சொல்லும் பலம் எமக்கு உண்மையில் இல்லைத்தான்.
நண்பரின் இழப்பால் துயருறும் தோழி ஜோசபினுக்கும் பிள்ளைகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பர் பாபாவுக்கு எமது துயர் நிறைந்த கண்ணீர் அஞ்சலியும்.இன்று பாபா இறந்தது கேள்விப்பட்டு அழுகை வந்தது ... ஜோசெப்பின் இலங்கைத் தமிழர்கள் பலரை அண்ணாமார்களாகக் கொண்டு மிக அன்பாக பழகுவார் . அவரின் கணவரின் அன்பால் உபசரிப்பால் உச்சி குளிர்ந்தவர் பலர் .. இன்று அவரின் கணவர் பாபா இறந்தது மிகவும் கவலையும் அழுகையும் தருகிறது ..முகப்புத்த நட்பில் மிகவும் பிடித்தவர் ... அவர்கள் இருவருடனும் சில தடவைகள் தான் இணையங்களுடாகக் கதைத்தேன் ..எப்பொழுதும் குடுமபத்துடன் இந்தியாவுக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுவார்கல் ..இந்தக் கோடை விடுமுறை செல்லலாம் என்றும் எண்ணினேன் .... இப்படிநடந்து விட்டதே அவரின் இழப்பால் துயருரும் மனைவி பிள்ளைகளுக்கும் , உறவுகளுக்கும், என்போன்ற நட்புகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும்.
Kumar Sankaralingam Really unfortunate to hear this bad news,such a wonderful person, My heartfelt condolences to the family, may God give courage to come-out of this sudden lose. May his soul RIP.

ூற்றுக் கணக்கான நட்புகளைத் தேடிக் கொண்டவர்கள் நண்பர் பாபாவும், ஜோசபினும்.
நட்பு பேணுவதிலும், முகமலர்ச்சியோடு உபசரிப்பதிலும் எம்மைத் தம் வசமாக்கிக் கொண்ட அழகிய குடும்பம். இவர்களது அன்பான அழைப்பின் பேரில் தமிழகம் சென்று நட்புக் கொண்டாடிய நண்பர்கள் பலர். ஈழத்திலிருந்து தமிழகம் செல்லும் நண்பர்களுக்கு தன்நலம் கருதாமல் பணிகள் செய்து தருவதில் எப்போதும் முன்நிற்பார்கள்.
தமிழகம் செல்லும் நமது பல நண்பர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுப்பதில் இவர்களது குடும்பம் சலித்ததேயில்லை. இந்தப் பேரிழப்பு எமது நண்பர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தோழி ஜோசபினுக்கு ஆறுதல் சொல்லும் பலம் எமக்கு உண்மையில் இல்லைத்தான்.
நண்பரின் இழப்பால் துயருறும் தோழி ஜோசபினுக்கும் பிள்ளைகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பர் பாபாவுக்கு எமது துயர் நிறைந்த கண்ணீர் அஞ்சலியும்.

நெருங்கிய மரணம் தரும் நெருக்கடி!கடந்த நாலு மாதங்களில் என் மூன்று மாணவர்களின் பெற்றோர்கள் நோய் வாய்ப்பட்டும், எதிர்பாராத விதமாகவும் இறந்து விட்டனர்.  குழந்தைகள் எல்லாவகையிலும் தன் பெற்றோரை சார்ந்து இருக்கும் வேளையில் அவர்கள் பெற்றோரை இழப்பது மாபெரும் துயரேஒரு மாணவியின் தகப்பனாரே கவனித்துள்ளேன். தினம் தனது இருசக்கர வாகனத்தில் வந்து தன் மகளை கல்லூரியில்  விட்டு சென்று அழைத்து செல்பவர்.   மதிப்பெண் சாற்றிதழ் பெற்று செல்வதுடன்  மகள் விடையத்தில் மிகவும் அக்கறையுள்ள பொறுப்புள்ள தகப்பனார். மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி நம்பவே இயலவில்லை. அவளை சந்திக்க சென்ற போது  நண்பர்கள் உறவினர்கள் சூழ பாதுகாப்பான சூழலில் இருந்தால் கூட அவள் கண்ணில் இருந்து மாலை மாலையாக வீழ்ந்த கண்ணீர் என்னை வதைத்தது. அதன் பாதிப்பில் இருந்து அவர் குடும்பம் மீண்டு வர ஒரு மாதம் பிடித்தது.  

