header-photo

ஆண் பாவம் பொல்லாதது!!!


ஆண்கள் என்றாலே ஆணாதிக்கத்தின் முகமுத்திரை, எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள், எதை பற்றியும் பயம் இல்லாதவர்கள் என்ற கருத்து உண்டு.  ஆனால் உண்மை அதுவல்ல. பல வீடுகளில் ஆண்களின் பாடு திண்டாட்டமாகவே உள்ளது.  இதிலும் 45 வயதிற்க்கு மேல் இளைஞர் அடையாளம் மறையவும் முதுமை எட்டி பார்க்கும் ஆண்களின் நிலை படு பரிதாபமே. ஒரு பக்கம் குடும்ப பொறுப்பு அவர்கள் கழுத்தை நெரிக்க மறுபக்கம் அவர்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்பு தராத சூழலில் வாழவும், சாகவும் இயலாது  வாழும் பல ஆண்களை காண நேரிடும் போது வருத்தமே மிஞ்சுகின்றது. அம்மா-பாசம், சொந்தங்கள் என  தன்னை சுற்றி பலர் இருந்த சூழலில் இருந்ந்து ஆண்கள் தன் குடும்பம், மனைவி, குழந்தைகள் என்ற சிறு வட்டத்தில் வந்து சேரும் நேரம் அவர்கள் வயது 50 வயதையும் நெருங்கி விடுகின்றது.  குழந்தைகள் தோளுக்கு மேல் வளர்ந்து விட்ட சூழலில் ‘பிள்ளை பூச்சியாக’ இருந்த மனைவியும் பூதமாக மாற பல ஆண்கள் எங்கு ஓடலாம் என தத்தளிக்கின்றனர்.


பெண்கள் பயந்த குணம் படைத்தவர்கள் என்று எடை போட, வெளிப் புறமாக பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பினும் பிறவியிலயே ஆண்களை விட எதையும் தாங்கும் துணிவான மன-தைரியமுள்ள பெண்கள்; இன்னும் மத்திய வயதை கடக்கும் வேளையில் குழந்தைகளும் தலைக்கு மேல் வளர்ந்து விட துணிவு அசூர வளர்ச்சி கொள்கின்ற போது ஆண்களோ தனிமை, மரணம், வாழ்க்கை போராட்டங்கள் கண்டு அதீதமாக பயப்படுவாதாக சில ஆராய்ச்சியாளர்கள்  கண்டு பிடித்துள்ளனர்.  மேலும் வயது கூடும் தோறும் பெண்களின் தாய்மையும் சேர்ந்து வளர ஆண்களோ அப்பா என்ற உணர்வில்(father hood) குறைவு படுவதாகவே கண்டு பிடித்துள்ளனர்.

பேருந்து பயணங்களில் தாத்தா பாட்டிகள் பல பொழுதும் பக்கம் பக்கம் இருக்கை வேண்டும் என்றும் சண்டையிடுவதை மதுரை-கம்பம் பேருந்தில் பயணம் செய்யும் போது கண்டுள்ளேன். நமக்கு சிரிப்பை வரவைத்தால் கூட அவர்கள் மனதளவில் கொள்ளும் பேரானந்தம் அளவிட முடியாததே!!  ஆனால் பல பிள்ளைகள் தாங்கள் இருவரும் வேலைக்கு போகும் சூழலில் தங்கள் குழந்தைகளை பராமரிக்க என தாத்தாவை ஒரு வீட்டிலும் பாட்டிக்கு இன்னோரு மகன் வீட்டிலும் அடைக்கலம் கொடுப்பார்கள். இன்னும் சில வீடுகளிலோ கணவர்கள் தங்கள் நல்ல வயதில் சம்பாதிக்கும் பணத்தை சேகரித்து வைக்காது வயதான காலத்திலும் இன்னும் பணம் சம்பாதித்து கொண்டு வா என்று விரட்டி விடும் அவலவும் உண்டு.   எனக்கு தெரிந்த ஒரு வீட்டில் தன் 60 வயதிலும் ஒரு முதியவர் தான் கட்டிய வீட்டில் இருந்து கொண்டே தன் மகனுக்கு சாப்பாடுக்கு பணம் கொடுத்து வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப் படுகின்றார். இதற்க்கு துணை போவதும் அவருடைய மனைவி தான்.

