28 May 2012

ராஜ மாணிக்கம் மகளும் வாத்தியும்!

ராஜ மாணிக்கம் கடை எங்கள் பக்கத்து கடை!   வெள்ளை வெளேர் என்று வாயில் எப்போதும் வெற்றிலையும், எகத்தாள பார்வையுடன் ராஜா போன்ற தோரணையுடன் வலம்  வருபவர்.  முதல் மனைவியின் முதல் பிள்ளை தூக்க வந்த பெண்ணுக்கு; பிள்ளைக்கு ஒரு வயது ஆகும் முன்  ஒரு பிள்ளையை கொடுத்து  இரண்டாவது பெண்ணாட்டியாக்கி கொண்டார்.  முதல் மனைவி சாத்தான்குளத்திலும் சின்ன வீடு கேரளாவிலும் இருந்தது. கதையிலிருக்கும் கலவரம் ஒன்றும் ராஜமாணிக்கம் உடையிலோ நடையிலோ இருந்தது இல்லை. தன் பெயரில் 3 லாறி 2 கடை என ராஜபோகமாக வாழ்ந்தவருக்கு எஸ்டாட்டிலுள்ள பல ஏழை பெண்களும் துணையாகி இருந்தனர் என்பதும் ஊரறிந்த உண்மை . யாரையும் மதிக்காது கீழ்த்தரமாக திட்டுவதால் முன்னுக்கு கூளை கும்பிடு போடுவனும் முதுகுக்கு பின் திட்டி விட்டு செல்வான்.

 பல நாட்களும் அடுப்பில் சட்டியை வைத்ததும் தான் கடுகு பருப்பு வாங்கி வர கடைக்கு அனுப்புவார்அம்மா. கல்கண்டு கையூட்டாக வாங்கி கொண்டு நானும் சலிக்காது கடைக்கு போய் பொருட்கள் வாங்கி கொடுப்பேன். என் பலவீனம் கல்கண்டுவில் உண்டு என புரிந்து கொண்ட ராஜமாணிக்கம் மகன்; அதாலே என்னை மடக்க 8 அணாவுக்கு கல்கண்டு கேட்டால் 2 ரூபாய்க்கு கல்கண்டு தருவான்.  தரும் போது கையில் தொட்டு தருவான்.  இதை அம்மாவிடம் சொன்ன போது "பாவிபய அப்பனை போல் இருப்பான் போல" என்று திட்டி... பத்து கடை தள்ளியுள்ள பெருமாள் கடைக்கு போக சொல்லிட்டாக.

ராஜமாணிக்கம் மக கோகிலா என் வயசு பெண். அவளும் நானும் நட்பாகவே இருந்தோம். என்னை கண்டால் ஆசை ஆசையாக ஓடி வந்து கதைப்பாள். எங்க ஊரில் கையில் கொஞ்சம் பணம் உள்ளவர்கள், எஸ்டேட் அதிகாரிகள் பிள்ளைகள் ஆங்கில வழி கல்வியில் படிப்பித்தனர். அம்மா என்னமோ அடுத்த வீட்டுக்கு போற பிள்ளைகளுக்கு பேருக்கு கல்வி இருந்தா போதும் என   என்னை சமீபத்திலுள்ள அரசு பள்ளியில் சேர்த்து விட்டார்கள். 

படிக்கிற பிள்ளை எங்கையும் படிக்கும் என்று தற்பெருமையாக பேசி கொண்டார்கள். 

கோகிலா, வேல் நாடார் மக மல்லிகா அந்தோணி சார் மக சுபா இவர்களை எல்லாம் பார்க்கும் போது என்னை அறியாமல் பொறாமையும் ஆற்றாமையும் ஒருங்கே சேர்ந்து வரும். அவக நல்லா பேசினா கூட பவுசு காட்டினாகளோ என்று மனது ஒன்றுக்கு இரண்டு முறை கேட்டு கொள்ளும். அவக பேசுத  ஆங்கில-தமிழை உன்னிப்பாக கவனித்து கேட்டு கொள்வேன்.

ஆறாம் வகுப்பு முடிந்ததும் கிளாடிஸ் டீச்சர் வீட்டு டூயூஷன் போவதை நிப்பாட்டிய அம்மா வெங்கட் வீட்டுக்கு டியூஷன் அனுப்பினார்கள். வெங்கட், தமிழகத்தில் ஏதோ பல்கலைகழகத்தில் தங்க பதக்கத்துடன் பட்டபடிப்பு முடித்தவராம். மேலும் ஐ.எ.எஸ் தேற்வுக்கும் வீட்டிலிருந்து படித்து கொண்டிருந்தார் அப்போது.  வீட்டில் ஆராய்ச்சிக்கு என்றே விதவிதமான செடி வளர்த்தனர்.  அவன் அம்மா கூட இந்து  பெண் கடவுள் போல் அழகாக இருந்தாங்க. அவர்கள் அணிந்திருந்த ஒத்த மூக்குத்தி இன்னும் அழகு சேர்த்தது  அவர்களுக்கு. தினம் பூஜை கோயில் என்றே போய் வந்தார்கள்.


அழகான மிடுக்கான தோற்றத்துடன் உள்ள வெங்கட் முதல் வகுப்பிலே ஒழுக்கம் பற்றி தான் சொல்லி கொடுத்தான்.  ஒரு அட்டைவனை தயாராக்கி வீட்டில் தெரியும் இடத்தில் ஒட்டி வைக்கவும் சொன்னான். எழும் நேரம் படிக்கும் நேரம் விளையாட்டு நேரம் தூங்கும் நேரம் என பிரித்து அட்டவணையும் தயார் செய்து தந்து விட்டிருந்தான். அம்மாவிடம் கொண்டு காட்டின போது மெச்சினார்கள்.

பாத்தியா ஒழுங்கான இடத்தில் சேர்த்து விட்டால் படிப்பு தானா வரும் பீஸ் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை இங்கயே 10 வகுப்பு வரை படிக்க சொன்னாக.

டுயூஷன் 6 மணிக்கு சென்று விட வேண்டும். ஒரு நிமிடம் தாமதம் என்றாலும் பிரம்பு அடி விழும்.  நான் ராஜமாணிக்கம் மகள், அவ இளைய தம்பி, என் தம்பி என நாங்கள் 6 பேர் படித்தோம். டுயூஷனுக்கு வருவர்களை எல்லாம் சேர்க்க இயலாது நான் பீஸுக்காக படிப்பிக்கவில்லை பெயர் வேணும். நல்லா படிக்கவில்லை என்றால் எங்களையும் டியூஷன் வகுப்பில் இருந்து விரட்டி விடுவேன் என்று மிரட்டி கொண்டே இருந்தான்.  நான் ஆங்கிலம், கணக்கு பாடம் படித்தேன். ஆங்கில வழி கல்வி என்பதால் தமிழ் வாசிக்க தெரியவில்லை என்று கோகிலா தமிழ் படித்தாள்.

முதலில் எனக்கு அப்புறம் கோகிலா தம்பிக்கு என அனைவருக்கும்  பாடம் எடுத்து விட்டு வீட்டு பாடம் செய் என்று தள்ளி உட்கார வைத்து விட்டு கோகிலாவுக்கு நிறைய நேரம் தமிழ் சொல்லி கொடுக்க ஆரம்பித்து விடுவான். அப்படி தான் ஒரு முறை லக்ஷ்மி தேவியை பற்றி சொல்லி கொடுக்கும் போது மாதாவை இகழ்ச்சியாக பேச நான் துடுக்காக மறு கேள்வி கேட்க கோபம் கொண்டவன் தொடையில் நாலஞ்சு பிரம்பு அடி தந்து விட்டான். அன்றிருந்தே டியூஷனே பிடிக்கவில்லை.  இதும் போதாது என்று என்னையும்  கோகிலா தம்பியும் தள்ளி இருந்து படிக்க வைத்து விட்டு அவளை தன் அருகில் அமர வைத்து தமிழ் பாடம் சொல்லி  கொடுக்க என அவன் கை அவள் இடை பக்கம் சுற்றி சுற்றி போய் கொண்டிருந்தது .சினுங்கல் சத்தம் கேட்டு நான் கண்டு கொள்ள ஏதோ புரிந்தது ஆனால் தெளிவாக விளங்க வில்லை.  கெட்ட இடத்திற்க்கு வாத்தியான் கை போவுதுன்னு மட்டும் விளங்கியது. வீட்டுக்கு வந்து அம்மாவிடம் வகுப்பில் நடந்ததை விவரிக்கவும் டியூஷனே வேணாம்மா சே... படித்தவன் பார்க்க எவ்வளவு பண்பா இருக்கான் அவனுக்குள்ளும் இப்படியும் சாத்தானா என்று  சலித்து கொண்டார்கள். இந்த பொட்டை புள்ளைக்கும் விவரமில்லையே என்று வெறுத்து பேசி டியூஷனே வேண்டாம் என நிப்பாட்டி விட்டார்கள். 

