header-photo

ஸ்ரீகங்கைமகன்-விமர்சனம்

எனது வாசிப்பில் - நான் தேடும் வெளிச்சங்கள்.


கி.பி 1250 ஆம் ஆண்டுகளில் கிரேக்கத்தில் ஒரு மனிதன் வாழ்ந்தான். அவனது சிந்தனைகள் எண்ணங்கள் அனைத்தும் சமூக எண்ணங்களில் இருந்து வேறுபட்டன. பிற்பட்ட காலத்தில் அவனது சிந்தனைகள் எண்ணங்கள் யாவும் கிரேக்கத் தத்துவங்களாக உருப்பெற்றன. காலையில் எழுந்து இரவுவரை பகல் நேரங்களில் ஒரு லாந்தரைக் கொழுத்திப் பிடித்துக்கொண்டு எல்லோரது முகங்களையும் பார்ப்பது அவனது நாளாந்த நடவடிக்கையாக இருந்தது.  ஊர் மக்கள் அவனைத் தள்ளிநின்று வேடிக்கை பார்த்தார்கள். விளக்கை இப்படிப் பகல் நேரங்களில் ஏன் பிடிக்கிறாய் என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன் "நான் மனிதர்களைத் தேடுகிறேன்" என்று பதிலளித்தான். அவனது சிந்தனையின் தலைப்பு "நான் தேடும் மனிதர்கள்" என்ற கட்டுக்குள் அடங்கியிருந்தது.  அந்தக் கிரேக்கத் தத்துவவாதி வெளிச்சத்தில் மனிதர்களைத் தேடினான். ஆனால் இங்கு ஒரு புதுமைப் பெண் எழுத்தாளர்  மனிதருக்குள் வெளிச்சத்தைத் தேடி வெற்றி கண்டுள்ளார். அந்தத் தேடலில் கிடைத்த தெளிவுதான் "நான் தேடும் வெளிச்சங்கள்" என்ற நூலாகும். இதன் ஆசிரியர் ஒரு பேனாபிடித்த சமூகவியல் போராளி என்று குறிப்பிட்டாலும் மிகையாகாது. அவர்தான் ஜெ.பி.ஜோசபின் பாபா என்ற படைப்பாளி. இந்தியப் பலதரப்பட்ட கலாச்சாரங்களில் கொடியாகச் சுற்றி மரமாக வளர்ந்தவர்.

