17 May 2011

தேர்வுகள் தோல்விக்கு அல்ல!!!


+2 தேர்வு முடிவு அன்று, பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன்.   ஓர் மத்திய வயதை எட்டிய பெண் பேருந்தில் முன் இருக்கையில் ஒட்டி இருந்து கொண்டு பரபரப்பாக அலை பேசியில் தனக்கு தெரிந்த குழந்தைகளின் தேர்வு முடிவைப் பற்றி வினவி கொண்டிருந்தார்.  அவர் முகம் போர்க் களத்தில் “வாழ்வா சாவா” என்று நிற்க்கும் படைவீரருடன் ஒத்து இருந்தது.  ஒன்று இரண்டு பேருடைய  அல்ல தனக்கு தெரிந்த பலருடைய தேர்வு முடிவு பற்றியும் கேட்டு அறிந்து  கொண்டிருந்தார்.   என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு தாய் மிகுந்த நம்பிக்கையுடன் தன் பெண் 1050 க்கு மேல் எடுத்து விடுவாள் என்றும் ” மருத்துவம் தான் எடுக்க சொல்லியுள்ளதாகவும், கட் ஆஃப்  மார்க்கு 97, இருந்தால் தான் விரும்பிய மருத்துவ கல்லூரிக்கு செல்ல இயலும் இல்லா விடில் பயோடெக்நோலஜி எடுக்க பணிந்துள்ளதாக    நண்பியிடம் தன் கடைசி தீர்ப்பை வெளியிட்டு கொண்டிருந்தார்.  இன்னும் பரபரப்பு விட்டு அகலவில்லை முதல் வரிசையில் இருக்கும் பெண்ணுக்கு!!  அவருடைய ஆர்வக் கோளாறு எண்ணி மனதில் எரிச்சல் பட்டு கொண்டே பயணம் தொடரும் போது என் நிறுத்தம் வந்து விட்டது.

எங்கள் பள்ளி தேர்வு முடிவு நாட்கள் மனதில் ஓடியது,  தேர்வு முடிவு நாட்கள் மட்டுமல்ல அந்த வருடமே ஆபத்து ஆனது தான். உறவினர்கள் மட்டுமல்ல நண்பர்கள் பக்கத்து வீட்டுகாரார்கள் என எல்லோர் கண்ணிலும் நாம் தான் தெரிவோம்.  பார்க்கும் போது எல்லாம் படிப்பு எப்படி செல்கின்றது, என்ன மதிப்பெண் எடுத்து விடுவாய், வாழ்க்கையே இதில் தான்  என அன்பான, ஆக்கபூர்வமான, கேலியான என பலவித அறிவுரைகளுக்கு மட்டும் பஞ்சம் இருக்காது.  பெற்றோர்களுக்கும் தேர்வு முடிவு என்பதில் தன்மானம் சார்ந்த சில நோக்கங்கள் எதிர்பார்ப்புகளும் உண்டு என்று மறுக்க இயலாது.

என்னுடைய பள்ளி படிப்பு, அரசு பள்ளியில் தான், மாணவர்கள் எண்ணிக்கை 100 க்கு மேல் அதில்  10 மாணவர்கள் மட்டுமே ஜெயிப்பவர்கள் என்று அடையாளப்படுத்தி படிக்க வைப்பது உண்டு. அதிலும் முதல்வர்  லெக்ஷ்மி குட்டியம்மா  நாவு கருநாக்கு என்பதால் அவர் வாயில் விழுந்தால் அந்த வருடம் சோகா தான் என்று பயந்து நடுங்கியே அவரை கண்டு நாங்கள் பதுங்கி ஒதுங்கி ஓடுவோம்.  அதையும் தாண்டி சில மாணவர்களை அவர் அழைத்து “நீ குணம் பிடிக்கில்லடா” என்று வாழ்த்தியதால் தேர்வு எழுதாதே பள்ளி விட்ட மாணவர்களும் உண்டு.  

எங்கள் பள்ளியில் தரமான ஒரு மாணவியாக இருந்தாலும், ப்ரீ டிகிரிக்கு கல்லூரி சென்ற போது வகுப்பில் 40 மாணவிகளில் நான் கடைசி பெஞ்சு மாணவியாக தள்ளப்பட்டேன்.  கேரளாவின் கல்வியின் தொட்டில் கோட்டயம்! உடன் படித்த மாணவிகளின் பெற்றோர் உயர் பதவியில் உள்ளோர், அல்லது வெளிநாட்டு உள்நாட்டு தொழில் அதிபர்களின் வாரிசுகள் என்று கல்வி பணம், பதவி உள்ள பெற்றோரின் வாரிசுகள் எங்களுடன் படித்தனர்.  முட்டாள் பெஞ்சில் இருந்து படித்து கொடும் நினைவுகள் கொண்ட நாட்கள் இருப்பினும் அன்பான பண்பான பேராசிரியர்களால் மீண்டு வந்தோம்.

