2 Feb 2012

தலையணை அருவி!


சமீபத்தில் மிகவும் ரசித்து சுற்றி  பார்த்த  சுற்றுலா தலமே தலையணை ஆறு. எங்கள் மகன்களின் தண்ணீர் மேல் கொண்டுள்ள  ஆசை பொங்கல் நாள் அன்று மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி பயணிக்க செய்தது. திருநெல்வேலியில் இருந்து 55 கி.மீ தூரத்தில்  மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகி வரும் அழகிய  அருவியாக  காட்சி தருகின்றது தலையணை ஆறு!

 களக்காடு  வனத்துறை காவலர்கள் சோதனையுடன் நம்மை வரவேற்கின்றது தலையணை ஆறு.  (முதன்மையான அணை என்பதால் தலை தீபாவளி, தலை வாசல் என்பது போல்  தலை + அணை மருவி தலையணை என்று பெயர் வந்திருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கின்றது.)  
தலையணை கட்டியவர்கள் நமது நாட்டை ஆண்ட குறுநிலை மன்னர்கள் ஆவர். இந்த அணை குறித்த இன்னொரு செவிவழி கதையும் உண்டு. பாண்டிய மன்னருக்கும் எட்டு வீட்டு பிள்ளைகளுக்கும் போர் மூண்ட போது பாண்டிய மனன்ர் தன் எதிராளியின் கைகளில் சிக்கக்கூடாது என்ற நோக்கில் தன் தலையை தானே கொய்து தாமிரபரணி நதியில் விழுந்து விட்டார். அவருடைய அதலை ஒதுங்கிய இடம் தலை அணை என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது. 

 பிளாஸ்டிக் பொதிகளில்  தின் பண்டங்கள்  மற்றும் இன்ப பானியங்கள் கொண்டு செல்ல மட்டுமே காவலர்கள் தடை விதிக்கின்றனர்நியாயமான அக்கறை    என்பதால் காவலர்கள் சோதனைக்கு  பணிந்து அவர்கள் கடமைக்கு பதில் சொல்லி எங்கள் வாகனம் சோதனைச் சாவடியை கடந்து செல்கின்றது.   சோதனைச் சாவடியில் பெரியவர்களுக்கு தலா 15 ரூபாய் சிறுவர்களுக்கு 2 ரூபாய், நாம் பயணிக்கும் வாகனத்திற்கு 20 ரூபாய் என வசூலித்து வனத்திற்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.  அடர்ந்த காடுகளில்  புலிகள் மறைந்து நின்று நம்மை கவனிக்கின்றதா என்று  மனக் கண்ணில் கண்டு சென்று பயணித்து கொண்டிருந்தோம்.  எங்கள் முன் பள்ளி மாணவர்கள் கரும்பு, தூக்கு சட்டியில் சாப்பாட்டுடன் சென்று கொண்டிருந்தனர்.  பல  மக்கள் குடும்பம் குடும்பமாக நடந்தும் வாகனத்திலும் வந்து கொண்டு இருந்தனர்.  அரசு விடுதி பக்கத்தில் வந்து சேர்ந்து விட்டோம்.  அங்கு வானங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  எங்கள் வானத்தையும் ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு;  கொண்டு வந்த உணவு பொட்டலங்களுடன் நடக்க ஆரம்பித்தோம். கரடு முரடான பாதை காணும் பாதையோரம் நீர் ஊற்று சிறு சிறு அருவிகளாக ஓடி கொண்டிருக்கின்றது. தண்ணீருக்காக போரிடும் வேளையில்  நீர் வளமான இடத்தை கண்ட போது  மகிழ்ச்சியாக இருந்தது.



