20 Dec 2011

மனித உணர்வற்ற இன உணர்வாளர்கள்!!!


ஈழ மக்களை கொத்து கொத்தாக பலி வாங்கிய பின்பு மறைந்த கள்ள இன  உணர்வாளர்கள் முல்லைப்பெரியார் டாமில் மிதந்து வந்தனர்.  ஈழத்தில் ஒரு தமிழன் கொல்லப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்று சூழுரை இட்டு படம் காட்டியவர்கள்; அங்கு மக்கள் கொத்து கொத்தாக காவு வாங்கப்பட்ட போது ஒன்றும் தெரியாதது போல் ஒளிந்து கொண்டார்கள்.ஆனால் தற்போதோ  அணைஉடைந்தால் எரிமலை வெடிக்கும் என பல உணர்ச்சி வசனங்களுடன் பொய் முகத்தை காட்டி கொண்டு வெளி வந்துள்ளனர். 

தமிழனை அடித்தால் பதிலடி, ஐய்யப்ப பக்தர்கள் தாக்கு, தமிழன் விரட்டி அடிக்கப்பட்டான் என்ற பத்திரிக்கை செய்திகள் வேறு! மலையாள ஊடகமாவது மரியாதையாக நடந்து கொள்ளும்  என்றால் அது ஒரு படி மேலே போய் ஆலங்குளத்தில் மலையாளி மாணவன் தாக்கு, தமிழர்கள் பெரும்வாரியான தங்கள் இடங்களை கையகப்படுத்தியுள்ளனர் என்ற செய்தியுடன் வார்த்தை போர் ஊடகம் நடத்தி கொண்டிருந்தனர். 

இந்த தமிழ மலையாள இன உணர்வால் நேரடியாக பாதிக்கப்படும் குடும்ப நபர் என்ற சூழலில் உன்னிப்பாக கவனித்து வந்த எனக்கு கிடைத்த செய்திப்படி தனிப்பட்ட வைராக்கியத்தை முல்லைப்பெரியார் என்ற பெயரில் சில வன்மம் பிடித்த மலையாளிகள் தீர்க்க முடிவெடுத்த போது கேரளத்து தமிழர்களுக்கு பெரிய கேடயமாக பாதுகாவலாக அங்குள்ள பெரும்வாரியான மலையாளிகளை   இருந்தனர் என்பதே.  

வண்டிபெரியாரில்http://www.thehindu.com/news/states/kerala/article2674541.ece கடை வைத்துள்ள என் உறவினரை முல்லைப்பெரியார் சம்பவத்துடன் இணைத்து தனிப்பட்ட வைராக்கியத்தில் இருந்த ஒரு மலையாளி தாக்க வர அங்குள்ள வியாபாரி சங்கம் அந்த நபரை கட்டுப்படுத்தியதுடன் சங்கத்தில் இருந்தே வெளியேற்றியது.  ஒரு சில இனவெறி பிடித்த மலையாளி மக்கள் ( கேரளா கிருஸ்தவ காங்கிரஸ், ஹிந்து முன்னனி) கூட்டாக சேர்ந்து தாக்க திட்டம் போட்ட போதும் கம்னீஸ்டு கட்சி, உம்மன்சாண்டி அரசியல் கட்சிகள் தமிழ் மக்களை காப்பாற்றியது என்றால் பொய்யாகாது. முண்டக்காயம் என்ற ஊரில் ஒரு தமிழனின் கடை தாக்கப்பட்ட போது மலையாளிகள் எல்லோரும் தங்கள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.   அவ்வகையில் தமிழர்களின் உயிர் தமிழகத்தில் விட மலையாள கரையில் பாதுகாக்கப்பட்டது என்பதில் அவர்கள் பெரிமிதம் கொள்ளலாம். கலவரம் என்ற போது ஈழப் போர் தவிர்த்து, எந்த தலைவனும் கொல்லப்பட்ட சரித்திரம் இல்லை. இதில் பலி வாங்கப்படுவது ஏழை எளிய சாதாரண மக்கள் மட்டுமே!

