27 Sept 2012

திலகனும் அம்மாவும்!

திலகன் என்ற மாபெரும் நடிகரை துயரில் ஆழ்த்தி அவரை விரைவில் கொல்ல காரணமாக இருக்க "அம்மா" என்ற மலையாள திரை உலக இயக்கம்  பங்கு மிக அளவில்  உண்டு. 

ஆனால் நான் சொல்ல வருவது திலகனுடைய பெற்ற தாய்-சேய் பற்றிய சிறிய தொகுப்பாகும். திலகனிடம் ஒரு செய்தியாளர் அம்மாவை பற்றி வினவிய போது அம்மா என்றால் ஒரு பந்தம் மட்டுமே. அது ஆத்ம உணர்வு  என்ற அளவிற்க்கு இல்லை என்றிருந்தார்.  அவருடைய வாழ்கை சொல்லிய ஆழமான பாடமாகும். 

திலகன் ஒரு எஸ்டேட் அதிகாரியின் 6 குழந்தைகளில் இரண்டாவது மகனாக பிறக்கின்றார். திலகனின் எதிர்ப்பு குணம் ஆரம்பித்ததே திலகனுடைய வீட்டில் இருந்து தான்.  தன் கீழ் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை ஆட்சி செய்யும் ஒரு அதிகாரியான அவர் அப்பா காங்கிரஸ்காரராக இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவருடைய மகனான திலகனால் தன்னுடைய கம்னீஸ்ட் சிந்தனையை வெறுக்க இயலவில்லை. தன் தகப்பன் அறிந்தால் பூட்ஸ்காலால் மிதிப்பார் என்று அறிந்தும் கம்னீஸ்ட்காரராக மட்டுமல்ல ஆட்சி செய்யும் போக்கை எதிர்க்கும் நாடகம் அமைத்து மக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதில் குறியாக இருக்கின்றார்.

திலகன் தகப்பனார் மகன் கல்லூரியில் படித்து நல்லதொரு நிலையில் வர வேண்டும் என விரும்புகின்றார். ஆனால் மருத்துவ படிப்பில் ஒரு வருடம் படித்து தோல்வியுடன் திரும்பி வருகின்றார்.  தங்கள் ஜாதி மதம் சிந்தனையில் ஆழமான வேரூன்ன்றிய குடும்பத்தில் பிறந்த திலகன் இது போன்ற சுவர்களை உடைப்பவராகவே இருக்கின்றார்.

திலகனின் போங்கு பிடிக்காத தாய் திலகனுக்கு உணவு கூட கொடுக்க மறுத்து வீட்டுக்கு வெளியில் அடித்து துரத்துகின்றார். தோட்டத்திலுள்ள மரச்சீனி கிழங்கை உணவாக உண்டு பல நாட்கள் வாழ்ந்ததாகவும் பல நாட்கள் படியுடன் அழுது கொண்டே தோட்டத்தில் தூங்கி போனதகாவும் சொல்கின்றார். ஆனால் அவருடைய அம்மாவோ கிருஸ்தவர்கள் வீட்டில் உணவு உண்ணக்கூடாது. அவர்கள் பாத்திரங்களை சோப்பால் கழுவதால் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் என்றும் கூறியுள்ளார். ஆனால் தாய் உணவு கொடுக்காத போது ஒரு கிருஸ்த குடும்பத்தில் தான் உணவு உண்டதாக நினைவு கூறுகின்றார். 

 ஒரு முறை ஒரு நாடக வேலை முடிந்து தன்னுடன் நடித்த நடிகைகளை வழி அனுப்பி விட்டு வரும் மகனிடம் தாய் சந்தேகமாக நடந்து கொள்வது மட்டுமல்லாது வார்த்தைகளால் குத்தி பேசி  நோவடிக்கின்றார். சினம் கொண்ட திலகன் அயலை மீனுடன் சோற்றையும்  தூக்கி எறிந்து விட்டு போனவர் பின்பு 40 வருடம் கடந்தே தன் தாயை எதிரேற்க  வருகின்றார். தன் தாயும் தன்னை காண விளையாததை எண்ணி வருந்தும் திலகன் தாய் சேய் உறவுக்கு தேவைக்கு அதிகமாக கற்பனையான சில அவஸ்தைகள் சொல்லப்பட்டாலும் இதில் துளியும் உண்மை இல்லை என்பதாக தான் உணருவதாகவே சொல்கின்றார். இது போன்ற அடக்கு முறையில் வளர்ந்த திலகனின் தந்தை பல படங்களில் தனக்கு ரோல் மாடலாக இருந்ததாகவும் சொல்கின்றார். ஆனால் திலகன் தனது இரு ஆண்- பெண் குழந்தைகளுக்கு அன்பான அப்பாவாகவே தன் முடிவு மட்டும் இருந்துள்ளார் என்பதும் எடுத்து கொள்ள வேண்டிய தகவலாகும்.

 
இப்படியாக தான் பேசிய கருத்துக்களுக்காக வாழ்கை முழுதும் போராடி வாழ்ந்து காட்டி மரித்தவர் திலகன் என்றால் மிகையாகாது. மலையாள திரை உலகில் இவர் போன்ற பல ஆளுமைகளை கண்டு உணரலாம். அதில் தன் உருவத்தாலும் குரலாலும் மற்றவர்களுக்கு கவுரவமான கோபக்காரராக தெரிந்திருந்தாலும் நான் யாரையும் பின்னால் நின்று சதி செய்தது இல்லை, பிடிக்காததை முகம் நோக்கியே சொல்லியுள்ளேன். சொல்வதை சொல்லும் நேரம் சொல்ல வேண்டும். பிடிக்காத உண்மைகளும் உண்மை தான். மழுப்பல் நம் சமூக நம்பகதன்மையை அழித்து விடும். உண்மையை உண்மையாக முகம் நோக்கி பேச வேண்டும் என சொல்வது மட்டுமல்லாது வாழ்ந்தும் காட்டி சென்றுள்ளார்.

25 Sept 2012

திலகன் என்ற கலைஞனின் மரணம் !


 


திலகன் மலையாளத்திரையுலகில் எடுத்து சொல்லக்கூடிய அறிய நடிகர்.  நாடகத்தில் இருந்து சினிமாவுக்குள் பிரவேசித்தவர்.  தன் இயல்பான, ஆளுமையான நடிப்பால் மக்கள் மனதை கவர்ந்தவர். இன்றைய மலையாள சூப்பர் ஸ்டார்கள் மிளிர திலகன் நடித்த பல படங்கள் காரணமாகின.  அன்பான அப்பா, பொல்லாத தகப்பன், கண்டிப்பான  அப்பா என பல கதாபாத்திரங்களில் இழகி சேர்ந்து நடித்தவர்.
 கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில் அய்ரூர் என்ற இடத்தில் பிறந்த சுரேந்திர நாத் திலகன் கேரளா எஸ்டேட்டில் வேலை செய்த ஒரு அதிகாரியின் கேசவன் -தேவயானி தம்பதிகளின்  6 மகனாவார். இவருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள்  உண்டு. பல விருதுகளுடன் பத்மஸ்ரீ விருதும் பெற்ற நடிகர் ஆவார்.


