header-photo

பிறந்த நாள் நினைவுகள்!

பிறந்த நாள் விழாக்கள் பெரிதாக கொண்டாடப் பட்டதாக நினைவில் இல்லை. இருப்பினும் பிறந்த நாள் அன்று பாயசம் செய்து பக்கத்து இரு வீடுகள் எதிர் வீடு சேச்சிக்கும் எங்கள் குடும்ப நண்பர் தாசன் மாமா  வீட்டுக்கு சென்று கொடுத்ததும் ஞாபகம் உள்ளது. பிறந்த நாள் அடி, திட்டு வாங்க கூடாது என்று முன் நாளே அறிவுறுத்தப்பட்டிருக்கும். அன்றய நாள், திடீர் தாக்குதலான அம்மாவின் விளக்குமார், செருப்படிக்கும் பயப்பட தேவையில்லை. புது உடுப்பு கிடைத்திருக்கும் அந்த உடுப்பை இட்டு காலை ஆலயம் சென்று திருப்பலியில் ஆண்டவரிடம் ஆசிர்வாதம் பெற்று திரும்ப வேண்டும் என்பது அம்மாவின் கட்டாய சட்டமாக இருந்த்து.  பள்ளிக்கு, சீருடை என்பதால்  புது துணி, அப்படியே வரும் ஞாயிறு ஆலயம் செல்லும் வரை பெட்டியில்  காத்து இருக்கும் என்பதே வழமை!

புது துணி வாங்கி தருவது அம்மா என்பதால் அம்மாவுக்கு பிடித்த மாடல், கலர் என்பது என் மலையாள தோழிகளிடம் ஜாடை காட்ட இயலாது என்பதும் ஒளித்து வைக்கப்பட்ட மாபெரும் துயர்களில் ஒன்றாக இருந்தது.  என் மலையாளத் தோழிகள் குட்டை பாவாடை, விதவிதமான உடுப்புகள், கையில்லாத சட்டையுடன் டயான கட்- ஸ்டெப் கட் என்று நாகரிக தலை முடி கட்டுடன் பள்ளிக்கு ஸ்டையிலாக வரும் போது நம் கலாசாரம்… அவளுக காலை கையை காட்டும் போல் ஆகாது, நம் சொந்தகாரர்கள் பார்த்தால் ஏதும் கதைத்து விடுவார்கள் என்று அரைப் பாவாடை முக்கால் பாவாடையாகவும் முடி பின்னி பூவைத்து விடும் அளவுக்கு வளர்த்து பின்னி  அனுப்பினார்.

அம்மாவுக்கு எல்லாம் முழுமையாக அழகாக அவரின் ரசனையில் இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் உண்டு! அதனால் துணிமணிகள் துவைப்பது, தேய்த்து அடக்கி வைத்து அதை அந்தந்த நாட்களுக்கு இடுவிப்பது மட்டும் அல்லாது;  என்ன வேலையாக இருந்தாலும் தலையையும் அம்மாவை வாரிவிட்டு,  சொல்லியும் கேட்காது சில பொழுது இரட்டை சடை பின்னி பூவை தோரணமாக வைத்து கண் மறையும் வரை வீட்டில் இருந்து பார்த்து டாடா இட்டு வழியனுப்பி ஒரு ஆயிரம் அறிவுரைகள் தந்து அனுப்பி விடுவார்.  மலையாளப் பயலுகளை நம்ப இயலாது தேவை இல்லாத வம்பில் மாட்டி விட கூடாது நாம் பிழைக்க வந்த இடம்; பார்வையை அங்கு இங்கு அலைய விடாக்கூடாது பார்த்துக்கோ; நேரா ரோட்டை பார்த்து நடக்கணும் போகும் போது அந்த வலது பக்கமா போ வரும் போது இடது பக்கமா விரைந்து வா....  இப்படியாக என் தாத்தா, அப்பா என எங்கள் குடும்ப மானமே என் தலையில் சுமக்க வைத்து அனுப்பி விடுவார்கள்.

