header-photo

இரவில் குற்றாலம் !

நேற்றைய மாலை, மனுஷன் குருவி எல்லாம் வீட்டுக்கு அடையும் நேரம் நாங்கள் குற்றாலம் நோக்கி பறந்தோம். மாலை நேரம் என்பதால் வியாபாரம் , அலுவலகம், பள்ளி முடிந்து செல்லும் மக்கள் பிரயளமே எங்கும்.  கோழி குஞ்சு விற்பனைக்காரர் ஒருவர் எங்கள் வாகனத்திற்க்கு வழி விடாது அலைபெசியிலும் கதைத்து கொண்டு 90 டிகிரி சரிந்து இருந்து கொண்டு வேகமாக போய் கொண்டிருக்கின்றார்.  பூச்செடி விற்பனைக்காரர் செடியும் கொடியுமாக இருட்டுடன் கலந்து  செல்கின்றார்.  எப்போதும் குற்றாலம் செல்வது பகல் என்பதால் இம்முறை இரவு குற்றாலம் அழகை பார்க்க ஆவலாக சென்று கொண்டிருந்தோம். காலை விடிவு போல் பல மனிதர்கள் வாழ்க்கைக்கு இரவும் விடிகின்றது .

பழைய குற்றாலம் சென்று விட முடிவெடுத்து போய் கொண்டிருந்தோம். நாங்கள் செல்லும் நேரம் குற்றாலம் மின் வெட்டு நேரம்! பழைய குற்றாலம் செல்லும் வழியோரம் எல்லாம் செடி கொடி மரங்கள் காற்றில் ஆடுகின்றது மட்டும் தெரிகின்றது. கொடும் இருட்டில், வேர் விழுதுகள்  ஆலமரத்தை நமக்கு அடையாளம் காட்டி கொடுக்கின்றது. பழைய குற்றாலம் உங்களை அன்புடன் வரவேற்க்கின்றது என்று ஒரு பெரிய வளைவு அலங்காரத்தால் வரவேற்க்கப்பட்டோம். அங்கு கட்டணம் பிரிக்க யாரும் இல்லை.  சரி.. லாபம் தான்  எண்ணி கொண்டு முன்னோக்கி கொடும் வனம் வழியாக சென்று கொண்டிருந்தோம் நாங்கள். எதிரிலோ பின்னுக்கோ எந்த வாகனவும் இல்லை.  ஆள் அரவவும் இல்லை.  என மனக்கண்ணில்  பயம் அப்பி கொள்ள; நெஞ்சு படபடக்க ஆரம்பித்து விட்டது. பேய் படத்தில் காணும் போல் காற்றின் சத்தம் மட்டுமே அங்கு எங்கும். ஆகா ….காட்டு யானை வந்தால் என்ன செய்வது, மரத்தில் இருந்து புலி பாய்ந்தால், கார் நின்று விட்டால்….  என்று எண்ணிய போதே இன்னும் பயம் கவ்வி கொண்டது.  மேல் பகுதிக்கு எட்டி விட்டோம்.  தினதந்தி செய்தி தாளுக்கு செய்தி கொடுத்த விளம்பரம்  தவிர பயணிகளை வரவேற்க ஒரு பெருச்சாளி மட்டும் தான் அங்கு இங்கும் சுற்றி கொண்டிருக்கின்றது. நன்றியுடன் நம்மை வழியனுப்பும் வழிப்பலகைக்கு ஒரு வணக்கம் செலுத்தி விட்டு காரை போன வேகத்தில் திருப்பி வேகமாக மெயின் குற்றாலம்  வந்து சேர்ந்து விட்டோம்.

இங்கு ஒரு நபர் ஓடி வந்து 40 ரூபாய் மட்டும் வசூலித்து செல்கின்றார்.  இன்னும் மின்சாரம் வரவில்லை. என்னவர்  கைகளை பற்றி கொண்டு இருட்டில் கண் இல்லாதவளாக நடந்து செல்கின்றேன். குற்றாலம் குளிர் காற்று அடித்தாலும் என்னவரிடம் அனல் கக்கும் கோபம் தான் வந்தது.  மனிதன் இந்த இருட்டில் அழைத்து வந்துள்ளாரே! தண்ணீர் இருக்குமா என்ற சந்தேகத்துடன் தட்டி தடுமாறி நடக்க ஆரம்பித்தோம். வழி நெடுகே இருக்கும் வியாபாரிகள் தான் தங்கள் கையில் வைத்திருக்கும் விளக்கை  நமக்கு வழி காட்டி உதவுகின்றனர்.  சுத்தம் என்றால் என்ன என்று  இயற்கையை பார்த்து வக்கணம் காட்டும் குற்றாலத்தில் இருட்டில் நடந்து சென்று அருவிக்கு வந்து சேர்ந்தோம்.

