26 Oct 2011

தீ….வலி!


தமிழர்களின் பண்டிகையே அல்லாத தீபாவளி தற்கால வியாபார கலாச்சாரத்தால்  தமிழர்களின் பண்டிகை ஆகிவிட்ட சூழலில் பண்டிகை வந்ததோ வந்தது பல வீடுகளில் இத்துடன் தீராத சண்டைகளும் வலிகளும் சேர்ந்து வந்து விட்டது.

எதிர்வீட்டு பக்கத்து வீட்டு பெண்கள் போன வாரமே வாய் சண்டை ஆரம்பித்து விட்டனர்.  பால் வாங்கி கொண்டே ..
என்ன அக்கா மக என்னிக்கு வாரா எவ்வளவு உங்க முறை? 
உடனே பரிமளாக்காவுக்கு பண்ணையார் திமிறும் ஒன்று சேர
நீங்க எவ்வளவு கொடுக்குறீக என்ற மறுகேள்வி!
  நாங்க 3 ஆயிரம் ரூபாய் தான்.  மருமகன் எதிர்பாக்க மாட்டார் ஆனா முறை இருக்கில்லே…..
நாங்க 5 ஆயிரம் எங்க வீட்டிலும் மருமகன் தங்கமானவரு ஆனா நம்ம வீட்டு பிள்ளைக்கு பட்டு சேலை எடுத்து கொடுக்க வேண்டாமா?
நீங்க கொடுங்க… கொடுங்க…எங்க மக கலியாணம் முடிந்து தான் 11 வருஷம் ஆச்சில்லே!  போதும்……….3 ஆயிரம் ரூபாய்..
பரிமளம் அக்காவுக்கு ஆத்திரம் தீரவில்லை.  வந்திட்டா என்னையை கணக்கு போட.  என் மகளுக்கு நாங்க எல்லா பொங்கலுக்கும் தீபாவளிக்கும் கொடுப்போம் என்று சொல்லி கொண்டே வாயை சரித்து வைத்து கொண்டு ஒரு பக்க பார்வையும் பார்த்து  விட்டு வீட்டிக்குள்ள போய்டாக.

திருவிழாக்கள், மகிழ்ச்சியாக குடும்பமாக கொண்டாடி மகிழ்வதற்க்கு என்றால் வீட்டு முற்றத்தில் ஆரம்பிச்சு வீட்டுக்குள் ஒரே கும்மி அடி சண்டை வேற.  போத்தீஸ், ஆரெம்கெவி சேலை விளைப்பரம் வந்த  அன்று முதல் ஆரம்பித்த சண்டை பரிமளாக்கா வீட்டுகார்  தலையை பிச்சுகிட்டு வீட்டை விட்டே போகும்  மட்டும் தொடர்ந்தது.   

அடுத்த நாள் தாய் மகன்களிடம் பேசுவது கேட்டது, அதான் அப்பவே சொன்னேன் அப்பாகிட்ட நீங்க  சண்ட போடாதீங்கன்னு.  அக்காவும் வந்திட்டா அவளுக்கு 5 ஆயிரம் கொடுக்கனும் துணிமணி எடுக்க 4 நாள் தானே இருக்கு…

மகள் முந்தின நாள் மதியம்  தன் கணவர் வீட்டில் இருந்து தன்னோட மகளை இடுப்பில் வைத்து கொண்டு காரை விட்டு இறங்கினா.  அம்மாவிடம் அலைபேசியை வாங்கி "அப்பா நீ எப்ப வர போறே உன் பேத்தி தேடுதா"ன்னு அன்பு மொழியில்  பாசமழை பொழிந்தா.   அவரும் நேற்று காலை வீடு வந்து சேர்ந்தார். மக தன் மகளிடம் தாத்தா கிட்ட வெடி வாங்கி கேளுடா….ன்னு கொஞ்சும் சத்தம் கேட்டுது. எப்பவும் நாய் மாதிரி குலைச்சு பேசுதவரு பேத்திட்ட தாத்தா கண்ணு குட்டிக்கு மத்தாப்பு வாங்கி தாரேன்னு கதைக்கும் சத்தம் கேட்டுது.  நேரம் போக போக மக அப்பாவை திட்டுத சத்தம் கேட்க தொடங்கியது “நீ என்ன அப்பன், நீ எதற்க்கு என்னை பெத்து போட்டே”… அவரும் விட்ட பாடில்ல “போ நாயை நான் செத்தாலும் என் சொத்தில ஒரு பங்கும் தர மாட்டேன்”.  “நீ ஒன்னும் தர வேண்டாம் நீ தந்தாலும் விடிஞ்சுது போ”…ன்னு மகளும் ….. ஒரு வழியா மக தன் காரில் வீடு போய் சேந்திட்டா போல் இப்போ சத்தம்  இல்லை.

