6 Apr 2014

பில்லை போட்டு மிரட்டும் பல் மருத்துவ மனை

எங்க ஊரில் இப்போது பல நவீன மருத்துவ மனைகள் வந்த வண்ணமாகவே இருக்கின்றது. அதிலும் அரசு அலுவலக அல்லாதோர் தெருவில் நல்ல நல்ல புது மருத்துவ மனைகள் வந்துள்ளது. மகாராஜர் மருத்துவ மனை மிகவும் அழகு வாய்ந்தது. அங்கு போனால் பல் வலியுடன் கன்னத்தில் கைவைத்து கொண்டே கண்கவரும் சுவர் மேல்க்கூரை அலங்காரத்தை பார்த்து கொண்டே இருக்கலாம். ஒரு ஒலிப்பேழை கேட்டு கொண்டே இருக்கும். மருத்துவரும் கருணையுடன் பல்லை பரிசோதிப்பார் ஒட்டுவார், பிடுங்குவார். ஆனாலும் சில காலமாக அந்த மருத்துவ மனை ஒன்றாம் வகுப்பு  பணக்காரர்களுக்காக மாறிப்போனது தான் உண்மை.

இன்று வந்த மருத்துவ மனை வாசல்ப்படியில் ஒரு காவலாளி அப்பிராணியாக உட்காந்து இருந்தார். வரவேற்பு பெண் விமானப்பணிப் பெண் போல் கொண்டைபோட்டு சாரி கட்டியிருந்தார். அழகாகவும் இருந்தார். பேரைக்கேட்டு எழுத தான் கொஞ்சம் சிரம்ப்பட்டார். பேரிலுள்ள சிக்கலைக்கருதி நானே எழுதி கொடுத்து விட்டேன். என் பெயரை ஜோஸ்ஃபின் என்று எத்தனை முறை கூறினாலும் பலருக்கும் ஜோஸ்லில், ஜோஸ்வின்,ரோஸ்லின் என்று தான் கேட்கும்!

மருத்துவர் இன்னும் வரவில்லை என்றும் சில நேரம் காத்திருக்க கூறினர்.  ஆதித்திய சானல் ஓடிக்கொண்டிருந்தது. பல் அடைக்கும் வலியுடன் வந்தால் சிரிக்க பிரச்சினை வரவில்லை.ஆனால் ஆதித்தியாவில் நம்மை சிரிக்க வைக்க வேண்டும் என்ற  நோக்குடன் வேஷம் போட்டு  பேசிய, பெண் மொக்கை மொக்பேசிகொண்டு இருந்தார். உடை ரசனை  நல்லாவே இல்லை. மீடியா  படித்து வெளியேறும் மீடியா மாணவிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்களோ இதுவா இவர்கள் பணி என  அங்கலாய்த்த வண்ணம் பார்த்து கொண்டு இருந்தேன்.

என்ன தான் மகிழ்ச்சியாக பல் மருத்துவ மனைக்கு அழைத்து வந்தாலும் பணத்தை எவ்வளவு சுரண்டனுமோ என்று அத்தான் முகத்தில் பயம் நிழலாடியது தெரிந்தது. மருத்துவர் வந்து விட்டார்! மனிதர் கோட் சூட் போட்டு ஒல்லியாக சிரித்து கொண்டே நடக்கும் இளம் மருத்துவர். நெல்லை கொளுத்தும் வெயிலிலும் கோட்டா என்ற சிந்தனையில் இருக்க முன் இருக்கையில் இருந்த வயதான அம்மாவை அவர் கணவர் அன்பாக அழைத்து சென்று கொண்டிருந்தார்.

அடுத்து வடிவேலு ஜோக்கு ஓடி கொண்டிருந்தது.  பிரம்மா படத்திலுள்ள சசிகுமார் ஜோக்கும் வந்து விட்டது. சசிக்குமார்  படத்துக்கு படம் ”உங்க  நேர்மை பிடித்திருக்கு” என்று கழுத்தை அறுக்கின்றார் என்று எண்ணும் வேளையில் என் வரிசை வந்து விட்டது.