ஆனால் கூடலூர் கம்பம் பகுதியில் விவசாயம் செய்து வந்த மலையாள ஏழை விவசாயின் நிலை தான் பரிதாபம். கூடலூரில் கயிர் தொழில்சாலை நடத்தி வந்த மலையாளி தொழில்சாலை சில திருட்டு தமிழர்களால் கொள்ளையடிக்கப்பட்டு கொளுத்தப்பட்டது. மேலும் வண்டிப்பெரியாரில் ஒரே லாறியுடன் தொழில்நடத்தி வந்த மலையாளியின் லாறி கம்பம்மேட்டு எல்லகையில் வரும் போது தாக்கப்படும் என்று அறிந்து தமிழக எண் ஆக மாற்றிய பின்பும் சில வெறிபிடித்த தமிழர்களால் கொளுத்தி எரிக்கப்பட்டது. மேலும் பன்றி வளர்த்து வந்த ஒரு மலையாளியின் பண்ணையில் அக்கிரமாக சென்று ஒரே நாளில் 50 க்கும் மேற்ப்பட்ட பன்றியை கொன்று  எடுத்து சென்றனர். பன்றி மட்டுமல்ல ஆடு வளர்த்தவனின் ஆடு ஒரே நாளில் ஆட்டு கறியாகவும் திராட்சை, வாழைத் தோட்டங்கள் சில காடைய தமிழர்களால் அழிக்கப்பட்டது.

ஆனால் வண்டிப்பெரியாரில் ஒரு தமிழ் ஆசிரியரின் இருசக்கிர வாகனம் கொளுத்தியதும் தனி நபர் சண்டையின் பெயரில் என்று இருந்தாலும் வசதியாக முல்லைப்பெரியார் பிரச்சனைக்குள் கொண்டு வந்தனர். மேலும் பணம் கொடுத்து ஓட்டு இட வைப்பது போல் பணம் கொடுத்து தமிழர்களை பேச வைத்ததாகவும் செய்தி கசிகின்றது. இன்னும் ஒரு படி மேல் போய் இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் தமிழ் அரசியல்வாதிகளின் கூற்று கேலிக்குரியது மட்டுமல்ல முரட்டுத்தனமானதே.  தமிழக எல்லகையில் குடியிருக்கும் தமிழர்களால் மலையாளிகளின் இளக்காரத்தை கூட பொறுத்துக் கொள்ளலாம்; ஆனால் தமிழர்களின் அடாவடித்தனத்தை கண்டு அஞ்சுகின்றனர். நிச்சயமாக ஒரு கேரளா தமிழனும் தமிழக தமிழனாக மாற விரும்பவும் மாட்டான்.

தமிழர் மலையாளி உறவு என்பது நட்பு உறவை கடந்து இரத்த உறவாக மாற்றப்பட்டு இரு தலைமுறை கடந்து விட்டது.  75 வருடம் முன்பு குடியேறிய என் முன்னோர்கள் குடியேறிய அந்த பூமியில் நாங்கள் வாழ்ந்த போது பெற்ற தாய் தமிழ் அன்னை என்றாலும், வளர்த்த தாய் ஆன மலையாளத்திடம் இருக்கும் பாசவும் அளவற்றதே. கேரளாவில் தாக்கப்படும் தமிழனின் செய்தி போலவே  தமிழகத்தில் தாக்கப்படும் மலையாளிகள் செய்தியும் வலி தருகின்றது. ‘பாண்டிகள்’ என்று பல இடங்களில் நாங்கள் இகழ்ச்சிக்கு உள்ளாகியிருந்தாலும் மலையாளம் எங்களுக்கு தந்த அன்பும் மரியாதையும் தமிழகத்தில் துளியும் கிடைத்ததாக உணர்ந்ததில்லை என்பதே உண்மை.  பூ பறிக்க கோடாலி எடுக்கும் தமிழன் சில பொழுது பல வழிகளில் எங்களை வெட்டி சாய்க்கவே செய்துள்ளான்!

