21 Jun 2015

“ஆர் என். ஜோ டி குருஸின் கொற்கை”


கொற்கை நாவல் கையில் எடுத்ததும் வாசித்து விடுவோமா என்ற அச்சத்தையும்  மிஞ்சி வாசிக்க வைத்தது விருவிருப்பான எழுத்து நடையும்  சுவாரசியமான கதையுமாகும்.  1914 ல் துவங்கி 2000 ஆண்டு முடிய 80 வருட கால மூன்று தலைமுறைகளின் கதை சொல்லும் ஒரு நெடுநாவல் ஆகும். கொற்கையில் வரலாற்று முக்கியம்,  அதன் வளமை,  பரதவர்களின் வாழ்க்கையை சொல்லும் கதைமாந்தர்கள்; முக்கியமாக கொற்கையில் குடியிருந்தவர்களும் பெரியதுறை போன்ற பக்கத்து ஊரில் இருந்து குடியேறியவர்கள் கோயில்பட்டி போன்ற ஊர்களில் இருந்து பிழைக்க வந்த நாடார் இனமக்கள் 25க்கும் மேற்பட்ட குடும்ப  மக்கள் கதை மாந்தர்களாக கொண்ட 1128 பக்கங்கள் உள்ளடங்கிய மாபெரும் நாவல் ஆகும் "கொற்கை". இலக்கிய பின்புலன் இல்லாத சூழலில் உருவாகியுள்ள இப்புத்தகம் ஜோ டி குரூஸின் அயராத உழப்பின் தன் இன மக்கள் மேல் கொண்ட தீராத நேசத்தின் தன் சமுதாயத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற அவருடைய ஏக்கமும், தாங்கள் ஏமாற்ற பட்டதை எண்ணி வெகுண்ட அவருடைய கலங்கிய உள்ளவுமே இப்படியான ஒரு நாவலின்  உருவாக்கத்திற்கு காரணமாக இருந்துள்ளது. பரதவ இனத்தை சேர்ந்த மனிதர்,  ஒரளவு இன்னல்கள் இல்லாத ஒரு நிலையில் வாழும் ஓர் அதிகாரி அச்சமூகத்தில் புரக்கணிக்கப்பட்ட கடைநிலை மனிதனை எண்ணி வருந்துவது அவருடைய மனித நேயத்தையே காட்டுகின்றது. ஒரு மிகப்பெரும்  பின்  புலன் கொண்ட சமூகம் தன் நிலையில் இருந்து வீழ்ந்து அடையாளம் அற்று போக காரணமான இருந்து  காரணிகளை தேடிய குரூஸ் கண்டு பிடித்த சில உண்மைகளை உண்மையாகவும் நேர்மையாகவும் பதிந்து சென்றுள்ளார்.  

நெய்தல் நிலத்தில் சொந்தக்காரர்களான  மக்களின் ஒற்றுமை இன்மை சொந்த இனத்தோடு கொண்ட  பகைமை உணர்வு, பொறாமை, பெண்கள் மேல் கொண்ட அதீராத இச்சை உணர்வால், தன் தொழிலில் சரிந்ததும்  மற்றும் வேற்று இன மக்கள் தங்கள் ஊரில் குடிபுகுந்து தங்கள் உரிமைகளை  பறித்து சென்றதையும் கடற்கரை மொழியினூடாக சுவாரசியமாக விவரித்துள்ளார். வட்டார மொழியான கடற்கரை மொழி தான் இந்நாவலின் தனி தன்மைக்கு  சாற்றாக உள்ளது. வாசிப்பவர்கள் முதல் 20 பக்கம் புரிந்து வாசிக்க சிரமம் கொண்டாலும் . பின்பு நாமும் அந்த மொழியை பேசும் நிலைக்கு தள்ளப்படும் நிலைக்கு எட்டுகின்றோம். மொழி என்பது வெறும் பேசும் கருவி மட்டுமல்ல ஒரு இனத்தின் அடையாளம் பண்பாடு, வாழ்க்கையாக மாறுகின்றது,  வட்டார மொழியை பயண்படுத்தியதால் அவ்வூர் வழக்கு சொற்கள் பழமொழிகள், வசை மொழிகள், கேலி கிண்டல்களை அப்படியே அறிந்து கொள்ள இயல்கின்றது. இது ஒரு வரலாற்று நாவல் என்பதால் சில சம்பவங்கள் வரலாற்று நிகழ்வுடன் உணர்த்தி  காலத்தையும் துல்லியமாக பதிவு செய்துள்ளார்.


