header-photo

இந்தியாவின் வேர்கள் தேடி..........சிந்தாமணி கிராமம்.(Cinthamani)

இந்தியாவின் வேர்கள் தேடிய எங்கள் மேதினப் பயணம் சென்றடைந்தது சிந்தாமணி  கிராமத்தில் தான். நெல்லையில் இருந்து சாத்தான்குளம் போகும் வழியில் இந்த கிராமம் அமைந்துள்ளது.   நாங்குநேரி  தாலுக்கை  சேர்ந்த  இந்த கிராமம்   பாசமான மக்கள் திரும்பும் திசை எங்கும்  ஆலயங்கள், குளங்கள் என பசுமையாக உள்ளது.

2011சென்செஸ் பிரகாரம்  679  ஆண்கள் 650 பெண்கள் உள்ளடங்கிய   355 குடும்பங்கள் வசிக்கும் பகுதியாகும் இந்த கிராமம். கிராமத்தின் அருகே பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் இருப்பதால்  96% எழுத்தறிவு கொண்ட கிராமமாக விளங்குகின்றது.  18 % மக்கள் தங்கள் வாழ்வாதரத்திற்கு என விவசாயத்தை நம்பி உள்ளனர்.


ஊர் ஆரம்பபள்ளியை வந்தடைந்தோம்.  ஊர் ஐஸ்க்காரர் எங்களை அன்புடன் வரவேற்றார். பள்ளிக்கூட நாட்களில் ஐஸ்க்காரரை கண்ட அதே மகிழ்ச்சியுடன் நாங்களும் ஐஸ் வாங்கி உண்டு மகிழ்ந்தோம். ஆனாலும் நம்ம கால சுவையான ஜவ்வரிசி ஐஸ் தற்போது இல்லை. பால் ஐஸ் கூட நாம் வாங்கி சாப்பிட்ட ருசி இல்லை. இந்த தலைமுறையை விட நாம் ஆசிர்வதிக்க பட்டவர்கள் தான். ஐஸ் சுவைத்து கொண்டே தன் விளையாட்டு வீரரான தந்தையின் விருது கோப்பைகளை ஐஸ்காரரிடம் கொடுத்து ஐஸ் வாங்கி தின்றதும் கோப்பைகள் காணாது போனதை  கண்டு பிடித்த அவருடைய தாயார் அடித்து உதைத்த   கதையை சுவைப்பட சொல்லி கொண்ருந்த  போது  அவ்வழியே உணவு -உண்ணா சாமியார்  வந்தடைந்தார். சாமியாரிடம் பேசின போது தான் அவர் பல மருத்துவ மூலிகை மருந்துகளை தயார் செய்து வருவதாக அறிந்தோம்.
.
எங்கள் குழுவிலுள்ள விடலை பசங்கள் சாமியாரிடம் நெருங்கி ரகசியமாக முகப்பருவை போக்க ஏதும் வழியுண்டா என வினவி கொண்டிருந்ததனர். இதுவெல்லாம் மருத்துவ உலகில் ஒரு பெரிய பிரச்சினையா கான்சரை போக்கும் மருந்தே தன்னிடம் உள்ளதாக கூறின சாமியார் தான் கடந்த இரண்டு வருடங்களாக வெதுவெதுப்பான நீர் ம்ட்டுமே பருகி வருவதாகவும்  வெறும் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்து வரும் ரகசியத்தை கூறினார்.  இனி வானில் பறப்பதற்கான பயிற்சி செய்து வருவதாகவும் கூறினார்.

இந்த சாமியார் முன்னொரு வருடங்களில் என் ஜி ஓ காலனியை அடுத்த ஜெபா கார்டன் பகுதியில் வியாபாரம் செய்து வந்த சிறந்த  ஒரு வியாபாரி ஆவார்.  பின்பு காசிக்கு பயணம் மேற்கொண்டு தன் வாழ்க்கையை ஆன்மீகதில் திருப்பியதை அறிந்தோம்.  சாமியார்  விடைபெற்று செல்லும் முன் சாமி அருள் பாலித்தது போல் ஆண் உலகத்தின் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரு மாபெரும் மருந்தை பற்றி விளக்கினார். மகிழ்ச்சியான ஆண் பட்டாளம்  தங்கள் பாரமான கிமாரவை தூக்கி கொண்டு கிராமத்திற்குள் உற்சாகமாக படை எடுத்தனர்.