ஆனால் தன் வயது முதிர் காலத்தில் தனக்கு பிடித்த நடிப்புடன் வாழ வேண்டும் ஆசை கொண்டிருந்தவருக்கு பேரிடியாக வந்தது மலையாள திரை உலக இயக்கம் "அம்மா" வின் சில நடைவடிக்கைகள் .  ஒரு நல்ல நடிகனுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை தட்டி பறித்தது தயாரிப்பாளர்களிடம் திலகனுக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என சட்டமிட்டது. அவர் சொல்லாத சில வார்த்தைகள் குற்றசாட்டுகளாக  கூறி வெளியேற்றியது.  இவருடன் பல படங்களில் நடித்த நெடுமுடி வேணு என்ற நடிகரே பல கோள்மூட்டல்களுக்கு காரணமாகி திலகனுடைய  சமநிலையை தகர்த்தனர்.  ஒரு கட்டத்தில்  போற்றுதல்குரிய நடிகரை அழ வைத்தனர்  சூப்பர் ஸ்டாருகளான மம்மூட்டி மோகன்லால் போன்றோர்.


இவர் மட்டுமல்ல கேப்டன் ராஜு, காமடி நடிகர் மாள அரவிந்தன், காலம் சென்ற கொச்சின் ஹனீபா போன்றோரும் இதே போல் துன்புறுத்த பட்டனர். கொச்சின் ஹனீபா மனைவி தன் கணவர் இறப்புக்கு பின்பு மம்மூட்டியை குற்றம் சாட்டியிருந்தார். மற்று நடிகர்கள் அமைதிகாத்து  தாங்களாக எரிந்து தீர்ந்த போது திலகன் தன் கருத்துக்களால் பத்திரிக்கையாளர் உதவியுடன் போராடினார். இயக்கம் கலைஞர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதை விடுத்து அச்சுறுத்தல் கொடுத்து கட்டுப்படுத்தி அழித்ததில் திலகனும் பலியானார்.

கருத்து சுதந்திரம், ஈர மனதினர் என நாம் எண்ணும் மலையாள திரையுலக நட்சத்திரங்கள் மம்மூட்டி மோகன்லால் போன்றோர் தமிழ் சினிமாவில் சிலதில் நடித்த பின்பு  அராஜகத்துடன் மலையாள சினிமா உலகு போங்கையும் மாற்றினர். இதில் சிரிப்பு நடிகர் 'இன்னசென்ற்' என்பவரில் கோமாளித்தனமான வில்லத்தனமான பங்கும் நிறையவே உண்டு.  பிரத்வி ராஜ் போன்ற சில இளம் நடிகர் போர் கொடி தூக்கினாலும் ஒன்றும் எடுபடவில்லை. மக்கள் பின் துணை திலகனுடன் இருந்ததால் அடக்கி வாசித்தனர் ஆனால் மறை முகமாக எல்லா தீங்கும் செய்தனர். திலகன் வார்தைகள்!


இந்த அராஜகமான ஆளுமை சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறையிலும் மலிந்து விட்டது. திரை உலகு என்றதும் எளிதில் வெளிச்சத்திற்க்கு வருகின்றது அவ்வளவே. நாம் காணும் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஏன் மதக்கூடாரங்கள் என இந்தியர்கள் சிறப்பாக தென் இந்தியர்கள் கூடும் இடம் குப்பை குளங்கள் தான். சமீபத்தில் கண்ட மலேஷியா தோழியும் இதைத் தான் சொன்னார், சீனா முதலாளியிடம் சீனாக்காரர்களுடம் வேலை பார்க்கலாம், தென் இந்தியர்கள் இருக்கும் இடமே கோள் மூட்டலும் கால் வாரலும் கொண்டு நிறைந்தே இருக்குமாம்.


22 Sept 2012

ஒரு மகிழ்ச்சியான கோவைப் பயணம்!

கோயம்ப்த்தூரில் நண்பர்கள் பலர் உண்டு எனிலும் கோவைப்பயணம்   வாய்ப்பு கிட்டவில்லை.  இந்த முறை கோவை செல்ல புத்தக வெளியீடு என்ற காரணம் இருந்தாலும் பெரிய மகனுக்கு தேற்வு நாட்கள் என்பதால் பயணம் பற்றி இரு மனமாகவே இருந்தேன்.  மகனை தனியாக வீட்டில் விட்டு விட்டு செல்லவும் மனம் வரவில்லை. பள்ளி முதல்வரை கண்டு அனுமதி கேட்ட போது  தன் மாணவருடைய தாய் புத்தகம் வெளியிடுவதை பெருமையாக எண்ணி இன்முகத்துடன் வாழ்த்தி அனுப்பியது மகிழ்ச்சியாக இருந்தது.

காலை நெல்லையில் இருந்து புறப்பட்டோம். திண்டுக்கல் அருகே வாடிப்பட்டியில் வந்ததும் திராட்சை தோட்டம், தென்னை மரத் தோட்டம் என பூங்காவாக இருந்தது வழி எங்கும்.  தோட்டத்தில் அப்போது பறித்த திராட்சைப்பழம் விற்று கொண்டிருப்பதை கண்டதும் பெரிய மகனும் கணவரும் திராட்சை வாங்க சென்றனர், நானும் சிறிய மகனும் திராட்சை தோட்ட  உரிமையாளர் அனுமதி பெற்று தோட்டத்தில் படம் பிடிக்க சென்றோம். கிலோ 40 ரூபாய் 5 கிலோ பெட்டியாகத்தான் தருவதாக சொன்னார்கள்.  திராட்சை அழகு "வாங்கு வாங்கு" என சொல்வது போல் இருந்தது. . உரிமையாளரின் மனைவி மேற் பார்வையில் பெண்கள் கத்திரியால் நல்ல பழவும் கேடான பழவும் வகைப்படுத்தி கொண்டிருந்தனர்.  இன்னொரு பெரியவர் ஒரு கிலுக்கை வைத்து கொண்டு திராட்சை கொறிக்க வரும் மைனாவை விரட்டி கொண்டிருந்தார்.  ருசியான இனிப்பான திராட்சை சாப்பிட்டு கொண்டே பயணம் ஆரம்பித்தோம். (இதே திராட்சை வரும் போது கிலோ 30 ரூபாய்க்கு கிடைத்தது).

