23 Oct 2012

நண்பர் மற்றும் வலைப்பதிவர் சுரேஷ் குமார் அவர்களின் புத்தக விமர்சனம்!


நான் தேடும் வெளிச்சங்கள்...ஜோஸபின் பாபா/புத்தக விமர்சனம்நண்பரின் வலைப்பதிவு!



தன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நகைச்சுவையூட்டக்கூடிய நிகழ்வுகளையோ….அல்லது மிகவும் மனது வேதனையுண்டாக்கியத் துயர நிகழ்வுகளையோ நம் மனது நினைவில் வைத்திருக்கும்! பெரும்பாலான எழுத்தாளர்கள் அந்த நினைவுகளை கொஞ்சம் கற்பனைக் கூட்டி ஒரு சிறுகதையான வடிவோ, சுயசொறிதலாக கலந்து எழுதுவார்கள் இதுதான் எழுத்துலகின் எழுதப்படாத மரபு.


ஜோஸபின் என்னிடம் நான் தேடும் வெளிச்சங்கள் என்கின்ற தொகுப்பைத் தன் கன்னி முயற்சி என்று அனுப்பியிருந்தார்கள். பெரும்பாலான பெண் எழுத்தாளர்கள் குடும்பம், சோகம், காதல் என எழுதுவார்கள், இல்லை சிகப்புச் சிந்தனையுடையவர்களாக இருப்பின் பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்று ஒட்டு மொத்த ஆண்களின் சட்டையை பிடித்து உலுக்குவார்கள்…இரண்டும் இல்லையெனில் கடுகுத் துவையல், அரிசிக் கஞ்சி என்று சமையல் புத்தகங்களும்... மென் சோகக் கவிதையும் வடிப்பார்கள்.


இதில் எந்த வகையும் இல்லாமல் தன் மனம் போன பாதையில் ஒரு கதைச் சொல்லும் பாணியில் எந்த விதமான அலங்கார வார்த்தைகளைச் சேர்க்காமலும் பக்கத்து வீட்டு அக்கா மின்சாரமில்லாத பொழுதுகளில் குழந்தைகளுடன் வாசல்ப் படியில் அமர்ந்து ஏதோ ஏதோ சம்பவங்களை, ஏமாற்றங்களைக் கதைப்பதைப் போல் உள்ளது. அதில் என் மனம் கவர்ந்தச் சில விடயங்களைப் பார்க்கலாம்….!

ஒற்றை மரத்தில் நாம் சிறு வயதில் தன் பெற்றோரை விட்டு வேறொரு உறவினர் வீட்டுக்குச் செல்லும் போது. அங்கு நமக்கு நடக்கும் அவமாணங்கள் ஆறாத வடுக்களாய் மறையும் வரை மனதின் மூலையில் துருத்திக் கொண்டிருக்கும்.நம் பெற்றோர் மீது இருக்கும் வன்மத்தைக் குழந்தைகளிடம் காட்டுவது வேதனையான விசயம், இன்று பல குடும்பங்களில் கணவன் மீதுள்ள வன்மத்தை மனைவி குழந்தைகளிடமும், மனைவி மீதுள்ள வன்மத்தைத் தன் குழந்தைகளிடமும் மாறி..மாறி…குற்றம் செய்யாக் குற்றவாளிகளாய்ப் பல குழந்தைகள் சிலுவையில் அறையப்படுகின்றன. காரணமில்லாமல் தன் மீது காட்டும் கோபமும் சுடுச் சொற்களும் பிஞ்சு மனதில் எத்தகைய வேதனையை உண்டாக்கும் என்பதைப் பலர் அறிவதில்லை என்பதை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கைப் பதம் என்பது போல “மச்சான் அடித்ததை விட அத்தைகாரி அடித்ததை விட……அம்மா அடிச்சது முதன் முறையாக வலித்தது…” என்கின்ற வரிகளில் சொல்லலாம். 

பால்யக் காலத்தில் பிடித்த ஆசிரியர், உறவினர், தோழி, தோழன் ஒரு சிலர் மனதில் இருப்பார்கள்….அவர்களை ஒரு சிலரைத் தவிர யாரும் தேடிப் போய்ப் சந்தித்துவிட்டு வருவதில்லை அதுவும் பெண்கள் தன் வகுப்புத் தோழனைச் சந்திப்பது மிக அரிது! என் உயிர் தோழனில் தன் கணவனுடன் சென்று அவரின் கடைக்குச் சென்று சந்தித்துப் பால்யக் கதைகளை பேசி வர எத்தனை பேரால் இயலும்…. 

