header-photo

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு- தமிழை விட்டு ஓடி விட்டேன்! ஏன்?


இன்று ஆசிரியர் பெற்றோர் கூடுகை.  பொதுவாக இந்த சந்திப்பில் விரும்பமே இல்லை. ஆக்கபூர்வம் என்பதை விட அதிகாரபூர்வமாக தான் கண்டுள்ளேன். சின்ன பையன் பள்ளியில் ஆங்கிலத்தில் கதைக்கும் பெற்றோர் மிகக்குறைவே. இருந்தாலும் பெற்றோரிடம் சொல்ல வேண்டியதை பள்ளி முதல்வர் ஆங்கிலத்தில் தான் கதைப்பார். இதில் சில தங்கீலிஷ் அம்மாக்கள் ஆங்கிலத்தில் தான் கேள்வி கேட்டு விட்டு தன் அறிவு புலமையை விளக்கியதாக பெருமிதம் பட்டு கொண்டு கேட்பார்கள். பெரியவர் பள்ளியிலோ உழவர் சந்தை போல் தான் இந்த பெற்றோர் ஆசிரியர் கூடுகை. ஆசிரியர்கள் தங்கள் கருவிகளான சில அட்டைத்தாள் பேனா சகிதம் இளக்காரத்துடன் உட்காந்து இருப்பார்கள். நாம் இந்த அட்டையை எடுத்து கொண்டு ஒவ்வொரு ஆசிரியராக  சென்று என் பிள்ளை எப்படி தேறிடுவானா? அவன் எப்படி இருக்கின்றான் என கேட்க வேண்டும். ஆசிரியர் ஒரு புறம் குறை கூற பெற்றோர் மறுபுறம் பிள்ளைகளை பற்றி குறை கூற பிள்ளை பலிக்கு கொண்டு போகும் ஆடு போல் நடுவில் நிற்கும். எனக்கு என் பிள்ளையை குறை கூற விருப்பம் இல்லை. இருந்தாலும் வீட்டு பாடம் கொடுங்க, அவன் சோம்பலாக இருக்காது சுறுசுறுப்பாக இருக்கும் படி பாடம் படிக்க கொடுங்கள் என்றே கேட்டுள்ளேன்.

இன்றைய தினத்தில் என்னவர் தன் தொழில் நிமித்தம் தலைநகர் பயணம். அவர் இருந்தால் என்னை கிளம்ப வைத்து, சரி சரி மேக்கப் போதும் என்று சீண்டி,  சேலை கசங்காது வாகனத்தில் அழைத்து சென்று விடுவார்.  வீடோ கார்ப்பரேஷன் கடைசி எல்கையில்! பேருந்து உண்டா என்றால் வரும் சில நேரம் வராது. காலை மதியம்,மாலை, இரவு என்று குறிப்பிட்ட நேரம் ஒரே பேருந்து என சிக்கனமான பகுதி! இன்றோ நெல்லையில் மழை சிணுங்கி கொண்டு இருக்கின்றது. மகன் நண்பர் "ஆன்றி நீங்க எங்களுடன் வாங்க அழைத்து செல்கின்றோம் என்றான்". உதவுகின்றேன் என்பவனிடம் பல்லை பிடிங்கி பார்க்க கூடாது அல்லவா. ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வந்து விடுகின்றோம் என்றேன். பேருந்து நிலையம் வந்தால் மழை நனையாது நிற்க வழியில்லை. நடந்து நடந்து ஆட்டோ நிலையம் வந்து விட்டோம். பெருமாள்புரம் வரை போக 70 ரூபாயாம். நான் ஆறு மாதம் முன்பு 40 ரூபாய்க்கு தான் வருவது. 70 ஆ….. வேண்டாம் என்று கூறி விட்டேன். மகனுக்கு கோபம். அம்மா இந்த ஆறு மாதத்தில் 6 முறை விலை ஏறி விட்டதே என்றான். இவனும் இவன் அப்பா மாதிரி தான். வீட்டுக்காக பேச மாட்டாக! நான் என் அப்பாவை மாதிரி 5 ரூபாய்க்காக 5 5 கிலோ மீட்டர் நடந்தே செல்வார். அப்படி தான் 1கிமீ நடந்து விட்டோம். இப்போது தான் எங்கள் பகுதி பேருந்து மேல் நோக்கி செல்கின்றது, இது ஆட்களை ஏற்றி... வந்து.. என பேசி கொண்டே நடந்தோம். என் மகன் நண்பர் தன் தாயாருடன்  நாலு சக்கர வண்டியில், வந்து விட்டான்.

அவர்கள் அம்மா இதமான சிரிப்புடன் வரவேற்று அன்பாக அழைத்து சென்றார். என் மகன் நண்பன் கூறினான் "ஆன்றி ஆங்கில பாடத்திற்கு குறிப்பு தருவதில்லை. பள்ளியில் தந்திருக்கும் கையேஎடு நோக்கியும் படிக்க கூடாதாம். எப்படி படிக்க என்றே தெரியவில்லை". நானும் "ஆசிரியர்களை குறை கூற கூடாது தம்பி. கல்லூரி போல் உங்களை தரமாக நடத்துகின்றார்கள் போல். நீங்கள் நண்பர்களாக இணைந்து படிக்க வேண்டியது தானே" என்றேன். அவனும் பிடித்ததோ இல்லையோ என் உபதேசத்தை தலையாட்டி கேட்டு கொண்டான்.  அவன் அம்மாவிடம் கூறினான் கணித ஆசிரியை என்னை செருப்பு என்று அழைக்கின்றார் என்று. என் மகனும் என்னை நாய், நாக்கு வளிக்கவா வந்த, உங்க தாய் தகப்பன் சரியில்லை என்று சொல்கின்றார்கள் என்றான். அப்போது முதலே ஆங்கில மேதையை காண ஆவலாகி விட்டது. கைவைத்து அடிப்பாராம் பேனா முனை வைத்து குத்துவாராம். அந்த அம்மையார் வயதும் கை வைத்து அடிக்கும் படியான அவ்வையும் அல்ல, அடி வாங்கும் வயது சிறுவர்களும் அல்ல எம் மகன்கள்.

30-33 வருட காலச் சக்கிரம் தான் பின்னோக்கி ஓடி கொண்டிருந்தது. அப்போது அம்மா என்னை தமிழ் வழி பள்ளியில் சேர்த்து விட்டார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது எனக்கு பயம் கொடுத்து விட்டது. விதவிதமான அடிகள். கவுக்கூட்டில் கிள்ளுவது, துடையில் இடம் தேடி கிள்ளுவது தான் எனக்கு பிடிக்காத தண்டனை. சிலர் வயிற்றில் கிள்ளுவார்கள். கோமதி டீச்சர் வாயில் வந்த வார்த்தையில் எல்லாம் திட்டுவாங்க. நினைவில் நிற்கும் வார்த்தைகள் எருமை மாடு.. சனியனே,...தறுதலை....நீ எல்லாம் எங்க விளங்கின... மாரியம்மா டீச்சர் கம்பு வைத்து ஒரு அடி இரண்டு அடி அல்ல அடி என்றால் டசன் கணக்கு தான். நான் வீட்டில் வந்து அம்மாவிடம் சண்டை பிடித்தேன். எனக்கு இந்த ஈரம் இல்லாத தமிழ் ஆசிரியர்  வகுப்பு வேண்டாம்; மலையாள வழி படிக்க போறேன். அம்மாவும் எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள். அடிக்கு பயந்து மலையாளம் வகுப்புக்கு ஓடி விட்டேன்.0 comments:

Post Comment

Post a Comment