வழி நெடுக பெண்கள் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தனர். வித்து விதைக்கும் சீசன் போல். எல்லோரும் வேலையில் ஆழ்ந்திருந்தனர். நெல்லைக்கு சமீபம் காண்பது போல் பிரதமர் வேலை வாய்ப்பு திட்டம் இல்லை என நினைக்கின்றேன்.  நெல்லை சேரமாதேவி பக்கம் பயணிக்கும் போது பந்தலிட்டு குழுமி கூட்டம் சேர்ந்து இருப்பதை சகஜமாக காணலாம். சிறந்த உழைப்பாளிகள் என பெருமைப்பட்டு கொண்டு முன்னே சென்றால் கொய்யாப்பழம் விற்று கொண்டிருந்தார் ஒரு சகோதரி.  கிலோ 40 ரூபாய் என்றார். பழம் அழகாகவும் சுவையாகவும் இருந்தது. பழம் வாங்கி விட்டு ஒரு படம் பிடித்த போது படம் பிடித்த என் மகனுக்கு ஒரு கொய்யாப்பழம் பரிசாக அளித்தார்.




செல்லும் வழியில் 100 மீட்டருக்கு ஒரு டாஸ்மார்க்கு(பிராந்தி) கடை இருந்தது. குடிமக்களுக்கு நல்லதே. குடித்து விட்டு ஒன்றுக்கு அடிக்க முகம் கழுவ என வசதிகள் இல்லை. இதுவே நம் நாட்டின் பயணத்தின் துயரும். ஆண்களுக்கு பிரச்சனை இல்லை, நின்று கொண்டே வழி நெடுகை சிறுநீர் கழிப்பதை காணலாம். பெண்கள் பாடு தான் திண்டாட்டம். வல்லரசு, வளர்ச்சி என்பதெல்லாம் அனுபவத்தில் கேள்வியாகத் தான் இருக்கின்றது.

கொய்யா ருசியில் போய் கொண்டிருக்க பழனி வழியாக உடுமலைப்பேட்டை வந்தடைந்தோம். என்னவருக்கு அமராவதி முதலை பண்ணைக் காண ஆவல். அப்படியே 25 கிலோ மீட்டர் பயணித்து அமராவதி ராணுவபள்ளி கடந்து அமராவதி நீர்தேக்கம் வந்து அடைந்தோம். நம்மூர் மணிமுத்தூர் நீர்த்தேக்கவும் அமராவதி நீர் தேக்கவும் ஒரு தாய் இரட்டைப் பிள்ளைகள் போல் காட்சி அளித்தனர்.  நீர் தேக்கம் அருகில் பழம்குடி மக்கள் சிறு குடிலுகளில் வசிக்கின்றனர். காட்டின் சொந்தக்காரர்கள் காட்டருகில் ஏழைகளாக கண்டது வருத்தமாகத்தான் இருந்தது. அரசு நலன் உதவிகளை எண்ணி ஏமாற்றப்பட்டு நீர் தேக்கம் அருகில் வசிக்கும் மக்களாக இருப்பதாகவே பட்டது. டாம் மீனை பொரித்து விற்கின்றனர். ஒன்றுக்கு 20 ரூபாய். ருசி பார்த்தோம். மீனை விட மீன் முள் அதிகம். நம்மை சூழும்  நாய்கள் தான் கொழுமையாக மீன் சாப்பிட்டு வளர்கின்றது.

அமராவதி முதலைப்பண்ணை உங்களை அன்புடன் வரவேற்கின்றது என தலா தலைக்கு 4 ரூபாய் மகிழுந்துக்கு 15 ரூபாய் என வசூலித்தனர். பயங்கரமான முதலைகளை பார்க்க போகின்றோம் என மனதை தைரியப்படுத்தி கொண்டு சென்றால் ஒரு வனஇலாக ஊழியர் மட்டும் பூட்டி இட்ட நுழைவு வாயில் முன் இருந்தார். மரிதையாக கேட்கலாம் என கணவர் வாகனத்தை  விட்டு இறங்கி சென்றால், திரும்பி போயிட்டு ஏன் வந்து கேட்கின்றீர்கள் என்ற மறு கேள்வி கேட்டார். முதலைகள் என்னவானது என தெரியவில்லை.  முதலைப் படங்களை மட்டும் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினோம்.  காதலர்கள் சொர்க்க பூமியாக காண முடிகின்றது. வயது வித்தியாசமில்லாது பலதர காதலர்களை கண்டு மடங்கினோம்.

நீர் தேக்கத்தில் இருந்து வரும் தண்ணீரை கண்டதும் என்னவருக்கும் மகன்களுக்கும் குளிக்க ஆசை! புதிய இடம் புதிய சூழல் ரிஸ்க் எடுக்க வேண்டுமா என கேட்கும் முன் அசதி தீர குளித்து  தான் வருவோம் என தாவி தண்ணீருக்குள் குதித்தனர். அங்கு குளித்து கொண்டிருந்த உள்ளூர்காரர்கள்  அங்கே போகாதீர்கள் இங்கு குளியுங்கள் என அறிவுரை கூறி கொண்டிருந்தனர். உள்ளுக்குள் கோபம் என்றாலும் நான் தள்ளி நின்று அவதானித்து கொண்டிருந்தேன். 

அடுத்து எங்கள் பயணம் கோயம்பத்தூர் நோக்கி இருத்தது. நெல்லை கொடும் வெயில் இருந்து இளம் காற்று அடிக்கும் குளிர்மையான காலநிலை. அருகில் ஊட்டி மலை, வால்ப்பாறை எஸ்டேட் என ரம்மியமாக உள்ளது. நிம்மதியாக கோயம்பத்தூர் பட்டணம் வந்தடைந்தோம். அழகிய ஊர். நெல்லையை விட சுத்தமாகத்தான் உள்ளது. டவுணுக்குள் தான் விளம்பர பலகை ஆதிக்கம். சிறு ஊர்கள் தெருவுகள் கண்டு பிடிக்க வழிகாட்டி பலகைகள் இல்லை.  காந்தி நகரில் அலங்கார் கிராண்டே என்ற தங்குமிடம் கண்டு பிடிக்க சுற்றி சுற்றி வந்தோம். அருமையான தங்குமிடம் ஒழுங்கு படுத்தபட்டிருந்தது.. 

பேராசிரியர் மணிவர்ணன் அவர்கள் தன் மாணவரும் என்னுடன் கவிதை தொகுப்பு வெளியிடும் தம்பி பிரவீன் குமாருடன் சந்திக்க வந்திருந்தார். அமைதியான, ஆர்பாட்டம் இல்லாத எளிமையான மனிதர் பேராசிரியர். கோயம்ப்த்தூர்க்காரர்களுக்குரிய பரிவில் அன்பில் "எல்லாம் சிறப்பு தானே" என விசாரித்து சென்றார்.

