header-photo

தள ஓடு- Weathering Tiles

களிமண்ணில் இருந்து சுட்டு எடுப்பது என்ற அர்த்தத்தில் வரும் பிரஞ்சு மொழி வார்த்தையில் இருந்து உருவானது ஆகும் டைல்ஸ்-ஓடு என்ற வார்த்தை!  அதன் பயன்பாடு கணக்கில் கொண்டு பல  வகையில் பிரிக்கலாம். ஓடுகளின் பயன்பாடு இன்று நேற்று துவங்கியது அல்ல. பி.ஸி 650 வருடங்களுக்கு முன்பே அப்போளா போன்ற கிரீஸ் கோவில்களில் ஓடுகள் பயண்படுத்திய சாற்றுகள் உள்ளன. சாக்கு மற்றும்  மரங்களை மேல்கூரையாக பயண்படுத்தி ஆதி மனிதர்கள்   தற்காப்பு கருதி ஓட்டு பயண்பாட்டுக்கு மாறினர். 

பணச் சிக்கனம் மட்டுமல்ல கடும் குளிரிலும் வெயிலிலும் மனிதர்கள் தாக்கப்படாது இருக்க உதவியது  என்றால் மிகையாகாது.  சிங்கள அரசர்களின் காலத்தில் தான் வழுவழுப்பான ஓடுகள் பிரபலமாகியதாகவும் அனுராதபுர கோயில்களில் இவை காணலாம் என்றும் வரலாறு சொல்கின்றது.  சூரியனின் கடும் சூட்டை உள்வாங்காது சிதறிவிடுவதே இதன் சிறப்பாகும். அதே போல் கடும் கூளிரிலும் இதமான காலநிலையில் வீட்டை வைப்பதிலும் ஓடுகளின் முக்கிய பங்கு உண்டு.

நெல்லையில், களிமண் பொருட்கள் சட்டி, பானை, ஓடுகளுக்கு பிரசித்தி பெற்ற இடமாகும் கூனியூர்.

களிமண்ணை ஒரு அறையில் இட்டு தண்ணீர் சேர்த்து பிசைந்து ஒரு இயந்திரத்தில் கொட்டுகின்றனர். இயந்திர உதவி கொண்டு மறுபடியும் பக்குவமாக பிசையபட்டு அடுத்த  இயந்திரத்தில் வந்து சேர ஒரு குறிப்பிட்ட அளவில்  சதுரமாக வெட்டி  நல்ல வெளிச்சம் வரும் அறைக்குள் வெயில் படாது நிழலில் காய வைக்கின்றனர். பின்பு காய்ந்த ஓட்டை சூளையில்(அடுப்பில்) வைத்து சுட்டு எடுக்க அழகிய ஓடு தயார் ஆகி விடுகின்றது. தரம் அனுசரித்து ஒரு ஓடுக்கு 8 ரூபாய் விலையில் இருந்து கிடைக்கப்படுன்றது.  வீட்டு மேல் தளத்தை அலங்கரிக்க தள ஓடு இன்றிமையாதது.கிராம மக்கள் தங்கள் ஊர் நிலபுலன்களை விட்டு  அன்னிய தேசத்திலும் ஊரிலும் அல்லல் படாமல் இருக்க இந்த மாதிரியான உள்ளூர் வேலைகள் உற்சாகப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். 


தொழிலாளிகள் கிடைக்காது முதலாளி சிரமப்பட தகுந்த ஊதியம் இல்லை என்று தொழிலாளியும் சொந்த ஊர் வேலையை விடும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.  மேலும் ஓடு சூளைக்கு  அரசினிடம் பெற வேண்டிய பிரத்தியேக அனுமதிக்கு 100 ரூபாய் கட்டணம் என்றால்  1000 ரூபாயாக வலுகட்டாயமாக பிடுங்கப்படுகின்றது.

வருடத்திக்கு 100 நாட்கள் வேலை திட்டத்தின் கீழ் பல மக்கள் கள்ள வேலையில் ஊதியம் பெற; உழைத்து மட்டுமே வாழுவேன் என்று பிடிவாதமாக உள்ளவர்கள் மட்டும் வேலைக்கு செல்லும் கிராம சூழலில் தற்போது தொழிலாளிகளின் பற்றாக்குறையும் பெரிய அச்சுறுத்தலாக எழுந்துள்ளது. 

