24 Oct 2011

100 வது பதிவுடன் பல ஆயிரம் நன்றிகள் மகிழ்ச்சிகளுடன்!


இன்று எனது 100 வது பதிவுடன் உங்களை சந்திக்கின்றேன்  என்பது மகிழ்ச்சியாக உள்ளது.  2008 ல் வலைப்பதிவு என்பது, தொடர்பியல்(ஊடகம்) முதுகலை பட்டத்திற்கான 'நவீன ஊடகம்'  என்ற பாடப்பகுதியில்;  பேராசிரியர் முனைவர்  ரவீந்திரன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டதே.   வலைப்பதிவு என்றால் என்ன ?, அதன் பண்பு என்ன?, உங்களுக்கு பிடித்த 5 வலைப்பதிவுகள் யாவை?, உங்களுடைய வலைப்பதிவு அறிமுகம் செய்க!, போன்ற கேள்விகள் எங்கள் தேர்வு கேள்வியாக இருந்தது.  வலைப்பதிவு உருவாக்குதல் என்பது செயல்முறை தேர்வாக இருந்தபடியால் நான் ஆங்கிலத்தில் என் முதல் வலைப்பதிவை ஆரம்பித்தேன். முதல் நாள் நம் எழுத்து ஒரு பத்திரிக்கை போன்று பதியப்பட்டு அதற்க்கு எங்கள் பேராசிரியரிடம் இருந்து பின்னூட்டம் கிட்டிய போது கொண்ட மன மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

பின்பு ஆங்கிலம், தமிழ் வலைப்பதிவுகள் என் வாசிப்பு தளத்தை ஆக்கிரமித்து கொண்டன.   இளம்முனைவர் பட்டத்திற்க்கு ஈழ வலைப்பதிவு ஆய்வில் மூழ்கியிருந்த போது ஈழவலைப்பதிவர்களின் பதிவுகளில் ஈர்க்கப்பட்டு ஈழ தமிழ் போன்று ஏன் என்னால் கேரள தமிழில் எழுதக்கூடாது என்ற கேள்விக்கு பதிலாக வந்ததே  “ஜோஸபின் கதைக்கிறேன்”  என்ற என் வலைப்பதிவு. கதைக்கிறேன் என்ற சொல்லாடல் தமிழக தமிழில் இல்லாவிடிலும்  ‘கதைக்கிறேன்’ என்ற சொல்லுடன் எனக்கு ஒரு ஈர்ப்பு ; அதில் நட்பு, கதைசொல்லுதல், சுவாரசியமான பேச்சு எல்லா அடங்கியிருக்கும் தொனி இருப்பதால் என் வலைப்பதிவுக்கான தலைப்பாகவும் தெரிவு செய்தேன்.  பின்பு ஒரு புத்தகம் வாசித்து கொண்டிருந்த போது மார்ட்டின் லூதர் கிங்கின் கூற்று “நம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது. Martin Luthar King. எனக்கு பிடித்து போன படியால் என் வலைப்பதிவின் விவரணமாக அதையே சேர்த்து கொண்டேன்.

