header-photo

தற்கொலையை கொண்டாட வேண்டாம்!

சமீபத்தில்   ஐதராபாத் பல்கலைகழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை மிகவும் வருந்த தக்க செயலாக அமைந்தது..  

உலக அளவில் தற்கொலை செய்து கொள்ளுபவர்கள் அதிகம் வசிக்கும் தேசம் நம் இந்தியாவாகவே உள்ளது. உலக சுகாதார தரவுகள்படி  வருடம் ஒரு லட்சம் பெயர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வது தெரிய வருகிறது. இதில் பெரும்வாரியானோர் 19-30 வயதிற்கு உட்பட்ட இளைங்ஞர்கள் ஆவர் என்பது இன்னும் துயர் தரும் உண்மை செய்தி!

 40 நிமிடத்திற்கு ஒரு நபர் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிடுகின்றனர். India-has-highest-number-of-suicides-in-the-world-WHO/articleshow/41708567.cms மாநிலங்கள் அளவில் எடுத்து கொண்டால் பாண்டிச்சேரி, சிக்கிம், தமிழகம், கேரளம் என்ற வரிசையில் உள்ளனர்.  மிகவும் குறைவாக தற்கொலை செய்து கொள்பவர்களின்  மாநிலமாக பீகாரை காட்டுகின்றது தரவுகள். Indian_states_ranked_by_suicide 


பல கேள்விகள் எழுப்பும்  ஓர் ஆராய்ச்சி மாணவரின் மரண காரணம்  ஒரு தலிது மாணவரின் ஜாதிய ஒதுக்குதலால் உருவான  மரணம் என்று சுருக்குவது பல உண்மைகள் வெளி  வர தடையாக அமையும். கடந்த நாலு வருடங்களில் 18க்கு மேற்பட்ட தலிது மாணவர்கள் இந்தியாவின் புகழ் பெற்ற  எய்ம்ஸ், கான்பூர் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது செய்திகள்.  

 மரண காரணம் பின் தங்கிய ஜாதிய  அடக்குமுறை என்ற ஒன்றை நோக்கில் இல்லாது,  இந்தியாவின் உயர் கல்வி பெறும் பல்கலைகழகங்களில் நிலவும் கல்வி நிலையை பற்றி ஆராய வேண்டியுள்ளது.   இத்தற்கொலையை அரசியல் கட்சிகள் தாங்கள் ஆதாயங்களுக்காவும் ஜாதிய அமைப்புகள்: தங்களை வாதங்களுக்கு வலு சேர்க்கவும் என்று பாராமுகமாக பயன்படுத்தாது பொதுவாக   கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் ஆராய்ச்சி மாணவர்கள் எதிர் கொள்ளும் பல பிரச்சினைகளை ஆராய வேண்டியுள்ளது. 


ஒரு ஆராய்ச்சி  மாணவருக்கு ஏழு மாதம் ஊக்கத்தொகையை  கொடுக்காது இருந்ததும் பொதுவான பல்கலைகழக வாய்ப்புகளை பயண்படுத்த தடை விதித்ததும்  ஆசிரியர் அல்லது குரு நிலையில் இருக்கும் பல்கலைகழகம் மாணவ சமூகத்திடம்  இளம் இந்திய பிரஜையிடம் காட்டிய மாபெரும் அநியாயமாகும்.  இது போன்ற தண்டனையை வகுப்பது பல்கலைகழக எவ்வித சட்டப்பிரிவு என்றும் நோக்க வேண்டியுள்ளது. இந்தியா போன்ற ஓர் ஏழை நாட்டில்  தினம் 27 ரூபாய் கூட சம்பாதித்து தன் உணவை மேற்கொள்ள இயலாத சூழலில் தினம் 8-12 மணி நேரம் கூட உழைத்தால் கூட 25 ஆயிரம் மாத ஊதியம் பெறும் நிலை இல்லாத நாட்டில் ஊக்கத்தொகையாக மாதம் 25 ஆயிரம் பெற்று படிக்க வாய்ப்பு பெற்ற மாணவர் "என் மரணத்திற்கு யாரும் காரணம் அல்ல நானே, என் உடல் வளர்ச்சிக்கும்  ஆன்ம வளர்ச்சிக்கும் இடையே நிறைய ஏற்ற தாழ்வு இருப்பதாக உணருகிறேன். அது என்னை விகாரப்படுத்தி விட்டது"  என்ற எழுதி வைத்ததையும் ஆராயவேண்டியுள்ளது.  கல்வி என்பது உயர் கல்வி என்பது மனிதனை விகாரப்படுத்தும் சூழலையா உருவாக்குகின்றது என்ற கேள்வியும் எழாதில்லை?  பாரபட்சமான இத்தகைய  சூழலை எதிர் கொண்டு வெறுத்து போய் தற்கொலை செய்து கொள்ள நினைத்த மாணவர் எதனால் தன் மரணத்திற்கு யாரும் காரணமல்ல என்று குறித்து வைக்க வேண்டும். தன் வாழ்வின் கடைசி நிமிடம் எல்லா நண்பர்களிடமும் எதிராளிகளிடமும் சமரசப்பட்டு கொண்டு மரணிக்க நினைத்தது எவ்வகை சமூக நீதியாகும். ஏதோ தன் மரணத்தின் மூலமாவது  பல்கலைகழங்களில் நிகழும் சூழலை வெளிக்கொண்டு வராது மறைத்து வைத்து கொண்டு மரணத்திற்கு தத்துவாத்வமாக சில கட்டமைப்புகளை உதிர்த்து விட்டு தன் உயிரை எடுத்து கொண்ட காரணம் என்ன? 