தொழில் செய்ய இயலாத முதலாளிகளும் நல்ல விலைக்கும் தங்கள்  இடத்தை ரியல் எஸ்டேட் தொழிலுக்கு விட்டு விட  உள்ளூர் வேலை வாய்ப்பு என்பது எட்டா கனியாக மாறுகின்றது.  இதன் தொடர்ச்சியாக கிராமங்களில் வறுமை, குற்றம், எல்லாம் பெருகி வேலை இன்மையான சூழலும் உருவாகுகின்றது. இதை எல்லாம் மனதில் கொண்டு முதலாளியும்  தொழிலாளியும் ஒரே போல் தங்களை போல் மற்றவர்கள்  மேல் கரிசனை கொண்டு  கிராம சமூகத்தின் சிறந்த வாழ்க்கைக்கு வழி செய்ய வேண்டும். வேலைக்கு சம்பளம் கிடைக்காது  போது போராடுவது போலவே வேலை செய்யாது  ஊதியம் பெறும் இழிவு நிலையில் இருந்தும் மக்களை காப்பாற்ற கம்யூனிஸ்ட் போன்ற இடதுசாரி கட்சிகள் முன் வரவேண்டும்.
உள்ளூர் தொழிலாளியும் முதலாளியேயும் சண்டையிட வைத்து தங்கள் மக்களை  பன்னாட்டு முதலாளிக்கும்  விற்று; மக்களை நகர சூழலுக்கு தள்ளி வாழ்கையை நரகமாக்க கூடாது என்பது மட்டுமே நமது ஆவல்.
ஒற்றை மரம்!

ஆமா அப்படி தான் வளர்ந்தேன்.

சண்டைக்கு வரும் போது பெண்டாட்டி தான் கேட்பாள் " உங்க அம்மா எப்படி தான் வளர்த்துள்ளோ"! என்று.

யார் வளர்க்க..... நானா வளர்ந்தேன் என்று மனதில் நினைத்து கொள்வேன்.

அம்மாவுக்கு, பாட்டி ஊரில் இருந்து 600 கி.மீ தள்ளி கர்நாடகா மாநில காப்பி தோட்டத்தில் அதிகாரியாக  வேலை செய்யும் என் அப்பாவுடன் திருமணம்.  ஒரு நடுக்காடு. அம்மா வயல் மட்டும் பார்த்து வளந்தவ.  பாம்பு, காட்டு பன்றி காட்டுயானை, புள்ளிப்புலி  நடமாடும் கொடும் வனம். குலை நடுங்கும் குளிர். எப்போதும் பெய்யும் மழை!

நான் பிறந்து 2 வயது முடிந்ததும் பாட்டி வீட்டுல  விட்டு விட்டு போனா.  அப்போது தான் புது பெண்டாட்டியோடு வந்திருந்தார் சின்ன மாமா.  அத்தைக்கு கொஞ்சி விளையாடும் பொம்மையாக நான் வளர்ந்தேன். பக்கத்து வீட்டில் பெரிய மாமா, அத்தை மச்சான்கள் இருந்ததால் விளையாட பஞ்சம் இருக்காது. பெரிய அத்தைக்கும் எனக்கும் என்னமோ ஆகாது. அவ சொத்தை பிடுங்க வந்தது மாதிரி திட்டிகிட்டே இருப்பா. அம்மா வீட்டில் இருந்த போது அத்தையிடம் சண்டை போட்டதை சொல்லியே என்னை அடிப்பா.  சில நேரம்  "போடி கிறுக்கி" என்று சொல்லி விட்டு ஓடும் நான் அவள் அடியை பயந்து இரவு ஆனதும் தான் வீடு திரும்புவேன் .  வளர வளர மச்சான்களும் சண்டை பிடிக்க ஆரம்பிச்சிட்டானுக.  எடுத்து எல்லாம் குற்றம். "எங்க வீடு நீ போ" என்று திட்டுவது எனக்கு வெறுப்பாக இருந்தது.  எங்க அம்மா வளர்ந்த வீடு எனக்கும் சொந்தம் தான் என்ற ஆணவவும் எனக்கு இருந்தது. அவனுக விளையாட நான் முற்றத்தில் இருந்து பேசாம பார்த்து கொண்டே இருப்பேன். 


பாட்டியும் சொல்லிடுவாக மக்கா அவனுக கூட மல்லுக்கு நிக்காதட. உங்க அப்பன் அம்மை வரும் போது நல்ல படிச்சு மார்க்கு வாங்கி காட்டுன்னு. அதனாலே என் தோழர்கள் எல்லாம் எங்க பக்கத்து ஊர் முத்துகுமார், சம்பத்து, செந்தில்ன்னு இருந்தாக.