சிறிதும் பெரிதுமான மரங்கள், வானளவில் வளர்ந்து ஒய்யாரமாக வளர்ந்து வளைந்து நிற்கும் மரங்கள் நடுவே அழகாக சின்ன சின்ன  நீர் ஓட்டங்கள் .....ஆலைமரத்தில் ஊஞ்சல் போன்ற விழுதுகள் என இயற்கையின் மடியில் தவழ்து விளையாடுவது பெரும் மகிழ்ச்சியாகவே இருந்தது.  அப்படியே அங்கு இருந்து, இயற்கை அழகை ரசித்து பார்த்து கொண்டே    கொண்டு சென்ற  உணவை ருசி பார்த்து விட்டு  லாவகமாக நடக்க ஆரம்பித்தோம்.

ஆகா அருவி வந்து விட்டது.  தண்ணீர் வரவு மிதமாக இருந்ததுமக்கள் கூட்டம் கூட்டமாக ஆரவத்துடன் நீர்  யானையை போல் கரைக்கு வர மனமில்லாது தண்ணீருக்குள் குளித்து கொண்டு இருக்கின்றனர். சில இளம் கன்றுகள் மாறி மாறி தண்ணீரை அள்ளி தெளித்து விளையாடுகின்றனர்.  சில கணவர்கள் தண்ணீரை பயமுடன் காணும் மனைவியை மகள்களை தண்ணீருக்குள் வலுகட்டாயமாக  தள்ளியிடுகின்றனர்.  

மகன்கள் தங்கள் உடைக்கு என்னை காவல் ஏற்படுத்தி கொண்டு தண்ணீருக்குள் குதித்து விட்டனர் என்னவருடன்!   இளையவர் நாடியடிக்க..... போதும் குளித்தது... என  வெளியை வந்த போது தண்ணீரின் குளிர்  தெரிந்தது

இந்த நீர் நிலையில் பல பொழுது விபத்தால் உயிர் பலி வாங்கியுள்ளது பத்திரிக்கை செய்தியில் படித்துள்ளோம். திடீர் என காட்டாறு வரும் இடமாகும் இது. 

கொஞ்சம் தள்ளி பார்க்ககூடிய தூரத்தில் ஒரு இளம்  கணவர் கூட்டத்தை மறந்து தன் மனைவியை குளிக்க செய்து அழகு பார்த்தது தான் நெருடலாக இருந்தது.  அவர் மனைவி -அவர் தனிப்பட்ட விடயமாக  இருந்திருந்தாலும் குழந்தைகள், பெரியவர்கள் என பொதுமக்கள் கூடும் இடத்தில் சினிமா படம் என்பதை போல் திரையில் வருவதை நேராக படமிட்டு காட்டுவதை என்னால் ஜீர்ணிக்க இயலவில்லை.  இன்னும் கொஞ்சம் தள்ளி இளம் பெண்கள் குளியல் உடையுடன் கூடி நின்று கும்மாளம் அடித்து பார்வையாளர்கள் கவனத்தை அருவியில் இருந்து தன் பக்கம் ஈர்த்து கொண்டிருந்ததை காண இயன்றது. ஆண் காவலர்கள் இரு பெண் காவலர்களை அவர்கள் பக்கம் அனுப்பும் மட்டும் அவர்கள் ஆட்டம் ஓயவில்லை.

அவர்களை உற்று எல்லோரும் மேல் நோக்கி பார்த்து கொண்டிருந்த போது குரங்குகள் தன் குழந்தைகளுடன் உணவுக்கு என மனிதர்களை தேடி வர எங்கள் பார்வை அருமையான குருங்குகளின் பக்கம் திரும்பியது.  தங்கள் பச்சிளம் சின்ன குரங்குகளை வயிற்று   பகுதியில் வைத்து கொண்டு தாவுவதும் அவர்களுக்கு உணவு கொடுப்பதும் என  தாய்மையின் தூய்மையான அன்பை காண இயன்றது.