நிலம் சார்ந்த விவசாயிகள்  போன்றே கடலை நம்பி இருந்த கடலோடிகள் பல காலகட்டங்களில் புரக்கணிக்கப்பட்டதை,, ஏமாற்றபட்டதை கொற்கை" விளக்குகின்றது. மிக முக்கியமாக தங்கள் நிலத்தின் உரிமையை தக்க வைத்து கொள்ள வேண்டும் என எண்ணி மதம் மாறுவதும் அந்த மத மாற்றமே தங்களுக்கான அடையாளத்தை துறக்க தங்களுக்கான தலைமையை, பண்பாட்டை இழக்க காரணமானதை திறம்பட விவரித்துள்ளார்.  மதம் என்பது ஆன்மீகம் கடந்து மனிதர்களை ஆட்டி படைக்கும் கருவிகளாக உருவாகும் போது சாதாரண மக்கள் நிலை குலைந்து போவதும் அடிமையாக மாறுவதும் மட்டுமல்லாது அடையாளம் அற்ற ஒரு ஜனமாக உருவாகுவதை கதையினூடாக காண்கின்றோம். சாதாரண மக்கள் என்றிகல்லை அவ்வின மக்களை பிரதிநித்துவ படுத்திய மன்னரே இந்த சூழலில்  தன் மதிப்பை மான்பை இழந்து கடைசியில் தன் கிரீடத்தையும் மதத்தலைமை முன் கண்ணீருடன் துறக்கும் நிகழ்வு  யாரையும் கண் கலங்கி விடச்செய்யும்.
 
இவ்நாவலின் இன்னொரு சிறப்பு என்பது ஒவ்வொரு கதாபாத்திரவும் நம் மனகண்ணில் வாழ்ந்து செல்கின்றனர் என்பதாகும். பிரதான கதாபாத்திரமான பிலிப் தன் வறுமையின் காரணமாக பெரிய துறையில் இருந்தும் வேலை தேடி தன் சித்தப்பா லொஞ்சின் ஊரான கொற்கைக்கு வந்து சேருகின்றார். அங்கோ சித்தி உருவத்தில் துரத்திய காமப்பேய் இவர் பிள்ளைகள் காலத்திலும் இவருக்கு பல தொல்லைகள் தருகின்றார். 

சித்தப்பா லொஞ்சின் ஒரு விபத்தில் இறந்து போக  சித்தப்பா மகன் ரஞ்சனும் சில வருடங்களில் அகால மரணம் அடைகின்றார் . பிலிப் தனக்கு அடைக்கலம் கொடுத்த ஆண்டாமணியார் மகள், தன்னைவிட வயதில் மூத்த, இளம் வயதிலே விதவையான சலோமியை திருமணம் செய்து கொள்கின்றார்.   ஒரு வாழாவெட்டிக்கு வாழ்க்கை கொடுத்தார் என்ற காரணத்தால் இவர் ஒரே சகோதரியும் பிரிந்து செல்கின்றார். . இவர் வறுமையில் வளர்ந்தாலும உழைப்பால் தண்டல் ஆகிய பிலிப்பு தன் ஏழு பிள்ளைகளையும் நல்ல நிலையில் மணம் முடித்து வைக்கின்றார். ஆனால் ஊதாரிகளான தன்னலம் பிடித்த பிள்ளைகளால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றார்.  ஒரு மகன் தனக்கு பிடித்த பெண்ணை மணம் செய்ய அனுமதிக்க வில்லை என்ற வேதனையில் தற்கொலை செய்து கொள்ள, இன்னொரு மகனோ சொத்துக்கு என பெற்ற தந்தையை அடிக்கும் இழிநிலைக்கு எட்டுகின்றான்.  கணவர் இறந்தும் கணவர் வீட்டில் இருந்து தன் மகனை படிக்க வைக்கும் எழிலரசி மாமனாரை பாசமாக நோக்கும் மகளாகவும் மிளிர்கின்றார்.  நேர்மையால் வாழ்க்கை நெறியில்  உயர்ந்த பிலிப்பு, இரத்த உறவுகளிடம் தோற்று போகும் அவலநிலையும் காண்கின்றோம். சண்முகவேல் நாடாரின் அறிவுரைக்கு இணங்க சந்தன மாரியை சந்திக்க வேண்டும், பொறுப்புக்களை பிள்ளைகளிடம் விட்டு விட வேண்டும் என பல திட்டங்களுடன்  சென்னையில் இருந்து கொற்கை நோக்கி வரும் பிலிப்பின் உயிர் பயணத்தில் முடிவதுடன் நாவலையும் முடித்துள்ளார்.

