16 Mar 2011

வேட்டையாடப்படும் பெற்றோர்

பள்ளி விட்டு வந்த என் மூன்றாம் வகுப்பு மகன் அம்மா, நாளை நீங்கள் என்ஆசிரியை வந்து பார்க்க வேண்டும் என்றான்.  எதற்க்கு என்றேன்.   தாளை கிழித்து என் நண்பர்கள் என் பக்கம் போட்டு விட்டனர் என்றுரைத்தான்.  தாளை கிழித்தற்கா; மக்கா உண்மையை சொல்லி விடு என கண் பார்வையை அவன் பக்கம்  சொருகினேன்.  என்னவர் அவன் அடி வாங்கட்டும் நீ போகாதே என்றார் அவன் விடும் பாடு இல்லை; இன்று முதல்வர் அறையில் தான் நின்றேன் வகுப்பறைக்குள் விட மாட்டார்கள் என்றான்.  சரி மகனே நீ குளித்து விட்டு சாப்பிடும் வழியை பார் நான் வாறேன் என்று சொல்லி விட்டு சாப்பாடு எடுத்து கொடுக்க ஆயத்தம் ஆனேன்.  என்னவரோ இவன் வேறு ஏதும் சேட்டை பண்ணியிருப்பான் ஒழுக்கம் கிடையாது .  கேபிளை கட் செய்ய வேண்டும் இல்லாட்டி இவனுக உருப்படும் படியா தெரியவில்லை. கார்டூன்  நெட் வர்க்கில் வரும் டயலோக் சரியில்லை.  இவனும் அது மாதிரி தான் ‘மொக்கை, பொக்கை’ என்று பேசுகின்றான் படிப்பவன் படிக்க மட்டும் போகனும் என புலம்பி கொண்டே “அம்மா பாடு பிள்ளை பாடு” என முணுமுணுத்து கொண்டே அவருடைய அறைக்கு சென்று விட்டார்.   நான் பல பொழுதும் என்னவரிடம் கேட்பது உண்டு “நீங்க பள்ளியில் படிக்கும் போது சேட்டை பண்ணினது கிடையாதா என்று”.  நான் இப்படியல்ல பாட்டி சொல்வதே கேட்டு தான் இருப்பேன்(பாட்டியிடம் கேட்க இயலாது என்ற தைரியம் தான் அவர் 1991 ல் விண்ணுலகம் சென்று விட்டார் என்று கேள்வி பட்டுள்ளேன்)  இவனுகளுக்கு  வருத்தம் இல்லை, கொழுப்பு, அடி பத்தாது…… நான் தண்ணீர் மோட்டரை போட்டு செடிக்கு தண்ணீர் அடிக்க சென்று விட்டேன். இவன்கள் கொண்டு வரும் பிரச்சனைகளை கூட சம்மாளித்து விடலாம் என்னவரின் வரும் கோபத்தை விட!

