header-photo

ஆசிரியைகளின் வெறித்தனம்!இன்னும் காலம் மாற வில்லையா என ஆச்சரியமாக தான் இருந்தது. நாங்கள் படித்தது வருடம் வெறும் 10 ரூபாய் கட்டணம் செலுத்தி  படித்த அரசு பள்ளி.  மாணவர்கள் மிகப்பெரிய அளவில் தேயில தோட்ட தொழிலாளர்கள் பிள்ளைகள் தான். மாணவர்களை ஆசிரியர்கள் படுத்தியபாடு எஸ்டேட் முதலாளிக்கு எளிதாக சிறுவர் தொழிலாளர்களை பெற்று தந்தது . ஆனால் இன்றோ மகன் படிப்பதோ 40 ஆயிரம் மேல் கட்டணம் செலுத்தி படிக்கும் பள்ளிகள். 

ரசாயனப்பாடம் எடுக்கும் ஆசிரியரை முதலில் கண்டேன். அவர் பக்கம் தான் கூட்டம் இல்லாது இருந்தது. நல்ல பையன், பிரச்சினை இல்லை, அடுத்து இனியும் நல்ல மதிபெண் எடுப்பான். நன்றி ஐயா என்று விடை பெற்று கொண்டேன். ஒரு வருடம் முன்பு என்னை ஆசிரியையாக காண வந்த ஒரு தந்தையின் நினைவு வந்தது. அவர் ஒரு அரசு அதிகாரி. நானும் புதிய ஆசிரியை தான். அவர் வயதில் பெரியவர்.  அம்மா என் மகன் படிக்கின்றானா நல்லா வருவானா என்றார். தேவையில்லாது பிரச்சனையில் மாட்டி கொள்கின்றான். எனக்கு இவனை நினைத்து தான் கவலை. அந்த கல்லூரியில் சேர்த்தேன். இடையில் வந்து விட்டான் என்றார்.  ஐயா உங்கள் மகன் பற்றி கவலை வேண்டாம். அவன் நல்ல நிலையில் வருவான் அவனுக்கு என்ற திறமைகள் இத்தனை உண்டு. முதலில் நீங்கள் அவனை நம்புங்கள் என்றேன். அம்மா என்ன நேரமோ தெரியல என் இளைய மகனால் எந்த பிரச்சனையும் இல்லை என்ற போது அவர் கண்ணில் இருந்து கண்ணீர் தரையில் விழுந்தது.
வரலாறு ஆசிரியர் எப்போதும் போல் உங்க பையனுக்கு விளையாட்டில் தான் ஆற்வம், படிப்பு சைடு தான் என்று சிரித்து கொண்டே கூறினார். என் மகனோ சார்…………………..மாட்டி விடாதீக நான் படிக்கின்றேன் என்றான். புவியியல்  ஆசிரியர்  விளையாட்டில் ஆற்வமுள்ள  பையன். ஆனால் படிக்கின்றான் நல்லா வருவான். நீங்க நிம்மதியாக இருங்கள் என்றார். அம்மா என்ற நிலையில் ஒரு பெருமிதம் நிறைந்து  நின்றது. என் மகன் படிப்பில் சிறப்பாக வரவேண்டும் என்றே; அவன் வயிற்றில் இருக்கும் போது ஒரு வங்கி தேற்வுக்கு படித்து கொண்டிருந்தேன். அவன் பிறந்த பின்பு அந்த வங்கி வேலையும் வாய்த்தது, பிள்ளையா வேலையா என்று கேட்கும் போது எப்போதும் பிள்ளை வளர்ச்சி தான் முன் நின்றது. 

அந்த மனநிறைவுடன் கணித ஆசிரியையிடம் சென்றால் ஒரு எகத்தாள பார்வையுடன், என்ன உங்க பையன் எப்படி இருக்கான் என்ற ஒரு நக்கல் சிரிப்புடன் ஒரு கேள்வி? காலை 7.30 க்கு கிளம்பும் மகன் மாலை 7 ஆகின்றது வீடு வந்து சேர என நினைத்து  சிரித்து கொண்டே கணிதத்தில் முழு மதிப்பெண் பெற வழியுண்டா என்ற நோக்கில் அவர் முகத்தை நோக்கினேன். "உங்க மகனுக்கு  நான் தேவையே இல்லை என்ற நினைப்பில் உள்ளான். எனக்கென்ன எப்படியோ போறான். இவன் எப்படி போனா எனக்கென்ன" என்றார். "முறைத்து பார்க்கின்றான் நான் கையால் அடித்த போது தடுக்கின்றானாம்.  பேனாவால்  குத்தினாலும் தடுக்கின்றானாம்.  அந்த அம்மா கூட்டாளு பிசிக்ஸ் ஆசிரியையாம். எனக்கு உங்க மகனை தான் ரொம்ப பிடிக்கும். இப்போ எனக்கு பிடிக்காது. நான் கண்டு கொள்வதே இல்லை சொல்லியிருப்பானே என்ற வெற்றி சிரிப்புடன் என்னை நோக்குகின்றார்.