அங்கு மிதமான கூட்டத்துடன் மக்கள்  மிதமான தண்ணீரில் குளித்து கொண்டிருக்கின்றனர். பெண்கள் பக்கம் ஒரு அம்மா, மகள் தவிர குளிக்க ஆட்கள் இல்லை.  ஆண்கள் தான் அரசு ஆணை என்ன பெரிய கொக்கா? என்ற மிதப்பில் எண்ணை தேய்த்து சோப்பு போட்டு வருடத்திற்க்கு ஒரு முறை குளிப்பது போல் ஆக்ரோஷமாக குளித்து கொண்டிருந்தனர்.  ஒரு சில ஆண்கள் உடுத்த துணியை மாட்டை அடிப்பதை போல் அடித்து வெளுத்து கொண்டிருந்தனர்.  ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பெண்கள் தவிர்த்து ஆண்கள் குழந்தைகள் அருவியில் கும்மாளம் போட்டு கொண்டிருந்தனர். பெண்கள் குளித்து முடித்து வரும் குழந்தைகளுக்கு தலை துவற்றி விடுவது காதில் பட்ட தண்ணீரை ஊதி வெளியேற்றுவது, தங்கள் கணவர்கள் ஈர உடை மாற்ற உதவி செய்வது என பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருந்தனர். எங்கள் மகன்கள் ஆசை தீர குளித்து கொண்டிருக்கின்றனர்.   பெண்கள் பக்கம் சென்ற போது தான் பெர்லின் சுவர் போல் ஆண்களையும் பெண்களையும் பிரிக்கும் சுவரை கண்டேன். யாரோ சில ஆண்மகன்கள் செய்த சில்மிஷ குற்றத்திற்க்கு ஒரு வரலாற்று அடையாளமாக பிரிக்கப்பட்டுள்ளது குற்றாலம் அருவி!  மேல் ஏறி குதித்து கூட பெண்கள் பக்கம் வர இயலாது.  

இரவு 10 மணி ஆகி விட்டது. நேராக கேரளா எல்கை செங்கோட்டை சென்று விட்டோம். புரோட்டாவுக்கு பிரசித்தியான இடம்.  மக்கள் பிரோட்டா வாங்க உணவகங்களில் அலை மோதுகின்றனர்.  ரகுமத் என்ற கடையில் புரோட்டா மற்றும்  சிக்கன்-65 வாங்கி கொண்டோம்.  இந்த கடையில் குற்றாலம் சீசன் நேரம் தினம் 1 லட்சத்திற்க்கு விற்க்குமாம். முதலாளி எளிமையாக அழகான சிரிப்புடன் கல்லாவில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு தன் புன்சிரிப்பை தூவி கொண்டு கல்லா பெட்டியை நிரப்பி கொண்டிருக்கின்றார். 

நாங்கள் சென்ற போது அவர் கவனம் முழுக்க ஒரு இளம் ஜோடிகள் மேல் இருந்தது. இளம் பெண் உணர்ச்சி வசப்படு தன் முழு அன்பையும் செலுத்தி பையனின் தோளில் சாய்ந்தும் சாயாமலும் கலந்துரையாடி கொண்டிருக்கின்றார். பையன் தெளிவாக தன்னை யாரும் கவனிக்கின்றார்களா என்று நோட்டம் விட்டு கொண்டு பதிலுரைத்து கொண்டிருக்கின்றான்.  வேண்டா வெறுப்பாக கடைக்குள் வரும் மனைவிகள் புரோட்டா கோழிக்காலை ஒரு கட்டு கட்டுகின்றனர். உணவகத்திற்க்கு வெளியே வந்த போது காந்தி தாத்தா போல் இடுப்புக்கு மட்டும் உடையணிந்த மனிதன் தனக்கும் ஒரு சாப்பாடு கிடைக்காதா என நின்று கொண்டிருந்தான். உணவக சிப்பந்தி வேகமாக வந்து ஒரு கப் வெந்நீரை  ஊற்றி விட்டு சென்று விட்டான். கொதித்த தண்ணீர் பட்ட அந்த எளிய மனிதன் திட்டி கொண்டே தான் உடுத்தியிருந்த உடையால் துடைத்து கொண்டிருந்தான். சிலர் குடி போதையில் தள்ளாடி தள்ளாடி நடந்து போகின்றனர்.

