30 Aug 2015

கின்னி கோழி முட்டையும் ரத்னா பாய் பாட்டியும்



என் அப்பா வழி பாட்டிக்கு தன் 65 வயது என்பது,  தன் நினைவாற்றலை இழந்து வரும் காலமாக இருந்தது. யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது என்ற கொள்கை உடையவரான தாத்தா பாட்டியை தாத்தாவின் பராமரிப்பில் வைத்து தனியாகவே கவனித்து வந்த காலம் அது.  பாட்டிக்கு ஒரே  ஒரு வேலை அதுவும் பிடித்த வேலை கின்னி கோழியை வளர்ப்பதாக  தான் இருந்தது. அவரால் மண்ணெய், சமையல் எண்ணையை வேற்படுத்தி பார்க்கும் தெளிவு இல்லை. எப்போதும்  கோழிகளை விரட்டுவதற்கு என கரண்டியை கையில் வைத்திருப்பார் . பாட்டி வாய் திறந்து பேசினதே நினைவில்லை. ஆனால் கோழிகளுடன் கதைப்பதை திட்டுவதை கண்டுள்ளேன். எப்போது பார்க்க சென்றாலும் பாட்டி கோழியின் பின்னால் நடந்து கொண்டே இருபார். கின்னி கோழி தன் முட்டைகளை காட்டில் இடும் வழக்கம் உள்ளது. பாட்டி அதை தேடி சென்று எடுத்து வருவதுடன் ஒவ்வொரு முட்டையும் அழகாக ஒரு கண்ணாடி  பெட்டியில் அடுக்கி வைத்திருபார். வீட்டு வழி,  நடைபாதை,   படிகட்டுகள்  என நடக்கும் இடங்களில் எல்லாம் அதன் எச்சத்தால் நிரப்பி இருந்தது.  

அவர்கள் தங்கி இருந்த வீடு ரோட்டு ஓரத்தில் இருந்தது. முன் பக்கத்தை 4 கடைகளாக வாடகைக்கு விட்டிருந்ததால் வீட்டிற்கு செல்ல பின் வழியாக ஒரு குறுகிய பாதையில் இறக்கத்தில் நடந்து சென்று சில படிகள் இறங்கி இன்னும் 20  படிகள்  ஏறி வீட்டிற்குள் செல்ல வேண்டும்.  எங்கள் ஊரோ எப்போது மழையும் வழுக்கும் பாதைகளாக இருந்ததால் தாத்தா வீட்டிற்கு செல்வதை தடை விதைத்திருந்தார் அம்மா! அம்மாவின் தடை என்பது அது 144 தடைசட்டம் போன்றது. ஆனால் கின்னி கோழி முட்டை ஆசை என்னை விட்டு வைப்பதில்லை. சில நேரம் அம்மாவின் அனுமதி இல்லாதும், தங்கை தம்பியை அழைத்து சென்றால் காட்டி கொடுத்து அடி வாங்கி தருவார்கள்; என்பதால் தோழி ஒருவரை துணைக்கு அழைத்து சென்றுள்ளேன்.

முட்டையை கண் வைத்தே அங்கு செல்வது  பாட்டிக்கும் தெரியும். முட்டையை பார்க்க பெட்டிக்கு அருகில் சென்றதுமே "எடுத்து விடாதே தாத்தாவிற்கு" என கட்டளை பறந்து வரும்.  பாட்டி பெட்டி அருகிலே மிகவும் கவனமாக நோட்டமிட்டு கொண்டே அமர்ந்திருப்பார்.

