30 Mar 2011

ஏமாற்றும் விண்வெளி அரசியல்!!!!




மனிதனின் விண்வெளிப் பயணம் தொடர்பான கனவுகள் பற்றிய கதைகள் இதிகாச நூல்கள் ராமாயணம், மகாபாரதம் காலம் தொட்டே துவங்கியுள்ளது.  இவையில் விண்கல-பயணம் பற்றிய கற்பனைக் கதைகள் இடம் பெற்றுள்ளன.


ஆயிரம் இரவுகள்’ என்ற அரேபிய நூலிலும் விண்கலம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.  10 வது நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பானிய கதாசிரியர் “மூங்கில் வெட்டி” என்ற நாவலில் விண்வெளி பயணத்தை குறித்து கற்பனையாக எழுதியுள்ளார்.  இதில் இருந்து விண்வெளி மீது மனிதனின் கற்பனைகளும் ஆசையும் எக்காலவும் இருந்துள்ளதை காணலாம்.


முதலில் எலி, நாய் , தவளை போன்ற விலங்குகளையே அனுப்பி ஆராய்ச்சி செய்துள்ளனர்.  விண்வெளிக்கு முதலில் கால் பதித்தவர்கள் ஆம்ச்ட்ராங், ஆல்ரிடின்,  யூரிகிரிகோரி என்ற மனிதர்கள் தான் என்று நமக்கு  சொல்லி தரப்பட்டாலும் உண்மையில் கால்வைத்து நமது முன்னோர் இனமான ஆல்பிரட்-6 என்ற குரங்கு தான்!


தற்போது சீனா, ஜப்பான், துருக்கி, ஈரான் போன்ற நாடுகளும் விண்வெளி பயணத்திற்க்கு போட்டி போட்டு கொண்டு தயாராகி கொண்டிருக்கின்றது.  28 மிலியன் கட்டிவிட்டால் ரஷ்யா ஏற்பாடு செய்து தரும் விண்வெளி பயணத்திற்க்கு சில பயிர்ச்சியுடன் பயணம் மேற்கொள்ளும் காலம் வந்துவிட்டது.                                                                                                             
                                                                                                     விண்வெளி பயணம் மீது, அரசு - விஞ்ஞானிகளின் வார்த்தைகளில் நம்பி  மனிதன் இந்த அளவு பேராவல் கொண்டிருந்தாலும் இப்பயணம் உண்மையில் இனிமையானது அல்ல என்பது தான் நிஜம்!  விண்வெளியில் புவி ஈர்ப்பு சக்தி பூஜியம் என்பதால் மனிதனால் பூமியில் என்பது போல இயங்குவது கடினமே.  காற்றடைத்த பலூணை போன்று மிதக்க தான் முடியும்.  உடல் எடை, விண்வெளியில் குறைவதால் விண்வெளிக்கு ஏற்ப அங்கு வாழ கற்று கொள்ள வேண்டும்.  மேலும் நிம்மதியான குளியலுக்கு கூட வழியற்று பஞ்சு குளியல் தான். கழிவறை பிரச்சனை தான் மிகவும் கொடியது பிரத்யேக தொழில் நுட்பத்துடன் கூடிய கழிவறையே பயண்படுத்த இயலும்!! விண்வெளி பயணிகள் சுகாதார பிரச்சனையால் தான் பெரிதும் துன்புறுகின்றனர் என்று அறிந்து கொள்ள முடிகின்றது.


விண்வெளியில் ஆல்பா, காஸ்மிக் போன்ற அதி சக்தி வாய்ந்த கதிர் வீச்சுகளால் புற்று நோய் தாக்க வாய்ப்பு உள்ளது. “அப்பல்லோ” விண்கலத்தில் பயணித்தவர்கள் பளிச்சிடும் ஒளி கண் திரையை ஊடுருவி சென்றதாக குறிப்பிட்டுள்ளனர். விண்வெளிப் பயணம் மற்றும் ஆராய்ச்சியை மெச்சும்படியான  சாதனையாக கருதுவதற்க்கு  இல்லை  என்றே நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் ரிச்சார்டு, ஃபெயின்மேன் போன்றோர் தெரிவித்துள்ளனர்.    
பல விண்வெளிப் பயணங்கள் தோல்வியில் தான் முடிந்தது.  இதில் 1986 ல் நடந்த சாலஞ்சர் விண்வெளி பயணத்தின் தோல்வியை  தழுவி “சாலன்ஜர்” என்ற திரைப் படத்தில் விண்வெளி அரசியல் பற்றி கதைத்துள்ளனர்.  7 விண்வெளி வீரர்களுடன் புறப்பட்ட விண்கலம் தொடர்பியல் மற்றும் தொழில்நுட்ப கோளாரால் அட்லாண்டிக் கடலில் விழுந்து தோல்வியில் முடிந்தது. இதில் ஒரு பயணியாக பள்ளி ஆசிரியை கிருஸ்டாமாக் ஆலிஃப்  இருந்ததால் நாசா, பள்ளி மாணவர்களுக்கு  என (45%) நேரடி ஒளிபரப்பு தயார் செய்யபட்டிருந்தது.  இதே போல் 2003 ல் இந்திய விண்வெளி பயணி கல்பனா சாவ்லாவின் பயணவும் துயரில் முடிந்தது.


விண்வெளி பயணிகளின் வாழ்க்கை கூட விண்வெளி பயணத்திற்க்கு பின்பு இனிதாக இருந்திருக்க வில்லை.   பலருடைய மரணம் இயற்கை அல்லாது  மர்மமாகவே இருந்துள்ளது.   நாடுகள் கொண்டுள்ள போட்டியில் மனிதர்களின் நிம்மதியை பாழாக்குவதுடன் நாட்டின் வளத்தையும் விண்வெளிப் பயணம் என்ற பெயரில் சுரண்டுகின்றனர் என்பதை தான் கவலை கொள்ள வேண்டிய செய்தி!!!


கொலம்பிய விண்கல விபத்து,  கத்ரீனா பேரழிவு, இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின்பு அமெரிக்க மக்கள்  விண்வெளி ஆராய்ச்சிக்காக செலவழிக்கப்படும் மிகப்பெரிய டாலர்களை பற்றி கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். ரஷ்யா, தாங்கள் தான் விண்வெளிக்கு முதல் விண்கலத்தை அனுப்பியுள்ளோம் என்று தற்பெருமை கொண்டாலும் உலக தெருவோரக் குழந்தைகளின் பெரும் பகுதி ரஷ்யா குழந்தைகள் என்று எண்ணி வெட்கி தலைய் குனியத் தான்  வேண்டியுள்ளது.


நமது இந்தியாவை எடுத்து கொண்டால் உலக நாடுகளின் குப்பை கூடம், உலகநாடுகளால் தடைசெய்யப்பட்ட பூச்சிகொல்லிகளுக்கு அறிமுகம் கொடுப்பவர்கள், ரஷ்யாவில் மூடும் அணு ஆலைகளுக்கு திறப்புவிழா கொண்டாடுபவர்கள் என்று கோமாளி அரசியல் கொண்டது என்பதால் என்னவோ; பணக்கார நாடுகள் கூட விண்வெளியை பற்றி பெரிதாக மதிப்பிடாது இருக்க  துணியும் போது இவர்கள் பள்ளி-கல்லூரி தோறும் அப்துள் கலாம் போற்ற அறிவு ஜீவிகள் வழியே மக்கள் மத்தியில் விண்வெளி ஆசையை விதைத்து வருகின்றனர்.  70% ஏழைகள் கொண்ட இந்தியாவில் விண்வெளி மோகம் அதிகரித்து வருகின்றது என்பதே கவலைக்குரிய செய்தியே.  கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் கூட தர இயலாத சூழலில் விண்வெளி ஆராய்ச்சிக்கு என 6 மில்லியயன் ஒதுக்கியுள்ளது கண்டிக்க தக்கது.  இந்திய விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்க்கு மொத்தம் 12 ஆயிரத்து  400 கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளது மத்திய அரசு. பிரதமரின் நேர் கட்டுபாடில் இருக்கும் இத்துறையின் நிலவரம் சமீபகாலமாக ஊடகம் வழி 4G ஊழல் என்ற பெயரில் வெளிவர ஆரம்பித்துள்ளது. பிரதமரும் "எனக்கு ஒன்றும் தெரியாது தான் எல்லாம் நடைபெறுகின்றது என்று திருவாய் மலந்துள்ளார்.


 1969 ல் இருந்து விண்வெளியை பற்றி ஆராய்ந்து வரும் இந்திய விஞ்ஞானிகளால் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளை மக்களுக்கு முன்கூட்டி எடுத்து கூறி உயிர் உடைமைகளை  காப்பாற்ற இயலவில்லயே என்ற மக்களின் எதிர்ப்பு குரலை கேட்டும் கேட்காதது போல் தான் இயங்குகின்றது நம் ராக்ஷச அரசு.


மக்கள் வசிக்க தகுந்த நீர், நில இயற்கை வளங்கள் கொட்டி கிடக்கும் பூமியை பேணாது  வாழ்வாதாரமற்ற சந்திர, செவ்வாய் கிரங்கள் மேல்  ஆராய்ச்சி என்ற பெயரில் கொள்ளும் அர்த்தமற்ற பற்றை  விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொள்ளும் அரசியல் அதிகார வர்கத்தில்  பகல் கொள்ளையை என்னவென்று சொல்வது?     

28 Mar 2011

‘வடி கொடுத்து அடி வாங்கிய நான்’


