6 Aug 2011

அம்மாவுக்கு ஓர் கடிதம்!


அன்புள்ள அம்மா, உன் பாச மகள் எழுதி கொள்ளும் கடிதம்.
                                                                                                                                                                                                                                                                                                                                                                      அம்மா இன்றும் கொடும் துர்-கனவு கண்டு எழுந்து விட்டேன்.  என் இதயம் ஈட்டியால் குத்தியது போல் வலிக்கின்றது.  நான் என்ன தவறு செய்தேன்.  உன்னை மறக்க நினைக்கும் தோறும் நினைவுகளில் தினம் வந்து என்னை கொல்லுகின்றாய்.    அதன் காரணம் தான் என்னால் உணர இயலவில்லை .  2 வயதில் 4 வயது குழந்தையாக வளர்க்கப்பட்டேன். 14 வயது வந்த போது நீ என்னை 20 வயது மங்கை ஆக்கினாய், திருமணம் வழியாக ஒவ்வொரு தாயும் சுகமாக வாழ அனுப்பும் போது நீயோ என்னை போரிட அனுப்பினாய். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து உன் கண் அசைவில் தானே நான் சிந்தித்தேன், இருந்தேன், நடந்தேன், வளர்ந்தேன்.  உன் முன் கோபத்தால் தேவையற்று தண்டித்து விட்டு தேவைக் கதிகமான பாசத்தால் நீ அருகில் வரும் போது நான் எல்லாம் மறந்தேன். ஆனால் அதுவெல்லாம் இன்று என்னை இப்படி வதைத்து சாம்பலாக்கவா ?
                                                                                                                                                                   நீ சுந்தரம் டெய்லரிடம் ஒரு மாபெரும் டிசைனர் போல் எனக்கென துன்னிய சிவப்பு நிற கவுண் இட்டு   முதலாம் வகுப்புக்கிற்க்கு சென்றது நினைவு வருகின்றது.   உன் பிரிவை தாங்காது பள்ளி திரும்பி வீடு வந்து நீ பூட்டி இட்ட அரை வாசல் கதவில் பிடித்து தொங்கி அழுததும் நினைவு வருகின்றது.   பின்பு நீ வாங்கி கொடுத்த எனக்கு பிடித்த தின் பண்டம் போண்டாவை அல்லது பண் ரொட்டியை வாங்கி தின்று விட்டு நீ எனக்கு முகம் கழுகி பவுடர் இட்டு, பொட்டு,பூ வைத்து முத்தம் இட்டு அனுப்பும் பள்ளி நாட்கள் மட்டுமல்ல;  10ஆம் வகுப்பு வரையிலும் இரட்டை சடை பிண்ணி,  சோற்றை வாயில் ஊட்டி விடும்  நாட்களும் தான் நினைவில் வந்து மறைகின்றதுதேவை இல்லாத இடத்தில் சிரித்தேன், பேசினேன் என்று உன்னிடம் திட்டு வாங்கி அழுத்ததும் நினைவில் உள்ளது.
                                                                                                                                                               முதல் முதலாக  உயர்நிலை- பள்ளி படிப்புக்கு என உன்னை பிரிந்த நாட்கள் ஓடி வருகின்றது என் நினைவில். வாரம் 7 நாட்களும் உனக்கு நான் கடிதம் எழுதினேனே, அந்த கடித எழுத்து என் மகன் பிறக்கும் மட்டும் என்னை தொடர்ந்த்து வந்தது. நீயும் நானும் தாய்- சேயா, தோழிகளா என்று நம் உறவுகள் பொறாமைப் படும் மட்டும் நீ அன்பை பொழிந்து வளர்த்தாய்.  ஆனால் விடுதியில் இருக்கும் போது ஒரு கடிதம் வழியாக  “உனக்கு மாப்பிள்ளை முடிவெடுத்துள்ளோம் தட்டும் மாற்றி விட்டோம்  இனி எங்கள் வாக்கை காப்பாற்றுவது  உன் விருப்பம்என்று நீ கொடுத்த சுதந்திரவும் நினைவில் இருக்கின்றது.   
                       கல்யாண பந்தலில் அனுப்பும்போது கூட நீ என்னை வேட்டைக்கு என்பது போல் உன் பணம் நகை பறி போகின்றது என்று அழுது சாபம் இட்டு அனுப்பி விட்டாய்.  நான் ஏதும் மறுபேச்சு கேட்டேனா?  "என்னை மறந்தால் நீ விளங்க மாட்டாய்" என்று உன் அன்பு மிகுதியால் நீ ஆசிர்வதித்த வார்த்தைகள் தான் என் நெஞ்சில் இப்போது மிதக்கின்றது .  அந்த சாபத்திற்க்கு ஆளாகும் நாள் என் வாழ்வில் ஒரு போதும் வராது என்று நான் நினைத்தது இன்று பொய்யாகி விட்டதே என்று தான் இன்று பரிதபிக்கின்றேன்.
                    எனக்கு கிடைத்த வாழ்க்கையில் சிறப்பாக ஓட நான் துடித்து கொண்டிருக்கின்றேன். இன்றும் உன்னை கட்டி பிடித்து அம்மா என்று உன் அருகில் வர ஆசிக்கின்றேன் நீயும் மக்களே என்று அழைத்து முத்தமிடுவாய் என்று நினைப்பது உண்டு.  ஆனால் நீ என்னை காணும் போது உன் கணவருக்கு இப்போது வருமானம் எவ்வளவு, உனக்கு வேலை கிடைத்து விட்டதா என்ற கேள்வி மட்டும் தான் வரும் என்பதும் எனக்கு தெரியும்