 தாத்தா இலங்கையில் கடை வைத்திருந்தவர்.  முதல் கலவரத்தில் ஊரு வந்து சேர்ந்தார். கையிலிருந்த காசை கொண்டு ஊரில் வீடு, நிலம் வாங்கி போட்டு விட்டு மதுரையில  கடை வத்திருக்கும் போது இறந்து விட்டார்.  அதன் பின் பாட்டி வயலில் இருந்து வரும் வருமானத்தில் என் மாமாக்கள் அம்மாவை வளர்த்துள்ளார். இப்போதும்  வீட்டிலே பசு மாடு வளர்த்தாக.  காலையில் பால் எடுத்து விற்று விட்டு பழைய சோறும் காணத் தொவயலும் எடுத்து கொண்டு வயலுக்கு போயிடுவாக. எனக்குள்ள உணவு உறியில் வீட்டில் தொங்கும்.  நானும் சில நாள்  வயலுக்கு போவேன். கூட்டாளிகளுடன் விளையாட ஒடன்காட்டுக்கு போவது தான் நேரம் போக்காக இருந்தது. கருவண்டை பிடித்து தீப்பெட்டியில் அடைத்து விளையாடுவோம். சில நாள் ஓணான் முட்டை பெறுக்கி வருவோம். அது உடையவே உடையாது. ரப்பர் பந்து மாதிரி துள்ளி துள்ளி வரும். சில நாள் ஆழ்வாத்திருநகரி குளத்தில் குளித்து விட்டு கோயில் மதில் சுவரில் பேச்சிமுத்து சம்பத்துடன் அரட்டை அடித்து கொண்டிருப்போம்.  பேச்சி முத்து பேச்சே காமடி கலாட்டா தான்.
நண்பர்களுடன் பொழுதை கழித்து வீட்டுக்கு போகவே மறந்திடுவேன். சில நாள் நான் ஊர் எல்கை எட்டும் போது பாட்டி என்னை தேடி நாசரேத் கோயில் பக்கம் நிப்பாக.  அடிக்கவோ திட்டவோ மாட்டாக ஏன் ராசா எங்க போனே எங்கல்லாம் தேடுவதாம் ....என்று கையை பிடித்து கூட்டி சென்று குளிப்பித்து சாப்பாடு தருவாக.

மாமா விடுமுறைக்கு வீட்டில் வருவது தான் கொண்டாட்டம். மாமா ஆந்திராவில் மிட்டாய் கடை வைத்திருந்தார்கள். வரும் போது தின் பண்டம் துணிமணி என்று மச்சானுகளுக்கு மாதிரியே எனக்கும் வாங்கி வருவார் . அன்று வரை  கஞ்சி, தொவையல் என்றிருக்கும் பாட்டி ஆடு, மீன் கோழி என ருசியான சமையலாக செய்து தருவார்.


ஒரு முறை மாமா பாட்டு பெட்டி வாங்கி வந்தார்கள். அதை வைத்து பாட்டு கேட்டு கொண்டிருக்க நானும் சென்று அவர்களுடன் பாட்டு கேட்டு கொண்டிருந்தேன். பாட்டு பெட்டி ஒலி வரும் பக்கம் கை வைத்து பார்த்த  போது மச்சான் கையை பிடித்து தள்ளி விட்டான். அன்று தான் மச்சான் மேல்  முதல் வெறுப்பு தோன்றியது.  அத்தைகாரி பார்த்து கொண்டே நின்றாள்  அவனை தடுக்கவில்லை. அவன் செய்தது தான் சரி என்பது போல் அவள் பார்வையும் இருந்தது. அம்மாவும் அவளும் வெங்கலபானைக்கு சண்டை பிடித்ததை இப்போதும் நினைவில் வைத்து கொண்டு அவ அம்மா மாதிரி தானே இருப்பான் என்றாள்.

பாட்டி மாலை தான் வயலில் இருந்து வருவாக. பாட்டி வந்ததும் மாட்டு தொழுவத்திலே போய் சாணம் வார மாட்டுக்கு தீனி கொடுக்க என்று இருப்பாக. பாட்டி என்ற ஒரே ஜீவன் தான் நான் பேசுவதை எல்லாம் ஆசையாய் கேட்டுது.  வேலை முடித்து பாட்டி வந்து சமையல் செய்து முடிக்கும் முன் நான் வீட்டு பாடம் எல்லாம் முடித்து விட்டு சாப்பிட ரெடியா இருப்பேன். அடுத்த வீட்டில் அத்தை மச்சான்கள் சிரித்து பேசி கொண்டிருக்க நாங்க இரண்டு பேரும் எங்க வீட்டில் இருந்து சாப்பிட்டு கொண்டு இருப்போம். கயிறு கட்டிலில் என்னை தூங்க சொல்லிட்டு வாசலில் இருந்து பக்கத்து வீட்டு லில்லி சித்தி, ஆறுமுகநேரி கிரேஸ் பாட்டி கூட பேசிக்கிட்டு இருப்பாங்க.