தமிழ் வழி கல்வியில் இருந்து ஓடி போனாலும் மலையாள வழி வகுப்பறையில் நான் கொண்ட துன்பம் மிகக்கொடியது. ஏழாம் வகுப்பு வரை எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஒரு தமிழர் . என்னை ஒடுக்க ஒரு ஆசிரியர் இருந்தால் கூட என்னை தன் சொந்த மகளை போல் நேசித்த சம்ஷுதின் சார், ஹரிகரன் சார், ரோசம்மா டீச்சர் போன்றோர் இருந்தனர். மத்தாயி சார், விஜயன் சார் எல்லோருக்கும் நான் மகள் போன்று தான். ஆனால் இந்த தயவு என் உயர் வகுப்பில் கிடைக்கவில்லை. எட்டாம் வகுப்பில் ஒரு ஆசிரியையால் ஒரு மாதம் கேள்வி கேட்காது என் பக்கம் கூட பார்க்காது ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தேன். அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என கேட்க அந்த நாட்களில் துணிவு வரவில்லை. பிற்காலத்தில் என்னிடம் கனிவுடன் நடந்து கொண்டார். இதுவும் எதனால் என்று எனக்கு விளங்கவில்லை. மலையாள மொழி ஆசிரியை துளசி டீச்சர் அன்பு மறக்க இயலாதது. அங்கும் அம்மினிக்குட்டி என்ற நாயர் ஆசிரியை இருந்தார். அவருக்கு தனியாக ஒரு கணக்கு கூட கரும்பலகையில் செய்ய தெரியாது. ஒரு நோட்டில் இருந்து காப்பி செய்து அப்படியே எழுதி போடுவார். புரியாத என் தோழிகளுக்கு கணக்கு கற்று கொடுத்த மகிழ்ச்சியில் கணக்கின் மேல் காதல் கொண்டு +2வுக்கு கணிதம் முதல் பாடமாக எடுத்து படித்தேன். ஆனால் கடினமான ஒரு கணக்கை செய்து விவரித்தாலும் மிக நன்று என்று பாராட்டாது “ பாத்தியாடி… ஒரு தமிழச்சிக்கே கணக்கு செய்ய முடிந்தால் உனக்கு ஏன் முடியாது என்பார். இவரும் பெற்றோர் சந்திப்பில் என்னவெல்லாமோ கதைத்து கொண்டு தன் அதிகாரத்தை நாட்டி கொண்டிருப்பார். அம்மாவுக்கு மலையாளம் கதைக்க தெரியாததால் தலையை மட்டும் ஆட்டிகொண்டு சிரித்து விட்டு பயபக்தியுடன் சரிங்க டீச்சர் என்று வந்து விடுவார். அப்படி ஏதும் அம்மா பேசியிருந்தாலும் நான் வேறு பள்ளி தேடி போயிருக்க வேண்டும்.                                                                    ஒரு முறை என் மலையாள  தோழிகள் இட்டிலியை ஆண் மாணவர்கள் மேல் எறிந்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டும் இட்லி அன்று யார் கொண்டு வந்தீர்கள் என்றதும் வெள்ளந்தியாக நான் மட்டும் எழுந்து நின்று அம்மாவை வரவைத்து என்னை கண்டித்து விட்டனர். புகார் கொடுத்த என் பள்ளி தோழர்கள்  உன்னை நாங்கள் சொல்லவில்லை என்றதும் சரி என்ன செய்ய என்று பணிந்து போகத்தான் வைத்தது சூழல். அன்று வளைந்த என் தலை இன்றும் அதிகாரமாக கத்தி பேசுகிறவர்களை கண்டால் பதில் கூறுவதை விட நான் அறியாத பதட்டவும் அழுகையும் தான் வந்தது.  

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு- தமிழை விட்டு ஓடி விட்டேன்! ஏன்?


இன்று ஆசிரியர் பெற்றோர் கூடுகை.  பொதுவாக இந்த சந்திப்பில் விரும்பமே இல்லை. ஆக்கபூர்வம் என்பதை விட அதிகாரபூர்வமாக தான் கண்டுள்ளேன். சின்ன பையன் பள்ளியில் ஆங்கிலத்தில் கதைக்கும் பெற்றோர் மிகக்குறைவே. இருந்தாலும் பெற்றோரிடம் சொல்ல வேண்டியதை பள்ளி முதல்வர் ஆங்கிலத்தில் தான் கதைப்பார். இதில் சில தங்கீலிஷ் அம்மாக்கள் ஆங்கிலத்தில் தான் கேள்வி கேட்டு விட்டு தன் அறிவு புலமையை விளக்கியதாக பெருமிதம் பட்டு கொண்டு கேட்பார்கள். பெரியவர் பள்ளியிலோ உழவர் சந்தை போல் தான் இந்த பெற்றோர் ஆசிரியர் கூடுகை. ஆசிரியர்கள் தங்கள் கருவிகளான சில அட்டைத்தாள் பேனா சகிதம் இளக்காரத்துடன் உட்காந்து இருப்பார்கள். நாம் இந்த அட்டையை எடுத்து கொண்டு ஒவ்வொரு ஆசிரியராக  சென்று என் பிள்ளை எப்படி தேறிடுவானா? அவன் எப்படி இருக்கின்றான் என கேட்க வேண்டும். ஆசிரியர் ஒரு புறம் குறை கூற பெற்றோர் மறுபுறம் பிள்ளைகளை பற்றி குறை கூற பிள்ளை பலிக்கு கொண்டு போகும் ஆடு போல் நடுவில் நிற்கும். எனக்கு என் பிள்ளையை குறை கூற விருப்பம் இல்லை. இருந்தாலும் வீட்டு பாடம் கொடுங்க, அவன் சோம்பலாக இருக்காது சுறுசுறுப்பாக இருக்கும் படி பாடம் படிக்க கொடுங்கள் என்றே கேட்டுள்ளேன்.

இன்றைய தினத்தில் என்னவர் தன் தொழில் நிமித்தம் தலைநகர் பயணம். அவர் இருந்தால் என்னை கிளம்ப வைத்து, சரி சரி மேக்கப் போதும் என்று சீண்டி,  சேலை கசங்காது வாகனத்தில் அழைத்து சென்று விடுவார்.  வீடோ கார்ப்பரேஷன் கடைசி எல்கையில்! பேருந்து உண்டா என்றால் வரும் சில நேரம் வராது. காலை மதியம்,மாலை, இரவு என்று குறிப்பிட்ட நேரம் ஒரே பேருந்து என சிக்கனமான பகுதி! இன்றோ நெல்லையில் மழை சிணுங்கி கொண்டு இருக்கின்றது. மகன் நண்பர் "ஆன்றி நீங்க எங்களுடன் வாங்க அழைத்து செல்கின்றோம் என்றான்". உதவுகின்றேன் என்பவனிடம் பல்லை பிடிங்கி பார்க்க கூடாது அல்லவா. ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வந்து விடுகின்றோம் என்றேன். பேருந்து நிலையம் வந்தால் மழை நனையாது நிற்க வழியில்லை. நடந்து நடந்து ஆட்டோ நிலையம் வந்து விட்டோம். பெருமாள்புரம் வரை போக 70 ரூபாயாம். நான் ஆறு மாதம் முன்பு 40 ரூபாய்க்கு தான் வருவது. 70 ஆ….. வேண்டாம் என்று கூறி விட்டேன். மகனுக்கு கோபம். அம்மா இந்த ஆறு மாதத்தில் 6 முறை விலை ஏறி விட்டதே என்றான். இவனும் இவன் அப்பா மாதிரி தான். வீட்டுக்காக பேச மாட்டாக! நான் என் அப்பாவை மாதிரி 5 ரூபாய்க்காக 5 5 கிலோ மீட்டர் நடந்தே செல்வார். அப்படி தான் 1கிமீ நடந்து விட்டோம். இப்போது தான் எங்கள் பகுதி பேருந்து மேல் நோக்கி செல்கின்றது, இது ஆட்களை ஏற்றி... வந்து.. என பேசி கொண்டே நடந்தோம். என் மகன் நண்பர் தன் தாயாருடன்  நாலு சக்கர வண்டியில், வந்து விட்டான்.

