header-photo

தீபாவளி வெடி........................?
மூன்று நாட்களாக ஒரே வெடி சத்தம்!   நேற்று உச்சஸ்தாயில் ….. நிம்மதியா தூங்க இயலவில்லை, ஏன்…. வீட்டு கதவு, ஜன்னல் கூட திறந்து வைக்க  பயமாக இருந்தது.  காது கேள்வி திறன்  இழந்திருப்போமா என்று 2 நாள் கழிந்து தான் தெரியும்இந்த வகையான கொண்டாட்டங்கள் காணும் போது  தமிழர்களின் வன்முறையான வாழ்க்கை முறையை பற்றியே சிந்திக்க தோன்றுகின்றது.   தீபம் ஏற்றி உறவினர்களுடன் விருந்துக்கள் பரிமாறி வடக்கத்தியர்கள் கொண்டாடும் இத்திருநாள், யார் வீட்டில் அதிகமாக வெடி வெடிக்கின்றனர் என்பதில்  போட்டி போட்டு காற்று, தண்ணீர், நிலம் என சகல வித ஒலி- ஒளி மாசுபடுதலுக்கும் காரணமாகி கொண்டாடப்படுவது வருத்தப்பட வேண்டியதே.

தமிழகத்திற்க்கு வந்த புதிதில் ஆச்சரியம் அடைந்து விட்டேன்.  உயிரை கையில் பிடித்து கொண்டு தான் தெருவில் பயணிக்க இயலும்.   எங்கு வெடி வைத்திருக்கின்றார்கள் என்று வெடித்தால் தான் தெரியும்!   அடுத்த நாள் தெருவில் நடந்தால்  வெடியை பொதிந்த காகிதமே குப்பையாக குமிந்து கிடப்பதை காணலாம்எங்கள்  இளைய மகன் கைக்குழந்தையாக இருந்த போது ஒவ்வொரு வெடி சத்ததிற்க்கும் அழுது கொண்டே இருந்தான்.  அவனை நெஞ்சோடு சேர்த்து அழாது வைக்க பெரும் பாடு பட்டோம்.  இப்போதும் அவனும் பிஜிலி வெடி வாங்கி தாங்க, ஹிட்லர் வெடி வாங்கி தாங்கன்னு சண்டை பிடித்து கொண்டிருக்கின்றான்.

ஒரு முறை தீபாவளி அன்று மதுரையில் இருந்து தூத்துகுடி வரை வான-வேடிக்கை பார்த்து கொண்டே முழு இரவும் பயணித்தோம்.  பணத்தை இப்படி கரியாக்க எப்படி மனம் வருகின்றது என்று எண்ணி பார்க்கும் போது மனிதனின் மனநிலை தான் விளங்கவில்லை!  கடந்த வருடம் 300 ரூபாய்க்கு வாங்கின வெடி இந்த வருடம் 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நெல்லையில் நல்ல மழையும் பெய்து கொண்டிருப்பதால் ஓரளவு கொடிய நெடியுடன் கூடிய புகையில் இருந்து தப்பிக்க இயன்றது.   இருந்தும் வெடி இடும் சுற்றுபகுதி புகை மூட்டமாகவே போர் களத்தில் நிற்பது போல்  தான் காட்சி தருகின்றது.   இந்த வருடம் இன்னும் ஒலி கட்டுக்கு அடங்காது  இருப்பது போன்றே தெரிகின்றது.  அரசு மாசு கட்டுபாடு வாரியம்  கூறி வருவது போல் மாசு மற்றும் காற்று கண்டறியும் ஆய்வு நடத்தப்படுகின்றதா என்று அறிய கழிய வில்லை.

சீனர்களால்  2000 ஆயிரம் வருடம் முன்பு வெடி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.  பொதுவாக எல்லா கொண்டாட்டங்களும் திருமணம் தொடங்கி வெடியுடன் கொண்டாடும் கலாச்சாரம் பரவி வரும் வேளையில் ஆங்கிலயர்கள் வரும் முன் இந்தியர்கள் வெடி வெடித்து கொண்டாடிய தகவல்கள் இருப்பதாக இல்லை.  உலகில் புதுவருடம் மற்றும் தீபாவளி காலயளவிலே அதிகமாக வெடி வெடிப்பதாக செய்தியுள்ளது.

