6 Apr 2012

புனித வாரம்!

கிருஸ்தவர்கள் வாழ்வில் ஆத்மீயம், பிரார்த்தனை, என பல மாற்றங்கள் தர வல்ல சிந்தனைகள் கொடுக்கும் வாரமே இது.  40 நாள் நோம்பு முடிக்கப்பட்டு யேசு நாதரின் உயிர்ப்பை ஆர்வமுடன் நோக்கும் கொண்டாட்டங்கள் ஆரம்பம் ஆகும்  நாட்களாகும் இந்த வாரம்.  இந்த நாட்களில் மனிதனின் மரணம் பற்றியும் மண்ணில் இருந்து வந்தவர்கள் மண்ணில் செல்கின்றார்கள் என்று பொருட்பட சாம்பல் குறியிட்டு ஆரம்பம் ஆகின்றது.


என் நினைவுகள் பள்ளி நாட்களுக்கு கூட்டி செல்கின்றன. சாம்பல் புதன் அன்றிருந்தே நெற்றியில் பொட்டு வைப்பதில்லை, முகத்திற்க்கு பவுடர் இல்லை, யாரிடமும் கோபப்படுவதில்லை, சண்டை இடுவதில்லை என பல உறுதி மொழிகளுடன் நோம்பு ஆரம்பம் ஆகும்.  தூ வெள்ளை ஆடை அணிந்து  வெள்ளி கிழமை சிறப்பு பிரார்த்தனை, செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடும் நாட்கள். அன்று சட்டை இட்டு கொண்ட தோழிகளிடம் வலிய சென்று மன்னிப்பு கேட்டு ஒப்புறவு ஆகி கொள்வது என புனித வாரத்திற்க்குள் நுழைகின்றனர்.

இந்த 40 நாட்களும் மீன், இறைச்சி சாப்பிடக்கூடாது என்பது தான் மிகவும் கொடியதாக இருந்தது. முட்டை கிடைக்கும் என்பது தான் ஒரே ஆறுதல். அதிலும் பாட்டியின் கருத்துப்படி முட்டையும் அசைவம் என்பதே. ஆனால் அம்மா அப்படி எண்ணாது இருப்பதால் முட்டை மட்டும் கிடைத்தது. அப்பா தான் பல நாட்கள் மிகவும் சிரமப்பட்டு உணவு  உட்கொண்டு திரும்புவார். இருப்பினும் உணவு என்பதை விட தனி மனித மனமாற்றமே சிறந்தது என்று அறிவுறுத்தப்படுவதும் உண்டு.


ஓசானா பாடல்!ஓசானா ஞாயிறு தான் மகிழ்ச்சி தரும் நாட்கள்.  அன்றுடன் யேசுவின் கடைசி நாட்களில் நடந்தவயை நினைவு கூர்ந்து பிரார்த்தனைகள் ஆரம்பம் ஆகி விடும். இனி நோம்பு முடிய 7 நாட்கள் மட்டும் தான்!  மற்று சபைகளில் பிரார்த்தனை என்று புத்தகத்தில் நோக்கி வாசிப்பது மட்டும் அல்லாது அவரவர் வாய்க்கு வந்த படி தங்கள் எண்ணங்களை பிரார்த்தனைகளாக மாற்றி விடுவார்கள்.  ஆனால் கத்தோலிக்க சபையில் பிரார்த்தனை சிறிய அளவு,  நாடகம் போன்று இந்த நிகழ்ச்சிகள் யாவும் ஒரு ஒழுங்கு முறையுடன் மக்களுக்கு புரிய வைக்கும் நிகழ்வுகளே பெரும் பகுதியாக வந்துள்ளது.

குருத்தோலை ஞாயிறு அன்று காலையில் வரிசையில் நின்று ஓலையை வாங்கி யேசு நாதரை ஜெருசலேம் தெருவில் கூட்டி சென்றது போல் பாவித்து நாங்களும் பாட்டு பாடி கையிலுள்ள ஓலைகளை  கொண்டு எங்கள் தெருவைச் சுற்றி பவனி வருவது உண்டு.  மலையாளப் பாடல்கள் மட்டும் பாடி பவனி வந்த நாங்கள் பின்பு அருள் சகோதரிகளின் வரவுடன் தமிழ் பாட்டும் கற்று கொண்டோம்.  3 மலையாளப் பாடல்கள்  என்றால் ஊடை 1 தமிழ் பாட்டு  பாடி நடந்த எங்களில் சிலர் மலையாளப் பாடல் பாட மாட்டோம் தமிழ் மொழி பாடல்கள் மட்டுமே பாடுவோம் என்ற போது முன் வரிசையில் மலையாளம் பாடகர்களும் பின் வரிசையில் தமிழ் பாடகர்களுமாக பவனி செல்லும் வழக்கமாக மாறியது. 