அம்மா கண் மறையும் மட்டும் தலையில் பூ இருக்கும் பின்பு பூவை எடுத்து என் மலையாளி கூட்டாளிகள் போல; ஒரு எலி வால் அளவுக்கு மல்லிகை அல்லது பிச்சிபூ மட்டும் தலையில் வைத்து விட்டு, வைத்திருக்கும் கனகாம்பரம் ரோஜாப்பூ எல்லாம் பைக்குள் பத்திரமாக இருக்கும் மாலை சூட்டி கொள்ள என.  ஒரு பிறந்த நாள் அன்று இப்படி தான் நான், ஒரு தமிழ் இரட்டை வால் குருவியாக போக என் நண்பிகள் இதை விட “வைசாலி” கெட்டு உனக்கு நன்றாக இருக்கும் என புதியதாக வந்த படத்தின் மோடலில் வடிவா சீவி சிங்காரித்து அனுப்பினர்.  என்னை எதிர்பார்த்து நின்ற அம்மாவுக்கு என்னையும் முந்தி தலையும் புது மாடல் கொண்டையும் தெரிய அம்மாவுக்கு கோபம் பொத்து கொண்டு வந்தது. வாழ்க்கையில் அந்த தலைமுடிக் கெட்டை நினைத்து பார்க்க கூடாது என்றளவுக்கு தலையை கலைத்து முடியை கையில் சுற்றி  மாவு ஆட்டுவது போல் ஒரு ஆட்டு ஆட்டி, எண்ணை தேய்த்து அவர் விரும்பும் மாடலுக்கு கட்டி விடும் வரை அடங்கவில்லை!  

ரஷியா புரட்சி முதலாம் சுதந்திர போராட்டத்தின் முடிவில்  ஆரம்பித்திருக்கலாம் ஆனால் என் சுதந்திர  போராட்டம் இடுப்பளவு உள்ள தலை முடியை கழுத்தளவு வெட்டுவதில் தான் ஆரம்பித்தது. பின்பு மிகவும் வற்புறுத்தபட்டு திருமணத்திற்க்கு என மறுபடியும் தலைமுடியை இடுப்பளவாக வளர்க்கப்பட்டேன். மாமியார், பெண் என்றால் தலை முடி தான் அவசியம் நீ ஒரு போதும் முடியை வெட்ட கூடாது அது எங்கள் குடும்ப சட்டம் என்று தலை நிறைய வலுகட்டாயமாக தேங்காய் அண்ணை பண்ணையாக மாற்றியதும்; அவரிடம்  வந்த கோபம் அவர் தலையையா   வெட்ட இயலும் என் தலை முடியை வெட்டி கோபத்தை என் சுதந்திரத்தை வெளிப்படுத்தி கொண்டேன்!

இப்படியாக பிறந்த நாள் என்றவுடனே என் குழந்தைப் பருவ நினைவாக வருவது பாயசம் சாப்பிடுவதும் செய்த விசேஷ உடை சிகை அலங்காரமாகும்.

பின்பு பெரியகுளம் கல்லூரியில் படித்த போது தான் ‘பிறந்தது’ இவ்வளவு நல்லதா என்று எண்ண வைத்தது அங்குள்ள கொண்டாட்ட நாட்கள்! காலையில் குளிக்க வரிசை பிடிக்க வேண்டும் என்ற யாராலும் அசைக்க இயலாத விதி, பிறந்த நாள் குழந்தைக்கு மட்டும் தளர்த்தப்படும்(திடீர் என்று தண்ணீர் நின்று அன்று கூட அவரால் குளிக்காவிடில் என்னாவது?).   காலை முதல் அன்றைய இரவு வரை கனவு கன்னி போன்று அவர் அன்றைய ஸ்போன்சர் குழந்தையாக பவனி வருவார். எங்கள் வார்டன் அன்று சேட்டை செய்தாலும்  திட்ட மாட்டார். அவருக்கான உணவுக்கு வேண்டி சண்டையிட்டு முண்டி அடித்து வரிசயில் நிற்க வேண்டியதில்லை. சில ரொம்ப நல்ல தோழிகள் என்றால் அவருக்கு தெரியாதே பணம் தங்களுக்குள் பிரித்து கேக் வாங்கி happy birth day to you……பாட்டு பாடி தங்கள் பாசத்தை தங்கள் அப்பாக்களின் காசால் வாங்கிய பொருளால் பரிசு கொடுத்து கொண்டாட முன் வருவார்கள். 

இவை யாவும் கேலி கிண்டலுடன் அவதானிக்கும் மாற்று கருத்து குழுவில் இருந்ததால் எங்கள் பிறந்த நாட்கள் வரும் போது மிகவும் ரகசியமாக காக்கப் பட்டு காலேஜ் காண்டீனில் நான் பச்சி -வடை மட்டும் வாங்கி தருவேன்  நீங்க காப்பி- டீ வாங்கி கொள்ள வேண்டும் என்ற டீலுடன் எங்கள் கொண்டாட்டங்கள் நடைபெறும். 