பல நாடுகளும் வெடி பயன்படுத்துவதற்க்கு சில நடைமுறை திட்டங்கள் வகுத்துள்ளனர்.  அதே போல் இந்தியாவிலும் செப், 2001 வந்த உச்சிநீதிமற்ற உத்தரவின் படி சில நெறிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளதுஅதில்  சிலவை ;
  • வெடி வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு உள்ளாக 125 டெசிபெல்க்கு உள்ளாக  மட்டுமே  ஒலி எழுப்ப அனுமதி உண்டு.
  • மருத்துவமனைகள், பாடசாலைகள்,  நீதிமற்றம், வழிபாட்டு தலங்கள் சமீபத்தில் 100மீட்டருக்குள் வெடிவெடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
  • இயற்கை மற்றும் வன இலாகவின் படி 125 டெசிபெல்லுக்கு மேல் ஒலி எழுப்பும் வெடி மருந்து பொருட்கள் விற்பதோ பயண்படுத்துவதோ தடை செய்யப்பட்டுள்ளது.
  • காவல் துறை 20 வகை வெடிகள் வெடிக்க செய்வதை தடை செய்துள்ளனர். மக்கள் சட்டத்தை மதித்து நடப்பதை உறுதி செய்ய வேண்டியதும் காவல் துறையின் கடமையே!
  • மேலும் மாலை 6 முதல் இரவு 10 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்கலாம்.  ஆனால் இந்த சட்டத்தையும் எந்நேரவும் வெடி வெடித்து புரக்கணித்துள்ளனர்  மக்கள்.
  • இயற்கைக்கு மனிதனுக்கும் மாசுவிளைவிக்கும் ஒரு சில பொருட்களான  காட்மியம், லெட், மாங்கனீஸ், சிங், சோடியம், நைட்றேட், சல்பேட், கார்பன் மோனோக்சைட் போன்றவை பயன்படுத்துவதற்க்கும் தடை விதித்துள்ளது. ஆனால் வியாபார லாபத்தை மனதில் கொண்டு பல நிறங்களிலான ஒளி, மிரட்டும் ஒலிக்கு என தடைசெய்யப்பட்ட மூலபொருட்களை அளவுக்கு மீறி சேர்த்தே தயாரிக்கின்றனர்.
வெடிவெடித்த பகுதியை நோக்கினால் ஒரு கருப்பு மேகமூட்டத்துடனே பல மணி நேரங்களாக காட்சி அளிக்கின்றது.  தொண்டை, இதயம் சம்பந்தமான நோய்கள் அதிகரிக்கவும் இது காரணமாகின்றது .   இதில் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள்,  ஆஸ்துமா, இதய நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.   பொதுவாக மனிதனால் கேட்கும் திறன் என்ற 60 டெசிமெல் ஒலி என்பது வெடிச் சத்ததால் 120உம் 140க்கு மேலும் கேட்பது சிலவேளைகளில் நம் கேள்வி திறனையை பதம் பார்ப்பதாகவும் அமைந்து விடும். மேலும் மனகலக்கம், தேவையற்ற கோபம், மன அழுத்தம்சோர்வு போன்றவற்றால் நாம் பாதிப்படையவும்  இதுவே காரணமாகின்றது.

 மக்களை வழிநடத்த வேண்டிய அரசு  மற்றும் அரசுசார நிறுவனங்கள், மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுபாடு வாரியத்தின் செயலாக்கம் வெறும் வெத்து பேச்சோடு நிறுத்தி கொள்வதுடன் செயலாக்கத்தில் கொண்டு வருவதில்லை என்பதும் பரிதாபத்துற்க்குரியதே.  உலக வெப்பமயவதால் சுற்றுசூழல் சீர்கேடு உள்ளிட்ட காரணங்களை முன்நிறுத்தி பட்டாசு வெடிப்பதை தவிற்க மக்களும் முன்வரவேண்டும்.  மத்திய மாநில அரசுக்களும் சமூக சுற்றுசூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைக்க முன்வரவேண்டும். லைசன்ஸ் என்ற பெயரில் அரசு அதிகாரிகள் வியாபாரிகளிடம் பயமுறுத்தி கையூட்டு பெறுவதற்கான விழாவாகவே தீபாவளியை காண்கின்றனர்.  கடைகள் இட அங்கிகார சாற்றிதழ்  தீபாவளிக்கு 3 நாட்களுக்கு முந்திய தினமே கொடுக்கப்பட்டுள்ளது. அவசர-கடைகள் முக்கிலும் மூலையிலும்  இட்டு தவிற்க வேண்டிய விபத்துக்களுக்கும் காரணமாவது மட்டுமல்லாது மேலும் தன் கையிலிருந்து தவறவிட்ட பணத்தை மக்களிடமே வியாபாரிகள் அநிநியாய விலை வழியாக பறிக்கும் சூழலும் உருவாகின்றது.

மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதில் ஊடகத்தின் பங்கும் பெரிதாக உள்ளது. ஆனால் ஊடகம் விளம்பரத்தின் ஊடாக பணம் ஈட்ட முயல்வதை தவிர்த்து ஆக்கபூர்வமான செய்திகளோ தகவல்களோ மக்களுக்கு கொடுக்க முன் வருவதில்லை.  அதற்கு பதிலாக அதன் சில நிகழ்ச்சிகளே வெடிப்பதை உற்சாகப்படுத்தும் படியாகவே உள்ளது.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அரசு நிறுவனங்களிடம் அனுமதி பெற்றே வெடி நிகழ்ச்சி நடத்த இயலும்.  கானடாவில் 18 வயதுக்கு மேலுள்ளவர்கள் மட்டுமே வெடிகள் வாங்க அனுமதி உண்டு. சீனா தாய்லாந்து போன்ற நாடுகளில் கிராமப்புறங்களில் வெடிப்பதை சாதாரணமாக கொண்டிருந்தாலும் நகர்புறங்களில் வெடிக்க தடை உண்டு.  ஹோங் ஹோங் போன்ற நாடுகளில் அரசு பிரத்தியேக இடங்களில் வெடி வெடிக்கும் நிகழ்ச்சியை ஒரு பொது நிகழ்வாகவே நடத்துகின்றனர். தனிநபர்கள் பயன்படுத்துவதை சட்டத்தால் தடை செய்துள்ளனர்.  அமெரிக்காவில் ஒரே இடத்தில் குழுமி காவல் மற்றும் தீயணப்பு படையின் துணையுடன் வெடி வெடிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.

இந்தியாவின் மொத்த தேவைக்கு 90 சதவீதம் வெடி, குட்டி ஜப்பான் என்று அறியப்படும் தென் தமிழக ஊரான சிவகாசியில் தான் உற்பத்தியாகின்றது என்பது அனைவரும் தெரிந்ததே.  குடிசை, சிறு மற்றும் பெரிய   என 8 ஆயிரத்திற்க்கு மேல் தொழில்ச்சாலைகள்
 இங்கு உண்டு என கணக்கிடப்பட்டுள்ளது.   தயாரிப்பில் இருந்தே பயன்படுத்தும் பொருட்கள், ஒலி போன்றவற்றில் எந்த சட்டத்தின் பரிந்துரையும் பின்பற்றுவதில்லை. வியாபார நோக்கத்துடன் சட்டத்தை  காற்றில்   பறக்க விடும் நிகழ்வே நடக்கின்றது.  ஆய்வாளர்களின் கணக்குப்படி  10 ரூபாய் தினக்கூலிக்கு என 4முதல் 12 வயதுக்குள் குழந்தைகளை வேலைக்காக பயன்படுத்துகின்றனர் என்பதும் விவாத்திற்குரிய விடையமாகும்.http://www.maniyosai.com/cms/politics/news/Forty-thousand-child-labors-in-sivakasi-cracker-units  உலகமே அவர்கள் தயாரித்த வெடி பொருட்களை வெடித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடிய போது; ஏற்கனவே விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து வாழ்க்கை போராட்டத்தில் தவிக்கும் 3000 மக்களுடன் இந்த வருடம் வெடி விபத்தில் உயிர் இழந்த 26 குடும்பங்கள் கண்ணீரில் ஆழ்ந்து இருந்தது. மக்களுக்கு வருமானம்  தரும் தொழில் என பலர் வெடிகளை வாங்குவதை பெருமையாக எண்ணினாலும் 50 ஆயிரம் மக்கள் தொழிலாக கொண்ட இவ்வூரில் வெடிவிபத்தில் காயத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு தகுந்த சிகித்சை அளிக்ககூடிய மருத்துவ மனைகள் இல்லை என்பதும்;  70 கி.மீ தள்ளி இருக்கும் மதுரையை தேடி செல்லும் பரிதாப நிலையிலே மக்கள் வாழ்கின்றனர் என்பதும் மிகவும் மோசமான சூழலில் வாழும்  தொழிலாளர்களின் நிலையை காட்டுகின்றது. 


http://www.hindu.com/2009/10/19/stories/2009101959560400.htm இத்தருணத்தில் தங்கள் கிராமத்திற்க்கு நாடோடியாக வரும் பறவைகளுக்கு  பாதிப்பு ஏற்ப்பட கூடாது என வெடி இல்லாதும் தீபாவளி கொண்டாடலாம் என்று நெல்லையின் பக்கத்திலுள்ள கூந்தகுளம் கிராமத்திலுள்ள மக்களும் குழந்தைகளும் உலகிற்க்கு கற்று கொடுத்துள்ளனர்.