பாட்டியின் உலகம் முழுக்க தாத்தா தான் இருந்தார். ஆனால் ஒவ்வொரு பிள்ளையையும் பேரப்பிள்ளைகளையும் நேசித்து இருக்க வேண்டும்.  பெரியப்பா காதல் மணம் முடித்தார் என  பெரியப்பா பிள்ளைகள் வீட்டிற்கு வரத் தடை இருந்தது. தாத்தா இல்லாத நேரம் நோக்கி அங்கு செல்லும் என் பெரியப்பா மகன்களுக்கு   பழம் கஞ்சி கொடுத்துள்ளார் என கூறியுள்ளனர். என் பாட்டி எப்போது ஒரு மயான அமைதியில் பைபிள் வாசிப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டிருந்தார். அவர் முகத்திலோ கண்களிலோ எந்த உணர்வையும் காட்டி கொள்வதில்லை. கண்கள் மட்டுமே சலித்து கொண்டிருக்கும்.  அவர் உணர்வுகள் என்பது, வெத்தலை இடிக்கும் கல் ஓசையுடன் முடித்து இருந்தது.


தாத்தாவிற்கு நான் மிகவும் பிடித்தமான பேத்தி. அவருடைய துணிமணிகளை அவராக தைத்து அணிவது தான் பிடிக்கும். வெள்ளை சட்டை,  அரைகை வைத்த உள் பனியன் தைத்து அணியுவார். வயதாகிய வேளையில் நூல் கொருப்பது, உண்ணிப்பாக கவனித்து தைப்பது சிரமம் என்பதால் அவர் வெட்டி வைத்திருக்கும் துணியை தாத்தாவின் கட்டளைக்கு இணங்க தைத்து கொடுப்பது என் வேலையாக இருந்தது.   


கின்னி கோழி முட்டை சாதாரண கோழி முட்டையை விட மஞ்சள் நிறத்தில் சிறிதாக இருக்கும்.  4-5 முட்டைகளை ஒரே பாத்திரத்தில் உடைத்து போட்டு தோசைக்கல்லில் ஊற்றி அதன் மேல் மிளகும் உப்பும் போட்டு  ரொட்டி போன்று சுட்டு தருவார். நான் பல போதும் முட்டை சாப்பிட்டதை வீட்டில் சொல்வது கிடையாது. ஒவ்வொரு முறை கின்னி கோழிகளை பார்க்கும் போது பாட்டி நினைவு வராது இருப்பதில்லை.



தாத்தா வேட்டைக்கு போகும் வழக்கம் இருந்ததால் காட்டு இறச்சி சமைத்து எனக்காக கொண்டு கொடுப்பார். கொல்லாண்டி சீசனில் ஒரு சின்ன பையில் எனக்கான பங்கு வந்து சேரும்.  அதை தீயில் சுட்டு எடுப்பதே தனிக்கலை. கங்கு தீயில் இட வேண்டும். அதன் பால் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... என்ற சத்ததுடன் எரிந்து போன பின்பு கொல்லம் கொட்டயை லாவகமாக குறுக்கலாக வைத்து கொண்டு உடைக்கவேண்டும்.  கொஞ்சம் அசந்தால் கையில் கருப்பு அடையாளங்களுடன்  பல போதும் சுட்டு விடும். பொதுவாக வியாபாரி வீடுகளில் நல்ல காயை விற்று விடுவதால் பொக்கு தான் வீட்டு தேவைக்கு வரும். சுடும் போது சில நேரம் பருப்பு இல்லை என்றால் அம்மா திட்டி கொண்டே எடுத்து தந்தாலும் தாத்தா கொண்டு வந்து கொடுத்த கொல்லாண்டி நினைவுகள் தான் தற்போது ஆக்கிரமித்துள்ளது.  

Image result for grandparents painting
பாட்டி இறந்து 28 வருடங்கள் ஆகி விட்டன.  தாத்தா இறந்தும் 20 வருடங்கள் ஆகி விட்ட நிலையில் என்னுடன் முட்டை தின்று வந்த   தோழி அம்மாவிடம் சென்று வந்த கதைகளெல்லாம் கூறி உள்ளார் என்று அறிந்த போது இனி அம்மாவிடம் அடிபடப்போவதில்லை என அறிந்தாலும் என்னை அறியாத பயம் தொற்றியது. 