பின்பு பள்ளி படிப்பு உயர் கல்வி, கல்லூரி திருமணம் என வாழ்கை உருண்ட நிலையில் இதை பற்றியே மறந்து விட்டேன். சமீபம் அந்த வாத்தியார் அப்பா மற்றும் ஒரே தம்பி ஒரு விபத்தில் இறந்த நேரம் இந்த வாத்தியானும் நான்கு வருடம் முன்பே எய்ட்ஸ் என்ற நோயால் மரணித்து விட்டான் என்று கேள்வி பட்டது திகிலாக தான் இருந்தது. ராஜ மாணிக்கவும் ஒரு நோய்க்கு என தமிழகத்தில் ஒரு மருத்துவ மனையில் அனுமதிக்க  தனக்கு இருந்த திமிர் பேச்சால் மருத்துவரிடம் இடற; மருத்துவர் விஷ ஊசி போட்டு கொன்று விட்டார் என்று வதந்தி  பரவி இருந்தது எங்கள் ஊரில்.  ராஜ மாணிக்கம் மகளும் தந்தை இறந்த ஒரு வருடத்தில் 10 பகுப்பு தோற்ற கவலையில் இருந்து  மீள கடை வேலைக்கார பையனுடன் ஓடி போய் விட்டாள் என்பது எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கவில்லை!

26 May 2012

நெல்லையை மிரட்டும் டெங்கு!

பெண் கொசுவில் இருந்து பரவும் ஆடெஸ் ஆஜிபிற்றி (aedes aegypti) என்ற  வைரசால் டெங்கு காய்ச்சல் பரவுகின்றது.  அதிகாலை மற்றும் சூரிய அஸ்ட்தமனம் முன்னுமே இக்கொசுக்கள் மகக்களை கடிக்கின்றது.   இந்த வைரஸ் ஒரு மனிதனில்  2-7 நாட்களுக்குள் மனிதனை தாக்கி விடுகின்றது. பின்பு இந்நோய் தாக்கிய மனிதன்  டங்கு காய்ச்சல் பரவும் ஒரு கருவியாகி விடுகின்றான். இந்த காய்ச்சலை பற்றிய அறிவு 1907 வாக்கில் வந்திருந்தாலும் இதுவரையிலும் தடுப்பு ஊசியோ தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் மருத்துவ  வரலாற்றில் கறுப்பு பக்கக்களே.. இது ஒரு பெரும் உலகலாவிய பிரச்சனையாக இரண்டாம் உலகப்போருக்கு பின் கண்டு பிடிக்கப்பட்டது. நகரமயமாக்கல், மக்கள் பெருக்கம், பூமி வெப்பமயமாகுதலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவ காரணமாகின்றது. 1960-2010 காலயளவுக்குள் 30 மடங்கு டெங்கு காய்ச்சல் பரவியதாக சொல்லப்படுகின்றது.

டெங்கு என்ற வார்த்தை ஸ்பானிஷ் என்ற மொழியில் இருந்து வந்திருந்தாலும் உலகம் முழுதும் உள்ள  40 % மக்கள்  இந்நோயின் அச்சுறுத்தலில் வாழ்கின்றனர்.   வருடம் 2.5% குழந்தைகள் இறந்து போகின்றனர்.

தற்போது தமிழகம் டெங்கு காய்ச்சல் பிடியில் மாட்டியுள்ளது. டெங்கு காய்ச்சலால் 1466 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 40 க்கு மேற்ப்பட்டோர் இந்நோயால் இறந்தும் போய் விட்டனர் என்பது துயரே. ஆனால் தமிழகத்தின் ஆட்சியாளர்கள் சட்டசபை மேஜையில் கொட்டுவதையும் தட்டுவதையும் விட்டு விட்டு ஆக்கபூர்வமான செயலாக்கத்தில் இறங்கியது போல் தெரியவில்லை. மத்திய குழுவை வரவழைத்துள்ளனர். மாநில சுகாதார நல அமைச்சர்கள் எங்கு உள்ளார்கள் என தெரியவில்லை.

நெல்லையில் தெருவெங்கும் வீட்டுமுன் கானுகள் அமைத்து அங்கு துர்நீர் கட்டி கிடக்கும் சூழலே உள்ளது. மேலைப்பாளயன் , பேட்டை பக்கம் செல்ல  இயலாதளவு துர் நாற்றம், அசுத்தம். நயினார் வேய்ந்தான் குளங்கள் திறந்த வெளி கழிப்பிடம் ஆகி விட்டது. நகராட்சி என்ற ஒன்று உயிருடன் உண்டா என்று தெரிந்து கொள்வதே தெருவுக்கு தெரு குழுவாக் நின்று புகைப்படம் எடுப்பதை கண்டு தான். வீட்டு சுற்று புறத்தை தூய்மையாக பேண கற்ரு கொடுக்கும் அரசு அலுவலங்கள் பின்பக்கம் சுற்றுப்புறம் பன்றிகள் இருப்பிடமாக் உள்ளது.  நகரத்தை போர்கால அடிப்படையில் சுத்தப்படுத்தாது புகைப்படம் எடுப்பது எதற்க்க்கு என்றுதான் தெரியவில்லை.

 தண்ணீரை தேங்கமலும் கொசுக்கடி படாமலும் இருப்பது ஒன்று மட்டுமே டெங்குகாச்சலில் இருந்து தப்பிக்கும் ஒரே வழி. காச்சல் வந்தத்ம் நேரம்  தாமதியாது இரத்தம் பரசோதனை மூலம் கண்டறிந்து மருத்துவ சேவை பெற வேண்டும். கவனிக்காது விட்டால் நுரையீரல், வயிறு, சிறுநீர்ப்பாதை என பல இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகி விடும்.ஆரஞ்சுப்பழச்சாறு, இளநீர் குடிப்பது வழியாக நீர் சத்தை தக்கவைத்து கொள்ள முடியும்.  முக்கியமாக மக்கள் கொசுக்கடி படாமல் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

நெல்லை மதுரை என்று தமிழகம் முழுதும் பரவும் முன் அரசு விழித்தெழுந்து மக்களை காப்பாற்ற முன்வர வேண்டும் . அரசியல்வாதிகள் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்தால் இன்னும் விழிப்புணர்வு கிட்டுமோ?.

20 May 2012

பள்ளிகளின் பகல் கொள்ளை!

பகல் கொள்ளை என்று கேள்வி தான் பட்டிருந்தேன். இப்போது நேரடியாக அனுபவிப்பதாகவே உள்ளது.   இந்த வருட  பள்ளி கட்டணம் செலுத்த சென்றால் நிர்வாகம் அறிவித்த தொகை பெரும் இடியாக் இருந்தது.  தலை சுற்றாது இருக்க நத்தை போல் ஓடும் காற்றாடி எந்திரத்தின் அருகில் நின்றால் பணம் பெறும் அலுவலக பெண் ஏதோஅரசு அதிகாரி போல் 'வரிசையில் நில்லுங்கள்' என கட்டளை இடுகின்றாள். 