எங்கள் வீட்டு றிக்கி நாய் 3 நாட்களுக்கு பின்பு இன்று தான் கண் அசந்து தூங்குகின்றது. அது கொண்ட துன்பம் சொல்லி மாளாது.  பயம் கொண்டு உணவு அருந்தாது உறக்கம் அற்று ஓடி கொண்டே இருந்தது.   இப்படியாக மனிதனின் அற்ப சந்தோஷத்திற்க்கு என தான் வாழும் இயற்கை அன்னை, தன்னுடன் வாழும் மிருக-பறவைகள் அனைத்துக்கும் துன்பம் விளைவிப்பது சரியோ???


தீ….வலி!


தமிழர்களின் பண்டிகையே அல்லாத தீபாவளி தற்கால வியாபார கலாச்சாரத்தால்  தமிழர்களின் பண்டிகை ஆகிவிட்ட சூழலில் பண்டிகை வந்ததோ வந்தது பல வீடுகளில் இத்துடன் தீராத சண்டைகளும் வலிகளும் சேர்ந்து வந்து விட்டது.

எதிர்வீட்டு பக்கத்து வீட்டு பெண்கள் போன வாரமே வாய் சண்டை ஆரம்பித்து விட்டனர்.  பால் வாங்கி கொண்டே ..
என்ன அக்கா மக என்னிக்கு வாரா எவ்வளவு உங்க முறை? 
உடனே பரிமளாக்காவுக்கு பண்ணையார் திமிறும் ஒன்று சேர
நீங்க எவ்வளவு கொடுக்குறீக என்ற மறுகேள்வி!
  நாங்க 3 ஆயிரம் ரூபாய் தான்.  மருமகன் எதிர்பாக்க மாட்டார் ஆனா முறை இருக்கில்லே…..
நாங்க 5 ஆயிரம் எங்க வீட்டிலும் மருமகன் தங்கமானவரு ஆனா நம்ம வீட்டு பிள்ளைக்கு பட்டு சேலை எடுத்து கொடுக்க வேண்டாமா?
நீங்க கொடுங்க… கொடுங்க…எங்க மக கலியாணம் முடிந்து தான் 11 வருஷம் ஆச்சில்லே!  போதும்……….3 ஆயிரம் ரூபாய்..
பரிமளம் அக்காவுக்கு ஆத்திரம் தீரவில்லை.  வந்திட்டா என்னையை கணக்கு போட.  என் மகளுக்கு நாங்க எல்லா பொங்கலுக்கும் தீபாவளிக்கும் கொடுப்போம் என்று சொல்லி கொண்டே வாயை சரித்து வைத்து கொண்டு ஒரு பக்க பார்வையும் பார்த்து  விட்டு வீட்டிக்குள்ள போய்டாக.

திருவிழாக்கள், மகிழ்ச்சியாக குடும்பமாக கொண்டாடி மகிழ்வதற்க்கு என்றால் வீட்டு முற்றத்தில் ஆரம்பிச்சு வீட்டுக்குள் ஒரே கும்மி அடி சண்டை வேற.  போத்தீஸ், ஆரெம்கெவி சேலை விளைப்பரம் வந்த  அன்று முதல் ஆரம்பித்த சண்டை பரிமளாக்கா வீட்டுகார்  தலையை பிச்சுகிட்டு வீட்டை விட்டே போகும்  மட்டும் தொடர்ந்தது.   