தற்கொலை செய்து கொண்ட மாணவருக்காக வாதாடுபவர்கள் கூட தலிது என்ற ஒரே நேர்கோட்டில் பல்கலைகழக அபத்தங்கங்களை மறைக்க பார்க்கின்றனர்.  கல்வி நிலையங்களில் மாணவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் நேரடியாக மத்திய அரசுக்கு உண்டா? எதனால் ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டது,  இதுவே  மாணவர்களுக்கான தண்டனையா என்றும் ஆராய வேண்டியுள்ளது. ஆராய்ச்சி படிப்பிற்கு அடி எடுத்து வைத்த மாணவர் இந்திய கல்விய சூழலில் உயரிய படிப்பை எட்டிய மாணவர் தான் நினைத்தது போல் சூழல் நிகழவில்லை என்றதும் தற்கொலை செய்து கொண்டது எவ்விதத்திலும்  சரி ஆகாது. அப்பல்கலைகழகத்தில் படிக்கும் மற்று தலிது மாணவர்கள் நிலையும்  இத்தருணத்தில் நோக்க  வேண்டியுள்ளது. 


தற்கொலை என்பது எக்காரணம் கொண்டு எச்சூழலிலும் ஓர் சமூக குற்றமே. இந்நிலையில் உயர் கல்வி கொண்ட மாணவர் எடுத்த முடிவு கல்வி கற்பவர்களின் மனநிலையை   சுய பலத்தை  உரசி பார்க்கின்றது.  இது போன்ற தற்கொலை மரணங்களுக்கு தற்கொலை செய்து கொள்ளுபவர்களின் புகைப்படத்துடன் செய்தி வருவதும் அவர்களை கோழை என்று அல்லாது கதாநாயகன் போன்று செய்திகள் தருவதும் இது போன்ற நிலையில் உழலும் பல இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும்.  இது போன்ற தற்கொலைகள் விளம்பரமாக அல்லது ஆயுதமாக இளம் மாணவர்கள் எடுத்து கொள்ளும் சூழல் உருவாகும்.

ஆராய்ச்சி மாணவர்களுக்காக பிரச்சினைகள்

பல பொழுதும் ஆராய்ச்சி மாணவர்கள் எதிர்கொள்ளும் தலையான பிரச்சினை அவர்களுக்கு அரசில் இருந்து கிடைக்கப்பெறும் ஊக்கத்தொகை சரியாக கிடைக்காது இருப்பது தடுத்து வைப்பது தேவையான தொகை கிடைக்க பெறாது இருப்பதும் காலதாமதமாக கிடைப்பதும் ஆகும். 