  துவக்கத்தில் இணைய தொடர்பு, எனக்கு என்று ஒரு கணிணி இல்லாத  வேளையில்; கணவருடைய கணிணி எப்போது தன் வேலையை முடித்து கொண்டு எனக்கு கிடைக்கும் என்று  காத்திருந்து; பொது கணிணி நிலையங்களில் சென்று பதிவிடுவதே வழக்கமாக கொண்டிருந்தேன். பின்பு வீட்டில் இணையம் பெறப்பட்ட போது சில வலைப்பதிவுகள் முடிக்க என நடுநிசிகளிலும், நடு இரவு கடந்து அதிகாலையிலும் எழுதி பதிவிடுவதில் அதீத மகிழ்ச்சி இருக்க தான் செய்தது!  சிலருடைய பின்னூட்டம் உற்சாகத்தை தந்த போது சிலருடையது ஆச்சரியத்தையும், சில பின்னூட்டங்கள் என் சிந்தனையை புடம் இட செய்தது மட்டுமல்லாது  சில பாசமிகு வாசகர்களின் பின்னூட்டம் கவலை கொள்ளவும் செய்தது என்றால் பொய்யல்ல!
100 பதிவை எட்டியுள்ளதற்க்கு என் உடன்பிறவா சகோதர்களுக்கும் உயிரினும் மேலாம் நண்பர்களுக்கு என் நன்றியை தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.  தொடக்கத்தில் வாசித்து பின்னூட்டம் இட்ட பலர் இப்போது பின்னூட்டம் தருவதில்லை.  ஆனால் சில புதிய நண்பர்களின் மறுமொழிகள் என் வலைப்பதிவுக்கு மேலும் உற்சாகம் தருகின்றது.  85 பேர் என் வலைப்பதிவு நண்பர்களாக இணைந்ததிலும் பெருமை கொள்கின்றேன்.

வலைப்பதிவுகளின் பிறப்பு அமெரிக்காவை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவனில் இருந்து துவங்கியிருப்பினும் அதை காத்திரமாக பயன்படுத்துவது மத்திய- மற்றும் வயது சென்றவர்கள் என்பதே உண்மை. டிவிட்டர், முகநூல் சமூகத்தளங்கள் வந்த பின்பு வலைப்பதிவுகள் தன் களையை இழந்து விடும் என பலர் கனவு கண்ட போதும் அதன்  தாக்கம் இருந்து கொண்டே தான் உள்ளது.

வலைப்பதிவுகள் என்பது பல வழிகளில் நமக்கு உருதுணையாக உள்ளது. வாழ்க்கையில் காணும் சம்பவங்கள், அனுபவங்களை சுவையாகவும் சுவாரசியமாகவும் எழுத ஒரு தளம் கிடைக்கின்றது. எழுத்து பதிவிடல் என்பது ஒரு சில நபர்களின் கைவிரலுகள்/பேனாவுக்கு மட்டும் சொந்தம் என்பது மாறி ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. அடிதட்டு நிலையில் இருந்தே தகவல் பரிமாற்றத்திற்க்கும் தொடர்பாடலுக்கும்(Grass root communication) உருதுணையாக இருக்கின்றது என்றால் மிகையாகாது. வலைப்பதிவுகளை அங்கீகரிக்க ஊடகமோ, இலக்கியவாதிகளோ முன் வருவதில்லை. தரம், உண்மை தன்மை, பிழை என பல காரணங்கள் கூறினாலும் அரசியல் அற்ற தனி நபர் பார்வை உள்ள வலைப்பதிவுகளின் இடம் எடுத்துகொள்ளப்பட வேண்டியதே!  ஊடகத்துறையில் பணிபுரியும் பல பத்திரிக்கையாளர்கள்  தங்கள் கருத்துக்களை யாருடைய தலையீடும் இல்லாது வெளியிட லைப்பதிவுகளை காத்திரமாக பயன்படுத்துகின்றனர்மாற்று ஊடகமாகவும் இதன் பங்கு பிரமிக்க வைப்பதே.   சாதாரண மக்கள் ஊடகவியாளர்களை போன்று தங்கள் கருத்தை பகிரவும்தகவல்கள் பரிமாறி கொள்ள  உருதுணையாக உள்ளதுவலைப்பதிவுகளில் எழுத்து மட்டுமல்ல படம்காணொளிஇணைப்புகள் வழியாகவும் தகவல்களை விரைவாக எளிதாக பேண இயல்கின்றது என்பதும் இதன்  பலமே.

பலநாடுகளில் குடிபெயர்ந்துள்ள தமிழர்கர்களை  ஒரு குடைக்கீழ் கொண்டு வர வலைப்பதிவுகள் உதவுகின்றது என்றால் மிகை ஆகாது. பல பதிவர்கள் இடம் சார்ந்தும், நட்பு சார்ந்து ஒன்று கூடி தங்கள் தோழமையை நட்பை விரிவுப்படுத்தவும் வலைப்பதிவுகள் உதவுகின்றது வலைப்பதிவாராக பல சிறந்த நட்புகள், உறவினர்கள்-பெற்றோர்கள் போன்ற உறவுகளும் கிடைக்கின்றது.