எழிலரசியின் சகோதரான வரும் அமுதமன் கதாபாத்திரம் கதை ஆசிரியராக தான் இருக்க வேண்டும். 

மதம் என்ற ஆயுதத்தால் ஒரு இனத்தின் இயல்பான சிந்தனை ஆற்றல் மழுங்கி மட்டையாகி போனதையும், நிறுவனமாக்க பட்ட கிறிஸ்தவத்தின் கீழ் எவ்வாறாக ஒரு போராட்ட குணமுள்ள மக்கள் மண்டியிடப்பட்டனர் என்ற வேதனையையும் கதைமாந்தர்கள் வழியாக விவரித்துள்ளார்.. விமரிசையாக கொண்டாடப்படும் பனிமயமாதா திருவிழா  சப்பர பவனி தற்போதும் உலகம் ஒட்டும் பாக்கும் அற்புத நிகழ்வாக விளங்குகின்றது. சந்தமனைமாரியின் வரலாறு திருத்தி எழுதப்பட்டது எப்படி எனவும்  காணலாம்.

பரதர்களின் மன்னர் பாண்டிய பதி காலத்தால் அழியாத சோகத்தின் பதிப்பாகும். பல நூற்றாண்டுகளாக ஒரு இனத்தின் மன்னராக இருந்தவரின் முடிவு நம்மையும் தீரா துயரில் ஆழ்த்தியது. அவருடைய கடைசி நாட்கள், மரணம், அவருடைய ஆளுகையே அவரே மறுதலித்த வைத்த விதம் நம்மை கனக்க செய்தது. மன்னனின் வாரிசோ தனக்கு இனி அதிகாரம் ஆட்சி  வேண்டாம் என  ஒரு வங்கி குமஸ்யதாவாக பணி புரிந்து;  காங்கிரஸ் கட்சியில் இணைந்து நாட்டுக்காக சேவை செய்து மறையும் துயர் நிலையும் எந்த மனிதனையும் கண் கலங்க செய்யும். மன்னனின் மகளோ கொழும்பில் நடந்த இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்து தனது சகோதரன் பராமரிப்பில் மீதி காலத்தை தள்ளுகின்றார். அவர்கள் வாழ்ந்த அரண்மனை இன்று அடையாளம் இழந்து சிதறி போனது வருத்ததை வரவழைக்கின்றது.

மதலேன் என்ற கதாபாத்திரம் ஒரு பெண் எதிர் கொண்ட கொடும் துயருக்கு சாட்சியாக உள்ளது. சந்தேக நோய் கொண்ட கணவனுக்கு மனைவியாக வேண்டி வந்த மதலேன் தன் உண்மையை விளக்க  திராணியற்று கணவர் கண் முன்னே தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்படுகின்றார். மதலேன் வாழ்க்கைக்கு பெரும் இடஞ்சலாக இருந்த அவர் அத்தை மகன் பாதிரியார் பபிலோன்  மனித குணமே அற்ற அரக்கனாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளார்.

தூத்துகுடியின் குடிநீர் விநியோகத்திற்கு வழி வகுத்து சிலுவை பர்னாந்து போன்ற தலைமைகள் பரதவர்கள் மத்தியில் உருவாகாதது பெரும் குறையாகவே கதாசிரியர் எடுத்து காட்டுகின்றார். 