சூத்திரம் போன சுப்பனில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றச் சுப்பனின் பிறப்புறுப்பை அறுத்தெரிகின்றாள் ஓர் அப்பாவிப் பெண். அந்த சுப்பன் மருத்துவ சிகிச்சை முடிந்துத் தேயிலைத் தோட்டதிற்கு பணிக்கு வருகிறான் ,அனைவரிடமும் அந்த இடத்தில் உயிர் இல்லை என்பதை கண்டுபிடிக்க மருத்துவ உலகிற்கு உதவியாக இருந்தேன் என கூறிக் கொண்டிருந்தானாம் வேடிக்கை மனிதர்கள். 

பெண்ணிற்கு மட்டும் பிறந்த வீடு என்பது விருந்துக்கு வந்த விருந்தாளி வீடு போல்தான் என்று வீட்டில் அங்கலாய்க்கின்றார்! அதே போல் சொந்த வீட்டில் வாடகை வீட்டில் படும் துன்பங்களே சொந்த வீடு கட்டத் தூண்டும் காரணியாகிப் போகின்றது என்று கூறுகின்றார். அவர் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டுக்கு வர்ணம் பூசப் பணப் பற்றாக்குறையேற்பட பிறந்த வீட்டுக்கு பேருந்தில் பயணிக்கின்றார், நாமும் கூடவே பயணிக்கின்றோம் ஏனெனில் நம்மில் பலர் சொந்த வீட்டின் ஆசையில்தான் இருக்கின்றோம். 

என் பூந்தோட்டம் சொல்லும் கதைகள் பூச்செடி விற்பனை வீட்டில் தொடங்க ஒரு வழியாக அதை விற்கப் பட்டச் சிரமங்களை நுணுக்கமாக சொல்லியிருக்கின்றார். பச்சை தாழ்வாரம் என்கின்ற தன் பூந்தோட்டப் பெயர்ப் பலகையை ரிக்கி நாயின் வீட்டுக்குக் குட்டிக் கூரையாக்கிவிட்டு மந்திரப் பெட்டியில் பொழுதைப் போக்கிக் கொண்டு இன்று புத்தகம் போடுமளவுக்கு வந்து விட்டது. 

சேர நாட்டு அரண்மனை உங்களை வரவேற்கிறதில் சேலத்துக் குடும்பத்தின் கத்திப் பேசும் பழக்கம் மொத்தத் தமிழர்களையே கத்திப் பேசுகின்றவர்கள் என்கின்ற எண்ணத்தை மலையாளிகளிடம் உண்டாக்கிவிட்டது, உண்மைதான் தமிழர்கள் கொஞ்சம் கத்திதான் பேசுகின்றார்கள்…..! அதேபோல் மூக்குடைந்த கல் சிலையை சிமண்டு வைத்து மூக்கு வைத்து ஒரு கலையை கற்பழிக்கும் கொலையை பல கோவில்களில் பார்க்கலாம்! இங்கும் அவ்வாறே...!அரண்மனையை நாமும் சுற்றிப் பார்க்கின்றோம்.

என்னை சிலுவையில் அறைந்த பைத்தியம் ஓர் உயரதிகாரிப் பெண் "தான்" என்கின்ற அகந்தையில் எப்படி அழிந்துப் போகின்றாள் என விவரிக்கின்றது…எனக்குத் தெரிந்து வட்டாச்சியராக இருந்த ஒரு பெண் இப்படித்தான் இருந்தார். அலுவலகத்தில் தனக்கு கீழ் பணிபுரியும் அனைவரையும் முகத்தில் அடித்தமாதிரிப் பேசியும், குடியிருப்பில் யாரிடமும் பேசாமல் ,உறவாடாமல் தனக்கு என்று வட்டம் போட்டு வாழ்ந்த அவரின் கணவருக்கு திடீரென்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட போது யாரும் உதவிக்கு இல்லாமல் திண்டாடித் தன் கணவரை இழந்தார். அந்த சம்பவம்தான் நினைவில் வந்தது. 

நினைவுகளில் சக்தி ஒரு பழைய சைக்கிள் வாங்க வந்த ஏழைப் பெண்ணைப் பற்றியது, கடைசியில் அவள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதும் அது தெரிந்து தந்தையே மகளை கொன்று விட்டதாகவும் நேரடியாக கூறாமல் பூடகமாக கூறியிருப்பதைப் பார்க்கும் போது மிகவும் மனதைப் பாதித்தவள் சக்தி என்றே விளங்குகின்றது. 