சில வீடுகளிலோ ஆண்கள் உணர்வே அற்ற ஜடம் என்றும் எண்ணுவது உண்டு.  சில  நண்பர்களிடம் நான் கதைக்கும் போது மாமா மாமியிடமும் போனை கொடுங்கோ கதைக்க வேண்டும் என்று கூறினால் அவ கெடக்காம்மா ஏதோ கட்டி  பிள்ளைகளும் உள்ளது ஆணவம் பிடித்தவா என்று நொந்து கொள்வார்கள்.  கணவர்கள் பேசுவதை பொறுமையாக கேட்பது, ஒன்றாக உணவு  எடுப்பது,  ஒன்றாக நடை பயணம் செல்வது  என்று தங்கள் பாசத்தை பெருக்க வேண்டும். ஆனால் பல வீடுகளில் எலியும் பூனையும் போன்ற உறவே நிலவும். பார்வையாலெ மிரட்டுவது, கேலி செய்வது என்று ஆண்கள் வாழ்க்கையை ஆக்கிரமித்து விடுவர் மனைவிகள்.   இதனாலே பல ஆண்கள் ஒரு குப்பி பிராந்தியை பச்சை தண்ணீர் போல் குடித்து விட்டு மதி மயக்கத்தில் தங்கள் நாட்களை கடத்தி செல்கின்றனர்.  

ஆணாதிக்கம் என்று நாம் கதைக்கும் அளவுக்கு பெண்கள் கொள்ளும் பெண்ணாதிக்கத்தை பற்றி நாம் சிந்திக்க, கண்டிக்க மறந்து விடுகின்றோம். இன்றைய பெண்களும் வேலைக்கு போய் தன்நிறைவு அடைந்த நிலையில் கணவர்கள் அனுமதி பெற்ற வேலைக்காரர்களாகவும், பாதுகாவலர்களாகவும், தங்கள் குழந்தைகளின் அப்பா என்ற பதவி மட்டுமே கொடுக்கப் படுகின்றது.   எங்கள் பக்கத்து வீடு கட்டி கொண்டிருந்த போது அங்கு காவலுக்கு என 70 வயது தக்க தாத்தாவை அமர்த்தியிருந்தனர். அவர் பெறும் ஊதியம் 4000 ரூபாய் பாட்டி கைக்கு தாத்தா கைக்கு வரும் முன்னே கிடைக்கும் வகையில் ஏற்பாடாக்கி வேலைக்கு அனுப்பியிருந்தனர்.  தாத்தா கீழை விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத ரகம்.  அவர் வேலை பார்த்தாலும் கூட அவருடைய மாடு, ஆடு, பேரபிள்ளைகள் வீட்டு கவலையிலே இருந்தார். ஒவ்வொரு விடுமுறைக்கு செல்லும் போது இனி வரமாட்டேன் அம்மா பாட்டி போக வேண்டாம் என்று சொல்லி விடுவாள் என்று செல்வார் ஆனால் போன வேகத்திலே சுவரில் அடித்த பந்து போல் ஒரு பை அரிசியுடன் வந்து விடுவார்.  அந்த முதியவரின் கவலையை மகன்களுடன் சேர்ந்து மனைவி திட்டுவதாகவே இருந்தது.

பல பெண்கள் வயது கடந்த கணவர்கள் கொண்டு இனி என்ன தேவை என்று வார்த்தைகளாலும் செயலாலும் மதிப்பது இல்லை. ஆண் பிள்ளைகள்  உள்ள அம்மாக்களின் செயல் சொல்லவே வேண்டாம்.   இந்த குணம் ஏழை பணக்காரர்கள் என்று பாகுபாடு இல்லாது பெண்களால் முதிர் வயது கணவர்கள் துன்பத்திற்க்கு ஆளாகின்றனர்.  உணர்வு பூர்வமாக ஒரு உறவை பேணாது கடவுள் பக்தி, பிள்ளைகள் பாசம், பேரபிள்ளை பாசம் என்ற சில முகமூடிகள் அணிந்து கொண்டு பழைய பாத்திரம் போல் ஒதுக்கி வைத்து விடுகின்றனர் சில பெண்கள்.  சில பண நடமாட்டம் உள்ள ஆண்கள் இவர்களை தண்டிக்க வேண்டும் என்று நினைத்து இன்னும் சில சிக்கல்களில் மாட்டி  தங்கள் மரியாதையும் இழந்து வாழும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.
இன்னும் சில கடவுள் பக்தை பெண்களின் மனநிலை இன்னும் கொடுமையானது. அவர்கள் கண்ணில் கணவன் பேய் போல் தான் தெரிவார்.  இதில் ‘கணவன் கண் கண்ட தெய்வம்’ என்று சொல்லும் ஹிந்து மதமோ ‘யேசு நாதர் சபைக்கு தலை என்பது போல் மனைவிக்கு கணவர் தலையாக இருக்கட்டும்’ என்ற அறிவுறுத்தும் கிருஸ்தவ சமய பெண்களும் ஒருபோலவே உள்ளனர்.  பல வீடுகளில்  வயது கடந்த ஆண்களை அவர் மனைவி மட்டுமல்ல அந்த வீட்டு பேரபிள்ளைகள் எதிர்வீட்டு சோமாரி-பேமாரி என எல்லாரும் கிழவர் என்று அழைப்பதே நடக்கின்றது.