இவனுக்கு ஜெரி என்று பெயர் இட்டதாலா என்று தெரியவில்லை செய்து வரும் சேட்டை கூட ‘ஜெரி எலி’போன்றே இருக்கும்.  அடிக்க வரும் மிஸ்யை வகுப்பறையை சுற்றி  ஓடவைத்து அடி வாங்குவானாம். சனிக் கிழமை பள்ளி இருப்பது என்பது இவனுக்கு பிடிக்காதது.  ஒரு முறை சனிக்கிழமை பள்ளி உள்ள அன்று“நாளை விடுமுறை” என்றுஅவனே அவனுடைய தின ஏடுவில் எழுதி கொண்டு வந்தான்.  வீட்டு பாடம் தியதியை மாற்றுவது வழியாக வீட்டு பாடம் எழுதுவதில் இருந்து தப்பிக்க பார்ப்பான்.  அவனுக்கு பிடிக்காத பாடம் தமிழ், ஏன் என்றால் அவனுக்கு பிடிக்காத லதா ராணி மிஸ் மூன்று வருடமாக தமிழ் கற்பிக்கின்றார்களாம்.   ‘பசங்க’ படம் கண்ட பின்பு கோபம் வந்தால் யாரையும் கிழவி என்று திட்ட பழகியுள்ளான்.  ஒரு முறை எனது பணப்பையில் இருந்து 20 ரூபாய் திருடி வகுப்பு மாணவர்களுக்கு மிட்டாய் வாங்கி கொடுத்தான் என்ற குற்றத்திற்காய் “உடனே பள்ளிவந்து முதல்வரை சந்தியுங்கள்” என்று  பள்ளீயில் இருந்து தொலைபேசியில் அழைப்பு விடுத்தனர்.  நானும் 100 ரூபாய்க்கு ஆட்டோ பிடித்து பள்ளி வாசல் சென்றடைந்த போது12 வகுப்பு படிக்கும் முதல்வர் பொண்ணிடம் கதைத்து கொண்டிருந்தான்.  வெளியில் வந்து அந்த பொண்ணிடம் என்ன பேசினாய் என்ற போது “அம்மா, அது இந்திரா மேடம் பொண்ணு, நல்ல அக்காள் அவர் 12 ம் வகுப்பு படிக்கிறார். மேடம் வர வர சரியில்லை வீட்டுலையும் அந்த அக்காவை அடிக்காங்களாம். அக்காவுக்கு கம்யூட்டர் கொடுக்க மாட்டார்களாம் நானும் நீங்கள்  கம்யூட்டர் தராதிருப்பதை அக்காவிடம் சொன்னேன்” என கூறினான்.  

இன்று மேடம் வீட்டில் வடிவேல் காமடிதான் என்று மனதில் எண்ணி கொண்டு பணத்தை ஏன் திருடினாய் என்ற போது நான் திருட வில்லை .   அப்பா சட்டை பையில் இருந்து தான் எடுத்தேன்.  நண்பர்களுக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பது தப்பா அந்த பிரியாபொண்ணு தான்  மாட்டி விட்டாள்.  அவளுக்கும் ஒரு மிட்டாய் கொடுத்தேன் என பரிதாபமாக கதைத்தான்.  கூடவே “இந்த பெண் பிள்ளைகளே இப்படி தான்” என்று நொந்து கொண்டான்!   மேடத்திடம் கொண்ட கோபத்திற்க்கு பலியாக அவன் சாப்பாட்டு பையும் பாத்திரவும் காட்டுக்குள் பறந்தது.  பணத்தை மிட்டாய் வாங்கி தீர்த்தால் கார் வாங்குவது எப்படி என்று முடித்து கொண்டேன்.

 சமீபத்தில் என்னவர் பைக்கில் பயணித்து கொண்டே பின்னால் இருப்பவனிடம் இன்னும் நல்லா படிக்க வேண்டும் கார் வேண்டாமா என்றவுடன் அப்பா என் பிள்ளைகளுக்கு பிளேன் வாங்கி தர வேண்டும் அவனுகளை நல்ல படிக்க வைக்க வேண்டும் என்று ரொம்ப சீரியசாக பதில் அளித்தான். என்னவர் சிரித்து கொண்டே ”இவனுக்கு நம்ம அறிவுரை தேவையில்லை அவன் முடிவோடு தான் இருக்கின்றான்” என்று கூறிமுடித்து கொண்டார்.

இந்த முறை அழைத்து செல்லும் போதே சட்டம் கட்டியிருந்தான்.   நான் 13 வது ராங்கில் இருந்து 9 க்கு வந்து விட்டேன். 5க்குள் வந்து விடுவேன்.  என்னை மிஸிடம் குறை சொல்ல கூடாது.  என்னவரும் அவருடைய வாகனத்தில் அழைத்து சென்று பள்ளி வாசலில் இறக்கி விட்டு விட்டு “அம்மா தாயே நான் இங்கு நின்று கொள்கின்றேன் நீ சென்று, கண்டு வா” என கூறி தலையை திருப்பி கொண்டார்.