அவர்கள் அம்மா இதமான சிரிப்புடன் வரவேற்று அன்பாக அழைத்து சென்றார். என் மகன் நண்பன் கூறினான் "ஆன்றி ஆங்கில பாடத்திற்கு குறிப்பு தருவதில்லை. பள்ளியில் தந்திருக்கும் கையேஎடு நோக்கியும் படிக்க கூடாதாம். எப்படி படிக்க என்றே தெரியவில்லை". நானும் "ஆசிரியர்களை குறை கூற கூடாது தம்பி. கல்லூரி போல் உங்களை தரமாக நடத்துகின்றார்கள் போல். நீங்கள் நண்பர்களாக இணைந்து படிக்க வேண்டியது தானே" என்றேன். அவனும் பிடித்ததோ இல்லையோ என் உபதேசத்தை தலையாட்டி கேட்டு கொண்டான்.  அவன் அம்மாவிடம் கூறினான் கணித ஆசிரியை என்னை செருப்பு என்று அழைக்கின்றார் என்று. என் மகனும் என்னை நாய், நாக்கு வளிக்கவா வந்த, உங்க தாய் தகப்பன் சரியில்லை என்று சொல்கின்றார்கள் என்றான். அப்போது முதலே ஆங்கில மேதையை காண ஆவலாகி விட்டது. கைவைத்து அடிப்பாராம் பேனா முனை வைத்து குத்துவாராம். அந்த அம்மையார் வயதும் கை வைத்து அடிக்கும் படியான அவ்வையும் அல்ல, அடி வாங்கும் வயது சிறுவர்களும் அல்ல எம் மகன்கள்.

30-33 வருட காலச் சக்கிரம் தான் பின்னோக்கி ஓடி கொண்டிருந்தது. அப்போது அம்மா என்னை தமிழ் வழி பள்ளியில் சேர்த்து விட்டார்கள். ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது எனக்கு பயம் கொடுத்து விட்டது. விதவிதமான அடிகள். கவுக்கூட்டில் கிள்ளுவது, துடையில் இடம் தேடி கிள்ளுவது தான் எனக்கு பிடிக்காத தண்டனை. சிலர் வயிற்றில் கிள்ளுவார்கள். கோமதி டீச்சர் வாயில் வந்த வார்த்தையில் எல்லாம் திட்டுவாங்க. நினைவில் நிற்கும் வார்த்தைகள் எருமை மாடு.. சனியனே,...தறுதலை....நீ எல்லாம் எங்க விளங்கின... மாரியம்மா டீச்சர் கம்பு வைத்து ஒரு அடி இரண்டு அடி அல்ல அடி என்றால் டசன் கணக்கு தான். நான் வீட்டில் வந்து அம்மாவிடம் சண்டை பிடித்தேன். எனக்கு இந்த ஈரம் இல்லாத தமிழ் ஆசிரியர்  வகுப்பு வேண்டாம்; மலையாள வழி படிக்க போறேன். அம்மாவும் எவ்வளவோ சொல்லி பார்த்தார்கள். அடிக்கு பயந்து மலையாளம் வகுப்புக்கு ஓடி விட்டேன்.எனது வாழ்கையின் 3 தவறுகள்! The 3 Mistakes Of My Life!அகமாபாத்தை சேர்ந்த உலகபுகழ் பெற்ற எழுத்தாளர் சேட்டன் பகத்தின்  2009 ல் வெளிவந்த நாவல் ஆகும் எனது வாழ்கையின் 3 தவறுகள்!    இந்த நாவல் கடந்த வாரம் வாசித்து முடித்தேன்.  அபிஷேக் கபூர் இயக்கத்தில்  பிப் 2013 ல்   வெளிவந்த ‘கேய் போ சீய்” என்ற திரைப்படம் இந்த நாவலை தழுவி எடுக்கப்பட்டது என்று அறிந்த போது  சுவாரசியம்  பற்றி கொண்டது. . டைம்ஸ் வார இதழ், உலகில் குறிப்பிடும் படியான 100 நபர்களில் ஒருவராக சேட்டன் பகத்தையும்  வரிசைப்படுத்தியுள்ளனர். ஆக்கப்பூர்வமான தொழில் அதிபர் வரிசையில் இவர் பெயரும் உட்படுத்தியுள்ளது அமெரிக்கா பன்னாட்டு நிறுவனம். உலக முதலீட்டு வங்கி பணியில் இருந்த சேட்டன் பகத் தற்போது முழுநேர எழுத்தாளராக உள்ளார் என்பது மேலும் குறிப்பிட தகுந்தது.

 சேட்டன் பகத்தில் கதைத் தளம்  இளைமை துள்ளலும், அதன்  சுறுசுறுப்பும், கபடமற்ற  மனிதர்களின் உறவை சொல்லும் படியாக உள்ளது. நாவல் எழுத்துக்கான  பொதுவான ஒரு நடையில் இருந்து   மாறுபட்டு வலைப்பதிவுகள் போன்ற  நெருக்கம் அருகாமையும் தருவதாக உள்ளது. கதை இப்படியாக துவங்குகின்றது. ஆசிரியர் சேட்டன் பகத், சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டு இருக்கின்றார். அகபாத்தை சேர்ந்த ஓர் இளைஞரிடமிருந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மின் அஞ்சல் வருகின்றது.  தன் கல்லூரி பேராசிரியர் உதவியுடன் தற்கொலைக்கு முயலும் இளைஞனை மருத்துவ மனையில் கொண்டு சேர்க்கின்றார்.  இளைஞனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன்   இளைஞரின் வாழ்கை கதையை,அவர்  அனுமதியுடன் நாவலாக வெளியிட்டுள்ளதாக கதையில் குறிப்பிடுகின்றார் .

மட்டைபந்து விளையாட்டை தளமாக கொண்டு மூன்று நண்பர்களின் வாழ்கையை சுற்றி பிணையப்பட்டது இந்த நாவல். மட்டைபந்து விளையாட்டுக்கு தேவையான பொருட்களை விற்கும் கடையை அகமபாத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் துவங்குகின்றனர். குடும்ப பின்னணி, அறிவாற்றல், விருப்பங்கள் என எல்லாவற்றிலும் மாறுபட்டவர்கள். ஆனால் நட்பால் ஒன்றித்தவர்கள். எதிலும் எங்கும் எப்போதும் வியாபரமே முழுமூச்சாக கொண்ட ஒருவர்; கடவுள் உண்டா இல்லையா என ஆராய்ச்சி மனநிலையில் உள்ளவர் என்றால், இன்னொருவரோ தான் வாழ்கை சிந்தைனையை முழுதுமக மட்டைபந்த்து விளையாட்டில் மட்டும் செலுத்துவர்.  இந்து பிராமணராக பிறந்த ஓமி என்ற நண்பராகட்டும் தன் மாமா வற்புறுத்தலுக்கு இணங்க கோயில் பூஜா வேலைகளிலும் மும்முரமாக இருக்கின்றார்.  இப்படியான சூழலில் தங்களுக்கான வியாபாரத்தை கோயில் வளாகத்திலுள்ள  வாடகை குறைவான ஒரு சிறு கடையில் துவங்குகின்றனர். இவர்கள் எதிர்பார்த்ததை விட வியாபாரம் சிறப்பாக செல்கின்றது. கோயில் காரியங்களில் செயல்ப்பட நிர்பந்திக்கப்படுவதாலும், வியாபாரம் மேலும் விருத்தியடைய நகர்புற கடை தேவை என்பதாலும்; நகரத்தில் ஒரு கடை ஏர்ப்படுத்துகின்றனர்.  இவர்கள் கனவை ஒரே நொடியில் தகர்க்கும் விதமாக குஜராத் பூகம்பம் வந்து செல்கின்றது.