ஆராய்ச்சிக்கு  தேவையான வழிகாட்டி பேராசிரியர்கள் கிடைப்பது மாபெரும் பிரச்சினையாக உள்ள போது; சில மாணவர்களுக்கு ஆராய்ச்சி துவங்கிய பின்பு தங்கள் வழி காட்டி பேராசிரியர்களை சரிக்கட்டுவதே பெரிய பிரச்சினையாக உள்ளது. பல ஆராய்ச்சி மாணவர்கள்; தங்கள் வழி காட்டி ஆசிரியர்களின் வீட்டு கழிவு தொட்டியை கழுவது துவங்கி சந்தைக்கு  சென்று காய்கறி வாங்கி வரும் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் முனைவர் படிப்பு  காலம் என்பது தங்கள் ஆராய்ச்சி படிப்பை விட ஆராய்ச்சி ஆசிரியர்களுக்கு சேவகம் செய்வதிலே கடந்து  விடும். தங்கள் இயல்பான ஆர்வம் கொண்ட ஆராய்ச்சிக்கு தடை இட்டு ஆராய்ச்சி வழிகாட்டிகளின் பார்வையில் தடைகள் உருவாகும் சூழலும் உண்டு.  பல பொழுதும் முனைவர் பட்டம் பெற    ஏழு வருடங்களுக்கும் மேல் ஆகுவதால் எடுத்த தலைப்பே காலகரணப்பட்டு போய் படிப்பை இடையில் நிறுத்தும் சூழலும்  ஆராய்ச்சி படிப்பில் ஆர்வம் அற்று போகும் சூழலும் உண்டு. பல ஆராய்ச்சி மாணவர்கள் பல லட்சங்களை புரட்டினாலே ஆராய்ச்சி படிப்பை முடிக்க இயலும்.   வழி காட்டிகளுக்கான பல சிலவுகள் ஆராய்ச்சி மாணவர்கள் தலையில் தான் பல பொழுதும் விடியும்.

ஆராய்ச்சி மாணவர்கள் பல்கலைகழக பொது கல்வி சூழலில் இருந்து தனிமைப்பட்டு  ஆராய்ச்சி தொடரும் சூழலும் நிலவுகின்றது.  மேலும் தாங்கள் கல்வி கற்கும் பல்கலைகழக்ங்களுடனும், தங்கள் வழி காட்டி ஆசிரியர்களிடம்  சுமுகமல்லாத பூசல் உருவாகும் சூழலும் உருவாகின்றதும் சகஜமாக நிகழ்கின்றது.
,
ஆராய்ச்சி படிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட புலனில் சிறப்பு பெற்றவர்கள் தொடரும் படிப்பாகும். தற்போது ஆராய்ச்சி படிப்பிற்கு குறிப்பிட்ட  தேர்வுகளில் தேர்வாகுபவர்களுக்கும், ஆராய்ச்சி வழிகாட்டிகளுக்கு பிடித்தமானவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கின்றனர். ஆராய்ச்சி என்பது குறிப்பிட்ட பாடத்தில் புலமை பெற்றவருக்கு அனுபவ அறிவுள்ளோருக்கு வாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவானால் தரம் உயரும். தற்போது ஆராய்ச்சி படிப்பு என்பது பட்டப்படிப்பு மூன்று வருடம்  மேல்பட்டபடிப்பு  இரண்டு வருடம்,  முனைவர் பட்டம் மூன்று வருடம் என்ற வரிசை ஏற்பாட்டில் ஆகி விட்டது.  பல்கலைகழக்ங்களில் பெரும் ஊதியத்தில் வேலை கிடைக்கும் என்ற ஆவலில் பலர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளுகின்றனர். புதிய கண்டு பிடிப்பு, ஆராய்ச்சி என்ற சூழலை கடந்து சமூக அந்தஸ்து பணம் அதிகாரம் என்ற  ஆசைகளும் மனதில் இருப்பதால் ஆராய்ச்சி படிப்பையும் வியாபாரமாக கையாள ஆரம்பித்து விட்டனர். 

படிக்க வேண்டும் என்பது அறிவு தேடல் என்பதை கடந்து பல காரணங்கள் நிரம்பி விட்டதால் இத்துறையில் பல அநியாங்களையும் சங்கடங்களையும் சேர்த்து கொண்டு வருக்கின்றது.  இது இந்தியா போன்ற நாடுகளில் மக்களை கல்வி என்ற பெயரில் பிரிக்கவும் துண்புறுத்தவும் வழி செய்கின்றது. வீட்டிற்கு வீடு பொறியாளர்களை உருவாக்கி வேலை இல்லா திண்டாட்டத்தில் உழைக்க மனமில்லாத  75% இளைஞர்களை உருவாக்குவது போல் முனைவர் பட்டம்  என்ற பெயரில் கோழைகளை உருவாக்குவது நாட்டின் நலனுக்கு நல்லது அல்ல.  ஒரு மனிதன் தான் பெற்ற பட்டத்தால் மதிக்காது தன் திறமையால், உழைப்பால், சுய நம்பிக்கையால், மதிக்கப்பட வேண்டும்.  தற்கொலை செய்து கொள்ளும் தலைமுறையை உருவாக்குவது அபத்தமான கல்வி சூழலாகும்.