அடுத்த நாள் தாய் மகன்களிடம் பேசுவது கேட்டது, அதான் அப்பவே சொன்னேன் அப்பாகிட்ட நீங்க  சண்ட போடாதீங்கன்னு.  அக்காவும் வந்திட்டா அவளுக்கு 5 ஆயிரம் கொடுக்கனும் துணிமணி எடுக்க 4 நாள் தானே இருக்கு…

மகள் முந்தின நாள் மதியம்  தன் கணவர் வீட்டில் இருந்து தன்னோட மகளை இடுப்பில் வைத்து கொண்டு காரை விட்டு இறங்கினா.  அம்மாவிடம் அலைபேசியை வாங்கி "அப்பா நீ எப்ப வர போறே உன் பேத்தி தேடுதா"ன்னு அன்பு மொழியில்  பாசமழை பொழிந்தா.   அவரும் நேற்று காலை வீடு வந்து சேர்ந்தார். மக தன் மகளிடம் தாத்தா கிட்ட வெடி வாங்கி கேளுடா….ன்னு கொஞ்சும் சத்தம் கேட்டுது. எப்பவும் நாய் மாதிரி குலைச்சு பேசுதவரு பேத்திட்ட தாத்தா கண்ணு குட்டிக்கு மத்தாப்பு வாங்கி தாரேன்னு கதைக்கும் சத்தம் கேட்டுது.  நேரம் போக போக மக அப்பாவை திட்டுத சத்தம் கேட்க தொடங்கியது “நீ என்ன அப்பன், நீ எதற்க்கு என்னை பெத்து போட்டே”… அவரும் விட்ட பாடில்ல “போ நாயை நான் செத்தாலும் என் சொத்தில ஒரு பங்கும் தர மாட்டேன்”.  “நீ ஒன்னும் தர வேண்டாம் நீ தந்தாலும் விடிஞ்சுது போ”…ன்னு மகளும் ….. ஒரு வழியா மக தன் காரில் வீடு போய் சேந்திட்டா போல் இப்போ சத்தம்  இல்லை.

நல்ல தூக்கம் நடு இரவில் சண்டை இடும் சத்தம்!! மகன் அப்பனை திட்ட, அப்பன் மகனை அடிக்க போக, பரிமளா அக்கா “போக்கத்தவனை கட்டிக்கிட்டு அழ வேண்டியது, தான் என்ன பாவம் செய்தேனோ” என்று கூக்குரல் இட... நாங்க நல்ல தூக்கத்தில் இருந்தவக விழித்து விட்டோம். சத்தம் குறைவது போல் தெரியவில்லை அது பார்லிமென்று கூட்ட தோடர் போல் போய் கொண்டே இருந்தது.  நேரம் ஆக ஆக அசந்து விட்டார்கள் போல  சத்தம் குறைந்து குறைந்து ஓய்ந்தது. மறுபடியும் அசந்து  தூங்கி விட்டோம். இப்போது அதிகாலை 3 மணி ஆகியிருக்கும் கார் திறக்கும் சத்தம். கார் ஹாண் அடித்து கொண்டே இருக்கின்றது.  ஒரே மண்டைக்கனம்… ஆரம்பம்மாகி விட்டது மறுபடியும் போர்க்களம்!   நாங்க எழுந்து ஒரு கட்டன் காப்பி போட்டு குடிச்சிட்டு  அவரவர் வேலையை ஆரம்பித்து விட்டோம்.  அங்கு தூவனம் வந்து இடி மின்னலுடன் சண்டை மழை பெய்து கொண்டிருந்தது.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிட்டு  வேலையை முடித்தும் முடிக்காமலும் பகல் 11 மணிக்கு ஒரு குட்டி தூக்கம் பிடிச்சா, மத்தாப்பு வெடி அல்ல புஸ்வானமும் இல்லை வானவெடி மாதிரி சண்டை தொடங்கி விட்டது மறுபடியும்!  ஆவேரி விழித்து பார்த்தா; பிள்ளைக இல்லை போல், பரிமளாக்கவும் அவுக வீட்டுகாரரும் சண்டை  போடுராக.  பிள்ளைக இருந்தாலும் ஒரு பலனும் இல்லை.  ஒரு பையன் இயந்திர துறையில் பொறியாளர் பட்டம் முடிச்சிருக்கானாம், பொண்ணு கணிணி துறையில் பொறியாளராம் இளைய பையன் மருத்துவம் படிக்கானம் . சண்டைன்னு வந்திட்டா அப்பறும் அவக வீடு ரங்கநாதன் தெரு சந்டை தான்!!!

