28 May 2012

ராஜ மாணிக்கம் மகளும் வாத்தியும்!

ராஜ மாணிக்கம் கடை எங்கள் பக்கத்து கடை!   வெள்ளை வெளேர் என்று வாயில் எப்போதும் வெற்றிலையும், எகத்தாள பார்வையுடன் ராஜா போன்ற தோரணையுடன் வலம்  வருபவர்.  முதல் மனைவியின் முதல் பிள்ளை தூக்க வந்த பெண்ணுக்கு; பிள்ளைக்கு ஒரு வயது ஆகும் முன்  ஒரு பிள்ளையை கொடுத்து  இரண்டாவது பெண்ணாட்டியாக்கி கொண்டார்.  முதல் மனைவி சாத்தான்குளத்திலும் சின்ன வீடு கேரளாவிலும் இருந்தது. கதையிலிருக்கும் கலவரம் ஒன்றும் ராஜமாணிக்கம் உடையிலோ நடையிலோ இருந்தது இல்லை. தன் பெயரில் 3 லாறி 2 கடை என ராஜபோகமாக வாழ்ந்தவருக்கு எஸ்டாட்டிலுள்ள பல ஏழை பெண்களும் துணையாகி இருந்தனர் என்பதும் ஊரறிந்த உண்மை . யாரையும் மதிக்காது கீழ்த்தரமாக திட்டுவதால் முன்னுக்கு கூளை கும்பிடு போடுவனும் முதுகுக்கு பின் திட்டி விட்டு செல்வான்.

 பல நாட்களும் அடுப்பில் சட்டியை வைத்ததும் தான் கடுகு பருப்பு வாங்கி வர கடைக்கு அனுப்புவார்அம்மா. கல்கண்டு கையூட்டாக வாங்கி கொண்டு நானும் சலிக்காது கடைக்கு போய் பொருட்கள் வாங்கி கொடுப்பேன். என் பலவீனம் கல்கண்டுவில் உண்டு என புரிந்து கொண்ட ராஜமாணிக்கம் மகன்; அதாலே என்னை மடக்க 8 அணாவுக்கு கல்கண்டு கேட்டால் 2 ரூபாய்க்கு கல்கண்டு தருவான்.  தரும் போது கையில் தொட்டு தருவான்.  இதை அம்மாவிடம் சொன்ன போது "பாவிபய அப்பனை போல் இருப்பான் போல" என்று திட்டி... பத்து கடை தள்ளியுள்ள பெருமாள் கடைக்கு போக சொல்லிட்டாக.

ராஜமாணிக்கம் மக கோகிலா என் வயசு பெண். அவளும் நானும் நட்பாகவே இருந்தோம். என்னை கண்டால் ஆசை ஆசையாக ஓடி வந்து கதைப்பாள். எங்க ஊரில் கையில் கொஞ்சம் பணம் உள்ளவர்கள், எஸ்டேட் அதிகாரிகள் பிள்ளைகள் ஆங்கில வழி கல்வியில் படிப்பித்தனர். அம்மா என்னமோ அடுத்த வீட்டுக்கு போற பிள்ளைகளுக்கு பேருக்கு கல்வி இருந்தா போதும் என   என்னை சமீபத்திலுள்ள அரசு பள்ளியில் சேர்த்து விட்டார்கள். 

படிக்கிற பிள்ளை எங்கையும் படிக்கும் என்று தற்பெருமையாக பேசி கொண்டார்கள். 

கோகிலா, வேல் நாடார் மக மல்லிகா அந்தோணி சார் மக சுபா இவர்களை எல்லாம் பார்க்கும் போது என்னை அறியாமல் பொறாமையும் ஆற்றாமையும் ஒருங்கே சேர்ந்து வரும். அவக நல்லா பேசினா கூட பவுசு காட்டினாகளோ என்று மனது ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு கொள்ளும். அவக பேசுத  ஆங்கில-தமிழை உன்னிப்பாக கவனித்து கேட்டு கொள்வேன்.

ஆறாம் வகுப்பு முடிந்ததும் கிளாடிஸ் டீச்சர் வீட்டு டூயூஷன் போவதை நிப்பாட்டிய அம்மா வெங்கட் வீட்டுக்கு டியூஷன் அனுப்பினார்கள். வெங்கட், தமிழகத்தில் ஏதோ பல்கலைகழகத்தில் தங்க பதக்கத்துடன் பட்டபடிப்பு முடித்தவராம். மேலும் ஐ.எ.எஸ் தேற்வுக்கும் வீட்டிலிருந்து படித்து கொண்டிருந்தார் அப்போது.  வீட்டில் ஆராய்ச்சிக்கு என்றே விதவிதமான செடி வளர்த்தனர்.  அவன் அம்மா கூட இந்து  பெண் கடவுள் போல் அழகாக இருந்தாங்க. அவர்கள் அணிந்திருந்த ஒத்த மூக்குத்தி இன்னும் அழகு சேர்த்தது  அவர்களுக்கு. தினம் பூஜை கோயில் என்றே போய் வந்தார்கள்.


அழகான மிடுக்கான தோற்றத்துடன் உள்ள வெங்கட் முதல் வகுப்பிலே ஒழுக்கம் பற்றி தான் சொல்லி கொடுத்தான்.  ஒரு அட்டைவனை தயாராக்கி வீட்டில் தெரியும் இடத்தில் ஒட்டி வைக்கவும் சொன்னான். எழும் நேரம் படிக்கும் நேரம் விளையாட்டு நேரம் தூங்கும் நேரம் என பிரித்து அட்டவணையும் தயார் செய்து தந்து விட்டிருந்தான். அம்மாவிடம் கொண்டு காட்டின போது மெச்சினார்கள்.