தமிழ் ஓசனா பாடல்! இதில் பெரும் பகுதியானோர் பக்தி பரவசமாக யேசு நாதர் கழுதையின் மேல் செல்வதாகவும் தாங்கள்  பின்னால் பாடி செல்வதாக கற்பனையில் செல்லும் போது சில பெண்கள் வரிசையை ஒழுங்கு படுத்துகின்றேன் என்று அடுத்தவர்களை அதிகாரம் செலுத்துவதும், சில பெண்களோ தாங்களே உயர் பழம் கிருஸ்தவர்கள் என மிதப்பில் நடப்பதும், ஒரு சில இளம் பெண்கள் தங்கள் இருப்பை தெரிவித்து கொண்டு நடப்பதுமாக ஆலயம் வந்து சேர்வதுடன் ஆராதனை ஆரம்பம் ஆகி விடும். அன்று பாதிரியார் தன் மக்களுக்கு சொல்ல வேண்டியதை எல்லாம் ஒரே மூச்சாக ஒரு மணி நேரத்திற்க்கும் மேல் நேரம்  சொற்ப்பொழிவு ஆற்றுவது உண்டு.  ஏன் என்றால் அன்றைய தினம் மட்டும் ஆலயம் வரும் பல கிருஸ்தவர்கள் உண்டு வருடத்திற்க்கு ஒரு முறை ஆலயம் வருபவர்களும் அன்று வருவது உண்டு. 

இந்த விழாவுக்கு இஸ்ரயேல் மற்றும் மேற்க்கு தேசங்களில் ஒலிவு மர இலைகளை பயன்படுத்தியுள்ளனர். நம் தேசத்தில் தென்னை ஓலை மலிவாக கிடைப்பதால் தென்னை ஓலை  பயன்படுத்தப்படுகின்றது.  ஓலையால் விதவிதமான உருவங்கள் செய்து கொடுப்பதை உற்று நோக்கி வீட்டில் வந்து செய்து பார்த்து நொந்து கொள்வது நினைவில் உள்ளது. சில நேரம்  பாட்டிகளிடம் கொடுத்தே செய்து வாங்கி வருவதும் உண்டு. அப்படி பாதிரியாரின் பிரசங்கம் தரும் அலுப்பை மாற்றும் வழியாகவும் ஓலை வேலைப்பாடுகள் இருந்துள்ளது. மாலை தேங்காய்  கொழுக்கட்டை  செய்து பக்கத்து வீடுகளுக்கும் கொடுத்து பகுந்து உண்ணும் வழக்கவும் உண்டு.

மலையாள குருத்தோலை பாடல்! பெரிய வியாழன் சந்திப்போம் என்று பிரிந்து செல்வதுடன் அன்றைய ஆராதனை முடிந்து விடும்.   வரும் வருடம் சாம்பல் புதன் அன்று எரித்து சாம்பலாக நெற்றியில் பூசுவதற்க்கு என கையில் வைத்துள்ள ஓலையை வீட்டில் கொண்டு சென்று பயபக்தியுடன் பாதுகாத்து வைத்து விடுவதே வழக்கமாக இருந்தது!

5 comments:

  1. Ponnambalam Kalidoss Ashok · Sourashtra college,madurai. Dr.Ambdekar's govt law college,chennai


    very great information with real facts towards understanding on this holy season..thanks a lot..

    ReplyDelete
  2. பொன்னர் அம்பலத்தார் · Subscribed · Top Commenter · எடுபிடி at எனது ஆத்துக்காரி


    உங்கள் பதிவின்மூலம் தெரியாத சில தகவல்களை அறிந்துகொண்டேன் ஜோஸபின்.

    ReplyDelete
  3. N.Rathna Vel · Subscribed · Top Commenter · G.S.H.H.SCHOOL, SRIVILLIPUTTUR.


    அருமையான பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. Subi Narendran


    ஈஸ்டர் வார காலத்துக்கேற்ற பகிர்வு. அதோடு நான் கத்தோலிக்கப் பாடசாலையில் படித்ததால் அந்தக் கால நினைவுகளை உயிர்ப்பித்திருகிறது. உங்கள் எழுத்துக்களை படிப்பது ஒரு சந்தோஷசம். நல்ல விஷயங்களை அறியத் தந்திருக்கிறீர்கள். தொடரங்கள் உங்கள் பணியை. வாழ்த்துக்களும் ஆசிகளும் Jos sis.

    ReplyDelete