தேர்வு மதிப்பெண் மட்டுமே வாழ்வின் வெற்றியை நிர்ணயித்து விட இயலுமா.  என் பள்ளியில் முதல் இடம் பிடித்த ஒரு மாணவி மேல்படிப்பில் திணறிய போது தற்கொலைக்கு முயன்றதாக கேள்விப் பட்டுள்ளேன்.  அதே போல் முதல் மாணவனாக தேற்வாகிய என் ஊர் நண்பர் பல போராட்டம் கடந்து தான் தற்போது நல்ல நிலையை எட்டியுள்ளார்.   பல பொழுதும் மாணவர்கள் தேற்வு முடிவு என்ற பெயரிம் கொடிய மன அழுத்ததிற்க்கு பலியாக்கப் படுகின்றனர்.  ஒரு 11 வகுப்பு மாணவி பேருந்து   பயணத்தின் போது அறிமுகம் ஆனார்.  காலையில் 8 மணிக்கு பள்ளி ஆரம்பம் ஆகும் என்றும் திரும்பி இரவு 7 மணிக்கு தான் வர  இயலும் என்றும், 11 வகுப்பு பாடத்துடன் தாங்கள் வரும் வருடம் படிக்க வேண்டிய 12 வகுப்பு பாடவும் கற்று கொள்ள வேண்டி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இவ்விதமான அதீத வேலைப்பழு  பெண் குழந்தைகள் என்ற நிலையில் உடல் மன நலம் சார்ந்து பாதிப்படைவதையும் நாம் நோக்க வேண்டியுள்ளது.  பல மாணாக்கள் நல்ல சாப்பாடு நிம்மதியான தூக்கம் மறுதலிக்கப்பட்டு கடும் துன்பத்திற்க்கு ஆளாகின்றனர்.  பயணநேரவும் கொடியதே, கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து உள்ளது போல் பள்ளி மாணவர்களுக்கு வாகன வசதியும்   கிடைப்பது இல்லை.  காலை 7 மணிக்கு துவங்கிய போராட்டம் முடிவு பெற இரவு வீடு வந்தாக வேண்டும்.  சில குழந்தைகளுக்கு வீட்டிலும் கொடிய பொழுதாகத் தான் இருக்கும்.  இதில் படிக்காத பெற்றோரை விட படித்த  பட்டதாரிகளான பெற்றோரின் நடவடிக்கை இன்னும் அராஜகமானது!  தங்களால் பெற இயலாது போய் விட்டது, எல்லாம் தங்கள் பிள்ளைகள் வழியாக பெறவேண்டும் என்ற பேராசையில்  தங்கள் குழந்தைகளை பூட்டியிட்ட அறையில் படிக்க செய்வது,  விரட்டி விரட்டி நாலு பேர் அறியும் வண்ணம் அடிப்பது, திட்டுவது என்பது பெற்றோரின் “அக்கரை” என்ற பெயரில் நிகழும் துயரங்கள் எண்ணில் அடங்காதவை!!

கல்வியால் குழந்தைகள் சூழலுக்கு தகுந்தும் எதிர்மறையான சூழலிலும் வாழத் தெரிந்திருக்க வேண்டும் என்பதே மிகவும் தேவையானது. மெட்ரிக்குலேஷன் மாணவர்களை விட அரசு பள்ளி மாணவர்கள் சூழலுக்கு தகுந்து மாறவும் துணிவாக காரியங்களை கையாளவும் தெரிந்தவர்கள்   (emotional intelligent) என்று சில ஆய்வு தெரிவிக்கின்றது. மேலும் சமூக அக்கரை, போராட்ட குணம் இவர்களிடம் அதிகம் உள்ளதாகவே காணப்பட்டுள்ளது.

