26 Feb 2013

செல்லுலோயிட்- மலையாள திரைப்பட தந்தை- ஜெ.சி டானியேல் என்ற தமிழர்!

2012 கேரளா அரசின் ஒன்றல்ல இரண்டல்ல ஏழு  திரைப்பட விருதுகளை தட்டி சென்ற படம் செல்லுலோயிட்.  சினிமா  ஆசையால்  பணம், நிம்மதி இழந்து தன் கடைசி நாட்களில் மருத்தவம் பார்க்க கூட வழியற்று  உற்றோர், உறவினரால் மற்றும் சமூகத்தால் புறம்தள்ளப்பட்டு 1975 ல் மிகவும் நிராதரவாக   மறைந்த  மருத்துவரான ஒரு தமிழனின் உண்மை கதையே இது.  அவர் தான்   மலையாள திரையுலகின் தந்தையான;ஜெ. சி டானியேல் என்ற கேரளா தமிழர்! 

புலைய ஜாதியில் பிறந்து  ஒரு மலையாளப் பெண் கலையின் மேல் கொண்ட விருப்பத்தால் சினிமாவில்  மேல் ஜாதி பெண்ணாக நடித்தார் என்று விரட்டியடிக்கப்பட்டு; பின்பு தமிழகத்தில் தலைமறைவாக வாழ்ந்து மரித்த ரோசி என்ற  மலையாள பெண்ணின் கதையும் சொல்லும் படவும் கூட!  

ஜீவநாயகம் சிரில் டானியேல் கிருஸ்தவ பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை லண்டனில் சென்று கல்வி கற்று வந்தவர். டானியேலுக்கு களரிபயிற்று என்ற கலை மேல் தீராத பிரியம்!  இக்கலையை பற்றி தனது 15வது வயதில் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.  இக் கலையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தகுந்த ஊடகம்,  காட்சி ஊடகமே என புரிதலில்  இக்கலை பற்றி ஆவணப்படம் எடுத்து வெளியிட விரும்பி திரைத்துறை பற்றி கற்க சென்னை செல்கின்றார்.  ஆனால் அங்கோ அவர் ஏற்றுகொள்ளப்படவில்லை..  கிருஸ்தவர்கள் திரைப்படம் காண்பதே பாவம் என்ற கருதிய கால சூழலில் சினிமா மேல் கொண்ட ஆர்வத்தால் படம் எடுத்தே தீர வேண்டும் என்ற உறுதியில்  மும்பை சென்று திரைப்பட நுணுக்கங்கள் கற்று அறிந்து  திருவனந்தபுரம் வந்து சேர்கின்றார். தன் லட்சிய கனவுக்கு என சொத்துக்கள் விற்று   4 லட்சம்(இன்றைய நிலவரப்படி   4 கோடி)ரூபாயில் முதல் ஸ்டியோ Travancore National Pictures)ஒன்றை திருவனந்தபுரத்தில் நிறுவுகின்றார்.  டானியேலின், தயாரிப்பு, இயக்கம், திரைக்கதை, நடிப்பில்  முதல் ஊமைப்படமான விகதகுமாரன்(தொலைந்த குமாரன்)1928ல்   வெற்றிகரமாக வெளிவருகின்றது.

முதலில் இப்படத்தில் நடிக்க ஆங்கிலோ இந்திய நடிகையை தேர்வு செய்கின்றார். ஆனால் ஆங்கில நடிகையின் அகம்பாவ நடவடிக்கைகளை கண்டு மனம் கசந்த டானியேல் கேரளாவில் வயலில் வேலை செய்யும் ரோசம்மா என்ற இளம் பெண்னை  கதாநாயகியாக நடிக்க வைக்கின்றார்.

