header-photo

முகவரி தேடும் தெருவோர குழந்தைகள்!!!

வீதியே வீடு என்று சாலைகளில் கேட்பாரற்று பல்வேறு குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர். தெருவோர குழந்தைகள் என அழைக்க படும் இக்குழந்தைகள் மூன்று வகையை சேருவர். தெருவில் வேலை பார்ப்பவர்கள்,  தெருவில் குடியிருந்து வாழ்க்கை நடத்துபவர்களின் குழந்தைகள், பெற்றோர்களால் மற்றும் உற்றோர்களால் புரக்கணிக்கபட்டு தெருவில் வாழ தள்ளபட்டவர்கள்.


தெருவோர குழந்தைகள் என்ற கருத்தாக்கம் 1993 வரை அரசு நிறுவனங்களால் அங்கிகரிக்க படாது இருந்துள்ளது தான் உண்மை.  அரசு சாரா நிறுவனங்களின் அயராத கூக்குரல் நிமித்தம் 1993 ல் மனித நலத் துறை அமைச்சகத்தால் பல திட்டங்கள் இக்குழந்தைகளுக்கு என உருவாக்க பட்டு செயல்படுத்தி வருகின்றனர்.   
இவர்கள் சார்ந்த கதைகள் மைய கருத்தாக கொண்டு சலாம் பாம்பே, நான் கடவுள், ஸ்லம் டாக் மில்லினர் போன்ற திரைப்படங்களில் வந்துள்ளன.   19 ம் நூற்றாண்டில் ஒலிவர் டிவிஸ்ட்,ஷெலோக் போன்ற மேற்கத்திய எழுத்தாளர்களின் கதைகளிலும் இவர்கள் வாழ்கை கதைய் தளமாக வந்துள்ளது.  ஸ்லம் டோக் மிலினியர் (slum dog Millionaire) என்ற படம் எதிர் கொண்ட விமர்சனம் ‘வளரும் இந்தியாவை தரம்  குறைத்து காட்டுகின்றனர்’ என்பதாகவே இருந்தது.   சண்டே இந்தியாவின் அருந்தம் சவுதரி இப்படத்தை சரிமாரியாக திட்டி தன் கோபத்தை வெளிகாட்டியிருந்தார்.   இப்படியாக கண்ணை மூடி பால் குடிக்கும் பூனை போன்று இந்தியாவின் பணக்கார ஊடகம், அரசியல், சமூகத்தால் புரக்கணிக்கபட்டவர் தான் இவர்கள்!
சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களை பிரதிபலிக்கும் தெருவோர குழந்தைகள் உலக சரித்திரத்தில் என்று இடம் பிடித்தனர் என்பதற்க்கான ஆதாரம் இல்லை.  என்றிருந்தாலும் ரஷ்யாவில் நடந்த 1918-1930 புரட்சிக்கு பின்பே சமூகத்தின் ஒரு பாகமென மிக பெரிய அளவில் தெருவோர குழந்தைகள் உருவாகியுள்ளனர்.தெருவோர குழந்தைகள் உருவாகுவது புரட்சி,  இனக்கலவரம், போர், இயற்கை பேரழிவு  போன்ற காரணங்கள் மட்டுமல்ல பெற்றோரின் மனமுறிவு, பெற்றோரின் தகாத உறவு மூலம் உண்டாகும் குடும்ப சூழல், வீடுகளில் அனுபவிக்கும் தொடர் தொல்லைகள், பெற்றோரின் இரக்க மற்ற செயல் அனுசரணையற்ற கல்வி சூழல், விடலைப் பருவ கோளாறுகள், வறுமை மற்றும் வேலை வாய்ப்பு தேடி நகரத்தை நோக்கியுள்ள நகருதலும் கூட இச்சிறுவர்கள் உருவாக காரணமாக அமைகின்றது.

ரஷியா, இந்தியா, மெக்சிக்கோ போன்ற நாடுகளில் மிக அதிகமான   தெருவோர குழந்தைகள் உள்ளனர்.  உலகளவில் 11 மிலியன் குழந்தைகள் தெருவில் தள்ளபட்டுள்ளதாக கணக்கிடபட்டுள்ளது.  இவர்களில் 4 மில்லியன் குழந்தைகள் இந்தியர்களே என்பது தான் துயர் தரும் வெட்கபடவேண்டிய செய்தி.  கம்னிஸ்டு மாநிலமான கொல்கத்தா நகர் தான் இந்தியாவில் தெருவோர குழந்தைகளில் அதிகம் வசிக்கும் இடம்!