வடக்குத்தெரு ஜோசப் பெரியப்பாவும் எஸ்டேட்டில தான் வேலை பார்த்தாங்க. பெரியப்பா பிள்ளைகள் புனிதா அக்கா, சகாயம் அக்கா, அவக அண்ணன் மோசஸும் எங்க காம்பவுண்டு வீட்டில தான் இருந்தாங்க. எனக்கு புனிதா அக்கா தான் பிடிக்கும். அவ தான் நான் திக்கி திக்கி பேசுவதை கிண்டல் அடிக்க மாட்டா. எனக்கும் மோசஸுக்கும் சண்டை நடப்பதால்  பெரியம்மா தான் விடுமுறைக்கு வரும் போது திட்டுவாக. எலே நீ எப்பிள்ளைட்ட சண்ட போடுவீயோ? வாலை நறுக்கிருவேன்ன்னு பயம்முறுத்துவாக.


 கிறுஸ்துமஸ் என்னக்கி வரும் பாட்டின்னு... பாட்டிட்டே கேட்டிட்டே இருந்தேன். பாட்டி ...... எலே எத்தனை தடவை தான் சொல்லிறது. அந்த கலண்டர பாரு. இன்னும் இருக்குடா 20 நாட்கள். பொறுடான்னு சொல்லிட்டே இருந்தாக.

இந்த முறை எங்க  வீட்டிற்க்கு புதுசா பிறந்த தம்பியையும் கொண்டு வாராகளாம். அப்பா, அம்மா தம்பி  22 தியதி வருவாகன்னு கடிதாசி வந்துதுன்னு கிரேஸி பாட்டிட்டே சொல்வதை போன வாரமே கேட்டேன். பாட்டிக்கு அம்மா விடுமுறைக்கு வீட்டுக்கு வருவதை நினைத்து சந்தோஷ பட்டாலும் பெரிய அத்தை கூட சண்டை இடுவதை நினைத்து கவலைப் பட்டுகிட்டே இருந்தாக.

அம்மா ஊரில் இருந்து வருவதால் காலையிலே பாட்டி மீன் வாங்க சந்தைக்கு போய்டாக.  நான் வாசலில் இருந்து பார்த்து கொண்டே இருந்தேன். தூரத்தில அம்மா இடுபில தம்பியும் அப்பா கையிலே பெட்டியுமா வந்து சேர்ந்தாக. 

அப்பா எப்போதும் போல்  இடி முழக்க சத்ததில எப்படிடா நல்லா படிக்கியா முதல் இடம் உனக்கு தானேன்னு? என்று கேட்டு விட்டு குளிக்க துண்டையும் எடுத்திட்டு குளத்திற்க்கு போய் விட்டார். பக்கத்து வீட்டு மோகன் மாமா சம்பத்தை தூக்குவது போல என்னையும் தூக்கி காத்தாடி போல சுத்த மாட்டாரா, தோளில் வைத்து கொண்டு குளத்திற்க்கு அழைத்து போக மாட்டாரா என்று ஆசையாக இருந்தது. கேட்கவும் பயமாக இருந்தது. முகத்தை பார்த்தேன். அப்பா என்னை பார்கவே இல்லை.  விரு விருன்னு நடந்து போய் கிட்டு  இருந்தார்.

குட்டி தம்பியை எட்டி பார்த்தேன். குண்டு குண்டா அழகா இருந்தான். என்னை பார்த்து சின்ன பல் காட்டி சிரித்தான். அம்மா உள்ளே போனதும்;  நான் ஓடி போய் அவனை தூக்க அவன் துள்ளி குதிக்க அவனும் நானும் சேர்ந்து கீழை விழுந்து விட்டோம். அம்மா ஓடி வந்து கோபமாக  சனியனே கூறு கெட்ட நாயே என்று விறுகு கட்டயாலே  அடி அடின்னு அடிச்சா.

அந்த நேரம் பார்த்து பாட்டி வந்ததாலே தப்பிச்சேன்.  எலே வந்ததும் வராதுமா ஏலே பிள்ளையை போட்டு  அடிக்கன்னே என்னை  மறைத்து பிடித்து  விட்டார்கள்.  சேலை முந்தனையால் என் கண்ணை துடச்சு விட்ட  பாட்டி கைக்குள்ளாக இருந்து இப்போது என் தம்பியை திரும்பி பார்த்தேன் . அப்பவும்  அவன் என்னை பார்த்து சிரித்து கொண்டிருந்தான். ஆனால் நான் சிரிக்கல,  அப்போது முதல்  அவன்  முதல் எதிரியா தெரிஞ்சான் எனக்கு.