பாத்தியா ஒழுங்கான இடத்தில் சேர்த்து விட்டால் படிப்பு தானா வரும் பீஸ் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை இங்கயே 10 வகுப்பு வரை படிக்க சொன்னாக.

டுயூஷன் 6 மணிக்கு சென்று விட வேண்டும். ஒரு நிமிடம் தாமதம் என்றாலும் பிரம்பு அடி விழும்.  நான் ராஜமாணிக்கம் மகள், அவ இளைய தம்பி, என் தம்பி என நாங்கள் 6 பேர் படித்தோம். டுயூஷனுக்கு வருவர்களை எல்லாம் சேர்க்க இயலாது நான் பீஸுக்காக படிப்பிக்கவில்லை பெயர் வேணும். நல்லா படிக்கவில்லை என்றால் எங்களையும் டியூஷன் வகுப்பில் இருந்து விரட்டி விடுவேன் என்று மிரட்டி கொண்டே இருந்தான்.  நான் ஆங்கிலம், கணக்கு பாடம் படித்தேன். ஆங்கில வழி கல்வி என்பதால் தமிழ் வாசிக்க தெரியவில்லை என்று கோகிலா தமிழ் படித்தாள்.

முதலில் எனக்கு அப்புறம் கோகிலா தம்பிக்கு என அனைவருக்கும்  பாடம் எடுத்து விட்டு வீட்டு பாடம் செய் என்று தள்ளி உட்கார வைத்து விட்டு கோகிலாவுக்கு நிறைய நேரம் தமிழ் சொல்லி கொடுக்க ஆரம்பித்து விடுவான். அப்படி தான் ஒரு முறை லக்ஷ்மி தேவியை பற்றி சொல்லி கொடுக்கும் போது மாதாவை இகழ்ச்சியாக பேச நான் துடுக்காக மறு கேள்வி கேட்க கோபம் கொண்டவன் தொடையில் நாலஞ்சு பிரம்பு அடி தந்து விட்டான். அன்றிருந்தே டியூஷனே பிடிக்கவில்லை.  இதும் போதாது என்று என்னையும்  கோகிலா தம்பியும் தள்ளி இருந்து படிக்க வைத்து விட்டு அவளை தன் அருகில் அமர வைத்து தமிழ் பாடம் சொல்லி  கொடுக்க என அவன் கை அவள் இடை பக்கம் சுற்றி சுற்றி போய் கொண்டிருந்தது .சினுங்கல் சத்தம் கேட்டு நான் கண்டு கொள்ள ஏதோ புரிந்தது ஆனால் தெளிவாக விளங்க வில்லை.  கெட்ட இடத்திற்க்கு வாத்தியான் கை போவுதுன்னு மட்டும் விளங்கியது. வீட்டுக்கு வந்து அம்மாவிடம் வகுப்பில் நடந்ததை விவரிக்கவும் டியூஷனே வேணாம்மா சே... படித்தவன் பார்க்க எவ்வளவு பண்பா இருக்கான் அவனுக்குள்ளும் இப்படியும் சாத்தானா என்று  சலித்து கொண்டார்கள். இந்த பொட்டை புள்ளைக்கும் விவரமில்லையே என்று வெறுத்து பேசி டியூஷனே வேண்டாம் என நிப்பாட்டி விட்டார்கள். 

பின்பு பள்ளி படிப்பு உயர் கல்வி, கல்லூரி திருமணம் என வாழ்கை உருண்ட நிலையில் இதை பற்றியே மறந்து விட்டேன். சமீபம் அந்த வாத்தியார் அப்பா மற்றும் ஒரே தம்பி ஒரு விபத்தில் இறந்த நேரம் இந்த வாத்தியானும் நான்கு வருடம் முன்பே எய்ட்ஸ் என்ற நோயால் மரணித்து விட்டான் என்று கேள்வி பட்டது திகிலாக தான் இருந்தது. ராஜ மாணிக்கவும் ஒரு நோய்க்கு என தமிழகத்தில் ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்க  தனக்கு இருந்த திமிர் பேச்சால் மருத்துவரிடம் இடற; மருத்துவர் விஷ ஊசி போட்டு கொன்று விட்டார் என்று வதந்தி  பரவி இருந்தது எங்கள் ஊரில்.  ராஜ மாணிக்கம் மகளும் தந்தை இறந்த ஒரு வருடத்தில் 10 பகுப்பு தோற்ற கவலையில் இருந்து  மீள கடை வேலைக்கார பையனுடன் ஓடி போய் விட்டாள் என்பது எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கவில்லை!

4 comments:

  1. vinaiyai vithaiththavan-
    vinaiyai aruppaan!

    ReplyDelete
  2. Subi Narendran · Good Shepherd Convent KotehenaMay 29, 2012 3:10 am

    சுவாரசியமாகப் போய்க்கொண்டிருத்த கதை சோகமாக முடிந்து விட்டது. பணம் தந்த திமிரில் ஆடியவர்கள் ஆட்டம் அடங்கிய விதம் சோகம்தான். சிலவேளைகளில் கடவுள் தனது இருப்பை இப்படிக் காட்டுகிறார். இலகுவான நடையும், சரளமான தமிழும் நீங்கள் கதைக்கிறீர்கள் என்பதை உணரச் செய்கிறது. வாழ்த்துக்கள். நல்ல ஒரு பகிர்வுக்கு நன்றி தங்கையே.

    ReplyDelete
  3. மனிதன் எப்படியெல்லாம் நிலை பிறழ்கிறான் பாருங்கள்.

    ReplyDelete
  4. மனதைப் பிசையும் நடை. கரு.
    (50 பைசா அல்லது எட்டணா என்றிருக்க வேண்டுமோ?)

    ReplyDelete