நண்பர்களில் ஒருவரான இஷான் மட்டை பந்து பயிற்சி கொடுக்கும் போது, கோவிந்து கணிதம்  டியூஷன் வகுப்பு எடுத்து வருகின்றனர். நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் தங்கைக்கும் கணித வகுப்பு எடுக்க செல்கின்றார். இதுவே தன் வாழ்கையில் தான் செய்த முதல் தவறு என குறிப்பிடுகின்றார். இப்படியிருக்க நண்பர் தங்கை தனக்கு ஆசிரியராக வந்திருக்கும் கோவிந்திடம் காதல் வயப்படுகின்றார். இவரும் காதலில் வீழ்ந்து விடுகின்றார்.  இதுவே தன் வாழ்கையில் தான் கொண்ட இரண்டாவது தவறாக குறிப்பிடுகின்றார்.

இதனிடையில் இவர்கள் கடைக்கு வந்த அலி என்ற இஸ்லாமிய சிறுவனின் மட்டபந்திலுள்ள அசாதாரண திறமை இஷானை ஆச்சரியம் கொள்ள வைக்கின்றது. அவனுக்கு தேவையான பயிற்சி கொடுத்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரராக உருவாக்க இஷான் முடிவெடுக்கின்றார். இந்நேரம் குஜராத் மதக்கலவரம் நிகழ்கின்றது. இதில் இவர்கள் நண்பர் ஓமியின் மாமா மகன் கோத்திரா இரயிலில்  கொல்லப்படுகின்றான். இவர்களிடம் தஞ்சம் அடைந்த அலி என்ற சிறுவனை, பழி வாங்கும் நோக்குடன் மாமா, ஒரு கூட்டமாக  தாக்க வருகின்றார். இந்த களேபாரத்தில்  உயிர் நண்பர் ஓமி, ஓமியின் மாமாவும் கொல்லப்படுகின்றனர். சிறுவன் கையிலும் காயம் ஏற்படுகின்றது. சிறுவனை காப்பாற்ற இயலாத தன் நிலையை மூன்றாவது தவறாக  கோவிந்து வருத்ததுடன் உணர்கின்றார். 

இஷானும் தனக்கு தெரியாது தன் தங்கையை காதலித்து தனக்கு துரோகம் செய்ததாக எண்ணி தன் நண்பனை ஒதுக்குகின்றார். இந்த நிலையில் கோவிந்த் தற்கொலை செய்ய முடிவெடுத்ததுடன் கதையின் பின் காலம் நோக்கிய கதை சொல்லுதல் முடிந்து நிகழ்கால கதை பக்கம் வருகின்றோம்.


 இந்த நாவல் ஊடாக குஜராத்தில் இஸ்லாமிய- ஹிந்து சகோதர்கள் அடிப்படையில் கொண்டிருந்த பல நெருடலான தங்களுக்குள் கொண்ட வெறுப்பு உணர்வுகளை விவரித்துள்ளார். மக்கள் மத்தியில் தங்கள் மதத்தின் மேலுள்ள அதீத நம்பிக்கையால் எழுந்த வெறியும், சரியான புரிந்துணர்வு இல்லாத அவர்களுக்ளான உறவு நிலையையும் குறிப்பிட்டுள்ளார். ஹிந்துத்துவா என்பதை சகோதர அன்புடன் இணைத்து குறிப்பிடும் மாமா என்ற கதாபாத்திரம் தன் மகன் கொல்லப்பட்டார் என்று அறிந்ததும் சிந்தனையற்ற கொலைகாரனாக மாறுவது ஹிந்துத்துவா பற்றிய சிந்தனை பற்றிய நெருடலான உண்மையும்  இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். மக்கள் மத்தியில் நிலவும் தீவிர எதிர்ப்பு தன்மையை மதவாதிகள் பயண்படுத்துவதையும் தங்கள் கருத்துக்களில் வன்முறையாக இளைஞர்களை இணைப்பதையும் நாவல் விவரித்துள்ளது.  இப்படியான சமூக சூழலில்  படித்த இளைஞர்கள் கூட வீழ்த்தப்படுவதும், இரையாகுவதையும்   விவரித்துள்ளார். கோவிந்து போன்ற இளம் சமூகத்தினர் அடிப்படையில் எந்த கடவுள் பரப்புரையிலும் நம்பிக்கையில்லாதவர்கள். இருப்பினும் கோயில் வளாகத்தில் தங்கள் கடையிருப்பதால் அந்த மத கூட்டத்தில் தாங்களும் பங்கு கொள்ளும் சூழலுக்க்கு தள்ளப்படுகின்றனர். மத நம்பிக்கையால் மனிதர்களை பிரித்து வைத்துள்ளதை நாவலாசிரியர் மிகவும் விவரித்து குறிப்பிட்டுள்ளார். கொலை வெறியில் பச்சிளம் பாலகனை கூட விட்டு வைக்காத மததீவிரவாதத்தையும் உணர்த்துகின்றார்.


இஸ்லாமிய ஏழை சிறுவன். அவன் தந்தை கல்வியறிவுள்ள இஸ்லாமியர். தீவிரவாத குணமற்ற மனிதநேயரான மனிதர். ஆனால் அக்கலவரத்தில் அவர் குடும்பவும் அழிக்கப்படுகின்றது என்ற துயரான சம்பவவும் நாவலில் காண்கின்றோம். இஸ்லாமியர்கள் பிற சமூகத்துடன் சேராது, தனித்து தங்களுக்கான  தெருவுகளில் வாழ்வதையும், அச்சிறுவன் குண நலன் வழியாக பிடிவாத குணத்தையும் மற்றவர்களை புண்படுத்தும் செயல் வார்த்தைகளையும் புனைவுப்படுத்தியுள்ளார்.