இனி  நெல்லைக்கு திரும்பும் நேரம் வந்தபடியால் திரும்பி நடக்கலானோம். ஊர் எல்கைக்கு வந்து விட்டோம்.  எங்களுடன் தலையணை நதியும் கூடவே வந்து கொண்டிருந்தது.  ஊர் எங்கும் பச்சை பசேல் என்ற செடி கொடியுடன் வளமாக மாற்றும் நதி!. ஊர் எட்ட எட்ட நதி ஓடையாக மாறி அது பின்பு குட்டையாக காட்சி தருவது  நம் இதயத்தை போல் உள்ளது.  குளம் கரைகளில்  வீட்டு கழிவுகள் குப்பைகள் என அருவருப்பாக தண்ணீரை நோக்க இயலாத  விதமாக மாற்றி விட்டனர். ஊர் நடுவே இந்த நதியின் நிலை இன்னும் பரிதாபம். வீட்டு கழிவு நீர், கழிவறை கழிவுகள் யாவும் நேரடியாக நதி தண்ணீரில் கலக்கும் படியாக அமைத்துள்ளனர்.  மேற்கு தொடர்ச்சி மலையில் காலடியில் வீற்றிருக்கும் களக்காட்டு மக்களுக்கு சுத்தமான குடி தண்ணீருக்கு போத்தல் தண்ணீர் தான் உதவுகின்றது. இந்த ஊரிலுள்ள ஊராட்சி மற்றங்கள் என்ன செய்கின்றது என்று தான் கேள்வி மனதில் எழுந்தது. வீட்டுக்கு முன்பு ஓடைகளை வைத்து ஊரையை நாற்ற காடாக வைத்துள்ளனர்.

கோயில் குளத்தின் நிலை இன்னும் கொடியதாக இருந்தது. பாசி படிந்த தண்ணீருடன் சுற்றுப்புறம் தூய்மை அற்று காணப்பட்டது. அந்த ஊர் காரரிடம் விசாரித்த போது மீன் வளர்ப்பதாகவும் பன்றி கழிவு கொட்டுவதால் மோசம் அடைந்ததாக கூறினார். மேலும் நதிநிலைகளிலே வீட்டு மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டுகின்றனர் என்பது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.




இங்கு 50 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் வசிப்பதாக தகவல் கண்டேன். படித்த பல நாடுகளில் வேலை செய்யும் வசதியான மக்கள் குடியிருக்கும் பகுதியே. இருந்தும் ஏன் இயற்கையின் மேல் இந்த அளவு கவனமற்று பற்றற்று, அக்கறையற்று இருக்கின்றனர் என்பது நம்மை கவலைக்கு உள்ளாக்குகின்றது. 
                                                                                                                         இப்படியாக ஒரு அழகான நதிக்கு நேரிடும்  கொடுமையான முடிவை  கண்டு கனத்த மனதுடன் வீடு வந்து சேர்ந்தோம். தமிழ் மண் மேல் பிரியமுள்ளவர்கள் நம் மண் நீர் நிலைகளையும் நேசிக்க முன் வருவார்களா?





4 comments:

  1. அருமையான பதிவு.
    மக்களுக்கும் பொறுப்பில்லை; அரசாங்கத்திற்கும் பொறப்பில்லை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. மிக அருமையாக பயண அனுபவத்தை கொடுத்தவிதம் மிக அழகு. படிக்கும் போதே அதன் அருகில் நீங்கள் இட்ட படத்தை பார்த்து படித்து முடிக்கும் போது நானும் அந்த பயணத்தில் கலந்து கொண்ட மாதிரி ஒரு அனுபவம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஒரு அழகிய விருதை தங்களுக்கு வழங்கியுள்ளது தொடர்பான இடுகைக்கு வருகை தாருங்கள்
    http://avargal-unmaigal.blogspot.com/2012/02/blog-post_10.html

    ReplyDelete
  4. அழகான பயணக் கட்டுரை..
    புகைப்படங்களும் அருமையாக இருக்கிறது

    பயணப் பதிவுகள் எழ்தும் போது எல்லோரும் தங்களுடைய அனுபங்களை மட்டும் சொல்லிச் செல்வார்கள் ஆனால் நீங்கள் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி பதிவிட்டுள்ளிர்கள் ...தொடருங்கள்

    ReplyDelete