வீட்டுக்கு வெளியில் இருந்து அழுது கொண்டே இருந்தேன். குசினியில்  அம்மாவும்  பாட்டியும் பேசி கொண்டிருந்தார்கள். பாட்டி தம்பியை எடுத்து மடியில் போட்டு என் ராசா, என் தங்கமுன்னு  கொஞ்சி கிட்டு இருந்தாக.

 மச்சான் அடித்ததை விட அத்தைக்காரி அடித்தை விட அம்மா அடிச்சது முதல் முறையாக வலித்தது.
 வீட்டுக்கு வெளியே வந்தேன் என் சைக்கிளை எடுத்து கொண்டு இனி இந்த வீட்டு பக்கம் வரவே கூடாது என்று எண்ணி கொண்டு திரும்பி பார்க்காமே வேகமா மிதிச்சு போய்கிட்டே இருந்தேன். என் சைக்கிள்  வயல், வாய்க்கால்,  பனங்காட்டு வழியே  போய் கொண்டே இருந்தது! 

வழக்கு எண் 18/9.

Vazhakku Enn 18 9 Review சமீப நாட்களாக வந்த  தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த படத்தை பார்த்த ஒரு திருப்தி தந்த படம் "வழக்கு எண் 18/9".  சினிமா என்பது ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். அப்பணியை இப்படம் சிறப்பாக செய்துள்ளது. இந்த படம் வழியாக தற்கால சூழல்களை மிகத் தெளிவாக ஆணித்தரமாக விளக்கியுளார்.  தற்போது தமிழக மக்கள் ரியல் எஸ்டேட் மற்றும்  கல்வி வியாபாரம் என்ற சுழியில் சிக்கி உள்ளதை   சினிமா என்ற ஊடகம் வழியாக அழுத்தமாக பதிவு செய்யப்படுள்ளதும் போற்றப்பட வேண்டியது.  ஏழைகள் வாழ்வு, பணக்காரர்களின் சுகம், தேவைக்கு என அல்லல்ப்படுவதை இயக்குனர் பாலாஜி சக்தி வேல் ஒரு சினிமா போன்று அல்லாது ஒரு சரித்திர உண்மை  போன்றே எடுத்துள்ளார்.
முன் பின் தெரியாதவனுடன் தன் பெற்றோர் அறிவுறுத்தலும் மீறி பழகும்  இளம் பெண்  கொடியவனிடம் மாட்டுவதும் இதனால் அவள் வீட்டு வேலை உதவி செய்யும் ஏழைப்பெண் பாதிக்கப்படுவதுமே கதை! மற்றும் தொலை பேசி என்ற மாபெரும் கண்டுபிடிப்பை இளம் தலை முறை எவ்வளவு கேவலமாக பயன்படுத்துகின்றது என்று பார்வையாளர்கள் கேள்வி கேட்காத அளவிற்க்கு நேர்மையாக  படமாக்கியுள்ளார்.  பெற்றவர்கள் வேலை, பிரோமோஷன் என்று குழந்தைகள் கவனிப்பை வேலையாட்களிடமும் தனிமையிலும் தள்ளி விடுவது வழியாக விளக்கின் ஒளியின் விழும் விட்டில் பூச்சுகளாக மாற்றுவதை அழகாக படம் பிடித்து காண்பிக்கபட்டுள்ளது.  மேலும் நிதானமாக  தீர்வு காண வேண்டிய இடத்தில் பெற்றோரின் அதி கோபம் மகளைகளிடம் கொடியவனையும் நல்லவனாக அடையாளப்படுத்துவதையும் காணலாம். 

ஏழைகள் கொள்ளும் தூய காதலும், நட்பும்;  தங்கள் நலன் பேணாமல் தான் நேசிப்பவர்களின் நலம் மட்டுமே காணும் இயல்பான அவர்கள் குணத்தை எடுத்து காட்டியுள்ளனர் இப்படம் ஊடாக. கேடுகெட்ட பணக்கார மாணவன் கூட ஒழுக்க இன்மையான ஒரு தாயின் நீட்சியான குணமாகவே காட்டப்பட்டுள்ளது.  இது இன்றைய சமூகத்தில் ஒரு உண்மையான அவல நிலையும் கூட.  பணம் சேர்க்க என்று கீழ்த்தரமான வாழ்கை நடத்தி கொண்டு இருக்கும் பெற்றவர்களை கண்டு வளரும் குழந்தைகள் எவ்வாறு சமூகத்தின் குற்றங்களின் ஆணிவேராக மாறுகின்றனர் என்று கண்கூடா காண்கின்றோம் பல வேளைகளில்.