மூன்றாம் வருடம் வந்த போது நாங்கள் கல்லூரியிலும் விடுதியிலும் பெரிய அக்காக்கள் என்பதால் பல இறுக்கங்கள் தளர்த்த வேண்டி வந்தது. அந்த வருடம் பிறந்த நாள் கொண்டாட்டம் தோழிகளின் வற்புறுத்தலால் சிறப்பாக நடைபெற்றது.   தலையில் வைக்க 50 மல்லிகைப்பூ தேவையுள்ள எனக்கு 1000 மல்லிகை பூக்களால் அலங்கரித்தனர் . நட்பினால் வந்த அன்பு தொல்லையால் அன்றைய படிப்பு நேரத்தையும் விரையப்படுத்தி கோமாளியாக்கினர். ஆனால் அதன் சந்தோஷத்தை அடுத்த வருடம் என்னவர் வீட்டில் இருந்து கொண்டு மலரும் நினைவாக மிகவும் ஆசையுடன் அனுபவித்தேன். என்னவர் வீட்டில் ஆண்களுக்கே பிறந்த தினம் கொண்டாடுவது இல்லை (பெண்களுக்கு தேவை இல்லை) என்ற விதி உள்ளதாகவும் {ஆனால் வயதை மட்டும் கேட்டு மறுபடியும் சரிபார்த்து கொண்டனர்} திருமணமான பின்பு திருமண நாட்கள் மட்டும் தான் குடும்ப பெண்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் பணியப்பட்டேன்.  பின்பு எங்கள் மகன் பிறந்த பின்பு அவனுடைய பிறந்த நாட்கள் தான் எங்கள் கொண்டாட்ட நாட்களாகின. அத்தானோ தான் பார்க்கும் பல நிறுவனங்களின் கணக்கு வழக்கை தன் சுண்டு விரலில் வைத்திருந்தாலும் என் பிறந்த நாள் மட்டும் ஜூலை 6 , மே 6, ஜுன் 7 என்று நாளையே குழப்பி விடுவார். பலபொழுதும்   நினைவு படுத்தி நான் கொண்டாடுவது என்பது தன்மானப் பிரச்சனையாக  இருந்ததாலும், கொண்டாட்டங்களில் நம்பிக்கை அற்று இருந்ததாலும்  நானும் மறந்தே போயுள்ளேன்.  கடந்த வருடம், ஒரு கோப்பில் தியதியுடன் கையெழுத்து இட்ட போது தான் “ஓ இன்று தான் என் பிறந்த நாள் என்று அறிந்து கொண்டேன்”.  இருப்பினும் ஒவ்வொரு பிறந்த நாளும் ஆயுசின் ஒரு வருடம் குறைந்து வாழும் பூமியை விட்டு விடை பெறும் நாட்கள் சமீபம் வருவது மட்டும் தெரிந்திருந்தது.

9 comments:

சி.பி.செந்தில்குமார் said...

>அம்மாவுக்கு எல்லாம் முழுமையாக அழகாக அவரின் ரசனையில் இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் உண்டு!


அழகிய அவதானிப்பு.....அம்மாவின் கவனிப்பு.

சி.பி.செந்தில்குமார் said...

>> மலையாளப் பயலுகளை நம்ப இயலாது

ஹா ஹா இப்படித்தான் எங்களையும் எங்க நாட்டுப்பொண்ணுங்க சொல்வாங்க. ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

நான் சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த பிறந்த நாள் கொண்டாட்ட அனுபவப்பகிர்வு. அழகு./...

கவி அழகன் said...

good

Pathman said...

இப்படித்தான் இலங்கையிலும் வழமை . இப்பொழுதுதான் இங்கு வெளிநாடுகளில் பாட்டி பாட்டனின் பிறந்த நள் கொண்டாடுகிறார்கள் இங்கு கொண்டாடங்களுக்குக் குறைவில்லை ... அம்மா மார் எல்லா இடமும் ஒரே மாதிரித்தான் ... சில பிள்ளைகளின் உணர்வைப் புரியும் அம்மாக்களும் உள்ளார்கள் .....

ராம்ஜி_யாஹூ said...

nicely written

தமிழ்வாசி - Prakash said...

இருப்பினும் ஒவ்வொரு பிறந்த நாளும் ஆயுசின் ஒரு வருடம் குறைந்து வாழும் பூமியை விட்டு விடை பெறும் நாட்கள் சமீபம் வருவது மட்டும் தெரிந்திருந்தது.>>>

ஆகா இப்படி நினைக்கலாமா? நல்ல நாளில்...

Dr.எம்.கே.முருகானந்தன் said...

"...அம்மாவுக்கு பிடித்த கலர். மொடல்....." உலகெங்கும் இப்படித்தான் அம்மாக்கள் போலிருக்கிறது.
ஆயினும் அம்மா இல்லாதபோது,...

சத்யா said...

உண்மையான பகிர்வு

Post Comment

Post a Comment