நான் சென்ற போது ஆசிரியை வரவில்லை, அவருக்காக காத்திருந்தோம். தூரத்தில் கண்ட போதே இவர் தான் ஆசிரியை என்று என்னிடம் கண்ணால் செய்கை வேறு.  நானும் ஆசிரியையிடம் பயபக்தியுடன் கும்பிட்டேன். அவர் என்னை கண்டவுடனே அணை உடைந்த வெள்ளம் போல் “நேற்று சாப்பிட்டு விட்டு அப்ப தான் கைகழுக சென்றேன்.  இவர்கள் 5-6 பேர் கட்டி புரண்டு சண்டை போட்டனன்.   நான் முதல்வரிடம் அனுப்பி விட்டேன் அவர் தான் பெற்றோரை அழைத்து  சொல்ல சொன்னார்.   தர்ம சங்கடமான நிலையில் ஆசிரியை நோக்கி சிரிக்கவும் முடியாது பாவமாக நோக்கி கொண்டு நின்றேன்.  வேறு ஒரு பையனின் தாயும் வந்து சேர்ந்தார்.  “மேடம் என் பையனை பற்றி அன்று மார்க்கு தாள் வாங்கும் போது கூட நீங்கள் ஒன்றும் சொல்ல வில்லை.(நேற்று மதியம் தான் சண்டை நடந்துள்ளது!)  அவன் ரொம்ப அமைதி பாருங்க. தேவை இல்லாது பேசக் கூட மாட்டான்.  ரொம்ப சுத்தமானவனும் கூட நான் குடிக்கும் டம்ளரில் கூட அவன் தண்ணீர் குடிக்க மாட்டான். ஆனால் அவன் மேல் ‘பால் சாம்’ துப்புதானாம்.  அவன் சொல்லி சொல்லி அழுதுட்டான்.  நான் தான் செல்லம் அம்மா பள்ளிக்கு வாரேன். அழாதடா என சொல்லி கஷ்டபட்டு தூங்க வைத்தேன்” என்று மூச்சு விடாது தன் சோகக் கதையை கதைத்தார். உடனே ஆசிரியை “இவனுக எவ்வளவோ பரவாயில்லை அந்த பால் சாம் , ஆன்றனி , சுபாஷ் இருக்கானுகளே. அப்ப்பபா”…. எனக்கும் மனதுக்குள் ஒரு ஆனந்தம் இவனை விட சேட்டைகாரனுகளா ?   அந்த அம்மா விடும் படி இல்லை  பின்பு என்னை பார்த்து பிள்ளைகளை பார்த்து கொள்வது சாதாரணம் இல்லை மேடம் நம்மால் 2 பிள்ளைகளை ஒழுங்கா சமாளிக்க எவ்வளவு பாடு.  நான் கல்லூரியில் படிப்பிக்கும் போதும் இப்படி தான் ( சரி அவர் கல்லூரி ஆசிரியை ஆக இருந்துள்ளாராம்-தற்பெருமை) சின்னை பிள்ளைகள் தான் இப்படி என்றால் கல்லூரி பசங்களை சொல்லவே வேண்டாம். இப்பம் கூட பாருங்க நானும் அவரும் ஆபிசிலை லீவு போட்டு வந்தோம். (சரி இப்போது ஆபிசில் வேலை பார்க்காங்களாம்).


