22 Aug 2011

மனதோடு கதைப்போம்: Srikandarajah கங்கைமகனின் ஆத்மலயம்


மனதை நினைத்தால் ஒன்றும் பிடிபடவில்லை.  நேற்று வரை அக்களிப்போடு வண்ணத்து பூச்சி போன்று துள்ளி பறந்து திரிந்த மனம் துவண்டு விட்டது. மலையின் உச்சியில் சுதந்திரமாக நிற்கின்றேன் என்று சொல்லிய மனம் இப்போது  பள்ளத்தில் விழுந்தது போல் இருந்தது.  என் எண்ணங்கள் “சிறந்தது எடுத்து கொள்” என்று சொல்கின்றதை  என் மனம் “உனக்கு வேண்டாம் என்று தடுக்கின்றது”, மனதிற்க்கு பிடித்த சில விடயங்களோ புத்தி “வேண்டாம் வேண்டாம் ஆபத்து” என எச்சரிக்கின்றது.   மனதே நீ யார், நீ எங்கு இருக்கிறாய், நான் உன் கையிலா அல்லது நீ என் கையிலா ஒன்றும் புலன்படவில்லை. என்னை சுற்றி அரசியல், சமூகம், பக்தி, அறிவு என்ற தலைப்பில் 7-8 புத்தகம் விரிந்து கிடைக்கின்றது . ஆனால் வாசிக்க  ஒன்றிலும் மனம் பதியவில்லை. சினிமா படம் கணிணி திரையில் ஓடுகின்றது நானோ தூக்கத்தில் ஆழ்ந்து விட்டேன், கட்டிலில் சென்று படுத்தால்  வந்த தூக்கம் என்னை விட்டு விலகி சென்றது போல் இருந்தது. கடலில் தத்தளிக்கும் ஓடம் போல் இருந்தது என் மன நிலை.  இனி மனதை பற்றி தெரிந்து கொள்வது தான் என உறுதி எடுத்தேன். எது எதையெல்லாமோ பற்றி விழுந்து விழுந்து படிக்கின்றேன் என்ன ஆட்கொள்ளும் என்னோடு உறவாடும் என் மனதை பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம் என்று தேடிய போது எனக்கு கிடைத்த புத்தகமே “ஆத்மலயம்’. இதன் ஆசிரியர் டென்மார்க்கை சேர்ந்த ஈழ தமிழரான சிறிகந்தராஜா கங்கைமகன்  ஆவார்http://www.facebook.com/srikandarajah.kankaimakan.  புத்தக வாசிப்பிலும் எழுத்திலும் முத்திரை பதித்துள்ள இவர் சிறந்த சொற்பொழிவாளரும் அரட்டை அரங்க பேச்சாளரும் ஆவார். 



லண்டனில் ஏப்ரில் 17 தியதி இதன் வெளியீடு நடந்தது.  தமிழகத்தில் தகிதா பதிப்பகம் வழியாக வந்துள்ள  இப்புத்தகம் தமிழகத்தில் எல்லா ஊர் கடைகளில் தற்போது கிடைக்கின்றது. 


ஆசிரியரின் கூற்று படி 
ஆன்மாவும் வ்வொரு ஆன்மாவும் நிறைவு நிலையை அடையவேண்டும் என்பதே விதிக்கப்பட்ட நியதி.  வ்வோர் உயிரும் முடிவில் அதன் பிராப்தத்தின்படி பரிபூரண நிலையை அடையவே இறைவனால் வழிநடத்தப் படுகின்றன. இப்போதைய நமது வாழ்வு முன்பு நாம் செய்த செயல்களின் பயனாக நாம் மனத்தால் நினைத்த நினைப்புக்களின் பலனாக எமக்குக் கிடைத்ததாகும். இதுபோன்றே இனி வரப்போகும் வாழ்க்கை யானது தற்பொழுது நாம் செய்யும் செயல்களுக்கும், சிந்திக்கும் சிந்தனைகளுக்கும் ஏற்ப அமையும் என்பது விதி. ஆதனால்தான் நமது விதியை நாமே நிர்ணயித்துக் கொள்கின்றோம் என்பதனை ரிசிகளும், ஞானிகளும் தங்களது மெய்ப்பொருள் கருத்துக்களாக மனிதனின் காலடியில் காணிக்கையாக வைத்துச் சென்றுள்ளனர்.  மனிதனது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் நமக்குக்கிடைத்த இடைத்தங்கல் முகாம் தான் இந்த உலகம். நீ ஏற்றுக்கொண்ட பாத்திரமும் அங்கேதான் நடிக்கத் தொடங்குகின்றது.ஒரு உயிரின் மனத்தின் வலிமையினால் ஓர் ஆன்மாவின் உயர் ஆற்றல்களும், அதன் சாத்தியக் கூறுகளும் சிலருக்கு விரைவாகக் கிளர்ச்தெழுகின்றன. ஆன்மவிழிப்பு உண்டாக்கப்படுகின்றது. அதனால் ஆன்மிகத்தேடல் விரைவுபடுத்தப்படுகின்றது. முடிவில் மனிதன் புனிதமானவனாக, நிறைவுள்ள வனாக ஆக்கப்படுகின்றான். இக்கருத்துக்களை மையப்பொருளாக வைத்து வெளிவரவிருக்கும் ஓர் ஆனமீகத் தேடலுக்கான தலைப்பே ஆத்மலயம் என்ற நூலாகும்.http://udumalai.com/?prd=aathmalayam&page=products&id=9103
                                                                                                                                                                                      மனதை பற்றியும் நம் சிந்தனைக்கும் வாழ்க்கைக்கும் நம் மனதிற்க்கும் ஆன தொடர்பை பற்றியும் மனதை கட்டுக்குள் வைக்கும் தியானத்தின் தேவை சிறப்பை  பற்றியும் பகிர்ந்துள்ளார். மனதை வெறுமையாக வைப்பது வழியாக எவ்வாறு மன மகிழ்ச்சியுடன் வாழலாம் என்றும் கதைத்துள்ளார்.

