header-photo

பாலாவின் பரதேசியும் உண்மை பரதேசிகளும்!எண்ணை படிந்த முகத்துடன் கரிதேய்த்த பெண்கள், ஒட்டுபொறுக்கி போன்ற ஆண்கள், பல பெண்டாட்டிகள் கொண்ட பெரியப்பா, ஒரு கொடூர வெள்ளைக்காரன், மதபோதக கோமாளி பரிசுத்தம் டாக்டர் என பாலா ஒரு படம் எடுத்துள்ளார். படத்தில் சொல்லப்பட்ட கதையில் உண்மை உண்டா என்பது தேயிலைத் தோட்டங்களின் வேலை செய்யும், ஓய்வு பெற்ற  மக்களிடம் வினவ வேண்டும்

 எஸ்டேட் பகுதியில் பிறந்து வளர்ந்தவள் என்ற நிலையில் இப்படம் உண்மைக்கு நிகரானதா என்றால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல உண்மைகளை மறைத்து தற்போது அவர்கள் தலைமுறை எதிர்கொள்ளும் பல துயர்களை, சவால்களை மறைத்த வெளிகொணர உதவாத படம் என்றே கூறுவேன். ஏற்கனவே தேனீர் என்ற நாவலில் தேயிலைத்தோட்ட வாழ்கையை பற்றி தேயிலதோட்டத்தில் வேலை செய்த தலைமுறையிலுள்ள டி. செல்வராஜ் அவர்கள் விவரித்துள்ளார்.டி செல்வராஜ் நாவல் தேனீர்! இவரே தோல் என்ற நாவலுக்கு இவ்வருடத்திற்கான சாஹித்திய அக்காடமி விருது பெற்றவர். தற்போது திண்டுக்கல்லில் வழக்கறிஞராக பணியாற்றும் இவரிடம் இப்படத்தை பற்றி வினவ தோன்றுகின்றது.தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்கை சொர்கபுரி இல்லை என்றாலும் இது போன்ற நரகம் அல்ல.  தற்போதைய அவர்கள் தலைமுறைய பற்றி எடுத்திருந்தால் இப்பெயர் மிகவும் பொருந்தும். கதைப்படி பார்த்தால் கூட ஒட்டுபொறுக்கியை ஒரு மனிதனாக பார்க்க தயங்கும் சூழலில் இருந்து தான் தேயிலை தோட்டம் தேடி வேலைக்கு செல்கின்றான். பஞ்சம் பிழைக்க சென்றவர்கள் தான் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இவர்களை வழி நடத்திய கங்காணிகள் தான் என்பதிலும் மாற்று கருத்து இல்லை. எஸ்டேட் நிர்வாகம் என்பது தொழிலாளர்கள் கங்காணிக்கு கீழும் கங்கணிகள் றைட்டர்  என்ற மேலதிகாரிக்கு கீழும் றைட்டருக்கு மேல் அதிகாரியாக வெள்ளைக்கார மேலாளர்கள் என்று  ஒரு அடுக்கு நிர்வாகம் தான் அங்குள்ளது. வீடுகளும் அதே போன்றே தொழிலாளர்கள் வரிசை வீட்டில் வசிக்கும் போது அவர்கள் மேல் அதிகாரிகள் தனி வீட்டுகளிலும் வெள்ளைக்காரர்கள் மக்கள் நடமாட்டம் அற்ற பங்களா போன்ற மாளிகையில் மலை மேல் தனித்து ராஜபோகமாக வசித்து வந்தனர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற போது கங்காணியின் தேவை தேயிலை தோட்டங்களுக்கு இருக்கவில்லை. ஏற்கனவே போதிய அளவு தமிழ் தொழிலாளர்கள் இருந்ததால் கங்காணி ஒழிப்பு திட்டம் வழியாக கங்காணி வாழ்கைக்கு மண்ணிட்டு அங்கு புகுந்தவர்கள் தான் சூப்பர் வைசர்கள் என்ற நவீன அதிகாரிகள்.


 கங்காணிகள் பெரும் வாரியானோர் தலிது சமூகத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தனர், இவர்களை நம்பி தேயிலை தோட்டங்களில்  தொழிலாளர்களாக வந்தவர்களும் தலிதுகள் தான்.  சுதந்திரம் பின்பு இவர்கள் சேவையை மறந்து இவர்களை புரக்கணித்தது நிர்வாகம். தற்போது அவ்விட அதிகாரத்தை பிடித்தது மலையாளி சூப்பர்வைசருகளே. அதிகாரிகளாக வந்த பலர் நாகர்கோயிலை சேர்ந்த நாடார் மற்றும் மலையாளி இனத்தவர் ஆவர். தமிழ் தொழிலாளர்கள் வெள்ளைக்கார ஆட்சியாளர்களால் மட்டுமல்ல தங்கள் குழுத்தலைவரான கங்காணி மற்றும் அதிகாரிகளாலும் துன்புறுபடுத்தபட்டுள்ளனர். இந்த கொடிய நிலை தேயிலை தோட்டங்களில் மட்டும் நிலவும் சூழலா என்று ஆராயும் போது தற்போதைய பிபிஓ துவங்கி அங்காடிதெருவில் காணும் கடைகள் முதல்கொண்டு தேடினால் விளங்கும்.