அங்கு வாழும் தமிழர்களும் மலையாளியும் திருமணம் மற்றும் நட்பு உறவால் பின்னி பிணைந்து வாழ்ந்து வரும் சூழலே உணமை!  ஒவ்வொரு தமிழக குடும்பத்திலும் ஒரு மலையாளியாவது குடும்ப உறுப்பினராக இல்லை என்றால் ஆச்சரியமே. மேலும் பல தமிழர்கள் கூட மலையாளம் பேசி மலையாளிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்  ( கோழிக்கானம், ஏலப்பாறை, மூணார் பகுதி மக்கள்)

எம் குடும்பத்தில்  என் சித்தப்பா மனைவி மலையாளியாகவே இன்றும் வாழ்கின்றார். தமிழனை திருமணம் கொண்டேன் என்று சித்தி தமிழ் பேசியதும் கிடையாது அதே போல் சித்தப்பா மலையாளம் பேசியதும் கிடையாது. சமீபத்தில் அவர்கள் வீட்டிற்க்கு சென்ற போது அவர்களுடைய 3 வயது பேத்தி பாட்டியிடம் சுத்த மலையாளத்திலும் தாத்தாவிடம் தூய தமிழிலும் பேசுகின்றார்.

இச் சூழலில் முல்லைப்பெரியார் என்ற டாம் பற்றி நினைத்து கண்ணீர் விட்டு கதை எழுதும் ஊடகமோhttp://www.jacobantony.com/journey-to-mullaperiyar-shocking-facts/ தமிழ் உணர்வாளர்களோ கேரளா தமிழர்களின் பாதுகாப்பையோ உணர்வையோ கொஞ்சம் கூட நினையாது வார்த்தைகளால் போருக்கு துவக்கம் இட்டுள்ளனர். இந்த சூழல் காணும் போது என் ஈழ சகோதர்களில் நிலை தான் கண் முன் வருகின்றது. 30 வருடம் முன்பு மச்சான் என்று அன்புடன் பழகி வந்த சிங்கள-தமிழ் இளைஞர்கள் சூழ்ச்சி இனவெறி அரசியலால்  பிரிக்கப்பட்டு பெரிய விரோதிகள் ஆகி;   அன்னிய நாட்டில் தங்கள் நாட்டு கனவுடன் வாழ தள்ளப்பட்டனர்.  அகதியாய் அன்னிய நாட்டில் தஞ்சம் அடைந்த தமிழர்களுக்கு கிடைத்த மரியாதை வாழ்க்கை தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வந்த ஈழ அகதியாய் வந்தவர்களுக்கு கிடைக்கவில்லை. அன்னிய நாட்டில் 5 வருடம் வசித்த போது கிடைத்த குடி உரிமை 30 வருடம் தமிழகத்தில் வசித்த போது கிடைக்காது இரண்டாம் தர சமூக சூழலில் தான் ஈழ தமிழர்கள் வசிக்கின்றனர்.
                                                                                                                                                                        தமிழகர்கள் போல் வார்த்தையால் அடுத்தவர்களை வதைக்கும் ஒரு ஜனம் இருக்க வழியில்லை. 'பாண்டி' என்ற ஒரு வார்த்தைக்கு வாடி வதங்கிய எங்களை நோக்கி பல அவதூறான வார்த்தைகள் காத்து கிடைக்கின்றது.  சமீபத்தில் இன உணர்வாளர் என்று பீற்றி கொள்ளும் நபரின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் கண்ட போது இன உணர்வை விட மனித உணர்வை செம்மையான நிலை என்றே எனக்கு தோன்றியது.
                                                                                                                                                                                        இரு இனத்திற்க்கும் சண்டையை மூட்டி விட்டு அடித்து கொண்டு சாவதை காண ஒரு நரி கூட்டம் எப்போதுமே காத்து கிடக்கின்றது. ஈழ சகோதர்களின் அனுவங்களை  கண்டு உணர்ந்து வரும் காலங்களிலாவது இன உணர்வை விட மனித பண்பு – மனித நேயம் ஓங்கி வளர வேண்டும் என்றே என் மனம் கதைக்கின்றது!!! 