மாலை வெளிநாட்டில் இருந்து வரும் நண்பர்களை வரவேற்க கோயம்பத்தூர் விமானநிலையம் சென்றோம். செல்லும் வழியில் கேட்டு கேட்டு சென்று விட்டோம்.  நண்பர்களும் வந்து சேர்ந்தனர்.  குழந்தைகளை அழைத்து கொண்டு ஒரு நல்ல உணவகம் நோக்கி சென்றோம். பார்க்க வெளி தோற்றம் அழகாக இருந்தாலும், காய்ந்த சப்பாத்தி கரிந்த நாண் என உணவு தரம் சரியில்லை. நம் ஊரில் தான் இரவு அல்வா, மிச்சர் என சாப்பாட்டை கொண்டாடி சாப்பிடுவர்களோ என எண்ணி கொண்டு  நல்ல உணவு சாப்பிட தெரிந்தவர்கள் நாங்கள் தானப்பா என நினைத்து கொண்டு, குடிக்க காப்பி கேட்டால் இல்லை என்று சொல்லி விட்டனர். நகரம் அமைதியாக தூங்க ஆரம்பித்து விட்டது.  தங்கும் இடம் வந்து அடுத்த நாள் நிகழ்ச்சியை நினைத்து கொண்டே தூங்க ஆரம்பித்து விட்டோம்.

அடுத்த நாள் தங்கும் இடத்தில் காலை உணவு இனாமாம். அருமையான உணவு வகைகள் கிடைத்தது. வடக்கு தெற்க்கு, மேற்கு என எல்லா வகை உணவுகளும் இருந்தது. இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பிரட்-ஜாம், வைன், சாயா, காப்பி, மூன்று வகை இனிப்பு, என கம்பீரமான சாப்பாடு. 

காலை 10 மணிக்கு புத்தக வெளியீடு அரங்கம் வந்து சேர்ந்தோம். அறிய பயனுள்ள நிகழ்வுகள். கவிஞர் அறிவுமதி தலைமை தாங்கினார். படைப்பாளிகள் சந்திப்பு என அருமையாக நிகழ்வுகளுடன் சென்றது. மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி முடிந்த பின்பு மதிய உணவு எடுத்து விட்டு என்னவரின் நண்பர் தம்பிதுரை அவர்கள் குடும்பத்தை சந்திக்க சென்றிருந்தோம். சகோதரரும் புத்தக வெளியீட்டுக்கு வந்து சிறப்பித்து என் புத்தகத்தை பெற்று சென்றிருந்தார்.

அன்பான ஒரு மகன் அருமையான மனைவி, நன்றியுள்ள நாய் என அவர் வீட்டு கீழ் தளத்தை வாடகைக்கு கொடுத்து விட்டு மாடியில் குடி இருக்கின்றார். அரசு ஊழியரான அவர் மனைவி பலகாரம் இனிப்பு அதிரசம் வாழைக்கா பச்சி என மிகவும் அருமையாக கவனித்து கொண்டார். நெல்லை பெண்களை விட மிகவும் விரைவாக பழகவும் கரிசனையுடன் விருந்தினரை  கவனிக்கும் பாங்கு என்னை கவர்ந்தது. கொங்கு நாட்டு பெண்களின் சிறப்பு இதுவோ என நினைத்து கொண்டேன். மிதமாக குளிர்மையான கால-நிலைபோலவே மக்களும் மிகவும் நேசமுடன் நடந்து கொள்கின்றனர் என எண்ண தோன்றியது. நெல்லையில் விருந்து வீடு என்பது இது போல் இனிமையானதா என்பது சந்தேகமே. பலர் வீட்டு வராந்தாவை விட்டு உள்ளுக்குள் அழைக்க மாட்டார்கள். இன்னும் பல வீடுகளில் நுழைவு வாசலில் வைத்தே விடை தந்து விடுவார்கள். சரி எப்படியோ கோயம்ப்த்தூர் மக்கள் கவனிப்பு நெஞ்சார்ந்த அன்பு பொதிந்ததாக இருந்தது. எங்களை வாகனம் வரை வந்து வழி அனுப்பி வைத்தனர்.

வரும் போது காந்திநகர் வழி கண்டு பிடிப்பதில் மிகவும் சிக்கலாகி விட்டது. வழியில் கல்லூரி இளைஞர்கள் கூடி நின்று கதைத்து கொண்டிருந்தனர். வழி கேட்டதும் அண்ணா இந்த வழி போயிடுங்க ....பாத்து போங்க என கரிசனையாக  சொல்லியது புல்லரிக்க வைத்தது.  கோயம்பத்தூர்க்காரர்கள் மட்டும் தான் கொல்ல போகிறவர்களையும் "கொன்னுடுவேனுங்க" என மரியதையாக சொல்வார்கள் என கவிஞர் அறிவு மதி கூறிய நிகழ்வு நினைவுக்கு வந்தது.

ஞாயிறு என்பதால் இறைச்சிக்கடைகள் நிரம்பி வழிந்தன. பற்றி இறைச்சி கடையும் வழியில் கண்டேன்.  காலைக்கடன் தெருவில் கழிக்கும் மனிதர்கள் என தமிழக நிதம் காட்சிகள் கண்டு  பாலம் கடந்து   அழகிய கோயம்பத்தூர் பட்டணத்திற்க்கு விடை சொல்லி நெல்லை திரும்பினோம். 

6 Sept 2012

சிவகாசி விபத்து - ஏன் நிவாரண நிதி!


இன்று விபத்து என்றதும்  தமிழக அரசால் 2 லட்சம், பிரதமர் இரங்கல் தந்தி என சிவகாசி செய்தியில் இடம் பிடித்துள்ளது. ஆனால் உலகசந்தையில் பட்டாசுத் தேவையின்  40%உம், இந்தியா சந்தையின் 90% இடம் பிடித்து குட்டி ஜப்பான் என்று பெருமை சேர்க்கும் நகரமே சிவகாசி. ஒரு காலத்தில் ஜாதிய கொடுமைகள் மத்தியில் பஞ்சம் பிழைக்க வந்த நாடார் இன மக்கள் குடியேறி தங்கள் அயராத உழைப்பால் உயர்ந்ததே சிவகாசி. இன்றும் ஏற்றுமதிக்கு முதலிடத்திலும் இந்திய-தமிழக அரசுக்கு வரிகள் வழியாக வருமானம் ஈட்டுவதில் முன்னிலை வகிக்கும்  சிவகாசி தொழிலாளர்கள், ஒரு விபத்து என்றதும் அரசு தரும் ஆயிரங்களுக்கு கையேந்தும் நிலையில் இருக்க காரணம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, தன்னலம் கொண்ட சிவகாசி பணக்காரர்களுமே. அவசரநிலையில் மக்கள் சிகித்சை பெற போதிய மருத்துவ வசதி கூட இல்லை என்பது மிகவும் வருந்த தக்க செய்தி. உலகத்தரம் வாய்ந்த பல தொழில்சாலைகள் நிறுவிய ஊரில் ஏன் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ மனை இல்லை என்றால் பணக்காரர்களுக்கு தங்கள் மருத்துவ தேவைக்கு என பிளேன் பிடித்து வெளிநாடுகளுக்கு பறந்து விடலாம், ஆனால் ஏழைகளுக்கு அரசு மருத்துவமனை போதும் என்ற இருமாப்பு  இகழ்ச்சியே! சிவகாசி பண முதலைகள் பணத்தில் எந்தளவு உயர்ந்தனரோ அந்த அளவு மனித நேயத்தில் தரம் இறங்கியதே இதை காட்டுகின்றது.