‘வடி கொடுத்து அடி வாங்குவது’ என்று ஒரு மலையாள சொல் உண்டு. வடி என்றால் அடிக்கும் கம்பு.   பள்ளியில் படிக்கும் போது வகுப்பு தலைவி என்பதால் பலபொழுதும் எங்கள் ஆசிரியர்களுக்கு என்னுடன் படிக்கும் மாணவர்களை அடிக்க  கம்பு தயார் செய்து தருவது என் வேலையாக இருந்தது. நல்ல விளைந்த உண்ணி(ஒரு வகை வேலி செடி) கம்பு ஒடித்து  அதன் மேல் பக்கம் உள்ள முள்களை கல்லில் உரசி களைந்து பதமாக  ஆசிரியரிடம் கொண்டு சேர்ப்பது உண்டு.   தீவிர கம்னிஸ்டான ஹரிஹரன் சார் “கூட படிப்பவர்களிடம்  இவளுக்கு இவ்வளவு வன்மமா” என்று  எண்ணி முதல் அடி உனக்கு தான் என்று என்னில் இருந்தே  ஆரம்பிப்பார்.   பின்பு நல்ல மூர்க்கமான கம்பு என்பதில் இருந்து பார்க்க ஆரோக்கியமான கம்பாக இருக்கும் ஆனால் சொங்கி கம்பாக கொண்டு கொடுக்க கற்று கொண்டேன்.   தேயிலை கம்பு மட்டும் ஒடித்து கொடுப்பதே கிடையாது 10-12 அடி அடித்தாலும் ஒடியவே ஒடியாது வளைந்து வளைந்து சிவிங்.. சிவிங்.. என்ற சத்ததுடன் அடி விழுந்து கொண்டே இருக்கும்.  சில ஆசிரியர்கள் தலைவராக இருப்பதற்க்கு தண்டனை என்பது போல் “சூரல்” கம்பு தான் வேண்டும் என்று கட்டளை இடுவர்.  அதுவும் முதல் நாள் வாங்கி தேங்காய் எண்ணை இட்டு அடுத்த நாள் கொண்டு செல்ல வேண்டும்.
எங்கள் வீட்டில் அம்மா எங்களை அடிக்க என ஒவ்வொரு கதவு கட்டளையிலும் சூரல் கம்பு வைத்திருப்பார்கள்.  ஒவ்வொரு நாள் செய்ய வேண்டிய வேலைக்கும் அட்டவனை உண்டு.  அதில் முதல் வேலை காலை 6 மணிக்குள் எழுந்து ஆலயத்திற்க்கு திருப்பலிக்கு செல்ல வேண்டும் என்பது தான்.  மழையோ பனியோ காரணம் எதுவாக இருந்தாலும் எங்களை பாதிக்க கூடாது காலையில் கோயில் சென்று வந்து தான் அந்த நாள் ஆரம்பம்!!!  நான் எப்போதும் தூக்க பிரியை என்பதால்  சூரல் அடிதான்  என்னை எழுப்பி விடும்.  அந்த அடியின் பயம்  கொண்டு எழுந்தது திருமணம் முடிந்தது வரை தொடர்ந்தது.  பின்பு என்னவர் தூங்குபரை ஒரு போதும் தொல்லை செய்ய கூடாது என்ற சபதம் எடுத்துள்ளதால் பயமின்றி நிம்மதியான தூக்கத்துடன்  என் காலங்கள் செல்கின்றது.

சபீபத்தில் கம்பு கொடுத்து அடி வாங்கியதை பற்றி தான் சொல்ல வருகின்றேன்.  ஆர்குட் சமூகத் தளத்தில்  இருந்து அமெரிக்காவில் வசித்து வரும் என்னுடைய சொந்த ஊரை சேர்ந்தவரின்  நட்பு அழைப்பு வந்தது.  எனக்கு ஒரே ஆச்சரியம்; எங்கள் பள்ளியில் படித்தவர் அமெரிக்காவில் ஆசிரியரா?  எங்கள் பள்ளியில் 10 வகுப்பு பாசாகுவதை பெரிய சாதனை.  கொஞ்சம் தெனாவட்ட நடக்கும் பசங்களை அழைத்து “எடா நீ கதி பிடிக்கத்தில்லா”(நீ உருப்பட மாட்டே), நீ தந்தை இல்லாத்த பணியல்லே காட்டியது(நீ ஒரு அப்பனுக்கு பிறக்கவில்லையா என்ற அர்த்தம் கொள்ளுதல்), நீ தீர்ச்சயாயும் 10 கிளாஸில் தோற்று போகும் ஞான் பறயுவா (நீ 10 வகுப்பில் கண்டிப்பா தோற்று போய் விடுவாய்) என்று வாழ்த்தி/சாபம் இட்டு அனுப்புவதிலே ஓர் அளவு படிப்பவனும்  10 வகுப்பில் தோற்று போய் விடுவான்! 

இவர் என்னில் இருந்து 3 வகுப்பு முன்னதாக படித்துள்ளார்.  பள்ளியில் முதல் மாணவனாக ஜெயித்ததாகவும் வாழ்க்கையில் மிகவும் போராடி இவ்விடத்தை வந்தடைந்ததாக  கதைத்தார்.  இவருடைய சகோதரர்கள் என்னவருக்கு தெரிந்தவரென்றும் என் குடும்பத்தை நன்கு அறிந்திருக்கார் என்றும் அறிந்தேன்.   நான் இவரை கண்ட நினைவு இல்லாவிடிலும்   என் ஊர்காரர் என்பதால்  பிரத்தியேக மதிப்பாக இருந்தது.  அதனால் அவரிடம் ஸ்கைப் வழியாக  கதைத்து அவர் குடும்பம் மனைவி எல்லாம் தெரிந்து கொண்டேன்.  என்னவரின் புகைப்படம் தொகுப்பில் இருந்து சமீபத்தில் எடுத்த என் ஊர் புகைப்படங்கள் அனுப்பிய போது அவர் பரவசப்பட்டு  நன்றி நன்றி என்று பலதடவை சொல்லி கொண்டார்.

இந்தியாவில் உள்ள அவரின் மனைவியிடம் நான் பேச வேண்டும் என்று  அவர் மிகவும் கேட்டு கொண்டார்.  மேலும் அவர் மனைவியிடம் நான் நட்பை உருவாக்க வேண்டும் என்றும் இந்தியா வரும் போது சந்திக்கலாம் என்றும் பாசமாக வேண்டு கொள் விடுத்தார்.   இங்குள்ள பெண்களின் மன போங்கு தெரிந்ததால் தயக்கம் இருந்தாலும்  அவரின் வேண்டுகோளுக்கு இணங்க பேச சம்மதித்தேன்.  

மத்திய வயதை கடந்த கணவர்களை பற்றி  கதைக்கும் போது கூட எங்க சார்…. சார் என்று  அவரை ஒரு பீடத்தில் தூக்கி வைத்து சராசரி மனிதனில் இருந்து அன்னிய படுத்தி விடுவார்க்ள்.  இங்குள்ள ஆண்களும் அவர்கள் மனைவிகள் பக்கத்தில் உள்ள போது அநியாயத்திற்கு படம் போடுவார்கள்.  மனைவியிடம் மட்டுமே பேசுவது போலவும் மற்று பெண்கள் அன்னிய கிரகவாசிகள் போன்றும் பார்ப்பார்கள். (மனைவி அருகில் உள்ள போது மட்டும் தான், அலுவலகத்தில்/ பள்ளிகளில் இவர்கள் நிறம் வேறு…. )இவையை பற்றி ஏற்கனவே  தெரிந்தால் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும்  சரி நம்ம ஊர்கார் விரும்புகின்றார் அதும் அமெரிக்காவில் உள்ளவர் என்ற தைரியத்தில்   தொலை பேசியில் தொடர்பு கொண்டேன்.

மறுமுனையில் அவர் மனைவி அங்கலாய்த்து கொண்டு ஒரு போலிஸ்  குற்றவாளியிடம் விசாரிப்பது போல் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்.  நீங்க யார், எங்கு உள்ளீர்கள், உங்களுக்கு எப்படி என் கணவரை தெரியும் அவரை கண்டுள்ளீர்களா, உங்கள் கணவர் யார்?.... ஒரு வழியாக பதில் சொல்லி தப்பித்தேன். நான் மூக்குடைந்ததே காட்டி கொள்ளாது உங்கள் குழந்தைகள் நலமா என்று விசாரித்து கொண்டேன்.   நானாக வலிய உங்க வீடு எங்கு உள்ளது என்று கேட்டதிற்கும் சரியாக முகவரி சொல்ல கூட அவர் விரும்பவில்லை.  இவ்வளவுக்கும் அவர் கல்வி அறிவு அற்றவர் அல்ல; முதுகலைப் பட்டம் முடித்து தற்போது ஆசிரியர் பயிற்சியிலும் உள்ளார்.   ஒரு சராசரி மரியாதைக்கு கூட என் குழந்தைகள் நான் வசிக்கும் இடம் பற்றியோ விசாரிக்க வில்லை.  படிக்க நிறைய உள்ளது என்று கூறி அவசர அவசரமாக அலைபேசியை துண்டித்து கொண்டு விட்டார்.

 இதை பற்றி அவர் கணவரிடம் நான் எதும் சொல்ல வில்லை.  அவர் மனைவியை அவரிடமே குறை சொல்லி தர்மசங்கட நிலமைக்கு கொண்டு வர விரும்பாததால் உங்கள் மனைவியிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்ற ஒரு மின்மடல் அனுப்பி விட்டு கிடைத்த அடிக்கு என்னவரிடம் என் சோக கதையை சொல்லி மருந்து இட்டு ஆறுதல் பட்டு கொண்டேன்.  

நேற்று மறுபடியும் என் ஊர்காரரிடம் இருந்து  வேண்டுகோள் என் மனைவிக்கு தேர்வு, அவள் வெளியில் போக இயலாது அவளுக்கு தேர்வு மாதிரி கேள்வி தாள் வாங்கி தர இயலுமா என்று கெஞ்சுகின்றார்.   எனக்கும் உதவ விருப்பம் தான், ஆனால் புத்தகத்தை கொண்டு வீட்டில் கொண்டு கொடுத்து   மறுபடியும் வடி கொடுத்து அடி வாங்கவா? வலி தாங்க மாட்டேன்பா என்று ஒளிந்து கொண்டேன் வேறு வழி?

தாலி கட்டிவிட்டார் என்று பெண்கள் இப்படி பாச கயிற்றால் கட்டி போட்டு அடிமைப்படுத்தி இவர்களும் அடிமையாக  வாழ பழகி கொள்கின்றார்கள்.  இந்த மாதிரி பெண்களின் நிழல் பட்டால் கூட இந்த பறவை மனம் கருகி விடும்!!!!

27 Mar 2011

வீரபாண்டிய கட்ட பொம்மன் சுதந்திர போராட்ட வீரரா?

பாஞ்சால குறிச்சி கோட்டை காண வேண்டும் என்ற பல நாள் ஆசை இந்த வாரம் நிறைவேறியது.  திருநெல்வேலியிலிருந்து புளியம் பட்டிவழியாக ஓட்டபிடாரம் கடந்து பாஞ்சாலகுறிச்சி வந்தடைந்தோம்.   வரவேற்பறையில், தலைக்கு சிறியவருக்கு 1 ரூ பெரியவருக்கு 2  ரூபாய் வசூல் செலுத்தி உள்ளே அனுமதிக்கின்றனர்.  மேலும் வீரபாண்டியரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய ஒரு புத்தகம் 25 ரூபாய்க்கும் தமிழக வரைபடம் ஒன்று 10 ரூபாய்க்கும் பெறலாம்.  “மாதிரி கோட்டை” தூரத்தில் இருந்து கண்ட போது சிவப்பு வண்ணத்தில் அழகாக காட்சி தந்தது. 
  