ஒரு காலத்தில் பல தலைமுறைகளாக ஏற்றுமதி வியாபாரத்தில் கொடி கட்டி பறந்த சிங்கராயர் குடும்பவாரிசு  செல்வதாஸ் 2000 ஆண்டுக்களில் காலில்  பழைய மூன்று செருப்புகளை ஒன்றாய் சேர்த்து தைத்து அணிந்து நடந்து சென்ற வறுமை நிலை கண்ட கதாசிரியர் தன் இனத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? என்ற தேடுதலில் முடிவு தான் இப்புத்தகம்.. பரதவரின் பூர்வீக பூமியான தூத்துகுடியில் இன்று பரதவர்கள் அடையாளம் இழந்ததின் காரணம் நாவலில் விரிவாக விவரித்துள்ளார். ஒற்றுமை இன்மை, ஒரு தலைமையை ஏற்று கொள்ள விரும்பாது ஆள் ஆளுக்கு ராஜாங்கம் செய்ய நினைத்த இனம், . தலைமையாக உருவாகியவர்களும் இனமக்கள் நலம் என்பதை விடுத்து தன் நலத்தை நாட இனத்தின் அழிவு துவங்குகின்றது.நமது கலாச்சாரத்தின் அடிப்படையான குடும்பங்களில் காணும் உறவு கேடுகள் கணவருக்காக விட்டுக் கொடுக்காத மனைவி மனைவிகளுக்கு துரோகம் செய்யும் கணவர், கூட்டு குடும்பத்தில் நம்பிக்கை வைக்காத பண்பு,. சொந்த சகோதரனின் வளர்ச்சியை தடுக்க நினைத்து  மற்று இனங்களுக்கு இடம் கொடுத்த கொற்கை கடைசியில் கொற்கையில் எல்லா வணிக பிடிப்புகளும் மற்று இனங்கள் ஆளுகைக்கு உட்பட்ட போது வெறுமெனே வேடிக்கை பார்க்கும் சூழலுக்கு வறுமை பிடிக்குள் வீழும் துயர் நிலையும் காண்கின்றோம்.  

கொழும்பில்  நடந்த அரசியல் மாற்றங்கள் இனக்கலவரங்களும் கடலை நம்பி இருந்த மக்களுக்கு பாதகமாக அமைகின்றது. கொற்கையை விட கொழும்பை நம்பி சென்றவர்கள் இனக்கலவரத்தில் தங்கள் சொத்தை இழந்து அனாதர்களாக கொற்கை வந்தடைகின்றனர். போரில் ஈழத்தமிழர்கள் போன்றே  பாதிக்கப்பட்ட மக்களாக கொற்கை மக்கள் மாறுகின்றனர். சிங்களவர்களும் கொற்கை தமிழர்களும் திருமணத்தால் இணைந்த சமூகத்தை பற்றியும் குறிப்பிட்டுள்ளர்.




பரதவர்கள் என்ற ஒரே இனம் தங்கள் வசதி வாய்ப்புகள் சார்ந்து பிரிந்ததும்  மேசைக்கரர்கள் என்ற பணக்காரர்கள் ஆங்கிலேயர்களுடன்  பின்பு அரசியல் அதிகாரத்துடன் சேர்ந்து தங்கள் இனத்தையே நெருக்கும் அவல நிலையும் காண்கின்றோம்.  இப்படியாக பிரிந்து வளர எண்ணிய இனம் மற்று இனத்தின் ஒற்றுமையான வளர்ச்சிக்கு முன் சிந்தி சிதறி ஒன்றுமில்லாது ஒடுங்குகின்றது.  மாற்றங்களுக்கு அனுசரித்து தன்னை மாற்றி கொள்ளாத பரத இனம் தன் முடிவை தானே தேடி கொண்டதாக காண்கின்றோம். இவர்களின் ஒற்றுமை இன்மையான மனநிலைக்கு கிருஸ்தவ தழுவலும் ஒரு காரணமாக கதை ஆசிரியர் காண்கின்றார். கிறிஸ்தவமும் தங்கள் மத வளர்ச்சிக்காக பயண்படுத்திய இவ்வினத்தின் வளச்சியை முன்நிறுத்தவில்லைஎன ஆசிரியர் நிறுவுகின்றார்.

முத்துலிங்கம் –சண்முகவேல் நாடார் குடும்பத்தை முன்நிறுத்தி நாடார் இனமக்கள் ¯உழைப்புடன் தங்கள் தலைமைக்கு என ஒரு இடம் கொடுத்து முன்னேறியதாக குறிப்பிடுகின்றார். . ரேவதி பர்னாந்தை திருமணம் செய்ததும் சில்வியா ரமேஷ் நாடாரை திருமணம் செய்து நாடார் இனத்துடன் கலந்து வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டுவதையும் அறியலாம். 