இவர்களின் தொழில் பிச்சை எடுப்பது, குப்பை பொறுக்குவது கார் போன்ற வாகனங்கள் கழுவுதடல், ஓட்டல்களில் வேலை செய்தல் அல்லது பிக் பாக்கெட் போன்ற சமூக விரோத செயல்கள்என ஏதாவது ஒரு தொழில் புரிந்து தங்கள் பசியை நீக்குகின்றனர். தங்கள் பசி கொடுமையை களைவதற்கு என போதை பொருட்களை உட்கொள்ள பழகி கொள்கின்றனர்.    இவர்களின் ஆரோக்கிய நிலை மிகவும் பரிதாபத்திற்க்குரியதாகவே இருந்து வருகின்றது.  காச நோய், குஷ்டம், டைபாய்டு, மலேரியா, சிறுநீரக கோளாறு போன்றவற்றாலும் இவர்கள் மிகவும் அதிகமாக அவதிக்கு உள்ளாகுகின்றனர்.  தற்போது உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் போன்ற நோயின் பிடியில் தள்ளபடுவது மட்டும் அல்லாது  சிறு குற்றங்கள் புரிந்து சட்டத்தின் பிடியில் அகபட்டு  காப்பாற்ற ஆளின்றி  சிறை சாலைகளிலும் வாடுகின்றனர்.

சென்னையில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிப்பது என்னவென்றால் தெருவோர குழந்தைகளில் 87.7 சதவீதம் பேர் ஆண் குழந்தைகளே மேலும் இவர்களில் 71 %பேர் தங்கள் தெருவோர வாழ்வில் காப்பாற்றபடுவார்கள் என்ற கனவில் வாழ்கின்றனர். 63% பேர் தாங்களும் நல்ல சமூக அந்தஸ்தில், தன்மானத்துடன் வாழ வேண்டும் என்ற ஆசையுடனே தங்கள் காலத்தை கழிக்கின்றனர்.வயதளவில் கண்டோம் என்றால் இவர்களில்
வயது
சதவீதம்
6-10
33%
11-15
40%
16-18
27%

உள்ளனர்.

மும்பை, கொல்கத்தா, டில்லை போன்ற நகரங்களில் மட்டும் தலா ஒன்றரை லட்சம் தெருவோர குழந்தைகள் உள்லனர். பெங்களூரில் 45 ஆயிரம் குழந்தைகள் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர்கின்றனர். நமது தமிழகத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்நிலையில்  உள்ளனர்.

மற்றவர்களால் தங்கள் முகவரியை  தொலைத்து மீண்டும் தங்கள் அடையாளங்களை தேடும் இக்குழந்தைளுக்கு மறு வாழ்க்கை அமைத்து கொடுப்பதற்க்கு என்று  திருநெல்வேலியில் ஜங்ஷன் பேருந்து  நிலையத்தின் மிக அருகாமையில் சரணாலயம்  என்ற மறுவாழ்வு இல்லம் உள்ளது.  இதில் 2 வயதில் இருந்து 14 வயது வரையிலும் வரையுள்ள 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்க பட்டுவருகின்றர்.  மழலை மனம் மாறாத அருள் அவனுடைய இரண்டு சகோதர்கள் என 3 ஆண் குழந்தைகளை அனாதர்களாக விட்டு சென்றுள்ளனர் இவர்களின் பெற்றோர்கள்.  இவ்வாறு ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையும் மனதை பிழியும் கதைகள் கொண்டதே.  இங்கு அடைக்கலம் புகுந்துள்ள குழந்தைகளை பெற்றோர்கள் மற்றும்  உறவினர்கள் பிச்சை எடுப்பதற்க்கு என வலுக்கட்டாயமாக  அழைத்து செல்லும் அவலவும் உண்டு.