தாத்தாவின் அன்பை கூறும் போது என் மகன்கள்  கேட்பார்கள் "ஜோசப் தாத்தா இப்போது எங்கு இருப்பார்"  அம்மா என்று. அப்போதெல்லாம் நான் வானத்தை காட்டி அங்க பார் ஓர் நச்சத்திரம் நம்மை பார்த்து நின்று கண் சிமிட்டுகின்றது  என காட்டி கொடுப்பேன்.சமீபத்தில் என் மகன்களின் தாத்தா இறந்தார். என் மகன்கள் அவர் எங்கு இருபார்  என கேட்டதே இல்லை. என் மகன்களுக்கு என்னுடைய தாத்தாவின் நினைவுகள் போல் ஏதோ சில நினைவுகளை இட்டு சென்றுள்ளனரா என்று எனக்கு தெரியாது.

'கவர்னரின் ஹெலிகாப்டர்'- எஸ் கேபி கருணா

கவர்னரின் ஹெலிகாப்டர்'
'கவர்னரின் ஹெலிகாப்டர்' வம்சி பதிப்பகத்தில் வெளியாகியுள்ள புத்தகம் இது. சமீபத்தில் வாசித்த  சுவாரசியமான எழுத்து  நடை கொண்ட புத்தகம். இதன் புத்தக வெளியீட்டுகிற்கு பங்கு பெற்றபோது ஓர் புத்தகவும் வாங்கி திரும்பினேன்.  

வாசகர்களை வாசிப்பில் மயங்க செய்யும் எழுத்து நடை கொண்ட இப்புத்தகத்தை  ஒரே நாளில் வாசித்து முடிக்கலாம். 18 கட்டுரை-கதைகள் அடங்கிய 224 பக்கங்கள் அடங்கிய புத்தகம் இது. எழுத்தாளர் தன் வலைப்பதிவு ஊடாக வெளியிட்ட முதல் கதையை புத்தகத்திலும் முதல் கதையாக சேர்த்திருப்பது சிறப்பாக உள்ளது.

எழுத்தாளர் மறைந்த எழுத்தாளர் சுஜாதவின் தீவிர ரசிகராக இருந்துள்ளார் என்பதை இரண்டாவது கதை தெரிவிக்கின்றது. இவருடைய ஆதர்ச எழுத்தாளர் தற்போது கனடா நாடு ரொறொன்ரோவில் வசித்து வரும் பிரபல ஈழ எழுத்தாளர் அ. முத்து லிங்கம் முன்னுரை அளித்திருப்பது மிகவும் சிறப்பு. தனது முன்னுரையில் எழுத்தாளருக்கு எழுத்து இயற்கையாகவே கைகூடுகின்றது என குறிப்பிட்டுள்ளார். இவருடைய கதையில் எழுத்தில் சகல நுட்பவும் நிறைந்து உள்ளதாக அ முத்துலிங்கம் பறைசாற்றுகின்றார்.



புத்தக ஆசிரியர் தன்னுடைய 40வது வயதில் எழுத்தை ஒரு விளையாட்டாக துவங்கி உள்ளதாக  குறிப்பிட்டுளார். இருப்பினும் எழுத்தாளனுக்கு உரிய பொறுப்புடன் தான் எழுத விரும்புவதாகவே குறிப்பிட்டார் தனது ஏற்புரையில். 


கதையா கட்டுரையா என்ற விவாதம் கடந்து தன் நினைவில் நின்ற உண்மைக் கதைகளை  சில புனவுகள் கலந்து கட்டுரையாக;  இயல்பான மொழியில் எழுதியிருக்கும் சிறப்பு என்னை கவருகின்றது. பொதுவாக சில புத்தகங்களில் கதைகள் ஊடாக செல்லும் போது  அதன் நிகழ்வுகளில் மனம் லயிக்க பல தடைகள் எழுத்தில் வருவது உண்டு.  ஆனால் இப்புத்தகம்; வாசிப்பு என்பதை மறந்து நாம் அந்த சம்பவத்தில் நம்மை அறியாது உருகும், மயங்கும் அல்லது லயித்து  போகும் சூழலை  உருவாக்குகின்றது. 