கல்லூரி படிப்பு நேர்முகம் போல் இருக்க வைத்து சில கேள்விகள் கேட்டார் மருத்துவர். என்ன பிரச்சினை,  இடது பக்கம் பல்லில் சொத்தை அடைக்க வேண்டும். வலது பக்கம் ரூட் கனால் செய்திருக்கும் பல் பக்கமுள்ள பல்லை பிடுங்க வேண்டும். மருத்துவர் தீர்கமாக என் முகத்தை நோக்கினார். சேவையும் மிஞ்சி சில வணிக நுணுக்கவும் அவர் முகத்தில் தெரிந்தது.  பரிந்துரைக்கும் முன் முதலில் பரிசோதிக்க வேண்டும் என்றார். பல்லை லைட்டு அடித்து பார்த்து விட்டு எக்ஸ்ரே எடுத்து பார்த்தால் தான் சிகித்சையை முன் நடத்த இயலும் என்று ஒரு போருக்கு தயார் ஆகும் வண்ணம் ஆழமாக கதைத்தார்.


அடுத்து எக்ஸ்ரே அறைக்கு அழைத்து சென்றனர். வாய்க்குள் ஒரு சதுரமான அட்டையை வைத்து படம் பிடித்தனர். பின்பு வந்து என்னவரையும் அழைத்து  விரிவுரை நிகழ்த்தினார். நாலு பல்லுக்கு ஒட்டு போட வேண்டும். பக்கத்தில் இருக்கும் பல்லை ரூட் கனால் செய்து பாதுகாக்க வேண்டும். ஏற்கனவே ரூட்கனால் அனுபவம் இருந்ததால் இப்போது தேற்வு பணியில் உள்ளேன். அடுத்த வாரம் வந்து சிகித்சை மேற்கொள்கின்றேன் என்றேன். மருத்துவர் முகத்தில் தெளிந்த பிரகாசம் இருட்டாக மாறி கொண்டிருந்ததை வேதனையுடன் பார்த்து கொண்டிருந்தோம்.

ரூட் கனாலுக்கு  ஐந்து வருடம் முன்பு 3000 ரூபாய் செலவானது.  ஒரு பிடித்த பல்லை பாதுக்காக்க வேடும் என்ற ஆசையில் ரூட் கனாலுக்கு ஒத்து கொண்டாலும் அந்த பிடித்த பல்லை ஈவு இரக்கம் இன்றி வெட்டி எடுத்தார் மருத்துவர். அதற்க்கு மேல் ஒரு தொப்பி பல்லுக்குள் ஸ்கூரு போன்று முறுக்கி வைத்தனர். ஆனால் இன்றும் உணவு எடுக்கும் போது வலி தரியத்தான் செய்கின்றது. பல்லை வெட்டி மாற்றியதை தான் ஏற்று கொள்ளவே இயலவில்லை. வெட்டுப்பட பல்லுக்கு விதி இருப்பின் வெட்டுப்படாது பிடுங்கி போட்டிருக்கலாமே என்று இன்றும் வருத்தம் உண்டு.