நான் ஒரு சில கதைகளைப் பற்றி மட்டுமே கூறியிருக்கின்றேன் இதைப் போல் ஆங்காங்கே மனதை மெல்லிய மயிலிறகால் வருடியும், கீரியும் நம்மை அவர் உலகத்திற்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துகின்றார் கன்னி முயற்சி என்றாலும் மிகச் சிறந்த ஒரு தொகுப்பு எனவே கூறலாம் அதைப் படைத்த அவருக்கு வாழ்த்தையும் பாராட்டையும் கூறுகின்றேன்.


புத்தக விலை 75 ரூபாய். 
J.P Josephine Mary, 
Indian Bank, M.S University Branch, 
A/C No : 854576367, IFSC code : IDIB000A107 என்ற விலாசத்தில் D/D எடுத்தும் அல்லது அவர் முகவரியில் M/O அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.

வலைப்பதிவர் நண்பர் சுரேஷ் குமார் சிறந்த வலைப்பதிவர். தன் விமர்சனத்தாலும் வாழ்த்துக்களாலும் என் புத்தக வெளியீட்டை உற்சாகப்படுத்தியவர். தன்னுடைய வேலைப்பழு மத்தியிலும் தன் அறிய விமர்சனம் தர மனம் உகுந்ததிற்க்கு என் நன்றி வணக்கங்கள்.

சிவ சுதன், இலங்கை-புத்தக விமர்சனம்

Suthan Sivasuthan

ஜோஸ் அக்கா !.....

உங்கள் படைப்பான '' நான் தேடும் வெளிச்சங்கள் '' வாசிக்கும் சிறந்த வாய்ப்பு கிடைத்தது . படித்து முடித்ததும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு வந்த திருப்தி ஏற்படுகிறது .

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ,

1) சொந்த வீடு .
2) என் பூந்தோட்டம் சொல்லும் கதை .
3) என்னைச் சிலுவையில் அறைந்த பைத்தியம் .
4) நினைவுகளின் சக்தி .

இந்தக் கதைகள் அனைத்தும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன . அது தான் உங்கள் எழுத்தில் உள்ள வல்லமை என்பேன் . சலிப்பே வராமல் படித்த ஒரு சில புத்தகங்களில் உங்களுடைய படைப்பும் ஒன்று .அத்துடன் என்னைக் கடந்து சென்ற சொந்தங்கள் மற்றும் நட்புக்களை ஒரு தடவை மீட்டுப் பார்க்கச் செய்துவிட்டீர்கள் . என் குழந்தைப் பருவத்திற்கு ஒரு தடவை என் எண்ணங்கள் சென்று வந்தன . வரும் வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ள ஒரு தன்னம்பிக்கையும் இனம் தெரியாத இன்பத்தையும் தருகிறது .

அதே நேரம் எனது பெயரையும் உங்கள் புத்தகத்தில் பதியச் செய்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள் அக்கா . சிரமங்களைப் பாராது எனக்குப் புத்தம் கிடைக்கச் செய்தீர்கள் .வர இருக்கும் ஆக்கங்கள் பலரது மனங்களைப் போய்ச் சேர மனமார்ந்த வாழ்த்துக்கள் .
இறைவனின் ஆசீர்வாதங்கள் என்றென்றும் உங்களுக்குக் கிட்டட்டும் அக்கா.............
— with J P Josephine Baba.

எச்.பீர் முஹம்மது -புத்தக விமர்சனம்!