மூடவேண்டிய ஆலையை ஏன் மூடவில்லை என்றால் அங்கு அரசு அதிகாரிக்கு கையூட்டு லட்சங்கள் சென்றுள்ளது. இன்று  பல அரசு அலுவலங்களில் லஞ்சம் தங்கள் உரிமை போன்று இத்தனை ரூபா என கேட்டு வாங்கப்படுகின்றது. பாகுபாடு இல்லாது எல்லா அரசியல் கட்சிகளும்  கண்டும் காணாதது போல் தங்கள் இருப்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அரசியல் அதிகாரிகளும் கையூட்டு கொடுத்து தங்களுக்கு லஞ்சம் வாங்க தகுந்த இடமாக மாற்றலாகி பணவேட்டையை ஆரம்பித்து விடுகின்றனர்.

இத்தருணங்களில் தேயிலை தோட்டங்களை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்கள் நினைவுக்கு வருகின்றனர். தங்கள் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு என மிகவும் சுகாதார வசதி கொண்ட மருத்துவ மனைகள் அமைத்திருந்தனர், தொழிலாளர்கள் பிள்ளைகளை பராமரிக்க பாலவாடிகள் கூட இருந்தது.  இதை ஆய்வகர்கள் மூலம் சரிபார்த்தும் வந்தனர். தற்போது இந்திய முதலாளியிடம் தேயிலத்தோட்ட உரிமைகள் வந்த போது  தரம் குறைந்திருந்தாலும் இன்றும் தொழிலாளிகளை பராமரிக்க என்று ஆஸ்பத்திரிகள் உண்டு. ஆங்கில ஆட்சியை பற்றி வரிந்து கதை எழுதும்ம் ஊடகவும் தற்போதைய இந்திய அரசின் மக்கள் எதிர்போக்கை கண்டு கொள்ளாது  பசையுள்ள பக்கமே சாய்ந்து நிற்கின்றது.

400மேல்  தொழில் நிறுவனங்கள் கொண்ட சிவகாசியில் 4000 மேல் ஆலைகளும் இயங்குகின்றன என கணக்குகள் தெரிவிக்கின்றன.  உலகத்தேவையின் 60 % அச்சு சார்ந்த தேவைக்கு சிவகாசியையே நம்பி இருக்கின்றனர். ஜெர்மனிக்கு அடுத்தபடியாக அச்சு சாலைகள் சிவகாசியில் தான் இடம் பிடித்துள்ளன். மழை இல்லாத வெட்பநிலை கொண்ட  இந்த நகரத்தை சுற்றியே பட்டாசு மற்று தீப்பெட்டி, அச்சு சார்ந்த தொழில்கள் கொடிகட்டி பறக்கின்றது. அரசுக்கு மிக பெரிய வருமானமாக சுங்கம்,  வருமான, விற்பனை வரியாக செலுத்தும் நகரங்களில் ஒன்றும் இது. ஆனால் சிவகாசியில் நடந்தது என்ன? ஏழைகள் இரத்ததை, உழைப்பை உறிஞ்சு பணம் சம்பாதிக்கும் ஆலை உரிமையாளர்கள் தங்கள் குழந்தைகள் கல்வி கற்க பல கல்வி நிறுவனங்கள் நிறுவியவர்கள் சிறந்த மருத்துவ மனைகள் நிறுவ ஏன் முன் வரவில்லை. தங்களுக்கு இருந்த  தார்மீக கடமையும் மறந்து விட்டனர்.  

நாய்க்கர் மன்னர்களால்  வ்ந்த இழிநிலையை தங்கள் உழைப்பால் விரட்டி தங்கள் அடையாளத்தை நாடார்கள் சிவகாசியில் மீட்டனர். சிவகாசியின் ஆளுமை  பணக்கார நாடார்கள் வசமே உள்ளது. ஆனால்  பணவெறி பிடித்த நாடார் முதலாளிகளால் மறுபடியும் சமூக வெறுப்புக்கு செல்ல உள்ளனர்.  இன்றும் திருமண பந்ததில் இணைய  மற்று பகுதியில் வசிக்கும் நாடார்களை தங்களுக்கு இணையாக மதிப்பதில்லை. இவர்களுக்கு என்ற தனி அந்தஸ்து பெற்று உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிக்க உதவிய தொழிலாளர்கள் நிலை பரிதாபமாகி விட்டது. கொள்ளைக்கார அரசை  நாம் விமர்சிக்கும் போதும் ஒரு சமூகத்தின் எல்லா வாய்ப்புகளையும் வசதிகளையும் சொந்தமாக்கி முன் வந்த ஒரு சாரார்  தங்கள் சக மனிதனையும் மனித நேயத்தோடு நடத்தியிருந்தால் இது போன்ற விபத்தில் அவர்கள் உயிரிழக்க நேர்ந்திருக்காது.

சிவகாசி என்று மட்டுமல்ல தமிழகத்திலுள்ள பெறும்வாரியான ஆலை முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களை அடிமாடுகளாக வைத்து வேலை வாங்கி விட்டு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய நியாமான சலுகைகளை கொடுக்காது, லஞ்சமாகவும் கையூட்டகாவும் அரசு அதிகாரிகளுக்கு கொடுத்து தங்கள் இருப்பை ஸ்தரப்படுத்தி கொள்கின்றனர்.

இன்றைய தினம் விபத்தை எண்களாக குறிப்பிட்டு தீயில் வெந்து போன பல குடும்பங்களை வசதியாக மறந்து விடுகின்றோம். பெற்றோர் இருவரும் வேலை செய்ய எத்தனை குழந்தைகள் இன்று அனாதமாகினதோ? அல்லது எத்தனை வயர்முதிர் பெற்றோர் அனாதமாகினரோ. இது தனி நபர் துக்கம் பாதிப்பு என எடுத்து கொண்டால் அரசு தரும் 2 இட்சம் என்பது  2 ரூபாய் மதிப்புக் கூட பெறாது. விளிம்பு நிலை மனிதனையே தேடி விபத்துக்கள் வருவதும் நாம் வாழும் சமூகத்தின் மனிதந்நேயத்தின் வீழ்ச்சியே. சிவகாசியில் நேற்று நடந்திருப்பது 85 வது விபத்து என்று அறியும் போது அரசியல் இயந்திரமும் அதிகார பணக்கார இயந்திரமும் இயந்திரன்மையோடு நடந்து கொள்வதையே காணப்போகின்றோம். இவர்களுக்கான வைப்பு நிதி, ஓய்வூதியம், காப்பீடு நிதி இருந்தா என்ற கேள்வி  மூடி மறைக்கவே நிவாரண நிதி என்பதே என் கருத்து!

உலகறிந்த சிவகாசிக்கே இந்த நிலை என்றால் கூடன்குளம்  அணு உலையால் என்ன நிகழபோகின்றது என்று பீதியுடன் நோக்க வேண்டியுள்ளது.