இரண்டு பல்லுக்கு சிமின்று சாந்தும், ஒரு பல்லுக்கு விலையுயர்ந்த பசை ஒட்டினால் நல்லது என்றும் கூறினார். பல்லை ஒட்டும் முன் சுத்தப்படுத்த வேண்டும் என்றார். தேவையா என்று கணவர் முகத்தை நோக்கினேன். கணவர் சரி சரி என்று அனுமதி வழங்கியதும்வாகனத்தை அடித்து சுத்தம் செய்வது போல் சிறு இயந்திரம் மூலமாக பல்கள் சுத்தசெய்யப்பட்டது.  மருத்துவர் போன் சினுங்க ஆரம்பித்து விட்டது. பேசி முடித்து மறுபடி பல்லை ஒட்ட ஆரம்பித்தார். அதற்குள் வரவேற்ப்பில் இருக்கும் பெண் அவசரமாக மருத்துவரை அழைத்து சென்றார். மருத்துவர் வெளியில் சென்றதும் ஏதோ திட்டும் சத்தம் கேட்டது. எனக்கு முன் வந்த வயதான தம்பதிகள் பில்லை சொல்லி சண்டை போட்டு கொண்டு இருப்பதை ”டம்மி” செவிலியப்பெண்ணிடம்(+ 2 முடித்த பெண். செவிலியப் படிப்பு முடிக்க வில்லை) கேட்டு தெரிந்து கொண்டேன். அடுத்து மருத்துவர் வந்த போது அவர் முகத்தை மூடியிருக்கும் திரையை மீறி முகம் இருட்டு அடித்திருப்பது தெரிந்தது.  பெரியவர் ரொம்ப தான் திட்டி விட்டார் போலும்.....

எங்களுக்கும் பில் கிடைத்து விட்டது.
சாதாரண சாந்து ஒட்டு இரண்டு பல்    2 * 400= 800
                  ஸ்பெஷில் ஒரு பல் ஒட்டு    1* 600 = 600
                                           பல் சுத்தப்படுத்துதல்  = 600  
                                                      பல் ஒளிப்படம் = 450 மொத்தம் 2450 ரூபாயாம்.
பெரியவரைப்போல நம்மால் திட்டவும் இயலாது நம் அறிவுக்கு தெரியாதா? வாங்கி வைத்திருக்கும் இயந்திரம் , வரவேற்பறை பெண், உதவி செவிலியர், டம்மி செவிலியர், மருத்துவர் கோட் சூட், கட்டிட வாடகை,ஆதித்தியா தொலைக்காட்சி நிகழ்ச்சி, வடிவேல் காமடி, அழகிய வண்ண ஒளிகள் என நாம் கட்டணம் செலுத்த வேண்டாம். பல்லுள்ளவன் பட்டாணி சாப்பிடலாம், கைய்யில் காசிருந்தால் பல் மருத்துவ மனைக்கு செல்லாம். பல்லை பிடுங்க 300 ரூபாயாம்(உபரி தகவல்)
     

4 comments:

  1. Pathmanathan NalliahApril 07, 2014 7:08 am

    நாங்கள் நோர்வே விலையைச் சொன்னானல் நீங்கள் மயக்கம் போடுவீர்கள்

    ReplyDelete
  2. அப்பட்டமான உண்மைகளை எழுதி இருக்கிறீர்கள். பல் டாக்டரோடு அவரைச் சுற்றி உள்ள மருத்துவமனையின் செயல்பாடுகளையும் அழகாக சுவாரசியமாக சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் கதை எப்போதுமே யதார்த்த உண்மைகளைச் சொல்பவைதான். பல்லைப் புடுங்கு வதோடு பணத்தையும் மயக்க மருந்து தராமலே புடுங்கி விடுகிறார்கள். நல்ல பகிர்வு ஜோ. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நான் 3 மாதங்களாக ஒரு பல்லுடன் படும்பாடு பெரும்பாடு. எவ்வளவு செலவு என்று நீங்க கேட்கப்படாது. அழுதுடுவன்

    ReplyDelete
  4. அருமை!

    நம்ம அனுபவம் இது

    http://thulasidhalam.blogspot.co.nz/2005/09/blog-post_06.html

    இது ஒரு ஒன்பது வாருசங்களுக்கு முன்பு. இப்ப விலைவாசி எல்லாம் எகிறிப்போனதால் பத்துமடங்கா ஆகி இருக்கு பல்மருத்துவர் பில்:(

    ReplyDelete