அக்காலயளவில் பெண்கள் திரைப்படங்களில் நடிப்பதை பாலியல் தொழிலோடு ஒப்பிட்டு தடுத்திருந்தனர். ஆனால் வயல் வேலை செய்யும் புலைய இனத்தை சேர்ந்த  ரோசி என்ற கிருஸ்தவ பெண் கலையில் மேல் கொண்ட ஈடுபாட்டால்  5ரூபாய் தினக்கூலியில் 10 நாள்  50 ரூபாய் கூலி பெற்று  நடித்து கொடுக்கின்றார்.  படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகன் பெண்ணின் தலையில் இருந்து ஒரு பூ எடுக்கும் காட்சியை கண்டு கோபம் கொண்ட பார்வையாளர்கள்  கீழ் ஜாதிக்காரப் பெண்ணை மேல்ஜாதிக்கார கதாபாத்திரம் தொடுவது போல் எப்படி நடிக்க வைக்கலாம் என கோபம் கொண்டு திரையை மட்டுமல்ல நடித்த பெண்ணின் குடிசையும் தீயிட்டு கொளுத்துகின்றன்றனர். உயிருக்கு பயந்து ஓடி வந்த  பெண் எதிரே வந்த  தமிழக லாறியில் ஏறி தப்பித்து நாகர்கோயில் வந்து சேருகின்றார். பிற்பாடு கேசவபிள்ளை என்ற அந்த லாறி ஓட்டுனரையே திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் தமிழச்சியாகவே தலைமறைவு வாழ்கை வாழ்ந்து மறைகின்றார். 


படம் நடித்தவருக்கே இந்த கதி என்றால் படம் தயாரித்து, இயக்கி, நடித்த டானியேல் நிலை என்னவாகும்.  அனைத்து பணம், நிம்மதி இழந்து தமிழகம் அகஸ்தியபுரத்தில் குடிபுகிற்கின்றார் அங்கு மருத்துவம் கற்று பல் மருத்துவராக தமிழத்தில் பல இடங்களில் பணிபுரிகின்றார்.

திருச்சியில் பணியாற்றும் வேளையில் தமிழக நடிகர் பி.யூ சின்னப்பாவின் அறிமுகம் கிடைக்க மறுபடியும் சினிமா ஆசையுடம் திரையுலகம் நோக்கி செல்கின்றார். இந்த முறை சின்னப்பா கோஷ்டிகளால் ஏமாற்றப்பட்டு இருந்த சொச்ச கொஞ்சம் பணவும் இழந்து தனிமையிலும் மன உளச்சலிலும் வீழ்ந்து விடுகிறார். 

 பக்கவாதம், பார்வைக்குறைபாடு என பல இன்னலுக்கு உள்ளாகி கொடும் வறுமையில் தன் மருத்துவ செலவுக்கு கூட வழியற்று கேரள அரசிடம் ஓய்வூதியம்  கேட்டு நிற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றார். 

அக்காலயளவில் அரசு பணியில் மாவட்ட ஆட்சி தலைவராக இருந்தவர் பிரபல மலையாள எழுத்தாளருமான மலையாற்றூர் ராமகிருஷ்ணன்.  இவரோ டானியேல் மலையாளி அல்ல,  இவர் தமிழர் என்பதாலும்  தமிழகத்தில் வசிப்பதாலும் தமிழக அரசை அணுக பரிந்துரைக்கின்றார். மேலும் படம் எடுத்தார் என்ற சாற்றுக்குறிய படச்சுருளை(செல்லுலோய்ட்) சமர்ப்பிக்க கட்டளையிடுகின்றார். ஆனால் இப்படச்சுருள் தன்  இளம் வயது மகன் ஹாரி நாடாரால் அழிக்கப்பட்டது இவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீரத்திற்க்கு பெரிதும் தடையாகின்றது.  அது மட்டுமல்ல்  ஜெ.சி டானியேல் தான் முதல் மலையாளப்படம் எடுத்தார் என்ற அங்கீகாரம் மறுக்கப்பட்டு  மாடேன் தியேட்டர் உரிமையாளர் டி ஆர்.சுந்தரம் தயாரிப்பில் வந்த 'பாலன்' என்ற பேசும் படமே முதல் மலையாளப் படம் என்ற அங்கீகாரம் பெற்றிருந்தது.  


நாடார் என்ற இனத்தை சேர்ந்த தமிழர்  பிராமண அரசு அதிகாரியான மலையாற்றூர் ராமகிருஷ்ணன், கேரளா முதல்வராக இருந்த கெ.கருணாகரன்  போன்றோரில் காழ்ப்புணர்ச்சியால் உதவிகளும் பெறாது தீராத மனத் துயருடன் 1975ல் உலக வாழ்கைக்கு விடைகொடுக்கின்றார்.  



இவருடைய காதல் மனைவி ஜானட் தன் கணவரின் எல்லா செயலுக்கும் ஆசைகளுக்கும் பக்கபலமாக இருந்ததுடன் இவருடைய கடைசி நாட்களில் மிகவும் கருதலாக நோக்கினார் என்று இவருடைய பேத்திகள் சான்றுபகிர்கின்றனர்.விவாதம்!