பெண்கள் தங்கள் கருத்தை வெளியிட, பெண்களுக்கும் கருத்து சொல்ல தெரியுமா என்று தடை இடும் சமூக சூழலில் வீட்டில் இருந்து கொண்டே ஒரு கணிணியும் இணைய இணைப்பும் உண்டு எனில்; தங்கள் கருத்துக்களை உலகம் அனைத்திலும் உள்ள வாசகர்களை குறைந்த நேரத்தில்  சென்று சேர்க்க இயல்கின்றது என்பது இன்னும் மகிழ்ச்சியான விடயம். பெண்களுக்கு தங்கள் நேரத்தை சீரியல் படம், பக்கத்து வீட்டு புரணி என்றில்லாது சமூக சிந்தனையுள்ள கருத்துக்கள் பகிரவும் உதவுகின்றது. காணும் அனுபவிக்கும் சம்பவங்களை கதையாக மற்றவர்களிடம் பகிரவும் இடம் தருகின்றது. அரசர்கள், தலைவர்கள் சரித்திரம் மட்டுமல்ல காலத்தால் அழியாத நம் சரித்திரவும் நம் மொழியால் பதியப்படுவதும் இதன் சிறப்பே.

என் வலைப்பதிவுகளின் கரு என் பயணம், நான் காணும் சில நிகழ்வுகள் சில மனிதர்கள், என் கருத்துக்கள், என்னை பாதித்த நான் ரசித்த திரைப்படங்கள், வாசிக்கும் புத்தகம், என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்த, மனம் நோக செய்த சம்பவங்கள், நான் கொண்ட துயர்கள், சுவாரசியமான விடயங்கள் என போகின்றது.   பல வேளைகளில் கிடைத்த கதைக் கருக்கள், பாத்திரம் கழுவும் போதும், துணி துவைக்கும் வேளையிலும், தனிமையான பயணங்களிலும் என் மனபுத்தகத்தில் பதிவாக உருமாற ஆரம்பிக்க; பின்பு என் கணிணியில் பதிவது வழியாக உங்களிடமும் வந்து சேர்கின்றது. பல போதும் நம்மை பாதித்த சம்பவங்கள் உறவினர்களிடமோ நட்புகளிடமோ பகிரும் போது ஏளனத்திற்க்கும் நகைப்புக்கும் காரணமாகும் போது அதை கதையாகவும் அனுபவமாகவும் எழுதுவது மட்டுமல்லாது அதற்க்கு நம் வாசகர்களிடமிருந்து பெறப்படும் பின்னூட்டம் தெளிவான சிந்தனைக்கும் இட்டு செல்கின்றது.  மேலும் வாழ்க்கையை சுவாரசியமாக நோக்கவும் கற்று தருகின்றது. நம்மை மட்டும் நோக்காது நம்மை சுற்றியுள்ள உலகையும் நோக்க வலைப்பதிவு எழுத்து கற்று தருகின்றது.

இப்படியாக என் 100 வது பதிவுடன்,  மகிழ்ச்சியாக இன்னும் ஆத்ம திருப்தியுடன் மன பலனுடன் பயணித்து விட்டேன்.  இனியுள்ள நாட்களும் இப்படியே இருக்க வேண்டும் என்று ஆசிக்கின்றேன் உங்கள் வாழ்த்துதலையும் எதிர்நோக்குகின்றேன். உங்கள் கருத்துக்களையும் பதிந்து  செல்ல வேண்டுகின்றேன். இனியுள்ள வலைப்பதிவு பயணத்திற்க்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை!!!!



