header-photo

நித்திரைப் பயணங்கள்! கவிஞர் மு.ஆ. பீர்ஒலி

கோயம்பத்தூர் புத்தக வெளியீடு விழாவில் சந்தித்து புத்தகவும் பெற்று கொண்டேன். பெற்ற புத்தகம் ஒரு நண்பர் வாங்கி விட சுபி அக்கா வந்த போது மறுபடியும் ஒரு புத்தகம் கேட்டு வாங்கி  பல முறை வாசித்து விட்டேன்.  இருந்தும்  கருத்து எழுத  தயக்கம் இருந்து கொண்டே தான் இருந்தது.  இன்று மறுபடியும் சகோதரை சந்தித்த போது என் பொறுபற்றத்தனத்தை நினைத்து வருந்தி தைரியம் வரவழைத்து கொண்டு என் கருத்தை பகிர்கின்றேன்.

ஒரு நல்ல படைப்பு என்பது படைபாளியின் சிந்தனையில் இருந்து, தான் அடைந்த பாதிப்பு,  அனுபவத்திலிருந்தே  பிறக்கும். அவ்வகையில் கவிஞரின் சிந்தனையின் அடிநாததில் இருந்து புறப்பட்ட இக்கவிதை தொகுப்பு சுவாரசியம் மட்டுமல்ல நமக்கும் சில உணர்வுகளையும் இட்டு செல்கின்றது.  ஒவ்வொரு முறை  புத்தகம் வாசிக்கும் தோறும் பொருட்கள் மேலும் மேலும் விளங்கி கொண்டே இருந்தது.  வார்த்தை கையாடலில் ஒரு கவனம், கவுரவம், பொறுமை, மற்றும்  ஒரு ஸ்ருதி சேர்ந்து கலந்து  இருப்பது வாசிப்பவனின் மனதை தொட்டு செல்கின்றது.

"மலரின் பயணம்" என்ற முதல் கவிதையின் ஊடாக ஒளியை தேடியுள்ள பயணத்தை கவிஞர்   துவங்குகின்றார். ஆனால் வாழ்கையில் கண்டதோ பொய் முகங்கள்! இதனால் மனம் கசந்து விம்மலுகளுடன்  அடுத்த கவிதை ஊடாக உண்மையை தேடி தன்  பயணத்தை தொடர்கின்றார். தன் பல கவிதை வழியாக நம்பிக்கையுடன் பொய் முகமற்றவரை தேடி கொண்டே இருக்கின்றார்.
"நிறமாறிக் கொண்டிருக்கும் 
திரைச் சீலை
பொய்முகம்
விடுபட்ட நிலவு
இன்னமும் தேடுகின்றேன்" 
இதனிடையில் கவிஞருக்கு கவிதையாக ஒரு தேவதை வருகின்றார்.  ஆனால் விதவை பெண் போல் என உவமைப்படுத்தி நடக்காது போன விருப்பத்தை, வாழ்வில் எதிர் கொண்ட  ஏமாற்றத்தை மனத்துயரை கோடிட்டு காட்டுகின்றார் கவிஞர்!"அல்லி இதழால் அவளுக்கு இசைத்திடடி" என்ற கவிதை ஊடாக காதல் தோல்வியில் தவழும் ஒரு இளம் மனிதனின் மன உளச்சலை  புடம் இட்டு காட்டுகின்றார்.  இதமான வார்த்தைகளுடன் ஆனால் கனத்த ஒரு சூழலை இட்டு செல்கின்றது இக்கவிதை.

தியானங்கள் தொடர்கின்றன என்ற கவிதையினூடாக பெரும் மழைக்கு பின்பு அமைதி ததும்பும் வானத்தை போல்  முற்றும் துறந்த மனநிலையை ஞான நிலையை வெளிப்படுத்துகின்றார்.  ஆனால் அடுத்த இரு கவிதைகளில்  தான் தொலைத்த, அரும்பும் போதே நுள்ளைப்பட்ட காதலை நினைத்து வெந்து உருகி ஒரு குழந்தையின் மனம் கொண்டு ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றார்.
"உன்னை நேசித்த பொழுது 
 ன்னையே நேசித்தேன்".