வாய் சண்டை பெருத்து பெருத்து வீட்டுகாரம்மா சொல்றாக “ எலே நாயை உன்னை கட்டி என்னத்த கண்டேன், செத்து தொலையேன் நானாவது நிம்மதியா இருப்பலே…”, வீட்டுகாரர் சத்தம் தேங்கா சிரட்டையை பாறையில் உரசினாப்பிலே கேக்குது பதிலா பரிமளா அக்காச் சத்தம் “செருப்பு பிஞ்சிடும், தீபாவளிக்கு கேட்ட பட்டு சேலை எடுத்து தர வக்கில்ல பேச்சாக்கும்” ….வீட்டுகாரர் என்ன சொன்னார்ன்னு தெரியல செருப்பு வைத்து அடிக்கும் சத்தம் கேட்டது…..சப்சப்சப்ப்ப்…யார் யாரை அடித்தாங்கன்னு பார்க்க இயலவி\வில்லை….!

http://www.youtube.com/watch?v=TOOTnRxNjc0&noredirect=1 எதிர்வீட்டில மக வந்திட்டா  வெடி சத்தம் விட தாயும் மகளும் பேசும் சத்தம் தெருவை சுழற்றி அடிக்குது! நான் பாட்டு பெட்டியில் விஜயலக்ஷ்மி நவநீத கிருஷ்ணனுடைய நாட்டுப்புற  பாடலை சத்தமா  போட்டு விட்டுட்டேன்.

பக்கத்து வீட்டு பரிமளா அக்கா வீட்டிலே சத்தமே காணும் . கூடு கலஞ்ச கிளி மாதிரி பிள்ளைகள் எங்கயோ போய் விட்டார்கள். அண்ணாச்சி இருமல் சத்தம் மட்டும் அப்பப்ப கேக்குது.  மயான அமைதியாக வீடு!  தீபாவளி கொண்டாடுகிறார்கள் போல!!!!

100 வது பதிவுடன் பல ஆயிரம் நன்றிகள் மகிழ்ச்சிகளுடன்!


இன்று எனது 100 வது பதிவுடன் உங்களை சந்திக்கின்றேன்  என்பது மகிழ்ச்சியாக உள்ளது.  2008 ல் வலைப்பதிவு என்பது, தொடர்பியல்(ஊடகம்) முதுகலை பட்டத்திற்கான 'நவீன ஊடகம்'  என்ற பாடப்பகுதியில்;  பேராசிரியர் முனைவர்  ரவீந்திரன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டதே.   வலைப்பதிவு என்றால் என்ன ?, அதன் பண்பு என்ன?, உங்களுக்கு பிடித்த 5 வலைப்பதிவுகள் யாவை?, உங்களுடைய வலைப்பதிவு அறிமுகம் செய்க!, போன்ற கேள்விகள் எங்கள் தேர்வு கேள்வியாக இருந்தது.  வலைப்பதிவு உருவாக்குதல் என்பது செயல்முறை தேர்வாக இருந்தபடியால் நான் ஆங்கிலத்தில் என் முதல் வலைப்பதிவை ஆரம்பித்தேன். முதல் நாள் நம் எழுத்து ஒரு பத்திரிக்கை போன்று பதியப்பட்டு அதற்க்கு எங்கள் பேராசிரியரிடம் இருந்து பின்னூட்டம் கிட்டிய போது கொண்ட மன மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

பின்பு ஆங்கிலம், தமிழ் வலைப்பதிவுகள் என் வாசிப்பு தளத்தை ஆக்கிரமித்து கொண்டன.   இளம்முனைவர் பட்டத்திற்க்கு ஈழ வலைப்பதிவு ஆய்வில் மூழ்கியிருந்த போது ஈழவலைப்பதிவர்களின் பதிவுகளில் ஈர்க்கப்பட்டு ஈழ தமிழ் போன்று ஏன் என்னால் கேரள தமிழில் எழுதக்கூடாது என்ற கேள்விக்கு பதிலாக வந்ததே  “ஜோஸபின் கதைக்கிறேன்”  என்ற என் வலைப்பதிவு. கதைக்கிறேன் என்ற சொல்லாடல் தமிழக தமிழில் இல்லாவிடிலும்  ‘கதைக்கிறேன்’ என்ற சொல்லுடன் எனக்கு ஒரு ஈர்ப்பு ; அதில் நட்பு, கதைசொல்லுதல், சுவாரசியமான பேச்சு எல்லா அடங்கியிருக்கும் தொனி இருப்பதால் என் வலைப்பதிவுக்கான தலைப்பாகவும் தெரிவு செய்தேன்.  பின்பு ஒரு புத்தகம் வாசித்து கொண்டிருந்த போது மார்ட்டின் லூதர் கிங்கின் கூற்று “நம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது. Martin Luthar King. எனக்கு பிடித்து போன படியால் என் வலைப்பதிவின் விவரணமாக அதையே சேர்த்து கொண்டேன்.

