header-photo

அழிக்கப்படும் தெய்வ குழந்தைகள்!!!
அவன் வீட்டில் பிறந்திருக்கும் குட்டி தங்கையை பார்க்க போனதால் என்னவோ அவன் சிரிக்கவே இல்லை. போதாத குறைக்கு தொட்டிலில் தூங்கும் குட்டி பாப்பாவை கிள்ளி விட்டான் என்று அவன் அம்மாவிடம் அடி வாங்கி அழுது முடித்த நேரம்! அவனை தூக்கி கொஞ்ச ஆசை இருந்தும் கூட குழந்தைகளை வலு கட்டாயமாக தூக்குவது, அவர்கள் கன்னத்தை அன்பு மிகுதியால் கிள்ளி மகிழ்வது, அவர்கள் அனுமதி பெறாது முத்தம் கொடுப்பது போன்றவை அவர்களை சங்கடப்படுத்தும் என்பதால் ஒரு போதும் நான் விரும்புவதில்லை. அன்றிருந்த அவசர பயண நேரத்தில் அவனிடன் பேசி பழகவும் நேரமில்லை. கையிலிருந்த புகைப்படக் கருவியில் அவனை படம் பிடித்த போது ஆர்வமாக நோக்கினால் கூட அவன் சிரிக்கவே இல்லை.

அவன் அம்மா, அவனுக்கு பிடித்த குளிர் பானம் கொடுத்து அவனை சமாதானப்படுத்த எத்தனித்து கொண்டு இருந்தாள். அவன் ஜூஸை குடித்து கொண்டே வந்த விருந்தினரை அவன் சிறு கண் வழியாக நோக்கினால் கூட அப்போதும் அவன் முகத்தில் மகிழ்ச்சி எட்டி பார்க்கவே இல்லை. தன் இடத்தை பறிக்க வந்த குட்டி பாப்பாவை சகிக்க மனமில்லாதவனாகவே நின்று கொண்டிருந்தான். ஆனால் அவன் விரும்பி குடிக்கும் அந்த குளிர் பானத்தில் அவன் நம்பிக்கைக்கு உரியவர்களே விஷம் கலந்து கொடுத்து கொன்றனர் என்பது மறக்க இயலாத துக்கமாக மாறி விட்டது இன்று. வெறும் நாலு வயது குழந்தையை நம்பிக்கை துரோகம் மூலம் கொலை செய்த நியாயத்தை எந்த காரணமாக இருந்தாலும் ஏற்று கொள்ள இயலவில்லை.

குழந்தை இந்த பூமிக்க வர காரணமானவர்களாக பெற்றோர் இருந்தால் கூட அவர்கள் உயிரை பறிக்க எந்த வகையிலும் அதிகாரம் இல்லாதவர்கள். கணவன் மனைவி சண்டை என்பது இன்று உலகமயமாகி விட்டது. பாசவும் நேசவும் ததும்பிய குடும்பங்களில் என்று பணம் ஒரு மகிழ்ச்சியின் காரணமாக எண்ண துவங்கினரோ; அன்றே சண்டை சச்சரவுகளும் ஆரம்பித்து விட்டது. பல பெரிய தீர்க்க இயலாத கணவன் மனைவி சண்டைகள் கூட ஒரே முத்தத்தில் தீர்க்கப்படுவவை.  இருந்தும் தங்களுக்குள் வரும்  பிரச்சினையில் பெற்ற குழந்தையை கொல்ல முடிவெடுக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. பத்து மாதம் பல வித துயர் மத்தியில் நொந்து பெற்ற குழந்தையை எவ்வாறாக கொல்ல மனம் வருகின்றது.  அதன் வாயில் அறிந்தே விஷத்தை ஊற்றி கொடுக்க எப்படி துணிகின்றனர்.

பிறந்த குழந்தை என்றில்லை ஒரு முழு குடிகாரனான வாலிப மகனை ஒரு தாய் விஷம் கொடுத்து கொன்ற பின் ஒரு வருடம் முன் இதயம் நொறுங்கி இறந்தார்.