 கோட்டையின் இடது பக்கம் “உண்மை கோட்டையின்” எச்சம் அரசின் அகவாராய்ச்சியாளர்களால் பாதுகாக்க படுகின்றது.   அரசு ஊழியரான வழிகாட்டி கோட்டையின்  மகிமையை பற்றி கதைக்கின்றார்.  பின்பு மிக  அருகில் வந்து ஏதாவது பார்த்து தாங்க என்று கெஞ்சுகின்றார். 10 ரூபாய் தாளுடன் இடத்தை காலி செய்து அடுத்த பயணிகளை தேடி செல்கின்றார்.   கோட்டையின் மத்தியில் ஒரு வெள்ளை கல் கொண்ட ஒரு மேடையும் அது வீர பூமி எனும் அடையாளப்படுத்துகின்றனர்.   ஒரு  நாள் ராஜாவின் பணியாளர்கள் இந்த வழியாக வேட்டையாடி வந்தார்களாம் .   அந்த குறிப்பிட்ட இடத்தில் ஒரு முயல் தன்னை துரத்திய நாயை வீரமாக எதிர்கொண்டதாம்.    இதனால் கவரப்பட்ட மன்னர் இங்கு ஒரு கோட்டை கட்ட இவ்விடத்தை தேர்வு செய்த்தாகவும் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் என்னுடைய கணிப்பு பாளையில் இருந்து நாம் பாஞ்சாலைக்குறிச்சி நோக்கி செல்லும் போது வழியெல்லாம் வரண்ட வெறும் புல் செடியும் கள்ளி செடியுமே சீமை ஒடையுமாகவே  காட்சி தருகின்றது. பாஞ்சாலகுறிச்சி நெருங்கி வருகையில் நீர் ஓட்டம், பச்சை பசேலான பகுதி காண முடிந்தது. எனக்கு என்னவோ மன்னர் இந்த வளமான பூமியை கண்டு தான் இந்த இடத்தை  தன் ஆட்சிக்கு என தேர்வு செய்திருப்பார் என்று தோன்றுகின்றது.
வெள்ளைகாரர்கள் முற்றிலும் கோட்டையை அழித்து மறுபடியும் கோட்டையை கட்டாதிருக்க ஆமணக்கு விதையை நட்டு சென்றதாகவும் தற்போது தமிழக அகவாராய்ட்ச்சி குழுவே மறுபடியும் புதுயுண்ட கோட்டையை தோண்டி கண்டதாகவும் சொல்லபடுகின்றது.   மேலும் கோட்டை ஒரு சிறு அளவு இடத்தில் தான் உள்ளது.   மன்னர் கைவீசி நடந்திருக்க இவ்விடம் இயன்றிருக்குமா எனவும் சந்தேகமாக இருந்தது.   வழிகாட்டி அதற்க்கு காரணமாக பகவர்களிடம் இருந்து தப்பிக்க குறுகலும் நெடுகலுமாக கட்டியிருந்ததாக சொன்னார்.
ஒரு வெள்ளை தரை கொண்ட மேடையில் நடன மங்கைகள் நாட்டியம் ஆடியதாகவும் கதைத்தார்.  பக்கத்தில் மஹாராணி குளித்த குளவும் அவர்கள் தங்கியிருந்த மாளிகையின் அடிப்பகுதியும் காட்டினர்.  ஒரு வேளை அந்த கால அரசிகள் சிறிய இடங்கலில் வாழ பழகி இருக்கலாமோ என்னவோ! நம் அரசியல் வாதிகள் கண்டிப்பாக கண்டு பின்பற்ற வேண்டியது தான்.  மன்னர் ஆட்சியை அழித்து அதிகாரத்தில் வந்த குடியரசு ஆட்சியின் தலைவர்களின் கல்லறைகளுக்கு கூட ஆயிரக்கணக்கில்  ஏக்கர் நிலம் தேவைப்படுகின்றது இன்று!
மாதிரி கோட்டையாக கட்டியிருக்கும் கட்டிடம் தான் சுத்த அபத்தமாக உள்ளது.  கட்ட பொம்மரை கேலி செய்கின்றார்களா என்றும் தெரியவில்லை.   இக்கோட்டையை 1974 ல் கருணாநிதி திறந்து வைத்ததாக ஒரு கல்லில் கொத்தி வைக்க பட்டிருந்தது. கோட்டைக்குள்  ஒரு அறை நடுவில் கருப்பு கல்லிலான வீரபாண்டிய மன்னனின் சிலையும் அதன் அடியில் அவருடைய பெயரும் அதற்க்கு கீழ் வரிசையில் கருணாநிதியின் பெயரும் பொரிக்க பட்டுள்ளது.   மண்டம் கட்டியதிலும் ஒரு நோக்கம் நிறைவேறி இருப்பதையும் இப்பலகையில் இருந்தே காணலாம்.  சிலையை சுற்றி படங்களால் வரலாறு சொல்லும் சித்திரங்களும் உள்ளது.
 இம் மண்டபத்திற்குள் 100 மக்கள் ஒரே நேரம் கோட்டைக்குள் சென்று வர இயலுமா என்பது சந்தேகமே. 1000 பேர் வந்து வருடம் தோறும் திருவிழா கொண்டாடுவதாக சொல்லபடுகின்றது.    மிகவும் தாழ்ந்த கூரை இடுங்கலான பாதை காற்று புகராத அமைப்பு என கோட்டை  மூச்சடைக்கும் இடமாக தான் உள்ளது.   கட்ட பொம்மனின் தலைக்கு மேல் ஒரு ஒளி கண்ணாடி பதிப்பித்துள்ளதும் அதன் சுற்று பகுதி கீறல் கொண்டு பழுது பட்டும் காணப்படுகின்றது.  
அங்கு இருக்கும் கல் சிறப்பங்களில் பெரிய அளவிலான நத்தை கூடு கட்டி வரிசையாக இடம்பிடித்து  இருக்கின்றது.   கோட்டையை சுற்றி ஒழுங்காக பெருக்கி கூட பல மாதங்கள் ஆகி இருக்கலாம்.  புல் செடி களையுடன் அசுத்தமாக காட்சியளிக்கின்றது.  அங்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் கண்ட இடத்தில் எல்லாம் குழந்தைகளை சிறு நீர் கழிக்க அனுமதிக்கின்றனர்.  கொடுமையிலும் கொடுமையாக வீரபாண்டியரின் உண்மை கோட்டை பற்றி வழிகாட்டி விவரித்து கொண்டு இருக்கும் போது அக்கோட்டக்கு மேல் ஒரு சிறு குழந்தை ஒன்ஸ் அடைக்கின்றது!!!
கோட்டைக்கு வலது புறம் மன்னர் வணங்கிய  ஜக்கம்மா தேவியின் ஆலயம் உள்ளது. பங்குனி உத்திரம் என்பதால் பல மக்கள் சாப்பாடு வைத்து சாமி கும்பிட  வாகனங்களுடன் குவிந்திருந்தனர்.
கோட்டையை விட்டு வெளிப்புறம் வரும் போது கோட்டை வளைவில் ‘கழிப்பறை’ என்று ஒரு பக்கவும் மறுபக்கம் ‘குடி நீர்’ ‘என்று எழுதி வைத்திருந்தனர்.  சுற்றலாத்துறையின் அழகு உணற்ச்சியை எண்ணி நாம் பெருமை பட்டு கொள்ளவேண்டியது தான்!!  மண்டபத்திற்க்குள்ளும் புகைப்படம் எடுக்கல் ஆகாது என்ற கட்டுபாடும் உள்ளது.
ஊமதுரை போன்றோரின் கல்லறை எங்கு என்று தென்படவில்லை.  ஊர் மக்கள் இருந்து கதை அடிப்பதற்க்கு என சிறு சிறு மண்டம் கட்டி வைத்துள்ளனர்.   செல்லும் வழியில் ஊமதுரை ஜக்கமாள், போன்றவர்களின் வளைவு தூண்கள் உள்ளது.   நமது தமிழக சுற்றலா பயணிகள்
கதைத்து கொண்டு, சத்தமிட்டு ஓலமிட்டு கொண்டே மண்டத்தினுள் நடமாடுகின்றனர்.   சேலைகட்டிய பெண்கள் சேலை ஒரு பக்கம், அவர்கள் ஒரு பக்கம் ஒரே கலவரமாக தங்கள் இருக்கும் சூழலை மறந்த நிலையில் நடந்து செல்கின்றனர்.  அவர்களின் குழந்தைகளும் மண்டபத்திற்க்குள் நெடுகையும் குறுகையுமாக ஓடுவதும் கத்துவதுமாக  அங்கு எழுதியிருப்பதை வாசிக்வோ சித்திரங்களை கண்டு  கருத்தை உள்வாங்கவோ அனுமதிக்காத சூழலாக இருக்கின்றது.   மேலும் கொரியன் க்ரோஸ் போன்ற புல் செடியில் மிதிக்காதீர்கள் என்று எழுதி வைத்ததையும் மீறி காலிட்டு அச்செடியை நோண்டி கூட பார்க்கின்றனர்.   பெற்றோரோ சிரித்து உற்சாகப்படுட்த்துகின்றன்ர்.   கேரளா சுற்று பயணம் தான் அப்போது நினைவில் வந்தது. திருவனந்த மிருகை சாலையில் கூட கடைபிடிக்க வேண்டிய அமைதியை கடை பிடித்து    அமைதியாகவே நடந்து கொள்வதை பார்க்கலாம்.  

மேலும் ‘மண்பம் கட்டி விட்டோம்’ என்று போக்கு காட்டும் அரசு, பள்ளி  கல்லூரி, பல்கலைகழகம் அல்லது தொழில் நிறுவனங்கள் என்று சிந்தித்திருந்தால் சுற்று வட்டார மக்களும் பயண்பட்டிருப்பர். கட்டபொம்முவின் வம்சா வழியர் வாழ வீடு கட்டி கொடுத்துள்ளனர். சிலர் குடியிருக்கின்றனர்; பலர் வீடு பயன்படுத்தாது கரயான் பிடித்து கிடக்கின்றது.   சில ஆண்கள் குப்பியும் தண்ணியுமாக மதுவில் கலந்திருந்தனர் உடைந்த வீடுகளின் முன்பு!!.  சுகாதாரமற்ற குடியிருப்பு, களையற்ற மக்கள் என கட்டபொம்மனின் துயரமுடிவும் அவர் வம்சத்தின் தொடர் துயரும் கண்கூடா தெரிகின்றது.
கட்டபொம்மனை இந்திய சுதந்திர தாகத்திற்க்கு வித்திட்டவர் என்ற புகழ் சூடப்பட்டிருக்கும் வீரபாண்டியரின் வாழ்க்கை வரலாறு புத்தகம் படிக்கும் போது வரட்டு பிடிவாதத்தாலும் அவருடைய மந்திரி தானாபிள்ளை கண்மூடித்தனமாக நம்பியதால் வஞ்சிக்க பட்ட மன்னாகவே தெரிகின்றார்.   சுதந்திரத்திற்க்கும் இவருக்கும் சம்பந்தம் இருப்பதாகவே தெரியவில்லை. பிரிட்டிஷாரை எதிர்த்த மைசூர் டிப்பு சுல்த்தானே எதிர்த்து போராட உதவிய  புதுகோட்டை தொண்டமானே அவர் உற்ற நண்பராக இருக்கின்றார்.   எட்டப்பன் என்ற தன் இன அரசானாலே அழிக்க பட்டவரும் தொண்டமான் என்ற நண்பனால் காட்டி கொடுக்க பட்டவருமே கட்ட பொம்மு.   தன் நாடு, வீடு நலன் எண்ணாது தன் தாய் மாமன், தம்பி, தாய் ,மனைவி பேச்சை கூட பொருட்ப்படுத்தாது கண்மூடி தனமாக குள்ளை நரி- தன்னலம் பிடித்த மந்திரி பிள்ளைக்கு துணை போனதால் அழிவையே தேடி கொண்டவரே வீரபாண்டிய கட்டபொம்மர்!!!!. சுதந்திர போராட்டதை எதனால் இவருடன் இணைத்தனர் என்பது தான் மர்மமாக உள்ளது?  அன்னிய நாட்டு பிரிடீஷாரை எதிர்த்தார் என்றதால் அவர் சுதந்திர வீரத்திற்க்கு வித்திட்டவரும் தற்கால கொள்ளைகார உள்ளூர் அரசியல் வாதிகளை எதிர்த்தால் இந்திய இறையாமைக்கு எதிராளி ஆகவும் மாற்றிவிடுகின்றது தான் அரசிய வரலாறோ?.


