header-photo

கதையல்ல உண்மை காதல்.......


நான் பொதுவே காதல் கதைகளை கதைப்பது கிடையாது.  காரணம் காதல் நபருக்கு  நபர் வேறுபடும். ஒரு பொது தத்துவத்துக்குள்  காதலை கொண்டு வர இயலாது என நான் அறிவேன்.  காதன் தினம்  அன்று என் கல்லூரி  பொது பலகைக்கு என ஒரு குறிப்பு தயார் செய்திருந்தேன். வாசித்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் கற்பித்து விமர்சித்தனர். சிலர் கோபத்தில் நான் ஒட்டியிருந்த சில படங்களை கூட கிழித்து போட்டனர். நான் எழுதியதை முழுதும் வாசிக்காது “நீங்கள் இப்படிபட்டவர் என்று நான் நினைக்க வில்லை” என ஒரு திருமணம் ஆகாத ஆராய்ச்சி மாணவி கடிந்து கொண்டாள்.  காதலை வேலையற்றவர்கள் கொள்ளும் விளையாட்டாக ஒருவர் அபிப்பிராயம் கொண்ட போது சிலர் அது பணம் பறிக்கும் குறுக்கு வழி அல்லது உடல் சுகம் தேடும் தளம் என சொல்லினர்.

நான் மதிக்கும் காதல் என்னுடைய பாட்டி மரியாகம்மாவின் காதல் தான், ஆனால் அதே காதலை என் அம்மா இன்றளவும் வெறுத்தார்.   60 வருடம் முன்பு  ஏதோ ஒரு தேசத்தில்( மிளகுமூடு, நாகர்கோவில்) இருந்து வந்தவனிடம் காதல் கொண்டு பெற்றோர் சகோதரர்கள் எல்லோரையும் பகைத்து திருமணம் செய்து இரு பிள்ளைகள் பிறந்த சூழலில் வெறும் மூற்றே வருடத்தின் தாத்தாவை பறி கொடுத்தார் என் பாட்டி!.  ஆனால்  அதே காதலுடன் வாழ்ந்து வருகின்றார்.  பாட்டியின் ஒவ்வொரு செயலும் தன் மகள் படிப்பு ஆகட்டும் திருமணம் ஆகட்டும் எல்லாம் தாத்தா வாழ்ந்த நாளில் ஆசையுடன் கதைத்தது போலவே இருந்தது.  அம்மா ஒரு போதும் தங்கம் அல்லாத நகை அணிய கூடாது, தேயிலை தோட்ட வேலைக்கு செல்லக்கூடாது அம்மாவை வசதி-வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்ற தாத்தாவின் கனவை நனவாக்குவது போலவே இருந்தது பாட்டியின் வாழ்க்கை . 

ஒரு கேரளா பத்திரிக்கையில்  வந்த செய்தியில் ஒரு இந்து மத  பெண்ணும் இஸ்லாம் ஆணும் காதலித்துள்ளனர்.  பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு. அப்பெண்ணும் அவர் பெற்றோர் சம்மதத்திற்க்கென காத்திருந்தார்  45  வயது கடக்கும் வரையிலும்!   அதற்க்குள் அப்பெண்ணின் அப்பா ஒரு சகோதரர் இறந்து விட்டனர், தன் சகோதரிகளுக்கும் திருமணம் ஆகி பிள்ளை குட்டி ஆகி விட்டது இனி யாருக்கும் தன்னால் பிரச்சனையில்லை ,இனி காதலருடன் இணையலாம் என்று எண்ணி கொண்டிருந்த போது அந்த காதலர் ஒரு விபத்தில் மரித்து போனார். ஆனாலும் அப்பெண் தளரவில்லை மிச்சமுள்ள நாட்கள் அவர் வீட்டில் அவர் மனைவியாக இருந்து கொள்கிறேன் என்று அவர் வயதான அம்மாவையும் கவனித்து கொண்டு வாழ்ந்து வருகின்றார்.

நான் பிறவியிலே கேள்வி கேட்கும் கொள்கை கொண்டதால் காதலைக் கூட கேள்வியோடு தான் அணுக முடிந்தது.  அதனால் யாருடனும் காதலும் வரவில்லை . என்னவரை எனக்கு என என் பெற்றோர்கள் பேசி முடித்த போதும் 1 வருடம் வரை சரி வருமா, அவர் எப்படி பட்டவர், அவர் சம்பளம் வாழ்க்கை தேவைக்கு தகுந்தாக இருக்குமா, அவர் பெற்றோர் எப்போதும் என்னை உண்மையாக நேசிப்பார்களா என்று பல வித கேள்வியுடனே இருந்தேன். 