18 Dec 2011

கப்பை கிழங்கு மீன் கறி விருந்து!


திருநெல்வேலியில் இந்த வாரம் பழக்கடை, காய்கறி கடையில் கப்பை மலிவாக காணப்பட்டது! கேரளாவில் கப்பை என்று அழைக்கும் ருசியான இக்கிழங்கு வகை மரச்சீனி என்று தமிழில் அழைக்கின்றனர்.    கப்பையும் மீனும் சேர்த்து உண்டால் அதன் ருசியே அலாதி தான். ஒவ்வொருவர் விருப்பம் தகுந்தும் கப்பையை பலவகையில் சமைத்தாலும் அதன் ருசிக்கும் ஈடு இணை ஏதும் இல்லை.

                                                                                                              ஏழைகளின் உணவாக இருந்த இதன் விலையும் தற்காலம் கிலோ 40 ரூபாய் என ஏறி விட்டது. நான் வளர்ந்த ஊரில் 6 மாதம் தொடர் மழை என்பதால் வேலை அற்ற பல ஏழைகளுக்கு போஷாக்கான உணவு வகைகளில் ஒன்றாக இருந்தது இது.  இதை மலையாளிகள் வறுத்து சிப்ஸாகவும் வேகவைத்து- காயவைத்து வருடம் முழுதும் உணவாக பயன்படுத்துவர். கப்பைகாலன் என்று மலையாளியை திட்டும் தமிழன் கூட கப்பையை ருசித்து சாப்பிடுவர். மலையாளிகளின் வீட்டு தோட்டத்தில், முற்றத்தில் கப்பை செடி அலங்காரமாக நிற்பதை காணலாம். அனைவரும் விரும்பி உண்ணும் கப்பையை என் பாணியில் சமையல் செய்து தருகின்றேன்.

 தேவையான பொருட்கள்

ப்பை – 1கிலோ

தேங்காய்- 1 கப்
தேங்காய் எண்ணைய் அல்லது சமையல் எண்ணைய்- 1 கரண்டி
ஜீரகம் – சிறு அளவு
வெள்ளைப்பூண்டு- 4 - 5 பல்
இஞ்சி- சிறியதுண்டு
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
குழையும் அல்லது மசியும் அளவுக்கு நன்றாக கப்பையை வேக வைத்து வடித்து வைத்து விடவும்.
இனி தேங்காய் துருவலுடன்  ஜீரகம், சின்னவெங்காயம் 3, தேங்காய் துருவல் ஜீரகம், வெள்ளைப்பூண்டு (4-5 பல்), சிறியதுண்டு இஞ்சி, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மைப்போல் அரைத்து வைத்து கொள்ளவும்.
இனி வாய் அகன்ற ஒரு பாத்திரம் எடுத்து அடுப்பில் வைத்து சூடான பின்பு, சிறிது எண்ணை விட்டு; காய்ந்ததும் கடுகு இட்டு தாளிக்கவும்.
கடுகு பொரிய துவங்கியதும் 3-4 சின்ன வெங்காயம் நறுக்கிய துண்டுகள் இட்டு வதக்கிய பின்பு கருவேப்பிலை சேர்க்கவும். இவையுடன் அரைத்த விழுதுவையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். இத்துடன் மசிந்த கப்பையும் சேர்த்து நன்றாக கிளறி பாத்திரத்தில் எடுத்து பருமாறி விடவும். மீன் குழம்பும் சேர்த்து ஒரு பிடி பிடித்தால் இன்று கொண்டாட்டம் தாங்கோ!!!