சூரியன் உச்சியை தொட ஆரம்பித்ததால் கடும் வெயில் வாட்ட ஆரம்பித்தது.  இருப்பினும் நம் கிராம மக்களை சந்திக்கும் ஆவலுடன் வீதி வீதியாக சென்றோம். எப்போதும் போல் குழந்தைகள் துள்ளி விளையாடி கொண்டிருந்தது.    ஆயாக்கள் குழந்தைகளை இடுப்பில் வைத்து கொண்டு வாசல் படி கடந்து வந்து எட்டி பார்த்தனர். ஆயிரம் நன்றிகளை மனதில் நினைத்து கொண்டு குழந்தைகள் படங்களை கொள்ளையிட்டு கொண்டிருந்தோம். சின்ன சின்ன குழந்தைகளின் வஞ்சனை இல்லா சிரிப்பும் கேலிப் பேச்சுக்களும் மனதை கொள்ளை கொண்டன. ஒரு எட்டு மாதக்குழந்தை தன் பாட்டியில் கையில் இருந்து எங்களை நோக்கி சிரித்தது. அக்குழந்தை பிறக்கும் 12 நாட்களுக்கு முன்னே அதன் தந்தை இறந்து விட்ட துயர் செய்தியும் பகிர்ந்தார் அத்தாய். கோயில் அருகில் ஒரு பாட்டி முறம் கொண்டு நெல்லை புடைத்து கொண்டு இருக்க தாத்தா அருகில் இருந்து பரிவுடன் நோக்கி கொண்டிருக்கும் அரிய காட்சியை காண இயன்றது.                                                                         

கண்ணாடி அணிந்த ஒரு முதியவரை சந்தித்தோம். அவர் அப்போது தான் வேலை முடிந்து குளித்து விட்டு வீடு வந்து சேர்ந்தார். அழகான கறுப்பு முக்கு கண்ணாடி அணிந்திருந்தார். எங்கள் குழுவின்  தூண்களில் ஒருவரான முத்து குமார் சகோதருடன் அழகிய சிரிப்புடன் போஸ் கொடுத்தார்.


வீடுகளின் முன் பகுதியை தென்னம் கீற்றால் மறைத்துள்ளனர். பல வீடுகள் முன் நம் பாரம்பரியத்தின் அடையாளமான திண்ணைகள் உள்ளது. தந்தையும் இரு மகள்களும் எங்களை கண்டதும் சிரிப்புடன் வரவேற்றனர். .அவர்கள் அம்மா வயலுக்கு வேலைக்கு சென்றதாக கூறினர். மே தினம் அன்று கூட விடுமுறை அற்ற உழைப்பாளி பெண்கள் கொண்ட் நாடு நம்முடையது என்ற உண்மை சுட்டது! காலையில் சென்றிருந்தோம் என்றால் பதநீர் தந்திருப்பதாக கூறினர்..(எங்கள் குழு முதல்வரே அடுத்த முறை ஏனும் அந்த ஊருக்கு காலை அழைத்து செல்லுங்கள்) 

சூரிய ஒளி கண்ணை மட்டுமல்ல மண்டையையும் பிளர்க்க ஆரம்பித்து விட்டது. இனி நடக்க இயலாது என்ற சூழலில் ஒரு வீட்டு பக்கம் வேலி ஓரமாக நின்று கொண்டிருந்தோம். அந்த வீட்டில் குழந்தைகள் சத்தம் போட்டு கொண்டிருந்தனர். மழலை பள்ளியோ என நாங்கள் கூர்ந்து கவனிக்க  “ஏ பண்ணாடை டீவியை தொடாதை ஏய் சத்தம் போடாதை” என்ற கட்டளைகள் பாய்ந்து கொண்டிருந்தது. மே தின சிறப்பு நிகழ்ச்சி காண குமிந்துள்ளனர் என விளங்கியது. 