"என்னையே வெறுத்தேன் 
உன்னை நேசித்ததால்"

"எங்கோ 
தொலைதூரத்தில்
இராப் பிச்சைக்காரனின்
ஈனக் கதறல்கள்"

"மலர்கிறது" என ஒரு கவிதை அழகிய தென்றல் வீசி அருமையான சொல்லாடலுடன் நம்மை அழைத்து செல்கின்றது. இது போன்ற கவிதைகளை விவரித்து சொல்லுவதை கேட்பதை விட வாசித்து அனுபவிக்கும் சுகம் அலாதியானது என்று மட்டுமே சொல்ல இயலும். இக்கவிதை வாசிப்பின் முடிவில் நாமும் நம்மை அறியாது மலர்ந்து சென்றிருப்போம் .

அடுத்து வருவது ஒரு பெரும் துக்கத்தின், ஏமாற்றத்தின், பிரிவின் தாக்கத்தை வெளிப்படுத்தும் கவிதை. இதை வாசிக்கும் போது  ஒரு வித உளைவியல் மனதாக்கங்கள் நம்மையை தாக்குவதை கண்டு உணராது இருக்க இயலவில்லை. நித்திரையில் நாம் கண்ட சில கனவுகளுடன்  பயணிப்பது போன்று தான் உள்ளது. 

எங்கு சென்றிட்டாய்? என்ற கவிதை காதலியின் பிரிவால்-ஏக்கத்தால் மூர்ச்சையாகிப் போன காதலனின் மனநிலையுடன்  82 வரிகளை ஒரே மூச்சில் உருவிட வைத்துள்ளார். அடுத்த கவிதையில் நிதானமான மனநிலையுடன் காதலியை தோழியாக பாவித்து தன் மனதையையும் தோழியேயும் தேற்றும் தாலாட்டாக உள்ளது. 

அழுது புரண்டு வெறி கொண்டு அழுது புரண்ட காதலன்,   உண்மையை கிரகித்தவராக நிஜங்களில் நிம்மதி கொண்டு    மனநிறைவுடன் புது உறவில் லயிப்பதை அடுத்து ஓரிரு கவிதைகளில்  அரங்கேற்றிகயுள்ளதை நாமும் ஆசுவாசமான ரசிக்க இயலும். இனியுள்ள கவிதைகளில் கணவன் மனைவியின் உறவின் பாரம்மியமான நிலையை, உன்னதமான தருணங்களை அழகிய சொல்லாடல்கள் கொண்டு விளக்குகின்றார். அமைதியான நதி போல் வாழ்க்கை  செல்வதை காணலாம்.  காதல் விரகத்தில் இருந்து காதலில் விழும் சூழலை, அதாவது பழம் நழுவி பாலில் விழுவதை காண இயலும்(பக்கம் 43).
சின்னஞ் சிறு மலரின் 
செம்மை வனப்பு கண்டு
செயலற்று.. 
சொக்கி விட்டேன்.
நித்திரை விழிகள் என்ற கவிதை சமூக நிலையை விளிம்பு நிலை மனிதனின்  கதையை சொல்கின்றது. காதல் மனைவி குழந்தை என அழகிய குடும்பத்தில் வறுமையால் உடலை விலைபேச வேண்டி வந்த அபலைப்பெண்ணின் நிலையை கவிதையான வடித்து செல்கின்றார் கவிஞர். இந்த கவிதைகளில் சுயபச்சாதாபம், சுயவருத்தம், என சுயத்தில் உழலும் கவிஞர் சமூகத்தை கரிசனையுடன் உற்று நோக்கும் நிலையை காணலாம்(பக்கம்:48). பிரிவையும் நம்பிக்கையோடு தேடும் மனதுடன் கவிஞர் கவிதை படைத்துள்ளார்(உதயத்தை தேடி...),வயிற்று பசியோடு அலையும் பிச்சைக்காரிகளையும் உணவாக்கும் கேடுகெட்ட சமூகத்தை அருவருப்புடன் நோக்கும் கவிஞர், வறுமையால் ஒரே போல்  துன்பத்தில் உழலும்  தாயும் சேயையும் அறிமுகப்படுத்துகின்றார். வேலியே பலபொழுதும் பயிறை மேயும் நிலையும் உணர்த்தும்  வழியாக தன்னில் இருந்து முழுதுமாக சமூக போராளியாக உருமாறுவதை காணலாம்.