கதைகள் வெறும் கற்பனை கதைகள் அல்லாது அதில் வாழ்க்கையும் அடங்கி இருப்பதால் ஓர் உயிரோட்டமான உணர்வை தருகின்றது. மேலும் கதைகளில் நாம் காணும் சின்ன சம்பவங்களிலும் நம் கலாச்சாரத்தின் அறம் பொதிந்து உள்ளது நம் சிந்தனையை மேம்படுத்துகின்றது. 

சாமந்தி போன்ற கதைகள்  கதையல்ல உண்மையான அரசியல் நிலைவரத்தை;  மண்ணின் மைந்தர்க இளிச்சவாயர்களாக மாற்றப்படுவதை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார். 


சைக்கிள் டாக்டர் கதை காட்சிகள் சத்திய ஜித் ராயின் திரைப்படத்தில் சில காட்சிகள் மறுபடியும் நம் நினைவலகளில் புகுந்து  துன்பப்படுத்துவது போல் டாக்டர் நினைவுகள் நம்மை அறியாது வந்து செல்கின்றது. 

மதுரை வீரன் போன்ற கதைகள் மிகவும் மனித நேயமிக்க கதைகள். நாம் வாழும் சமூகம் இன்னும் ரொம்ப மோசமடையவில்லை என நம்பிக்கை கொள்ள வைத்த பல சம்ப்வங்கள் இடம் பெற்றிருந்தது.  ஆனாலும் இறந்தவர் நிலவரம் என்னவானது என மனம் கேட்டு கொண்டிருந்தது

பிரியாணி கதை, ரசித்து சிரித்து வாசித்த கதை. கதை ஆசிரியரின் ஆர்வக் கோளாறு பாராட்டப்பட வேண்டியதே. விளையும் பயிர் முளையிலே தெரியும் என சிறு குழந்தையாக இருக்கும் போதே எழுத்தாளரின் பார்வை, அறியும் ஆர்வம் தன்னை சுற்றி நிழலும் சமூகத்தை பற்றி  அறிய வேண்டிய ஆர்வம் கண்டு கொள்ளலாம். 

மரங்கள் போன்ற கதைகள் ஒரு படைப்பாளி முதலில் இயற்கை நேசிப்பவனாகவே இருப்பவனாகவே இருக்க இயலும். இயல்பாகவே இயற்கையுடன் ஓர் புரிந்துணர்வுள்ள ஆசிரியருக்கு மனிதர்களை அணுகுவதும் புரிந்து கொள்வதும்  பார்க்கப்பதும் எளிதாக அமைகின்றது.


எல்லா வாசகர்களையும் கவர்ந்த 'கவர்னரின் ஹெலிகாப்டர்' சுவாரசியமான  கதை என நான் எடுத்து சொல்வதற்கு இல்லை. ஓர் உண்மை சம்பவத்தை ஓர் கதை போன்று எழுதிய விதம் சிலாக்கிக்க தகுந்தது.  சம்பவங்களை தொகுத்த விதம் அருமை. கதை முடிவில் கவர்னரை பற்றி ஓர் இரு வார்த்தைகள் பதிந்து செல்வது எழுத்தாளரின் புத்தி சாதுரியத்தையும் காட்டுகின்றது.

அட்சயப் பாத்திரம் என்ற கதை இலங்கை தமிழர்கள் மற்றும்  தமிழக தமிழர்கள் உறவை பதிவு செய்து வைத்துள்ள அருமையான நிகழ்வு. மேலும் அவர்கள் போராட்ட குழு அரசியலை சொல்லாது சொல்லி சென்றுள்ளது.  .