திரும்பி வரும் போது தூத்துகுடி வழியாக நெல்லை வந்து சேர்ந்தோம்.  தூத்துகுடியின் இயர்க்கை க்கு பங்கம் விளைவிக்கும் ஸ்டெர்லயிட்  வழியாக வந்த போது ஒரு கருப்பு புகை அப்பிரதேசம் சுற்றி ஆழ்ந்திருப்பதை காண முடிந்தது.   ஆலை பணியாளர்கள் தங்கள் உடலை மறைக்கும் உடையணிந்து  பயணிக்கின்றனர்.  மிதி வண்டியில் செல்லும் சட்டை அணியாத ஏழைகள் பாடு தான் திண்டாட்டம்.  அதன் வழியே வரும் போது கண்ணுக்கு எரிச்சலும் தொலியில் அரிப்பும் தெரிகின்றது.  குடியிருப்புகள் சாக்கடை மத்தியிலும் அலுவலங்கள், பெரிய தொழில்சாலைகள் அழகாக மிடுக்காக காட்சியளிக்கின்றது.  மனிதனின் விலையை விட தொழில்சாலைகள் விலையேற பெற்றது என்று சொல்லாது சொல்கின்றது நம் தற்போதயை சூழல்.

25 Mar 2011

முகவரி தேடும் தெருவோர குழந்தைகள்!!!

வீதியே வீடு என்று சாலைகளில் கேட்பாரற்று பல்வேறு குழந்தைகள் வாழ்ந்து வருகின்றனர். தெருவோர குழந்தைகள் என அழைக்க படும் இக்குழந்தைகள் மூன்று வகையை சேருவர். தெருவில் வேலை பார்ப்பவர்கள்,  தெருவில் குடியிருந்து வாழ்க்கை நடத்துபவர்களின் குழந்தைகள், பெற்றோர்களால் மற்றும் உற்றோர்களால் புரக்கணிக்கபட்டு தெருவில் வாழ தள்ளபட்டவர்கள்.


தெருவோர குழந்தைகள் என்ற கருத்தாக்கம் 1993 வரை அரசு நிறுவனங்களால் அங்கிகரிக்க படாது இருந்துள்ளது தான் உண்மை.  அரசு சாரா நிறுவனங்களின் அயராத கூக்குரல் நிமித்தம் 1993 ல் மனித நலத் துறை அமைச்சகத்தால் பல திட்டங்கள் இக்குழந்தைகளுக்கு என உருவாக்க பட்டு செயல்படுத்தி வருகின்றனர்.   
இவர்கள் சார்ந்த கதைகள் மைய கருத்தாக கொண்டு சலாம் பாம்பே, நான் கடவுள், ஸ்லம் டாக் மில்லினர் போன்ற திரைப்படங்களில் வந்துள்ளன.   19 ம் நூற்றாண்டில் ஒலிவர் டிவிஸ்ட்,ஷெலோக் போன்ற மேற்கத்திய எழுத்தாளர்களின் கதைகளிலும் இவர்கள் வாழ்கை கதைய் தளமாக வந்துள்ளது.  ஸ்லம் டோக் மிலினியர் (slum dog Millionaire) என்ற படம் எதிர் கொண்ட விமர்சனம் ‘வளரும் இந்தியாவை தரம்  குறைத்து காட்டுகின்றனர்’ என்பதாகவே இருந்தது.   சண்டே இந்தியாவின் அருந்தம் சவுதரி இப்படத்தை சரிமாரியாக திட்டி தன் கோபத்தை வெளிகாட்டியிருந்தார்.   இப்படியாக கண்ணை மூடி பால் குடிக்கும் பூனை போன்று இந்தியாவின் பணக்கார ஊடகம், அரசியல், சமூகத்தால் புரக்கணிக்கபட்டவர் தான் இவர்கள்!
சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களை பிரதிபலிக்கும் தெருவோர குழந்தைகள் உலக சரித்திரத்தில் என்று இடம் பிடித்தனர் என்பதற்க்கான ஆதாரம் இல்லை.  என்றிருந்தாலும் ரஷ்யாவில் நடந்த 1918-1930 புரட்சிக்கு பின்பே சமூகத்தின் ஒரு பாகமென மிக பெரிய அளவில் தெருவோர குழந்தைகள் உருவாகியுள்ளனர்.



தெருவோர குழந்தைகள் உருவாகுவது புரட்சி,  இனக்கலவரம், போர், இயற்கை பேரழிவு  போன்ற காரணங்கள் மட்டுமல்ல பெற்றோரின் மனமுறிவு, பெற்றோரின் தகாத உறவு மூலம் உண்டாகும் குடும்ப சூழல், வீடுகளில் அனுபவிக்கும் தொடர் தொல்லைகள், பெற்றோரின் இரக்க மற்ற செயல் அனுசரணையற்ற கல்வி சூழல், விடலைப் பருவ கோளாறுகள், வறுமை மற்றும் வேலை வாய்ப்பு தேடி நகரத்தை நோக்கியுள்ள நகருதலும் கூட இச்சிறுவர்கள் உருவாக காரணமாக அமைகின்றது.

ரஷியா, இந்தியா, மெக்சிக்கோ போன்ற நாடுகளில் மிக அதிகமான   தெருவோர குழந்தைகள் உள்ளனர்.  உலகளவில் 11 மிலியன் குழந்தைகள் தெருவில் தள்ளபட்டுள்ளதாக கணக்கிடபட்டுள்ளது.  இவர்களில் 4 மில்லியன் குழந்தைகள் இந்தியர்களே என்பது தான் துயர் தரும் வெட்கபடவேண்டிய செய்தி.  கம்னிஸ்டு மாநிலமான கொல்கத்தா நகர் தான் இந்தியாவில் தெருவோர குழந்தைகளில் அதிகம் வசிக்கும் இடம்!

இவர்களின் தொழில் பிச்சை எடுப்பது, குப்பை பொறுக்குவது கார் போன்ற வாகனங்கள் கழுவுதடல், ஓட்டல்களில் வேலை செய்தல் அல்லது பிக் பாக்கெட் போன்ற சமூக விரோத செயல்கள்என ஏதாவது ஒரு தொழில் புரிந்து தங்கள் பசியை நீக்குகின்றனர். தங்கள் பசி கொடுமையை களைவதற்கு என போதை பொருட்களை உட்கொள்ள பழகி கொள்கின்றனர்.    இவர்களின் ஆரோக்கிய நிலை மிகவும் பரிதாபத்திற்க்குரியதாகவே இருந்து வருகின்றது.  காச நோய், குஷ்டம், டைபாய்டு, மலேரியா, சிறுநீரக கோளாறு போன்றவற்றாலும் இவர்கள் மிகவும் அதிகமாக அவதிக்கு உள்ளாகுகின்றனர்.  தற்போது உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் போன்ற நோயின் பிடியில் தள்ளபடுவது மட்டும் அல்லாது  சிறு குற்றங்கள் புரிந்து சட்டத்தின் பிடியில் அகபட்டு  காப்பாற்ற ஆளின்றி  சிறை சாலைகளிலும் வாடுகின்றனர்.

சென்னையில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிப்பது என்னவென்றால் தெருவோர குழந்தைகளில் 87.7 சதவீதம் பேர் ஆண் குழந்தைகளே மேலும் இவர்களில் 71 %பேர் தங்கள் தெருவோர வாழ்வில் காப்பாற்றபடுவார்கள் என்ற கனவில் வாழ்கின்றனர். 63% பேர் தாங்களும் நல்ல சமூக அந்தஸ்தில், தன்மானத்துடன் வாழ வேண்டும் என்ற ஆசையுடனே தங்கள் காலத்தை கழிக்கின்றனர்.வயதளவில் கண்டோம் என்றால் இவர்களில்
வயது
சதவீதம்
6-10
33%
11-15
40%
16-18
27%

உள்ளனர்.

மும்பை, கொல்கத்தா, டில்லை போன்ற நகரங்களில் மட்டும் தலா ஒன்றரை லட்சம் தெருவோர குழந்தைகள் உள்லனர். பெங்களூரில் 45 ஆயிரம் குழந்தைகள் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர்கின்றனர். நமது தமிழகத்தில் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்நிலையில்  உள்ளனர்.

மற்றவர்களால் தங்கள் முகவரியை  தொலைத்து மீண்டும் தங்கள் அடையாளங்களை தேடும் இக்குழந்தைளுக்கு மறு வாழ்க்கை அமைத்து கொடுப்பதற்க்கு என்று  திருநெல்வேலியில் ஜங்ஷன் பேருந்து  நிலையத்தின் மிக அருகாமையில் சரணாலயம்  என்ற மறுவாழ்வு இல்லம் உள்ளது.  இதில் 2 வயதில் இருந்து 14 வயது வரையிலும் வரையுள்ள 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்க பட்டுவருகின்றர்.  மழலை மனம் மாறாத அருள் அவனுடைய இரண்டு சகோதர்கள் என 3 ஆண் குழந்தைகளை அனாதர்களாக விட்டு சென்றுள்ளனர் இவர்களின் பெற்றோர்கள்.  இவ்வாறு ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையும் மனதை பிழியும் கதைகள் கொண்டதே.  இங்கு அடைக்கலம் புகுந்துள்ள குழந்தைகளை பெற்றோர்கள் மற்றும்  உறவினர்கள் பிச்சை எடுப்பதற்க்கு என வலுக்கட்டாயமாக  அழைத்து செல்லும் அவலவும் உண்டு.

இது ஒரு அரசு சார்ந்த நிறுவனமாக இருப்பினும் இதன் துவக்கம் கத்தோலிக்க திருசபை சார்ந்த நிறுவனத்தில் இருந்து தான் நிகழ்ந்துள்ளது. தற்போது இதன் இயக்குனராக அருட் தந்தை ஜாண்சன் ஜோசப் உள்ளார். இக்குழந்தைகளின் மேம்பாட்டுக்காக திட்டங்கள் பல இருப்பினும் பணபற்றாக்குறை ஒரு  தடங்கலாக உள்ளது  என குறிப்பிடுகின்றார்.   நல்ல குடும்ப சூழல் உள்ள பெற்றோர்கள் இவர்களை ஆதரிக்க வேண்டும் என்றும் விரும்புகின்றார்.  மாதம் தோறும் சிறு தொகை இவர்கள் படிப்பு உடை போன்றவைக்கு தருவதால் அல்லது நேரம் கிடைக்கும் போது இக்குழந்தைகளை சந்தித்து பெற்றோர் போன்ற அன்பை பகிர்ந்து கொள்வதால் இக்குழந்தைகளை ஒரு நல்ல நிலையில் கொண்டுவர இயலும் என்று கூறுகின்றார்.