இப்படியாக ஒரு பெரும் கலைஞர் ஜாதி, மொழி, மாநில அரசியல் காழ்புணர்ச்சியால் அவமதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு வாழ்ந்து மறைந்ததை சொல்லும் படமே இது.  திரைப்பட பத்திரிக்கையாளரான சேலங்காட் கோபாலகிருஷ்ணனின் 'டானியல் வாழ்கை சரிதம்' மற்றும் வினு அபிராஹாமின் ‘நஷ்ட நாயகி’ என்ற புத்தகவும் ஆதாரமாக கொண்டு இப்படம் உருவாக்கியுள்ளனர். 
கேரளா அரசின் ஏழு  விருதுகள் கிடைத்திருந்தாலும் கேரளா காங்கிரஸ் அரசியல்வாதிகளையும், மலையாற்றூர் ராமகிருஷ்ணன் ரசிகர்களையும் கோபம் கொள்ள வைத்த படம் இது.  பல விவாதங்கள் எழுந்தாலும் உயிருள்ள போது ஒடுக்கப்பட்ட ஒரு கலைஞனின் வாழ்கை ஒரு சரிதமாக பதியப்படுவதும் அவரை கொண்டாட நினைத்த மலையாள இயக்குனர் கமலுக்கும் டானியேலாக நடித்திருக்கும் பிருத்விக்கும் வாழ்த்துக்கள். இசை எம்.ஜெயசந்திரன் இயக்கத்தில் வந்துள்ளது.

கலாச்சாரம், மதம், பண்பாடு என பல பெயர்களில் கலைஞர்களை; அவர்கள்: படைப்புகளை ஒடுக்கும் சூழலில் உண்மையாக உழைத்து நட்டத்தில் வாழ்ந்து மரிக்கும் கலைஞர்களின்  வாழ்கையை திரையில் கண்ட பார்வையாளர்கள் ஒரு சொட்டு கண்ணீர் பொழிக்காது திரும்பவில்லை என மலையாள ரசிகர்கள் சொல்லியுள்ளனர். கலைப் படம் என்பதை விட ஒடுக்கப்பட்ட ஒரு சிறந்த தமிழனின் வாழ்கையை சொல்லும் படம் இது என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

மேலும் பியு சின்னப்பா போன்றவர்கள் அரங்கில் நாயகர்களாகவும் வாழ்கையில் வில்லனாகவும் இருமுகம் கொண்டு வாழ்ந்து வந்ததை  கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது இப்படம். அதே போல் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் இடதுசாரி கொள்கையில் ஊறி அதை கதையாகவும் திரைக்கதையாகவும் விற்று காசு சம்பாதித்த போது அவர்கள் எழுத்திற்கும் செயல்களுக்குக்கும் இடையில் பெரும் முரண்பாடு இருந்துள்ளதை  இப்படம் கோடிட்டு காட்டியுள்ளது.  அதே போன்று  மலையாளப்பட முதல் சூப்பர் ஸ்டாரானாக சத்தியன் மாஸ்டரும் ஒரு நாடார் இனத்தவரே. அவரும் ஜெ.சி டானியேலுக்கு உதவவில்லை என்பதே வரலாறு.                                                                                                                
இப்படியாக சமூகத்தில் பெரும் பிம்பங்களாக இருந்து மறைந்தவர்களின் மறுபக்கத்தையும் விரல் நீட்டியுள்ளது.     இதே போன்ற படங்கள் தமிழிலும் உருவாகவேண்டும் அவயை ரசிகர்கள் அரசியலால் எதிர்க்காது அதே போல் ரசிக்கவும் ஏற்கவும் முன்வர வேண்டும்.  1992 துவங்கி கேரளா கலை- மற்றும் கலாச்சாரத்துறை ஜெ.சி டானியேல் பெயரில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை கொடுத்து வருகின்றது என்பது குறிப்பிட தக்கது. 

இந்த படத்தில் இடம் பெற்ற அத்துணை பாடல்களுமே சிறப்பு. மிக முக்கியமாக காற்றே காற்று என்ற பாட்டு. https://www.youtube.com/watch?v=FeF2yx4r3bI
 டானியேல் வாழ்கை- ஆவணப்படம் பி.கே ரோசி-முதல் மலையாள திரைப்பட நாயகி!

0 Comments:

Post a Comment