எஸ் கே.பி பொறியியல்  கல்லூரியின் தாளாளராக இருந்து கொண்டு கடுமையான வேலைப்பளு மத்தியில் ஒரு புத்தகம் வெளியிட்டிருப்பது என்பது அவரின் வளமான பால்ய கால நினைவுகளின் வெளிப்பாடு என்று இருந்தாலும்  ஒரு சிறந்த படைப்பாளி ஒரு போதும் றைந்திருக்க இயலாது என்றும் வெளிப்படுகின்றது. மலைப்பிரதேசங்களில் உயரமான் வறண்ட கரும் பாறைகளில் இருந்து ஊற்றாக கொப்பளிக்கும் நீர், பூமியை வந்தடைந்து அருவியாக பாய்வது போல் அவரின் படைபாற்றலில் வாசகர்களை சிறப்பான சிந்தனைக்குள் சம்பவங்களுக்குள் அழைத்து செல்கின்றது இப்புத்தகம். ஒவ்வொரு கதையும் சிறந்த  உத்தியுடன்  சமூக அக்கறையுடன்; எந்த ஓர் அதிமேதாவித்தனவும் இல்லாது  இயல்பாக எளிமையாக அழகாக கவித்துவமாக அழைத்து செல்கின்றது  என்பதாக்கும் இதன் சிறப்பு. 

புத்தக வெளியீட்டில்  வாழ்த்துரைத்த வண்ணதாசன் தன் எழுத்தை பல இடங்களில் நினைவூட்டுவதாக குறிப்பிட்டார். அதே போன்று கவிஞர் கலாப்பிரியாவும் எடுத்து கூறவேண்டிய புத்தகம்  என குறிப்பிட்டார். வெறும் விளையாட்டாக வலைப்பதிவில் பதிந்து வந்த  பதிவுகள் புத்தகமாக மாற பதிப்பாசிரியர் பவா செல்லத்துரை மற்றும் அவருடைய மனைவி ஷைலஜாவின்  ஊக்கம்,    உறுதுணையாகியுள்ளது என புரிந்தது. 


 அ முத்துலிங்கம் கூறியிருப்பது போல் மாணவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். நிச்சயமாக என் மாணவர்களுக்கு இக்கதை அமைப்பை பற்றி கூற வேண்டும் என புத்தகத்தை மிகவும் கவனமாக என் நூலகத்தில் வைத்துள்ளேன். புத்தக ஆசிரியரின் வலைப்பதிவு  

புத்தகம் கிடைக்குமிடம்,புத்தகம்


29 Aug 2015

ஊரடங்கு உத்தரவு-புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு!


பி. என். எஸ் பாண்டியனின் புத்தகமாகும் 'ஊரடங்கு உத்தரவு'.  1979ல் மத்திய அரங்கேரிய ஓர் துயர் மிகு அரசியல் போராட்டத்தை பின்புலமாக கொண்டு  எழுதியுள்ளார்.  எந்த அரசியல் சார்பற்ற நிலையில் மிகவும் துல்லியமாக அரசியல் நிகழ்வுகளை பகிர்ந்த புத்தகம் என்பது இதன் சிறப்பாகும். இவர்  15 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிக்கையாளராக பணிபுரிகிறவர் . வரலாறு மற்றும் தகவல்தொடர்பியலில் முதுகலை படம்பெற்றவர் மட்டுமல்ல . பல அரசில் ஆய்வுகளை மேற்கொண்டு பல பத்திரிக்கை மற்றும் இதழ்களில் எழுதி வருபவர் என்ற சிறப்பும் உண்டு.




 பிரஞ்சு நாட்டின் ஆளுமையில் இருந்த  பாண்டிச்சேரி, இந்திய சுதந்திரம் அடைந்ததை தொடர்ந்து 1954 ல் தான் சில வரையறுக்கப்பட்ட திட்டத்துடன் இந்தியாவுடன் இணைந்தது. 1979ஆம் ஆண்டு, பாண்டிச்சேரியை இந்திய மாநிலங்களுடன் இணைக்கும் திட்டத்துடன் அன்றைய  பாரத பிரதமர் மொராஜ் தேசாய் பேச, அதற்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் வண்ணம் எழுந்த மக்கள் போராட்டம் அதை தொடர்ந்து நிகழ்ந்த  கலவரம் பின்பு அது அரசியலாகி  பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையை  பற்றி விலாவரியான விளக்கத்துடன் தொகுக்கப்பட்ட புத்தகம் ஆகும் இது.