நீதியின் காவலர்களான காவல்த்துறை பணக்காரர்களின் சேவகர்களாக மாறுவதும்  உண்மையை பொய்யாகவும்; ஒரு மனிதனுடைய ஏழ்மையை பயன்படுத்தி குற்றவாளியாக மாற்றுகின்றதும் துயரான உண்மைகள்.
படம் முடியும் போது காவலர் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டது எண்ணி மனம் ஆறுதல் கொண்டாலும் உண்மையில் இப்படி ஒன்றும் நடக்காது! பல நிரபராதிகள் ஜெயில் கம்பிக்குள் வாழ்கை முடக்கப்படுவதும் நிஜ குற்றவாளிகள் சமூகத்தை ஆளுமை செய்யும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளுமாக மாறுவதுமே நிஜத்தில் உள்ளது.

சமூக சிந்தனை தரும் கதை, திரைக்கதை, வசனம் என்று விருவிருப்பாக நகத்தியுள்ளார் இயக்குனர். பின்னணி இசை தான் பல இடங்களில் இடம் பொருள் அற்று ஒலிக்க செய்வதாக காண முடிகின்றது. இப்படம் பெரியவர்கள் என்பதை விட விடலைப்பருவ மாணவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இன்றைய திரைப்பட ரசனையில் மூழ்கியிருக்கும் மாணவர்கள் இந்த படத்தை கண்டிருப்பார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இப்படத்தை காண உற்சாகப்படுத்த வேண்டும் என்பது காலச் சிறந்தது.

இப்படத்தில்  நடித்துளவர்களும்   உயிரோட்டமான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். காவலர் அதிகாரியாக நடித்தவர் நடிப்பை புகழ்ந்த அளவு இதில் கதாநாயகனாக நடித்த இளைஞன் அவன் நண்பனாக வரும் சிறுவனின் நடிப்பு பாராட்டப்பட்டதா என்பதில் நிச்சயமில்லை. 
போலிஸ் துறை இப்படத்திற்க்கு கண்டனம் தெரிவிக்க ஏன் முன் வரவில்லை! இந்த படத்தின் கதை தங்களின் தற்போதைய நிலவரவும் ஒன்று தான் என்று ஏற்று கொண்டுள்ளனரா?

 ஏழைகள் என்றால் தமிழன் முகவும் பணக்காரகளுக்கு தமிழன் அடையாளம் அற்று வேற்று மாநில சாயல்கொண்ட நடிகர்களை ஏன் இயக்குனர் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது மட்டுமே மனதில் எழும் நெருடலான ஒரு கேள்வி!

இரவில் குற்றாலம் !

நேற்றைய மாலை, மனுஷன் குருவி எல்லாம் வீட்டுக்கு அடையும் நேரம் நாங்கள் குற்றாலம் நோக்கி பறந்தோம். மாலை நேரம் என்பதால் வியாபாரம் , அலுவலகம், பள்ளி முடிந்து செல்லும் மக்கள் பிரயளமே எங்கும்.  கோழி குஞ்சு விற்பனைக்காரர் ஒருவர் எங்கள் வாகனத்திற்க்கு வழி விடாது அலைபெசியிலும் கதைத்து கொண்டு 90 டிகிரி சரிந்து இருந்து கொண்டு வேகமாக போய் கொண்டிருக்கின்றார்.  பூச்செடி விற்பனைக்காரர் செடியும் கொடியுமாக இருட்டுடன் கலந்து  செல்கின்றார்.  எப்போதும் குற்றாலம் செல்வது பகல் என்பதால் இம்முறை இரவு குற்றாலம் அழகை பார்க்க ஆவலாக சென்று கொண்டிருந்தோம். காலை விடிவு போல் பல மனிதர்கள் வாழ்க்கைக்கு இரவும் விடிகின்றது .

