header-photo

சில்லறை வர்த்தகம்- அந்நிய முதலீடு


இன்று பரவலாக விவாதிக்கும் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தேவையா இல்லையா என்பதை பற்றி அனைவரும் மனித நேயத்துடன் சிந்திக்க வேண்டியுள்ளது காலத்தின் கட்டாயம் ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம் உண்டு எனிலும் நம் சமூக சூழலை கணக்கிலெடுக்காது அரசு மேற்கொள்ளும் இந்நிலை மக்கள் நலம் சார்ந்தது அல்ல!  ஒரு வீட்டில் 5 பிள்ளை இருந்தது என்றால் ஒன்றோ இரண்டோ அரசு வேலைக்கு சென்றிருபார்கள்,  சிலர் தங்களுக்கு இருக்கும் விவசாயத்தை கவனித்திருப்பார்கள், இன்னும் சிலரோ தங்கள் கையிலிருக்கும் பணத்தை முதல் முடக்கி வியாபாரம் ஆரம்பிப்பார்கள் அவர்களே சில்லரை  வர்த்தகத்தில் ஏற்பட்டிருந்த முதல் தலைமுறையினர். ஒரு முதல் முடக்கும் இல்லாத சூழலிலும் தங்கள் உழைப்பால் உயர்ந்தவர்களும் பலர் உண்டு. இன்றும் எல்லோருக்கும் அரசு வேலை கொடுக்க தகுதி இல்லாத நிலையில் சவாலை சந்தித்து சுயதொழில் செய்பவர்களை அரசு முடக்குவது சமூக குற்றமாகும்.

ஒரு பொருளை கொள்முதல் செய்து அதை தன் வியாபார நிலையம் வரை சேர்க்கும் மட்டும் இடத்தரகர்கள், சுமடு எடுப்பவர்கள், கடை வேலையாள் என நாலு ஐந்து பேருக்காவது வாழ்வாதாரம் கிடைக்கின்றது. இந்தியா போன்ற ஜனப்பெருக்கம் நிறைந்த நாட்டில், 4 கோடிக்கு மேல் மக்களை  குட்டி முதலாளிகளாக்கும் சில்லறை வர்த்தகத்தின்  நிலை  அவசியம் ஆகின்றது.  எல்லோரும் கூலிக்கு மாறடிக்காது, வேலை நேரம் மட்டும் வேலை செய்து நிம்மதியாக இருக்கும் மனநிலையில் இருந்து விடுபட்டு  ராப்பகல் உழைக்கும் ஒரு வர்க்கம் நிச்சயமாக தேவையும் அவசியவுமே.  இன்றைய கல்வி- தொழில் நுட்ப புரட்சியின் மாற்றத்தால் பெரும் கல்வியறிவு பெற்ற இளைஞர்  வெறும் கூலி ஆட்களாக மாறி விட்ட சூழலில் சுய உழைப்பில் நம்பி இருக்கும் சமூகத்தை அழிப்பது வழியாக சுமூகமான சமூக சுழற்ச்சி பாதிக்கப்பட இருக்கின்றது.

இன்னும் சிலர் அரசு அதிகாரம், பதவி என்ற மாயை கொண்டு சுரண்டி பிழைக்கும் நிலையில் இருக்கும் போது சில்லறை வர்த்தகர்கள் உழைப்பு, போராட்டம் மத்தியில்  தன்னம்பிக்கையை மட்டும் நம்பி சொந்த தொழில் புரிகின்றனர்.  இவர்கள் நல்ல அரசியல் திட்டங்களால் உற்சாகப்படுத்தாது, நெறிப்படுத்தாது  அந்நிய முதலீட்டை புகுத்தி ஒட்டு மொத்த சமூகத்தயும் சோம்பேரியாகவும் அடிமையாகவும் மாற்றுவது பெரும் மோசமான சமூக விளைவையே ஏற்படுத்த உள்ளது. 
விலைக்கூடுதல், மாயம் கலந்த பொருட்கள் என அங்கலாயிக்கும் நபர்கள் அரசின் சட்ட திட்டங்களையும். வர்த்தகர்கள்  நடத்தப்படும் நிலையும் உற்று நோக்க வேண்டும். இன்று ஒரு அரசியல் கட்சிக்கு கூட்டம் நடத்த வேண்டும் என்றால் வர்த்த்கரிடமே பணம் பட்டு வாடா செய்யப்படுகின்றது. இவர்கள் வாடிக்கையாளர்களிடம் ஈடு கட்டவே முயல்வார்கள். மேலும் ஒரு கடைக்கான சாற்றிதழ் பெற குறைந்தது 500 ரூபாயில் இருந்து 5000 வரை கட்டாயமாக அரசு அதிகாரிகளால் வசூலிக்கப்படுகின்றனர். 

அந்நிய முதலீடு என்ற அசுரன் பிடியில் சில்லறை வர்த்தகம் மாட்டி கொண்டால் அதன் நிலை மிகவும் மோசமாக தான் இருக்கும். இதனால் சாதாரண மக்களும் பாதிக்கப்படுவார்கள். உழவர் சந்தைக்கு பொருட்கள் வருவது நேராக அன்னிய குடோனுக்கு சென்று விடும் நில வரவுள்ளது. இந்திய ஆப்பிளுக்கு பதில் மெழுகு ஆப்பிள் தின்ன நிர்பந்திக்கப்படுவது போல் அத்தியாவிச பொருட்கள் நிலை சென்று விடும். குடி தண்ணீர் லிட்டறுக்கு 25 ரூபாய்க்கு வாங்கி குடிக்க வேண்டி வந்த சாதாரண மக்கள் நிலையும் சிந்திக்க வேண்டியுள்ளது.  பல்பொருள் அங்காடி வந்ததால் விலையோ, தரமோ மேற்படாது நடைபெறும் வியாபாரம் போல்;  நியாயவிலை அங்காடி பொருட்கள் உள்நாட்டு மக்கள் கைகளுக்கு கிடைக்காது அந்நிய குளிரூட்டும் கிடங்குக்கு போய் விடும் காலவும் வரவுள்ளதை மறுக்க இயலாது.