நான் தேடும் வெளிச்சங்கள்: தமிழின் புதிய சிறுகதை எழுத்தாளரான ஜோஸ்பின் பாபாவின் முதல் சிறுகதை தொகுப்பு இது. இத்தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன. எதார்த்த நிகழ்வுகளை பிரதிபலிக்கும் கதைளே பெரும்பாலும் என்றாலும் அதனூடே வாழ்வின் வியசனம் வெளிப்படுகிறது. சக மனிதன் அன்றாட வாழ்வில் கடந்து போகும் நிகழ்வுகள், வினைகள் எல்லாம் ஒரு கட்டத்தில் தேர்ந்த கதையாக வடிவம் பெறுகின்றன. அது சி
லசமயங்களில் நினைவின் நதியாக, சுவாரசிய, மெச்சத்தக்க உணர்வுகளை நமக்குள் அதிகம் சாத்தியப்படுத்தும். இதிலுள்ள என்னுயிர் தோழன், வீடு, சேரநாட்டு அரண்மனையில் ஒரு நாள், என்னை சிலுவையில் அறைந்த பைத்தியம், நினைவுகளில் சக்தி போன்ற கதைகள் அவற்றைத்தான் வெளிப்படுத்துகின்றன. தமிழில் நவீன, பின்நவீன கதை முயற்சிகள், எழுத்தாக்கங்கள் எல்லாம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டன என்றாலும், இன்னும் இதுமாதிரியான எதார்த்த எழுத்துக்கள் ஒரு பக்கம் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. மேலும் கதை வடிவத்திற்கான புனைவு (Fiction)என்பது இதிலுள்ள குறைபாடு என்றாலும் ஜோஸ்பின் பாபாவின் கதைகள் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன. மேலும் இந்த தொகுப்பில் அணிந்துரை என்ற பெயரில் அதிக பக்கங்கள் வீணடிக்கபட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். ஒருவருக்கு முதலாவதாக வரும் தொகுப்பில் இது தவிர்க்க இயலாது என்றாலும் சில சமயங்களில் தவிர்க்க முடிந்ததே. நான் தேடும் வெளிச்சங்கள் அதன் தொடர்ந்த பயணத்தில் இன்னும் அதிக தூரம் பாய்வதற்கான சாத்தியங்கள் இருக்கிறது.

வெளியீடு

தகிதா பதிப்பகம்,4/833 தீபம் பூங்கா

கே. வடமதுரை,கோவை - 641 017

dhakitha@gmail.com



புத்தக ஆசிரியரும் ஊடக எழுத்தாளருமான நண்பருடைய ஆக்கபூர்வமான விமர்சனம், என் அடுத்த கட்ட எழுத்துக்கு உதவும் என்பதில் சிறிதேனும் சந்தேகம் இல்லை. தங்களுக்கு என்  நன்றி மகிழ்ச்சிகள்.

கவிஞர் வைகறை !


சமீபத்தில் ஜெ.பி.ஜோஸபின் பாபா அவர்கள் எழுதிய "நான் தேடும் வெளிச்சங்கள்" சிறுகதை தொகுப்பை வாசித்தேன்!
ஆண்டவனைப் பாடுதலைத் தாண்டி, ஆள்பவனைப் பாடுவதைக் கடந்து, தலைவனைப் பாட்டுடைத் தலைவனாக்கி அழகு பார்த்து வந்த இலக்கியத்தில் இன்று சாமானிய மக்களைக் குறித்து எழுதப்பட்டு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது!

"நான் தேடும் வெளிச்சங்கள்" முழுவதும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையே பேசப்படுகிறது! அதுவும் அவர்களின் மொழிநடையிலேயே பேசப்படுகிறது!
வியாபாரப் பண்டிகை எனும் அடைமொழி கொடுக்கப் பட்ட தீபாவளி குறித்த 'தீ வலி" கதை...; சொந்த வீடு கட்டும் நடுத்தர வர்க்கத்தின் வழியைக் கூறும் "சொந்தவீடு" கதை...என கதைகள் அனைத்தும் சராசரி வாழ்விலிருந்தே எடுக்கப்பட்டிருக்கிறது!  கதையாசிரியர் ஜோஸபின் பாபா அவர்களின் மொழிநடை அருமையாக இருக்கிறது!  கிளைக் கதைகளை அருமையாக வெளிப்படுத்துகிறார்!  அதே சமயம் மையக்கதையை இன்னும் வலுவாக அமைத்தால் மேலும் சிறப்பாக அமையும்!! தங்கள் எழுத்துப் பயணத்திற்கு என் இனிய வாழ்த்துக்கள் அக்கா!!
கவிஞர் மற்றும் பள்ளி ஆசிரியரான வைகறையிடம் வாழ்த்து பெற்றதில் மகிழ்கின்றேன். பெருமை கொள்கின்றேன். நன்றி மகிழ்ச்சிகள் சகோதரா.

18 Oct 2012

12 Oct 2012

விமர்சனத்துடன் Chidambaram Kasiviswanathan சீனாஐயா!


