header-photo

தீபாவளி பரிசுடன் கண்டன் பூனை!

றிக்கி போன பின்பு வீட்டிற்க்கு களை இழந்து விட்டது. எங்களை வழி அனுப்புவதும் நாங்கள் வீட்டிற்க்கு வரும் போதும் எங்களை வரவேற்கும் ஒரே ஜீவன் அவன் தான். துள்ளி துள்ளி ஓடி வந்து வரவேற்பதே ஒரு தனி அழகு தான். எங்களை ஆவலுடன் காத்திருப்பவன் அவனாக தான் இருந்தான். நாங்கள் நாலுபேரையும் நன்றாக புரிந்து வைத்திருந்தான். எங்கள் இளைய மகனுடன் தான் அவனுக்கு இன்னும் நிறைய பாசம். ஒரு நாள் நாங்கள் விருந்து வீடு சென்று திரும்பிய போது எங்களை வரவேற்க றிக்கி இல்லை. நாங்கள் வீட்டிலிருக்கும் போது ஊர் சுற்றினாலும் நாங்கள் இல்லாத போது எங்கும் போக மாட்டான். ஒரு வேளை  நாய் பிடிப்பவர்கள் பிடித்து கொண்டு போய் இருப்பார்களோ என்ற சந்தேகவும் வந்தது. சிலர் சொல்லினர் 'சில மருத்துவம்' செய்து நாயை திருப்பி கொண்டு விடுவார்கள் என. ஒரு நம்பிக்கையில் வருவான் வருவான் என காத்திருந்தோம். அவனுக்கான உணவு பல நாட்கள் மிஞ்சின.  ஆனால் ஒரு மாதம்  மேலாகியும் அவன் திரும்பி வரவில்லை. நாங்கள் போகும் பாதையில் கருப்பு நிற நாயை கண்டதும் றிக்கி என்று குரல் கொடுக்க ஆரம்பித்தோம். காலை எழும் போது அவன் வாயில் கதவு பக்கம் தலையை நீட்டி பார்ப்பது தான் பல நாட்கள் நினைவாக இருந்தது.  பக்கத்திலுள்ள குடியிருப்பிலுள்ளவர்கள் 10 க்கும் மேற்பட்ட நாய்களே ஒரே நாள் கொன்றனர் என்று அறிந்ததும் இனி அவன் வருவான் என்ற நம்பிக்கை முற்றிலும் பொய்த்து போய் விட்டது.  


 பின்பு வீட்டில் அவ்வப்போது விருந்தாளியாக வருபவன் கண்டன் பூனை தான். அது காட்டுப்பூனையா வீட்டு பூனையா என்று தெரியாது ஆண் பூனை என்பதால் நாங்கள் கண்டன் பூனை என அழைத்தோம்.  ஒரு சிறு புலியின் பதிப்பான ஒரு பூனை. என்னவர் தான் கூறுவார்  6 கிலோ தேறும் இந்த பூனை என்று. கண்ணு போடாதீங்கோ என நாங்கள் கலாயித்தாலும் இரவு உணவு எடுக்கும் நேரம் அதன் வரவையும் நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.  மீன் சாப்பாடு என்றால் முள்ளை தூரப் போடாதீங்க... கண்டனுக்கு வைய்யுங்கள் என கரிசனை கொள்ள ஒவ்வொருவரும் ஆரம்பித்னர்.   கண்டன் பூனையும் "பால் இருக்கா? தாறீகளா? இல்லையா? என அதிகாரமாக கேட்டு கொண்டு நிற்கும் .  பல நாட்களில்   சாப்பாடு...சாப்பாடு... என்னை யாரும் கவனிக்கவில்லையா  இனி பொறுக்க இயலாது உடன் ஏதாவது தாருங்கள் என திட்டுவது போல்  இருக்கும் அதன் கூக்குரல்.  ஆனால் என்னவர் வீட்டில் உண்டு எனில் சின்ன சத்தம் மட்டும் எழுப்பி விட்டு நாங்கள் சாப்பிட்டு முடியும் மட்டும் காத்திருக்கும். இரவு  காப்பி அல்லது சாயா குடித்த பின்பு கண்டனுக்கும் ஒரு கப்பு பால் எடுத்து வைப்பது உண்டு. ஆனால் கல்லை எடுத்தால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம் என்பது போல் இப்போது பல நாட்களாக பால் எடுத்து வைக்கும் போது பூனை வருவதில்லை, பூனை வரும் போது பாலும் இருப்பதில்லை. பெரிய பூனை என்பதால் சிறிய இடைவெளி ஏற்படுத்தி வைத்திருந்தனர்,  நாங்களும் தொடாதீர்கள் நாயை போலவே விஷம் உள்ளது என பயம்காட்டி வைத்திருந்தோம்.