1947ல் இந்தியா ஆங்கிலேயரின் ஆளுகையில் இருந்து சுதந்திரம் பெற்றிருந்தாலும் 1954 நவம்பர் 1 ஆம் தியதி தான்  பிரஞ்சு ஆளுகையில் இருந்து இந்தியா நாட்டுடன் யூனியன் பிரதேசமாக இணைகின்றது. புதுச்சேரியின் தனிதன்மை காக்கப்படும் மக்கள் விரும்பினால் ஒழிய தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கலுடன் புதுச்சேரியை இணைக்க போவதில்லை  என நேரு தலைமையிலுள்ள இந்திய அரசாங்கம் கொடுத்த உறுதி மொழிக்கு மொராஜி தேசாய் சவால் விடுகின்றார். அவர் விருப்பத்திற்கு அன்றைய தமிழ முதல்வர் உதவதும்  இக்கலவரத்திற்கு  பின்புலமாக அமைகின்றது.


மொராஜி தேசாயின் கருத்துப்படி சிறு மாநிலங்கள் நாட்டிற்கு செலவினங்களை கூட்டுகின்றது என்பதாகவே இருந்தது.  பாண்டிச்சேரியில், மக்கள் ஆட்சி துவங்கிய முதலே அதிகாரப் போட்டியால் ஸ்திரதன்மையற்ற ஆட்சி நடைபெறுகின்றது. பின்பு அதிமுக தலைமையில்  ராமசாமி, பாலா பழவனூர் போன்றோர் ஆட்சி செய்யும் வேளையில் மறுபடியும் ஆட்சி மாற்றத்தை சந்திக்கின்றது.  இம்முறை மத்திய அரசு கவர்னர் ஆட்சியை அமல்ப்படுத்துகின்றது. மத்தியில் அவசரகாலசாட்டம் பிறப்பிக்க பட்ட நிலையில்  புதுச்சேரியில் ஆட்சி ஆளுனரின் கட்டுப்பாட்டில் 5 வருடங்களுக்கு மேலாக சென்று கொண்டிருக்கின்றது.  இப்படியான சூழலில் அன்றைய பாரத பிரதமர் மொராஜி தேசாய் சென்னை வந்து திரும்பும் வேளையில்  பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்  தமிழ் நாடு, கேரளா, ஆந்திராவுடம், பாண்டிச்சேரியின் பிரதேசங்களை இணைக்கும் தேவை பற்றி கூறி செல்கின்றார்.   பல நூறு வருடங்கள் வெளிநாட்டவர்களில் ஆளுமையில் இருந்த புதுச்சேரி தன் தனித்துவமான கலாச்சரத்தை பேணும் நோக்கில் அந்நிய மாநிலங்களுடன் இணைய விரும்பவில்லை. மத்திய அரசின் தீருமானத்தை எதிர்க்கும் வகையில் குடியரசு தினத்தை புரக்கணிக்க முடிவெடுக்கின்றனர்.   அமைதியான வழியில் ஆர்ப்பாட்டங்கள், பந்த் என  தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி கொண்டிருந்த பொது மக்கள் மீது ஆயுதப்போலிஸ் துணையுடன் அரசின் வன்முறை தாக்குதல் நிழழ்த்தப்படுகின்றது.  அந்த 10 நாட்கள்  பாண்டிச்சேரி வரலாற்றின் கறுப்பு தினங்களாக பதியப்படுகின்றது. சுதந்திர போராட்டத்தில் கூட தாங்கள் இப்படியான வன்முறையை சந்திக்கவில்லை என புதுச்சேரி மக்கள்  கூறுகின்றனர்.