நான் மனதில் எண்ணினேன். அவர் பிள்ளையை குறை கேட்க வருவதை கூட எவ்வளவு அழகாக அவரின் மேன்மையான சரித்திரம் சொல்ல பயண்படுத்தி விட்டார்!  என் மகன் ரொம்ப பைவ்யமாக நான் எப்போது  இடத்தை காலி பண்ணுவேன் என்று என் முகத்தை பார்த்து கொண்டிருந்தான்.   அந்த அம்மா அவருடைய கருத்துக்களை பதிந்து கொண்டு நின்றார்.  நான் ஆசிரியையிடம் பணிவாக ஒரு 40  டிகிரி வளைந்து மேடம் பிள்ளைகள் பாதுகாப்பு உங்களிடம் தான்.   உங்களையே நம்புகின்றேன்.     “என் குழந்தையை அபிலாஷ் அடித்து காலில் பட்ட காயத்தை நேற்று தினஏடுவில் எழுதி விட்டிருந்தேன்.  இந்த வாரம் முட்டு, கால், முதுகில் காயங்களுடன் தான் வந்தான்.  அபிலாஷ் நேற்று கூட நீட்டல் குளத்தில் உன்னை தள்ளி விடுவேன் என கூறியுள்ளானாம் என்றேன்.  (எப்படியும் என் பிள்ளையை பற்றி ஆன்றனி, அபிலாஷ் அம்மா சொல்லுவார்கள். நானும் ஏதாவது சொல்லாமல் போனால் நான் தான் பள்ளியில் சென்று சண்டையிட்டு வர சொல்வதாக ஆகாதா?)   என் மகன் ஒரு முறைப்பு !  வீட்டில் வந்த உடன் சொல்கிறான் நானும் அபிலாஷும் நேற்று மாலை நண்பர்கள் ஆகி விட்டோம்,  ஏன் அவனை குறை சொன்னீர்கள் என்று.
பல பொழுதும் இந்த தண்டனைகள் பெற்றோருக்கு தான் என்று உணர்ந்துள்ளேன். மாதத்திற்க்கு ஒரு முறையாவது பள்ளிக்கு அழைத்து விட்டு அவர்கள் பள்ளி கட்டுபாடு உள்ளது, உங்கள் பிள்ளை வளர்ப்பு சரி இல்லை என சொல்லாது சொல்லி விடுகின்றனர். பெற்றோர்களோ அவசர அவசர மாக 7 மணிக்கு எழுப்பி 8 மணிக்கு பள்ளி வாகனத்தில் டாடா காட்டி அனுப்பி 6 மணிக்கு திரும்பி வரும்  பிள்ளைக்கு தீனி கொடுத்து பின்பு வீட்டு பாடம் செய்ய வைத்து 8 மணிக்கு சாப்பாடு கொடுத்து 9 மணிக்கு தூங்க வைத்து அதே போல் அடுத்த நாள் 7 மணிக்கு எழுப்பி என குழந்தைகளின் வீட்டிலுள்ள நேரம் இப்படி செல்கின்றது.   நல்ல பயனுள்ள ஆக்க பூர்வமான நேரமெல்லாம் முதல்வர் அறைமுன்னும் கட்டி பிடித்து சண்டை இட்டும் தான் கழிகின்றனரா என்று கேட்கவா இயலும்.  ஆசிரியை சொல்வதை பயபக்தியாக கேட்க தான் முடியும் பெற்றோர் ஏன் என்றால் ஆசிரியர்கள் குருக்கள் பெற்றோர் நேரம் போகாது பெற்று போட்டவர்கள் தானே?   

3 comments:

  1. நண்பா தாங்கள் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  2. அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சகோதரி ...என் மகன் பள்ளியில் வாக்கியத்தில் அமை என்பதில் angry -my teacher is an angry lady என்று எழுதிவிட்டான் ,அவனுடைய ஆசிரியருக்கு வந்ததே கோபம் ..முகத்தை சுழித்து கொண்டு அத்தனை வெறுப்பாக என்னிடம் பேசினார் .என்னிடமே அப்படிஎன்றால் பிள்ளையிடம் எப்படி பேசியிருப்பாரோ ?அவன் நான் எழுதியதில் என தப்பு அவர் சிரிக்கவே மாட்டார் என்கிறான் ,என்ன செய்வது ?

    ReplyDelete