 நேற்று பல நாட்கள் பின்பு கண்டன் பூனை வந்து சேர்ந்தது உடன் ஒரு அழகான வெள்ளை நிற பூனைக்குட்டியும்!. டேய் ...மீன் இருக்குது சாப்பிட்டு விட்டு செல் என்று மகன்கள் சொல்லியும் உடன் அழைத்து வந்த குட்டி பூனையை எங்கள் வீட்டில் விட்டு விட்டு மறைந்து விட்டது. 

நேற்று வந்து குட்டி பூனையை பார்த்து விட்டு சென்று விட்டது. இப்போதோ குட்டி பூனை நேரா நேரம் உணவு எங்கே என கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்து விட்டது. வீட்டில் நடமாடும் பல்லி, பாச்சா(கரப்பான் பூச்சி) எல்லாம் சோக ஆகி கொண்டிருக்கின்றது.  இளைய மகன் தான் பூனை சொல்லாத கதை எல்லா எங்களிடம் கதைத்து கொண்டிருக்கின்றான். கண்டன் பூனை தீபாவளிக்கு நல்லொதொரு பரிசு பொருள் தான் தந்து சென்றுள்ளது.

5 comments:

Subi Narendran · Top Commenter · Works at M&S said...


அருமையான கதை ஜோ. மிருகங்களிடம் நாம் காட்டும் அன்புக்கு அவை தரும் பதில் அன்பு மிக மிக அதிகம். அதே போல் அவற்றை இழந்தால் ஏற்படும் சோகமும் மிக அதிகம். குட்டிப் பூனை வந்ததை இட்டு மகிழ்ச்சி. ஜெரி பாடு கொண்டாட்டம் தான். நிறைய அன்பு வைக்காதீர்கள் வந்தது போல் மறைந்தும் விடும். இலகுத் தமிழில் மனம் கவரும் கதை. வாழ்த்துக்கள் ஜோஸ்.

Ketheeswaran Navaratnam said...

அருமையான கதை தோழி..!
தங்களின் நான் "தேடும் வெளிச்சங்கள்" சிறுகதைத் தொகுப்பை சில தினங்களுக்கு முன்பு தான் வாசித்து முடித்தேன்.
அனைத்தும் அருமையான கதைகள். எதுவித புனைவுகளும் அற்ற யாதார்த்த வாழ்வின் அனுபவங்களை அப்படியே கதைகளாக்கியிருக்கின்றீர்கள் என்பதை உணரமுடிகின்றது. நல்லவைகள், கெட்டவைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன கதைகள். தங்களின் சமூக அக்கறையும், மனத்துணிவும் பாராட்டத்தக்கது. ஒரு வாசகனாய் தங்களிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றேன். தங்களின் எழுத்துப்பணி தொடர எனது நல்வாழ்த்துக்கள். நன்றியுடன் இவன் தோழன்.

Thiru Chendhil said...

·
கதைத்த விதம் அருமை

இராஜராஜேஸ்வரி said...

தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

அம்பலத்தார் said...

மனிதநேயமிக்க உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. நல்லதொரு பகிர்வு.

Post Comment

Post a Comment