                           தம்பி வெளியூரில்  சென்று படிக்க மாட்டேன் என்ற போது என் படிப்பையையும் சேர்த்து மட்டுப்படுத்தியதும், நம் குடும்ப சொத்தை காப்பாற்ற என்னை அடி மாடு போல் விற்றதும் கூட இப்போது தான் புரிந்து வருகின்றது. இனி உன்னிடம் வந்து மன்னிப்பு கேட்கலாம் என்றாலும் என்ன தவறு நான் செய்தேன் என்று நான் கேட்டு கொண்டே இருக்கின்றேன் தற்போது.

திருமணம் என்ற பெயரில் கடலுக்கும் பேய்க்கும் நடுவில் கொண்டு விட்டு விட்டு நீயும் சேர்ந்து வேடிக்கை பார்க்கின்றாய்.   என்னை வைத்து தாய் பாலில் விஷம் கலந்து விட்டது என்று சொல்ல வைத்தாய்.  தாய் பாசத்திலும் வேஷம் உண்டு என்று என்னை நம்ப வைத்தாய்.  எனக்கு என்று ஒரு உலகம் தந்தாயா? உன் கையிலும், கண்ணிலும் வளர்ந்த என்னால் யாரிடமும்  நட்பு பேணி பழகவும் தெரியவில்லைஎனக்கு சுற்றும் உன்னை தவிற வேறு உலகம் ஏன் தரவில்லை நீஇன்றும் சுற்றும் முற்றும் யாரும் இல்லாத உலகில் நான் என்னுடன் கதைத்து கொண்டே இருக்கின்றேன், தூக்கத்திலும் எனக்கு நிம்மதி தருகின்றாயா? அழுது விழிக்கின்றேன் என் கனவில் கூட எனக்கு நீ விடுதலை  தரவில்லை! 300 கி.மீ உன்னை விட்டு பிரிந்து வரும் போது தனிமையில் அழுது புலன்பினேன் இன்றோ 3000 கி.மீ உன்னை விட்டு போய் விட மாட்டேனா என்று துடிக்கின்றேன்.

அப்பா சொன்னார்கள் உனக்கு பிடிக்காத அத்தை வீட்டிற்க்கு சென்றது தான் கோபம் என்று நான் வந்ததோ  3 வருடம் கடந்து உனக்கு ஒவ்வொரு முறை நான் வரும் போதும் ஒவ்வொரு அத்தையுடன் ஊடலில் இருப்பாய். நான் என்ன பிழை செய்தேன் அவர்களிடம் பேசக் கூடாது என்று. அடுத்த முறை நான் வரும் போது நீ இந்த அத்தையிடம் கூடலிலும் இன்னொரு அத்தையிடம் ஊடலிலும் இருப்பாய் என்றும் எனக்கு தெரியும். எனக்கு யாரும் சத்திருவுமில்லை உற்றவர்களும் இல்லை என்றும் தெரியும். இதற்க்கு என அப்பாவையும் என்னிடம் கதைக்க கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் உண்டு.  அல்லது இந்த காரணம் சொல்லி உன் மகனுக்கு அப்பா சொத்தை முழுதுமாக சேர்க்கும் வேலையின் இதுவும் ஒரு சதி வேலையா?

                 இன்றும் உன் பெருமைக்காகவும் உன் ஆசைக்குமாக தான் வாழ்கின்றேன்நீ ஆசைப்படுவது போல் கழுத்து, காது, கை நிறைய நகை அணிந்து என் பங்களாவில் இருந்து என் காரில் உன்னை பார்க்க வருகின்றேன், என் மக்களே என்று ஓடி வருவாயா என்று  நான் பார்க்க வேண்டும்.   அன்றாவது நம் உறவினர்கள் வீட்டிற்க்கு அழைத்து செல்வாயா, நம் கோயில் திருவிழா சப்பரம் காண தான் அழைத்து செல்வாயா?