பாலா, தன் படம் வெற்றி பெற வேண்டும் என்ற வியாபார நோக்கில் அதீத கற்பனை வளத்துடன் ஒரு மனநோயாளி மனநிலையுடன்  தான் இப்படம் காட்சிப்படுத்தியுள்ளார் என சிந்திக்க வேண்டியுள்ளது. வசூரி போன்ற கொள்ளைநோய் தாக்கிய இடத்தில் சேவையாற்ற வந்த கிருஸ்த தமிழ் மருத்துவரை கேவலப்படுத்தி இஸ்லாமியர்களை தீவிரவாதத்துடன் ஒப்பிடுவது போல் கிருஸ்தவர்களை மதமாற்றத்துடன் ஒப்பிட்டுள்ளது கண்டிக்க தக்கது.

இன்றைய தகவலின் படி தன் ஜாதி மற்று மதத்தவரை விட வாழ்கை தரத்தில் வசதி வாய்ப்பில் சிந்தனை வளத்தில் மாற்று கருத்து விவாதங்களில் பங்குபெறும் சூழலில் கிருஸ்தவர்கள் முன் நிலையில் தான் உள்ளனர். தமிழர்களில் மதமாற்றம் என்பது கிருஸ்தவ மதமாற்றம் என்ற காரணம் என்பதை விட சமூக சூழல், ஜாதிய ஒடுக்கு முறையால் நிகழ்ந்தது என்றே கூற வேண்டும். கிருஸ்தவர்களாக மாறிய பெரும்வாரி தமிழர்களும் தென் தமிழகம் நெல்லை நாகர்கோயில் சேர்ந்த நாடார் இனத்தவர் ஜாதிய கொடுமையில் இருந்து விடுபடவும் கல்வியில் மேல் கொண்ட வேட்கையின் நிமித்தமாகவும் நிகழ்ந்ததே. ஒன்றாம் நூற்றாண்டில் கிருஸ்துவின் சீடன் தாமஸின் வருகையுடன் இருந்தே கிருஸ்தவம் இந்தியாவில் காலூன்ற துவங்கி விட்டது.  நாலாம் நூற்றாண்டில், மேலும் 13 ஆம் நூற்றாண்டு என பல சமயங்களில் கிருஸ்தவ போதனையில் நம்பிக்கை கொண்டு கிருஸ்தம் தழுவியுள்ளனர்னர் இந்தியர்கள். ஆங்கிலேயர் இந்தியாவில் காலெடுத்து வைக்கும் போது 0.7% இருந்த கிருஸ்தவர்கள் 1.5% ஆக உயர்ந்தனர். தற்போது 2.3 % கிருஸ்தவர்கள் உள்ளனர். தங்களுடைய ஆட்சியில் வியாபார அபிவிர்த்திதான் முதல்  நோக்கமாக இருந்தது ஆங்கிலேயர்களுக்கு. கல்விக்கும் வேலைக்கும் ஜாதிய கொடுமைகளில் இருந்தும் தப்பிக்க இந்தியர்கள்  கிருஸ்தவர்களாக மதம் மாறினர் என்பதில் சந்தேகம் இல்லை. 


பாலா கூற்று படி தேயிலை தோட்டத்தில் மதமாற்றம் உண்மையாக நிகழ்ந்திருந்தால் பெரும்வாரியான தொழிலாளர்கள் கிருஸ்தவர்களாக இருந்திருப்பார்கள். உண்மை நிலை என்னவென்றால் தொழிலாளர்களர்களில் பெரும்வாரியானோர் கிருஸ்தவர்கள் அல்ல.

இப்படியாக ஒரு கலைப்படைப்பை தகுந்த ஆராய்ச்சி அற்று ஏதோ ஒரு உள் நோக்கம்கொண்டு உண்மைக்கு புறம்பாக கதை எடுத்துள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை.