 டி ராமசந்திரன் என்ற பாதுகாப்பு அமைச்சார் தன் பெண் ஊழியரான ராதாபாய் என்பவரை பாலியலாக துன்புறுத்தினார் என குற்றம் சாட்டப்படுகின்றார். ஆனால் கலவரம் பிற்பாடு இவரே மாநிலத்தின் ஆட்சிப்பொறுப்பில் வருகின்றார். வழக்கறிஞராக இருந்து அரசில்வாதியாக மாறின பாலா பழனூர் போன்றோர் அரசியல்வாழ்க்கை அஸ்தமித்ததும் இக்கலவரத்துடன் தான். அரசியல்வாதிகள் பதவி போட்டியில் சிலர் சிறைக்கு செல்ல சிலர் சகுனிகளாக வலம் வர முடிவில் அவர்களே பதவியை அலங்கரிப்பதுடன் சுகமாக வாழ; கலவரத்தை காணச்சென்ற பொது மக்கள் கொல்லப்பட்டது கொடூர நிகழ்வாகும்.

கலவரத்தில் கொல்லப்பட்ட பாண்டுரஙன் ஒரு மின் தொழிலாளி ஆவார். எந்த அரசியலும் தெரியாத அவர் மனைவி பின்பு அரசு கொடுத்த பணியின் துணையால் தன் குடும்பத்தை வறுமையுடன் நடத்தி செல்வதையும் பதிந்துள்ளார் ஆசிரியர். அதே போன்று அக்கலவரத்தில் இறந்த இளைஞர் குடும்பம் எந்த உதவியும் பெறவில்லை. போலிஸ் தோட்டக்களும் கலவரத்திலும் பங்கு கொண்ட சாதாரண எளிய மக்களையை குறி பார்த்து செல்கின்றது.


செஞ்சி நாயக்கர்களில் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது  புதுச்சேரி.  1512ல் போர்துக்கீசியர் புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர். பின்பு டென்மார்க் நாட்டினரின் வணிக இடமாக உருமாறுகின்றது.  16ஆம் நூற்றாண்டு மத்திய வேளையில் அகபாத் நிசாமின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது.  வியாபாரம் செய்து வந்த  பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி,. ஆளுகை புரிபவர்களுக்கு    பணம் கடம் கொடுக்கின்றது. பணத்தை திருப்பித் தர இயலாத சூழலில் புதுச்சேரியின் சுங்கவரியை வசூலிக்கும் உரிமையை பிரஞ்சு பெற்று கொள்கின்றது.  பின்பு  1677 ல் மராட்டிய மன்னன் சிவாஜியின் ஆளுகைக்கு புதுச்சேரி வருகின்றது. பணத்தட்டுப்பாடு காரணமாக புதுச்சேரியை ஆளுனரான ராஜாராம் விற்க முற்படும் போது புதுச்சேரியை டச்சுகாரர்கள் வாங்கி கொள்கின்றனர் . 1697ல் டச்சுகாரர்களீடம் இருந்து புதுச்சேரியை  பிரஞ்சுகாரர்கள் மீண்டும் வாங்கினர்.  1761ல் ஆங்கிலேயர் வசம் புதுசேரி வருகின்றது.  பின்னர்  கி. பி 1763 ல் மேற்கொண்ட  பாரீஸ் உடன்படிக்கை ஊடாக இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் உள்ள   தங்களுக்கு சொந்தமான இடங்களை மீட்டு கொள்கின்றது. பின்பு 1793 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகள் ஆங்கிலேயர்கள்  வசம் செல்கின்றது.  1816ல் ஆங்கிலேயர்கள் சில பகுதிகளை பிரஞ்சுகாரர்களிடமே திருப்பி கொடுத்து விட்டனர்.  [விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய பாரதியார் அரவிந்தர் மற்றும்  வ வெ.அய்யர் போன்றோருக்கு அடைக்கலம் கிடைக்க உதவியதும் இவ்வகையாக அரசியல் கட்டுப்பாடுகளாகும்]

புகழ் பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன்,  முன்னுரை தந்துள்ளார். ஜூனியர் விகடன் ஆசிரியர் ப திருமாவேலனின் அணிந்துரை அளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்  மற்றும் எழுத்தாளர் ஆவணப்பட இயக்குனர் வெ பாலன் வாழ்த்துரை வழங்கியுள்ளார்.