ஒருமனிதன் எந்தப் பொருளில் அதிகமாகப் பற்று வைக்கின்றானோ அந்தப் பொருட்களாலேயே அவன் துன்பப்படுகின்றான். எந்தப் பொருட்களில் ஒருவன் பற்று வைப்பதில்லையோ அந்தப் பொருட்களால் அவனுக்குக் துன்பமும் தோல்வியும் இல்லை.

மேலும் பயம் என்ற நம் உணர்வை களைய வேண்டிய தேவையும் மனதை தூய்மையாக வைக்கும் வழி முறைகள் தற்போதைய உலகின் மகா விபத்தான மனிதனின் பொறாமை குணம், நாட்டை மட்டுமல்ல குடும்பத்தை அழிக்கும் வன்முறையும் பற்றியும் சிறப்பாக சொல்லியுள்ளார்.

எனவே தெளிந்த புத்தியும், மனோவேகமும் கொண்டு ஆற்றப்படும் கருமங்களே ஒருவனது வாழ்வில் நிலைத்து நிற்கின்றன. இவ்வாறான செயற்பாடுகளை ஒருவன் தொடர்ந்து செய்யவேண்டுமானால் உடலில் சக்திப் பெருக்கமும், புத்திக் கூர்மையும் அவசியமாகின்றது. இதற்கு ஆரோக்கியமான அளவான உணவும், மன ஒழுக்கமும் இன்றியமையாததாகும்.

என் கலக்கமுற்ற மனதிற்க்கு  மருந்தாக இருந்தது இப்புத்தகம். மனதை பற்றியும் அதை காத்திரமாக கவனித்து நம் வாழ்வை மகிழ்ச்சியாக கொண்டு செல்லவும் வழிமுறைகள் கிடைத்தன. நம் மனம், ஆன்மா மேல் அக்கறையுள்ளோர் நிச்சயமாக வாசித்து தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகம்.

ஆசிரியுடைய எழுத்து நடையும் ஆத்மீய புத்தகங்கள் வாசிக்கும் போது நாம் அனுபவிக்கும் விரசம் தட்டாது புரியும்படி  நம் வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சம்பவங்களின் ஊடை சுவாரசியமாக நம்மை நடத்தி சென்றுள்ளார்.  கொடுகாற்றில் அகப்பட்ட கப்பல் போல் இருந்த நம் மனம்  தெளிவான கரை வந்து சேருவதை புத்தகத்துடன் பயணிப்பவர் யாவரும் உணரலாம்.

9 comments:

  1. புத்தக அறிமுகத்திற்கு நன்றி Josephine ...

    ReplyDelete
  2. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன் - குறள்.

    ReplyDelete
  3. மனதை ஒரு நிலைப்படுத்தி வாழ்வில் வளம் பெறுவதற்கேற்ற சிந்தனைகளைத் தாங்கி வந்துள்ள நூலின் அறிமுகத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  4. முன் செய்த புண்ணிய பலன் , கர்ம வினைப்படிதான் நம் பிறப்பு நிர்ணயிகப்படுகின்றது. நமது நிகழ்கால வாழ்க்கை இறந்த காலத்தின் பலன் மட்டுமல்ல, எதிர்கால வாழ்கையின் பிரதிபலிபும்கூட. நம்மால் இறந்த காலத்தை மாற்ற இயலாது ஆனால் நிகழ்காலத்தினால் நம் எதிர்காலத்தை நிச்சயிக்க முடியும். இதனை நன்கு உணரும்போது மனம் தெளிவுபெருகின்றது, சிறந்த சிந்தனைகள் உதிக்கின்றது, உயரிய ஆற்றல் புரிகின்றது. தெளிந்த மனம், சிறந்த சிந்தனை, உயரிய ஆற்றல் உள்ளவன் புனிதன் ஆவான். இக்கூற்றை வலியுறுத்துகின்றது ஆத்மலயம். இதனை ஈன்ற ஆசிரியர் திரு.கங்கைமகனுக்கு வாழ்த்துக்கள். இப்புத்தகத்தின் ஆழ்த்த கருதுக்களை மிக எளிய முறையில் FB யில் பகிர்ந்துக்கொண்ட திருமதி ஜோசபின் பாபாவுக்கு நன்றிகள் உரித்தாகுக. மனிதன் புனிதனாகின்றனோ இல்லையோ, மனிதன் மனிதனாக வாழட்டும். ஆத்மலயம் அதற்கு துணை புரியட்டும்.

    ReplyDelete
  5. அழகாக எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளருக்கு இப்படி ஒரு ரசிகை கிடைத்தது அதிஷ்டம். அதேபோல ரசிகைக்கும் இப்படி ஒரு எழுத்தாளர் அறிமுகம் ஒரு நன்கொடை. இருவருக்கும் என் அன்புகலந்த வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

    ReplyDelete
  6. அருமையான அறிமுகம். நன்றி, சகோ.

    ReplyDelete
  7. நூலறிமுகம் அருமை .
    உங்கள் திறனாய்வு அந்த நூலை முழுமையாக வாசிக்கும் ஆவலைத்தூண்டுகிறது. நன்றி.

    ReplyDelete
  8. கருத்து தெருவித்து என் கருத்திற்க்கு வலு சேர்த்த என் நண்பர்களுக்கு வணக்கங்கள்!

    ReplyDelete