  துவக்கத்தில் இணைய தொடர்பு, எனக்கு என்று ஒரு கணிணி இல்லாத  வேளையில்; கணவருடைய கணிணி எப்போது தன் வேலையை முடித்து கொண்டு எனக்கு கிடைக்கும் என்று  காத்திருந்து; பொது கணிணி நிலையங்களில் சென்று பதிவிடுவதே வழக்கமாக கொண்டிருந்தேன். பின்பு வீட்டில் இணையம் பெறப்பட்ட போது சில வலைப்பதிவுகள் முடிக்க என நடுநிசிகளிலும், நடு இரவு கடந்து அதிகாலையிலும் எழுதி பதிவிடுவதில் அதீத மகிழ்ச்சி இருக்க தான் செய்தது!  சிலருடைய பின்னூட்டம் உற்சாகத்தை தந்த போது சிலருடையது ஆச்சரியத்தையும், சில பின்னூட்டங்கள் என் சிந்தனையை புடம் இட செய்தது மட்டுமல்லாது  சில பாசமிகு வாசகர்களின் பின்னூட்டம் கவலை கொள்ளவும் செய்தது என்றால் பொய்யல்ல!
100 பதிவை எட்டியுள்ளதற்க்கு என் உடன்பிறவா சகோதர்களுக்கும் உயிரினும் மேலாம் நண்பர்களுக்கு என் நன்றியை தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.  தொடக்கத்தில் வாசித்து பின்னூட்டம் இட்ட பலர் இப்போது பின்னூட்டம் தருவதில்லை.  ஆனால் சில புதிய நண்பர்களின் மறுமொழிகள் என் வலைப்பதிவுக்கு மேலும் உற்சாகம் தருகின்றது.  85 பேர் என் வலைப்பதிவு நண்பர்களாக இணைந்ததிலும் பெருமை கொள்கின்றேன்.

வலைப்பதிவுகளின் பிறப்பு அமெரிக்காவை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவனில் இருந்து துவங்கியிருப்பினும் அதை காத்திரமாக பயன்படுத்துவது மத்திய- மற்றும் வயது சென்றவர்கள் என்பதே உண்மை. டிவிட்டர், முகநூல் சமூகத்தளங்கள் வந்த பின்பு வலைப்பதிவுகள் தன் களையை இழந்து விடும் என பலர் கனவு கண்ட போதும் அதன்  தாக்கம் இருந்து கொண்டே தான் உள்ளது.

வலைப்பதிவுகள் என்பது பல வழிகளில் நமக்கு உருதுணையாக உள்ளது. வாழ்க்கையில் காணும் சம்பவங்கள், அனுபவங்களை சுவையாகவும் சுவாரசியமாகவும் எழுத ஒரு தளம் கிடைக்கின்றது. எழுத்து பதிவிடல் என்பது ஒரு சில நபர்களின் கைவிரலுகள்/பேனாவுக்கு மட்டும் சொந்தம் என்பது மாறி ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. அடிதட்டு நிலையில் இருந்தே தகவல் பரிமாற்றத்திற்க்கும் தொடர்பாடலுக்கும்(Grass root communication) உருதுணையாக இருக்கின்றது என்றால் மிகையாகாது. வலைப்பதிவுகளை அங்கீகரிக்க ஊடகமோ, இலக்கியவாதிகளோ முன் வருவதில்லை. தரம், உண்மை தன்மை, பிழை என பல காரணங்கள் கூறினாலும் அரசியல் அற்ற தனி நபர் பார்வை உள்ள வலைப்பதிவுகளின் இடம் எடுத்துகொள்ளப்பட வேண்டியதே!  ஊடகத்துறையில் பணிபுரியும் பல பத்திரிக்கையாளர்கள்  தங்கள் கருத்துக்களை யாருடைய தலையீடும் இல்லாது வெளியிட லைப்பதிவுகளை காத்திரமாக பயன்படுத்துகின்றனர்மாற்று ஊடகமாகவும் இதன் பங்கு பிரமிக்க வைப்பதே.   சாதாரண மக்கள் ஊடகவியாளர்களை போன்று தங்கள் கருத்தை பகிரவும்தகவல்கள் பரிமாறி கொள்ள  உருதுணையாக உள்ளதுவலைப்பதிவுகளில் எழுத்து மட்டுமல்ல படம்காணொளிஇணைப்புகள் வழியாகவும் தகவல்களை விரைவாக எளிதாக பேண இயல்கின்றது என்பதும் இதன்  பலமே.