ஒரு மாணவர் மிகவும் அமைதியானவர், கொடுக்கும் வீட்டு பாடங்களை மறக்காது செய்து வருபவர் சரியாக கல்லூரி நேரம் வந்து பாடங்களை காத்திரமாக கவனித்து குறிப்புகள் எழுதி வைத்து படித்து சரியாக தேர்விலும் கலந்து கொள்பவர்.  புகைப்படகலையில் வேறு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசு பெற்றாலும் அதை இயல்பாக எடுத்து கொள்ளும் அமைதியான சுபாவம். இப்படியான இயல்பாகவே பொறுப்பான மாணவர்கள் ஆசிரியர்களுக்கு என்றும் மறக்காத,  விருப்பத்திற்குரிய மாணவர்களாகவே இருபார்.  பகுதி நேரமாக பணி செய்து வரும் மாணவன் என்று அறிந்த போது அவர் பொறுப்புணர்ச்சியில் மேலும்  மதிப்பு சேர்ந்து உருவானது

அவர் தகப்பனார் கான்சரினால் நோய் வாய்பட்டு இறந்த செய்தி அறிந்து அவர் வீடு தேடி சென்றேன்.  வீட்டின் மூலையில் நெற்றியில் ஒன்றைய் ரூபாய் நாணயத்துடன்  ஓர் கதிரையில் உட்காரும் நிலையில் வைத்திருந்தனர்.  அவர் அம்மா என் கையை பிடித்து கொண்டு கடைசி நேரம் மகனை பார்க்க தான் விரும்பினார். பார்க்காது போய் விட்டார் என்று அழுது புலம்பி கொண்டிருந்தார். என் தம்பி ரொம்ப வருத்தப்படுவான் அவனுக்கு ஆறுதல் சொல்லுங்கள் அவன் அக்கா அழுகின்றார்.  மாணவரை நோக்கினேன் அவனுக்கு ஆறுதல் கொள்ள கூட நேரமில்லை அரசு அலுவலகம் அனுப்புகின்றனர், கடைசி கிரியைக்கான துணிகளை வாங்கி வர கூறுகின்றனர். அவன் அப்போதும் தன் நிலை தவறாது எல்லா கவலைகளையும் மனதில் வைத்து கொண்டு சலனமற்று செல்வதை கேட்டு செய்து முடிக்க தயாராக நிற்கின்றார்.  

வேலை, சூழல் காரணமாக நகரங்களை நோக்கி நகரும் போது இது போன்ற துன்ப சூழலில் தனித்து விடப்படும் சூழலே நகர சமூகத்தில் நிலவுகின்றது. யாரையும் கருதலுடன் நோக்கும் மனநிலை இன்று அரிதாகி வருகின்றது என்ற நினைப்பில் நானும் என் பணிக்கு செல்லும் நேரமானதால் உடன் விடை பெற்று வந்தேன்!


இரண்டு வாரம் கூட கடக்கவில்லை எங்கள் மாணவியின் தாயார் நீரழிவு நோயால் இறந்து போனார். ஏற்கனவே தகப்பானார் மூன்று வருடம் முன்பே மரித்து விட்ட நிலையில் ஒரு சகோதரி வேலைக்கு போக, இளையவர் எங்கள் துறையில் படித்து வந்துள்ளார். செய்தி கேள்விப்பட்டதும் காலை 7 மணிக்கு கிளம்பி அவர் ஊர் 8.30 மணிக்கு சென்று சேர்ந்தோம். நான் பயணித்தது எங்கள் வீட்டு காரில் அதுவே ஓர் நெடிய பயணமாக பட்டது. நம் மாணவர்கள் கல்வி கற்க என இவ்வளவு தொலைவில் இருந்து நெடிய பயணம் மேற்கொண்டு வருகின்றனரே என்பதை நினைக்கவே மலைப்பாக இருந்தது. அவர்கள் வகுப்பறையில் சிரிப்பதும் சேட்டைகள் செய்வதையும் கடந்து ஓர் கடினமான சூழலில் இருந்தே வருகின்றனர் என்பது வருந்த செய்தது