தொடரும் ஜென்மபந்தம் .... என்ற கவிதையில் மறுபடியும் காதலியை தேடியலையும் ஆத்மாவை உணர்த்துகின்றார். 'ஒரு மனிதனின் தேடல்' என்ற கவிதை  தனித்து நிற்கும் பனைமரம் போன்ற தனிமையுடன் மனிதனை ஒப்பிட்டு மறுபடியும் தேடல்களுடன் பயணம் ஆரம்பித்து விட்டார் கவிஞர். கவிஞரின் அடுத்த புத்தகத்தில் நாம் சங்கமிப்பதுடன் கவிஞரின் தேடலில் விடையில் நாமும் சென்றடையுவோம். 

இப்படியாக ஒரு ஆழ்ந்த நித்திரையில் காணும் கனவு போல் பல கவிதைகள் நம்மை இதமாக தாலாட்டி, ஆழமான சிந்தனைக் கனவுகளுடன் பயணிக்க வைக்கின்றது. இந்த உலகத்தின் கபடு பொய்மையை கண்டு கலங்கும் கவிஞர் நம்மையும் கலக்கமடைய செய்து  விடை தேட பணிந்து தேடல்களுடன் விடை தருகின்றார். 

சாலமன் பாப்பையா, பேரா ஞானசம்பந்தன் போன்றோர் முன்னுரை வாழ்த்துரை வழங்கியிருப்பது புத்தகத்திற்கு இன்னும் பலம் சேர்க்கின்றது.
கவிஞரின் உரையும் ஒரு ஓடும் நதி போன்று வாழ்கை தத்துவம், இறை நம்பிக்கை ஊடாக ஒரு இனிமையான கீதமாகத்தான் உள்ளது. அட்டைப்படத்தில் காணும் பச்சை நிறம் கனவுகளில் வனைப்பான பயணங்களை சொல்கின்றதா என வாசிப்பவர்கள் சொல்ல வேண்டும். ஒரு நல்ல கவிதை புத்தகத்தை வாசித்த மகிழ்ச்சியுடன் எளிதில் மறையாத உணர்வுகளுடன் நீங்களும் பயணிப்பீர்கள் என துணிவுடன் கூறலாம்.

எளிமையின் இருப்பிடவும் பண்பின் இலக்கணமும், சகோரத்துவத்தின் பிரதியாம் சகோதரை புத்தக விழாவில் சந்தித்ததும் நான் அவருடைய சொந்த சகோதரியாக  நேசிக்கப்படுவதும்  இறைவனின் கொடைதான் என்ற நிறைவுடன் சகோதரின் புத்தகத்தை என் பார்வையில் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி கூறி இப்பதிவை உங்கள் முன் படைக்கின்றேன். நீங்களும் வாங்கி வாசித்து கவிதையை அனுபவிக்க வேண்டுகின்றேன். 6 comments:

Subi Narendran · Top Commenter · Works at M&S said...


சகோ பீர் ஒலியின் 'நித்திரைப் பயணங்கள்' நூலுக்கு மிக அருமையான விமர்சனம் ஜோ. கவிதைகளின் அர்த்தங்களை மேலும் நன்றாகப் புரியச் செய்கிறது. நல்ல தமிழில், கவிதைகளை அதன் அர்த்தங்களை உள்வாங்கி விரிவாக விளக்கமாக எழுதியது உங்கள் திறமை. இடையிடையே அழகான படங்கள் மேலும் ரசிக்க வைக்கின்றன. சிறப்பான பகிர்வுக்கு உங்களுக்கும், இதை எழுத வைத்த கவிதையை தந்த சகோ பீர் ஒலிக்கும் வாழ்த்துகள்.

Mohamed Adam Peeroli · Subscribed · American College,Madurai said...