 காதல் என்ற பெயரில் இளைஞர்கள் புரியும் நம்பிக்கை துரோகத்தையும், இதில் பெண்கள் செயல்பாடுகள் எவ்விதத்தில் வேகப்படுத்துகின்றது  எனவும் விவவரித்துள்ளார். காலத்தின் மாற்றத்தால் பெண் பிள்ளைகளில் காணும்  அதீத மாற்றம், தைரியம், அலைபேசியை பயண்படுத்தும் முறை என இளைஞர்கள் வாழ்கையை ஊடுருவி கதை படைத்துள்ளார் என்பதே இந்நாவலின் சிறப்பு!

இளைஞர்கள் வாழ்கை, வேலை வாய்ப்பு, வாழ்கை போராட்டம், இந்த தெருவுகளை ஆக்கிரமித்த மட்டைபந்து விளையாட்டு, நண்பர்கள் நட்பு, ,காதல் எவ்வாறு அவர்களுக்குள் பிளைவை ஏற்படுத்தியது என்றும் நட்புக்கும் கற்பு உண்டு என வலியுறுத்தி சென்றுள்ளார் ஆசிரியர்.


இருப்பினும் இந்திய் காங்கிரஸ் ஆட்சியில் கைதடி என்றும் மோடி அரசியல் சந்தைப்படுத்துனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இப்புத்தகம் கோடி வாசகர்களை சென்றடைந்துள்ளது. எழுத்து ஊடகமான நாவல், காட்சி ஊடகமாக உருமாறிய போது வாசகர்களை எவ்வாற்றாக ஊடுருவி சென்றுள்ளது என அறிய ஆவலாகத்தான் உள்ளது.  

பெண்மையை போற்றுவோம்!பைபிளில் ஒரு சுவாரசிய கதை உண்டு. கடவுள் மனிதனை மண்ணில்  இருந்து படைத்த பின்பு, தன் மூச்சு காற்றை நிரப்பி அவனுக்கு உயிரை கொடுப்பார். ஆண் தனியாக இருப்பதை கண்டு கலங்கிய கடவுள்,  தனியாக இருப்பது நல்லது இல்லை என்ற புரிதலில் அவனை தூங்க வைத்து அவன் விலா எலும்பை எடுத்து அவனுக்கு ஏற்ற துணையாக பெண்ணை படைப்பார். ஆண் தலையில் இருந்து படைக்காதது ஆண் தலையில் ஏறி அமர்ந்து கொண்டு துன்புறுத்த கூடாது  என்றும்; கால் எலும்பில் இருந்து படைக்காதது ஆண், பெண்ணை தன் காலில் போட்டு மிதிக்காது இருக்க வேண்டும்  என்று தானாம். ஆணின் இதயத்தில் வீற்றிருக்க வேண்டியவளே பெண் என்ற கருத்தினை வலியுறுத்துவதை   இக்கதையில் காண்கின்றோம். ஆம் பெண்மை போற்றுதலுக்குறியது. ஆண்களால் போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது. ஆண்மையை பெண்கள் ஆராதித்து ஆதரிப்பது போலவே,  ஆண்களால் பெண்மை போற்றப்பட வேண்டியது அவசியம். ஆனால் ஆதி காலம் முதல் இன்றுவரை ஆண் பெண் உறவு தங்களுக்குள் போட்டியிடுவதும் குற்றம் சாட்டுவதுமாகவே இருந்துள்ளது என்பது சரித்திர வரலாறுகள் சொல்கின்றன.

இன்னொரு கதை நினைவிற்கு வருகின்றது. கடவுள் தான் படைத்த முதல் மனிதர்கள் ஆதம்- ஏவாளிடவும் கூறுவார் 'நீங்கள் ஏதேன் தோட்டத்தில் எந்த பழம் வேண்டுமானாலும் சாப்பிடலாம்; ஒரு பழத்தை மட்டும் உண்ண வேண்டாம்" என்று. கடவுள் ஒன்றும் குறிப்பிட்டு சொல்லாது இருந்தால் கூட சும்மா இருந்திருப்பார்கள் இந்த மனிதர்கள். ஆனால் 'கூடாது' என்றதும் எளிதாக சோதனையில் வீழ்ந்து விடுவார்கள். கடவுள் தவறை கண்டு பிடித்து கேள்வி கேட்கும் போது ஆண் கடவுளிடம் கூறுவார் நீங்கள் துணைக்கு தந்த இந்த பெண் தான் என்னை தவறாக நடத்தி விட்டாள் என்று.  

ஆண்-பெண் உளைவியலை ஆழமாக பரிசோதித்தால் எந்த நிலையிலும் ஒரே போல் சிந்திக்க இயலாதவர்கள். பெண் இரக்கம் அன்பு பாசம் போன்ற உணர்வுகளால் தூண்டப்படும் போது ஆண்கள் அறிவு, வீரம், கோபம் சார்ந்த நிலைகளில் மட்டுமே சிந்திக்க இயல்கின்றது. இவர்கள் இருவரும் சேரும் போது,  ஒருவர் ஒருவரை நிபந்தனையற்று ஏற்று கொள்ளும் போது, ஒருவர் ஒருவரை தாங்கும் போது, இன்னும் சிறந்த ஒரு புதிய உறவு பிறக்கின்றது. இதில் யார் பெரியவர், யார் சிறந்தவர் என்பதை விட  இருவரும் ஒன்றாக செயலாற்றும் போது ஆக்கபூர்வமாக  மற்றொரு மாற்று சக்தி உருவாகுகின்றது என்பதே உண்மை. ஆணும் பெண்ணும் சமம் என்பதை விட ஆண் பெண் இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பவர்கள். ஒருவர் குறையை இன்னொருவர் நிவர்த்தி செய்கின்றவர்கள் என்பதே இயற்கை நியதி.

இன்றைய நிலையில் பெண்கள் பெண்மை போற்றப்படுவது இல்லை என்பதையும் கடந்து மிதித்து நெரித்து உடைக்கப்படுகின்றது. இதற்கு காரணவும் இருபக்கவும் உள்ள புரிதலின் குறைபாடே. இவர்கள் போட்டி மனபாட்மையை இந்த சமூக இயக்கவும், நிறுவனங்களும் தவறாக எடுத்து கொண்டு தங்களுக்கு சாதகமாக பயண்படுத்தி கொள்கின்றது. வரலாற்றை பரிசோதித்தால் தங்களுக்கு கொடுக்கப்பட்ட  குறைந்த ஊதியம், அதீத  வேலை நேரம்  இவைக்கு எதிராகவே பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் தற்போதும் பெண்கள் அதே சூழலில் தான் உள்ளனர் என்பது வெட்கப்பட வைக்கின்றது. சில வேலைவாய்ப்பு இடங்களில் ஆண்கள்; வேலை செய்த இடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு பெண்களை புகுத்துகின்றனர். இதனால் பெண்கள் பலன் பெறவில்லை அவர்கள் நிலையில் இருந்து புரக்கணிக்கப்பட்டனர், சுரண்டப்பட்டுகின்றனர். ஒரு ஆணுக்கு கொடுக்கும் அதே ஊழியம் பெண்களுக்கு தரவில்லை ஆனால் இரு பெண்ணை ஒரு ஆண் செய்யும் வேலைக்கு புகுத்த படுகின்றனர். வாழ்கை தரம் உயர்ந்ததா என்றால் வீட்டு படிக்குள் துன்பப்பட பெண்கள் இன்று தெருவுகளில் வேலையிடங்களில் துன்பப்படுகின்றனர்.