தொலைகாட்சியில் தஞ்சம் அடைந்த மக்கள் கிமாராப்படையை கண்டதும் வெளியே வர ஆரம்பித்தனர். கிராம உடையில் இருந்து சின்னச்சிறு குழந்தைகள் வடக்கு- தெற்கு என நவ நாகரிக உடையுடன் பவுடர் பூசி மேக்கப் இட்டு வெளியை வர ஆரம்பித்தனர். கிராம மக்கள் வீட்டில் தொலைபேசி தொலைகாட்சி வானொலி என தகவல் தொழிநுட்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என நாங்கள் நினைத்து கொள்ள; அவர்களோ  இவங்க எல்லாம் இந்த படங்களை இன்டெர் நெட்டுலை போட போராங்க, நம்ம ஊரை உலகமே பார்க்க போகுது என பேசி கொண்டிருப்பது கேட்டது.


என்னவர் வெயிலின் ஆதிக்கத்தை பொறுக்க இயலாது "போதும்டீ வெயிலில் போட்டு என்னை வறுத்து எடுக்காதே, வீட்டுக்கு போவோம் என கண்ணாலே பேசிக் கொண்டிருந்தார். வீட்டு நினைவால் வாடியது என்னவர் மட்டுமல்ல இல்லற அரசிகள் உடன் இல்லாது தனியாக வந்த கணவர்களும் பசியும் வெயிலும் மிரட்ட மனைவியர் புராணம் பாட ஆரம்பித்து விட்டனர். ஐ…ஐயோ எங்க வீட்டிலிருந்து 2 மிஸ்டு கால் வந்திடுச்சு என்னை தேட ஆரம்பித்து விட்டாளே………இன்னொரு நண்பர் போனை எடுத்து என்னம்மா என்று கேட்க .”டமால் டுமீல் என சத்தம் கேட்க அம்மா……….. அப்பா……….. என்று கிடைத்த வண்டியை எடுத்து கொண்டு சாமியோ! காப்பாத்து என்று  தங்கள் காதல் மனைவியரை தேடி பறந்தனர்.(வீட்டில் இருக்கும் மனைவியர் தங்கள் கணவர்களை நினைத்து பெருமை பட்டு கொள்ளலாம்  எப்போதும் என்னேரவும் மனைவி நினைவில் வாழும் பக்த கணவர்கள்!) நானும் தோழி அமுதாவும் சேர்ந்து கொண்டதால் சுவாரசியமான நிகழ்வுகளை கண்டு பேசி, கதைக்க, சிரிக்க இயன்றது.