" கவிதையே தெரியுமா என் கனவு நீ தானடி....இதயமே தெரியுமா உனக்காகவே நானடி"--கவிஞர் அறிவுமதி. கனவுக்கு கவிதையையும் உயிருக்கு இதயத்தையையும் தெரிந்து இருப்பதில் ஆச்சரியமில்லை. கவிதைக்கு கனவையும் இதயத்திற்கு உயிரையும் உணர்ந்திருப்பதே அவசியம்...சிறப்பு.
கவிதை வரிகளினுடே வியாபித்து தழுவியோடும் ஒரு படைப்பாளியின் ஆத்மத்துடிப்புக்களை வாசகர்கள் புரிந்து உணர்ந்து கொள்வதில்தான் ஒரு படைப்பாளியின் வெற்றி அமைந்துள்ளது.
ஒரு படைப்பாளியின் படைப்பை அவனை புரிந்தவர்கள் அவனுடன் இருப்பவர்கள் அவனின் எண்ணவோட்டங்களைத் தெரிந்தவர்கள் புரிந்து கொண்டார்கள் என்பது வெற்றியன்று.
ஒரு படைப்பாளியின் உள் உணர்வுகளை சொல்ல விழைந்த செய்திகளை அவன் கவிதகள் மூலம் முழுமையாக புரிந்து கொள்வதென்பது மிகச் சிறந்த அறிவாற்றல்.
நான் எழுதி முடித்தப்பின்பு பதிப்புக்கு முன்பு நிறையவே தயங்கியுள்ளேன் நான் சொல்ல நினைத்த செய்திகள் வாசகர்களிடம் சென்றடையுமா என்று.
மறியாதைக்குறிய கங்கை மகன் சகோதரி சுபி நரேந்திரன் தங்களின் ஆழ்ந்த வாசிப்பில் என் கவிதைகளை புரிந்து கொண்டது கண்டு மிகவும் மகிழ்ந்துள்ளேன்.
"நான் தேடும் வெளிச்சங்களத்" தேடி...சிகரத்தை நோக்கி காலடி வைத்துள்ள அருமை சகோதரி ஜோசபின் பாபா தன்னுடைய சிறந்த புலன்களாற்றலால் என்னுடய கவிதைகளின் முழுமையான கருப்பொருள்களையும் தெள்ளத்தெளிவாக உணர்ந்து மிகச் சிறந்த திறணய்வு பதிவு செய்துள்ளார். அவருடய அந்த புரிதலுக்கு என் மனதில் துளிர்த்த நன்றி மலர்களை சமர்ப்பித்து என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
மு.ஆ. பீர்ஓலி.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

Suthan Sivasuthan · Works at GIZ ********* said...


ஒரு படைப்பாளி இன்னொரு படைப்பாளியை.
பாராட்டி கருத்திடுவது மிகவும் அரிது இன்று.
அதை உடைத்தெறிந்துள்ளீர்கள் ஜோஸ் அக்கா.
மற்றவர்களும் வாசிக்கத் தூண்டும் விதத்தில்.
உங்கள் எண்ணப் பகிர்வுகள் உள்ளன.
ஒருவரின் ஆக்கத்தைப் படித்து உள்வாங்கி.
சரியான எண்ணத்தை வெளியிடுவது.
என்பது அவ்வளவு இலகுவானதல்ல.
அதை சிறப்பாகக் கையாண்டு பொருத்தமான.
புகைப்படங்களையும் தந்து மெருகேற்றியுள்ளீர்கள்.
சகோதரர் கவிஞர் பீர் ஒலி அவர்களுக்கு.
என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Mohamed Adam Peeroli said...

My heart felt sincere thanks brother Suthan Sivasuthan

J.P Josephine Baba said...

சகோதரா தங்கள் பாராட்டு மிகவும் பெரியது, நான் அதற்க்கு அருகதை உள்ளவளா என்பது தெரியாது, இருப்பினும் உங்கள் கவிதையை வாசித்து புரிந்துள்ளேன் என உங்களிடம் சாற்றிதழ் பெருவதில் மகிழ்கின்றேன் நன்றி சொல்கின்றேன்.

Post Comment

Post a Comment