சென்னை பேரிடரில் பெண்கள் துயர்!


சென்னை பேரிடரில்  மிகவும் துயருற்றது பெண்கள் என்றால் பொய்யாகாது.  தமிழகத்தில் நல்ல கைநிறைய சம்பளம் கிடைக்கும்  வேலை  வேண்டுமா சென்னைக்கு செல்லுங்கள், நல்ல தொழில் துவங்கி முன்னேற வேண்டுமா சென்னைக்கு செல்லுங்கள், நவீனமான மேன்பட்ட மனிதர்களாக மாற வேண்டுமா சென்னைக்கு செல்லுங்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர். ஏன் பல வருடங்களாக திரைப்படங்களில் கூட காட்டினதும்; காணாமல் போகும், வறுமையில் வாடும் குழந்தைகள் எல்லாம் திருட்டு ரெயிலில் சென்னைக்கு படை எடுக்கின்றனர் திரும்பி பணக்காரர்களாக சொந்த ஊருக்கு வருகின்றனர்.
சென்னை பூர்வகுடிகள் எல்லாம் கூவம் கரையிலும், சில குடிசை மாற்று வாரிய கட்டிடங்களிலும் சென்னை ஒதுக்கு புறங்களிலும் முடக்கி வெளிமாநிலத்தில் இருந்து புகுந்த மக்களுக்காகவே சென்னை மாற்றப்பட்டு குடியிருப்புகளால் நிரம்பி வழிந்து நெல்லை, தூத்துக்குடி, கோயில்பெட்டி மற்றும் வெளிமாநில குடியேறிய மக்களால் நிலை பிதுங்கி இருப்பதே இன்றைய சென்னை என்று காணலாம். சென்னைக்கும் நெல்லைக்கும் போய் வரும் பேருந்துக்கள் நிதம் நிதம் நிரம்பி வழிந்தே பயணிக்கின்றது. 2000 ஆண்டில் பிபிஓ போன்றா பன்னாட்டு நிறுவனகளில் படையெடுப்புடன் தமிழகத்திலுள்ள பட்டதாரி  இளைஞர்களில் வாழ்கை இடமும் சென்னையாக மாறியது.

சென்னையில் இருப்பவர்கள் வாழ்விடமாக சென்னையை கொண்டிருந்தாலும் அவர்கள் ஊர் பாசம் நேசம் எல்லாம் சொந்த ஊரிலே இட்டு  வந்திருப்பார்கள். சென்னை பொறுப்பின்மை வாழ்க்கைக்கு இந்த மனநிலையே பெரிதும் காரணமாகின்றது.

சென்னையில் வெள்ளப்பெருக்கு என்பது புதிதல்ல. ஒரு இரு தினம் மழை பெய்தாலே கோயமேடு போகும் பாதை எல்லாம் தண்ணீரால் சூழ்ந்து விடும்.நடைபாதை கூவம் வாசிகள் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்குவதும் அவர்கள் மழை முடிந்ததும் சகஜநிலைக்கு திரும்புவதையும் யாரும் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. ஆற்றைக்கரையில் வீடு இருந்தால் தண்ணீரில் மூழ்கத்தான் செய்யும் என்ற பொதுஜன நீதி இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதம் மாடிவீடுகள் மூழ்கின போது அது சென்னையில் பேரிடராக மாறியது.

 முதல் கட்டமாக  வெள்ளம் புகுந்து சகஜநிலைக்கும் திரும்பும் வேளையில் தான், வீடு மூழ்கும் வண்ணம் வெள்ளம் புகுந்து  அடுத்த சில நாட்களில் மக்களை கலக்கமமுறச்செய்தது.