நெல்லையை சேர்ந்த ஜானகி ராம் உணவக அதிபர் சிந்தாமணி ஊரை சேர்ந்தவர் என்பதால் எங்கள் குழு அவர்கள் ஊருக்கு சென்றிருப்பதை அறிந்து குடும்பத்தினருடன் வந்து வரவேற்று அறுசுவை உணவு அளித்து மகிழ்வித்தார். கிராமத் தலைவரான அவருடைய சகோதரர் உயர் திரு ராமசுப்பு, தங்கள் கிராமம் இந்தியா ஜனாதிபதியிடம் இருந்து இரண்டாவது முறையாக விருது பெற்றதை பெருமையுடன் குறிப்பிட்டார். சென்னையில் தொழில் அதிபரான அவர்களுடைய மாமா நவநீத கிருஷ்ணன் உறவினர் ரவி குடியாத்தம் போன்றோர் தங்கள் சொந்த ஊருக்கு வருகை தந்திருந்தனர். சென்னையில் வாகனங்களின் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தாலும் தன் ஊர் பசுமையுடன் திகழ வேண்டும் என்ற நோக்குடன் கிராமம் முழுதும் மரம் நட்டு வளர்த்தும் வருகின்றார். மரம் பராமரிப்புக்கு என்றே பணியாளர்கள் குழு மட்டுமல்ல அவைக்கு தினம் தோறும் தண்ணீர் கிடைக்க செய்யும் நோக்குடன் தண்ணீர் தொட்டி வாகனவும் வாங்கி கொடுத்துள்ளார்                                                                                                                                                                        13ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் காலம் தமிழகத்தில் குடியேறிய இவர்கள் இந்திய முழுக்க உணவக தொழில்களில் மிளிர்கின்றனர். கிருஷ்ணதேவராயர் காலம் தான் லட்டு போன்ற உணவு கலாச்சாரங்கள் நம்மில் புகுந்தது என நினைவில் கொள்க. இவருடைய மாமா வழக்கத்தில் இருந்தும் விலகி வாகன இதரி பொருள் தொழில்சாலை நடத்தி வருகின்றார். ஆறு தலைமுறையாக குடியிருக்கும் ரெட்டியார் குலத்தவர்களான இவர்கள் நாட்டின் எந்த மூலயில் இருந்தாலும் வருடம் ஒரு முறை தங்கள் கிராமத்திற்கு வந்து செல்வதை கடமையாக கொண்டுள்ளனர். பல நூற்றாண்டுகளாக பர்மா இலங்கை போன்ற நாடுகளுடன் வியாபாரம் செய்து வந்தமையால் இவர்கள் வீடுகளின் கட்டமைப்பு தோற்றங்களில் அதன் தாக்கம் தெரிகின்றது. நவ நாகரிக காலத்திலும் இவர்கள் வீடு தறை ஓடு கொண்டும் பழைமையின் கம்பீரமான கதவுகள், மற்றும் கட்டை மேல் சுவர்கள் என காலத்தால் அழியா வண்ணம் பழமையின் அழகுடன்  விளங்குகின்ற வீடுகளில் தான் தற்போதும் வசித்து வருகின்றனர். கால சூழலுகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் ஏற்படுத்தியிருந்தாலும் பழமையின் எளிமையான அழகால் வீடுகள் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது.                                                                                                                                                                      
  அன்றைய தினம்    நெல்லை ஜானகி ராம் உணவக அதிபரால் நெல்லை புகைப்படகுழுவின் லோகோவும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாரியப்பன் அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தியதுடன் அவ்வீட்டு பாட்டிகளை வைத்து  கேக் வெட்டி உண்டு அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டோம். விடுமுறைக்காலம் என்னதால் உறவினர்களால் நிறைந்து வழிகின்றது அவர்களுடைய வீடுகள்.   குழந்தைகளும் பெரியவர்களுடன் இணைந்து விருந்தினரை உபசரிக்கின்றனர் என்பது இனிமையான காட்சியாக இருந்தது.                                                                                                                                                                                                                                                                                இயற்கை விவசாயத்தில் அக்கறை கொண்டிருக்கும் ராம் குமார் அவர்கள் தங்கள் தோட்டத்தில் வைத்திருக்கும் தேனி வளர்ப்பு முறை பற்றி விவரித்தார். தேனிகள் அழிந்தது தான் நம் விவசாய சரிவுக்கு முக்கிய காரணம் என்று கூறினார். பூச்சி விரட்டியே தேவை,  பூச்சி கொல்லிகள் அல்ல இவை  இயற்கையை அழிக்கவே உதவும் என்று வலியுறுத்தினார். ஒவ்வொரு குடும்பவும் தங்களுக்கான உணவு காய்கறிகளை உயிர்கொல்லிகள் தளிக்காது பயிறிட வேண்டிய  தேவையை பற்றியும் குறிப்பிட்டார்.  எங்கள் நோக்கத்தை உற்சாகப்படுத்தியதுடன் எங்களை சிறப்புற கவனித்து  அவருடைய குடும்பத்தார் சிறப்பாக அக்குடும்ப குழந்தைகள், உறவினர்கள் அனைவரும் இன்முகத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.  
மே தினத்தை உழைப்பாளிகளுடன் செலவிட்டதை எண்ணி மகிழ்ந்து திரும்பினோம். 

5 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

நிலா said...

நான் சிந்தாமணிக்குப் போயுள்ளேன். என்னுடன் பிறக்காவிடினும் சொந்த அக்காவாகவே என் மேல் அன்பு காட்டும் தம்பி ராம்குமார், அவர் மனைவி, மகன் சகிதம் அங்கு போனபோது எனக்குக் கிடைத்த வரவேற்பும் மரியாதையும் தனி! அதைச் சொல்வதில் எனக்குப் பெருமை!

இக்கிராமத்தினர் மேன் மேலும் சிறக்கட்டும்

அன்புடன் நிலா

Rajesh cs said...

இது எங்கள் ஊர்

Veerapandi Veerapandi said...

எங்கள்

Veerapandi Veerapandi said...

எங்கள் ஊா் மக்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்த அவர்களுக்கு நன்றி

Post Comment

Post a Comment