பழைய குற்றாலம் சென்று விட முடிவெடுத்து போய் கொண்டிருந்தோம். நாங்கள் செல்லும் நேரம் குற்றாலம் மின் வெட்டு நேரம்! பழைய குற்றாலம் செல்லும் வழியோரம் எல்லாம் செடி கொடி மரங்கள் காற்றில் ஆடுகின்றது மட்டும் தெரிகின்றது. கொடும் இருட்டில், வேர் விழுதுகள்  ஆலமரத்தை நமக்கு அடையாளம் காட்டி கொடுக்கின்றது. பழைய குற்றாலம் உங்களை அன்புடன் வரவேற்க்கின்றது என்று ஒரு பெரிய வளைவு அலங்காரத்தால் வரவேற்க்கப்பட்டோம். அங்கு கட்டணம் பிரிக்க யாரும் இல்லை.  சரி.. லாபம் தான்  எண்ணி கொண்டு முன்னோக்கி கொடும் வனம் வழியாக சென்று கொண்டிருந்தோம் நாங்கள். எதிரிலோ பின்னுக்கோ எந்த வாகனவும் இல்லை.  ஆள் அரவவும் இல்லை.  என மனக்கண்ணில்  பயம் அப்பி கொள்ள; நெஞ்சு படபடக்க ஆரம்பித்து விட்டது. பேய் படத்தில் காணும் போல் காற்றின் சத்தம் மட்டுமே அங்கு எங்கும். ஆகா ….காட்டு யானை வந்தால் என்ன செய்வது, மரத்தில் இருந்து புலி பாய்ந்தால், கார் நின்று விட்டால்….  என்று எண்ணிய போதே இன்னும் பயம் கவ்வி கொண்டது.  மேல் பகுதிக்கு எட்டி விட்டோம்.  தினதந்தி செய்தி தாளுக்கு செய்தி கொடுத்த விளம்பரம்  தவிர பயணிகளை வரவேற்க ஒரு பெருச்சாளி மட்டும் தான் அங்கு இங்கும் சுற்றி கொண்டிருக்கின்றது. நன்றியுடன் நம்மை வழியனுப்பும் வழிப்பலகைக்கு ஒரு வணக்கம் செலுத்தி விட்டு காரை போன வேகத்தில் திருப்பி வேகமாக மெயின் குற்றாலம்  வந்து சேர்ந்து விட்டோம்.

இங்கு ஒரு நபர் ஓடி வந்து 40 ரூபாய் மட்டும் வசூலித்து செல்கின்றார்.  இன்னும் மின்சாரம் வரவில்லை. என்னவர்  கைகளை பற்றி கொண்டு இருட்டில் கண் இல்லாதவளாக நடந்து செல்கின்றேன். குற்றாலம் குளிர் காற்று அடித்தாலும் என்னவரிடம் அனல் கக்கும் கோபம் தான் வந்தது.  மனிதன் இந்த இருட்டில் அழைத்து வந்துள்ளாரே! தண்ணீர் இருக்குமா என்ற சந்தேகத்துடன் தட்டி தடுமாறி நடக்க ஆரம்பித்தோம். வழி நெடுகே இருக்கும் வியாபாரிகள் தான் தங்கள் கையில் வைத்திருக்கும் விளக்கை  நமக்கு வழி காட்டி உதவுகின்றனர்.  சுத்தம் என்றால் என்ன என்று  இயற்கையை பார்த்து வக்கணம் காட்டும் குற்றாலத்தில் இருட்டில் நடந்து சென்று அருவிக்கு வந்து சேர்ந்தோம்.

அங்கு மிதமான கூட்டத்துடன் மக்கள்  மிதமான தண்ணீரில் குளித்து கொண்டிருக்கின்றனர். பெண்கள் பக்கம் ஒரு அம்மா, மகள் தவிர குளிக்க ஆட்கள் இல்லை.  ஆண்கள் தான் அரசு ஆணை என்ன பெரிய கொக்கா? என்ற மிதப்பில் எண்ணை தேய்த்து சோப்பு போட்டு வருடத்திற்க்கு ஒரு முறை குளிப்பது போல் ஆக்ரோஷமாக குளித்து கொண்டிருந்தனர்.  ஒரு சில ஆண்கள் உடுத்த துணியை மாட்டை அடிப்பதை போல் அடித்து வெளுத்து கொண்டிருந்தனர்.  ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பெண்கள் தவிர்த்து ஆண்கள் குழந்தைகள் அருவியில் கும்மாளம் போட்டு கொண்டிருந்தனர். பெண்கள் குளித்து முடித்து வரும் குழந்தைகளுக்கு தலை துவற்றி விடுவது காதில் பட்ட தண்ணீரை ஊதி வெளியேற்றுவது, தங்கள் கணவர்கள் ஈர உடை மாற்ற உதவி செய்வது என பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டிருந்தனர். எங்கள் மகன்கள் ஆசை தீர குளித்து கொண்டிருக்கின்றனர்.   பெண்கள் பக்கம் சென்ற போது தான் பெர்லின் சுவர் போல் ஆண்களையும் பெண்களையும் பிரிக்கும் சுவரை கண்டேன். யாரோ சில ஆண்மகன்கள் செய்த சில்மிஷ குற்றத்திற்க்கு ஒரு வரலாற்று அடையாளமாக பிரிக்கப்பட்டுள்ளது குற்றாலம் அருவி!  மேல் ஏறி குதித்து கூட பெண்கள் பக்கம் வர இயலாது.  