5 Sept 2012

என்னை கவர்ந்த ஆசிரியையும் என்னை வெறுத்த ஆசிரியையும்!

ஆசிரியர் என்றதும் எனது நினைவில் ஓடி வரும் பல நல்ல ஆசிரியர்கள் உண்டு, அதை விட கூடுதலாக கொடூர ஆசிரியர்களும் உண்டு.


கோட்டயம் பி. சி. எம் கல்லூரியில் படிக்கும் நாட்கள் மறக்க இயலாதவை. கோட்டயம் ஒரு கல்வி மாவட்டம், பி.சி. எம் கல்லூரி புகழ் பெற்ற பெண்கள் கல்லூரி.  நாங்களோ இடுக்கி மாவட்டத்திலுள்ள கல்வியில் மிகவும் பின் தங்கிய பகுதியிலுள்ள  மாணவிகள் அதில் நான் மட்டும் தமிழச்சி!. மேலும் அங்கு படித்த மாணவிகள் பெரும் பணக்காரர்கள் அல்லது மிகப்பெரிய வேலையில் உள்ளவர்கள் அல்லது தேற்வில் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களாகவே இருந்தனர். என்னை போன்ற இடுக்கியை சேர்ந்த சில மாணவிகள் வயநாட்டு பகுதியிலுள்ள இன்னும் சில மாணவிகள் மட்டுமே குறைந்த மதிபெண் பெற்றவர்கள் ஆங்கில புலமை குறைவானவர்களாக இருந்தோம்.

அங்கு எங்களுக்கு ஆங்கிலப்பாடம் எடுத்த பேராசிரியை கோ. மோனாம்மா நினைவில் வருகின்றார்.  எப்போதும் சிரித்த முகம், மிகவும் அழகாக உடுத்தும் காட்டன் சேலைகள் எளிமையான ஆனால் கவரும் சிகை அலங்காரம் என எங்கள் மனதை கொள்ளை கொண்டவர் அவர்.  பேராசிரியை ஒருபோதும் பாகுபாடாக நடந்து கொண்டதே இல்லை. கல்லூரி முடிந்து சில மணிநேரம் புகைவண்டி நேரம் கணக்கு பண்ணி சும்மாதாக  இருந்தார். அந்த நேரவும் பயண்படுத்தும் வண்ணம்  எங்களை போன்ற மாணவிகளை அழைத்து ஆங்கில இலக்கணம் கற்று தருவார்கள்.  தன் குழந்தைகளிடம் என்பது போன்ற  கருதல், அன்பு, பரிவு அவரிடம் இருந்தது. தேவைக்கதிகமாக எந்த மாணவியிடமும் தொடர்பாடல் வைத்து கொள்ள மாட்டார். ஒரு போதும் அவர் குரல் உயர்த்தி திட்டினது இல்லை ஆனால் கண்டிப்பான பேராசிரியராகவும் இருந்தார். என் கல்வி நாட்களில் அவரிடம் 2 வருடம் படித்த ஆங்கிலமே இன்றும் உருதுணையாக இருந்துள்ளது என்று நினைக்கும் போது அவர் ஒரு போதும் மறவாத ஆசிரியையாக திகழ்கின்றார் என் மனதில். கல்லூரியில் வந்துவிட்டீர்கள் உங்கள் ஆளுமை வளரும் நாட்கள்; சின்ன பள்ளி குழந்தைகள் மாதிரி நீ, வா, போ என்று மற்றவர்களை அழைக்கக்கூடாது  என்று அறிவுறுத்துவது மட்டுமல்ல எங்களையும் ஒருமையில் அழைக்காது மரியாதையாகவே அழைத்து வந்தார். கேரளாவில்  பொது இடத்தில் புகைபிடிப்பதை  தடை கொண்டு வர பல வருடம் சட்டத்துடன் போராடியவர். 30 வருட கல்வி பணிக்கு பின் இப்போது சமூக தொண்டு ஆற்றும் வண்ணம் எர்ணாகுளம் மேயராக உள்ளார் .

 கல்விக்கு என தமிழகம் வந்து விட்டேன். என்னுடைய பெயர் கொண்ட ஒரு பேராசிரியை வணிகம் பாடம் எடுத்தார். அவருடைய பாடம் எடுக்கும் பாங்கே வித்தியாசம் ஆனது.  என் பெயர் கொண்டவர் என்பதால் எனக்கோ அவர் மேல் ஒரு ஈர்ப்பு.  புத்தகத்தை எல்லோரும் விரித்து வைத்து பார்த்து கொண்டு இருக்க வேண்டும். யாரும் சிறு அணு கூட  அசைய கூடாது. ஒவ்வொருவராக வாசிக்க துவங்குவோம் . அவர் நிறுத்து என்று சொன்னதும் அனைவரும் அவர் முகத்தை உற்று நோக்கி சொல்வதை உள்வாங்க வேண்டும். இப்படியாக முக்கால் மணிநேரம் செல்லும்.  அவரையும் அசையாது அவருடைய இருக்கையில் இருந்து கவனித்து கொண்டிருப்பார். அவரை கோபத்தின் உச்சியில் கொண்டு செல்ல கைவிரலால் சுடக்கு இட்டால் போதும். சத்தம் கேட்டதும் வாயில் வந்த படி திட்டுவார்.

சில மாணவிகள் ஆங்கிலம் வாசிப்பது புரியவே சங்கடமாக இருந்தது. நான் கணக்கு படத்தில் இருந்து வணிகம் பக்கம் தாவியதால் சரியான புரிதலும் இல்லை. ஆனால் மூக்கு கண்ணாடிக்கு கீழ் வழியாக நோக்கும் அவர் பார்வையும் எழுந்த சந்தேகம் கேட்க மிரட்டியது. இருப்பினும் தைரியத்தை வரவழைத்து கொண்டு என் பாட சந்தேகத்தை கேட்க ..அவரோ உன் பெயர் என்ன என்று மறுகேள்வி கேட்க, உன் ஊர் என்ன என்று அடுத்த கேள்வி வர ...கேரளா என்று நான் சொல்ல, "என்ன கேரளா அந்த மலைப்பக்கம் இருந்து கொண்டு கேரளாவாம்... கேரளா!" என்று நகைத்து விட்டு இந்த வகுப்பில் எத்தனை மாணவிகள் என்றார் என்னிடம், நானும் 45 பேர் என்று நான் பதிலுரைக்க; உனக்கு நான் 5 நிமிடம் எடுத்து கொண்டால் 45 ஆல் பெருக்கி பார் எவ்வளவு நேரம் விரையப்படுத்துகின்றாய் என்று.." . இப்படியாக காட்டமாக கூறிவிட்டு  சந்தேகம் இருந்தால் என் அறைக்கு வா என்று சென்று விட்டார்.