எனக்கு முன் நிற்கும் பெரியவர் 12 வகுப்பு  படிக்க இருக்கும் தன் பேரனுக்கு 50 ஆயிரம் ரூபாய் கட்டை மஞ்சை பையில் இருந்து எடுத்து கொடுக்கின்றார்.  எம் மகனுக்கு துவக்க கட்டணமாக ரூபாய் 17,765 செலுத்த கட்டளை இடப்படுகின்றோம்.  நமக்கும் கிடைக்கும் ரசீதில் ரூபாய் 4065 குறிக்கப்பட்டுள்ளது.  இது எல்லாம் சட்ட பூர்வமான தற்காப்பு என நமக்கு விளங்குகின்றது. இருந்தாலும் ஒன்றும் தெரியாத அபலை போல் முகத்தை வைத்து கொண்டு "நீங்கள் வாங்கிய தொகைக்கு ரசீது தரவில்லை" என்றதும் கூட்டம் மயான அமைதியாக நிற்க்கின்றது.  பணம் பெறுபவரும் எந்த முக பாவவும் அற்று 'வருகை அட்டையில் பதித்து தருவோம்'  என்று சொல்கின்றார். இந்த கொள்ளை எல்லாம் போதாது என்று வருடா வருடம்  சீருடையை  மாற்றி அதிலும் லாபம் பார்த்து விடுகின்றனர்.  இனி குழந்தை பத்திரமாக பள்ளி சென்று வீடு சென்று திரும்பி வர.பள்ளி வாகன- கட்டணம் செலுத்த வேண்டும். 


கல்வி தேவியில் காலடியில்  நிற்பதற்க்கான எந்த உணர்வும் மனதில் எழவில்லை.  பள்ளி அலுவலக அறையில் கூட சரஸ்வதி தேவியை ஆட்சி அம்மாவின் அடுத்த படியாக தான் தொங்க விட்டுள்ளனர்.  நம் பிள்ளைகளுக்கு ஊழலில் முதல் பாடம் கற்று கொடுக்கும் இடமாகவே படுகின்றது இன்றைய பள்ளிகள். பள்ளி தாயாளரும் ஒரு வியாபாரியாகவே நம்மை கடந்து செல்கின்றார். குழந்தைகள் விரிந்த விழிகளுடன் பெற்றோர் கட்டும் பணத்தை பார்த்து கொண்டே நிற்கின்றனர். இவர்கள் மனதில் கூட அப்பா விதைத்தை பணத்தை முடிந்த அளவு விரைவாக அறுவடை செய்ய வேண்டும் என்று தோன்றியிருக்க கூடும்.

கல்வி சேவையை வியாபாரமாக மாற்றும் சமூக அமைப்பை, சமூக சூழலை, அவல நிலையை  நினைத்து நொந்து கொள்வதை தவிற வழி இல்லை.

19 May 2012

முகத்திரை கிழிந்த ஷாருக்கான்!

அமெரிக்கா விமான நிலையததில் அமெரிக்க காவல் அதிகாரிகள்   2 மணி நேரம் காக்க வைத்து பரிசோதனை செய்தனர் என்று அமெரிக்காவிற்க்கு எதிராக இந்திய பத்திரிகை உலகம் மட்டுமல்ல பல அரசியல் வாதிகளும் குரல் கொடுத்தனர்.  ஏழைகளுக்கு உணவு உத்திரவாதம் அளிக்க மறுத்த சரத் பவார் கூட ஷாருக்கானுக்காக குரல் கொடுத்தார்.




 
இந்தியாவில் சாதாரண  மக்கள் ரேஷன் கடை வாசலிலும் அரசு அலுவலங்கள் முன்னும் பெண்கள் குடி தண்ணீருக்கு என  குழா அடியில்  நாள் கணக்காக  காத்து கிடக்கும் அவலம் நாம் கண்கூடா காண்கின்றோம். இவர்கள் மேல் சாதாரண மக்கள் என்ற காரணத்தால் கரிசனை கொள்ளாத இந்திய சமூகம் அமெரிக்காவின் பாரபட்சமற்ற காவல் முறையை குறை கூறினர்.   அமெரிக்க வெளியுறவு தூதரை அழைத்து தங்கள் வருத்ததை தெரிவித்தது. இந்தியாவின் ஒட்டு மொத்த முகமே ஷாருக்கான் போன்று காட்டி கொண்டனர்.

ஆனால் ஷாருக்கான் பற்றிய சமீபத்திய செய்திகள்  இவரின் பொய் முகத் திரையை    தெளிவுப்படுத்தி கொண்டே இருக்கின்றது.  விருந்து வேளையில் நண்பரை அடித்தது மட்டுமல்ல, விளையாட்டு மைதானத்தில் புகைபிடித்து நீதிமற்றம் ஏறினவர் இவர். தற்போது குடித்து விட்டு ஆடுகளத்தில் புகுந்து ரகளையில் ஏற்படுத்தியது மட்டுமல்லாது  காவலர்களையும் தரக்குறைவாக  திட்டி ரகளையில் ஏற்பட்டுள்ளார். இவரை தண்டித்திருப்பதையும் குறை கூறியுள்ளனர் அதிகார ஜீவிகள். இதில் மமதா பானர்ஜி "ஜனநாயக தன்மையற்ற தண்டனை" என்று கூறியிருப்பது நகைப்பை தான் வரவழைக்கின்றது. தன்னை கேலி சித்திரம் வரைந்தார் என்ற ஒரே காரணத்திற்க்காக தன் ஆதரவாளர்களை கொண்டு  வரைந்த பல்கலைகழக பேராசிரியரை விரட்டி விரட்டியடித்தவர் இந்த மமதா பானார்ஜி. மக்களின் கருத்து சுதந்திரத்தை மறந்து பல அறிக்கைகள் வெளியிட்டவர்.

ஷாருக்கான் ஒரு நடிகர், மக்கள் ஆதரவு பெற்ற நடிகர், கொல்கத்தாவின் அதிகார பூர்வமான மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து கொண்டு கேவலம் தெரு பொறுக்கி போல் நடந்து கொண்டது சரியா? குடித்து விட்டு பொதுவிடத்தில் வந்ததே தவறு மேலும்  அரசு அதிகாரிகளை கேவலமாக திட்டியுள்ளார். இவர்களை போன்ற கெட்ட உதாரணங்களான நடிகர்களுக்கு  கடினமான தண்டனை வழங்குவதே சரியாக இருக்கும்.  பணவும் புகழும் இருந்தால் எதையும் செல்லாம் என்ற அகங்காரமே இதன் விளைநிலம்.

சட்டம் என்பது எல்லோர்ருக்கும் பொதுவாக இல்லாது ஆளாளுக்கு மாறுவதும், நியாயங்கள் நியாயமற்றவர்கள் உரைக்கும் போதும் சட்டம் வெறும் பறக்கும் பட்டமாக மாறுகின்றது என்றால அதுவே உண்மை.

15 May 2012

ஜாதி கணக்கெடுப்பு என்ற அரசியல் படையெடுப்பு!!


ஜாதி கணக்கெடுப்புக் குழு இன்று எங்கள் வீடு வந்து சேன்றனர். ஒரு சீனியர் 3 ஜூனியர்கள் என ஒரு கூட்டமாக வந்து தகவல் பெற்று செல்கின்றனர்.  கடந்த வருடங்களிலும் இதே போன்றே ஜாதி தகவல்கள் திரட்டி சென்றிருந்தனர். நான் என் ஜாதி சொல்ல விரும்பவில்லை என்றது "எந்த ஜாதியிலும் சேராதவர்கள் பட்டியலில்"  சேர்த்து விடுவார்களாம்.  ஜாதி சொல்ல விருப்பம் இல்லாதவர்கள் என்ற பட்டியல் இல்லையாம்.  என்னிடம் தகவல்கள் பெற்று விட்டனர் என்று  சிறு ஸ்டிக்கரை அடையாளமாக ஒட்டி சென்றனர். 

கடந்த வருடம் கேட்ட அதே  கேள்விகள் ஜாதி என்ன? டிவி, கார், கம்யூட்டர், துணி துவைக்கும் இயந்திரம் இருக்கின்றதா என்ற கேள்விகள் இருந்தனை.  ஒன்றும் இல்லை என்று சொல்லி உள்ளேன். இரு சக்கர வாகனம் மிதிவண்டி பற்றி கேள்விகள் இல்லை! இந்த கேள்விகளில் ஒன்றிலும் மனித நலனோ அக்கரையோ குறைந்த பட்சம் தன்மான உணர்வோ உள்ளதாக தெரியவில்லை. கார் வைத்திருப்பதை வைத்து நம் வசதியை அளக்க இயலுமா? பலர் வீடுகளில் இன்று கார் உண்டு   சிலர் வீட்டில் ஐயா அலுவலகம் செல்ல ஒரு கார்  அம்மா காய்கறி மார்கெட்டு செல்ல இன்னும் ஒன்று, இளம் மகன் ஊர் சுற்ற மற்றொரு கார் என்றிருக்கும். அந்தஸ்தை கருதி பல வீடுகளில் மாதத் தவணைக்கும் வாங்கி வைத்துள்ளனர். எங்கள் பக்கத்து வீட்டில் சாப்பாட்டு செலவையும் விட கார் -தவணை (மாதம் 15 ஆயிரம்)கட்டுகின்றனர். தொழில் நிமித்தமாக அலங்காரம் என்பதை விட அவர்கள் அவசிய தேவை ஆகின்றது கார்.