இரவு 10 மணி ஆகி விட்டது. நேராக கேரளா எல்கை செங்கோட்டை சென்று விட்டோம். புரோட்டாவுக்கு பிரசித்தியான இடம்.  மக்கள் பிரோட்டா வாங்க உணவகங்களில் அலை மோதுகின்றனர்.  ரகுமத் என்ற கடையில் புரோட்டா மற்றும்  சிக்கன்-65 வாங்கி கொண்டோம்.  இந்த கடையில் குற்றாலம் சீசன் நேரம் தினம் 1 லட்சத்திற்க்கு விற்க்குமாம். முதலாளி எளிமையாக அழகான சிரிப்புடன் கல்லாவில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு தன் புன்சிரிப்பை தூவி கொண்டு கல்லா பெட்டியை நிரப்பி கொண்டிருக்கின்றார். 

நாங்கள் சென்ற போது அவர் கவனம் முழுக்க ஒரு இளம் ஜோடிகள் மேல் இருந்தது. இளம் பெண் உணர்ச்சி வசப்படு தன் முழு அன்பையும் செலுத்தி பையனின் தோளில் சாய்ந்தும் சாயாமலும் கலந்துரையாடி கொண்டிருக்கின்றார். பையன் தெளிவாக தன்னை யாரும் கவனிக்கின்றார்களா என்று நோட்டம் விட்டு கொண்டு பதிலுரைத்து கொண்டிருக்கின்றான்.  வேண்டா வெறுப்பாக கடைக்குள் வரும் மனைவிகள் புரோட்டா கோழிக்காலை ஒரு கட்டு கட்டுகின்றனர். உணவகத்திற்க்கு வெளியே வந்த போது காந்தி தாத்தா போல் இடுப்புக்கு மட்டும் உடையணிந்த மனிதன் தனக்கும் ஒரு சாப்பாடு கிடைக்காதா என நின்று கொண்டிருந்தான். உணவக சிப்பந்தி வேகமாக வந்து ஒரு கப் வெந்நீரை  ஊற்றி விட்டு சென்று விட்டான். கொதித்த தண்ணீர் பட்ட அந்த எளிய மனிதன் திட்டி கொண்டே தான் உடுத்தியிருந்த உடையால் துடைத்து கொண்டிருந்தான். சிலர் குடி போதையில் தள்ளாடி தள்ளாடி நடந்து போகின்றனர்.

வரும் வழியில் பழக்கடை கண்டோம். எசக்கி பாண்டியன் அண்ணாச்சி கடையில் மாம்பழம் வாங்கினோம். அண்ணாச்சி தன்னை ஒரு நிழல் படம் எடுக்க வேண்டி கொண்டார். இணையம் வழியாக உலகம் உங்களை பார்க்க போகின்றது என்ற போது ஆச்சரியத்தின் உச்சியில் இந்த படத்திற்க்கு போஸ் கொடுத்தார். நெல்லையில் 90 ரூபாய் விலையுள்ள பழம் 60 ரூபாய்க்கும் 50 ரூபாய்க்கு கிடைக்கும் அல்போன்ஸா வகை மாம்பழம் 30 ரூபாய்க்கும் கிடைக்கின்றது. பலாப்பழம் 140 ரூபாய் என்று சொல்கின்றார்.  எங்கள் பிள்ளைகள் குளித்த சுகத்தில் உண்ட மயக்கத்தில் தூங்கி விட்டனர்.


நெல்லை வந்து சேர்ந்து விட்டோம். அங்கு ஒரு பால் கவர் வாங்க இறங்கிய போது பல குடும்பங்கள் தெருவில் தூங்கி கொண்டிருக்கின்றனர். அதில் வேலை களைப்பில் பெற்றோர் ஆழ்ந்த துக்கத்தில் இருக்க 10 வயதுடைய மகன் கொசுக்கடியால் புரண்டு கொண்டிருந்தான்.  தூங்கி கொண்டிருந்த ஒரு மனிதன் கொசுக்கடியில் விழித்தெழ தூக்கம் வராது தன்னுடைய வேலையில் ஆழ்ந்து விட்டார். பகல் என்பது போலவே இரவும் சில மனிதர்களுக்கு ஒரு உலகம் தருகின்றது என எண்ணி கொண்டு ராப்பாடிகள் நாங்கள் எங்கள் வீடு வந்து நடுநிசி 1 மணிக்கு சேர்ந்தோம்.