வரும் வழியில் பழக்கடை கண்டோம். எசக்கி பாண்டியன் அண்ணாச்சி கடையில் மாம்பழம் வாங்கினோம். அண்ணாச்சி தன்னை ஒரு நிழல் படம் எடுக்க வேண்டி கொண்டார். இணையம் வழியாக உலகம் உங்களை பார்க்க போகின்றது என்ற போது ஆச்சரியத்தின் உச்சியில் இந்த படத்திற்க்கு போஸ் கொடுத்தார். நெல்லையில் 90 ரூபாய் விலையுள்ள பழம் 60 ரூபாய்க்கும் 50 ரூபாய்க்கு கிடைக்கும் அல்போன்ஸா வகை மாம்பழம் 30 ரூபாய்க்கும் கிடைக்கின்றது. பலாப்பழம் 140 ரூபாய் என்று சொல்கின்றார்.  எங்கள் பிள்ளைகள் குளித்த சுகத்தில் உண்ட மயக்கத்தில் தூங்கி விட்டனர்.


நெல்லை வந்து சேர்ந்து விட்டோம். அங்கு ஒரு பால் கவர் வாங்க இறங்கிய போது பல குடும்பங்கள் தெருவில் தூங்கி கொண்டிருக்கின்றனர். அதில் வேலை களைப்பில் பெற்றோர் ஆழ்ந்த துக்கத்தில் இருக்க 10 வயதுடைய மகன் கொசுக்கடியால் புரண்டு கொண்டிருந்தான்.  தூங்கி கொண்டிருந்த ஒரு மனிதன் கொசுக்கடியில் விழித்தெழ தூக்கம் வராது தன்னுடைய வேலையில் ஆழ்ந்து விட்டார். பகல் என்பது போலவே இரவும் சில மனிதர்களுக்கு ஒரு உலகம் தருகின்றது என எண்ணி கொண்டு ராப்பாடிகள் நாங்கள் எங்கள் வீடு வந்து நடுநிசி 1 மணிக்கு சேர்ந்தோம்.

5 comments:

Seeni said...

குற்றாலம்!

நான் அனுபவித்து குளித்த இடம்!
மறக்க முடியாத -கூடாத
இனிமையான நினைவுகள் அவை!

செங்கோட்டை புரோட்டா நினைத்தாலே-
எச்சில் ஊறும்...

உங்கள் அனுபவத்தை சொல்லியதுக்கும்-
என் நினைவை நினைக்க செய்ததுக்கும் மிக்க நன்றி!

Thambirajah Elangovan said...

நல்ல பயணம்..! அழகாகச் சொல்லியுள்ளீர்கள்...!

Subi Narendran said...

இரவில் குற்றாலம் உங்கள் எளிய எழுத்து நடையில் மிக அழகாக இருந்தது. அருவியை இரவில் பார்ப்பதென்பது ஒரு புது அனுபவம் போல் உள்ளது. வாழ்த்துக்கள். வித்தியாசமான பகிர்வுக்கு நன்றி ஜோஸ்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

வணக்கம் ஜோஸ்பின் அக்கா...

குற்றாலத்திற்கு என்னையும் தங்களுடன் அழைத்து சென்று விட்டீர்கள் உங்கள் இடுகையின் மூலம்...

Avargal Unmaigal said...

எங்க சொந்த ஊருக்கு போனதுமில்லாமல் அங்குள்ள புரோட்டவையும் சாப்பிட்டு அதை பற்றி எழுதி இருக்கிறிர்கள்.இப்ப புரோட்டாசாப்பிட ஆசை என்ன வாங்கி அனுப்புகிறிர்களா அல்லது ப்ளைட் டிக்கெட் வாங்கி அனுப்புகிறிர்களா தோழி

Post Comment

Post a Comment