துணி துவைக்கும் இயந்திரம் கூட வசதியை நிர்ணயிக்குமா என்பது தான் நகைப்பிற்க்குறிய இன்னொரு கேள்வி! இன்று தவணை முறையில் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் பொருட்களுக்கு அளவே இல்லை பல வீடுகளில். வீடு சுத்தம் செய்ய மின் துடப்பம் கூட வாங்கி வைத்துள்ளனர். ஒரு  வீட்டில் குளிர் சாதன பெட்டியை தண்ணீர் ஊற்றி துடப்பம் வைத்து அடித்து சுத்தப்படுத்தியது நினைவுக்கு வருகின்றது. அடுத்த கேள்விக்கு வருவோம்: வீடு கட்டி 20 வருடம் வரை  வீட்டு பத்திரம் வங்கியில் இருப்பதால், சொந்த வீடா என்ற கேள்விக்கு எளிதாக பதில் பதில் சொல்லவே இயலாது.

சரி இதெல்லாம் இருக்கு என்றால் அரசின் சாதனையா அல்லது இல்லை என்றால்  மக்களுக்கு உடன் பெற்று தந்து  விடுவார்களா? சமூக நலன் சார்ந்த கேள்வி என்றால் வீட்டு வாடகை, வீட்டில் சாராயம்/பிராந்தி குடிக்கும் நபர்கள், நோயாளிகள், படிக்கும் நபர்கள், இருக்கும் கடன்,  வரவு செலவு இவை பற்றி வினவ வேண்டாமா? தமிழகத்தை பொறுத்த வரை அவனவன் புத்திக்கு தகுந்து உழைத்து பிழைக்கின்றனர் சிலர் அடுத்தவர்களை ஏமாற்றி வாழ்கின்றனர்.

கணக்கெடுப்பு என்று எத்தனை முறை தான் வருவார்கள். தேர்தல் நேரம், மக்கள் தொகை கணக்கெடுப்பு, மலிவுக்கடை, ஆதார், பான் கார்டு, வாகன லைசன்ஸ் என எத்தனை கணக்கெடுப்புகள். ஒரு தலைக்கு இத்தனை ரூபாய் என்று பெறப்படுவதால் கணக்கு எடுக்க ஆள் பஞ்சம் இருக்காது. கடந்த முறை கணக்கெடுக்க சமூக சேவை போல் ஒரு பெண் வந்து சென்றார்.

அரசு நியமிக்கும் பணியாளர்களே ஜாதி கேட்பது அசிங்கமாக உள்ளது. நீங்க என்ன ஆளு என்ற கேள்வி, பொது ஜன மத்தியில் மலிவு கேள்வி ஆகி விட்டது. எங்க தெருவில் கூட ஜாதி பார்த்து நட்பு வைத்திருப்பார்கள். சில ஜாதி நபர்கள் நம்மிடம் நேரில் வந்து "எங்க ஆளுங்க ரொம்ப பொல்லாதவங்க" என்று சொல்லி விட்டு செல்வார்கள். ஆத்திர அவசரத்திற்க்கு சொந்த ஜாதி ஜனங்கள் விட மனித நேயமுள்ள மனிதர்கள் தான் உதவுவார்கள். ஜாதி கொண்டு ஒரு மனிதனையும் பெரியவன் என்றோ சிறியவன் என்றோ அளக்க முடியாது, செயல் மட்டுமே ஒருவனை யார் என்று நிர்ணயிக்கும் ஆதாரம்.

கேரளாவில் ஸ்ரீ நாரயண குருவின் வாழ்க்கை போராட்டமே "ஜாதி கேட்காதே ஜாதி சொல்லாதே, ஜாதி எதுவாக இருந்தாலும் மனிதன் நல்லவனாக இருந்தால் போதும் என்பதாகவே இருந்தது. ஜாதி சொல்வதால் என்ன பலன். நம் அரசு ஜாதி நிர்ணயித்திருக்கும்  முறை கூட கேலிக்குறியது. கலப்பு திருமணம் செய்தவர்கள் தங்களுக்கு பிடித்த- தேவையான ஒரு ஜாதியை தங்கள் பிள்ளைகளுக்கு என பதிந்து கொள்ளலாம். எங்கள் ஆசிரியர் ஒருவர் கலப்பு திருமணம் செய்தவர். ஆசிரியர், சமூகம் சொல்லி வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவரும் அவர் காதல் மனைவி நடுநிலை ஜாதியை சேர்ந்தவரும் ஆவார்.  பிள்ளைகள் படித்து முடிக்கும் வரையிலும்  தாழ்ந்த ஜாதி என பதிவிட்டு அரசு நலன்களை பெற்ற பின்பு பிள்ளைகள் படித்து ஒரு நிலைக்கு வந்ததும் தங்கள் ஜாதியையே ம்றுதலித்து விட்டனர்.  சமூக அந்தஸ்தை கருதி நட்பு வைப்பதோ இன்னொரு ஜாதி நபர்களூடன்.


 ஒரு வீட்டில் ஒரு முதியவருக்கு 3 ஜாதியில்  மனைவி, துணைவிகள் என்றிருந்தால் முதியவர் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஜாதியாக தான் இருக்கும். இது எல்லாம் எப்படி கணக்கெடுப்பில் பதிகின்றார்கள் என்பதே புதிர்! ஜாதி மனிதனை பிரித்து ஆளுகின்றது என்பதை காண்கின்றோம். நான் படித்த கல்வி நிலையத்தில் பொது மின் நூலகம் போக  ஆதிதிராவிட மாணவர்களுக்கு என்றே தனியாக  இன்னொரு நூலகம் இருந்தது. இது மாணவர்களை மாணவப்பருவத்திலே பிரித்து கலவரம் பொறாமை வன்மத்தை வளர்க்கின்றது.

சமீபத்தில் எனக்கு ஒரு கட்டுரை அனுப்பபட்டிருந்தது. அந்த நபர் குறிப்பிட்ட ஜாதியின் வரலாற்றை ஆய்வு செய்து கட்டுரை எழுதியிருந்தார். ஆனால் மற்று ஜாதிகளை பற்றி குறிப்பிடும் போது காழ்புணர்ச்சியுடன் சில வார்த்தைகளில் குறிப்பிட்டிருந்தார். நம் ஜாதி வரலாறு  பற்றி தெரிவது நம் தன் நம்பிக்கையை வளர்க்கும் செயலே.  அதுவே மற்று ஜாதி மனிதர்களையும் மதிக்கும் நேசிக்கும் உபாதியாக இருக்க வேண்டும்.

   ஜாதி என்ற கூடாரத்தில் மனிதர்களை சிறைப்படுத்த நினைக்கும் அரசியல் மறைய வேண்டும்.  தன் ஜாதி நலன் என கொடி பிடிப்பவர்கள் கூட கலங்கிய நீரில் மீன் பிடித்து விட்டு மறைந்து விடுகின்றனர். இது ஒரு சமூக அவலம் என்று விழிப்புணர்வு வர வேண்டும். ஜாதி என்ற பெயரில் கிடைக்கும் நலன்களை  விட நமக்கு மகிழ்ச்சி அளிப்பது நம் உழைப்பால் கிடைக்கும் வெகுமதியில் தான்.