 நெல்லை வலைப்பதிவர் சந்திப்பில் சீனா ஐயாவை முதல் முதலாக சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. தன் ஆளுமை, இயல்பான அன்பான குணத்தால் அனைவரையும் அரவணைக்கும் பண்பு கொண்டவர் ஐயா. என் வலைப்பதிவை தன்னுடைய  வலைச்சரம் தளம் வழியாக பல அறிய நேயர்கள் பக்கம் திருப்பியதில் பெரும் பங்கு வகித்தவர் ஐயா.  முதல் புத்தகம் வெளியாகி உள்ளது என அறிந்ததும் வாசித்து தன் கருத்தை அருளியது மட்டுமல்லாது தன் அன்பு மனைவி கையிலும் என் புத்தகம் கிடைக்க செய்து அன்பு சகோதரியில் கருத்தையும் பகிர்ந்தமைக்கு என் நன்றியை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். தன்னுடைய வேலைப்பழு மத்தியிலும் சீனா ஐயா வழியாக என் புத்தகம் விமர்சனம் செய்யப்பட்டதில் பெரிதும் பெருமை கொள்கின்றேன். தங்கள் ஆசிர்வாதம் வாழ்த்துக்களுடன் வாசகர்களை சென்று அடைவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்.

அன்பின் ஜோஸபின் பாபா 

நான் தேடும் வெளிச்சங்கள் புத்தகம் 

அத்தனை கதைகளும் அருமை - படித்து மகிழ்ந்தோம். 

எனது துணைவி செல்வி ஷங்கர் கருத்துரை எழுதி உள்ளார். அது கீழே கொடுக்கப் பட்டுள்ளது

நான் தேடும் வெளிச்சங்கள் – ஜெ.பி.ஜோஸபின் பாபா
ஒரு பார்வை – செல்வி ஷங்கர்




முதலில் நூலாசிரியரின் நினைவாற்றல் வியக்கத் தக்கதாய் உள்ளது. எத்தனை பேர் !  எவ்வளவு நண்பர்கள் ! எவ்வளவு உறவினர்கள் ! பழகிய இடங்கள் ! பணிகளுக்கு இடையே பார்த்தவர்கள் ! பழக்கப் பட்டவர்கள் ! சிறு வயதில் இருந்தே ஓடி ஆடி விளையாடி படித்து பழகி சண்டையிட்டு பார்வைக் கண்ணோட்டத்தில் கருத்தினை ஊன்றி கதையாய்ப் படைத்திருப்பது படிக்கும் போது வியப்பைத் தருகிறது.   

கால ஓட்டத்திற்கு ஏற்ப உண்ட உணவு,  உடுத்திய உடை, பழகிய நட்பு, பார்த்த இடம், படிப்படியாய் வளர்ந்த வளர்ச்சி எல்லாமே கதைகளில் ஊடுறுவி இருப்பது ஒரு கருத்தோவியம் போல் உள்ளது. ஒற்றை மரமென்று உறவையும், என்னுயிர்த் தோழன் என்று பள்ளியில் படித்த காலத்தையும், அக்காலத்திற்கே உரிய கருத்தோட்டங்களையும், அன்றைய பாடமும், படிப்பும், ஆசிரியரும் மாணவரும், உரையாடி, உறவாடிய முறையையும், சூழ்நிலைக்கேற்ப விளக்கி உள்ளமை சிந்திக்கத் தக்கது.

வளர்ந்த பின் கல்லூரிப் படைப்பையும், அக்காலகட்ட விடுதி வாழ்க்கையையும், அப்போதைய மாணவப் பருவத்து உணர்வுகளையும விடாமல் விளக்கி விளையாடி இருக்கிறார். இந்த முதல் ஐந்து கதைகளையும் படித்துக் கொண்டு வரும் போது இந்த கால் கட்டத்தில் இருந்து கொண்டு எப்படி இருபது முப்பது ஆண்டுகட்கு முந்தைய இளம் பருவத்தின் நிகழ்வுகளைக் கொண்டு வந்தார் என்பது வியப்பாய் இருக்கிறது..

 கதைகளைப் படிக்கின்ற போது சமுதாயம் உணர்ந்தது போலவே நிகழ்வாக்கி எழுத்துகள் செல்வது ஆசிரியரின் ச்முதாய்ப் பார்வையைக் காட்டுகிறது.

 கருத்து நடையும் எழுத்து நடையும் மொழி நடையும் உணர்வோட்டச் சிந்தனையும் சமுதாயக் கருத்தும் இயறகையும் முட்டி மோதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.. உண்மையில் ஒரு படைப்பாய் ஒரு நூல் உருவெடுக்க வேண்டுமென்றால் நிறைய உழைப்பும் சிந்தனையும் கருத்தும் இருக்க வேண்டும் என்பதில் ஆசிரியர் நிறையவே பாடு பட்டிருக்கிறார்.. இது பாராட்டத் தக்க படைப்பும் உழைப்பும் ஆகும்.