ஒரு பெரும் பணக்காரர் உறவினர் வீடு சென்ற போது அவர்கள் வீட்டு ‘பொமேரியன் நாய்க்கு’  இருக்கும் செல்லம் அவர் கணவருக்கு கொடுப்பதாகவே தெரியவில்லை.   நாய்க்கு பேன்-செள்ளு  பார்த்து விட்டு கொஞ்சும் அந்த அம்மா; கணவருக்கு நாய்க்கு என்பது போல் சாப்பாட்டை  மேசையில் மூடி வைத்து விட்டு பக்கத்து வீட்டு மாமியுடன் கதையடிக்க சென்று விடுவார். 

சமீபத்தில் ஒரு பெரியவர் 70 வயது கடந்து மரித்த போது வீடியோ படம் எடுத்து பல பாதிரியர்களில் பிரார்த்தனைகளுடன் சிறப்பாக அடக்கம் செய்து அந்த வீட்டு நபர்கள் கண்ணீரும் கம்பலுமாக துக்கம் கொண்டாடினர்.  அந்த முதியவர் பெரும் பணக்காரர் மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தில் ஒரு சட்டம் படிக்காத நீதியரசராகவே இருந்தார்.   பல சண்டைகளுக்கு தீர்ப்பு வழங்கினார். ஆனால் அவருக்கு 65 வயது நெருங்க மனைவியிடம் கரண்டி அடி வாங்குவதும் மருமகளிடம் கெட்ட வார்த்தையால் திட்டு வாங்குவதும் என துண்டாடப்பட்டவர் கடைசியாக அவர் செய்யும் தொழில் எல்லாம் அவர் மகன்களின் கட்டுபாடில் கொண்டு வரப்பட்டு;  நீதிபதி நாற்காலியில் இருந்தும் வலுகட்டாயமாக கீழை தள்ளப் பட்டு கடைசி நாட்களில் மனநிலை  மருத்துவமனையில் காலம் கழிக்கும் சூழலுக்கு தள்ளப் பட்டார்.   அவர் இறந்த பிறகு அவரை புகழ்ந்து, கண்ணீர் விட்ட பிள்ளைகள் அவர் உயிருடன் இருந்த போது அவரிடம் பரிவுடன், அன்புடன் பேசினார்களா என்று தெரியவில்லை!

 சமீபத்தில் என் நெருங்கிய உறவுகாரர்கள் வீட்டில் சென்றிருந்தேன். அந்த வீட்டு பெரியவர் 20 வருடம் முன்பு 4-5 வேலைகாரர்கள் சகிதம் கடை, நிலம் போன்றவற்றுக்கு முதலாளியாக இருந்து இன்று மகனிடம் எல்லா பொறுப்புகளும் கொடுத்த நிலையில் அவர்  பேரிலுள்ள சொச்சம் வங்கியிலுள்ள பணத்தையும் மகனிடம் கொடுக்க சொல்லி தன் மனைவியிடமே திட்டு பட்டு உயிர் வாழ்கின்றார். ஒரு காலத்தில் கணவரிடம் பிடிக்குள் இருந்த மனைவிகளால் எப்படியாக இவ்விதம் நடந்து கொள்ள இயல்கின்றது என்பதே புரியாத புதிர்!