இப்புத்தகம் பல எதிர்ப்புகளை சந்தித்ததில் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை. கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையை கேள்வி எழுப்புகின்றது. அதே போன்று கடவுளின் மறு அவதாரமாக காணும் துறவியர் செய்யும் அட்டூளியங்களையும் கூறியுள்ளார். ஜோ டி குரூஸ் அடிக்கடி பல பொது கூட்டங்களில் கூறுவது போல் இவருடைய அடிப்படை பள்ளி கல்வி கல்லூரி படிப்பு யாவும் கிறிஸ்தவ பள்ளிகளில் அமைந்துள்ளது. சிறப்பாக இவர் தூய சவேரியார் மேல் நிலைப்பள்ளி லயோளா கல்லூரி மாணவர் ஆவார். கதாசிரியரின் ஆயிரம் கண்களை திறந்து விட்டதும் அவர் குறைப்படும் நிறுவனமாக கிறிஸ்தவ பாதிரியார்களின் பள்ளிகளே. யேசு சபை துறைவிகளால் மட்டுமே ஆழ்ந்த சிந்தனையுள்ள கேள்விகள் எழுப்பும் மனிதர்களை உருவாக்க இயலும் என்பதற்கு  எடுத்து காட்டாக ஜோ குரூஸும்  திகழ்கின்றார். (இன்று இந்தியா அளவில் முழு விச்சில் செயலாற்றும் பல அரசியல்வாதிகள் கலைஞர்கள் யேசு சபையில் கல்வி நிறுவனகளில் உருவாகியுள்ளவர்களே.) பிலிப் சந்தன மாரியை சந்திக்க வேண்டும் என்ற நோக்கில் பயணிக்க ஆனால் அவர் சந்திக்காதே பயணம் நிறைவு பெறுகின்றது. கிறிஸ்தவர்களால் திரும்பவும் தாய் மதம் திரும்பி நிம்மதியாக வாழ இயலாது என்பதை தான் பிலிப்பின் நிறைவு பெறாத விருப்பத்துடன் முடிவு எட்டுகின்றது. 
அடிப்படையில்  பாதிக்கப்பட்ட தன் இன மனிதர்களுக்காவும் குறிப்பாக அடிமட்ட மக்களுக்காக குரல் கொடுத்த இந்த நாவல் ஆசிரியர் போற்றுதலுக்குரியவரே. பரத இன பெண்களை மோசமாக சித்தரிகரித்தார் என குற்றம் சாட்டபட்டு வழக்கும் தொடுக்கபட்டுள்ளது. இக்கதையில் 100 க்கும் மேற்பட்ட பெண் கதாபாத்திரங்களை பரிசயப்படுகின்றோம். ரஞ்சிதம், வலேறியா,  போன்ற கதாபாத்திரங்களை பொய்மையாக புகழ இயலாது ஆனால் சாரா பாட்டி, விர்ஜித், சலேமியா, ரேவதி சுகந்தி, சில்வியா போன்ற பல பெண் கதாபாத்திரங்களை காலத்தால் அழியா வண்ணம் சிறப்பாக படைத்துள்ளார்.

இந்த நாவலின் பாதிப்பில் இருந்து அவ்வளவு எளிதாக யாராலும் வெளி வர இயலாது. பல ஆயிரம் வருடங்களாக பல நாடுகளுடன் வணிகம் செய்து வந்த மக்களின் வீழ்ச்சி அதன் தாக்கம்  எளிதாக நம்மை விட்டு மறைய போவதில்லை. கொற்கைக்கு இனி செல்லும் போது ஒவ்வொரு தெருவும், நாம் காணும் மனிதர்களும் மேலும் பரிசயம் கொண்டவர்களாக தெரிவார்கள். சமீப காலங்களில் அணு உலைகள் மணல் கொள்ளை என தினம் காணும் செய்தியில் வரலாற்று உண்மை;  நம்மையும் சுடுகின்றது.  தேரிக்காட்டு பயலுக என அவர் திட்டுவது கூட இப்போது  வேதனையாக தெரியவில்லை. அது ஒரு இனத்தின் தீராத வேதனையின் குரலாகத்தான் ஒலிக்கின்றது. உண்மைகள் பிடிவாதமானவை, மறைக்க இயலாதவை. மறுக்க இயலாதவை.  இந்த புத்தகம் ஜோ குரூஸின் மட்டும் பார்வை அல்ல ,ஆதங்கம் அல்ல ஒரு இனத்தின் அழு குரலாகும். . ஏக்கமாகும், எதிர்பார்ப்பாகும்.  ஒரு முறை வாசித்து என் அறிவுக்கு எட்டியவை நினைவுக்கு எட்டியவை பகிர்ந்துள்ளேன். பாலியல் தொழிலில் ஏற்பட்டிருக்கும் தன் தாயை சந்தித்த கோபால் மயக்கு மருந்து அடிமையான மகனால் கொல்லப்பட்ட தாய் என பல மனிதர்களை நாம் சந்திக்கவைக்கும் நூல்.)