1992 துவங்கி World Vision என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக இதை போன்று ஒரு பெண் குழந்தையை ஆதரிக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக பேராசிரியர் மாதவன் கூறுகையில் இது நாம் காட்டும் கருணையோ தயவோ அல்ல, நமது கடமையே மேலும் நமது அனுதாபத்தை விட செயலால் ஆதரிப்பதால் நாம் பெறும் மன மகிழ்சிக்கு ஈடு இணை இல்லை என்று தன் கருத்தை பகிர்கின்றார்.

ஒரு முறை ஒரு கல்லூரி  பேராசிரியையிடம் இக்குழந்தகள் பற்றி கதைத்து கொண்டிருந்தேன். அவர் இது அவர்களுடைய சாபம் எனவும் இக்குழந்தைகளின் மன நிலையை பற்றியும் பிறப்பை பற்றி இரக்கம் அற்று கூறிய கருத்துக்கள் என்னை வேதனையடைய செய்த்து. பல மனிதர்கள் பூமியில் சுகமாக வாழ வாய்ப்பு கிடைப்பதும் இப்படியான விளிம்புநிலை மனிதர்களை இளக்காரமாக பார்க்கும் நம் பார்வையும் மாற்ற வேண்டியுள்ளது.

பல வசதியான பெற்றோர் தங்கள் தலைமுறைக்கு என சொத்து சேர்ப்பதும் அவர்களை பற்றிய கனவுகள் மலை போல் குவிக்கும் போதும் நம் குழந்தைகள் சுகமாக வாழ இவர்களும் நலமாக வாழவேண்டும் என்று எண்ணம் கொள்ள வேண்டும். இஅவ்ர்களை நாம் இளக்காரமாக எண்ணி புரக்கணிக்கும் வழி சீரியல் கொலையாளிகளையும், கொள்ளைகாரர்களையும் நாம் வளர்க்கின்றோம். ஒருவன்  சமூகத்தில் இருந்து பெறுவதை சமூகத்தில் விட்டு செல்கின்றான். நாமும் இக்குழந்தைகளுக்கு நல்லதை கொடுப்போம் அவர்கள் நல்லதே இச்சமூகத்திற்க்கும் திரும்ப தருவார்கள்.

இக்குழந்தைகள் திருநெல்வேலியை சுற்றியுள்ள பல பள்ளிகளில் கல்வி பெறும் இவர்களை நாம் கரிசனையுடன் தாங்குவது வழியாக இவர்களும் சமூகத்தில் ஒரு உயர்ந்த சிந்தனையுள்ள தாழ்வு மனப் பான்மையற்று வாழ வழி செய்ய உதவும். மேலும் இவ்விதம் குழந்தைகள் உருவாக காரணமாகும் பொறுபற்ற தன்னலம் விரும்பி பெற்றோரையும்  சட்டத்தால் தண்டிப்பது வழியாக வரும் தலைமுறையில் இவ்விதமான குழந்தைகள் உருவாகும் சூழலை தடுக்க இயலும். மேலும் அடுத்தவர்களை சுரண்டி பிழக்கும் நம்  சமூகசூழலும் ஒரு காரணம் உணர்ந்து அதை களையவும் நாம் முன் வர வேண்டும்.

ஆதாமின்றே வாரிஎல்லு

 ‘ஆதாமின்றே வாரிஎல்லு’ என்ற மலையாளப் படத்தின் தலைப்பு படம் பார்க்க வேண்டும் என்று ஆவல் கொள்ள செய்தது. நடித்தவர்கள் ஸ்ரீவித்யா, சுகாசினி என்ற போது ஆற்வம் இன்னும் கூடியது.  இரண்டு தடவை தொலைகாட்சியில் வந்த போதும் கரண்டு கட்!  இனி பொறுத்து இருக்கல் ஆகாது என கண்டு என்னவரிடன் இணையத்தில் இருந்தும் தரை இறக்கி தர கேட்டிருந்தேன்.   படத்தை பார்த்து முடித்த  போது ஆகா தலைப்பை கண்டு ஏமாந்து விட்டோமோ என்று நொந்து கொள்ள வைத்தது.   மேலும் படம் கதையை விட படம் இயக்கியவர் நடித்தவர் பின்புலன் தான் மனதில் ஓடியது.


என் காலத்தில் 12 ம் வகுப்பு ப்ரீ டிகிரி(pre-degree) கல்லூரியோடு சேர்ந்த படிப்பாக இருந்தது.   வாழ்க்கையில் கல்லூரி என்ற கனவை நனைவாக்கிய, கோட்டயம் பட்டணத்திலுள்ள BCM என்ற கல்லூரி அதுவும் கேரளாவில்  மிகவும் பிரசித்தமான பெண்கள் கல்லூரி!   பின்பு தமிழகத்தில்  படித்த போது கல்லூரிகளில் கண்ட எந்த ஒரு தேவையற்ற கட்டுபாடும் அங்கு கண்டது இல்லை.   எங்களை முழுதும் நம்பினர் அதனால் பல பொழுதும் நாங்கள் எல்கை தாண்ட விரும்பியதும் கிடையாது.    சமூகப்பணி, பக்தி, அரசியல் என எல்லா நிலைகளிலும்  களம் அமைத்து தந்தனர்.  வி.பி சிங் கூட்டத்திற்க்கு சென்றுள்ளோம். எல்லா முதல் சனி கிழமைகளிலும் முதியவர் இல்லம் அழைத்து செல்வது உண்டு.   நல்ல சினிமா படம் வந்தால் தியேட்டரில் சென்று பார்க்கவும் அனுமதி உண்டு. நாங்கள் ப்றீ- டிகிரி மாணவிகள் விவரம் பத்தாத சிறு பெண்கள் என அக்காக்கள் கையிலுள்ள பொமேரியன் நாயாகவே இருந்தோம்.   ஆனாலும்  எல்லாம் அவதானிப்பதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்க தான் செய்தது.


எங்கள் விடுதி மூன்று அடுக்கு மாடி கட்டிடம்.    நாங்கள் மேல் நிலையில் அக்காக்கள் கீழ் மாடியிலும்.   பக்கத்து கட்டிடத்தில் வெளிநாடு வாழும் பெற்றோரின் பிள்ளைகள் தங்க வைக்க பட்டிருந்தனர்.    நாங்கள் பேருந்தில் பயணம் செய்து வீடு சென்று வருவது போல் அவர்கள் சரளமாக வானூர்தியில் சென்று அவர்கள் பெற்றோரை சந்தித்து வருவர்.  அவர்களுக்கு என பிரத்தியேக கட்டணத்துடன் சிறப்பான வசதியுடன் உள்ள  தனி விடுதியில் வசித்து வந்தனர்.  சிறு உடுப்பு, இசை வாத்தியங்களுடன்  பாட்டு பாட, பிடிக்காத சாப்பாட்டை தூக்கி எறியும் அனுமதியும் அவர்களுக்கு உண்டு!   நாங்கள் அதிசயமாக எங்கள்  அறை சன்னல் வழியே அவர்கள் செய்தியை உற்று நோக்குவோம். ஒரு இனம் புரியாத இடைவெளி நாங்களாகவே உருவாக்கியிருந்தோம் அவர்களுக்கும் எங்களுக்கும்.  நாங்கள் ஒரு அறையில் 8 பேர் அடைபட்டு கிடந்த போது அவர்கள் மூன்று பேருக்கு  ஒரு அறை என கொடுக்கபட்டிருந்தது.  அந்த விடுதியில்  ஒரு அறையில்  45-50 வயது தக்க  ஒரு பேராசிரியையும்  வசித்து வந்தார்.  அவர் எழுதுவதும் வாசிப்புமாக நேரத்தை கழித்தார். சில வேளைகளில் அவர் அறையில் இருந்து இதமான கித்தார்  ஒலியும் வந்து கொண்டு இருக்கும்.   அவரும் எங்களை போன்றே ஒரு தட்டும் டம்ளருடன் சாப்பாட்டு அறைக்கு வந்து உண்ணுவதை கண்டது உண்டு.   அவர் ஒரு போதும் ஒரு மாணவியையும் திட்டினதாகவோ அறிவுரை கூறியதாகவோ கேள்வி பட்டதில்லை.   ஒரு சிறு புன்முறுவலுடன் அமைதி ததும்பும் முகத்துடன் காணப்பட்டார்.   அற்புத நோய் பிடியில் இருந்த அவர் விடுமுறை நாட்களில் ஒரு பையுடன் தாய் வீட்டுக்கு சென்று வருவதும் அறிந்திருந்தோம்.   அவர் தான் மரணம் அடைந்த ஸ்ரீவித்யா என்ற நடிகையின்  கணவரின் முதல் மனைவி பெஃற்டி(Betty) என்ற குழந்தைகள் இல்லாத பேரசிரியை!


ஆதாமின் வாரியெல்லு என்ற போதே  புரிந்து விட்டது பெண்களை பற்றிய கதை என்று. பைபிள் கதைப்படி கடவுள் பூமியில் ஆகாயம், கடல், கரை, செடி கொடி, மிருக ஜாலங்கள் படைத்த பின்பு களி மண்ணால் தன் சாயலில் ஒரு மனிதனை படைத்தாராம்.  அவனை  ஆதம் என்று அழைத்துள்ளார்!   அவன்  தனிமையாக அந்த சிங்கார  தோட்டத்தில் சுற்றி திரிந்தது கடவுளுக்கு கவலையாக பட்டது.    அவனை தூங்க வைத்து அவனுடைய விலாவில் இருந்து ஒரு எலும்பை எடுத்து அவனுக்கு துணையாக ஒரு அழகான ஏவாள் என்ற பெண்ணை  படைத்து கொடுப்பார்.   விலா எலும்பில் இருந்து படைத்ததிற்க்கும் ஒரு காரணம் உண்டாம்.  ஆணின் காலினால் மிதிபடவோ அல்லது தலையில் ஏறி ஆட்சி பண்ணவோ அல்லாது   அவனது  இதயத்தில் குடியிருக்க ஆட்சி  செலுத்த வேண்யவளாம்!!! .
கதைக்கு வந்துவிடுகின்றேன்; ‘ஆதாமின்றே வாரிஎல்லு’ என்பது தமிழில் ‘ஆதாமின் விலாஎலும்பு’ என கொள்ளலாம். அப்படத்ததின் கதை மூன்று நகர்புற பெண்களின் வாழ்க்கை எப்படியாக முடிந்தது என சொல்லபட்டது.   மூன்று பெண்களின் கதையும் வரிசையாக மாறி மாறி தந்து, இயக்குனர் பல இடங்களில் ரொம்ப சலிப்பை தந்து விடுகின்றார்.  கதை முடிவு கூட இப்படிதான் இருக்கும் என பார்வையாளர்களுக்கும் புரிந்து விடுவதால் விருவிருப்பு அருவருப்பாக மாறுகிறது.   ஸ்ரீவித்யா ஒரு பணக்கார முதலாளியின் மனைவி.   பெண்கள்- கிளப், குடி, கும்மாளம் என வாழ்கையை கொண்டாடுகின்றார்.   அவருக்கு கணவருடனோ குழந்தைகளிடமோ பிடிப்பு இல்லை.  மகள் ஒரு பையனுடம் ஓடி போனதற்காய் மகளை அடித்து திட்டிய தாய் மகளை வீட்டில் பூட்டி வைத்து விட்டு ஒரு இளைஞசருடன் காதல் தேடி திரிகின்றார்.   ஸ்ரீவித்யா, தன் காதலன் தன்னை விட்டு விலகுகின்றான் என தெரிந்தவுடன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கின்றார்.