அரசின் மோசமாக கொள்கையால் விவசாயிகளை தற்கொலைக்கு தூண்டி விட்டது போல் சில்லறை வர்த்தகர்களும் அபாயநிலைக்கு தள்ளப்படுவதை  இச்சமூகம் காண வேண்டுமா?  மக்களுக்கு நல்ல பொருட்கள் கிடைக்க அந்நிய முதலீட்டை உள்ளே புகுத்தும் அரசு ஏன் தற்கால ஆங்கில பள்ளி படிப்பை வளப்படுத்த வெளிநாட்டு ஆசிரியர்களை கொண்டு வரக்கூடாது, ஏன் வெளிநாட்டு மந்திரிகளை இந்தியாவில் இறக்குமதி செய்து அரசியலை வளப்படுத்தக்கூடாது?

அந்நிய முதலீட்டை புகுத்த அனுமதிப்பது நம் சகோதர்களுக்கு நாம் செய்யும் துரோகம். ஏழ்மை வறுமை பெருகும் போது தற்கொலை மட்டுமல்ல கொலை கொள்ளையும் பெருகும் என்பதில் சந்தேகம் இல்லை. 

2 comments:

அப்பாதுரை said...

விவரமான கட்டுரையை எழுதியதற்குப் பாராட்டுக்கள்.

இந்தியாவின் சில்லறை வணிகரின் துயரங்களுக்கு அரசாங்கக் கெடுபிடிகளும் ஊழலும் மிகப் பெரிய காரணங்கள் என்கிறீர்கள். அந்நிய முதலீடு சில்லறை வணிகரை முடக்குவதாக நீங்கள் எண்ணுவதற்கானக் காரணங்களைச் சொல்லவில்லையே?

சில்லறை வணிகம் தேய்வதற்கான முக்கியக் காரணங்கள் நகரமாயமாவதும் துரிதச்சேவைக்கான மக்களின் தேவைகளுமே. இணைய வளர்ச்சி இ-காமர்ஸ் இன்னொரு காரணம். வளர்ச்சியின் வேகத்தில் சில்லறை வணிகம் தம் முறைகளை மாற்றாவிடில் தானாகவே தேயும்.

அன்னிய முதலீட்டை முடக்குவதற்குப் பதிலாக அந்த முதலீட்டை ஆக்கபூர்வமாக பயன்படுத்தக் குரல் கொடுக்கலாமே? இந்தியாவின் வணிக வளர்ச்சிக்கு அன்னிய முதலீடு அவசியம் என்றே நினைக்கிறேன்.

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

உங்களின் கருத்தை முழுமையாக ஆதரித்தாலும், இந்த சில்லறை வனிகர்களால்தான் நாடும் நகரமும் தூய்மைக்கேட்டால் சீர்குலைகிறது என்பதனையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தெருவோரம் தின்பண்டகளை வியாபாரம் செய்கிறவர்கள் செய்கிற அட்டூழியங்களால் நிறைகின்ற குப்பைகள் தூய்மைக்கேட்டினைக் கொண்டு வந்து சுற்றுவட்டார மக்களை நோயுறச் செய்து விடுகிறது. யார் எவரால் இந்த தூய்மைக்கேடு நிகழ்கிறதென்று, சம்பந்தப்பட்டவரை அழைத்து விசாரனைக்கு ஆற்படுத்தவும் முடியாமல், தள்ளுவண்டியில் நாடு நகரம் என இடங்களை மாற்றிக்கொண்டு நகர்ந்து விடுகிறார்கள். தூய்மைக்கேட்டிற்கு பொறுப்பு ஏற்கிற நிலை உருவாகின்ற போது தனிமனித சில்லறை வியாபரம் சுமூகமாக நடைபெறலாம். எங்க ஊரின் (மலேசியா) நிலையும் இதுதான், ஆரம்பத்தில் சில்லறைவியாபாரிகளின் ராஜியத்தால் சாலை நெரிசல், தூய்மைக்கேடு, பெரிய முதலீட்டைக்கெடுக்கும் நிலை என ஒரே அராஜகம். ஆனால் இப்போது பெரிய பெரிய நகர்களில் இவர்களின் நடமாட்டத்திற்கு தடை வித்தித்து, கடை வசதிகள் செய்துகொடுத்து, அரசாங்கத்தின் மூலம் வியாபாரத்தை பதிவுசெய்து (ரெஜிஸ்டர்) நிகழ்கின்ற பின்விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு ஏற்கும்படி செய்துவிட்டார்கள். இதனால், பலவிதமான சிக்கல்களில் உழன்று, வியாபரமே வேண்டாமென்று ஓடிவிட்டவர்கள் பலர். காரணம் பொறுப்புகளை ஏற்க யாரும் தயாராய் இல்லை. இதுதான் நிதர்சனம் சகோ.

Post Comment

Post a Comment