நெல்லையில் பத்திரிக்கையாளர் சங்கம் ஒரு புகைப்படம் கண்காட்சி நடத்தியது, வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் அறிவித்திருந்தனர்.   நாங்கள் பல மைல்கள் பயணம் செய்து படம் பிடித்து வந்தோம். எங்கள் உடன் படித்த மாணவி அவருடைய பக்கத்து வீட்டு முதியவர் தன் மனைவியை குளிப்பிப்பதை படம் பிடித்து வந்திருந்தார்.  இந்த படத்தில் என்ன உள்ளது,  பொழைப்பத்த தாத்தா என்று எண்ணி கொண்டேன் என் மனதில்.  அத்தோழியிடம் ரகசியமாக கேட்டேன் இந்த போட்டோ செட்டப்பா என்று.  அவர் கூறினார் இந்த காட்சி 4 வருடமாக காண்பதாகவும் பாட்டி குளிக்க சோப்பல் கொண்டவர் என்றும் தாத்தா 2 நாட்களுக்கு ஒரு முறை சுள்ளி கம்பு சேகரித்து வெண்ணி வைத்து நடக்க இயலாத பாட்டியை தூக்கி வந்து குளிப்பிப்பதாகவும் பாட்டி முதியவரை திட்டி கொண்டே குளிப்பதாகவும் கூறினார்.

500 அதிகமான புகைப்படங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்த அந்த மண்டபத்தில் பார்வையாளர்களை சிறப்பாக முதியவர்களை கவர்ந்த புகைப்படம் அதுவாகவே இருந்தது.  சிலர் அந்த புகைப்படம் பக்கம் நின்று தொட்டு பார்த்து உண்மை தானா என்று உறுதி படுத்திகொண்டனர் சிலரோ அப்படம் விட்டு நகராது நோக்கி கொண்டே நின்றனர்.  மேடையில் பேசிய தலைவர் (முதியவர்) அன்புக்கு எடுத்து காட்டாக அப்படத்தை எடுத்து கூறினார்.

மனிதன் நேசிக்கவும் நேசிக்கபடுவதற்க்கும் வயதோ  நிலையோ வரம்பல்ல.  அவன் எவ்வயதிலும் நேசிக்கப் பட விரும்புகின்றான் சிறப்பாக மனைவியிடம் தள்ளாத வயதிலும் அன்பு, பாசம் எதிர்பார்க்கின்றான் என புலன்பட்டது.  பல பெண்கள் கணக்கு பார்த்து பழிவாங்கும் காலமாகாவே பார்க்கின்றனர் முதுமையை.  அவருடைய கூடாத பருவ வயது கள்ள காதல், தன் அம்மாவுடன் சேர்ந்து தன்னை துண்புறுத்திய நாட்களுக்கான தண்டனை காலமாக எடுத்து செல்வதும் வேதனையை.   வெறுப்பு, புறக்கணிக்கல், ஏளனம் என்ற தீயால் தங்கள் கணவர்களை சுட்டு எரிக்க நினைத்தால் ஒரு போதும் ஆண் பாவத்தில் இருந்து தப்பிக்கல் ஆகாது என்று உணர வேண்டும்.  புல் போன்று சடுதியில் காயும் இவ்வாழ்வில்  அன்பு, காதல், நேசம் பாசம் மட்டுமே என்றும் வாழ்வது என்பதையும் மறக்கல் ஆகாது!!!!

2 comments:

Pathman said...

பல் ஆண்களின் உண்மை நிலைகளைப் புரிந்து அப்ப்டியே எழுதி இருக்கிறீர்கள் ..அது தான் நோர்வேயியர்கள் 50 வயதுக் காலங்களில் புது உறவைத் தேடி போகிறார்களோ ...தனது துணையை மாற்றுகிறார்கள் ... அதுகும் சரி போல் தான் தோன்றுகிறது அவர்கள் பார்வையில்

எண்ணங்கள் 13189034291840215795 said...

தன்னை துண்புறுத்திய நாட்களுக்கான தண்டனை காலமாக எடுத்து செல்வதும் வேதனையை. //

இதுதான் பல குடும்பங்களில் உண்மை..

இளமையில் ஆடி ஓடி மனைவியை வேதனைப்படுத்தி பின் முதுமையில் அனுபவிக்கும் பலர்..

சில ஆண்கள் திருமணம் செய்ததுமே அடிமைதான்..

எப்பவுமே நமக்காக மட்டுமே வாழக்கூடாது ஆணோ பெண்ணோ.. நன்றாக வாழும் காலத்தில் முடிந்தளவு உதவணும்.. தனித்திருக்கவும் , எதிர்பார்ப்பில்லமலிருக்கவும் பழகணும்

Post Comment

Post a Comment