----------------------------------------------------------10.12.2012------
செல்வி ஷங்கர் – வலைச்சரம் சீனாவின் துணைவி. 

நல்வாழ்த்துகள் ஜோஸ்பின் பாபா 
நட்புடன் சீனாமுகநூல் பக்கம்!

11 Oct 2012

Mohamed Adam Peeroli நேச சகோதருக்கு என் நன்றிகள்!


Photoஅரசு அதிகாரி, சிறந்த கவிஞர், ஆங்கிலம், தமிழ் என இரு மொழியும் சிறப்பாக கையாளும்  எழுத்தாளர், இரு புத்தக  ஆசிரியர் என பல அடையாளங்கள் உண்டு அன்புச் சகோதரர் பீரொளி அவர்களுக்கு. இவை எல்லாம் கடந்து சிறந்த மனித நேயர், மற்றும்  சிறந்த பண்பாளரை  நேரில் காணவும் என் புத்தகத்தை கொடுக்கவும் இயன்றது என் பாக்கியமே. 



புத்தகத்தை வாசித்து தன் கருத்தையும் பகிர்ந்துள் நண்பருக்கு என் இதயம் நிறைந்த நன்றி வணக்கங்கள். ஒரு படைப்பாளி என்ன தான் ஒரு கலையை படைத்தாலும் ரசிக்க ரசிகர் இல்லை எனில் அதின் சிறப்பு ஒன்றும் இல்லை. அவ்வகையில் என் முதல் புத்தகத்திற்க்கு முதல் கருத்து விமர்சனம் சகோதரர் கவிஞர் பேரொளி அவர்களிடம்  பெற்றதில் மகிழ்கின்றேன்.



புத்தக விமர்சனம் எழுத்தால் அருளிய சகோதருக்கும் வாய் மொழி விமர்சனம் அருளிய சகோதரர் மனைவி அவர்களுக்கு என் பணிவான நேசமான வணக்கத்தை செலுத்துவதில் பெருமிதம் கொள்கின்றேன் கடமைப்பட்டுள்ளேன்.

ஒரே சம்பவங்கள் பல வீடுகளில் வேறு வேறு கதாபாத்திரங்கள் ஊடாக நடப்பது என்பது உண்மையாக  இருப்பதால் கண்டு உணர்ந்ததை எழுதிய போது அது என் சொந்த உணர்வாக/கதையாக பரிணமித்தாகவே எண்ணுகின்றேன்.  


ஒவ்வொரு படைப்பாளனும் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு செய்தியை விட்டுத்தான் செல்கிறான். எந்த ஒரு படைப்பும் எழுத்துக்களை மட்டுமே கோர்வைப் படுத்தி வெளிப்படுவதில்லை. சமுக சூழ் நிலையில்...சந்தித்த..வாழ்ந்து கொண்டிருக்கும்...சமுகத்தின் தேவை என அவன் உணரும் உணர்வுகள்தாண் அவனுக்குள் பரிணமித்து படைப்பாய் பிரசவிக்கிறது.

திருமதி. ஜோசபின் பாபா அவர்கள் நான் தேடும் வெளிச்சங்கள் என்ற தே
டல்களை வாசித்த பொழுது என்னால் துல்லியமாக உணரமுடிந்தது. மேலோட்டமாக ஏதோ அவரது கடந்து வந்த வாழ்க்கைப் பயணங்களின் அத்தியாயங்களை அமைத்திருப்பது போல் தோன்றும். ஆனல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆர்ப்பாட்டமின்றி மெல்லியதாய்..எளிமையாய்...ஒரு செய்தியை பதித்துச் சென்றுள்ளார் இந்த சமுதாயத்தின் பால் கொண்ட அக்கரையினால்.

எதிர் வரும் கருத்தரங்கில் ஒரு அமைதியான சுழலில் படைப்பாளர்களை சிநேகத்துடன் சந்தித்து உரையாடும் பாக்கியம் கிடைக்கப் போகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி .


எனக்கும் அந்த சந்தர்ப்பம்...பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்
.


"நான் தேடும் வெளிச்சங்கள்" வாசித்து கருத்து பகிர்ந்த அன்புச் சகோதரருக்கு Mohamed Adam Peeroli நன்றி மகிழ்ச்ச்சிகள்.