மேலும் அதற்க்கு கதையில் ஒரு நியாயவும் கற்பிக்கின்றனர் அவருடைய கணவர் இவரை பல அதிகாரிகளிடம் தன் லாபத்திற்க்கு என அனுப்பியதால் மன உளச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், வாய்ப்பு கிடைக்கும் போது சொல் என்ற சாட்டையால் கணவரை அடிப்பதும் கவலைக்கு ‘தண்ணீர்’ போட்டு கொள்வதும் என; பணக்கார பெண்கள் என்றாலே காமம், திமிற்  என உருவகப்படுத்தியுள்ளார் இயக்குனர்.  மனைவியை விற்பவன் தான் பணக்காரன் என்ற மோசமான பிம்பவும் உள்ளது இப்படத்தில்.


அடுத்து அவர்கள் வீட்டு வேலைக்காரி என்ற பெண்; பழி வாங்க துடிக்கும்  மனைவியின் மௌன சம்மதத்துடனே அந்த பணக்காரனின் காம இச்சைக்கு பலி ஆகி  கற்பமாகிய  அவளை தெருவில் வாழும் சூழலுக்கு தள்ளுகின்றனர்.   பின்பு வேலைக்காரி பைத்திய கார ஆஸ்பத்திரியில் வந்து சேர்க்கபடுகின்றார்.


மூன்றாவது பெண் கதாபாத்திரம் சுஹாசினி அவர் தூங்காம் மூஞ்சுடனே முழு காட்சியிலும் வந்து செல்வார்.    அவர் கணவர் ஒரு வேலையற்ற குடிகார பத்திரிகையாளர். அவருக்கு நிலையான வேலை இல்லை.   சுஹாசினி அரசு அலுவலகத்தில் வேலை செய்கின்றார்.  தன் உணர்வுகளை புரிந்து கொள்ளாத,  பொறுபற்ற, அவளுடைய நடத்தையில் சந்தேகப்படும் குடிகார கணவன்; ஒரு மாமியார் உண்டு உலகத்திலுள்ள குசும்பின் மொத்த உருவமாக இருகின்றார்.  ஒரு கட்டத்தில் சுகாசினிக்கு மனநிலை தடுமாறி பைத்தியகார ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை உருவாகுகின்றது.   கிறுக்கு பிடித்த பின்பு தான் அழகாக சிரிக்கின்றார் அது சிரிப்பாக அல்லாது இளிப்பாக மாறுகின்றது .


இப்படியாக பெண்கள், சமூகத்திலுள்ள ஆண்களால் எப்படி எல்லாம் துன்புறுகின்றனர் என்று பொறுமையாக (அருமையாக அல்ல) படம் பிடித்துள்ளார் கெ.ஜி ஜோர்ஜ் என்ற இயக்குனர்.   இவர் தான் எங்கள் பேராசிரியரின் கணவரும் ஸ்ரீவித்யாவின் எல்லா துன்பங்களுக்கும் காரணமாகிய அவருடைய விவாகரத்து பெற்ற கணவரும்!

ஸ்ரீவித்யா புகழ்பெற்ற கர்னாடகா பாடகி எம் எல் வசந்த குமாரியின் ஒரே மகள். அவருக்கு ஒரு சகோதரனும் உண்டு. சென்னை வாசியான ஸ்ரீவித்யாவின் குழந்தை, இளமை பருவம் அவருடைய அப்பா நோய் தாக்கியதால் வருமானம் இல்லாது வறுமைகொண்டு சிறப்புமாக இருந்ததில்லை.   ஸ்ரீவித்யாவையும் அவர் அம்மா பாடகி அல்லது நர்த்தகியாகவே காண விரும்பினார்.  ஆனால் அவர் நடிப்பில் ஒரு உன்னத இடத்தை பிடித்து கமல்ஹாசனுடன் கொண்ட  காதல், திருமணம் வரை போய் ஏமாற்றபட்டு, பின்பு முழு கிருஸ்தவராய் மாறி கெ.ஜி ஜோர்ஜுடன்  காதல் திருமணம் என வாழ்க்கை திசை மாறி தன் பணம் சொத்து எல்லாம் கெ.ஜி ஜோர்ஜிடம் இழந்த பின்பு விவாகரத்து பெற்று தனி மலையாளியாக  திருவனந்தபுரத்தில் குடிபெயர்ந்து  வாழும் போது அற்புத நோயால் மரித்து கேரளா அரசின் மரியாதையுடன் பரலோகம் போய் சேர்ந்தார்.   அவரை ஒரு தமிழராக கேரளாகாரர்களுக்கு தெரியாது. அவர் தோற்றம் அழகு , பெயர் எல்லாமே மலையாளிக்கு ஒத்து இருந்தது.    அவருடைய சொத்துக்கள் கூட கேரளா அரசிடமே ஒப்படைக்க பட்டுள்ளது.
 பல மலையாள படங்களில் கள்ள காதலியாகவும் கணவரை ஏமாற்றும் நயவஞ்சகியாகவும் அல்லது கணவனை சந்தேகிக்கும் பிசாசாகவுமே மிக இயல்பாக நடித்துள்ளார்.


இப்படி நாம் தெரிந்தே இரண்டு பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய கெ. ஜி ஜோர்ஜு தான் பெண்களை பற்றி உருகி உருகி ‘ஆதாமின்ற எல்லு’ என்ற படம் எடுத்துள்ளார் என்பதும் செம்மரி ஆட்டுக்காக அழும் நரியின் குரலாகவே பட்டது. அல்லது அவர் நேசத்தால் பெண்கள் துன்ப பட்டார்களா எனவும் தெரியவில்லை.

ஒருவேளை அவர் விதித்த விதியில் அவரும் விதிக்க பட்டாரோ?  எனவும் தெரியவில்லை!!!!

16 Mar 2011

வேட்டையாடப்படும் பெற்றோர்

பள்ளி விட்டு வந்த என் மூன்றாம் வகுப்பு மகன் அம்மா, நாளை நீங்கள் என்ஆசிரியை வந்து பார்க்க வேண்டும் என்றான்.  எதற்க்கு என்றேன்.   தாளை கிழித்து என் நண்பர்கள் என் பக்கம் போட்டு விட்டனர் என்றுரைத்தான்.  தாளை கிழித்தற்கா; மக்கா உண்மையை சொல்லி விடு என கண் பார்வையை அவன் பக்கம்  சொருகினேன்.  என்னவர் அவன் அடி வாங்கட்டும் நீ போகாதே என்றார் அவன் விடும் பாடு இல்லை; இன்று முதல்வர் அறையில் தான் நின்றேன் வகுப்பறைக்குள் விட மாட்டார்கள் என்றான்.  சரி மகனே நீ குளித்து விட்டு சாப்பிடும் வழியை பார் நான் வாறேன் என்று சொல்லி விட்டு சாப்பாடு எடுத்து கொடுக்க ஆயத்தம் ஆனேன்.  என்னவரோ இவன் வேறு ஏதும் சேட்டை பண்ணியிருப்பான் ஒழுக்கம் கிடையாது .  கேபிளை கட் செய்ய வேண்டும் இல்லாட்டி இவனுக உருப்படும் படியா தெரியவில்லை. கார்டூன்  நெட் வர்க்கில் வரும் டயலோக் சரியில்லை.  இவனும் அது மாதிரி தான் ‘மொக்கை, பொக்கை’ என்று பேசுகின்றான் படிப்பவன் படிக்க மட்டும் போகனும் என புலம்பி கொண்டே “அம்மா பாடு பிள்ளை பாடு” என முணுமுணுத்து கொண்டே அவருடைய அறைக்கு சென்று விட்டார்.   நான் பல பொழுதும் என்னவரிடம் கேட்பது உண்டு “நீங்க பள்ளியில் படிக்கும் போது சேட்டை பண்ணினது கிடையாதா என்று”.  நான் இப்படியல்ல பாட்டி சொல்வதே கேட்டு தான் இருப்பேன்(பாட்டியிடம் கேட்க இயலாது என்ற தைரியம் தான் அவர் 1991 ல் விண்ணுலகம் சென்று விட்டார் என்று கேள்வி பட்டுள்ளேன்)  இவனுகளுக்கு  வருத்தம் இல்லை, கொழுப்பு, அடி பத்தாது…… நான் தண்ணீர் மோட்டரை போட்டு செடிக்கு தண்ணீர் அடிக்க சென்று விட்டேன். இவன்கள் கொண்டு வரும் பிரச்சனைகளை கூட சம்மாளித்து விடலாம் என்னவரின் வரும் கோபத்தை விட!

இவனுக்கு ஜெரி என்று பெயர் இட்டதாலா என்று தெரியவில்லை செய்து வரும் சேட்டை கூட ‘ஜெரி எலி’போன்றே இருக்கும்.  அடிக்க வரும் மிஸ்யை வகுப்பறையை சுற்றி  ஓடவைத்து அடி வாங்குவானாம். சனிக் கிழமை பள்ளி இருப்பது என்பது இவனுக்கு பிடிக்காதது.  ஒரு முறை சனிக்கிழமை பள்ளி உள்ள அன்று“நாளை விடுமுறை” என்றுஅவனே அவனுடைய தின ஏடுவில் எழுதி கொண்டு வந்தான்.  வீட்டு பாடம் தியதியை மாற்றுவது வழியாக வீட்டு பாடம் எழுதுவதில் இருந்து தப்பிக்க பார்ப்பான்.  அவனுக்கு பிடிக்காத பாடம் தமிழ், ஏன் என்றால் அவனுக்கு பிடிக்காத லதா ராணி மிஸ் மூன்று வருடமாக தமிழ் கற்பிக்கின்றார்களாம்.   ‘பசங்க’ படம் கண்ட பின்பு கோபம் வந்தால் யாரையும் கிழவி என்று திட்ட பழகியுள்ளான்.  ஒரு முறை எனது பணப்பையில் இருந்து 20 ரூபாய் திருடி வகுப்பு மாணவர்களுக்கு மிட்டாய் வாங்கி கொடுத்தான் என்ற குற்றத்திற்காய் “உடனே பள்ளிவந்து முதல்வரை சந்தியுங்கள்” என்று  பள்ளீயில் இருந்து தொலைபேசியில் அழைப்பு விடுத்தனர்.  நானும் 100 ரூபாய்க்கு ஆட்டோ பிடித்து பள்ளி வாசல் சென்றடைந்த போது12 வகுப்பு படிக்கும் முதல்வர் பொண்ணிடம் கதைத்து கொண்டிருந்தான்.  வெளியில் வந்து அந்த பொண்ணிடம் என்ன பேசினாய் என்ற போது “அம்மா, அது இந்திரா மேடம் பொண்ணு, நல்ல அக்காள் அவர் 12 ம் வகுப்பு படிக்கிறார். மேடம் வர வர சரியில்லை வீட்டுலையும் அந்த அக்காவை அடிக்காங்களாம். அக்காவுக்கு கம்யூட்டர் கொடுக்க மாட்டார்களாம் நானும் நீங்கள்  கம்யூட்டர் தராதிருப்பதை அக்காவிடம் சொன்னேன்” என கூறினான்.  