இது ஒரு அரசு சார்ந்த நிறுவனமாக இருப்பினும் இதன் துவக்கம் கத்தோலிக்க திருசபை சார்ந்த நிறுவனத்தில் இருந்து தான் நிகழ்ந்துள்ளது. தற்போது இதன் இயக்குனராக அருட் தந்தை ஜாண்சன் ஜோசப் உள்ளார். இக்குழந்தைகளின் மேம்பாட்டுக்காக திட்டங்கள் பல இருப்பினும் பணபற்றாக்குறை ஒரு  தடங்கலாக உள்ளது  என குறிப்பிடுகின்றார்.   நல்ல குடும்ப சூழல் உள்ள பெற்றோர்கள் இவர்களை ஆதரிக்க வேண்டும் என்றும் விரும்புகின்றார்.  மாதம் தோறும் சிறு தொகை இவர்கள் படிப்பு உடை போன்றவைக்கு தருவதால் அல்லது நேரம் கிடைக்கும் போது இக்குழந்தைகளை சந்தித்து பெற்றோர் போன்ற அன்பை பகிர்ந்து கொள்வதால் இக்குழந்தைகளை ஒரு நல்ல நிலையில் கொண்டுவர இயலும் என்று கூறுகின்றார்.

1992 துவங்கி World Vision என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக இதை போன்று ஒரு பெண் குழந்தையை ஆதரிக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக பேராசிரியர் மாதவன் கூறுகையில் இது நாம் காட்டும் கருணையோ தயவோ அல்ல, நமது கடமையே மேலும் நமது அனுதாபத்தை விட செயலால் ஆதரிப்பதால் நாம் பெறும் மன மகிழ்சிக்கு ஈடு இணை இல்லை என்று தன் கருத்தை பகிர்கின்றார்.

ஒரு முறை ஒரு கல்லூரி  பேராசிரியையிடம் இக்குழந்தகள் பற்றி கதைத்து கொண்டிருந்தேன். அவர் இது அவர்களுடைய சாபம் எனவும் இக்குழந்தைகளின் மன நிலையை பற்றியும் பிறப்பை பற்றி இரக்கம் அற்று கூறிய கருத்துக்கள் என்னை வேதனையடைய செய்த்து. பல மனிதர்கள் பூமியில் சுகமாக வாழ வாய்ப்பு கிடைப்பதும் இப்படியான விளிம்புநிலை மனிதர்களை இளக்காரமாக பார்க்கும் நம் பார்வையும் மாற்ற வேண்டியுள்ளது.

பல வசதியான பெற்றோர் தங்கள் தலைமுறைக்கு என சொத்து சேர்ப்பதும் அவர்களை பற்றிய கனவுகள் மலை போல் குவிக்கும் போதும் நம் குழந்தைகள் சுகமாக வாழ இவர்களும் நலமாக வாழவேண்டும் என்று எண்ணம் கொள்ள வேண்டும். இஅவ்ர்களை நாம் இளக்காரமாக எண்ணி புரக்கணிக்கும் வழி சீரியல் கொலையாளிகளையும், கொள்ளைகாரர்களையும் நாம் வளர்க்கின்றோம். ஒருவன்  சமூகத்தில் இருந்து பெறுவதை சமூகத்தில் விட்டு செல்கின்றான். நாமும் இக்குழந்தைகளுக்கு நல்லதை கொடுப்போம் அவர்கள் நல்லதே இச்சமூகத்திற்க்கும் திரும்ப தருவார்கள்.

இக்குழந்தைகள் திருநெல்வேலியை சுற்றியுள்ள பல பள்ளிகளில் கல்வி பெறும் இவர்களை நாம் கரிசனையுடன் தாங்குவது வழியாக இவர்களும் சமூகத்தில் ஒரு உயர்ந்த சிந்தனையுள்ள தாழ்வு மனப் பான்மையற்று வாழ வழி செய்ய உதவும். மேலும் இவ்விதம் குழந்தைகள் உருவாக காரணமாகும் பொறுபற்ற தன்னலம் விரும்பி பெற்றோரையும்  சட்டத்தால் தண்டிப்பது வழியாக வரும் தலைமுறையில் இவ்விதமான குழந்தைகள் உருவாகும் சூழலை தடுக்க இயலும். மேலும் அடுத்தவர்களை சுரண்டி பிழக்கும் நம்  சமூகசூழலும் ஒரு காரணம் உணர்ந்து அதை களையவும் நாம் முன் வர வேண்டும்.

1 comments:

சாமக்கோடங்கி said...

// பல மனிதர்கள் பூமியில் சுகமாக வாழ வாய்ப்பு கிடைப்பதும் இப்படியான விளிம்புநிலை மனிதர்களை இளக்காரமாக பார்க்கும் நம் பார்வையும் மாற்ற வேண்டியுள்ளது.//

சரியான கருத்து... நாம் இன்று சுகமாக வாழ்கிறோம் என்றால், மற்றொருவருக்கு உதவும் வேண்டும் என்பதே இயற்கை விதி...

Post Comment

Post a Comment