இன்னும் ஒரு நோய் அவருக்கு இருந்தது. சந்தையில் காய்கறி விலை நிர்ணயிப்பது போல் ஒவ்வொருபவருக்கும் ஒரு மதிபெண் நிர்ணயித்து வைத்து கொண்டு தேற்வுத்தாளை திருத்தாதே மதிபெண் தந்து விடுவார். எப்படியோ பல்கலைகழகம்  ஒரு தேற்வு வைப்பதால் தப்பித்து கொண்டோம்.

என் தங்கையில் இருந்து மலையாள மொழியில் எனக்கு வரும் கடிதம் உறுத்தி கொண்டே இருந்தது அவருக்கு. விசாரணை என்ற பெயரில் மிகவும் கொச்சையாக திட்டி அந்த கடிதத்துடன் என்னை கல்லூரி அலுவலகம் கூட்டி சென்று, மலையாள அருட் சகோதரியிடம் கொடுத்து வாசித்து விட்டு விட்டெறிந்தார். அவருடைய நடவடிக்கை படிப்பு மேலே எனக்கு வெறுப்பை கொடுத்தது.  சில ஆசிரியர்களுக்கு சில மாணவர்களை காரணம் இல்லாதே பிடிப்பதில்லை.

நான் விரிவுரையாளராக வகுப்பறைக்கு சென்ற போது  என் சில
ஆசிரியர்களில் நான் கண்ட குறையை என் மாணவர்கள் என்னிடம் காணக்கூடாது என்பதில் முடிவாக இருந்தேன். என்னை கவர்ந்த பேராசிரியை மோனம்மாபேரா. மோனாம்மா! அவர்களை பல பொழுதும் முன்மாதிரியாக எடுத்து கொண்டேன். 

என் முதல் வகுப்பில் நான் என் மாணவர்களை மதிப்பிடும் முன் அவர்கள் எனக்கு மதிபெண் தந்து கொண்டிருந்தனர். என் மகனின் அறிவுறுத்தலும் மனதில் இருந்தது.  "அம்மா நீங்கள் மாணவர்களை கோபத்தில் திட்டாதீர்கள் அது அவர்களுக்கு பிடிக்காது".  என் மாணவர்கள் ஊடகத்துறை மாணவர்கள் என்பதால் தைரியவும், கலை உணர்வும் கொண்டவர்களாக இருந்தனர்.  நான் மதித்தேன் அவர்களுக்கு வகுப்பு எடுக்கும் போதும் உண்மையிலே பயந்தேன். நான் எடுக்கும் பாடம் புரிகின்றதா தேற்வுக்கு என்னால் தயார் செய்ய இயல்கின்றதா என்று என்னையே தேற்வு செய்யும் விதமாக முதல் தேற்வுக்கு முன் என் வகுப்பை பற்றி அவர்கள் கருத்தை பெயர் இல்லாது எழுதி தரவும் கேட்டிருந்தேன்.

சில மாணவர்கள் புகழ்ந்தனர், சில மாணவர்கள் சில வழி முறைகளை எனக்கு முன் வைத்தனர். பல மாணவர்கள் தங்களுக்கு PowerPoint Presentation வகுப்புகள் பிடித்தமானதாக தெரிவித்தனர்.

 மேலும் ஒரு சமூக பிரச்சனயை விவாதிக்க முன் வைத்து அவர்கள் கருத்து பெற  முயன்றேன். சில மாணவர்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து வந்து சொல்ல வேண்டும் என்றால் நடுங்குவார்கள். அவர்களை வேண்டும் என்றே வகுப்பில் முன் கொண்டு வந்து பேச திடப்படுத்தினேன்.

ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு கதையாக வரலாறாக இருந்தனர். மெதுவாக சிரித்து விட்டு நகந்த சில மாணவர்கள் அருகில் வந்து தங்கள் மனக்குறையை கொட்டி சென்றனர், சிலர் தங்கள் ஆதங்கத்தை இட்டு சென்றனர். அவர்களில் சிலருக்கு கல்வி கற்பதை விட இந்த சமூக சிக்கலில்  நிம்மதியாக வாழ்வது ஒரு சவாலாகவே இருந்தது. மாணவர்கள் கேட்பதை மட்டும் விடுத்து பேசவும்  வைத்த போது பல அறிய கருத்துக்கள் நான் கற்றேன் என்பதே உண்மை.

இந்த பருவத்திலும் எனக்கு ஒரு ஆசிரியையாக பல கனவுகள் இருந்தன. அவர்கள் குறும்படம் தயாரிக்க என நானும் சில கதைகள் வாங்கி வாசித்து திரைக்கதை அமைத்து உதவும் ஆவலில் இருந்தேன். இன்னும் பல மாணவர்களை உதவ இயலும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அது எல்லாம் ஒரு  கனவாக முடிந்தது. இருப்பினும் பெயர் தெரியாத என் ஒரு மாணவன் என் வகுப்புகளை  பற்றி  எழுதிய கருத்துக்களை வாசித்து இப்போதும்  மகிழ்ச்சியான ஆசிரியையாக எண்ணி கொள்வது உண்டு.

அன்பிற்கினிய ஆசிரியைக்கு

உங்க வகுப்பு ஆகச் சிறந்த வகுப்பென்று கூற முடியாவிட்டாலும் கவனிக்கூடிய வகுப்பறை குணாம்சம் உங்கள் வகுப்புகளில் வெளிச்சமிடுவதை நான் உணர்கிறேன். முரண்பட்ட இரு தலங்களை ஓர் புள்ளியில் இணைக்கிற கோடாக உங்கள் வகுப்பறைகள் என் ஆழ் மனதில் வலம் வருகின்றன.

எங்கெங்கோ நினைவுகள் உங்கள் வகுப்புகளில் ஓடினாலும் அது தான் அடைய வேண்டிய தளத்தை இறுதியில் அடைந்து விடுகின்றது, அமைதியடைந்து விடுகின்றது.

ஒரு ஆசிரியை என்பது ஒரு வேலை வாழ்வாதாரம் என்பதையும் கடந்து தனி மனிதனை உருவாக்கும் கூடம் என்பதில் சந்தேகமில்லை. நம்மை உருவாக்கிய  எல்லா ஆசிரியைர்களையும் வணங்கி வாழ்த்துகின்றேன் வணங்குகின்றேன்.




2 Sept 2012

விலக்கப்பட்ட கனி : ஓரின சேர்க்கை!

 

ஓரின சேர்க்கைக்கு எதிரான  உச்ச நீதிமற்ற தீர்ப்புக்கு  உபவாசம் இருப்பதாக ஊழியர் மோகன் சி லாசரசுஸ் மற்றும் சீர்திருத்த கிருஸ்தவ பிஷப்பும்  அறிவித்துள்ளனர்.  ஓரின சேர்க்கை போன்றவை தனி மனித ஒழுக்கம்- சமூக சூழல்  சார்ந்தவை  என்ற சிந்தனையில் அணுகினால் ஓரின சேர்க்கைக்கு எதிராக உபவாசத்துடன் அல்ல சில ஆக்கபூர்வமான செயலாக்கத்துடன் முன்செல்ல வேண்டியுள்ளது கிருஸ்தவ சபைகள்.