இன்று மேடம் வீட்டில் வடிவேல் காமடிதான் என்று மனதில் எண்ணி கொண்டு பணத்தை ஏன் திருடினாய் என்ற போது நான் திருட வில்லை .   அப்பா சட்டை பையில் இருந்து தான் எடுத்தேன்.  நண்பர்களுக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பது தப்பா அந்த பிரியாபொண்ணு தான்  மாட்டி விட்டாள்.  அவளுக்கும் ஒரு மிட்டாய் கொடுத்தேன் என பரிதாபமாக கதைத்தான்.  கூடவே “இந்த பெண் பிள்ளைகளே இப்படி தான்” என்று நொந்து கொண்டான்!   மேடத்திடம் கொண்ட கோபத்திற்க்கு பலியாக அவன் சாப்பாட்டு பையும் பாத்திரவும் காட்டுக்குள் பறந்தது.  பணத்தை மிட்டாய் வாங்கி தீர்த்தால் கார் வாங்குவது எப்படி என்று முடித்து கொண்டேன்.

 சமீபத்தில் என்னவர் பைக்கில் பயணித்து கொண்டே பின்னால் இருப்பவனிடம் இன்னும் நல்லா படிக்க வேண்டும் கார் வேண்டாமா என்றவுடன் அப்பா என் பிள்ளைகளுக்கு பிளேன் வாங்கி தர வேண்டும் அவனுகளை நல்ல படிக்க வைக்க வேண்டும் என்று ரொம்ப சீரியசாக பதில் அளித்தான். என்னவர் சிரித்து கொண்டே ”இவனுக்கு நம்ம அறிவுரை தேவையில்லை அவன் முடிவோடு தான் இருக்கின்றான்” என்று கூறிமுடித்து கொண்டார்.

இந்த முறை அழைத்து செல்லும் போதே சட்டம் கட்டியிருந்தான்.   நான் 13 வது ராங்கில் இருந்து 9 க்கு வந்து விட்டேன். 5க்குள் வந்து விடுவேன்.  என்னை மிஸிடம் குறை சொல்ல கூடாது.  என்னவரும் அவருடைய வாகனத்தில் அழைத்து சென்று பள்ளி வாசலில் இறக்கி விட்டு விட்டு “அம்மா தாயே நான் இங்கு நின்று கொள்கின்றேன் நீ சென்று, கண்டு வா” என கூறி தலையை திருப்பி கொண்டார்.

நான் சென்ற போது ஆசிரியை வரவில்லை, அவருக்காக காத்திருந்தோம். தூரத்தில் கண்ட போதே இவர் தான் ஆசிரியை என்று என்னிடம் கண்ணால் செய்கை வேறு.  நானும் ஆசிரியையிடம் பயபக்தியுடன் கும்பிட்டேன். அவர் என்னை கண்டவுடனே அணை உடைந்த வெள்ளம் போல் “நேற்று சாப்பிட்டு விட்டு அப்ப தான் கைகழுக சென்றேன்.  இவர்கள் 5-6 பேர் கட்டி புரண்டு சண்டை போட்டனன்.   நான் முதல்வரிடம் அனுப்பி விட்டேன் அவர் தான் பெற்றோரை அழைத்து  சொல்ல சொன்னார்.   தர்ம சங்கடமான நிலையில் ஆசிரியை நோக்கி சிரிக்கவும் முடியாது பாவமாக நோக்கி கொண்டு நின்றேன்.  வேறு ஒரு பையனின் தாயும் வந்து சேர்ந்தார்.  “மேடம் என் பையனை பற்றி அன்று மார்க்கு தாள் வாங்கும் போது கூட நீங்கள் ஒன்றும் சொல்ல வில்லை.(நேற்று மதியம் தான் சண்டை நடந்துள்ளது!)  அவன் ரொம்ப அமைதி பாருங்க. தேவை இல்லாது பேசக் கூட மாட்டான்.  ரொம்ப சுத்தமானவனும் கூட நான் குடிக்கும் டம்ளரில் கூட அவன் தண்ணீர் குடிக்க மாட்டான். ஆனால் அவன் மேல் ‘பால் சாம்’ துப்புதானாம்.  அவன் சொல்லி சொல்லி அழுதுட்டான்.  நான் தான் செல்லம் அம்மா பள்ளிக்கு வாரேன். அழாதடா என சொல்லி கஷ்டபட்டு தூங்க வைத்தேன்” என்று மூச்சு விடாது தன் சோகக் கதையை கதைத்தார். உடனே ஆசிரியை “இவனுக எவ்வளவோ பரவாயில்லை அந்த பால் சாம் , ஆன்றனி , சுபாஷ் இருக்கானுகளே. அப்ப்பபா”…. எனக்கும் மனதுக்குள் ஒரு ஆனந்தம் இவனை விட சேட்டைகாரனுகளா ?   அந்த அம்மா விடும் படி இல்லை  பின்பு என்னை பார்த்து பிள்ளைகளை பார்த்து கொள்வது சாதாரணம் இல்லை மேடம் நம்மால் 2 பிள்ளைகளை ஒழுங்கா சமாளிக்க எவ்வளவு பாடு.  நான் கல்லூரியில் படிப்பிக்கும் போதும் இப்படி தான் ( சரி அவர் கல்லூரி ஆசிரியை ஆக இருந்துள்ளாராம்-தற்பெருமை) சின்னை பிள்ளைகள் தான் இப்படி என்றால் கல்லூரி பசங்களை சொல்லவே வேண்டாம். இப்பம் கூட பாருங்க நானும் அவரும் ஆபிசிலை லீவு போட்டு வந்தோம். (சரி இப்போது ஆபிசில் வேலை பார்க்காங்களாம்).


நான் மனதில் எண்ணினேன். அவர் பிள்ளையை குறை கேட்க வருவதை கூட எவ்வளவு அழகாக அவரின் மேன்மையான சரித்திரம் சொல்ல பயண்படுத்தி விட்டார்!  என் மகன் ரொம்ப பைவ்யமாக நான் எப்போது  இடத்தை காலி பண்ணுவேன் என்று என் முகத்தை பார்த்து கொண்டிருந்தான்.   அந்த அம்மா அவருடைய கருத்துக்களை பதிந்து கொண்டு நின்றார்.  நான் ஆசிரியையிடம் பணிவாக ஒரு 40  டிகிரி வளைந்து மேடம் பிள்ளைகள் பாதுகாப்பு உங்களிடம் தான்.   உங்களையே நம்புகின்றேன்.     “என் குழந்தையை அபிலாஷ் அடித்து காலில் பட்ட காயத்தை நேற்று தினஏடுவில் எழுதி விட்டிருந்தேன்.  இந்த வாரம் முட்டு, கால், முதுகில் காயங்களுடன் தான் வந்தான்.  அபிலாஷ் நேற்று கூட நீட்டல் குளத்தில் உன்னை தள்ளி விடுவேன் என கூறியுள்ளானாம் என்றேன்.  (எப்படியும் என் பிள்ளையை பற்றி ஆன்றனி, அபிலாஷ் அம்மா சொல்லுவார்கள். நானும் ஏதாவது சொல்லாமல் போனால் நான் தான் பள்ளியில் சென்று சண்டையிட்டு வர சொல்வதாக ஆகாதா?)   என் மகன் ஒரு முறைப்பு !  வீட்டில் வந்த உடன் சொல்கிறான் நானும் அபிலாஷும் நேற்று மாலை நண்பர்கள் ஆகி விட்டோம்,  ஏன் அவனை குறை சொன்னீர்கள் என்று.
பல பொழுதும் இந்த தண்டனைகள் பெற்றோருக்கு தான் என்று உணர்ந்துள்ளேன். மாதத்திற்க்கு ஒரு முறையாவது பள்ளிக்கு அழைத்து விட்டு அவர்கள் பள்ளி கட்டுபாடு உள்ளது, உங்கள் பிள்ளை வளர்ப்பு சரி இல்லை என சொல்லாது சொல்லி விடுகின்றனர். பெற்றோர்களோ அவசர அவசர மாக 7 மணிக்கு எழுப்பி 8 மணிக்கு பள்ளி வாகனத்தில் டாடா காட்டி அனுப்பி 6 மணிக்கு திரும்பி வரும்  பிள்ளைக்கு தீனி கொடுத்து பின்பு வீட்டு பாடம் செய்ய வைத்து 8 மணிக்கு சாப்பாடு கொடுத்து 9 மணிக்கு தூங்க வைத்து அதே போல் அடுத்த நாள் 7 மணிக்கு எழுப்பி என குழந்தைகளின் வீட்டிலுள்ள நேரம் இப்படி செல்கின்றது.   நல்ல பயனுள்ள ஆக்க பூர்வமான நேரமெல்லாம் முதல்வர் அறைமுன்னும் கட்டி பிடித்து சண்டை இட்டும் தான் கழிகின்றனரா என்று கேட்கவா இயலும்.  ஆசிரியை சொல்வதை பயபக்தியாக கேட்க தான் முடியும் பெற்றோர் ஏன் என்றால் ஆசிரியர்கள் குருக்கள் பெற்றோர் நேரம் போகாது பெற்று போட்டவர்கள் தானே?   

5 Mar 2011

"மீனவர் மலையாளத் திரைப்படம் - "அமரம்"



 
நடிகர் மம்மூட்டி நடிப்பில், பரதன் இயக்கத்தில் எ.கெ லோகிததாஸின் எழுத்தில் 1991 ல் வெளிவந்த மலையாளப்படம் ஆகும் “அமரம்”.  அமரம் என்பதற்க்கு  ‘மரணம் இல்லாதது’ என்றே அர்த்தம் கொள்ளப்படுகின்றது.  மம்மூட்டிக்கு பிலிம்பெஃயர் விருது  கெ.பி.எ.சி. லலிதா என்ற நடிகைக்கு சிறந்த குணச்சித்திர நடிகை என்ற தேசிய விருது வாங்கி தந்த படம் இது.  கேரளாவில் 250 நாள் ஓடிய படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
ஏற்கனவே கண்டுள்ள இப்படத்தை சில நாட்களுக்கு முன்பு மறுபடியும் காணும் வாய்ப்பு கிடைத்தது.   கதை தெரிந்ததால் சரி இந்த பாட்டு முடிந்து எழுந்து விடுவோம் என எண்ணி எண்ணி முழுப்படம் முடியும் வரை இருக்கையை விட்டு எழு தடுத்து விட்டது.   இப்படத்தின் கதையமைப்பு எடுத்த விதம் எல்லாமே அழகாகவும் சிறப்பாகவும் அதே போல் மிகைப்படுத்தாதும் எடுக்கப்பட்டிருந்தது.  மீனவர்களின் வாழ்கை அவர்கள் மொழி, உடை என நாமும் கொஞ்ச நேரம் கடற்கரையில் குடியிருக்கும் உணர்வை கொடுத்தது.  கதை ஒரு சாதாரண கதை தான் ஆனால் அதன் அமைப்பு தொடக்கம் நடுப்பகுதி, அதன் முடிவு என எல்லா இடத்திலும் மிகச் சிறப்பாக செல்கின்றது.