தேயிலை தோட்டத்தில் ஒரு காலங்களில் பிழைப்பு தேடி சென்று இன்று திரும்பிய தமிழர்களான எங்களின் நிலை பரதேசிகளை போன்றது என்பதே உண்மை தமிழக தமிழர்களாக அங்கீகரிக்க மனம் இல்லாது வேலை வாய்ப்பிலும் சமூக அந்தஸ்திலும் மறுபடியும் ஒடுக்கப்படும் சூழலிலே தற்போதும் உள்ளனர். பரதேசி என்று பாலா அத்துயரை பற்றி ஒரு படம் எடுத்தால் தற்காலைய தேயிலை தொழிலாளர்கள் தலைமுறை நிலை பற்றி சொல்வதாக இருக்கும். அது அவர்கள் தலைமுறைக்கு விடிவாகவும் இருக்கும். வெள்ளைக்கார மொட்டையனை காட்டி இந்தியை கொள்ளைக்காரனை மறைக்கும் பாலா போன்றோர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக அல்ல பாதகமாகவே நிலை கொள்கின்றனர்.statistics!
கவின்மலர்

பாண்டவர்கள் வாழ்ந்த பாஞ்சாலிமேடு!


பயணங்கள் எப்போதும் சிறப்பானதும் நம் நிதம் வாழ்க்கையின் இறுக்கத்தில் இருந்து விடுதலை பெற்று  புத்துணற்சி தருகிறது என்பதில் சந்தேகம் இல்லை.  நான் பிறந்த ஊர் மேற்கு தொடற்சி  மலைய்யின் அடிவாரத்தில்  நிலைகொண்டிருப்பதால் மலைகள் என் வாழ்க்கையுடன் இணைந்தவை.  மஞ்சு மலை, பட்டுமலை, என எங்கள் ஊர் பெயர்களுடன் இணைந்து இருப்பதும் மலைகளாகத் தான் இருக்கும். இந்த முறை பாஞ்சாலிமேடு என்ற மலையை தேடி எங்கள் பயணம் ஆரம்பித்தது. மலையாளத்தில் மேடு என்றால் குன்றையை குறிக்கின்றது. பாஞ்சாலி பெயர் ஒட்டி கொண்டிருப்பதால் இந்த மலையை கண்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கு தொற்றி கொண்டது. பாஞ்சாலி தன் கணவர்களுடன் வசித்த மலை என்பதால் பாஞ்சாலி மேடு என்று அறியப்படுகின்றது என அறிந்து கொண்டோம். .

குமளி - கோட்டயம் பாதையில் குட்டிக்கானம் என்ற இடத்தில்  இருந்து  ஐந்து கி.மீ பயணித்தால் புல்லுப்பாறை என்ற இடத்தை அடையலாம். அங்கிருந்து இடப்புறம்  நோக்கி 4 கி.மீ நெடிய குறுகிய பாதையினூடாக மேல் நோக்கி பயணிக்கும் போது  பாஞ்சாலிமேட்டை அடைகின்றோம். வழியில் வழி கேட்க கூட மனிதர்களை காண்பது அரிதே. ஐஸ் விற்பவர்கள் மட்டுமே காண இயலும். கடல் மட்டத்தில் இருந்து 2500 அடி உயரத்தில் உள்ளது. மிகவும் கவனமாக மேற்கொள்ள வேண்டிய பயணம் இது. உள்ளூர் ஓட்டுனர்களின் வாகனத்தில் பயணிப்பதே பாதுகாப்பானதாக இருக்கும். சர்கஸ் வித்தகன் கயிற்றில் நடப்பது போலவே மலைப்பாம்பு போன்று வளைந்து நெளிந்து கிடக்கும் ரோட்டின் வழியான நம் பயணம்,  சவாலான பயணமாகத்தான் உள்ளது.

பின் நோக்கினால் இவ்வளவு தூரம் பின்னிட்டு வந்துள்ளோமா என்று மலைப்பாக  உள்ளது. வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு பாஞ்சாலி மலை நோக்கி நடக்க ஆயத்தமானோம்துவக்கமே ஆச்சரியமாக இருந்தது. ஒரே இடத்தில் சில அடிகள் மட்டும் இடைவெளியில் இரு சமையங்களின் வழிப்பாடு தலங்கள் இயற்கையின் பாதுகாப்பில் அமைதியாக நிலைகொள்கின்றது. யேசு நாதரின் சிலுவைப்பாடுகளை நினைவு கூறும்  வண்ணம்  சிலுவைகள் வரிசையாக பதிக்கப்பட்டு ஒரு திசை நோக்கி செல்ல அடுத்த திசையில்  ஹிந்து-ஆரிய சமய கோயில்கள் புராதன அடையாள சின்னங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. புவனேஸ்வரி தேவியின் கோயில் இங்கு காணலாம்பழைய கல்-மண் கோயில், புதிப்பித்து கட்டிய சிறு கோயில், பக்கத்தில் சிவலிங்கம், சூலம் மற்றும் பல அடையாள சின்னங்கள் என அங்கு கண்ட காட்சிகள் நம்மை வரலாற்றை  உற்று நோக்க வைக்கின்றது! பாஞ்சாலி தன் கணவருடன் இங்கு வசித்திருந்தாகவும் அவர் வணங்கிய ஆலயம், அவர் குளித்த குளம் என பல வரலாற்று சின்னங்கள் கொட்டி கிடக்கின்றன. குகையில் பீமனின் கால் தடவும் பதிந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. இந்த மலை முகப்பில் கூடாரம் போட்டு ஆராய்ச்சி மேற்கொண்ட அடையாளங்களும் காணலாம். இந்த மலை உச்சியில் இருந்து பார்த்தால் சபரி மலையில் எரியும் ஜோதியை காணலாம் என்கின்றனர். இதன் இன்னொரு பகுதியில்  பாண்வர்மேடு என்ற இடவும் உண்டு.