நல்ல தூக்கம் நடு இரவில் சண்டை இடும் சத்தம்!! மகன் அப்பனை திட்ட, அப்பன் மகனை அடிக்க போக, பரிமளா அக்கா “போக்கத்தவனை கட்டிக்கிட்டு அழ வேண்டியது, தான் என்ன பாவம் செய்தேனோ” என்று கூக்குரல் இட... நாங்க நல்ல தூக்கத்தில் இருந்தவக விழித்து விட்டோம். சத்தம் குறைவது போல் தெரியவில்லை அது பார்லிமென்று கூட்ட தோடர் போல் போய் கொண்டே இருந்தது.  நேரம் ஆக ஆக அசந்து விட்டார்கள் போல  சத்தம் குறைந்து குறைந்து ஓய்ந்தது. மறுபடியும் அசந்து  தூங்கி விட்டோம். இப்போது அதிகாலை 3 மணி ஆகியிருக்கும் கார் திறக்கும் சத்தம். கார் ஹாண் அடித்து கொண்டே இருக்கின்றது.  ஒரே மண்டைக்கனம்… ஆரம்பம்மாகி விட்டது மறுபடியும் போர்க்களம்!   நாங்க எழுந்து ஒரு கட்டன் காப்பி போட்டு குடிச்சிட்டு  அவரவர் வேலையை ஆரம்பித்து விட்டோம்.  அங்கு தூவனம் வந்து இடி மின்னலுடன் சண்டை மழை பெய்து கொண்டிருந்தது.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிட்டு  வேலையை முடித்தும் முடிக்காமலும் பகல் 11 மணிக்கு ஒரு குட்டி தூக்கம் பிடிச்சா, மத்தாப்பு வெடி அல்ல புஸ்வானமும் இல்லை வானவெடி மாதிரி சண்டை தொடங்கி விட்டது மறுபடியும்!  ஆவேரி விழித்து பார்த்தா; பிள்ளைக இல்லை போல், பரிமளாக்கவும் அவுக வீட்டுகாரரும் சண்டை  போடுராக.  பிள்ளைக இருந்தாலும் ஒரு பலனும் இல்லை.  ஒரு பையன் இயந்திர துறையில் பொறியாளர் பட்டம் முடிச்சிருக்கானாம், பொண்ணு கணிணி துறையில் பொறியாளராம் இளைய பையன் மருத்துவம் படிக்கானம் . சண்டைன்னு வந்திட்டா அப்பறும் அவக வீடு ரங்கநாதன் தெரு சந்டை தான்!!!

வாய் சண்டை பெருத்து பெருத்து வீட்டுகாரம்மா சொல்றாக “ எலே நாயை உன்னை கட்டி என்னத்த கண்டேன், செத்து தொலையேன் நானாவது நிம்மதியா இருப்பலே…”, வீட்டுகாரர் சத்தம் தேங்கா சிரட்டையை பாறையில் உரசினாப்பிலே கேக்குது பதிலா பரிமளா அக்காச் சத்தம் “செருப்பு பிஞ்சிடும், தீபாவளிக்கு கேட்ட பட்டு சேலை எடுத்து தர வக்கில்ல பேச்சாக்கும்” ….வீட்டுகாரர் என்ன சொன்னார்ன்னு தெரியல செருப்பு வைத்து அடிக்கும் சத்தம் கேட்டது…..சப்சப்சப்ப்ப்…யார் யாரை அடித்தாங்கன்னு பார்க்க இயலவி\வில்லை….!

http://www.youtube.com/watch?v=TOOTnRxNjc0&noredirect=1 எதிர்வீட்டில மக வந்திட்டா  வெடி சத்தம் விட தாயும் மகளும் பேசும் சத்தம் தெருவை சுழற்றி அடிக்குது! நான் பாட்டு பெட்டியில் விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணனுடைய நாட்டுப்புற  பாடலை சத்தமா  போட்டு விட்டுட்டேன்.

பக்கத்து வீட்டு பரிமளா அக்கா வீட்டிலே சத்தமே காணும் . கூடு கலஞ்ச கிளி மாதிரி பிள்ளைகள் எங்கயோ போய் விட்டார்கள். அண்ணாச்சி இருமல் சத்தம் மட்டும் அப்பப்ப கேக்குது.  மயான அமைதியாக வீடு!  தீபாவளி கொண்டாடுகிறார்கள் போல!!!!

2 comments:

  1. வணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்ப உறவுகளிற்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    நேசமுடன் அம்பலத்தார்.

    ReplyDelete
  2. பக்கத்து வீட்டு பரிமளா அக்கா வீட்டிலே சத்தமே காணும் . கூடு கலஞ்ச கிளி மாதிரி பிள்ளைகள் எங்கயோ போய் விட்டார்கள். அண்ணாச்சி இருமல் சத்தம் மட்டும் அப்பப்ப கேக்குது. மயான அமைதியாக வீடு! தீபாவளி கொண்டாடுகிறார்கள் போல!!!!//

    இன்று என் நண்பனின் அக்காள் போனில் பேசும் போது, ஒரு காலத்தில் நம் வீட்டில்தான் பட்டாசு நாள் முழுக்க வெடித்துக் கொண்டிருக்கும் ஆனால் இப்போதோ, அடுத்தடுத்த வீடுகளில் பட்டாசு சத்தம் கேட்கிறது நம் வீட்டிலோ மயான அமைதி நிலவுகிறது, காரணம் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில், பணம், நிலம், யாவும் இருந்தும் தனிமை கொடுமை....!!!!

    ReplyDelete