ஒரு அப்பா, அவர் தான் மம்மூட்டி, அந்த கடற்கரைக்கு தன் பெண் கைகுழந்தையுடன் வந்து சேருகின்றார்.  அங்கு ஒரு வீடு கட்டி தன் மகளை தோளிலும் கையிலும் மட்டுமல்ல தலையிலும் தூக்கி வைத்து வளர்க்கின்றார்.  பக்கத்து வீட்டில் கொச்சு ராமன்என்பவர் தன் மனைவி ஒரே மகன், மற்றும் தன் ஒரே ஒரு அழகான தங்கையுடன் குடியிருப்பார்.  மம்மூட்டிக்கு அவர் சகோதரனுக்கு சகோதரனாகவும் நண்பனுக்கு நண்பனாகவும்  இருக்கின்றார்.   மம்மூட்டி மகள் ராதாவும் சித்தப்பா சித்தி என பாசமுடன் அவர்களின் குடும்ப உறுப்பினர் போன்றே வளர்கின்றாள்.


மம்மூட்டிக்கு தன் மகளை படிப்பித்து டாக்டர்  ஆக்க வேண்டும் என்று ஒரு அதீத ஆசை!  அவர் மனைவியும் கடற்கரையில் மருத்துவர்கள் இல்லாததால் தேவையான சிகித்சை கிடைக்காமல் இறந்து போய் இருப்பார்.  மேலும் தன் மகள் கடற்கரை மக்களில் முதல் டாக்டர் ஆவதில் அவருக்கு ஒரு பெருமையும் இருக்கின்றது.   அவருடன் மீன் பிடிப்பவர்கள் அவரை பல விதத்தில் கேலி செய்வார்கள் ‘ஆமா நீ மீன் பிடிப்பவன் டாக்டர் ஆக்கி விடுவாயோ,  விரலுக்கு தகுந்து வீங்க வேண்டும், அதும் பெண் பிள்ளையை படிக்க வைத்து பெரிய ஆளாக்கி விடுவாயோ என .    இதனால் மம்மூட்டி  கடற்கரை ஆட்களிடம் பேசுவதையே தவிர்த்து தனிமையை விரும்பி வாழ்ந்து வருகின்றார்.  அவருக்கு தன் மகளை டாக்டர் ஆக்குவது என்பது வெறியாகவே இருக்கின்றது.  மகளுக்காக என தன் சுகம், ஆசை எல்லாம்  விலகி ஒரு குறிக்கோளோடு வாழ்கின்றார்.  அவர் மகளும் அப்பாவின் ஆசை போன்றே படித்து 10 ம் வகுப்புப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று தேர்வாகி அப்பாவுக்கு பெருமை சேர்க்கின்றார்.  அவரும் கடன் வாங்கி +2 விற்க்கு  மகளை சேர்த்து விடுகின்றார்.

மம்மூட்டி    அவர் நண்பன் மகன் படிக்கவில்லை என்ற காரணத்தால் அவனை இளக்காரமாகவே பார்க்கின்றார் மேலும் மகளுடன் அவன் நெருங்கி பழகுவதையும் அவர் விரும்பவும் இல்லை.  அவனோ அவர் மகளிடம் டண் கணக்கில் காதலோடு அவளை நினைத்து உருகி வாழ்கின்றான். மகள் ராதா அப்பாவின் ஆசை தெரிந்தே அவரை ஏமாற்றி கொண்டு ராகவனுடனும் காதல் கொள்கின்றாள். அப்பா தன் மகளை குழந்தையாக நினைத்து உனக்கு திருமண வயசு ஆயிட்டா என்று கேட்பதும் கதாநாயகி தன் காதனுக்காக தன் படிப்பை தூக்கி எறிய நினைப்பதும்  என உச்ச கட்ட விருவிருப்புடன் கதை செல்கின்றது.

அப்பா படிப்பு படிப்பு என்று இருக்க மகள் காதல் வழிந்து காமமாகி ஒரு நாள் அவனுடன் வீட்டை வீட்டு ஓடி கல்யாணம் முடித்து  காதலனின் வீட்டில் குடிபெயர்கின்றாள்.  அப்பா நொந்து நொறுங்கி  உடைந்து அழுகின்றார்.  அவர் இதய வேதனையை இயக்குனர்,  மகள் வளர்க்கும் மீன் தொட்டியை மம்மூட்டி தூக்கி எறிந்து உடைப்பதும் மீன்கள் உயிருக்கு என தரையில்  கிடந்து துடிப்பதை அவருடைய இதயத் துடிப்பாக ஒப்பிட்டு காட்டியுள்ளது நம் இதயவும் நாம் அறியாது கவலையால் துடிப்பதை உணரலாம்.

 அப்பா தன் மகள் டாக்டராக வருவாள் என கனவு கண்ட இடத்தில் மகள்  மீன் கூடையுமாக கடற்கரைக்கு  வருவதை காண்பது அப்பாவின் வேதனையை மேலும் கூட்டுகின்றது.

இதனிடையில் நண்பனின் தங்கை தன்னிடம் காதல் கொள்வதும் மகள் படிப்புக்கு இடைஞ்சல் ஆகி விடக்கூடாது என்று எண்ணி  தன் ஆசையை மூடிவைப்பதும் பின்பு நண்பனின் அனுமதியுடன் திருமணம் செய்ய உறுதி எடுப்பதும் மகள் காதலால் அவருடைய காதலியும் வேறொருவரின் மனைவியாகுவதும்  வேதனையான பக்கமாக  வருகின்றது.

தலைமுறைகளின் நடைவடிக்கையில் வரும் மாற்றங்களையும் மிக நுட்பமாக ஒப்பீடு செய்து காட்டியுள்ளார் இயக்குனர்! உதாரணமாக சகோதர உறவு என எண்ணிய இடத்தில் மகளுக்கு காதல் வருவதும் காதல் வர எல்லா சூழல் இருந்தும் குறிக்கோளுக்காக தன் காதலை தூக்கி எறிய நினைக்கும் அப்பாவும்;  மற்றொரு இடத்தில் தன் மகள் தன் நண்பனின் மகனுடன் ஓடி போய் கல்யாணம் முடித்தாலும் நண்பனின் அனுமதி இல்லாது அவர் தங்கயை மணம் முடிப்பது நண்பனுக்கு செய்யும் துரோகம் என எண்ணுவதும் தலைமுறைக்கு தலைமுறை சமுதாய மதிப்பீடுகள்  மாறுவதை அழகாக படம் பிடித்துள்ளார்.  அப்பா, மகள் படிக்க வேண்டும் என பிடிவாதமாக இருப்பதும் மகள் எந்த ஒரு பிடிப்பும் இல்லாது அப்பாவின் விருப்பம் எதுவோ அதுவெ என்னுடைய விருப்பம்  எனவும், தனக்கு காதல் வந்த பின்பு என்னவரின் ஆசையே என் ஆசை என கதைப்பதும் பெண்ணின் காலாகால அடிமை சிந்தனையை அடிவரை இட்டு காட்டியுள்ளனர்.

அப்பா தன் மகள் என்று உருகி உருகி அன்பு செலுத்தி தோற்ற போதும்,  தேவையான தருணத்தில் மகள், என் கணவரை நீங்கள் கொலை செய்திருப்பீர்கள் என பழி சுமர்த்துவது ‘பெத்த மனம் பித்தடா பிள்ளை மனம் கல்லடா என பாடவைத்தது.  கடைசி காட்சியில் மகள், காதலி, நண்பன்,  உறவுகள் எல்லாம் கேள்வி குறி ஆகிய நிலையில் மீனவனுக்கு  தாங்கு- ஆறுதல் எல்லாம் கடல் தான் என கதைத்து கொண்டு கடல் நோக்கி செல்லும் போது நம்மையும் மம்மூட்டி கலங்கவைக்கின்றார்.

மம்மூட்டியின் தோற்றம் மீனவராக பல பொழுதும் நம்மை நம்ப மறுக்க வைத்தாலும் அவர் உடல் மற்றும் பேச்சு மொழியாலும் நடிப்பாலும்  மீனவராகவே வாழ்ந்து நடித்துள்ளார்.  பல பொழுதும் அவர் மீன் பிடிப்பவர் என்று நம்ப வைக்க டாக்டர் என்பதை 'டாக்கடர்' என்று சொல்ல வைத்து நம்மை நம்பவைக்கின்றனர்.  விருது ஏதும் பெறவில்லை என்று இருப்பினும் மம்மூட்டியின் நண்பராக வரும் முரளி-கொச்சு ராமன் தான் அப்படியே அச்சு அசலாக மீன் பிடிப்பவராக தன் நடிப்பு  திறனை வெளிப்படுத்தியுள்ளார்.   அவர் மனைவியாக நடித்த கெ.பி.எஸ் லலிதா வின் நடிப்பு பல பொழுதும் நாம் படம் பார்க்கின்றோம் என மறக்க செய்து நம்மையும் ஒரு  கதாபாத்திரம் போன்று மூழ்க செய்தது.  வெத்தலை போட்டு கொண்டு  மீனவ பெண்ணாகவே மிக நேர்த்தியாக நடித்துள்ளார்.
இதே போன்ற படங்கள் இனி மலையாளத்தில் பார்ப்பது அரிது மட்டுமல்ல இனி வரவும் வாய்ப்பு இல்லை.   இயக்குனர் பரதன் , கதை ஆசிரியர் லோகிததாஸ், நடிகர் முரளி இவர்கள் மூவரும் வயது எட்டும் முன்பே காலா அவனிகைக்குள் மறைந்து விட்டனர்  என்பதே.
கடற்கரையை இவ்வளவு அழகாக ஒரு படத்திலும் காண இயலாது.  அதே போல் மீன் சந்தை, அவர்கள் வாழ்வியல் என அதை அது போல் படம் பிடித்துள்ளதும் இதன் சிறப்பே.  ரவீந்தரன் மெட்டில் படத்தின் ஒவ்வொரு பாடலும் மிக சிறப்பாக இருந்தது.
ஒரு சினிமா கதை என எண்ணி சமாதனம் அடைந்த நான் ஒரு அப்பா இவ்விதம் சூழலை தன் வாழ்க்கையில் உண்மையாக அனுபவித்ததை சோகத்துடன் என்னிடம் பகிர்ந்த  கொண்ட போது இப்படி பல அப்பாக்கள் துயரத்தில் உள்ளனர் என்பது எனக்கும் கவலையாக மட்டுமல்ல புதிராகவும் இருந்தது .