பலநாடுகளில் குடிபெயர்ந்துள்ள தமிழர்கர்களை  ஒரு குடைக்கீழ் கொண்டு வர வலைப்பதிவுகள் உதவுகின்றது என்றால் மிகை ஆகாது. பல பதிவர்கள் இடம் சார்ந்தும், நட்பு சார்ந்து ஒன்று கூடி தங்கள் தோழமையை நட்பை விரிவுப்படுத்தவும் வலைப்பதிவுகள் உதவுகின்றது வலைப்பதிவாராக பல சிறந்த நட்புகள், உறவினர்கள்-பெற்றோர்கள் போன்ற உறவுகளும் கிடைக்கின்றது.பெண்கள் தங்கள் கருத்தை வெளியிட, பெண்களுக்கும் கருத்து சொல்ல தெரியுமா என்று தடை இடும் சமூக சூழலில் வீட்டில் இருந்து கொண்டே ஒரு கணிணியும் இணைய இணைப்பும் உண்டு எனில்; தங்கள் கருத்துக்களை உலகம் அனைத்திலும் உள்ள வாசகர்களை குறைந்த நேரத்தில்  சென்று சேர்க்க இயல்கின்றது என்பது இன்னும் மகிழ்ச்சியான விடயம். பெண்களுக்கு தங்கள் நேரத்தை சீரியல் படம், பக்கத்து வீட்டு புரணி என்றில்லாது சமூக சிந்தனையுள்ள கருத்துக்கள் பகிரவும் உதவுகின்றது. காணும் அனுபவிக்கும் சம்பவங்களை கதையாக மற்றவர்களிடம் பகிரவும் இடம் தருகின்றது. அரசர்கள், தலைவர்கள் சரித்திரம் மட்டுமல்ல காலத்தால் அழியாத நம் சரித்திரவும் நம் மொழியால் பதியப்படுவதும் இதன் சிறப்பே.

என் வலைப்பதிவுகளின் கரு என் பயணம், நான் காணும் சில நிகழ்வுகள் சில மனிதர்கள், என் கருத்துக்கள், என்னை பாதித்த நான் ரசித்த திரைப்படங்கள், வாசிக்கும் புத்தகம், என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்த, மனம் நோக செய்த சம்பவங்கள், நான் கொண்ட துயர்கள், சுவாரசியமான விடயங்கள் என போகின்றது.   பல வேளைகளில் கிடைத்த கதைக் கருக்கள், பாத்திரம் கழுவும் போதும், துணி துவைக்கும் வேளையிலும், தனிமையான பயணங்களிலும் என் மனபுத்தகத்தில் பதிவாக உருமாற ஆரம்பிக்க; பின்பு என் கணிணியில் பதிவது வழியாக உங்களிடமும் வந்து சேர்கின்றது. பல போதும் நம்மை பாதித்த சம்பவங்கள் உறவினர்களிடமோ நட்புகளிடமோ பகிரும் போது ஏளனத்திற்க்கும் நகைப்புக்கும் காரணமாகும் போது அதை கதையாகவும் அனுபவமாகவும் எழுதுவது மட்டுமல்லாது அதற்க்கு நம் வாசகர்களிடமிருந்து பெறப்படும் பின்னூட்டம் தெளிவான சிந்தனைக்கும் இட்டு செல்கின்றது.  மேலும் வாழ்க்கையை சுவாரசியமாக நோக்கவும் கற்று தருகின்றது. நம்மை மட்டும் நோக்காது நம்மை சுற்றியுள்ள உலகையும் நோக்க வலைப்பதிவு எழுத்து கற்று தருகின்றது.

இப்படியாக என் 100 வது பதிவுடன்,  மகிழ்ச்சியாக இன்னும் ஆத்ம திருப்தியுடன் மன பலனுடன் பயணித்து விட்டேன்.  இனியுள்ள நாட்களும் இப்படியே இருக்க வேண்டும் என்று ஆசிக்கின்றேன் உங்கள் வாழ்த்துதலையும் எதிர்நோக்குகின்றேன். உங்கள் கருத்துக்களையும் பதிந்து  செல்ல வேண்டுகின்றேன். இனியுள்ள வலைப்பதிவு பயணத்திற்க்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை!!!!