பொதுவாக நான் மாணவர்களிடம் ஓர் குறிப்பிட்ட இடைவெளி வேண்டும் என்றே ஏற்படுத்தி கொண்டே என் பணியை செய்து வருகின்றேன். என்னை கண்டதும் என் மாணவி என் மடியில் கிடந்து அழுதது மறக்க இயலவில்லை. இளம் மகள்களுக்கு இருந்த ஒரே உறவு அம்மாவையும் இழந்ததை அவர்களால் தாங்க கொள்ள இயலாது அந்த காலை வேளையில் அவர்கள் கதறி கதறி அழுதது என் நெஞ்சயை அடைப்பது போன்று உணர்ந்தேன். “அம்மா உன்னை விட மாட்டோம் … நீ உயிரோடு வா நீ சாகவில்லை” என அழுத போது அவர் அம்மா முகம் உறங்குவது போலவே தோன்றினது. ஆஸ்பத்திரியில் நோயாளி இறந்தார் என்று அறிந்ததும் முழு பணவும் கட்டிய பின்பே உடலை கொடுத்துள்ளனர். இது போன்ற அவசரத்தேவைகளுக்கு கடன் பெற நம் சமூக சூழலில் கந்து கட்டிகாரர்கள் தவிற யாரும் முன் வருவதில்லை என்பதும் காலக்கொடுமை. 


என் அம்மாவிடம் வந்து பேசின பின்பு தான் என் மனத்துயரம் ஓரளவு ஓய்ந்தது. இந்த வயதிலும் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு பொழுதும் அம்மாவின் நினைவுகள் வராது இருப்பதில்லை. இந்த குழந்தைகளை எண்ணி துயர் பீறிட்டு எழுந்தது. ஒரு புறம் தாயை பல ஆஸ்பத்திரிகளில் வைத்து வைத்தியம் செய்த கடன், படிப்பு செலவு, எல்லாம் தானாக நோக்க வேண்டிய சூழல். எல்லாம் நினைக்க நினைக்க மலைக்க வைத்தது. இருப்பினும்  என் மாணவி விரைவில் கல்லூரி வந்து சேரவேண்டும் என  மன முகந்து இறைவனை வேண்டி கொண்டிருந்தேன்.

தேவையான மன உறுதியை, நம்பிக்கையை வார்த்தையால் கொடுக்க முயல்கின்றோம் ஆனால் செயல்வடிவத்தில் உதவ கையாலாகாத நிலையில் தான் என்னை போன்ற ஆசிரியர்கள் உள்ளனர் என்பது மனதை நெருடுகின்றது. வெறும் வார்த்தைகளால் ஆறுதல் கூறி ஓர் வகையில் நாம் ஏமாற்ற தான் செய்கின்றோம் என்ற எண்ணம் வதைக்கின்றது. ஆசிரியை பணி என்பது வெறும்  புத்தகங்களோடு மட்டுமான அறிவாற்றல் சார்ந்த பணி மட்டுமல்ல  உயிருள்ள மனிதர்களிடம் நம் மனித நேயத்தை செயல்வடிவத்தில் காட்ட வேண்டிய பணி. பல பொழுதும் ஏமாற்றமே  மிஞ்சுகின்றது

இளைஞசர்கள்  இந்த சமூகத்தை மிகவும் நேர்மறையுடன் மிகவும் நேசத்துடன் நோக்குகின்றனர். இந்த சமூகத்தை பற்றிய  உண்மையான பிரஞ்சை உண்டு.  சகமனிதன் மேல் அதீத அன்பு உண்டு என்று அவர்கள் முதல் பருவத்தில் வருப்புகள் எடுக்கும் போதே கண்டு நெகிழ்ந்துள்ளேன்.  ஆனால் சூழலின் நெருக்கடி இளம் மனிதர்களை மாற்றம் செய்து விடும் என்ற ஆதங்கமும் என்னை துன்புற செய்கின்றது. அவ்வகையில் தான் உதவி என்று நாடிய போது என் முதல் வருட மாணவர்கள் நாங்கள் உள்ளோம் என என்னுடன் சேர்ந்து   செயலாற்ற நினைத்தனர்.  அதுவெல்லாம் ஓர் கனவு என்றதும் நான் நொறுங்கி போய் விட்டேன். ஆனால் பெரியவர்கள் எவ்வளவும் வேதனைப்படலாம் நொறுங்கலாம் தளரலாம் ஆனால் இளம் தளிர்கள் வாடக்கூடாது என்று மட்டுமே என்னால் இப்போது நினைக்க முடிகிறது