பெண்மை என்றதுமே ஆண்மையை எதிர் திசையில் நிற்க வைத்து கேள்வி கேட்கும் சமூக அவலம் நிலவுகின்றது.  இது ஒரு மோசமான வழி காட்டுதல். ஒரு காளை வண்டியின் இருசக்கரம் போல் ஒருமித்து பயணிக்க வேண்டியவர்கள். இங்கு புரிதல்களில் தவறுகள் உள்ளதால்; ஆண்கள் தங்கள் மனநிலையில் இருந்து பெண்களை பார்ப்பதும், பெண்களை தங்களை போன்றே ஆண்களை பார்ப்பதும் அறிவின்மையை   தவிற வேறு ஏதுமில்லை!

பெண்கள் தன்னிறைவு பெற்று விட்டனர் என்பது எல்லாம் வருமானம் பணம், தொழில் சார்ந்த கணக்கு. உண்மையில் பெண்மையில் தரம் தலைமுறைக்கு தலைமுறை கீழ் இறங்குவதையே காண்கின்றோம். ஒரு சூழலை எதிர் கொண்ட யுக்தி, புத்தி, தைரியம், துணிவு பாட்டிக்கு இருந்த அளவு தாய்க்கு இல்லை தாய்க்கு இருக்கும்  மட்டும் மகளுக்கு இல்லை. பெண்களின் தரமான வாழ்கை தேய்ந்து தோய்ந்து வருகின்றது. பெண்மை என்பது பெண் முதலில் தன் பெண்மையை போற்ற முன்வர வேண்டும். அப்போதே அச்சமூகம் போற்றுதலுக்குறிய நிலையில் பெண்மையை வகைப்படுத்தும்.  இன்றைய நிலையில் இருபக்கவும் கோஷங்களும் வேஷங்களூம் அதிகரிப்பதை விடுத்து பெண்மையை போற்றுவதும் இல்லை மதிப்பதும் இல்லை என்பதே உண்மையாகி விட்டது.

பெண்கள் தங்கள் வருமானம், உடை அலங்காரத்தில் முன்னேறுவதை முன்னேற்றமாக காணாது தன் சிந்தனை சக்தியை, தன் ஆக்கபூர்வமாக செயலாக்கத்திலுள்ள வளர்ச்சியை முன்னேற்றமாக காண வேண்டும். பல பெண்கள் தங்கள் ஏமாற்று குணத்தாலும் தங்கள் நயவஞ்சக செயல்களாலும் பெண்மைக்கு மேலும் பங்கம் விளைவிப்பதுடன்,  மோசமான பிம்பமாக சமூகத்தில் தங்கள் தோற்றத்தை நிலைநிறுத்துவது வழியாக பெண் சமுதாய அளவீடுகளுக்கே அவமானம்  வர செய்து விட்டு செல்கின்றனர். இன்றைய வேலையிடங்களில் ஆகட்டும் அரசு நிறுவனங்கள், அரசியலில் ஆகட்டும் ஆண்களுக்கு நிகரான தில்லுமுல்லுக்களில் போட்டியிடுவதை விடுத்து தங்கள்  பெண்மைக்கு இணங்கும் விதம் போற்றும் விதம் நடந்து கொள்கின்றனரா என கேள்வி எழுகின்றது. பெண்கள் பெண்மைக்கு எதிரானது ஆண்களால் ஆன வன்முறை மட்டுமல்ல பெண்களால் நிகழும் வன்முறையும் தான்.

இன்றைய சமூகத்தின் வளர்ச்சிக்கு தரமான பெண்மையில் வளர்ச்சி அவசியம் தேவை. ஒரு சமூகத்தின் ஆக்கவும் அழிவும் பெண் தான். ஒரு சமூகத்தின் மனசாட்சியும் பெண்ணே! கட்டுப்படுத்தும் மூக்கணாம் கயறும் பெண் கையிலே உள்ளது. சில ஆண்கள் தங்கள் வீட்டு பெண்களை தவிர்த்து மற்று அனைத்து பெண்களையும் இகழ்ச்சியாக காண்பதையும் கண்டு வருகின்றோம். ஒரு பெண்ணை இகழும் போது தன் தாயை, தன் சகோதரியை பழிப்பதாக உணர்ந்தாலே பெண்மை தழைக்க  துவங்கி விடும்.  ஒரு தாயின் இரக்கமே மனித குலத்தையே நிலைக்க செய்கின்றது. ஒரு மனைவியின் பாசம் ஒன்றும் இல்லாதவனை கூட வல்வனாக மாற்றுகின்றது. 
பெண் தன் பெண்மையின் கவுரத்தில் பெருமை கொண்டு நெகிழ்வதையும் தன் சக மனிதயான பெண்ணை போற்றுவதில் ஆண்கள் ஆனந்தம் கொள்ளும் காலம் வெகு விரைவில் அமைய வேண்டும்.
(பின் விபரம்: ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே போல் 24 விலா எலும்புகள் தான் உண்டு)பெண்கள் தின வரலாறு!

மக்கள் போப் பெனடிக்ட்XVI

1995 ஆம் வருடம், தனது 78 வது வயதில் 265 வது போப் ஆக பதவி ஏற்ற போப் பெனடிக்ட்XVI, எட்டு வருடம் ஆகிவிட்ட நிலையில் தனது பதவியை விட்டு விலகியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  முதல் போப், யேசு கிருஸ்து தேற்வு செய்த தனது  சீடர் சிமயோன்(பேதிரு) ஆவார். கல்வியறிவற்ற திருமணமாகி குடும்பஸ்தராக மீனவர் ஆவார். “என் பின்னே வா,… உன்னை மனிதர்களை பிடிப்பவரகளாக மாற்றுவேன்” என்ற வார்த்தையை கீழ்படிந்த அவர்; பின்பு  தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படும் மட்டும் கிருஸ்துவின் போதனைகளை பரப்புவதில் மும்முரமாக இருந்தார். யூத ஜனங்களுக்கு நற்செய்தி அறிவிப்பிக்கவே பணியப்பட்டிருந்தார். ஆகையால் இஸ்ரயேல் தேசம் மட்டுமே தன் பணிதளமாக கண்டு செயலாற்றியவர்.