12 May 2012

பூஞார்/பூவார்(Poovar) - இயற்கை சுற்றுலா


நாகர்கோயில் சென்ற நாங்கள் திடீர் பயணமாக  பூழியூர்(பூவார்) சென்றிருந்தோம்.   நாகர்கோயில் வழியாக கேரளா எல்கை களியாக்காவிளை தாண்டியதும் திருவனந்தபுரம் செல்லும் வழியில்  பூவார்(Poovar) வந்து விடுகின்றது.  ரோட்டில் இருந்து இறங்கி காயலை நோக்கி நடந்து செல்ல வேண்டும்  56 கிமீ நீளமுள்ள  நெய்யூர் நதி காயலுடன் கை கோர்த்து அரபிக்கடலில் கலக்கும் அழகிய இடம்  இது.

 மர வியாபாரத்திற்கு புகழ் பெற்ற இடமாகும். வழியெங்கும்  மரச்சாமான்கள் செய்யும் கடைகள் காணலாம். 1500 வருடம் முன்பு  இஸ்லாமியர்கள் குடியேறி வசிக்கும் பகுதி என்பது இன்னொரு சிறப்பாகும்.  திருவனந்தபுரத்தின் இருந்து 30 கிமீ தள்ளி தெக்கு மூலையில் அமைந்துள்ள பூவாரில் , கண்ணில் இடம் எல்லாம்  சிறிதும்  பெரிதுமாக கேரளா தேசிய மரமான தென்னை  மர அணிவகுப்பு தான். இந்த நீர் நிலை உள்ளிலும் தென்னை மரமாகத் தான் உள்ளது.   சுற்றுலா தேவைக்கு என பல ஆயிரம் தென்னை மரங்கள் வெட்டியுள்ளனர்.

செல்லும் வழியெங்கும் வீடு இருப்பதால் மக்கள் குளித்து கொண்டும் சிறுவர்கள் தண்ணீரில் பந்து   விளையாடிக் கொண்டும் நேரம் போக்குவதை  காணலாம்.  இன்னும் சில வயதான மனிதர்கள் நம்மூரில் மரத்தடியில் தூங்குவது போல் வள்ளத்தில் தூங்குகின்றனர்.  ஒரு மனிதர்  பாக்கை  கையால் உடைத்து மென்று கொண்டிருந்தார். இன்னும் சிலர் பொழுது போக்காக மீன் பிடித்து கொண்டிருந்தன்ர்.

மழைக்காடுகள் என்று அழைக்கும் மரங்கள் கூட்டத்திற்க்குள்ளாக அழைத்து சென்றார். வீடுகள் கரையில் உள்ளதால் வீட்டு கழிவு மீன் கழுவும் நீர் என சில இடங்களில் துர்நாற்றமாக தான் உள்ளது. ஆனால் நம் தலையை தொடும் செடி கொடிகள் ஊடாக படகில் பயணிப்பது ஒரு சுகமான அனுபவமே. வழியெங்கும் பெரிய பழ மரங்களில் காணப்ட்டது. என்ன வகை காய் என்ற போது இது விஷக்காய் சாப்பிட்டால் இறந்து விடுவோம் என்ற போது இது தான் இயற்கையின் சோதனையோ என்று தோன்றியது. கைக்கு எட்டியது  வாய்க்கு எட்வில்லை என்று சொல்வார்களே அது போல! 


படகு மெதுவாக நெய்யார் ஆறு வழியாக கடலை செற்றடைந்தது. அருமையான அழகு சொக்கவைக்கும் கடல். உணவு விடுதிகள், அருகில் இல்லை என்பதால் சுத்தமாக காணப்பட்டது. நாங்கள் சென்ற  தினம் அங்கு படம் பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.  மலையாளம் அல்லது தமிழ்ப்படம் அல்ல என்று மட்டும் தெரிந்தது. காதலர்கள் ஓடி வந்து கட்டிபிடிக்கும் காட்சியை எடுத்து கொண்டிருந்தனர். நடிப்பை சொல்லி கொடுக்கும் பெண் ரொம்ப ஆவேசமாக நடித்து காட்டி கொண்டிருந்தார். நாயகி அறுக்க கொண்டு போன ஆடு போல் நடித்து கொண்டிருந்தார். எங்கள் மகன்கள்  படகில் இருந்து இறங்கி சென்று கடல் அருகை சென்று அழகை ரசித்து வந்தனர்.  ஒரு பக்கம் நதியின் கொஞ்சும் நெருக்கத்தை உள் வாங்கும் கரை மறுபக்கம் கடல் அலையின் ஆக்கோராஷமான அடியை ஏற்று  வாங்கும்  காட்சி ஆச்சரியவும் அழகும் சேர்ந்து இருந்து.  இது  வாழ்க்கை தத்துவவும் கற்று தருகின்றது.  கரையில் இறங்கலாம் என்ற போது ஜட்டி மட்டும் அணிந்து குடிவெறியுடன் ஆட்டம் போடும்  இளம் கெட்ட கேரளா காளைகளை கண்டதும் அங்கு நிறைய நேரம் நிற்க மனம் இல்லாது படகை திருப்ப சொல்லி விட்டார் என்னவர். 

மறுபடியும் மழைக்காடுகள் ஆறு காயல் வழியாக வந்து கொண்டிருந்தோம். கேரளாவின் பக்தியும் கலை உணர்வும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து நம்மை மெய் மறக்க செய்தது.  அழகாக காட்சி தரும் சிற்பங்கள், மிதக்கும் உணவகம், மிதக்கும் வீடு அழகிய சுற்றலா மாளிகைகள் காணும் இடமெல்லாம் தண்ணீர், தண்ணீருக்கு சுவர் என்பது போல் தென்னை மரம் என அழகை வர்ணிக்க கவிஞராக தான் பிறக்க வேண்டும். 20-30 அடி ஆழம் உள்ளதாக படகோட்டி கூறினார். ஒரு உயிர் கவசம் மட்டும்தான் தந்திருந்தனர்.  தேக்கடி நிகழ்வுகள் தெரிந்த படியால் பயமாக தான் இருந்தது. இருப்பினும் மக்கள் சுற்றுமுற்றும் இருப்பதை கண்ட போது தைரியத்தை வரவழைத்து கொண்டேன். எங்கள் இளைய மகன் அந்த உயிர் கவசத்தை அணிந்து கொண்டு தண்ணீரில் நீந்தி வரவா என்று எங்களை சோதனைக்கு உள்ளாக்கி கொண்டிருந்தான்.

திரும்பி வருகையில் இரும்பு, மரப் பாலங்களை அழகாக கட்டி கொண்டிருப்பதை கண்டோம்.  அதுவும்  ஒரு அழகாக தான் உள்ளது.

.இந்த காயலை சுற்றி வீடுகளாக உள்ளது. சிலர் சுற்றுலா பயணிகளை கண் வைத்து பெரிய பெரிய மாளிகைகள் கட்டி விட்டுள்ளனர். கேரளா ஆயுர்வேத மாளிகைகள் உள்ளது. பயணிகள் தங்க என மிதக்கும் குடிலுகள் அழகிய வீடுகள் உள்ளன.  நாங்கள் இவை எல்லாம் படகில் செல்லும்  போது   படகோட்டியிடம் பார்த்தும், கேட்டும் தெரிந்து கொண்டோம். அங்கு சென்று தங்கவேண்டும் என்றால் "பல்லுள்ளவன் தான் பட்டாணி சாப்பிட இயலும்" என்ற பழமொழியை எண்ணி சிரித்து கொள்ள வேண்டியது தான் .  6 பேர் பயணிக்கும் படகு சவாரிக்கு நம்மிடம் 750 ரூபாய் வசூலிக்கின்றனர்.  நாங்கள் பயனித்த படகு கைரளி என்ற நிறுவனத்தினுடையது. இதே போல் இந்த காயலோரமெங்கும் பல படகு நிறுவனங்கள் உண்டு. படகு ஓட்டும் நபர்கள் ஏழைகளாக தான் காட்சி தருகின்றனர். ஊதியம் கிடைப்பதாக சொன்னாலும் எவ்வளவு என்று சொல்ல எங்கள் படகோட்டியின் தன்மானம் விட்டு தரவில்லை. சிறந்த பன்பான, அமைதியான பழக்கவழக்கத்துடன்   நம் முகம் கோணாது சிறு புன்சிரிப்புடன் மென்மையான குரலில் நாம் கேட்கும் சந்தேகத்திற்க்கு பதில் தருகின்றார் படகோட்டி!.



ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. இறங்கும் நேரம் வந்து விட்டது. படகோட்டிக்கு அன்பளிப்பாக 25 ரூபாய் கொடுத்தால் வேண்டாம் என்று வாங்க மறுத்து விட்டார் நாங்கள் வற்புறுத்தவே வாங்கி கொண்டார்.  பாஞ்சாலக்குறிச்சியில் 10 ரூபாய் கேட்டு வாங்குவது தான் அப்போது நினைவிற்கு வந்தது. நம் எல்கைக்கு அருகிலுள்ள இந்த காயலில்  மாலை வரை செலவழித்து விட்டு திருவனந்த புரம் திரும்பினோம்.

எங்கள் இளைய மகன் தன்னை தண்ணீரில் விளையாட அனுமதிக்கவில்லை என்று கொதிக்கும் எண்ணையில் இட்ட வடை  போல் கோப கனலுடன் வந்து கொண்டிருந்தான்! உணவு வாங்கி கொடுத்து ஒரு சமரசம் செய்து விடலாம் என எத்தனித்து ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்றோம். மகனிடம் கோபம் தனிக்க மலையாள மொழியில் இனிமையாக பேசி கொண்டிருந்தார் உணவக பணியாளர். அப்போது உணவகத்தில் 'கோ' படத்திலுள்ள "என்னமோ ஏதோ என்ற"........தமிழ் சினிமா பாடல்கள் ஒலித்து கொண்டிருந்தது. ஒரு ஆப்பம் கடலைக் குழம்புடன்  6 ரூபாய்க்கு கிடைக்கின்றது. மகன்களுக்கு நம்ம ஊர் கொத்து பிரோட்டா தான் வேண்டும் என பிடிவாதமாக இருந்தனர். 75 ரூபாயாக இருந்தாலும் சுவையாகத்தான் இருந்தது. ஆனால் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு கைகழுகும் சில  நபர்கள் கக்குவது போல் துப்புவது தான் நாம் உண்டதும் வெளியில் வரும் போல் அருவருப்பாக இருந்தது.

மழையும் வந்து விட்டது. இனி நம் நெல்லையை நோக்கி பயணிக்க வேண்டியது தான்.   இப்படியாக இந்த வருடவும் கேரளா தலைநகரிடம் விடைபெற்று நெல்லை சீமை வந்தடைந்தோம் நடுநிசியில்!

9 May 2012

பல்கலைகழக வீழ்ச்சியும் மாணவ சமூகவும்!

நாம் படித்த, வேலை செய்யும் பள்ளி, கல்லூரி, பல்கலைகழங்கள் மேல்  உணர்வு பூர்வமான ஒரு தொடர்பு நமக்கு எப்போதும் உண்டு. பயணங்களில் நாம் செல்லும்  போது நாம் படித்த பள்ளி கல்லூரியை ஒரு முறையேனும் திரும்பி பார்க்காது இருப்பது இல்லை, பெருமையாக மற்றவர்களிடம் சொல்லுவது மட்டுமல்ல நமக்கு ஒரு மதிப்பு தரக்கூடியதும் நம் தன்நம்பிக்கைக்கு உறுதுணையாக இருப்பதும் ஆகும். நம் குடும்ப உறவினர்கள் போல் நம் சொந்த வீடு போல் நம் நண்பர்கள் போல் நாம் படித்த கல்வி நிலையங்களுடன் ஒரு அழியாத உணர்வு பூர்வமான பந்தம் நம்மை ஆட் கொள்கின்றது. 

ஆனால் சமீபத்திய பத்திரிக்கை செய்தி வழியாக தினம் ஒரு கெட்ட  செய்தி என கல்வி நிலையங்கள் பற்றி  வருகின்றது. பாலியல் துன்புறவு என மனோன்மணியம் பல்கலைகழகம் வந்தால், மாணவர் தற்கொலை என அண்ணா பல்கலைகழகம் இடம் பிடித்துள்ளது.  எல்லாம் போதாது என்று இன்று வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் மேல் ஊழல் புகார்!

இது எல்லாம் பொய் புகார் என்றால் ஏன் மெத்தை படித்தவர்களால் சட்ட உதவி கொண்டு நேர் கொள்ள இயலவில்லை.   படித்தவர்கள் எல்லா வித அடிமைத்தனத்தில் இருந்தும் கல்வியால்  விடுதலை பெற்றவர்கள் என்றால் சமீப காலமாக பதவிக்கும் பணத்திற்க்கும் அடிபணிந்து கிடப்பதாலே இந்த விதமான சிக்கலுக்கு உள்ளாகுகின்றனர் என்றே தோன்றுகின்றது.  துணைவேந்தர் தேர்வில் இருந்து பட்டம் கொடுக்கும் விழா என எல்லா நிலைகளிலும் அரசியல் விளையாடுவதால் கல்வியின் தரவும் கல்வியாளர்களின் தரவும் குறைந்து விட்டது.  சமூகத்திற்க்கு எது சரிஅல்லது தவறு என்று எடுத்து கூற வேண்டிய பேராசிரிய பெருமக்கள் ஊழலில் முட்டி மோதி அல்லாடுவது கண்டு வேதனையும் வெட்கமாகவும் உள்ளது.  அடிப்படை தகுதியான நேர்மை கூட கல்வி  தரவில்லை என்றால் படித்து பதவியில் வந்து என்ன பிரயோசனம்?

மனோன்மணியம் பல்கலைகழகத்தில் சமீபத்தில் பாலியல் வழக்கில் ஒரு பேராசிரியரை  வெளியேற்ற வேண்டும் என மாணவ சமூகம் கொதித்து எழுந்தது. இதன் உண்மை தன்மை பற்றி பின் வந்த செய்திகளில் தகவல்கள் கிடைக்கவில்லை. ஒரு பக்கம் மட்டும் தவறு என்று எடுக்காது பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்கள் முதுகலைபட்டம் பெறும் மாணவர்கள் என்பதால் இவர்கள் பங்கும் எடுத்து கொள்ள வேண்டி வருகின்றது.  மதிபெண் பெறவேண்டும் என்ற நோக்குடன் பேராசிரியர்களிடம்; உடன் படிக்கும் மாணவர்களை கோள் மூட்டி ஒட்டி உறவாடும் பல மாணவர்களை காண இயலும்.  இந்த விடயங்களில் மாணவர்களுக்கும் தன்மானம் தன் நம்பிக்கை இருப்பது அவசியம்.

இன்னும் ஒரு பேராசிரியர் பல அவமானங்களுக்கு உள்ளாகினார். அவர் காலை வந்து தன் பையை தன் இருக்கையில் வைத்து விட்டு வெளியில் சென்றதும் சிலர் அறையை பூட்டியிட்டு அவரை 2 மணி நேரம் வெளியில் காத்து  நிற்க வைத்தனர்.  அப்பேராசிரியர் படமுடன் செய்தியும் வந்தது அடுத்த நாள் பத்திரிக்கையில். இப்பேராசிரியர் ஆங்கிலத்துறையிலே ஆங்கிலத்தை மிகவும் எளிதாக கற்று கொடுக்க வல்லவர்.  இவர் வகுப்பில் ஒரு பருவம் இருந்துள்ளேன் என்பதால் இவரின் வேலையின் மேலுள்ள ஈடுபாடு சுறுசுறுப்பை கண்டுள்ளோம்.    பொதுவாக ஆங்கில ஆசிரியர்கள் என்றாலே ஏதோ லண்டனில் இருந்து குடியேறியது போல் நடந்து கொள்ளும் சூழலிலும் மாணவர்கள் மன நிலையை புரிந்து எளிமையாக பாடம் எடுப்பவர்.  ஆனால் பல்கலைகழக ஆட்சிக்குழு இவரை போன்ற  கல்வி கற்று கொடுக்கும் திறைமையான பேராசிரியர்களுக்கு நிர்வாக பதவிகளை கொடுத்து மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் நேரத்தை திருடி விடுகின்றனர்.  இந்த பேராசிரியரோ முதுகலைப்பட்டம் தங்க பதக்கத்துடன் வென்றவர் என்று மட்டுமல்ல  முனைவர் பட்டத்தில் உலக அளவிலுள்ள தரவரிசையில் இடம் பிடித்து தேர்வாகியவர் எபதும் கூடுதல் தகவல்.  ஆனால் பதவி போட்டியில் மாட்டி இவர்களின் வாழ்கை மட்டுமல்ல இவரால் சிறப்பாக கல்வி கற்க கூடிய பல மாணவர்களின் உரிமையும் பறிக்கப்படுகின்றது. தேற்வில் ஜெயித்தவர்களால் வாழ்க்கை என்று வரும் போது சிறப்பாக  முன்மாதிரியாக வர இயலவில்லை என்பது நம் சமூக சீரழிவா, கல்வி நிலைகளில் இழிவு நிலையா அல்லது தனி மனித சறுக்கலா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