குழந்தைகள் தேற்வு வெற்றி மட்டுமே, அவர்கள் வாழ்க்கையின் வெற்றியை நிற்ணயிப்பது இல்லை என்பதை பெற்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும். பெற்றோர், ஆசிரியர்களின் உந்துதல் கொண்டு மட்டுமே தேற்வில் ஜெயிக்கும் பல குழந்தைகள், பிற்கால வாழ்வில் போராடி ஜெயிக்க வேண்டிய சூழலில் கோட்டை விட்டு  விடுகின்றனர்.  அதுவாக நடப்பதும் நடக்க வைப்பதும் நிறைய வித்தியாசம் உள்ளது.   பல ஆசிரியர் படித்தவர்கள் வீடுகளில் பிள்ளைகள் வெற்றி என்பது அவர்கள் மதிப்பை நிர்ணயிக்கும்  அளவு கோல் ஆவதால் தேவையற்ற மன அழுத்ததை கொடுத்து குழந்தைகளை தற்கொலை, மற்றும்  மன அழுத்த நோய்க்கு தள்ளுகின்றனர்.   பல குழந்தைகள் படிப்பதை தேற்வில் எழுதும் போது நினைவில் வராது பதட்ட சூழலுக்கு தள்ளப் படுவதும் உண்டு.  சில வீடுகளில் தேர்வில் மதிப்பெண் வாங்கும் குழந்தைக்கு அதிக மதிப்பும் இடமும் தருவது உண்டு. நாலு உறவினர்கள் கூடும் இடத்தில் தன் பிள்ளைகள் என்று பார்க்காது கேலி பேசுவதும் நடந்து வருகின்றது.

எங்கள் வகுப்பில் என் சக மாணவன் ஒருவன் ஒழுங்கீனத்தின் உச்சத்தில் இருந்தான். பெண்களை விரட்டி காதலிப்பது பணியாதவர்கள் பெயரை கெடுப்பது என்று திளைத்து வந்த அவனால்; 10 வகுப்பில் ஜெயிக்க மட்டுமே முடிந்தது.  இன்னொரு தோழனோ எல்லா நன்மைகளில் பதிப்பாக இருந்தான் நேரத்துக்கு வகுப்புக்கு வருவது உடன் படிக்கும் மாணவிகளை மதித்து உதவுவது என்று. நல்ல மதிபெண்களுடன் கல்லூரியிலும் சேர்ந்து படித்தான்.  10 வருடம் பின்பு என்  பிறந்த ஊருக்கு நான் சென்ற போது எனக்கு  அறியக் கிடைத்தது அந்த முதல் மாணவன் காவல் அதிகாரியாக கேரளா அரசு இலாகவில்  பணிபுரிவதும், முன்மாதிரியாக திகழ்ந்த என் வகுப்பு தோழன் எங்கள் ஊரில் எல்லோரின் தூக்கம் கெடுத்தும் மிகப் பெரிய  கொள்ளைகாரனாக மாறியுள்ளான் என்பதுமே.  

என் வகுப்பு  சில தோழர்களை காணும்  போது நான் ஆச்சரியப்படுவது உண்டு வகுப்பு அறையில்  ஆசிரியரின் செல்ல பிள்ளைகளாக இருந்த பலர் வீட்டில் குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலை என்றும், சிலர் வாழவே வழியற்று தற்கொலை செய்து கொண்டும் உலகையே விட்டு சென்ற போது  எல்லோராலும் கேலி பேசப்பட்ட சில தோழர்கள் மகிழ்ச்சியான தன்னம்பிக்கையான வாழ்க்கை சூழலில் வாழ்கின்றனர்.

என் வகுப்பு தோழியை ஒரு பந்தயக் குதிரையாக அவர்கள் பெற்றோர் வளர்த்தனர்.   அவருடைய நட்பு, ஆசைகள் எல்லாவற்றுக்கும் தடையிட்டனர்.   அவர்கள் விரும்பியது போலவே அவர் ஓர் உயர் வேலையுடன் அமெரிக்காவில வசிக்கின்றார்.   ஆனால் அவர்கள் பெற்றோரை அவர் கண்டு கொள்வதில்லை என்ற துயரில் உள்ளார்களாம்.

வீட்டில் வரும் ஒவ்வொரு விருந்தினர் கேள்வியும் பையன் /பிள்ளை படிப்பு எப்படி போகின்றது என்பதாகும். மேலும் தேற்வு நெருங்கும் வேளையில் உபதேசம், தேர்வு நாட்களில் கூட தேர்வு அறைக்குள் ஊடகத்துடன் கலெக்டர்கள் புகிர்வதும் பறக்கும் படையின் பதற வைக்கும் பணியும் வருந்தக்க தக்கதே. வெற்றியை அதீத ஆர்பாட்டமாக கொண்டாடுவதும் தோற்றவர்களை கேலியாக நோக்குவதுடன் உதாசீனப்படுத்துவதும் அவர்கள் வாழ்க்கையை அழிக்கவே உதவும்.  கல்வித் துறைகூட 8 வகுப்பு வரை முகாந்தரம் இல்லாது ஜெயிக்க வைத்து விட்டு 10 அல்லது +2 ஈவு-இரக்கம் இன்றி மாணவர்களை தோற்க்க வைப்பதும்  வெற்றி எப்படியும் பெற்றாக வேண்டும் ஆசிரியர்களையும் மாணவர்களையும் போட்டி சூழலில் தள்ளுவதும் கண்டிக்க தக்கதே!!  

0 Comments:

Post a Comment