நெல்லைபோன்ற ஊர்களில் இருந்தும் குடியேறி  ஒரு தலைமுறையாக சம்பாதித்து சேகரித்த கட்டில்,மேஜை, பிரிட்ஜ், சலவை இயந்திரம் , தொலைக்காட்சிப்பெட்டி என எதை எடுத்து எங்கு வைத்து பாதுக்காப்பது என்ற நிலையிலும் உயிரை காப்பாற்ற இயலுமா என்ற சூழலிலும் கூட உறவினர்களை சென்றடைய, பிறந்த வீட்டிற்கு செல்ல தயங்கி இருந்துள்ளனர் பல பெண்கள்!. கடைசி நேரத்தில் ஒன்றையும் பாதுக்காக்க இயலாத சூழலில் தான் பிறந்த வீடு மற்றும் புகுந்த வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

 மீட்பு பணியில் இருந்த நபர் கூறுகின்றார்  தண்ணீர் இடுப்பளவு வந்த பிறகும் "நான் வீட்டை விட்டு வர மாட்டேன், சொந்த ஊரில் மாமியாரிடம் போகவில்லை" என்ற அடம் பிடித்திருந்த பெண்கள்  இருந்துள்ளனர். . அதிலும் வாடகவீடுகளில் தன் கணவரின் உழைப்பை மட்டுமே நம்பி இருந்த பெண்கள் சொந்த ஊருக்கு  வர முற்றிலும் விரும்பவில்லை.. அவர்களை மீட்பு குழு வந்து மனம் மாற்றி போட்டுகளில் அனுப்பும் நேரம் உள்ளாக வீடு கூரையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.


பிள்ளைகள் வெளிநாட்டிலும் பெற்றோர்கள் மட்டுமே வசித்து வந்த பல வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து வயதானவர்கள் கணக்கில்லாது மரணமடைந்துள்ளனர். சிலர் உணவு வாங்கி வர இயலாது 3-4 நாட்கள் பட்டிணியில் கழித்துள்ளனர். சிலரோ தன்னார்வலர்களால் கொடுக்கப்பட்ட உணவுகளை கூட வாங்க தன்மான உணர்வால் மனமிழந்து இருந்துள்ளனர். உறவினர்கள் தங்களை தொலைபேசியில் கூட அழைத்து விசாரிக்கவில்லை என்ற மனக்கசப்பிலும்  இருக்கின்றனர்.

 வெள்ளத்தில் போனாலும்  பறவாயில்லை எல்லாம் இழந்து சொந்த வீடுகளுக்கு திரும்ப மனம் கொள்ளாதிருந்தது நம்மை சிந்திக்க வைக்க வேண்டியுள்ளது.   பல குடும்பங்கள்; தங்கள்  வீட்டில் வெள்ளம் புகுந்ததும் மேல் மாடி வீடுகளிலும் மொட்டை மாடிகளிலும் பொழுது கழித்தனர். இருப்பினும் துணிந்து உறவினர்கள் வீட்டிற்கு வர விரும்பவில்லை, அதை தன்மான இழுக்காகவே எண்ணினர். சிறு குழந்தககளை வைத்துள்ள  தாய்மார்களும்  எந்த வழியுமற்று வீடு வந்தார்களே ஒழிய யாரும் நிச்சயமாக நிம்மதியாக வீடு வரவில்லை. உயிர் போனாலும் சொந்த பந்தங்கள், பிறந்த வீடு, புகுந்த வீடு செல்ல தயங்கினர் என்பதே போகிற போக்கில் நாம் எடுத்து கொள்ள வேண்டிய சம்பவமல்ல. ஒரு பக்கம் வெள்ளம்  மறு பக்கம் பேய் என்ற நிலையிலும் தாங்கள் சார்ந்த குடும்பங்கள் மேல் நம்பிக்கை அற்ற நிலை வருந்த தக்க சமூக சூழல் என்றும் அறிய வேண்டியுள்ளது.  தென் தமிழகம் ஒரு வகை மனப்பிளர்வுடன் வாழ்கிறது என்றால் அது மிகையாகாது.   நெல்லை போன்ற ஊரிலுள்ள ஓரளவு  வசதியான பெற்றோர்களின் ஒரே விருப்பம் பிள்ளைகளை சென்னையில் படிக்க வைப்பது, சென்னையில் வேலை வாங்குவது அல்லது வெளிநாட்டிற்கு அனுப்புவது அல்லது அரசு வேலை பெறுவது என்பதாகும் . உள்ளூரில் இருப்பது என்பது அவமானமாக கருதுகின்றனர்.  பண்டிகை நாட்களில் குழந்தைகளுடன் பொழுதைக்கழிக்க மட்டுமே விரும்புகின்றனர். எந்த பெற்றோரும்  குழந்தைகளுடன் இருக்க வேண்டும் அல்லது  பிள்ளைகள் தங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. இவர்கள் போன்ற பெற்றொருக்கு சென்னை வரபிரசாதமாக அமைகின்றது. தமிழகத்திலே பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லும் பூரிப்புடன் "பிள்ளைகள் சென்னையில் உள்ளனர்" என்கின்றனர்.  இதனாலே எந்த நிறுவங்களும் உள்ளூரை சுற்றி வளர்வதில்லை. சென்னையை நோக்கிய தமிழக மக்கள் நகரும் மனப்பாங்கில் உள்ளனர்.