ஊடகவும் தீர விசாரித்து கல்வி செய்தியை தர முன் வரவேண்டும். கல்வி சம்பந்தமாக பொதுவான மக்கள் துன்புறும்  பல பிரச்சைகள் ஊடகம் வாயிலாக வெளி வராது சில பிரச்சனைகள் மட்டும் வெளிவருவதில் அரசில் உள்ளது என்று தான் கவலையாக உள்ளது  இச்செய்திகளால் இந்த பல்கலைகழகங்களில் பயிலும் பயின்ற  பெரும் வாரியான படித்த மக்களை வெட்க கேட்டுக்குக்கு மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றனர்  என்று கல்வி நிலையங்கள் புரிந்து கொண்டால் சரி! சாமியார் மடங்களுக்கு கோடிகள் புரண்ட போது கேடிகள் ஆகி விட்டது போல் கல்வி, வியாபாரம் ஆனதால் வீழ்ந்துள்ளதை வருத்தத்துடன் நாம் கண்கூடா காண்கின்றோம்!

8 May 2012

மாணவர்கள்- குரங்கு கையில் கிடைத்த பூமாலை!


10 ஆம் வகுப்பு தேற்வுத் தாள் திருத்த  பழனி தேற்வு மையத்திற்க்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள், பூட்டியிட்ட நுழைவு வாசலை கண்டதும் ஆர்பாட்டம் செய்துள்ளனர்.   நேரத்திற்க்கு வகுப்பிற்க்கு வராத மாணவர்களுக்கு விதவிதமான தண்டனை கொடுத்து மகிழும் ஆசிரியர்கள் தங்களுக்கு தண்டனை கிடைத்த போது தாங்கி கொள்ள இயலவில்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.  இருப்பினும் ஆசிரியர்கள் தங்கள் மன சாட்சிக்கு எந்த விதம் மதிப்பு கொடுக்கின்றனர் என்று புரிய வைக்கின்றனர். 

அரசு பள்ளியில் நேரத்திற்க்கு வரும் ஆசிரியரை காண்பதே அரிது என்றாகி விட்டது. வந்ததும் இவர்களுக்கு என்றே திறந்து வைத்துள்ள திண்-பண்ட கடையை நோக்கி படை எடுத்து விடுவார்கள்.  வடை காப்பி என கடையில் பேசி பேசி சாப்பிட்டு முடிக்கவே பெரும் வாரியான நேரம் விரையப்படுத்துகின்றனர். ஊதியம் வாங்கும் அளவிற்க்கு வேலையில் முனைப்புடன் ஊக்கத்துடன் செயல் படுகின்றார்களா என்றால் அது கேள்விக் குறி மட்டுமே. சமீபத்தில் ஒரு ஆசிரியர் என்னிடம் கூறினார்  75 % ஆசிரியர்கள் தெம்மாடிகளும் புறம்போக்குகளுமாக தான் உள்ளனர் என்று. இதை கேட்டவுடன் எந்த ஆசிரியரும்; அரசியல்வாதிகள் பாபா ராம்தேவிடம் கோபம் கொண்டது போல் என்னை திட்ட வேண்டாம்.  இது உண்மையும் தான்!

சமீபத்தில் ஒரு அரசு பள்ளிக்கு சமீபம் நிற்க வேண்டிய சூழல். காலை 10 மணி ஆகிய போது ஒவ்வொரு ஆசிரியையாக கணவர் வாகனத்தில் வந்த அரக்க பறக்க வந்து இறங்குகின்றனர்.  தாமதித்து தான் வந்தது வந்தாகி விட்டது என்றால் கையிலுள்ள தூக்கு சட்டி , தோள் பையை கீழை வைக்க மறந்து கதைத்து கொண்டிருக்கின்றனர்!  எப்போது  வகுப்பறைக்கு சென்றனர் என்று எனக்கு தெரியவில்லை என் புலனாய்வை முடித்து நான் செல்லும் இடத்திற்க்கு நேரத்திற்க்கு செல்ல வேண்டியதாயிற்று.
போட்டி பொறாமைக்கு புகலிடம் என்றால் அது ஆசிரியர் சமூகமே என்றால் மிகை அல்ல. உடுத்தும் உடையிலிருந்து கிடைக்கும் பதவிக்கு வரை கழுத்தறுக்கும் போட்டி நடந்து கொண்டே இருக்கும்.  கல்லூரி ஆசிரியர்கள் எப்படியோ  கெட்ட வார்த்தையில் மாணவர்களை திட்டுவதில் பள்ளி ஆசியர்கள் போலிஸையும் முந்தி விடுவர்.  இவர்கள் பேச்சுக்கும் நடை முறை வாழ்கையும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இருப்பதாகவே இல்லை.  ஆசிரியர்களுக்கு தாங்கள் எழுத வேண்டிய தகுதி தேற்வு செய்தியை கூட தன்னுடன் வேலை செய்பவர்களுக்கு தெரியாது நுட்பமாக மறைத்து விடுவார்கள்.  புதியதாக தெரிந்து கொள்ளும் ஆசை அற்று; அரைகல் ஆட்டுகல் போல் வாழ்கின்றனர் என்றால் அது ஆசிரியர் பெருமக்கள் மட்டுமே ஆகும். அவர்களுக்கு மகிழ்ச்சி தருவது என்றால் தங்கள் சொந்த பிள்ளைகள் சாதனைகள் மட்டுமாகவே இருக்கும். ஆசிரியர்கள் சில கலை நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்வதே கண்டுள்ளேன்.  அப்படியே இருந்த இடத்தில் இருந்து தூங்குவார்கள். அடுத்தவர் சொல்லும் அறிவுரையை கேட்க பொறுமை, மனம் இருப்பதில்லை; ஆனால் தங்கள் மாணவர்கள் தான் சொல்வதை கேட்க வேண்டும் என பேராவல் கொள்வதை காணலாம்.

இந்த ஆசிரியர்கள் திருந்த போவதே இல்லையா என்றால், மாணவர் சமுதாயத்தையே தங்கள் செயல்பாடுகளால் கெடுத்து கொண்டு  தான் இருக்கின்றனர்.  மாணவர்களுடன் மது அருந்தும் ஆசிரியர்கள் பிடித்தவர்களுக்கு மதிப்பெண் இடுவது பிடிக்காதவர்களை பள்ளிக்கே வரவிடாது செய்வதில் இருந்து  இவர்கள் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லை எற்று ஆகி விட்டது.  தற்கால மாணவர்களுக்கு நல்ல வழி காட்டுதல் இல்லை என்பது பெரும் குறையே. உண்மையான ஆக்கபூர்வமான எண்ணங்களுடன் ஆசிரியர் பணியை நோக்குபவர்கள் மிகவும் குறைவாகி விட்டனர்.
ஒழிங்கீனமாக தாமதித்து வந்து விட்டு பேப்பர் திருத்த எங்களுக்கு நல்ல மன நிலை இல்லை, தண்ணீர் இல்லை இப்படி பல குற்ற சாட்டுகள் பொழிபவர்களால் தன் வகுப்பறைக்கு தாமதித்து வரும் மாணவனே எப்படி கண்டிக்க இயலும்? 10 ஆம் வகுப்பு என்று தேவைக்கு அதிகமான பயம் காட்டி உளைவியலாக பயம்முறுத்தி படிக்க வைத்து தேற்க்கு அனுப்பும் நம் குழந்தைகளின் தேற்வு தாளை திருத்திகின்றேன் என்று  எத்தனை மாணவர்கள் வாழ்கையை பாழ்கிணறுகளில் தள்ளுகின்றார்கள் என பொறுத்து இருந்து பார்ப்போம்.