ரோமன் குடிமகனும் கல்வியில் சிறந்தவருமான பவுல் கிருஸ்தவம் தழுவிய போது கிருஸ்தவ போதனைகள் இஸ்ரேயல் தேசம் விட்டு ரோமா நாட்டிலும் பரவ ஆரம்பித்தது. கிருஸ்தவத்தில் பிறப்பிடம் யூதா தேசமாக இருந்தும் தற்போது அதன் தலைமை இத்தலி நாட்டின்  பகுதியான வத்திக்கானில் இடம் பெயர்ந்ததில்; வத்திக்கானை AD-313ல் போப்புக்கு பரிசாக கொடுத்திருந்த கான்ஸ்டைன் என்ற முதல் கிருஸ்தவ சக்கரவர்த்தியின் பங்கு உள்ளது.  1929ல் போப்பின் தலைமையில் தனி நாடாக பிரகடனம் செய்து கொண்டது.

போப் என்பவர் ஒரு மதத்தின் தலைமை குருமட்டுமல்ல, 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட வத்திக்கான் என்ற உலகிலே சிறிய நாட்டின் அதிபரும் ஆவார். அவர்களுக்கு என்றே தனி, ஆட்சி அதிகாரங்கள் உண்டு. சுவிஸ் ராணுவப்படையின் ஒரு குழு வத்திக்கான் காவல்  சேவை புரிகின்றது.  800 மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பினும் உலகனத்திலுமுள்ள கத்தோலிக்க கிருஸ்தவர்களின் கட்டுபாடு, கத்தோலிக்க துறைவிகள் பாதிரியார்கள் நடத்தும் லட்சக்கணக்கு  கல்லூரிகள், பல்கலைகழகங்கள், சேவை நிறுவனங்கள், இறையியல் கல்லூரிகள், கர்டினால்கள் என்ற உயர்நிலை குருக்கள், அவர்களின் அடுத்த நிலை குருக்கள் பிஷப்புகள், பாதிரியார்கள், டீக்கன்கள், கன்னியகமடங்கள், என ஒரு பெரும் நிர்வாகத்தின் கட்டுபாடும் வத்திக்கானிடம் தான் இருந்தது. 200 நாடுகளிலுள்ள 2.3 பிலியன் கத்தோலிக்க கிருஸ்தவர்களின் தலைவராக இருந்தாலும் உலகு அனைத்து மக்கள் கவனவும் போப் பக்கம் இருந்ததை மறுக்க இயலாது. உலகில் நடந்த பல யுத்தங்களுக்கு காரணவும், கட்டுப்படுத்தும் படியான இடத்தில் வத்திக்கான் இருந்தது என்றால் மிகையல்ல!

கத்தோலிக்க கிருஸ்தவ சபையில் திருமுழுக்கு பெற்ற உறுப்பினர்களாக இருக்கும் எவருக்கும் போப்பாக போட்டியிட தகுதி இருந்த போதும்   தற்போதைய வழக்கப்படி 120 கர்டினால்களில் இருந்து ஒருவரே போப் ஆக தேற்ந்தெடுக்கப்படுகின்றார். போப் தாமாக ஓய்வு பெறும் வழக்கம் பொதுவாக  இருப்பதில்லை. அவர்கள் பதவி காலம் அவர்கள் மரணத்துடன் நிறைவு பெறுகின்றதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆனால் போப் பெனடிக்ட் தன் வயோதிகம் அதை சார்ந்த ஆரோக்கிய நிலை கணக்கில் கொண்டு; தன் சுய விருப்பம் சார்ந்து பிரார்த்தனை தியானம்  வழிகாட்டுதலால் விலகுவதாக அறிவித்துள்ளார். கண் பார்வை  கேள்வி குறை உள்ளதாகவும் சொல்கின்றனர் மேல் மட்ட அதிகாரிகள்.

பதவி விலகிய போப் பொதுவேதி நிகழ்ச்சிகளில் பங்குபெற தடையுள்ளது.    இனி வரும் மூன்று மாதங்கள் பேசாமடத்தில் வெளி உலகு தொடர்பில்லாது இருக்கவும் உள்ளார். பதவியில் முத்திரைகள் ஆன கை விரலில் அணிந்துள்ள தங்க மோதிரம் திருப்பி கொடுக்க வேண்டும். அதை அழித்து வரயிருக்கும் போப்புக்கு மோதிரம் அணிவிக்க உள்ளனர். அதிகாரத்தில் அடையாளமான கிரீடம், செங்கோல் இனி ஓய்வு பெற்ற போப்பால் பயண்படுத்துவது இல்லை, மேலும் சிவப்பு வண்ண காலணி அணிய தடை உண்டு. ஆனால் வெள்ளை உடையை தொடரவும் ஓய்வு பெற்ற போப் என்று அறியப்படவும் உள்ளார். ஜோசப் ரேட்சிங்கர் என்ற இயற்பெயர் அல்லாது தன் பதவி பெயர் போப் பெனடிக்ட்XVI என்றே அறியப்படுவார்.
ஒரு பெரும் பதவியிலுள்ள மாபெரும் மனிதர் தன் பதவியை விட்டு விலகி பதவி அதிகார பேராசை கொண்ட சமூகத்திற்கு வழி காட்டியுள்ளது பாராட்டுதல்குரியது. அவருடைய துணிவான நேர்மையான மனநிலையையும் காட்டுகின்றது இது. பதவி துறைப்பது என்பது சாதாரணம் அல்ல என்று இருப்பினும் இதன் முன்பும்  நான்கு முறை நடந்துள்ளது. இதே போன்று போப் கிரோகரிXII 1415தாமாக முன் வந்து பதவி விலகியுள்ளார். போப் செலஸ்டின் V ல் 1294ல் தன் பதவி விட்டு விலகிய பின், மனம் மாறி பதவியில் வரக்கூடும் என்ற சூழலில் வீட்டுகாவலில் வைக்கப்பட்ட நிலையில் 8 மாதம் கடந்து மரித்துள்ளார் என வரலாறு சொல்கின்றது. போப் பெனடிக்ட் IX  குற்ற செயல்களில் ஏற்பட்டதால் பதவியில் இருந்து விரட்டப்பட்டுள்ளார். முதன் முதலில் போப் ஆக இருந்து பதவி விலகி சென்றவர்18 வது போப்பான பொன்டைன் ஆவார். இது நிகழ்ந்தது  235ல் ஆகும்.