ஒரு பெரும் திரள் மக்கள் சிந்தனை வளத்தில் பெரிதும் பின்புலனாக இருப்பதால்  தனி மனித ஒழுக்கம் சீர் பட அல்லது சமூக மாற்றம் நடைபெற கிருஸ்தவ சபை என்ன செய்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. ஆங்கிலயர்கள் காலத்தில் பெரிய சமூக பிரச்சனைகளை கையிலெடுத்த கிருஸ்தவம் இன்றைய நிலையில் எந்த கொள்கையும் இல்லாது  தேர்தலுக்கு தேர்தல் தங்கள் நிலையை மாற்றி கொண்டு அரசியல் ஆடுவது தான் நடந்து வருகின்றது. மேலும் கிருஸ்தவ சபையும் ஒன்றுக்கும் பத்தாக பிரிந்து கிடைப்பதால் ஒருமித்த கருத்தாக்கத்தில் வருவதிலும் சிக்கல்கள் உள்ளன. கருகலைப்பை கத்தோலிக்க சபை  எதிர்க்கும் போது சீர்திருத்தம் சபை மற்றும் பெந்தகோஸ்து சபைகள்  மிதமான நிலையிலும் இன்னும் பல சில சபைகள்   ஆதரிக்கும் நிலையிலுமே உள்ளனர்.

சபையார் பைபிள் பார்வையில் ஓரின சேர்க்கை மிகவும் கொடிய பாவச்செயலாக சொல்ல வருகின்றனர். ஆதாம் ஏவாளை கடவுள் ஆணும் பெண்ணாகவே படைத்தார் என்றும் சோதோம் கொமேறா போன்ற பட்டிணங்கள் கடவுளால் அழிக்கப்பட்டது இப்பாவச்செயலாலே என்றும்,  பைபிளில் பல வசனம் வழியாக (ரோம் 1:26 ல்)  எடுத்து கூறி மிரட்டுவதை விடுத்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் தகவல்கள்  மக்கள் பக்கம் சென்றடைய துணிந்துள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.

பண்டையகாலம் தொட்டே ஓரின சேர்க்கையாளர்கள் உண்டு எனிலும் ஐரோப்பில் 12 ஆம் நூற்றாண்டில் பெருகினர். இயற்கைக்கு மாறானது என்ற காரணத்தால் கிருஸ்தவம் எதிர்த்தது. ஆனால் அதையும் மீறி சில கிருஸ்தவர்கள் சார்பாகவே உள்ளனர் என்றும் கவனிக்க வேண்டியுள்ளது. ஆனால் ஆலய குருவாகவோ, சபை அதிகார இடங்களில் இருக்கவோ ஓரின சேர்க்கையாளர்களை அனுமதிப்பதில்லை என்பதையும் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது.

மன்னர் சவுள் மகன் ஜோனாத்தன் மற்றும் தாவீது நட்பை கூட ஓரின சேர்க்கையோடு இணைத்து சிலர் ஆராய்ந்துள்ளனர். (சாமுவேல்1:26)தாவிது-ஜோனாத்தன்!

இன்றைய தினம் ஒரு உபவாச கூட்டத்தால் மட்டும் ஓரின சேர்கையாளர்களுக்கு எதிராக குரல் கொடுப்பது என்பது ஏமாற்று வேலை தான். உண்மையில் ஓரின சேர்க்கையாளர்கள் இல்லாதாக்க வேண்டும் என்றால் ஓரின சேர்க்கையை பற்றி பைபிளில் கூறியுள்ள சில வசனங்களை மட்டும் எடுத்துரைத்து மிரட்டி பணியவைக்காது தகுந்த மருத்துவ-சமூக பிரச்சனைகள் பற்றி அலசி ஆராய வேண்டும். தேவையான விழிபுணர்வு கொடுக்க வேண்டும்.

ஓரின சேர்க்கையாளர்களாக குழந்தைகளை மாற்றுவதில் கிருஸ்தவ சபைகள் நடத்தும் அனாத ஆசிரம மற்றும் ஆலய சார்பானவர்கள் கூட இருப்பது மாறவேண்டும் உண்மையாக விசாரிக்கப்பட  வேண்டும். ஓரினை சேர்கை என்பது எதனால் இயற்கைக்கு எதிரானது என்றும் விளக்கி புரிய வைக்க வேண்டியதும் சபையின் கடமையே.


மேலும் ஓரின சேர்க்கையால் பாதிப்படைந்த இதில் அடிமையானவர்களை சமூகத்துடம் பேச வைக்க வேண்டும். அல்லாது பரிசுத்தம் என்று கூறி பொய் முகம் காட்டும்  சபையால் மக்களுக்கு சரியான தீர்வு கொடுக்க இயலாது அது வெறும் சட்டங்களும் மிரட்டல்களுமாகவே இருக்கும். 

சில ஓரின சேர்க்கையாளர்கள் கருத்துப்படி தொடர்ந்து விடுதியில் தங்கும் சூழல், தொடர்ச்சியான ஒரே நபருடனான் நட்பு, குடும்பம், போன்ற சமூக அமைப்பே காரணமாவதாக கூறுகின்றனர். மேலும் சிலர் ஹார்மோன் குறைபாடு என்றும் கூறினர். 

தீர்வு நிச்சயமாக சபையின் உபவாசத்தில் இருந்து அல்ல இந்த சமூக பிரச்ச்னையில் இருப்பவர்கள், மீண்ட்வர்களிடம் இருந்தே கிடைக்கும்.இவர்களை ஒருங்கிணைப்பது இவர்களை மதித்து சமூக மாற்றத்திற்க்கு முன்கொண்டு வருவது போன்ற  ஆக்கபூர்வமான ஒரு தளம் அமைத்து கொடுப்பதே தன் கடமையாக சபை செயல்பட வேண்டும். 

ஓரின சேர்க்கையாளர்களை இன்று பல நாடுகள் அங்கிகரித்து வருகின்றனர். மேலும் அமெரிக்க, இங்கிலாந்து ஏன் இஸ்ரயேல் நாட்டின் படையில் பணி செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு சமூக நோயா, அல்லது ஏதாவது ஒரு பழக்கத்தின் அடிமைத்தனமா என்று ஆக்கபூர்வமான கருத்துரையாடல்கள் மூலமாகவே இதன் தீர்வை எட்ட இயலும். இன்று அரசியல் தலைவர்களிலும் ஒரு குழுவினர் ஆதரவாகவும் மறுகுழுவினரர் எதிராகவும் கருத்து தெரிவிக்கின்றனர். சபை பாபம் புண்ணியம், ஆதாம் ஏவாள் போன்ற சின்னப்புள்ளை கதைகளை விடுத்து மக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய தகவலை தருவதே நலமாக இருக்கும்!சபையில் ஓரின சேர்க்கை!