. பல பெற்றோர்களுக்கு கோடிகள் வரதட்சனைகள்  பெறவும் சென்னை வேலை  உதவுகின்ர்றது. உள்ளூரில் பல கட்டுப்பாடுகள் குடும்ப கவுரவத்தில்  வளக்கும் பெண் குழந்தைகளை; எந்த நிபந்தனை இன்றி  சென்னையில் வேலை என்றது  அனுப்பி விடுகின்றனர். அங்கு அவர்கள் வாங்கும் சம்பளம் பற்றியோ, தங்கும் விடுதி பற்றியோ, அவர்களுடைய ஆரோக்கியமான வாழ்க்கை சூழலை பற்றியோ சிறிதும் வருந்துவதில்லை சிந்திப்பதும் இல்லை. வேலை பார்க்கும் பிள்ளைகள் சென்னை சரவணாசில் இருந்து வாங்கி வரும் பொருட்களை எண்ணியும் அவர்கள் வரும் கார்களை எண்ணி மட்டுமே மகிழ்சி கொள்கின்றனர்.


இச்சூழலில் தான் தங்கள் உறவினர்கள் பெற்றோர் மனநிலையை எண்ணி பேரிடர் வேளையிலும் சென்னை தண்ணீர் கழுத்தளவு வரும் மட்டும் சென்னைக்குள்ளே இருக்க துணிந்துள்ளனர் .

சமீபத்தில் சந்தித்த பல நெல்லை பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் முகம் கொடுத்த, எதிர் கொள்ள வேண்டிய துயர் தெரியவில்லை, தெரிந்ததாக காட்டி கொள்ள தயங்குகின்றனர். ஏழைகள் தான் வெள்ளத்தில் துயருற்றது போல் அடுத்தவர்களை காட்டி கதை விட்டு கொண்டிருக்கின்றனர். ஏழைகள் ஏற்கனவே பட்டு அளுந்திய நிலையில், இந்த மழையில் இருந்து மீள நடுத்தர மக்களுக்கு இன்னும் பல வருடங்கள் பிடிக்கும். இவர்களுக்கு  அரசின் எந்த உதவியும் வந்து சேரப்போவதில்லை. கடன்  வாங்கி கட்டின  வீட்டின் கடன் கட்ட வேன்டும்; இணய மின்சார தண்ணீர் பில் கட்ட வேண்டும். தங்கள் பிள்ளைகள் படிக்கும் தனியார் பள்ளி கட்டணத்திற்கு எந்த சலுகையும் கிடைக்க போவதில்லை. ஒரு சாதாரண நிலையில் வாழக்கூட தங்கள் மாத சம்பளத்தை மறுபடியும் சேகரித்து தூங்க கட்டில், இருக்க கதிரைகள், சாப்பிட சாப்பாட்டு மேசை, விருந்தினரை உட்கார வைக்க சோபா, இழந்த கார், இருசக்கிர வாகனம்  என எல்லாம் ஒன்றே என்று துவக்கம் முதல் சேர்க்க வேண்டியுள்ளது. அரசின் மிக்ஸி, தொலைக்காட்சி பெட்டி, காத்தாடி இயந்தரம் ஒன்றும் இவர்களுக்கு கிடைக்க போவதில்லை, இவர்களால் பயண்படுத்தவும் இயலாது. இதன் மத்தியில் பெற்றோரின் பெருமை தம்பட்டமான பேச்சுக்கும் ஈடு கொடுக்க வேண்டும்.

தென் தமிழகத்தில் எவ்வளவு படித்திருந்தாலும் எத்தனை லட்சம் கொண்டு வந்தாலும் மருமகள் என்பவள் பல பொழுதும் வீட்டு வேலைக்காரிக்கு நிகரே. இச்சூழலில் மருமக்களின் நிலை இன்னும்  பல படி  குறைத்து தான் தெரியும். இது போன்ற சூழலிலும் மாமியார் நையாண்டிக்கு பயந்து உயிரையும் மதிக்காது பேரிடரில் மிதந்த பல பெண்கள் நிலைக்கு எந்த அரசாலும் இழப்பீடு வழங்க இயலாது.