மேல் நோக்கி செங்குத்தான பாதையில் நடக்க  மூச்சு வாங்கினாலும் ஆட்கள் அரவம் அற்ற,  இயற்கையின் அரவணப்பில் புல் வெளிப்பாதையில் மலை உச்சியை நோக்கி  நடக்க நடக்க ஒரு வித பரவசம்  நம்மை பற்றி கொள்கின்றது. கொடும் வனத்தில்  மொட்டை புல் வெளிகளின் அழகு அலாதியானது. கையில் எடுத்தால் அரிக்கும் ஆனால் ஒருவித  வாசமுள்ள எழில் கொண்ட புல் செடியின் பூக்கள் நம் கண்களுக்கு விருந்தாகின. சுத்தமான காற்று இதமான கால சூழல் என இயற்கையுடன் ஐக்கியமாக்கும் ரம்மியமாகும் பொழுதுகள் நமக்கு அலாதியானது. அந்த சூழலை நீங்கள் கண்டு அனுபவித்து உணரலாம் பாஞ்சாலிமேட்டில்! கடல் கரையில் நின்று ஆற்பரிக்கும் அலைகளை கண்டு ரசிப்பது போல் கைநீட்டினால் தொட்டு விடலாம் என்று நற்பாசை தரும் பரந்து விரிந்து கிடக்கும் நீல வண்ண மேகங்கள், கிடந்து உருண்டு வா என அழைக்கும் பச்சை புல் வெளிகள், காட்டு புஸ்பங்கள் என கொள்ளை அழகு கொள்ளும் இயற்கையை கண்டு வெளிச்சத்துடன் திரும்ப வேண்டும். பனி மூடும் பிரதேசம் என்பதால் இரவு பயணம் உகுந்தது அல்ல. மழை நேரம் இங்கு பயணம் மேற்கொள்ளுவதும் முற்றும் தவிற்க வேண்டியது.

இயற்கைய்யின் வளப்பில் சொக்கி நிற்க மழை வர ஆரம்பித்தது. பனிநீராக விழுந்த மழையில் நனைவதும் சுகமாகவே இருந்தது. பனி கூடுவதும் பிரிவதுமாக கண்ணாமூச்சி விளயாட்டு ஆடி கொண்டிருந்தது. மழை விடாது இனி நகர இயலாது. அந்த மேகங்கள் போட்டி போட்டி ஓடி மறைவதும் வானம் தெளிவதும் மழை வருவதும் பின்பு பனி மூடுவதுமாக ஒரே இயற்கை அன்னையின்  புன்சிரிப்பாகத்தான் இருந்தது. நல்ல வேளை இடிமின்னலுடன் அவள் சத்தமாக சிரிக்கவில்லை. அப்படியே நடுங்கிய படி மலை அடிவாரத்தில் இருக்கும் ஒரு சாயக்கடையை வந்து அடைந்தோம். சூடா ஒரு கட்டன் சாயாவுடன்  சூடாக பச்சி வடை வாங்கி சாப்பிட்டு விட்டு மழை விட காத்திருந்தோம். 

 மலை ஏறினால் இறங்கி தானே ஆக வேண்டும். இறக்கம் என்பதால் திரும்பும் பயணம் எளிதாக இருந்தது. இருப்பினும் பிரிய மனம் இல்லாது அந்த குளிர்தரும் துளிர் நினைவுடன் பிரியா மனம் கொண்டு பாஞ்சாலி மேட்டிடம் விடை பெற்று அடுத்த மலை நோக்கி பயணம் ஆனோம். (குறிப்பு: சமீபத்தில் வெளிவந்த பலத்திரைப்படங்கள் காட்சிகள் இங்கு அமைத்துள்ளனர். உதாரணம்: மலையாளப்படம். சார்லி


தங்குமிடம் இங்கு விசாரித்து கொள்ளலாம்.                                               
1) paradise plantation retreat(Murinjapuzha, Kerala Dist 0469 2701311)                                                2)Dream land hill resort : (Kuttikanam P.O, Peermedu, Near Thekkady
Kuttikanam 09447304467)