7 comments:

  1. வலைப்பதிவைப் பற்றிய அருமையான பதிவு. எனது அருமை மகளுக்கு
    நூறாவது பதிவுக்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. மகிழ்வான செய்தி
    உங்கள் பதிவுகள் மூலம் சமூகத்திற்கு, நண்பர்களுக்கு பல நன்மைகள் விளைகின்றன. நன்றிகள்.

    விரைவில் 1000 பதிவுகள் வர வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  3. வாழ்த்துகிறேன்,இனிய பதிவுகளுக்கு தொடரட்டும் இப்பணி என்னாளுமெ !!! என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  4. Shan Nalliah · Top Commenter · Translator at POLICE-Norway
    YOU HAVE A GREAT WRITER IN YOU...WRITE MORE ABOUT PEOPLE, PLACES, EVENTS, MEMORIES, BIOGRAPHY.TEMPLES, HISTORICAL PLACES ETC. ONE DAY YOU WILL BE A POPULAR WRITER AMONG WORLD TAMILS.



    Jeyasingh Fernando · Civil Engineer at Civil Engineering
    தங்களது நூறாவது பதிவில் இணைந்துள்ளேன்...மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் பதிவுகள். தொடர்ந்து எழுதுங்கள்...அணு உலையின் அழிவுகளை ஜப்பான் பேரழிவுக்கு முன்பே நீங்கள் எழுதிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது.நன்றி.




    George Newton · Sole Proprietor at SUN TECHNICAL CONTRACTING
    உங்கள் நூறாவது பதிவில் எனது பின்னூட்டம் இட்டது போல் உங்கள் கோடி பதிவிலும் எனது பின்னூட்டம் வந்திட வேண்டுமென விரும்பி வாழ்த்துகிறேன். நல்ல பதிவுகள் தொரடட்டும் உங்கள் பதிவுகள்...



    Rajendrakumar Kandasamy
    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  5. செஞ்சுரி அடித்த வலைப்பெண்ணே வாழ்க உன் தொண்டு...இன்னும் கேரளத் தமிழில் கதைக்கணும் பெண்ணே ...வாழ்த்துக்கள்.'முன்னால் பின்னூட்டம் போட்டவர்கள் இப்போது எழுதுவதில்லை ' என்பதைப் படித்தபோது ஏற்பட்ட குற்ற உணர்வு மேலிட இதைப் பதிகிறேன்.-இரா. குமரகுருபரன்

    ReplyDelete
  6. Srikandarajah கங்கைமகன் · Jaffna uni, colobmo uni, annaamalai uni
    அன்புடன் வணக்கம். தங்கள் 100வது வலைப்பதிவு பார்த்தேன். அமைதியாக ஒரு கிராமத்துத் தெருவில் நடந்து செல்வதுபோல் கதையுடன் நானும் கனதூரம் சென்றுவிட்டேன். இன்னும் பலமைல்கள் உங்கள் கதைகளுடன் பிரயாணம் செய்ய விழைகிறேன். உங்கள் 100வது கதையை நான் குளிரூட்டப்பட்ட சினிமாவில் இருந்து பார்க்கவில்லை. தங்கள் உழைப்பின் வியர்வைத்துளிகளாய் இருந்து பார்க்கின்றேன். அருமையான பதிவு. சொல்வதெல்லாம் உண்மை! உண்மையைத்தவிர வேறில்லை. வாழ்த்துக்கள் சகோதரி திருமதி பாபா.


    Selvanathan Selva · Chennai Anna Univercity of Technology
    ஓராவது பதிவு என்றிருந்தேன்...இது.
    நூறாவது பதிவு வந்துவிட்டதா....அக்கா...
    கருத்துக்களை மக்களுக்கு
    களம் அமைப்பதே நம்.
    கடமை....தொடருங்கள் அக்கா....
    இந்த தம்பியின் வார்த்தைகள்.
    தங்க காப்பிடும் உங்கள் சேவைக்கு....

    ReplyDelete
  7. உங்களின் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

    நேரமிருக்கும் போது பார்வையிடவும்

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_28.html

    ReplyDelete