காதல் என்ற போர்வையில் முதல் முதலில் பெற்றோர் நம்பிக்கையை குழி தோண்டி புதக்கும் பெண்கள் கணவனை பழி தீர்க்க தான் பெற்ற குழந்தைகளை கொலை செய்ய நினைப்பது அதிலும் பயங்கர நம்பிக்கை துரோகம். இந்த உலகத்தில் தன்னை நம்பும் முழு அன்பையும் பெற்றவர்களிடமே; முதலில் தாயிடமே எதிர் பார்க்கும் குழந்தையை கொலை செய்ய எவ்வாறு மனம் வருகிறது. குழந்தைகள் இவ்வுலகில் பல வித அச்சுறுத்தல் மத்தியில் வாழ்கின்றனர். பல காரணங்கள் கொண்டு கடத்தி செல்லப்பட்டு பல விதங்களில் கொடூரமாக கொல்லப்படுவதை நாம் அறிகின்றோம். இதில் பெற்ற தாயே தன் குழந்தையை கொல்வது தான் மன்னிக்க இயலாத குற்றம். கருணை உள்ளம் கொடூரமாகும் போது குழந்தை இரக்கத்தை எங்கு நாடுவது.

பெண்கள் மன நிலை “காலத்தின் கோலம்” என்ற வண்ணம் மாறி கொண்டிருக்கின்றது. ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று நம்ப வைக்கப்படுகின்றனர், நம்புகின்றனர். இதனால் பல வகையில் பெண்கள் தங்களை நிலைநிறுத்த எத்தனிக்கின்றனர் போராடுகின்றனர். தங்கள்  இயல்பான, எளிமையான நிலையை மறந்து; பணம் ஈட்டுவது, அலுவல் வேலை என்ற போட்டி பொறாமைக்குள் சிக்கி சின்னாபின்னமாய் கொண்டிருக்கின்றது பெண் உலகம். உலகைமே நம்மை கண்டு வியந்த குடும்பம் என்ற அமைப்பு அறிந்தும் அறியாதும் உடைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த குடும்ப விரிசலில் சிக்கி சின்னாபின்னமாகும் சமூகம் குழந்தைகள் அடுத்து முதியவர்கள்! முதியவர்கள் தெரிந்தே இந்த துயரில் எரிந்து அடங்கும் போது குழந்தைகள் அவர்கள் அறியாதே சிக்க வைக்கப்பட்டு நம்பிக்கை துரோகமாக அழிக்கப்படுகின்றனர்.போதிய சுகாதாரம், உணவு,கிடைக்காமையால் குழந்தைகள் மரணிப்பது விடுத்து  கொல்லப்படும் குழந்தைகளும் பெரும் துயரான சமூகநிலையையே காட்டுகின்றது.

கடந்த நாள் கண்ட பத்திரிக்கை செய்தி இன்னும் ஒரு கடும் துயரத்தை உணர்த்தியது. தங்கள் பல வருட எதிர்பார்ப்பில் பிறந்த குழந்தை நோயால் மரணித்து விடும் என்று அறிந்ததும் அக்குழந்தையின் பெற்றோர்  விஷம் அருந்தி விட்டு வாய்க்காலில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டனர். அக்குழந்தை 12 நாள் பின்னிட்ட வேளையில் அதுவும் இறந்து விட்டது. ஜனனம் அன்றே மரணம் உண்டு என்ற நியதியில் அக்குழந்தைக்கு நிம்மதியான மரணத்தை கொடுக்க ஏன் அப்பெற்றோருக்கு மனம் வரவில்லை. பெற்றோர் இல்லாது அவர்கள் அன்பு இல்லாது அக்குழந்தை வாழ்ந்த 12 நாட்கள் கொடியதாக இருந்திருக்கும். எத்தனை ஏச்சு பேச்சு, பழிச் சொல் கேட்டதோ தெரியவில்லை.

உலகமயமாக்கலில் பொருளாதரம் மட்டுமல்ல ஊடகம், அரசியல் எல்லாவற்றுடன் குடும்பம் என்ற கோயிலும் உடைக்கப்பட்டு விட்டது. அதில் குடியிருக்கும் தெய்வ குழந்தைகளும் அழிக்கப்படுகின்றனர்.

1 comments:

Avargal Unmaigal said...

//பல பெரிய தீர்க்க இயலாத கணவன் மனைவி சண்டைகள் கூட ஒரே முத்தத்தில் தீர்க்கப்படுவவை. ///

முத்தம் சத்தத்தை( சண்டையை ) அடக்கிவிடும் வல்லமை கொண்டது என்பது மிக உண்மை..

Post Comment

Post a Comment