காதல் பற்றி கொண்டது எப்போது என்று தெரியவில்லை , ஆனால் ஒரு கட்டத்தில் அவர் பெற்றோர்கள் இத்திருமணத்தை பணம் பறிக்கும் கருவாக காண்கின்றனர் என்று அறிந்து என் பெற்றோர் பின் வாங்க நினைத்த போது, இல்லை, நான் அவரை விரும்பி விட்டேன் நான் பணம் பறிக்கும் கேடயமாக இருக்க மாட்டேன் என சொல்லி எனக்கும் காதல் வந்து விட்டது என அறிவித்து விட்டேன்.  என்னை வைத்து பணம் ஈட்ட இயலாது என்று எப்போது முடிவெடுத்தாரோ என் மாமியார் அப்போதே என்னை மட்டுமல்ல என்னவரையும் சேர்த்தே ஒதுக்கி தள்ளி விட்டார்!

என் முதல் மகன் 7 வது மாதம் கருவுற்றிருக்கும் போது என் மாமியார் தன் கடைசி ஆயுதத்தை பயண்படுத்த நினைத்தார்!   உன் அப்பா வீட்டில் நாங்கள் கேட்கும் முறை செய்யாவிட்டால்  நீ எங்கள் வீட்டிற்கு வர தேவையில்லை என கட்டளையிட்டார்.  என் அம்மாவும்  நம்ம அப்படி எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல; அப்படி அம்மா பேச்சு கேட்கின்றவன் மனைவியாக நீ அடிமையாக இருக்க வேண்டாம்.  இனி அங்கு போனால் இங்கு பிரசவத்திற்கு கூட வர வேண்டாம் என பிடிவாதமாக இருந்தார்.  ஒரு நாள்  என்னவர்  வசிக்கும் வீட்டுக்கு நானே வந்து சேர்ந்தேன். 
  
அதன் பின்பும்  இந்த பணம் பேராலுள்ள போராட்ட வாழ்க்கையை வேண்டாம் பிள்ளையை அம்மாவிடம் கொடுத்து விட்டு படித்து வேலை பார்த்து பிள்ளையை வளர்த்து கொள்ள வேண்டியது தான் என எண்ணி கொண்டிருந்த போது   அவர் வந்து அழைத்த உடன் அவர் பின்னே ஒன்றும் சொல்லாது சென்றதும் எங்களிடம் இருந்த  காதல் தான்!

மறுபடியும் வேலை மாற்றம், வேலை இல்லை என தவித்த போது அம்மா உனக்கு இந்த தரித்திர வாழ்க்கை தேவையா நான் பார்த்து கொள்வேன் என கூறிய போதும்  வெறும் தயிர் சாதம் உண்டு அவர் பக்கம் இருக்க என்னை தூண்டியதும் எங்களுள்  இருந்த காதல் தான்!

ஒரு முறை அவருடைய  ஒரே, அவரிலும் 7 வயது இளைய சகோதரன்  நீ ஒன்றுக்கும் ஆகாதவன் பள்ளியில் தவளை பிடித்தாய், காலேஜில் பெண்களிடம் வம்பிழுத்தாய் இப்போது இரண்டு பிள்ளைகளை பெற்று போட்டதை தவிர்த்து என்ன செய்தாய் என்று கேட்ட அன்றிலிருந்து அவனிடம் பேசுவது ஏன் அவனை ஒரு மனிதனாகவே நினைப்பதைக் கூட தவிர்த்து விட்டேன்.

பல பொழுதும் என்னவரிடம் நான் ஒரு சண்டை கோழி என்றாலும் அவரின் பேருள்ள காதலால் அவரை பழித்த அவரை எதிர்த்தவர்களிடம் நான் பேயாகவும் அனல் காற்றாகவும் இருந்து அவரை மீட்டதும் எங்கள் காதல் தான்.  அதே போல் என்னை நானாக அவர் பார்த்ததும் என்பாலுள்ள  அவர் காதலே. என் காதல் பல பொழுதும் எங்கள் கண்ணீரில் இருந்து துவங்கி நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளில் முடிந்தது.  அதனாலே நாங்கள் குடு குடு  தாத்தா பாட்டி ஆகும் வரையிலும் இதே காதலில் இருந்து காமமல்ல காதல் அது உண்மையான அன்பு சார்ந்தது என்று தெரிவுபடுத்த வேண்டும்.

1 comments:

சு.செந்தில் குமரன் said...

ஒன்று புரிகிறது . தோழியோ மனைவியோ காதலியோ நல்ல காதலியால் நல்ல மனுஷியால் காதலிக்கப் படுவது சுகம் , கம்பீரம்

Post Comment

Post a Comment