                  இது எல்லாம் காலம் செய்த கோலமா அல்லது என் ஜென்ம பாபமா ஒன்றும் விளங்கவில்லை எனக்கு. உனக்கு புரிந்தால் என்னை போல் ஒரு கடைசி கடிதாசு எழுதி தெருவித்து விடு அம்மாஇதை விட நான் பிறந்த போதே அழகு இல்லை என்று கம்பிளிக்குள் ஒளித்து வைத்திருந்த போதே  கொன்றிருக்கலாம் தானே.

ஒரு துளி கூட நிம்மதியான தூக்கம் இல்லை எனக்கு!  நீ வளர்த்த உன் மகிமையா அல்லது என் எல்லா இழப்பிலும் நான் உன்னை தேடுகின்றேனாஎன் மனசாட்சிக்கு ஒரே ஒரு கவலை நீ என்னை விட்டு முன்னே போய் நான் உன் சாபத்தில் வாழ்வதை விட,  நீ  வந்து மக்களே என்று விடும் ஒரு சொட்டு கண்ணீரில் என்  ஆன்ம சாந்தி அடைய வேண்டும் என்பது தான்.

(என்னிடம் தன் கவலையை பகிர்ந்த என் உயிர் தோழிக்கும் அவர் அம்மாவுக்கும் இந்த கடிதம் சமர்ப்பணம்!!! )

9 comments:

  1. vow ..Josephine ...டூ மச்...

    உங்கள் தோழியின் அம்மாவின் பாதணிகளுக்குள் இருந்தும் பாருங்கள்...

    இது கதையாயினில் நல்ல நடை என்று சொல்லி போயிருப்பேன்...இது ஒரு கடந்த கால தாய்க்கும் இக்கால மகளுக்கும் நடக்கும் உறவு யுத்தமாகிபோனதால்...வழி விட்டு ...உங்கள் பாணியில் அவர்கள் சண்டை செய்வார்கள் ...பிறகு சேர்ந்து கொள்வார்கள் என்று
    மனதை தேற்றிக்கொள்வதை தவிர வேறென்ன செய்ய...

    ReplyDelete
  2. உங்கள் வலியும்,வேதனை,ஆதங்கமும்,ஏக்கமும்,ஆத்திரமும் புரிகிறது.நமக்கு கொடுத்துவைத்தது அவ்வளவுதான்.நம் பிள்ளைகளை நம் இறுதிமூச்சுள்ள வரை நேசிப்போம் தோழியே!!!!

    ReplyDelete
  3. >>>:>>>>திருமணம் வழியாக ஒவ்வொரு தாயும் சுகமாக வாழ அனுப்பும் போது நீயோ என்னை போரிட அனுப்பினாய்.

    டச்சிங்க்

    ReplyDelete
  4. மற்றவர் கஷ்டங்களை ஷேர் பண்ணிக்கொள்ளும்போது நம்மை அது அதிகம் பாதிக்காமல் பார்த்துக்கனும், மன ரீதியிலான பாதிப்புகளை அது தரலாம். தவிர்த்தல் நலம்

    ReplyDelete
  5. அந்த பெண்ணின் தன் அம்மாவிடம் ஏக்கம் கொள்வதாக தெரிகிறது....

    ReplyDelete
  6. வணக்கம் பாபா. மணப்பெண்ணுக்கு தெரியாமல் தட்டை மாற்றிவிட்டார்கள். அப்போது அவள் முதலாம்முறை பலிக்கடா (கோவிலில் வெட்டப்படும் ஆடு)ஆகிவிட்டபள். கடலுக்கும் பேய்க்கும் நடுவில் விட்டார்கள் என்பதில் பேய் கடலுக்குள் நிற்கிறதா? கரையில் நிற்கிறதா என்று விளங்கவில்லை. உண்மை கதை என்பதால் உள்ளத்தை நெருடுகிறது. அன்புடன் கங்கைமகன்

    ReplyDelete
  7. கடலுக்கும் பேய்க்கும் நடுவில் விட்டார்கள் என்பதில் பேய் கடலுக்குள் நிற்கிறதா? கரையில் நிற்கிறதா என்று விளங்கவில்லை. ////காமடியை ரசித்தேன்!!!

    ReplyDelete
  8. சில பொழுது நம்மை, நம்மை சுற்றியுள்ளவர்களின் மனக் கவலைகளை பகிரும்போது நாம் அறியாதே சில ஆறுதல் தேடுகின்றோம். பதிவுக்கு வந்தது மட்டுமல்லாது கருத்து சொல்லி சென்ற தோழமைகளுக்கு என் நன்றியை மகிழ்ச்சியை பகிர்கின்றேன்.

    ReplyDelete