தற்போது பதவி விலகியுள்ள போப் ஜெர்மனியிலுள்ள பூன் பல்கலைகழகத்திலுள்ள புகழ் பெற்ற இறையியல் பேராசிரியர் ஆவர். பின்பு இப்பல்கலைகழகத்தின் துணை அதிபராகவும் உயர்ந்தவர். போப் என்ற வகையில் இவரை கண்டு  வருவதை விட இவர் சொற்பொழிவை கேட்கவே பல பொழுதும் மக்கள் விரும்பினர். கடவுளை பற்றிய அறிவை பாமரர்களுக்கு புரியும் வகையில்  எளிய முறையில் இறைவன் அன்பு- மனித அன்பு, நல்லிணக்கம் என்ற அடித்தளத்தில் பேசி வந்தவர் இவர். கடவுளில் அன்பு என்பது மனிதர்கள்  சுமூகமான உறவில் துவங்குகின்றது என்று பல முறை நினைவுப்படுத்தியவர். ஜெர்மன், பிரஞ்சு, லாட்டின், ஹீப்ரு, ஆங்கிலம், கிரீக் என பல மொழிகளில் வல்லுனர். தன் பதவி கால முதல் மூன்று வருடம் உலக நாடு சுற்றுப்பயணத்தில் விருப்பம் கொண்டிருந்தாலும் அடுத்த வருடங்களில் புத்தகம் எழுதுவதிலும் சொற்பொழிவு, கருத்தரங்கம் என சுறுசுறுப்பாக இயங்கி வந்தவர். இவரில் கருத்தக்களை பல சமூகத்தினர் பல முறை  கேள்விக்கு உட்படுத்தியிருந்துள்ளனர். இஸ்லாமிய மதத்தலைவர்கள், புத்த துறவி தாலாய்லாமா, ஹிந்து துறவிகளையும் சந்தித்து நல்லிணக்கம் பேணி வந்தவர். மற்று மதத்தலவர்களை சந்தித்து ஆக்கபூர்வமான விவாதங்களுக்கும் வழிவகுத்தவர். கிருஸ்த ஆலையங்களில் பயண்படுத்தும்  பியானோ என்ற வாத்திய கருவி வாசிப்பதில் விற்பகர். தன் பெரும் வேலைப்பழு மத்தியிலும் தன் உடன் பிறந்தவர்களையும் நேசிக்க மறக்காதவர். இப்படியாக தன் வாழ்நாள் முழுவது மனித உறவும் இறைவணக்கவும் ஒரே போல் புனிதமானது என்று உணர்த்தி வந்தவர்.

சிலரால் நாத்திக போப் என்று கூட தூற்றப்பட்டார். தன் பதவி கடைசி நாட்களில் கிருஸ்தவ பாதிரிகளால் உருவான பாலிய ஊழல் சம்பவங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டவராக இருந்ததாக சொல்லியுள்ளனர். வத்திலீக்ஸ் போன்ற விவாதங்களும் அவரை துரத்திய வண்ணம் இருந்தது. வத்திலீக்ஸில் இவருக்கு நம்பிக்கைக்குரியவரான  சமையல்காரரை பயண்படுத்தியிருப்பதும் இதன் தூண்டுதலாக இருந்தவரை இன்னும் கண்டுபிடிக்காத சூழலில் ஓய்வும் பெற்று விட்டார். வத்திக்கான் நிர்வாகம் ஜெசுவிட், பெனடிக்ஷன், பிரான்சிகன் போன்ற சிறு குழுக்கள் கட்டுபாடில் இருந்தது போல் தற்போது குரியா என்ற குழுவின் ஆதிக்கப்பிடியில் உள்ளதாகவும் சொல்கின்றனர். சபையை எளிய தளத்திற்கு கொண்டு வர முயன்ற மாபெரும் மனிதர் இவர். பொதுவாக மதவாதிகள் என்றதும் ஊடகம், இணைய ஊடகம்  போன்றவற்றை பயண்படுத்துவதை பாவச்செயலாக பொருத்தி பார்க்கும் வேளையில் டிவிட்டர் போன்ற சமூக தளத்தின் தன் கருத்தக்களையும் பதிந்து தன்னையும் சமூகத்துடன் ஒரு கண்ணியாக இணைத்து கொண்ட அவருக்கு விடை சொல்வது வருத்தமே.

போப் என்ற வார்த்தையின் பொருள் தந்தை என்பதாகும். தமிழர்கள் போப் ஆண்டவர் என்று அழைப்பதும் கேரளாவில் புனித போப் என்று அழைப்பதும் ஒரு  தலைமையை அதன் அதிகார மரியாதையில் காணாது அவர்களே விரும்பாத புனிதம் என்ற பெயரில் ஒரு முகமூடியும் அணிவித்து சிறைப்படுத்துவதாக  உள்ளது.  ஆனால் அந்த பதவி சார்ந்த எல்லா தாச்சுறுத்தல்களையும் தடைகளையும் உடைத்து கொண்டு தான் கொண்ட கருத்துக்களை எழுத்தாலும் பேச்சாலும் பதிந்து வந்த போப் போற்றக் கூடியவர் ஆவார்.
ஒரு மதத்தலைவரின் மதிப்பும் அதன் தாக்கவும் அதன் உறுப்பினர்கள் சார்ந்தே உள்ளது. அவ்வகையில் சபையின் அடித்தள உறுப்பினர்கள் பற்றி அவர்கள் வாழ்கை பற்றி சபை அமைதி காப்பது துயரே. அடித்தள மக்கள் வாழ்கையை பக்தியில் மட்டும் சுழல விட்டு, அவர்கள் போராலும் நோய், வேலையில்ல பிணிகளில் உழலும் போது சபை கண்மூடி அமைதி காப்பதும் வருத்தமே. இஸ்ரேயல், ஈழம், எத்தியோப்பியா, அரபி நாடுகளில் கிருஸ்தவ அடித்தள உறுப்பினர்கள் மற்றும் பாதிரியார்கள் பெரும் சவாலை சந்தித்தே வருகின்றனர். இவையில் வத்திக்கானின் தாக்கம் ஆக்கவும் அறியும் படி இருப்பது கிருஸ்த சபை வளர்ச்சிக்கும் அதன் உறுப்பினர்கள் வாழ்கை நலனுக்கும் மிகவும் தேவை.  மதங்கள் வளர வளர அது ஒரு நிறுவனமாக உருமாறுவது அதன் அடித்தள உறுப்பினர்கள் தலைமையின் கண்ணில் எறும்பாகவும், கடைநிலை உறுப்பினர்களுக்கு தான் சார்ந்திருக்கும் மதத்தின் பிரமாண்டம் மலையாக கண்டு களியூறுவது வழியாகவும் அதன் நிழலில் மயங்கி கிடப்பதுமே உண்மை நிலையாக உள்ளது.