ஆசிரியர் தேற்வுகள் பணம் ஆள்பலம் பேசுவது போல் இவர்கள் தனி தன்மை, தகுதி கணக்கில் எடுப்பதில்லை.  பல ஆசிரியர்கள் சமூக அக்கரை உள்ளவர்களோ பன்பாக பேச தெரிந்தவர்களோ மாணவர்களை சிந்திக்க தூண்டுபவர்களோ அல்ல.  குறைந்த பட்சம் மனித நலம் பேனுபவர்கள் மனித நலம் விரும்புவர்கள் கூட இல்லை என்பதே மிகவும் வருந்த தக்க நிலை! கடந்த ஆட்சியில் சீனியோரிட்டி பிரகாரம் எடுக்கப் பட்ட பல நபர்கள் ரிட்டயர்மென்று வயதை எட்டியவர்கள்.  இப்படியாக அரசியல் ஞானத்தையும் ஆள நினைக்க, வரும் தலைமுறை குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக தான் இருக்க போகின்றது.


  

2 May 2012

"நண்பன்" திரைப்படம்!

நாம் படித்த, வேலை செய்யும் பள்ளி, கல்லூரி, பல்கலைகழங்கள் மேல்  உணர்வு பூர்வமான ஒரு தொடர்பு நமக்கு எப்போதும் உண்டு. பயணங்களில் நாம் செல்லும்  போது நாம் படித்த பள்ளி கல்லூரியை ஒரு முறையேனும் திரும்பி பார்க்காது இருப்பது இல்லை, பெருமையாக மற்றவர்களிடம் சொல்லுவது மட்டுமல்ல நமக்கு ஒரு மதிப்பு தரக்கூடியது. நம் குடும்ப உறவினர்கள் போல் நம் சொந்த வீடு போல் நம் நண்பர்கள் போல் நாம் படித்த கல்வி நிலையங்களுடன் ஒரு அழியாத பந்தம் நம்மை ஆட்கொள்கின்றது. 
ஆனால் சமீபத்திய பத்திரிக்கை செய்தி வழியாக தினம் ஒரு கெட்ட  செய்தி என கல்வி நிலையங்கள் பற்றி  வருகின்றது. பாலியல் துன்புறவு என மனோன்மணியம் பல்கலைகழகம் வந்தால், மாணவர் தற்கொலை என அண்ணா பல்கலைகழகம் இடம் பிடித்துள்ளது. இன்று இது எல்லாம் போதாது என்று வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் மேல் ஊழல் புகார்!

இது எல்லாம் பொய் புகார் என்றால் ஏன் மெத்தை படித்தவர்களால் சட்ட உதவி கொண்டு நேர் கொள்ள இயலவில்லை.   படித்தவர்கள் எல்லா வித அடிமைத்தனத்தில் இருந்தும் கல்வியால்  விடுதலை பெற்றவர்கள் என்றால் சமீப காலமாக பதவிக்கும் பணத்திற்க்கும் அடிபணிந்து கிடப்பதாலே இந்த விதமான சிக்கலுகளில் உள்ளாகுகின்றனர் என்றே தோன்றுகின்றது.  துணைவேந்தர் தேர்வில் இருந்து பட்டம் கொடுக்கும் விழா என எல்லா நிலைகளிலும் அரசியல் விளையாடுவதால்  எளிதாக எல்லா சிக்கலுகளிலும் மாட்டிகொள்கின்றனர்.  சமூகத்திற்க்கு எது சரிஅல்லது தவறு என்று எடுத்து கூற வேண்டிய பேராசிரிய பெருமக்கள் ஊழலில் முட்டி மோதி அல்லாடுவது கண்டு வேதனையும் வெட்கமாகவும் உள்ளது.  அடிப்படை தகுதியான நேர்மை கூட கல்வி  தரவில்லை என்றால் படித்து பதவியில் வந்து என்ன பிரயோசனம்?

மனோன்மணியம் பல்கலைகழகத்தில் சமீபத்தில் பாலியல் வழக்கில் ஒரு பேராசிரியரை உடன் வெளியேற்ற வேண்டும் என மாணவ சமூகம் கொதித்து எழுந்தது. இதன் உண்மை தன்மை பற்றி பின் வந்த செய்திகளில் தகவல்கள் கிடைக்கவில்லை. ஒரு பக்கம் மட்டும் தவறு என்று எடுக்காது பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்கள் முதுகலைபட்டம் பெறும் மாணவர்கள் என்பதால் இவர்கள் பங்கும் எடுத்து கொள்ள வேண்டி வருகின்றது.  மதிபெண் பெறவேண்டும் என்ற நோக்குடன் பேராசிரியர்களிடம்; உடன் படிக்கும் மாணவர்களை கோள் மூட்டி ஒட்டி உறவாடும் மாணவர்களை காண இயலும்.  இந்த விடயங்களில் மாணவர்களுக்கும் தன்மானம் தன்நம்பிக்கை இருப்பது அவசியம்.

இன்னும் ஒரு பேராசிரியர் பல அவமானங்களுக்கு உள்ளாகினார். அவர் காலை வந்து தன் பையை தன் இருக்கையில் வைத்து விட்டு வெளியில் சென்றதும் சிலர் அறையை பூட்டியிட்டு அவரை 2 மணி நேரம் வெளியில் காத்து  நிற்க வைத்தனர்.  அப்பேராசிரியர் படமுடன் செய்தியும் வந்தது அடுத்த நாள் பத்திரிக்கையில். இப்பேராசிரியர் ஆங்கிலத்துறையிலே ஆங்கிலத்தை மிகவும் எளிதாக கற்று கொடுக்க வல்லவர். இவர் வகுப்பில் ஒரு பருவம் இருந்துள்ளேன் என்பதால் இவரின் வேலையின் மேலுள்ள ஈடுபாடு சுறுசுறுப்பை கண்டுள்ளோம்.    பொதுவாக ஆங்கில ஆசிரியர்கள் என்றாலே ஏதோ லண்டனில் இருந்து குடியேறியது போல் நடந்து கொள்ளும் சூழலிலும் மாணவர்கள் மன நிலையை புரிந்து துன்புறுத்தாது பாடம் எடுப்பவர்.  ஆனால் பல்கலைகழக ஆட்சிக்குழு இவரை போன்ற  கல்வி கற்று கொடுக்கும் திறைமையான பேராசிரியர்களுக்கு நிர்வாக பதவிகளை கொடுத்து மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் நேரத்தை திருடி விடுகின்றனர்.  இந்த பேராசிரியரோ முதுகலைப்பட்டம் தங்க பதக்கத்துடன் வெற்றவர் என்று மட்டுமலல  முனைவர் பட்டத்தில் உலக அளவிலுள்ள தரவரிசையில் இடம் பிடித்து தேர்வாகியவர்.  ஆனால் பதவி போட்டியில் மாட்டி இவர்களின் வாழ்கை மட்டுமல்ல இவரால் சிறப்பாக கல்வி கற்க கூடிய பல மாணவர்களின் உரிமையும் பறிக்கப்படுகின்றது. தேற்வில் ஜெயித்தவர்களால் வாழ்க்கை என்று வரும் போது சிறப்பாக  முன்மாதிரியாக வர இயலவில்லை என்பது நம் சமூக சீரழிவா, கல்வி நிலைகளில் இழிவு நிலையா அல்லது தனி மனித சறுக்கலா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

ஊடகவும் தீர விசாரித்து கல்வி செய்தியை தர முன் வரவேண்டும். கல்வி சம்பந்தமாக பொதுவான மக்கள் துன்புறும்  பல பிரச்சைகள் ஊடகம் வாயிலாக வெளி வராது சில பிரச்சனைகள் மட்டும் வெளிவருவதில் அரசில் உள்ளது என்று தான் கவலையாக உள்ளது  ஒரு பெரும் வாரியான படித்த மக்களை வெட்கத்திற்க்கு உள்ளாக்குகின்றனர் இச்செய்திகளால் என்று கல்வி நிலையங்கள் புரிந்து கொண்டால் சரி. சாமியார் மடங்களுக்கு கோடிகள் புரண் போது என்ன வீழ்சி அடைந்ததோ அதே மாபெரும் வீழ்சி கல்வி வியாபாரம் ஆன போது நாமும் கண்கூடா காண்கின்றோம்!