சென்ற ஆண்டு தகிதாவால் வெளியீடு செய்யப்பட்ட எனது நூலான "ஆத்மலயம்"  என்ற புத்தகத்தைத் தனது எழுத்துக்கள் மூலம் தமிழ் உலகத்திற்குக் கொண்டு சென்று எனக்கு ஒரு முகவரியைப் பெற்றுத் தந்தவர்.  அப்பொழுது திருநெல்வேலியில் அவரைக் குடும்பத்தினருடன் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. நல்ல விருந்தோம்பல் அறுசுவை உணவு போன்றவற்றுடன் வரும்போது திருநெல்வேலி அல்வாவும் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். அப்போது அடுத்த ஆண்டு நீங்களும் ஒரு படைப்பாளியாக ஒரு நூலை எழுதி வெளியீடு செய்யுங்கள் என்று கூறியிருந்தேன்.  அதன் வெளிப்பாடாக எழுதப்பட்ட இந்த நூல்; அவரது வெற்றிக்கு மட்டுமல்ல எனது சிந்தனைக்கும் மதிப்பளித்துப் பெருமை சேர்த்திருக்கிறது.  நூல் எழுத வேண்டும் என்றால் என்ன தலைப்பில் எழுதலாம் அண்ணா என்று கேட்டபோது; அவரது வலைத்தள ஆக்கங்களை வாசித்திருந்த எனக்கு ஒரு தலைப்பைக் கொடுப்பது பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை. "நான் சொல்வதெல்லாம் உண்மை" என்ற ஒரு தலைப்பை அவருக்காக நான் தெரிவு செய்திருந்தேன். ஆனால் புத்தகம் எழுதி முடிந்ததன் பின்னர்; இதனை வாசித்துவிட்டு வேறு ஒரு தலைப்புத் தாருங்கள் அண்ணா என்று பணிவாகக் கேட்டிருந்தார். புத்தகத்தை வாசித்த போது கிரேக்கத்து 1250 களில்  மனிதரின் முகங்களில் வெளிச்சம் பிடித்துப் பார்த்த தத்துவஞானியின் ஞாபகம் வந்தது.  அந்த எண்ணத்தில்  அமைந்ததுதான்  இந்த "நான் தேடும் வெளிச்சங்கள" என்ற தலைப்பாகும்.
.
இத்தனைக்கும் பிராயச்சித்தமாக அவர் தனது நூலில் "பட்டாம்பூச்சிக் கூண்டு போன்ற என் மௌனத்தை உடைத்து அதைப் புத்தகமாக வெளியிட ஊன்று கோலாக இருந்து உற்சாகப் படுத்திய என் தோழர், உடன் பிறவாச் சகோதரர் பாசமிகு சிறி அண்ணாவிற்கு (கங்கைமகன்)" என்று சமர்ப்பணத்தில் குறிப்பிட்டுப் பெருமை கொண்டுள்ளார்
.
இவரது முதலாவது கதையாகிய ஒற்றை மரத்தை வாசிக்கும்போது இவர் யாழ்ப்பாணத்தில் அதுவும் நெடுந்தீவு என்ற கிராமத்தில் பிறந்தாரா? என்று எண்ணத் தோன்றுகிறது. அந்தக் கிராமத்தில் அவக வாராக(வருதல்) அவக போறாக(போகுதல்) என்று கதைப்பார்கள். அதோபோல் அவரும் "நிற்பாக"  "மாட்டாக" என்ற சொற்களைப் பிரயோகித்தது ஆச்சரியமாக இருக்கிறது. ஆடும், மீனும், கோழியும், சாப்பிட்டுப் பாம்பு, பன்றி, புலி, யானை போன்ற மிருகங்களுக்கு இடையில் குலை நடுங்க வாழ்ந்த கதை கூறுவது அருமையாக உள்ளது.
.
என்னுயிர்த் தோழன் என்ற கதையில் படிப்பைவிட வேடிக்கை பார்த்த விடையங்களைக் கெட்டித்தனமாகக் குறியிருப்பது ஒரு அழகு. பாடசாலையில் ஒழுக்கத்தைக் கற்றுக்கொண்ட அவர் வீட்டில் விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவத்தைத் தன் சிறிய வயதிலேயே அடைந்துள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
.
அடுத்து "ராஜமாணிக்கம் மகளும் வாத்தியும்" என்ற பதிவு ஒரு சுவாரஸ்யமானது. பாலச்சந்தரின் படவசனம் போல் அமைந்துள்ளது. முதலில் வரிகள் விளங்கவில்லை. இரண்டாம்தரம் வாசிக்கும்போது விளங்கியது. அந்த வரிகள் இவைதான். "தன் மனைவியின் முதல் பிள்ளை தூக்கவந்த பிள்ளைக்குத் தன்பிள்ளை ஒருவயது ஆகுமுன் ஒருபிள்ளையைக் கொடுத்து". இவ்வாறு பல மணிப்பிரவாள நடை தாண்டிய புதுப்பிரவாளமாகக் கதை செல்கிறது.
.
சூத்திரம் போன சுப்பன்" கதையில் வெள்ளைக்காரன் கட்டிய லயம் என்பது ஒரு குதிரைக்காரன் தங்குவதற்காக அமைக்கப் பட்டது. இது சிறிலங்காவில் பின்னர் தேயிலைத் தோட்டத்திற்கு இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தமிழருக்கு குடும்பத்திற்கு ஒரு வீடாகக் கொடுக்கப்பட்டது. அதே நிலையை இந்தக் கதையில் நான் பார்க்கிறேன். குழந்தைகளைக்கூட வீட்டில் விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் வாழ நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு புருசனையும் விட்டுவிட்டு புதிய காதலனுடன் ஓடிவரும் பெண்களை ஆண்களின் கையாலாகாத் தனத்திற்கு வெளிச்சம் போட்டுள்ளார்.
.
என் மனதைத் தொட்ட; கட்டாயம் அனைவரும் படிக்கவேண்டிய தலைப்புக்கள் "ரெனீட்டா ரொம்ப நல்லவ, வீடு, தீ-வலி, சொந்த வீடு, பூந்தோட்டம் சொல்லும் கதைகள், போன்றவை ஆசிரியரின் புத்திசாலித் தனத்திற்குக் கட்டியிருக்கும் பட்டுக் குஞ்சங்களாகும்.

அடுத்து "சேர நாட்டு அரண்மனை உங்களை வரவேற்கிறது" என்ற பதிவு நான் தேடும் வெளிச்சங்களுக்கு மகுடம் வைத்ததுபோல் அமைந்துள்ளது. எனது இரண்டு புத்தகங்களும் இவரது புத்தகமும் கோவை தகிதாவில் ஒரே மேடையில் வெளியீடு செய்யப்பட்டது. வெளியீடு முடித்து திருநெல்வேலி செல்லும் போது என்னையும்  அவரது கணவர் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து இந்தக் கதை கூறும் களத்திற்கு ஒருநாள் எல்லோரும் சென்றிருந்தோம். அங்கு நான் பார்த்த விடையங்களை மிகவும் துல்லியமாக இங்கு பதிவாக்கியுள்ளார்.
.
திருமதி பாபாவின் முகத்தைப் பார்த்தால் எந்த மொழி பேசுபவர் என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம் ஆனால் அழகாகத் தமிழ் பேசுவார் என்று கண்டுபிடிப்பது மிகவும் இலகு. நிட்டசமாக நான் தேடும் வெளிச்சங்கள் என்பதன் இரண்டாம் பகுதியை நான் மட்டுமல்ல வாசகர்களும் எதிர்பார்ப்பார்கள் என்பதைக் கூறி ஒரு நல்ல பதிவைத் தந்த ஆசிரியரையும் வாழ்த்தி அவருக்குப் பக்கபலமாக இருந்த அவரது கணவர், பிள்ளைகள், உட்பட ஏனையவர்களையும் வாழ்த்தி விடை பெறுகிறேன்.
ஸ்ரீ அண்ணாவுக்கு என் நன்றி வணக்கங்கள்.

1 comments:

அம்பலத்தார் said...

வணக்கம் ஜோசப்பின், வாழ்த்துக்கள் படைப்புலகில் மேலும் உச்சங்களைத்தொடவும் சமுதாய அக்கறைகொண்ட உங்க எழுத்துப்பணி தொடரவும் வாழ்த்துக்கள்

Post Comment

Post a Comment